வெளிச்சம்-சிறுகதை-வாசுதேவன்

வாசுதேவன்இளநீலக்கோடுகள் இளையோடிய போர்வை அவளுடலில் படர்ந்திருந்தது. இலையுதிர்காலத்தின் இருட்காலையையும் மீறி சாளரத்தினூடு மெல்லொளி நுழைந்து போர்வைக்கு வெளியே தெரிந்த அவளின் வெண்ணுடலை மஞ்சளாக்கியிருந்தது.

புயலோய்ந்த மாலைப்பொழுதைத் தொடரும் ஒரு அதிகாலையைப் போல் அந்த அறையை ஒரு விசித்திரமான உணர்வு ஆக்கிரமித்திருந்தது. அந்த உணர்வைத் தன் சிந்தனைக்குள் வரையறை செய்யும் முயற்சியில் சீராளன் தோற்றிருந்தான். ஆழமாகத் தூங்குபவளின் தூக்கத்தை கலைக்காது மெல்ல எழுந்து  சாளரத்தினூடே வெளியே நோக்கினான். ஞாயிறுக்கிழமையெனினும் கணிசமான வாகனங்கள் அந்த அதிகாலையிலும் தெருவில் நகர்ந்து கொண்டிருந்தன.

நேற்றைய மாலைப்பொழுதில் நடைபெற்ற உடல் பற்றிய உரையாடல்களின் ஞாபகங்கள் மீளவும் வந்து அவனின் மனதைக் கைப்பற்றிக்கொண்டன. சாளரக் கண்ணாடியில் வீழ்ந்து தெரிந்த தன்னுடலை ஒரு முறை அந்நிய உடலாக எண்ணிச் சீராளன் நோட்டம் விட்டான். விசித்திரமாக இருந்தது. உடல்களுக்கு மதமிருப்பதை நேற்றுத்தான் அவன் உணரவும் ஆரம்பித்தான். இயற்கையின் கட்டமைப்புகளையும் அதன் இயங்கு விதிகளையும் மீறி மதக்கோட்பாடுகள் உடல்களைச் சுற்றி நிறுத்தி வைத்திருக்கும் சுவர்கள் அவன் கண்களில் தெளிவுறத் தொடங்கின.

கரங்களால் அவன் தன்னுடலை ஒருமுறை தொட்டுணர்ந்து வருடிப் பார்த்துக் கொண்டான். சில நாட்களோ, சில வருடங்களோ யாரறிவார்….. இவ்வுடலுக்கு முடிவுகிட்டிவிடும். அதுவே அனைத்துக்குமான முடிவாகிவிடும்.

இருப்பினும் போதையுடன் கடந்துபோன முன்னைய  மாலைப்பொழுதில் அவனுடலை இதமாக வருடியவாறே “இந்த உடல் இன்னமும் இந்து உடலாக இருக்கிறது” என அவள் சொன்னதை எண்ணியபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“சீராளன், உடல் நிரந்தமற்றது. கணப்பொழுதில கரைந்துபோகக்கூடியது. இருப்பினுமென்ன உடல்கள்தானே உயிரின் உன்னதத்தைப் பறைசாற்றுகின்றன. உயிரிருப்பின் சாட்சியம் உடலன்றி வேறேது. உயிரினும் மேலானது இவ்வுடல். இதுதான் மானிட நிபந்தனை. இந்த நிபந்தனைச் சட்டகத்துள்தான் உயிரின் உன்னதம் புலப்படுகிறது. உயிருள்ள உடலுக்குள் புலப்படும் உலகமே இருப்பின் மூலாதாரம். மிகுதிகள் பொய்க்கோலங்கள்.”

சில்வியானின் வார்த்தைகளின் அர்த்தப்பொதிவுகள் ஒரு பிரபஞ்சச் செய்தியை தாங்கிக்கொண்டு நிற்பாதாகச் சீராளனுக்குப்பட்டது. புத்தக வாயிலாகப் புத்திக்குள் திணிக்கப்படுவதற்கும், புலன்களின் வாயிலான அனுபவப் பதிவுகளுக்கும் இடையில்தான் எத்தனை இடைவெளியென அதிசியித்து நின்றான் அவன் .

