அவன் மனிதனா என்று சிந்தித்துப்பாருங்கள்-மொழிபெயர்ப்பு கவிதை-வாசுதேவன்

வாசுதேவன்
ஓவியம் : டீன் கபூர்

கதகதப்பான உங்கள் மனைகளில்

சலனமற்று வாழ்ந்திருந்தவர்களே,
மாலை நீங்கள் வீடுதிரும்பும்போது
உணவு பரிமாறிய மேசையையும்
உறவுகளையும் காண்பவர்களே,
சேற்றில் நின்றுழல்பவனை,
ஓய்வினை அறியாதவனை,
ஒரு பாண்துண்டுக்காக அடிபடுபவனை
அற்ப காரணத்திற்காய் கொல்லப்படுபவனை
அவன் மனிதனா என்று சிந்தித்துப்பாருங்கள்
தன் பெயரைiயும் சிகையையும் இழந்தவளை
ஞாபகம் கொள்ளும் சக்தியைக்கூட இழந்தவளை,
வெற்றுப்பார்வையும், குளிர்ந்த வயிற்றையும் கொண்ட
குளிர்கால தவளையொன்றைப்போன்றவளை,
அவள் ஒரு பெண்ணா என்று சிந்தித்துப் பாருங்கள்
அது நடந்தது என்பதை மறந்து விடாதீர்கள்
இல்லை. அதை மறந்து விடாதீர்கள்
இச்சொற்களைத் தங்கள் இதயத்தில்
பொறித்து வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் வீட்டில், வீதிகளில்,
உறங்கப்போகையில், விழித்தெழுகையில்
அது பற்றிச் சிந்தியுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு நடந்தவற்றைக்
கூறுங்கள்
அல்லவெனில்,
உங்கள் மனைகள் நொருங்கி வீழட்டும் !
நோய்கள் பீடித்துங்களைத் துன்புறுத்தட்டும் !
உங்கள் குழந்தைகள் உங்களை விட்டுச்செல்லட்டும்!

000000000000000000000

ப்றிமோ லெவி-Primo Levi பற்றிய சிறுகுறிப்பு :

வாசுதேவன்ப்றிமோ லெவி எழுத்துகள் அனைத்துமே பன்முகம் வாய்ந்தவை என்று சோலா முடியும். இவர் குறிப்பாக சுயசரிதைக் குறிப்புகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய துறைகளில் அதீத கவனக்குறிப்பைச் செய்திருக்கின்றார். ஒரு இரசாயன விஞ்ஞானியாக படித்துப் பட்டம் பெற்று பணி புரிந்த காரணத்தினால், இவரின் மொழிப்பயன்பாடு சுயப்பிரக்ஞை மிக்கதாயும் கனகச்சிதத்தன்மை கொண்டதாகவும் இருப்பதை நாங்கள் பார்க்க முடியும். இவரது எழுத்துகளில் அதிகபட்சமான அல்லது அவசியத்திற்கு மேற்பட்ட அலங்காரமான வரிகளை எழுத்துக்களில் காண்பதற்கு முடியாது. பல கட்டங்களில் இவர் எழுதினாலும் முழுநேர எழுத்துப்பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது இவருடைய அறுபதாம் வயதில் தான் என்பது குறிப்பிடத்தக்கது ,அதாவது எழுதுவதற்கு வயது ஒரு தடையல்ல.

நவீன ஐரோப்பிய-யூத எழுத்தாளர்கள் வரிசையில் ப்றிமோ லெவி தனித்து நிற்கின்றார் என்றே சொல்ல வேண்டும். ப்றிமோ லெவியின் எழுத்துகள் நவீனத்துவம் சார்ந்தவை என்ற போதிலும் Holocaust Literature எனப்படும் பேரழிவு இலக்கியம் என்ற வகைப்பாட்டில் தான் இவருடைய எழுத்துகளை அடக்கமுடியும். ப்றிமோ லெவி ஒரு யூதர் என்பதாலும், நாஜி எதிர்ப்பு இயக்கத் தலைமறைவுக் குழுவின் அங்கத்தினர் என்பதாலும் நாஜிகளால் கைது செய்யப்பட்டு Auschwitz என்ற பிரபல சாவு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். இவர் ஒரு இரசாயன விஞ்ஞானி என்ற காரணத்தினால் அவரது திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் இருந்ததால் நாஜிகள் அவரை விஷவாயுக் கிடங்கிற்கு அனுப்பவில்லை. Auschwitz -ல் இருந்து தப்பிய காரணத்தினால் பேரழிவு இலக்கியம் எமக்கு தாராளமாகவே இவர் மூலம் கிட்டியது.

வாசுதேவன்

மூலம் : ப்றிமோ லெவி-Primo Levi ( 1919 – 11 April 1987)

 

தமிழில் : வாசுதேவன்-பிரான்ஸ்

வாசுதேவன்
வாசுதேவன்
(Visited 78 times, 1 visits today)
 

4 thoughts on “அவன் மனிதனா என்று சிந்தித்துப்பாருங்கள்-மொழிபெயர்ப்பு கவிதை-வாசுதேவன்”

Comments are closed.