பாவமும் பலியும்-சிறுகதை-உமையாழ்

உமையாழ்தலையை மூடி இருந்த கனமான கறுத்த ஈரக் கம்பளித் துணியில் இருந்து மூத்திர வாடையை அவன் நுகர்ந்தான். நீரேறிய கம்பளியில் மூத்திர வாடைதான் அடிக்கும். அந்த ஜூன் மாதத்தின் பட்டப் பகலின் மரண வெயிலில், கம்பளியின் வெளிப்புறத்தே இருந்த நீரெல்லாம் நொடியில் ஆவியாகி இருக்க வேண்டும். ஆனாலும் உள்ளே இன்னமும் ஈரலிப்பு இருக்கத்தான் செய்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒருமுறை, தலையில் கோணிப்பையை கௌட்டது போல இருந்த அந்தக் கம்பளியின் மீது தண்ணீரை யாரோ ஊற்றி ஈரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இருந்தும், அது போதவில்லை. தகிக்கும் சூரியன் தலைக்கு மேல் ஒரு சாண் இடைவெளியில் வந்து நிற்பது போல இருந்தது. காற்றில் ஈரப்பதனே இல்லாத அந்த தேசத்தில் யாருக்கும் வியர்ப்பதே இல்லை. ஆனாலும், அவன் தனது முள்ளந்தண்டுக்கு சமாந்தரமாய், நெடுங்கோடென தன் முதுகில் வியர்வை கீழ் நோக்கி இறங்குவதை உணர்ந்தான். தலையில் ஊற்றிய நீர், முதுகில் வழிந்தோடி அவன் அணிந்திருந்த நீண்ட வெள்ளை ஆடையின் முதுகுப் பகுதியை அவனது உடலோடு சேர்த்து ஒட்டிற்று. வியர்வையுடன் கலந்த நீரின் பிசுபிசுப்பை போக்க எண்ணி, கைகளை உயர்த்தி ஆடையை உடலில் இருந்து பிரித்துவிட எத்தனித்தான். வெகுநேரமாய் ஆளுயர மரக் கட்டையுடன் சேர்த்து பின்னி இழுத்துக் கட்டப்பட்டிருந்த அவனது கைகளின் மணிக்கட்டுகள் மரத்துப் போயிருந்ததன. காலுக்கடியில், சூடேறி இருந்த பூமி, ஆண்டுகளாய் கனலும் எரிமலையைப் போல வெக்கையை கக்கிக்கொண்டிருந்தது. அவன் அணிந்திருந்த பெரிய றப்பர் அடியைக் கொண்ட சப்பாத்துகள் பூமியின் சூட்டில் உருகுவது போல உணர்ந்தான். நாசியை கூர்ந்து உள்ளிழுத்து றப்பர் உருகும் வாசனையை நுகர முனைந்தான். தலையை மூடி இருந்த கம்பளியால் அவன் புலன்களைச் சூழ்ந்திருந்த இருள், அவன் பார்வையை மட்டும்தான் இருளாக்கி இருந்தது. நாசியைப் போலவே செவியும் கூர்மையாகவே இருந்தது. அவன் நின்ற இடத்தில் இருந்து ‘ஜும்மா’ பிரசங்கத்தை அவனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. அப்படி என்றால் இன்று வெள்ளிக்கிழமை, நேரம் நண்பகல் 1:00மணி போல இருக்க வேண்டும். கொஞ்சம் முந்தியோ, பிந்தியோ இருக்கலாம். ஏதோ ஒரு பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள மணற்தரையில் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவன் ஊகித்துக்கொண்டான். ஆண்டவா, ஒரு வாரம் ஓடிப்போயிற்றா!?

காலந்தான் எவ்வளவு விநோதமானது! அது தன் சுற்றலுக்கேற்ப மனிதனையும் சேர்த்தல்லவா சுற்ற விடுகிறது!