புலனைந்தும் வஞ்சனையைச் செய்யும் ஒன்பது வாயிற்குடில் எனத்தாணுர்ந்திருந்த உடலையும் அதன் புலன்களையும் பற்றிய சில்வியானின் கருத்தாளம் அவனுக்குப் பிடித்திருந்தது.

 உணவகத்தில் பகுதிநேர இணைத்தொழிலாளியாகப் பணிபுரியும் சில்வியானின் இருப்பிடமான பரிஸ் நகரின் இதயப்பகுததியில் உள்ள வீட்டில் சிலவேளைகளில் அவன் இரவுப்பொழுதைக் கழிப்பதுண்டு. பரிஸின் புறநகரொன்றில் வசிக்கும் அவன், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணி நிறுத்தங்களின் போது இவ்வாறு சில்வியானிடம் சேர்ந்து அவளின் வீட்டிற்குச் சென்று இரவைக் கழிப்பது ஒரு புதிய விடயமல்ல. நேற்றைய நாள் மாலையும்போக்குவரத்திற்குத் தடையேற்பட்டதால் சில்வியானுடன் கூடி அவள் வீட்டிற்கே வந்திருந்தான்.

ப்றோத்தாஞ் மாகாணத்திலிருந்து வந்து தத்துவவியலில் மேல்நிலைப் பட்டப்படிப்பை பரிசில் தொடரும் அதேவேளையில் பகுதிநேரமாக அவள் உணவகத்தில் பரிமாறியாகவும் தொழில் புரிந்துகொண்டிருந்தாள்.  சில்வியானின் மூளை தொடர்ச்சியாகக் கேள்விகளைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பதை சீராளன் அவதானித்து உறுதி செய்து கொண்டு நீண்ட நாட்களாகிவிட்டது. வாழ்வு வழங்கும் எல்லாச் சாத்தியக்கூறுகளையும் தன்வசப்படுத்தி அவற்றிலிருந்து நடைமுறைச் சாராம்சத்தை எந்தவிதத் தயக்கமுமின்றி உள்வாங்கி அவள் தன்னைப் பலப்படுத்திக்கொண்டு ஒவ்வொருதடவையும் அடுத்த கட்டத்தை  நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

நேற்றைய இரவில் அவளுடன் வீடுவந்திருந்தபோது நேரம் நடுநிசியைத் தாண்டியிருந்தது. வழமைக்கு மாறாக அவள் கூதூகலமாகவும் தோன்றினாள். வீடுவந்ததும் தனது பெறுமதிமிக்க சேகரத்திலிந்து ஒரு வைன் போத்தலை எடுத்து உடைத்துக்கொண்டாள். தனக்கு அவள் நீட்டிய வைன் கிண்ணத்தைப் பெற்று ஒரு மிடறைச் சுவைத்து அதிசயத்து அவளுக்கு நன்றி கூறும் வகையில் அவன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டான் சீராளன். சீராளனின் வைரம் பாய்ந்த உடலை சில்வியான் ஒருமுறை ஆழமாக நோட்டம் விட்டாளெனச் சீராளன் உணர்ந்து கொண்டான்.

“சீராளன், என்னுடல் யூத-கிறிஸ்தவ உடலாக இருந்தது. நீண்ட பிரயத்தனத்தின் பின்னால் தான் நான் “நிர்வாணமாகிக்கொண்டேன்”. உடலை இழிவுபடுத்தி, அதன் முக்கியத்துவத்தை  முற்றாக நீக்கம் செய்து ஆன்மாவிற்குச் சேவை செய்யும் ஒரு பிண்டமாக அதை யூத- கிறிஸ்தவக் கோட்பாடு ஆக்கியிருந்தது. உண்மையில் இக்கோட்பாடு அதற்கும் முன்னையது. ஐரோப்பாவில் இதன் மூலகர்த்தா சோக்கிரட்டீஸ்தான். அவன்தான் ஆத்மாவை முன்னிறுத்தினான். இயற்கை வழங்கிய எல்லா கொடைகளையும் மறுதலித்து ஆன்மாவை மாத்திரம் மையப்படுத்தி ஒரு அறத்தை முன்வைத்தான்.

