லெப்டினண்ட் கேணல் “ராபட் கொன்சார்லஸ்”-சிறுகதை-ஏ.ஜே.டானியல்

ஏ.ஜே.டானியல்“சொத்தி ராஜன்” என மக்களால் அழைக்கப்பட்ட கனகசபை ராஜன் என்பவன் மிகச்சிறந்த சுழியோடி. கடலட்டை, சங்கு என கடலில் பலதரப்பட்ட மச்சங்களை வேட்டையாடிக்கொண்டே இருப்பவன். ஆனாலும் சீசனுக்கு ஏற்ப தொழிலை மாற்றிக்கொள்ள தயங்கவும் மாட்டான். கடலட்டையில்க் கிடைத்த பணத்தை குடித்துக்கும்மாளம் அடித்து ஊதாரியாக செலவு செய்தான். யாராவது கேட்டால் வயது பால் பார்க்காமல் “மை கார் மை ரோட் மைபெற்றோல் உனக்கென்னடா பூனா…” ஓ**** மல் மாறு “என்பான். அப்போது அவனுக்கு வயது 21 இருக்கும். தாண்டித்தாண்டி நடந்தாலும் வாட்ட சாட்டமானவன். பெண்கள் விசயத்திலே அவனிடம் பெரிய வீக் பொயின்ற் இருந்தது. அவனது பலம் சிங்களம் சரமாரியாகப்பேசுவதுதான்.

மன்னார் கொழும்பு கருவாட்டு பிசினஸ் ஏஜண்டாகவும் வேலை செய்தான். பேசாலை, வங்காலைப்பாடு, தலைமன்னார், தாழ்வுபாடு என பல இடங்களில் இருந்து கருவாடுகளை இறக்குமதி செய்து கொழும்புக்கு அனுப்பி நல்ல லாபம் ஈட்டிக்கொண்டு இருந்தான். கருவாட்டு பிசினசோடு சில காலம் வவுனியாவில் மன்னார் ரூ வவுனியா தனியார் பஸ் கொண்டக்ரராக வேலைசெய்தான். இடையிடையே கொழும்பு றூட்டுக்கும் சேர்ந்து போனான். சிங்களமும் சரமாரியாக பேசப்பழகினான். இதன் விளைவால் கொழும்பு ஆமர் வீதி, மோதர பிரதீபா திருமண மண்டபம் போன்ற இடங்களில் சில பெண்களை பழக்கம்பிடித்து வவுனியா மன்னார் என பஸ்களில் இரவோடு இரவாக ஏற்றிவந்து இங்கு முகாமிட்டு இருந்த இராணுவத்துக்கும் நேவி பொலிசுகளுக்கும் படுக்கக் கொடுத்தான். அவனுக்குப் பிரதியுபகாரமாகக்  குடிக்க நெப்போலியனும், பொரிச்ச இறைச்சியும், சீஸ் டப்பாக்களும் கிடைத்தன. சில நேரங்களில் தேவைக்கேற்ப தானும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி  அந்தப்பெண்களைப் புணர்ந்து கொண்டான். இரவு பஸ் றூட் அடிக்கும் போதும் லீவில போகும் பொலீஸ் ,ஆமிக்கும் போதிய அளவு அழகான சிங்கள, தமிழ்ப்பெண்களை அமைத்துக்கொடுத்தான். பஸ் சீற்கள் இரவு நேரங்களில் சௌகரியமாக இருந்தது. அதை அவர்கள் வலு கச்சிதமாகப் பயன்படுத்தத் தவறவில்லை. சில காலம் போக அந்த மாவட்டங்களில் உள்ள சீஎஸ்சோ-மாருடன் அன்னியோன்யமாகினான். இந்தப்பழக்கத்தால் சொத்தி ராஜன்  பெரும்பான்மையான இராணுவத்துக்கு வேண்டியவனானான். சில உயர் அதிகாரிகள் அவனை நாடவேண்டி இருந்தது.

இந்தக்காலத்தில் சொத்தி ராஜன் சிறிய சிறிய குற்றங்கள் செய்து பிரபலமாகி ஒரு தாதா றேஞ்சுக்கு ஆகிவிட்டான். எந்தப்பயமச்சமும்  இல்லாமல் நடமாடினான். அதன் அடையாளமாக தலைமுடியை சற்று நீட்டாக வளர்த்து வலது கை கட்டவிரலில் ஒரு வளையமும் கழுத்தில் ஒரு வெள்ளிச்செயினும் நெஞ்சில் ஒரு நங்கூரமும் வரைந்து இருந்தான்.  சில மாதங்களின் பின்பு மன்னாரில் உள்ள இராணுவத்தின் நலன்புரிச்சங்கத்தில் தொடர்புகளை ஏற்படுத்தி அங்கிருந்து “சதோசா”என்கின்ற இராணுவ பல்பொருள் அங்காடியில் எடுபிடி வேலையில் இணைந்து கொண்டான். இரவு நேரங்களில் கடையை பூட்டிவிட்டு அங்கு இருப்பவர்களோடு மது அருந்தி காலத்தைக்கழித்தான். அன்றில் இருந்து சரியாக ஒரு வருடமும் இரண்டு மாதங்களில் அந்த வேலையை விட்டு வவுனியா பூந்தோட்டத்துக்கு ஓடினான். யாரோ அவனது கூட்டாளி சவுதியில் இருந்து வந்து இருப்பதாக தகவல் அறிந்து பின்னர் சில நாட்களில் மீண்டும்  மன்னாரில் காலடி வைத்தான்.