கடந்த வெள்ளிக்கிழமை இதே நேரம் இதே போன்றொரு பள்ளியின் உள்ளே, ஜும்மாவிற்காக மற்றவர்களுடன் அவனும் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு நாற்பத்தெட்டுதான் வயதென்றாலும், புறத்தோற்றத்தில் சற்று மூப்புக் காட்டிய உடம்பு, உழைப்பின் உரமேறி, வில் போல விறைத்து இருந்தது. வெய்யிலில் தோய்ந்து கருங்காப்பி நிறமாகி இருந்தது அவனைப் போர்த்தி இருந்த தோல். மழிக்கப்பட்ட முட்டை வடிவ முகத்தில், குழி விழுந்து, எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாத கண்களும், சப்பையாய் நாசியும், வெற்றிலை குதப்பிச்  சிவந்த வாயுமாக இருப்பான். அவனது கோடிழுத்த மேற்சட்டைகளும், ரப்பர் காலணியும் அவனது வியர்வையின் மணம் உட்பட எல்லாமும் அவனை மத்திய கிழக்கில் வெப்பாடுபட்டு உழைக்கும் ஒரு வங்காளிக்கான லட்சணங்களில் சரியெனப் பொருத்தி இருந்தன. இருபத்து மூன்றாண்டுகளாய் இதே ரியாத் நகரின் பத்தாஃ பகுதியில் பல வேலைகளும் செய்து, இப்போது நடைபாதை வியாபாரியாக கிடைப்பதை விற்று, தானும் உண்டு, ஊரில் உள்ளவர்களுக்கும் பணம் அனுப்புகிற ஒரு சாதாரன வாழ்க்கைதான் அவனுடையது. சாதாரண வாழ்க்கை என்று எதைச் சொல்வது!

பத்தாஃ, றியாத்தின் பழம்பெரும் நகரம். ஒருவகையில் அமைவிட அமைப்பியலில் பார்த்தாலும் பத்தாஃ, றியாத்தின் மையமாகவே இருக்கும். சவுதி அரேபிய அரசின் முக்கிய அமைச்சரவைக் கட்டிடங்கள், நீதி மன்றம், என எல்லாமும் பத்தாஃவைச் சுற்றியே அமையப் பெற்றிருக்கிறது. எல்லாப் பொருட்களுக்குமான சந்தையும் பத்தாஃவிலே  உண்டு. ஆரம்பத்தில் அரபிகள் மட்டுமே இருந்த இந்த நகரை, வேலைக்காக வந்த பிறநாட்டவர்கள் தங்களுக்கான இடமாக ஆக்கிக்கொண்டனர்.  இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, பிலிப்பைன்ஸ் என வந்தேறுகுடிகளின் இடமாகிப் போன பத்தாஃவில் இப்போது சவுதி நாட்டவரைக் காண்பதே அரிதாயிற்று. வந்தேறிகளின் சனநெருசலில் அமைதியற்ற பத்தாஃ, ஊத்தைகளால் நிரம்பி வழிந்தது. அந்த பத்தாஃவில் ஒரு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு வீட்டுத்தொகுதியில்தான் அவன் தனது நான்கு நண்பர்களுடன் வசிக்கிறான்.

பழமையான பத்தாஃ மேம்பாலம் நகரின் மத்தியை ஊடறுத்து, அதன் வடக்குத் தெற்காக அமைந்திருக்க, அதனுடன் ஒட்டி தென்பக்கமாக ‘பத்தாஃ சென்டர்’ இருக்கும். அது ஒரு கடைத்தொகுதி. அதை அடுத்து, லக்கி செப்பிங் சென்றருடன் சேர்த்தால் போல ஒரு சிறிய ஜும்மா பள்ளிவாசல் இருக்கும். அங்குதான் அவன் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் தொழுகைக்கு வருவான்.