மேற்குலகின் சிந்தனையூற்று மையம் கிரேக்கம் என்றும்  அதுவே கிரேக்கத்தின் மாகா மர்மமென்றும் கூறுபவர்கள் ஒன்றில் அயோக்கியர்களாக இருக்கவேண்டும் அன்றில் பொய்யர்களாக இருக்கவேண்டும். காரணம், இந்திய-சீனத் தத்துவவியல்களில் இந்தச் சிந்தனை அதற்கு முன்னரே முளைவிட்டு வேரூன்றி விருட்சமாகியிருந்தது. அங்கிருந்துதான் இச்சிந்தனையும் வாழ்வியலும் கிரேக்கத்தை வந்தடைந்தது. கிரேக்கம் ஐரோப்பாவிற்குத்தான் தத்துவமையமாகவிருந்தது. உலகிற்கல்ல என்பதை இங்கு எவரும் ஏற்றுக்கொள்வதாயில்லை.

உடலைச் சிறுமைப்படுத்தி, அதனை மறுதலித்து, அதனை இழிவுபடுத்தியே அனைத்து மதங்களும் அறமுரைத்தன. அறமுரைக்கின்றன. ஓழுக்கம் என்பது உடலை மறுக்கும் ஒரு விடயமாக மதங்களால் நிறுவப்பட்டுவிட்டது.   உடலை ஆத்மாவிடமிருந்தும் ஆத்மாவை உடலிலிருந்தும் பிரித்து ஒன்றின் நன்மைக்காய் இன்னொன்றை  இழிவு படுத்தியதால் உருவான நாகரீங்கங்கள் ஆட்டங்கண்டு கொண்டுடிருக்கின்றன. உடலையும் ஆத்மாவையும் பிரித்துப்பார்ப்பதா ? எத்தனை அபத்தம் ! மதன் என்பது எப்போதும் அரசியலாகவேயிருந்தது. தெய்வப் பயத்தை  மூலதனமாக மாற்றிக்கொண்டது.

திடிரென ஏன் இன்று  இவ்விடயத்தை சில்வியான் பேசுபெருளாக்கினாள் என்பது ஆரம்பத்தில் சீராளனுக்குத் தெரியவில்லை. தெரிந்தபோது அதை முழுமையாகத் தெரிந்து கொண்டான்.

என்னுடல் இந்து உடலா ? என்னுடலும் ஒரு மதம் சார்ந்ததா ? உடல்களை மதங்கள் கைப்பற்றிக்கொண்டுள்ளனவா ?

“சீராளன், மதங்கள் கொண்டுவரும் சொற்கள் நம் மனதைச் சிறைப்பிடித்துவிடுகின்றன. இளமையில் நமக்குக் கொடுக்கப்படும் கடவுள் பற்றிய அச்சமூட்டல் அல்லது குற்ற உணர்வு என்பது எம்மை மதக்கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு எப்போதும் பலவீன நிலையில் பேணிக்கொள்கின்றன. எந்த விளிப்பு நிலைக்குச் சென்றாலும்,எமக்கெதிரான நிரந்தரப் புரட்சி நிலையிலிருந்தாலன்றி, அவை எப்போதும் எம்மீது தொற்றிக்கொண்டு விடுகின்றன.  எம்மைத் தோற்கடித்து விடுகின்றன. நீ இங்கே உள்நுழைந்தபோது உன்னுடலை வாரி அணைத்து “நல்வரவு” சொல்லும் வகையில் நானுக்கு முத்தமிட்டபோதும் உன்னுடல் தளர்வற்று இறுக்கமாக இருந்தது. அந்த இறுக்கத்திற்குக் காரணம் என்னவென்று தேடிப்பார்த்தேன்.

நீ சொல்வது உண்மைதான். வெளிச்சம் உள்ளபோது பெண்கள் என்னுடலைத் தொடுகையில் சிறு தயக்கம் என்னுடலில் ஏற்படுகிறது. இருளின் கருணையில் மாத்திரமே அது சிலிர்க்கிறது.