“சதோசா”அவனது நிரந்தர வேலைத்தளமாகியது. இப்பொழுது சொத்திராஜன் “சதோசா ராஜன்” என்ற கௌரவ பெயரைக்கொண்டு அழைக்கப்பட்டான். அந்த காலகட்டத்தில் சொத்தி ராஜனுக்கு நெருக்கமான ரத்னவீர என்ற ஒரு ராணுவவீரன் சதோசாவுக்கு பொறுப்பாக இருந்தான். இவனது அட்டகாசம் நகர் முழுவதும் வியாபித்து இருந்தது. அவனிடம் 150 சீசீ கவசாக்கி பீல்ட் பைக் இருந்தது. அவன் போதையில் கடுகதியில் வண்டியை ஓட்டி சிலரை சாகடித்தும் பலரை காயப்படுத்தியுமுள்ளான். யாரும் தட்டிக்கேட்கப்பயந்து கொண்டிருந்தனர். சொத்தி ராஜன் அவனுடன் சேர்ந்து சவாரி செய்துகொண்டான். மோட்டார் சைக்கிள் கிடைக்கும் போது தானும் ரத்ன வீர என்றவனைப்போலவே நடந்து கொண்டான். கெல்மட் அணிவதால் யாரும் இன்னார் என்று அடையாளம் கண்டு கொள்ள சிரமப்பட்டனர். உயர்ரக வாகனங்களின் பாவனை ரைகேசை தவிர ஆமி நேவியிடம் மட்டுமே இருந்தது. அதைவிட கடற்றொழில் பயன்படுத்தும் அவுட்போட் மோட்டர்கள் 15 குதிரை வேகத்திலும் குறைவான வேகமுள்ள இயந்திரங்களையே பயன்படுத்தவும் பணிக்கப்பட்டு இருந்தனர். இவை  அனைத்தும் நேவியின் பாதுக்காப்பிலே இருந்தன.

நகரில் அடிக்கடி அங்காங்கே பிஸ்ரல் வெடிகளும் கைக்குண்டுகளின் சத்தங்களை கேட்டவண்ணமே இருந்தது. நிலமை இவ்வாறு இருக்க “ரத்னவீர“ பெண்கள் நடமாடும் பாடசாலை வீதிகளில் இறங்கி மாணவிகளின் இளம் ரீச்சர் மாரை கிண்டல் செய்வதும் மாணவிகளின் பின்புறம் கைவித்தைகளையும் காட்டினான். பெண்கள் அருகில் செல்லும் போது வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தும்போது அவர்களது பாவாடை பறந்து உள்பாவாடை தெரியும். அதை பார்ப்பதில் அவனுக்கு அலாதிப்பிரியம். இவனது அடவடித்தனத்துக்குப்பின்னரே சில கொண்வெண்ட் சிஸ்டர்மார் பெண்பிள்ளைகளுக்கு உள்பாவாடைக்குள் இறுக்கமான “ரைட் சோட்ஸ் “அணியும் படி பணிக்கப்பட்டனர்.

காற்றடிக்கும் காலங்களில் பயனுள்ள ஒரு உள்ளாடையாக “ரைட்சோட்ஸ்” இருந்தது. ஆனாலும் எரிக்கும் மன்னார் வெயிலுக்கு பிள்ளைகள் அந்தரங்க இடங்களில் உஷ்ணத்தை உணர்ந்தனர். இதனால் பிள்ளைகள் சிஸ்ரர்மார் காதுகளை எட்டும் வரை முணுமுணுத்தனர். பீல் பைக்காரர்களது அட்டகாசத்தை காண்டும் பெற்றோர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய தயங்கினர். எண்ணி சில மாதங்களில் பீல் பைக்கில் ஓடிக்கொண்டு இருக்கும் போது வீதியில் வைத்து நேரு அம்மானால் நெற்றிப்பொட்டில் பிஸ்டல் வெடி வாங்கி “ரத்னவீர“  மன்னார் எஸ்பிலனட் வீதிக்கருகாமையில் பட்டப்பகலில் கொலைசெய்யப்பட்டான். அவனது சடலத்தின் துண்டுகள் வீதியில் நாய்களால் குதறப்பட்டு இரண்டு நாட்கள் அல்ஹசார் மகாவித்தியாலய மைதானத்தில் கிடந்து நாறியது.

மன்னாரில் இருந்து சொத்தி ராஜன் தப்பி ஓடிகொழும்பில்தலைமறைவானான். சதோசாவின் கணக்கு வழக்கைப்பற்றியும் ரத்னவீர பற்றிய ரகசியங்களை தெளிவாக அறிந்த ஒரே ஜீவன் “சொத்திராஜன்” மட்டுமே. அவன் தப்பி தலைமறைவானது ரைகேசுக்குப் பயந்தா? இல்லை சதோசாவில் கொள்ளையடித்த பல ஆயிரம் பணத்தைப்பதுக்குவதற்காகவா? இந்தக்கேள்வி ராணுவ உயர்மட்டங்களில் மட்டுமன்றி சாதாரண மக்களிடமும் எழுந்து இருந்தது. உயிரோடு இருக்கின்ற சொத்தி ராஜன் பற்றிய தகவலை சேகரிக்க சிஜடி காரர் உற்சாகமாக செயல்பட்டனர். மன்னார் கமுதாவ பொலிஸ் காம்ப் விசேடமாக களத்தில் இறங்கி வேலைசெய்தது. சதோசா இன்று வரை இயங்காமல் பாழடைந்து போவதைக்காணக்கூடியதாக இருந்தது. இப்பொழுது சதோசா கழுதைகளால் நிறைந்த இடமாக மாறியது. ரத்னவீர கொல்லப்பட்ட அன்று காலை பேசாலையில் இருந்து சந்தேகத்துக்கு இடமான மூவர் சாறத்துக்கு உள்ளே அரைக்காற்சட்டை அணிந்து கொண்டுவந்ததாகவும் பீஎம்சி பொலீசுக்குத் தகவல் கொடுத்து இருந்தது. அன்று இரவு பொதுமக்கள் இராணுவத்தால் சரமாரியாகத்  தாக்கப்பட்டு சவேரியார் கல்லூரி மைதானத்தில் இராணுவத்தில் பவள் வண்டியில் முகமூடி அணிந்த ஒருவனின் முன்னால் நிறுத்தப்பட்டனர். ஆனாலும் ஓரிருவர்  கைதுசெய்யப்பட்டுத்  தாக்கப்பட்ட பின்னர் அவர்கள் “சாவற்கட்டு என் ரட்சகர்” ஆலய பாஸ்ரர் ஜீவரட்ணமும் அவரது மருமகன் ஆமோஸ் என்று பின்னர் தெரியவந்தது.