அன்றும் ஜும்மா முடிந்த கையோடு ஒரு நெகிளிப் பையில் சுற்றப்பட்டு, உள்ளாடைக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகைப் பணத்தை நாட்டுக்கு அனுப்ப, ‘உண்டியல்’ செய்யும் இரண்டு பேரை அவன் சந்திக்க வேண்டி இருந்தது. இந்த முறை சற்றுக் கூடுதலாக பணம் அனுப்ப வேண்டும். எப்படியும் இரண்டு பேரும் நம்பிக்கையானவர்கள்தான் என்றாலும், யார் ஐம்பது காசு கூடத் தருகிறார்களோ, அவர்களிடம்தான் மொத்தம் பணத்தையும் கொடுப்பது என அவன் எண்ணி இருந்தான்.

வெள்ளி மதியத்தில், சன நெரிசலில் பிதுங்கி வழிந்தது பத்தாஃ நகரம். பள்ளியை விட்டு வெளியே வந்ததும், அருகில் இருக்கும் ‘ஹாப்ஃ மூன்’ ஹோட்டலில், அவன் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் சாப்பிடும் வடித்த வெள்ளை பச்சரிசிச் சாதமும், ‘கட் பீஸ்’ மீன் வறுவலும் சொல்லிவிட்டுக் காத்திருந்தான். ஒரு வாரத்தில் அவன் சாப்பிடும் உருப்படியான ஒரே சாப்பாடு இதுதான். பச்சை வாழை இலையில் வறுத்த மீன் பார்த்திருக்க, சோற்றைக் குமித்து, அன்றைக்குக் கிடைக்கிற துவையல், கூட்டு என எல்லாவற்றையும் கொட்டிப் பிசைந்து, பெரிய பெரிய கவளங்களாக உருட்டி அவன் வாயில் போட்டுக்கொள்வதை அங்கிருப்பவர்கள் வேடிக்கை பார்ப்பதுமுண்டு. வெறுமனே பத்து றியால்களுக்கு, வயிற்றுக்கு நிறைவாய்ச் சோறும், வாய்க்கு ருசியாய் வறுத்த மீனும் அவனுக்கு வரமனவே வாய்த்ததுதான். வாரத்துக்கு ஒருமுறை பத்து றியால்களை இதுக்கனவே அவன் ஒதுக்கி இருப்பான். மற்ற நாட்களில், அரபு நாடுகளில் வேலைக்காக வந்து வாழும் எல்லாத் தினக்கூலிகளையும் போல, ஒரு றியால் குபுஸ் (பக்கெட்டில் அடைக்கப்பட்ட ஆறு சிறய ரொட்டிகள்) அல்லது தமீஸ் (பிசைந்த கோதுமை மாவை பெரிய வட்டங்களாகத் தட்டி மண் குழியின் உட்சுவரில் ஒட்டி, தீயில் வாட்டிய பாகிஸ்தானிய ரொட்டி) உடன், ஒலிவ் எண்ணெய் ஊற்றப்பட்ட ஃபூல் (சூடானிய பருப்புக் கடையல்) அதுவும்தான் அவனது பிரதான சாப்பாடாய் இருக்கும். அவன் விற்று, மிஞ்சிய வாழைப் பழங்களும், இன்ன பிற பழங்களும் அவ்வப்போது அவனது வயிற்றை நிரப்புவதும் உண்டு.