தனது வைன் கிண்ணத்தை மீளவும் நிரப்பியவாறு சில்வியான் தொடர்ந்து பேசினாள். “இருளில் மாத்திரம் சிலிர்க்கும் உடல்கள் தம்மை மறுதலிப்பவை. தம்மைச் சாதாரண நிலையில் ஏற்றுக்கொள்வதற்கு அச்சம் கொண்டவை. அதன் விளைவுகளும் பாரதூமானவை. பெண்ணுடல் என்பது தன்னை மறுக்கும் உடலாக இருக்வேண்டும் என்பது ஆண்களினால்கட்டமைக்கப்பட்ட மதங்களிலிருந்து வடிவமைக்கப்பட்டது என்பதுதான் உண்மை. பெண் தெய்வங்கள் இருக்கின்றபோதும் மதங்கள் ஆண்களினால் உருவாக்கப்பட்டவைதான். பெண் என்பவளை தன் கட்டுப்பாட்டு வலையத்துள் நிறுத்தி அவளைப் புனிதப்படுத்துததில் இருந்து ஆரம்பிக்கிறது ஆணுலகச் சதி. இதில் ஆச்சரியமென்னவென்றால், எதிர்விளைவாக தாய் எனும் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளும் பெண்களும் தங்கள் முறைக்குத் தங்கள் ஆண் பிள்ளைகளையும் அவர்களை அறியாமலே உடலை மறுக்கும் ஒழுக்க நிலைக்குள் தள்ளிவிடுகிறார்கள். இரு ஒரு சமூக உளவியற்பொறி.”

வைன் இதமாக இருந்தது. குளிர்போக்கியின் மட்டத்தைச் சற்று உயர்த்தியிருந்த படியால் அறை கதகதப்பாக இருந்தது. சாமுவெல் பார்பரின் மெல்லிசை அந்த அறைக்கு ஒரு கனவுலகப் பரிமாணத்தைக் கொடுத்திருந்தது. கண்ணை மூடியவாறு சில்வியான் சோபாவில் சற்றுச் சரிந்திருந்தாள். தேவதையாக இருந்த அவளின் முகத்தைச் சீராளன் உற்று  நோக்கினான். கபடமின்மை அதில்  சலனமின்மையை உருவாக்கியிருந்தது. அவளுடல் தெய்வீகத்தைப் பிரவாகித்தது.

அவள் கண்களைத்திறந்த போது சீராளன் தன்னை உற்று நோக்குவதையுணர்ந்து, நீயும் நான் அழகானவள் என்பதையா சொல்லப்போகிறாய் ? என்றாள். சீராளன் ஒமென்றும் இல்லையென்பதும் போலான ஒரு தலையசைவினால் மட்டும் பதில் சொன்னான். எழுந்து சென்று வெறுமையாக இருந்த கிளாசை நிரப்பி சீராளனின் கையிலதைக் கொடுத்து தானும் ஒரு கிளாவை எடுத்துக்கொண்டாள்.

பின்னர் எந்தச் சலனமும் இல்லாது சீராளளின் முன்னாலே தன்மேலாடைகளைக் களைந்து சர்வசாதாரணமாக தன் வெண்ணுடலை வெளிப்படுத்தி நின்றாள் சில்வியான். சீராளன் இந்நிலையை எதிர்பார்க்கவே இல்லை. அவனுக்கு ஒருமாதிரியாக இருந்தது. கொழித்துக் கிடந்த அவளின் இளமை வனப்பு அவனுக்குச் சங்கடத்தையே கொடுத்தது. அரை நிர்வாணப் பெண்ணுடற் தோற்றம் அவனுக்கு ஒரு ஆக்கிரமிப்பாகவும் வன்முறையாகவும் தோன்றியது. சீராளன் சிந்தித்துக் கொண்டிருக்கையில் அவள் அவன் முதுகுப்புறம் சென்று தன்னிரு கைகளாலும் அவனின் தோளை அழுத்தினாள்.  கடவுளே ஏன் இத்தனை இறுக்கமாக இருக்கின்றன உன் தோள்கள் ? றிலாக்ஸ் சீராளன். அரவமொன்றைக் கண்ட பதற்றம் உன்னில் உள்ளது. றிலாக்ஸ் பிளீஸ் ! என்று கூறிக்கெணாண்டே அவனை ஆதரவாகத் தழுவிக்கொண்டாள்.

அரவத்தைக் கண்ட பதற்றமா என்னிடமா ? நீ என்ன சொல்கிறாய் சில்வியான் ? சீராளன் தன்னைச் சுதாகரித்தவாறு கேட்டான்.