அணிவகுப்பில் பயணித்த சிலர் முகமூடி அணிந்த ஆமிக்காரன் இல்லை அது “சொத்தி ராஜன்” தான் என அழுத்தம் திருத்தமாக கூறினர். சொத்தி ராஜனுக்கு இடதுகால் வலதுகாலைவிட சற்று சிறியதாக இருந்தது தாண்டித்தாண்டி நடப்பான் எல்லாரும் சொத்தி சொத்தி என்று கிண்டல் அடித்ததால் பிற்காலத்தில் கனகசபை ராஜன் “சொத்தி ராஜனாக” அழைக்கப்பட்டான். சொத்தி ராஜன் என்றதும் அவன் கொஞ்சம் தொந்தரவுப்பட்டான். அதனாலேயே அவன் நடந்து திரிவதை தவிர்த்துக்கொண்டான். தாண்டி நடத்தல் அவனது அழகுக்கு ஒரு குறையாக இருந்தது. மன்னார் பொது வாசிக சாலைக்கு அருகில் ஒரு சிறுவர் பூங்கா சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அரசதிபர் மார்க் திறந்து வைத்து 4 மாதங்கள் கழிந்த பின்னர் அதன் அருகில் ஒரு வேப்பமரம் ஒன்றில் கயிற்றைக்கட்டி தறப்பாள் போட்டு அதன்கீழ் செருப்புத்தைக்கும் நாரயணனிடம் ஒரு உயரமான செருப்பு சொல்லி சரிக்கட்டினான். நாராயணன் வெளியே செல்லும் போது முபாரக் என்னும் ஒரு சறுபத் வியாபாரி பொறுப்பேற்றான்.

முபாரக் கற்பிட்டியைப்  பிறப்பிடமாக கொண்டவன். கற்பிட்டியில் இருந்து புறா பிசினஸ் செய்ய மன்னார் எருக்கலம்பிட்டிக்கு வந்து அங்கே தங்கி இப்போது பிள்ளை குட்டி என்று பல்கிப்பெருகினான். சொத்தி ராஜன் முபாரக்குடைய கடையிலும் சர்பத் போடும் தொழிலை முறையாகக்கற்றுத்தேர்ச்சி பெற்றான். இன்று அவன் கொழும்பில் ஆமொர் ஸ்றீட்டில் ஒரு சர்பத்கடை போட்டு பிழைப்பை நடத்தினான். கஞ்சா வியாபாரம் சைட் பிசினசாக செய்தான். மன்னாருக்கும்  வவுனியாவுக்கும்  கஞ்சா ஏஜென்சியாக உருவாகினான். இதற்கு பின்புலமாக ஒரு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் இருந்ததாக சந்தேகம் இருந்தது. கஞ்சா கட்டுகள் இந்தியாவில் இருந்து தருவிக்கப்படுவதாக தகவல் கசிந்தவண்ணம்  இருந்தன. ரைகேஸ் கஞ்சாக்காரர் சிலரை கடத்தி வன்னிக்கு கொண்டு சென்று பங்கர் வெட்ட விட்ட சம்பவமும் நடந்தேறின. சொத்தி ராஜன் கொழும்பில் “ராஜய” என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.

ராஜயவுக்கு இப்பொழுது வயது இருபத்தெழு ஆகிவிட்டது. விறைப்பான ஆள் ஆகிவிட்டான். உழைத்து ஒரு ஆட்டோவுக்கும்  சொந்தக்காரன் ஆகிவிட்டான். ஆளுடைய தோற்றம் மாறி கொஞ்சம் டீசண்ட் ரைப் ஆகிவிட்டான். சொத்தி ராஜனின் அக்கா ஒருத்தி மன்னார் தரவாங்கோட்டையில் வசிப்பதாக தகவல் கிடைத்தது. இடைக்கிடயே சிங்கள ஆக்கள் நீர்கொழும்பில் இருந்து விசைப்படகில் வந்து தொழில் செய்ய ஆரம்பித்தனர். சொத்தி ராஜனில் கால் மீண்டும் மன்னார் கடற்கரைமண்ணில்  ஆழமாக ஊன்ற  ஆரம்பித்தது. அவன் மீண்டும் வந்த போது பெரும்பான்மையான இராணுவம் பொலிஸ் சீ ஐ டீ-க்கள் இடமாற்றலாகி சென்றதாகக்  கூறப்படுகின்றது. சொத்திராஜன் இப்போது தொழிலை மாற்றிவிட்டான் அவனது குணங்குறிகள் சற்று மாறி தரவாங்கொட்டை சலீம் ஜீயஸ் உடன் தொடர்பு உண்டாகி அவனுக்கே எடுபிடியாக மாறி மாறினான்.

சில வருடங்களின் பின்பு ரைகேசுக்கு அரசாங்கத்துக்கும் சமாதான ஒப்பந்தம் வெகு விமரிசையாக ஏற்படுத்தப்பட்டது. சில வாரங்களில் ரைகஸ் மன்னார் நகருக்குள் அரசியல் அலுவல்களை கவனிக்கவெனக்  காலடிவைத்தனர். அமுதாப் தலைமையிலான குழு மன்னார் பிரதான வீதியில் இருந்த ஒரு பேக்கரியை திருத்திவிட்டு புலிக்கொடியைப்  பறக்கவிட்டு தேசிய கீதத்தோடு அவர்கள் தமது பணியை ஆரம்பித்தனர். வெவ்வேறு இடங்களிலும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அந்தக்கால கட்டத்தில் தான் சொத்திராஜன் மிகவும் செல்வச்செழிப்போடு வாழ்ந்தான். அவனுக்கு சலீம் ஜீயஸ் பக்கபலமாக இருந்தான். தலைமன்னார் வீதியை புனரமைக்கும் பணி சலீம் ஜீயஸ், றிச்சாட் ஆகியோருடைய தலைமையில் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அந்த ஒப்பந்த வேலை சொத்திராஜனுக்கு கிடைத்தது. நாட்கள் செல்லச்செல்ல சொத்தி ராஜன் அமுதாப், கவியாழன்,போன்ற ரைகேசின் பொறுப்பாளர்களுடன் தொடர்புகளைப்பேண பழகிக்கொண்டான். முதன் முதல் மன்னாருக்கு புலிகள் உத்தியோக பூர்வமாக காலடி வைத்த போது திருவிழா போல நகர் காட்சி தந்தது. அக்காட்சியை இராணுவத்தினர் உயரமான பழைய கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் இருந்து வீடியோ பதிவு செய்தது இன்று நினைவிருக்கின்றது. சொத்தி ராஜன் கொஞ்சக்  கொஞ்சமாக ரைகேசின் காரியாலயங்களுக்கு வருகை தர ஆரம்பித்தான்.

ரைகேஸ் சொத்திராஜன் இருவருக்கும் இடையிலான அன்னியோன்ய உறவின் பலத்துக்கு பின்னால் ஒரு வரலாற்றுச்சம்பவமும் ஒன்று உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பின்பு மன்னார் நகருக்குள் அரசியல் நடவடிக்கைகளுக்கு என போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின் மேற்பார்வையின் கீழ் வருகை தந்து தமது அரசியல் நடவடிக்கைகளை தீவிரமாக செயற்படத்தொடங்கினர். எங்கும் உணர்ச்சி பொங்கல் தீவிரமாக பரவி பல ஏரியாக்களுக்கு விஸ்தரிக்கப்பட்டு இருந்தது. ஒரு வாரத்தின் முதல் நாள் ரைகேசின் மகளிர் அமைப்புக்கு பொறுப்பான தமிழினி வன்னியில் இருந்து கொண்டா சீஜீ 125 ரக மோட்டார் வண்டியில் இன்னொரு ரைகேஸ் பொட்டையுடன் உயிலங்குளம் வழியாக மன்னார் நகருக்கு புக முற்பட்ட வேளை இடையில்

போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழுவினால்  தடுத்து நிறுத்தப்பட்டு பல மணி நேரங்கள் அவர்களுடன் வைத்துவிருந்தனர். ரைகேஸ் பொட்டைகள் இருவரும் துப்பாக்கி, பிஸ்டல், வெடிகுண்டு, தோட்டா, சைனட் என்று எதுவும் தங்களிடம் வைத்து இருக்கவில்லை. ஆகினும்  தடுத்துவைத்தது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முரணானது என எல்லாப் பத்திரிகைகளும் தலைப்புச்செய்திகளில் இட்டது. ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டதற்கான காரணம் சொத்திராஜன் மூலமே புலிகளுக்கு அறிவிக்கப்பட்டது. சொத்தி ராஜன் சிங்களத்தில் தேர்ச்சி பெற்றவன். அவன் ஏதோ தேவைக்காக கருங்கண்டலுக்கு சென்றுவரும்வழியில் தான் இயக்கப்பொட்டைகளின் பிரச்சனை நடந்துகொண்டு இருந்தது. தமிழினியும் மற்றப்பொட்டைக்கும் சொத்திராஜன் தான் ரான்சிலேட்டர். அன்றில் இருந்து சொத்தி ராஜனின் ரேஞ்ச் வேற லெவல். ரைகேஸ் பெட்டைகள் இடுப்பில் இடுப்புப்பட்டி அணிந்து இருந்தது தான் காரணம் என்று அவனால் அறியப்பட்டது.

இடுப்புப்பட்டியும் போர் ஆயுதமாம். இராணுவ பிரிகேடியர் சம்பத் கெக்கடுவ கண்காணிப்புக்குழுவிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் சொத்திராஜன் எப்படியான  ஜில்மால் காரன்? அவனது பழைய வாழ்க்கையை ரைகேஸ் பொடியள் அறியாமாலா விட்டார்கள்? வேடிக்கைதான். ஒருவேளை ஜீ எஸ்-மாரின் நற்சான்றிதழும் ரைகேசுக்கு கிடைச்சு இருக்கலாம். இப்போது சொத்தி ராஜன் ஒரு பெட்டையை கலியாணம் செய்தான். அந்தப்பெட்டையை நேவிக்காரன் காணிவேலுக்கு ஒருமுறை கூட்டிக்கொண்டு போனதாக சிலர் கூறித்திரிந்தனர். அது அவனது காதுக்குள் பலதடவை அடிபட்டது. அவன் கணக்கெடுக்கவில்லை. இப்போது அவனது இருப்பு கோந்தப்புட்டிக்கு மாறியது.