ஆமாம். அதுவேதான். ஏவாளை ஏமாற்றிய அரவம் என்னிடம் குடிகொண்டிருப்பதை கண்டு அச்சம் கொண்டாயோ என்று  எண்ணினேன். உண்மையில் அந்த அரவமும் நானும் ஒன்றுதான். நான்தான் ஏமாற்றுக்காரி. என்னிடம் உள்ள விடம்தான்  படைப்புலகின் தோற்றுவாய். நானின்றி இப்பிரபஞ்சத்தின் படைத்தற்கடவுள்கள். சக்தியற்றவர்கள். அதனால் என்னை தங்கள் கட்டுக்காவலில் வைத்திருக்கும் நிரந்தரப் பிரயத்தனத்தில் இருக்கிறார்கள். ஆனால், நான் அடங்காதவள். என் உள்மையில் மந்திரத் தன்மையுண்டு. நான் விழுமியப்பெறுமானங்களை தலைகீழாகக் கவிழ்துப்போட்டுவிட்டவள்.  என்னுடலை அதன் இயல்பான நிலையில் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதன் சிலிர்ப்புகளையும், தேவைகளையும் எவ்விதத் தீரப்புகளுமின்றி ஏற்றுக்கொள்கிறேன். அவற்றிற்குப் பணிகிறேன்.  பசிகளையும், தாகங்களையும் நான் பத்திரப்படுத்தி வைப்பதில்லை.  பத்திரப்படுத்தப்படும் பசிகளும் தாகங்களும் கனவுகளை மட்டுமே கழிவு மீதியாகத் தருகின்றன. அனால் அதில் விடுதலை எங்கும் இல்லை.

சில்வியானின் கைகள் சிறிதுசிறிதாக சீராளனின் உடலின் பாகங்களை வருட ஆரம்பித்திருந்தன. அவனும் அவளின் காந்தப்புலத்துள் கைதியானவன் போல் காணப்பட்டான். தன்னுடலில் இருந்த அனைத்து ஆடைகளும் களையப்பட்டுவிட்டதை அவன் கண்டும் காணாதது போலிருந்தான்.

எழுந்து நின்று கண்ணாடியில் தன்னுடலை ஒரு முறை சீராளன் நோக்கினான்.  முதன் முறையாகத் தன்னுடலை முழுமையாகக் பார்ப்பதுபோலிருந்தது. தன்னுடல் ஒரு மாயத்தோற்றமாகவும் அவனுக்குத் தோன்றியது. இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துபோன தன் நண்பனைப்பற்றிய ஞாபகம் திடீரென அவனின்முன் வந்து நின்றது. உயிருள்ளவன்போல் அவன் சவப்பெட்டியிருந்தது சீராளனின் கண்களுக் தெரிந்தது. தன்னுடலை ஒரு கணம் உயிரற்றதாக எண்ணிப்பார்த்தான். அச்சமும், வெறுமையும் புலப்பட அவற்றிலிருந்து தன்னைப் பிடுங்கினான். அப்போது தன்னுடல் உன்னதமான ஒன்று எனும் எண்ணக்கரு அவன் மனமெழுந்து  நின்றது. உயிரில்லாத உடலும், உடலில்லாத உயிரும் வெறுமைகள் மாத்திரமல்ல அர்த்மின்மைகளும் என்ற புரிந்துணர்வு அவனிடத்தில் நிரந்தரமாகக் குடியமர்ந்தது. உடலைப் பூசிப்பதும் ஆராதிப்பதும் அதியுச்ச அர்த்தத்தை வாழ்க்கைக்குக் கொடுப்பதாக அவனுக்குத் தோன்றியது. தன்னுடலில் புதையுண்டு இந்துத்துவமாக, வஞ்சமாக ஒளிந்திருந்த அர்த்தமிலாப் புனிதம் என்பது களைந்தெறியப்பட வேண்டிய ஒன்று என்பது அவனுக்குத் துல்லியமாகப் பட்டது.