 இந்தக்காலகட்டத்தில் தான் ஒரு பிரச்சனை உருவெடுத்து இருந்தது. கோந்தப்புட்டி முஸ்லீம்களுக்கு உரிய பிரதேசம். அதனில் சில தமிழ் மீனவர்கள் வாடி போட்டு தொழில் செய்தனர். இந்த செயற்பாடுகளுக்கு காரணம் ஒரு தமிழ் எம்பி என்ற தகவல் வெளி வந்தது. ரைகேஸ் இதில் தலையிட்டு காரியத்தை பிரச்சனையின்றி முடித்தனர். சில வாடிகள் மட்டும் எடுக்கப்பட்டன. சொத்தி ராஜன் அங்கே கால் ஊன்றினான். இந்தக்கால கட்டத்தில் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாப்பா மற்றும் ரைகேசின் தளபதி சொர்ணம் உட்பட பலர் முக்கிய போராளிகள் மாவட்ட விளையாட்டு வீரரை கௌரவிக்க வன்னியில் இருந்து மன்னாருக்கு படையெடுத்தனர். நிகழ்வு முடிந்ததும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்தனர். சொத்திராஜன் வாய்ப்புக்களைச்சரியாக பயன்படுத்திக்கொண்டான்.

000000000000000000000000000000

2003 ல் பொங்கு தமிழ் ஏற்பாடுகள் தயாராயின. உலகத்தை உலுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் மக்களுடைய விருப்பமும் ரைகேசின் விருப்பமுமாக இருந்தது. சுய நிர்ணய உரிமை முக்கியமானதாகவும் அது தமிழ் மக்கள் ஒட்டுமொத்த குரலாகவும் ஒலிக்கவிடவேண்டும் என்பதுதான் விசயம். முத்தரிப்புத்துறையை ரைகேசும் தமிழ் எம்பீக்களும் ஏனைய தமிழ் அமைப்புகளும் தெரிவு செய்து பேரணி மன்னார் ஸ்ரேடியத்தில் இருந்து ஆரம்பமாகுவதாக தகவல் பின்னர் மாற்றப்பட்டது. எல்லா எற்பாடுகளும் தயார். பாடசாலை மாணவர்கள் எல்லாரும் வரிசையாக  சீருடை அணிந்து புலிக்கொடி பிடித்தனர். பஸ்களும் தட்டி வான்களும் வரிசை வரிசையாக மன்னார் பாலத்தைக்கடந்து வங்காலைவழியாக  முத்தரிப்புத்துறையை நோக்கி நகர்கின்றது. இதற்கிடையில் உணவு, தண்ணீர்ப்பந்தல் என பல்வேறு தேவைகளும் இருந்தது. பல லட்சகணக்கானவர்கள் ஒருமித்து கூடுமிடம் உணவுப்பிரச்சனை வரக்கூடாது என்று கட்டளை கிடைத்தது.

சொத்தி ராஜன் எப்படியோ இரு தேத்தண்ணிகடை நடத்தும் உரிமத்தை வாங்கிவிட்டான். யார் உதவி செய்தார்கள் என்று தகவல் இல்லை. சொத்தி ராஜன் சிறந்த வீச்சு ரொட்டிக்காரன். எத்தனை கிலோ மாவிலும் ரொட்டி செய்து குறித்த நேரத்துக்குள் தன் வித்தையை முடித்துக்ககாட்டுவான்.

நாட்கள் நெருங்கின. முத்தரிப்புத்துறை விழாக்கோலம் பூண்டது. எங்கும் மஞ்சள் சிவப்பு வர்ணக்கொடி அசைந்தாடின. வீதியின் இரு மருங்கிலும் நிகழ்வு இடம்பெற இருக்கும் மைதானத்துக்கு எதிர் பக்கம் அழகான கடல் இணைந்து இருந்தது. அதன் நடுவில் பெரிய கப்பல் நிறுத்தப்பட்டு கப்பல் சிவப்பு மஞ்சளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வீரச்சவடைந்த வீரர்களது உருவப்படங்கள் தாங்கிய அந்தக்கப்பல் ஆழமில்லாத அந்த நீரில் மிதந்து கொண்டு இருந்தது. ஒலிபெருக்கியில் எழிச்சிப்பாடல்கள் இசைக்கப்பட்டு அதன் ஒலி முழு மைதானத்தையும் எழிச்சியின் உச்சிக்கு கொண்டு சென்றது.

உச்சி வெயிலில் எங்கோ ஒரு மூலையில் முதலில் தண்ணீர்ப்பந்தல் போட்டு அதில் சேவைசெய்து கொண்டு நின்றனர் சில இளவட்டங்கள். அதில் சொத்தி ராஜனும் ஒருவன். சனத்துக்கு பசி வயித்தைக்கிள்ள  கொஞ்சம் கொஞ்சமாக சனம் கடைகளை நோக்கி நகர ஆயத்தமானது. சொத்தி ராஜன் ரொட்டிக்கடையில் ரொட்டி கொத்தும் சத்தம் எழிச்சிப்பாடல்களை ஊடறுத்துக்  காதுகளை வந்தடைந்தது. சில ரைகேஸ் பொடியள் வந்து கடைகளை நோட்டமிட்டனர். ஏனெனில் கடைக்காரர்கள் இயக்கத்துடன் குறைந்த விலையில் உணவுப்பொருட்களை வாங்கி வியாபாரம் செய்தனர். சொத்தி ராஜன் யாரையோ பிடித்து பல ஆயிரக்கணக்கு பெறுமதியான பொருட்களை பணம் திரும்பி தருவதாக இயக்கத்தின் களஞ்சியத்தில் இருந்து பெற்றுக்கொண்டான். இறுதியில் வந்த லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு சரியாக கிடைக்காமல் சனங்கள் சோர்ந்து விழுந்ததாக பல அமைப்புகள் விசனம் செய்தது. சொத்தி ராஜன் ரொட்டிகளை பச்சை பச்சையாக விற்று முடித்தான். அவற்றைத் தின்றவர்கள் வாந்தியும் வைத்தாலயும் அடித்ததாகத்  தகவல் பொறுப்பாளருக்குப்போக,  சொத்திராஜன் கிடைத்த பல ஆயிரம் ரூபாயுடன் தலைமறைவு ஆகினான். ரைகேஸ் வலைபோட்டு தேடியும் ஆள் கிடைக்கவில்லை.

00000000000000000000000000

இனி என்கதை…

செக்கோஸ்லாவியா வழியாக பிரான்சுக்குள் களவாக புகுந்து இன்றோடு 17 நாட்கள் ஆகின்றன. ஐரோப்பாவுக்குள் என்னை கார் மூலம் கடத்தி வந்த செல்வம் என்ற செல்வராஜா அண்ணை பிரான்சுக்கு வந்து 22 வருசமாம் என்று  இரவு தொடர்மாடியில் என்னுடன் அந்த குட்டி அறையில் குடியிருந்த குணா அண்ணை சொன்னவர். காலையில் நாங்கள் குடியிருக்கும் ரிப்பப்பிளிக் அவனியூவில் ஏதோ தீப்பற்றி எரிந்ததாக தகவல். அம்புலன்ஸ் போட்ட அபாய ஒலியில் தான் அதிகாலையே துடிச்சுப்பதைச்சு எழும்பி கட்டிலிலே உக்கார்ந்து யோசிச்சுக்கொண்டு இருந்தேன்.

போனகிழமை  தான் எனது பிறப்புச்சான்றிதழ் பத்திரம் அம்மா அனுப்பி வைச்சவ. மன்னாரில் இருந்து கச்சேரியில் ஒரு கொப்பி 100 ரூபாயாம்.  2 கொப்பி டீ எஜ் எல்-ல் அனுப்பி வைச்சவ.

“தம்பி இண்டைக்கி ரிரான்சிலேட்டரட்ட போக வேணும் “ எண்டு குணா அண்ண சொன்னவர்.

என்ர கையில எந்த டொக்கிமண்டும் இல்லை. ஒரே பயம். வீடு வாசல வித்துப்போட்டு பிரான்சுக்கு வந்தனான். வரேக்க முப்பது நாப்பது கிலோச்சாமான் விமானத்தில ஏத்தினாங்கள். பிரன்சுக்கு வந்து இறங்க என்ர கையில சொப்பிங்  பையில ஒரு பிஸ்கட் பக்கட்டும் ஒரு ஒரேஞ்ச் யூஸ் போத்தலும்தான் மிஞ்சினது.

“பிரான்சுக்குள்ள இறங்கிட்டீர் தானே. இனி என்ன ஒண்டு ரெண்டு வரியத்தில ஒரு வீடு என்ன ரெண்டு வீடும்  கட்டிடலாம்” என்று சொன்னவர் குணா அண்ணர்.

“மற்ற நாடுகள் போல இல்ல தம்பி பிரான்ஸ். ஊரில இருக்கிற மாதிரி இருக்கலாம். ஒருக்கா லாச்சப்பலுக்கு போனால் திரும்பி வரமாட்டீர்” எண்டு சொன்னார்.

அண்டைக்கு  இரவு எனக்கு ஒண்டும் பிடிபடவில்லை. கட்டிலில் இருக்கும் போது கையில ஒரு பிளாஸ்டிக் கப் நிறைஞ்ச பிளேண்டி கொண்டு வந்து கொடுத்தார் குணா அண்ணை. பசி வயிற்றைக் குடைந்து கொண்டு இருந்தது. வாயால கேக்க வெக்கமா இருக்கு. அப்பத்தான்,

“தம்பி இங்கயல்லாம் காலமச்சாப்பாடு சாப்பிடுறது இல்லை.  ஒரு விசுக்கோத்தைக் கடிச்சுப்போட்டு வேலைக்கி கிளம்பசேண்டியதுதான். வேலை செய்யேக்கை  அப்பப்ப ரெஸ்ரொறண்ட்ல வெட்டேக்க இறைச்சிய கிறைச்சிய வாய்க்குள்ள போட வேண்டியதுதான். அதோட சரி. சில ரெஸ்டொறண்டில சாப்பாடு கிடைக்கும் அவங்கள்  புண்ணியம் செய்து வைச்சவங்கள்”.

என்று சொல்லி முடிச்சுவிட்டு இரு கேக் துண்டை பிரித்து எனது கைகளில் திணித்தார்.

நான் என்னுடைய சில டொக்கிமண்ஸ் எல்லாம் எடுத்து பைலுக்குள்ள வைத்தேன். இண்டர் நெட்டில் இருந்து தரவிறக்கம் செய்த சில படங்களையும் சேகரித்து ஒன்றாக்கினேன். அதற்குள்ளே குணா அண்ணன் முகத்தைக்கழுவி விட்டு வெளியே வந்தார். நான் படார் என சன்னலைத்திறந்தேன். வெயில் சுள் என்றது.

 “சா… நல்ல வெயில் தம்பி ஜக்கட் தேவையில்ல சனிக்கிழமை லாச்சப்பல் புள்ளா நம்மட சனமாத்தான் கிடக்கும் வந்து பாருமன்”.