உளத்தடைகள் எல்லாம் உடைத்தெறியப்பட்ட ஒரு பெரு வெளியில் தானிருப்பதையும் மீளமுடியா தொலைவிற்குச் சென்று விட்டதையும் அவனுணர்ந்தான்

இரண்டு நிர்வாண உடல்கள் மட்டும் அந்த அறையிலிருந்தன. அவை தங்களை தற்காலிகமாக இழப்பதற்கும் தயாராக இருந்தன. ஓருடல் இன்னோருடலாக மாறும் விந்தை நடைபெறும் கணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தன.

சில்வியான் சற்றுப்பொறு என்று கூறிவிட்டு, புது இசைத்துண்டமொன்றை ஆரம்பிக்கவைத்தாள். இது பிரபல இசைவாணன்  றவெல் தொகுத்த  ‘பொலறோ”. இதன் ஆரம்பத்துடன், இதன் ஆர்முடுகலுடன் உன்னுடலை என்னுடலுடன் உரையாடவிடு. அதன் பின்னர் அவள்ஏதும் கூறவில்லை.

மெலிதாய், மிகமெலிதாய் உடலைத்தீண்டியது அந்த இசை. உடல்களும் இசையும் ஒன்று கலந்து அதன் லயத்தையும் உள்வாங்கிக்கொண்டன. அதன் தாளம் சிறிது சிறிதாக, இருப்பினும் புலப்படா வகையில், ஆர்முடுகிக்கொண்டிருந்தது. இசையின்  துல்லியப்பிரசன்னம் உடல்களை மறைத்துத் தன்னைப் பிராகாசப்படுத்திக்கொண்டது. உடலின் தொடுகை  இன்பமும், இசையின்பமும் ஒரே தாளலயத்தில் பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது. காலமின்மை மரணத்தில் மாத்திரமே வாய்க்கக்கூடியது என்பதைப் பொய்யாக்கின அந்தப் பொழுதும்  அந்த இசையும். காலத்திற்கும் இசைக்குமான உறவுபற்றிய பிரக்ஞையுடன் உடல்கள் சிலிர்த்துக்கொள்ளும்போது உன்னத நடனம் பிறக்கிறது. பிரபஞ்ச நடனத்தின் ஒரு துளி. சமுத்திரத்தைச் சமபலத்துடன் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு துளி.

கணங்களுக்குள் விரிந்து முடிவற்றுப் படர்ந்தது காலம். உடல்கள் காலத்தால் கரைந்து இன்மைக்குள் புதைந்து போயின. த்ததுவங்கள் ஏதுமற்று, கடினமான கற்றல்கள் ஏதுமற்று பிரபஞ்ச இருப்பு மனதில் மழையெனப் பொழிவதைச் சீராளனின் பிரஞ்கை கண்டுகொண்டிருந்தது. இசை அதன் உச்ச ஆர்முடுகலுக்குச் சென்று ஓய்ந்தது.  இரு உடல்கள் நிர்வாண நிலையை அடைந்திருந்தன. பின்னர் உறங்கங்கொண்டன.

போதியளவு தூக்கமில்லா ஒரு இரவு கழிந்தபோதும், உடல் சுமையற்றிருந்தது. உள்ளமும் சுமையற்றிருந்தது. சீராளன் தொலைபேசியில் நேரத்தைப் பார்ததான். எட்டு மணியைத் தாண்டியிருந்து. அவசரமாக தனது ஆடைகளை அணிந்து கொண்டு கதவை மெதுவாகச் சாத்திக்கொண்டு அவன் புறப்பட்டான். நிலக்கீழ் தொடரூந்து வண்டி நிலையத்தை அடைந்த போது தொலைபேசி அழைத்தது.

அது அவன் மனைவி. எத்தனை மணிக்கு வருவீர்கள் என்ற கேள்வி சடங்குரீதியான வெற்றுக் குரலுடன் வெளி வந்தது. 30 நிமிடங்களில் வந்துவிடுவேன் என்றவன் தொபேசியைச் சலிப்புடன் கட் பண்ணினான். றெயின் பெட்டியுள் ஏறியபோது மீண்டும் மனம் கனத்தது விட்டதாக அவனுக்குப் பட்டது.

வாசுதேவன் -பிரான்ஸ்

வாசுதேவன்

(Visited 115 times, 1 visits today)
 

One thought on “வெளிச்சம்-சிறுகதை-வாசுதேவன்”

Comments are closed.