 நான் காலுக்குள்ள சப்பாத்தை சொருகினேன். குணா அண்ணன் லிப்ட்  பட்டினை  அழுத்தினார். லிப்ட்  18 வது மாடியில் இருந்து 13 வது மாடிக்கு வந்து டொமார் என வந்து நின்றது. ஒரு பிரெஞ்சு மனிசி ஒரு குட்டி நாயுடன் லிப்டுக்க ஏறினாள். நாய்க்குட்டிக்கு கண் எங்கே வாய் எங்கே என எனக்கு பிடிபட இல்லை.

“மொன்சியூர் மிஸ்யூ “ என்றா கிழவி. பதிலுக்கு குணா அண்ணையும் திருப்பிச்சொன்னார்.  கிழவி என்னைப்பார்த்து சிரிச்சா. நானும் சிரிச்சேன்.

ஐந்து நிமிடம் நடந்து சென்று இருக்கவேண்டும். ரயில் நிலையம் வந்துவிட்டது. இதுதான் “ஆர் ஈ ஆர் ஈ”  என்றார் குணா அண்ணன். தன்னிடம் இருந்த ஒரு ஐடி காட் ஒன்றைக்காட்டி “தம்பி என்னோடை  உள்ளுக்கை  வாரும்” என்றார்.

வெருண்டுகொண்டு கம்பிகளைத்தாண்டி வெளியே வந்து  ரயில் ஏறினேன். சிறுவயதில் ரயிலில் ஒருமுறை தான் ஏறி இருக்கின்றேன். இன்றுதான் இரண்டாவது தடவை ஏறுகின்றேன்.

“தம்பியான் கார் து நோர்ட் வரை போகவேணும். மஜந்தா என்றும் சொல்லுவினம் பரிசின்ரை முக்கியமான இடம் பாத்துக்கொள்ளு ”.

நான் பள்ளிக்கூடப்பிள்ளை போல தலை ஆட்டினேன். ஒலிபெருக்கியில் பிரெஞ்சில் ஏதோ அறிவித்தல் விடுக்கப்பட்டது. அண்ணன் நல்லா பிரெஞ்சு கதைபேர் போல நினைக்கிறன். அறிவித்தல் கிடைச்சவுடனை  உடனுக்குடனை  தமிழில் விளக்கம்  சொன்னார்.

“தம்பி இங்கிலிஸ் கதைப்பீரோ” ?

“ஓம்” என்று தலையை ஆட்டினேன்.

“நல்லதா போச்சு அப்புடி எண்டால் வலு கெதியா பிரெஞ்சு புடிச்சுவிடுவீர். ஒண்டையும் யோசிக்க  வேண்டாம் எல்லாம் வெல்லலாம் “.

“தம்பி ஒடிவாரும் எனக்கு முன்னால நில்லும் ரிக்கட் அடிக்கிறன்”

அங்கே இங்கே சுத்திப்பாத்தார் குணா அண்ணன். எனக்கு பயம்பிடிச்சு போச்சு.  எனக்கு ஒண்டும் பிடிபட இல்லை.

  “நீல கோட் போட்டு யாரும் நிக்கிறினமே பாரும் “.

“இல்லையண்ணை …”.

லிப்ட் கண்ணாடிப்பெட்டிக்குள் சனம் முண்டியடிச்சு ஏறினதுகள். குணா அண்ணன் என்னை இழுத்து உள்ள விட்டார். லிப்ட் வேகமாக மேல்த்தளத்தை அடைந்தது.

ஒரு பெருமைச்சிரிப்போடு “தம்பி நீர் இப்ப  லாச்சப்பல் வந்திட்டீர்” என்றார்.

“தம்பி இந்த இடம் இப்ப தமிழாக்கட கோட்டை. இதுக்கு பின்னால ஒரு விசயம் இருக்கு”.

என்னதான் இருக்கும் என்று அப்பாவியாக  அவரைப்பார்த்தேன்.

“ஆபிரிக்கனும் பிரெஞ்சுக்காரனும் வைச்சு இருந்த கடையெல்லாம் நம்மட தமிழாக்கள் வெத்தில துப்பித்துப்பி எழுப்பி ஓடவச்சிட்டாங்கள்.  இப்ப பாரும். முழு யாழ்ப்பாணத்தானும் இங்கதான் வாழுறாங்கள்”.

என்று கூறிக்கொண்டு ஒரு நக்கல் சிரிப்பொன்று சிரிச்சார்.

 தூரத்தில் கும்பலாய் ஒரு கூட்டம் நின்றது. நாங்கள் அதை நெருங்கிக்கொண்டோம். அது தமிழ்ச்சனம் தான். அதற்கு கிட்டத்தான் ரான்சிலேட்டர் இருக்கிறாராம். கூட்டத்தை நெருங்க நெருங்க சலசலப்பை உணர்ந்த வண்ணம் இருந்தேன்.

ஒரு புத்தகக்கடைக்குள் நுழைந்தோம். அங்கே ரைகேசுடைய புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டு இருந்தது. கல்லில் செதுக்கிய ஒரு பிரமாண்டமான பிரபாகரனின் உருவம் சிலையாய் நின்றது. வன்னி போராட்டம், மீட்பு ,சனம், இயக்கம் என்ற வார்த்தைகள் மட்டுமே கடையை நிறைத்து இருந்தது. துடிப்பான இளைஞர்கள் உற்சாகமாக செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ஒரு பொடியன் ஒரு தகர உண்டியலை மேசை மீது  கொண்டு வந்து வைத்தான். சூழ நின்ற எல்லாரும் கைகளில் இருந்த 10 யூரோ 5 யூரோ நோட்டுக்களால் அந்த உண்டியலை நிறைத்தனர். அங்கே நின்றவர்களில் பெரும்பான்மயானவர்கள் ரைகேசில் இருந்தவர்கள் என்பதை காணும்போதே புலப்பட்டது. இடையில் ஒரு வயதான சிவலையர் குறிக்கிட்டு உண்டியலில் பணம் போடாதவர்களை குறித்து விசனப்பட்டார்.

“இத்தனை போராளிகள் தமிழீழத்துக்காக செத்துப்போட்டாங்கள். எத்தனை சனங்கள் வீடு வாசல் இல்லாமல் பட்டினி  கிடக்குதுகள். உங்கடை  பங்குதான் என்ன”?

 “செத்த போராளிகளுக்கு பிண்டம் கரைக்கயே வந்தனீங்கள் ?  தமிழனாய் பிறந்தால் சூடு சுறணை வேணும். மயிரா புடுங்கிறீங்கள்  இங்க வந்து பூ*** மக்களே..

திடீரென ஒரு வாலிபன் கிழவன் முகத்துக்கு நேராகப்பாய்ந்து,

“மயிராண்டி நீ என்ன கத்துறாய் ?  30 வருசம் பிரான்சுக்கு வந்து ஒரு நாள் போய் வன்னிய பாத்திருப்பியே ?  முள்ளிவாய்க்கால் எங்க இருக்கு எண்டு தெரியுமா? மயிராண்டி இங்க வந்து பூ**** கதை கதைக்கிறாய். நான்   சிங்களவனோடை  நேர நேர சண்டை போட்டு காயங்களோட நாட்டை  விட்டு வந்து அனுதினமும் சனத்த நினைச்சு செத்துக்கொண்டு இருக்கிறன்”.

“கிழட்டுப்பயல் எங்களப்பாத்து இந்தக்கதை கதைக்கிறான். சேக்கிற காசில வயிறு நிரப்புற நீ எல்லாம் தமிழீழத்தப்பற்றி கிளாசோ எடுக்கிறாய்? மண்டைல போடுவன் பாக்கிறீயா?

பல்லை நறுமிக் கண்களை உருட்டிக்கொண்டு இன்னும் ஒருவன் பாய்ந்தான். கடை முழுவதும் பெரிய  அடிபாடாய் போச்சு.  நான் தள்ளிப்போய் ஒரு மூலையில் நின்றேன். பொக்கட்டில் கிடந்த கையில் இருந்த 2 யூரோவை மீண்டும் பொக்கட்டுக்குள் போட்டேன்.

திடீரென பழுப்புநிறவெட்டு ஒரு வயதானவர் தோன்றி,

 “டேய் தம்பிகளா பொறுங்கோ அண்ணன் வாறார் சண்டை பிடியாதையுங்கோடா “.

ஸ்தலம் மயான அமைதியாய் ஆனது. சிலர் வாயிலைத்தேடி ஓடினர். வீதியில் நின்ற சனங்கள் ஒதுங்கினர். சலசலப்பில் “ராபட் “என்ற பெயர் பலர் உச்சரித்தனர். யார் அந்த “ராபட்” அவரைப்பார்க்க நானும் ஆவலாய் நின்றேன்.

ஒரு கருப்பு “பீ எம் டபிள் யூ “கார் வந்து வாயிலில் நின்றது. கதவுகளைத்த்திறக்க இருவர் ஓடினர். கருப்பு காரின் கண்ணாடி மெதுவாய் இறங்கியது. உள்ளே “மாங்கிளியும் மரங்கொத்தியும்” செல்லப்பாவுடைய பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது. பூமா சூவுடன் ஒருவன் காலடிவைத்தான்.

“அவர்தான் அண்ணன் ராபட். கடைசி வரை ஆமியோடு சண்டை புடிச்சவராம். மன்னார் மாவட்ட தளபதி விக்டருக்கு அறிமுகமானவராம். நிறை தளபதி மாரோட போட்டோக்கள் பேப்பரில ஈழ முரசு பேப்பர்ல வந்தது தெரியுமா….”?

பக்கத்தில் நின்ற ஒருவன் யாருக்கோ காதுக்குள்  அறிமுகம் செய்துகொண்டு இருந்தான். ராபர்ட்  கொன்சார்லஸ் ஒரு காலை தரையிலே ஊன்றி மறுகாலை வெளியே எடுத்தார்.

நான் ஒரு கணம் திகைத்துப்போய் நின்றேன். “அட இந்த உருவத்தை எங்கோ கண்ட நினைவுகள். அட கடவுளே அது  சொத்தி ராஜனேதான்.

“அட சே ….  இவன்  இங்கை எப்படி”?

ஒரு நொடியில் தலைசுற்றிப்போனது. பின்னால் இருந்த ஸ்ரூலில் விறைத்துப்போய் அமர்ந்தேன். நினைவுகள் மீண்டும் மன்னார் நகரை சுற்றிக்கொண்டு அலைந்தது.

யாரோ ஒருவர் எனது பெயரை விழித்தது போலவுணர்ந்தேன். “தம்பியான் இங்க பாரு…. குணா அண்ணன் கையில் இருந்த பையிலை உருவி எடுத்தெடுத்தார். நான்  உணர்வற்றவனாய் சுவரோடு சாய்ந்து கிடந்தேன். ஒரு வாகன கோர்ன் சத்தம் மட்டும் பலமாய் கேட்டு தூரத்தில் மறைந்தது .

ஏ.ஜே.டானியல் – பிரான்ஸ்

ஏ.ஜே.டானியல்

 

(Visited 197 times, 1 visits today)
 

One thought on “லெப்டினண்ட் கேணல் “ராபட் கொன்சார்லஸ்”-சிறுகதை-ஏ.ஜே.டானியல்”

Comments are closed.