எல்லா வெள்ளிக்கிழமைகளையும் போல கடந்த வெளிக்கிழமையும், ஹாப்ஃ மூன் ஹோட்டல் மனிதத் தலைகளால் நிரம்பி இருந்தது. போட்டிருந்த எல்லா இருக்கைகளுக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. அவனுக்கென கொண்டு வைக்கப்பட்ட சாப்பாட்டை, அவன் என்றுமில்லாதவாறு நிதானமாகச் சாப்பிட்டான். பதட்டத்தில் நிலைதடுமாற சற்று முன்னர் மனிதன் உச்சமான நிதானமொன்றை அடைகிறான். அன்றவனில் இருந்ததும் அப்படியானதொரு உச்சம் தொட்ட நிதானம்தான். அவனது நிதானத்தில், இன்றைய அவனது தேவை வெறுமனே இந்தச் சோறும் கறியும் இல்லை என்பது போல இருந்தது. அவனது சிந்தை வேறெங்கோ இருக்க வேண்டும். அவனது சிதறிய சிந்தையைப் போலவே அவனைச் சுற்றிலும் சோற்றுப் பருக்கைகள் வாய்வழியே சிந்திச் சிதறிக்கிடந்ததன. எப்போதும் மூன்றுமுறை சோறு கேட்கும் அவன் அன்று ஒரு தரத்துடன் எழுந்துகொண்டதை கடையில் வேலை செய்யும் அந்த மலையாளி விநோதமாகப் பார்த்தான். கடையில் இருந்து வெளியே வந்ததும் நேராக பத்தாஃ பாலத்துக்கடியில் நின்று, பேரம் பேசி, படிந்த விலையில் வீட்டுக்கு உண்டியலில் பணம் அனுப்பினான். கொடுக்கப்பட்ட துண்டுச் சீட்டை பத்திரப்படுத்திக் கொண்டு, பண மாற்றலுக்கான செய்தியை உண்டியல்காரன் மறுபுறத்தே இருப்பனுக்கு தொலைபேசியில் அழைத்து சொல்லும் வரை அங்கேயே நின்றான். சற்றுத் தொலைவில் அவனுடன் வீட்டில் ஒன்றாக வசிக்கும் மற்றைய நான்கு வங்காளிகளும் தொழுகை முடித்து போவதைத் கண்டு, கைகளை ஆட்டி அவர்களை அருகே அழைத்தான். அவர்கள் நால்வரும் இளவயதுக்காரர்களாக இருந்தனர். இவன் சொல்வதைக் கேட்டு நடப்பவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். வங்காள மொழியில் அண்ணனைக் குறிக்கும் ‘பந்து பாய், பந்து பாய்’ என இவனது காலைச் சுற்றி நின்றவர்களை கட்டளை இடுவது போல அவன் சொன்னான்;

“நான் இன்று வேலைக்கு வரல. என்னுடைய பழங்களையும் சேர்த்து நீங்களே விற்றுவிடுங்கள்”

மற்றைய நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். வெள்ளிக் கிழமை இவன் வேலைக்கு வரவில்லை என்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளில் அவர்களுக்குத் தெரிந்து அவன் எந்தவொரு வெள்ளியையும் தவறவிட்டவனில்லை. ஒருமுறை குளிர்காலம் ஆரம்பித்து இரண்டாவது வெள்ளிக்கிழமை, அவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தான். உடல் வெடவெடத்து நடுங்கிய அன்று, ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என மற்றைய வங்காளிகள் எவ்வளோ சொல்லியும் “இந்த வெள்ளி போனால், அடுத்த வெள்ளிதான் வியாபாரம்” எனச் சொல்லி, ஒரு தடித்த சீலையால் உடலைப் போர்த்தி, அவனது தள்ளு வண்டியை இதே பாலத்துக்கடியில் நிறுத்தி, இரவெல்லாம் நின்று கூவிக் கூவி வியாபாரம் செய்தவன் அவன். இப்போது வரவில்லை என்பதை நண்பர்களால் நம்ப முடியாதிருந்தது. அவர்களாக ‘ஏன்?’ எனக் கேட்க முதலே, “ஒரு ஆளைப் பார்க்கணும். ‘ஜதீத் சினையா’ போகணும். இன்று போகாட்டி, அந்த வேலை முடியாது” எனச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான். வெள்ளிக்கிழமை வியாபாரத்திற்குப் போனால், இடி விழுந்தாலும் அவர்கள் நால்வரும் இடையில் வீடு திரும்பி வரமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அதுதான் அவனுக்கும் வேண்டுமாக இருந்தது.

“நாளைக் காலையில் பணம் பரிமாற்றப்பட்டுவிடும்” போனைத் துடைத்து, சட்டைப் பையில் போட்ட உண்டியல்காரன் சொல்லிக்கொண்டே அப்பால் நகர்ந்தான். தலை ஆட்டி, அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மணிக்கட்டை உயர்த்தி நேரத்தை பார்த்தான். மதியம் இரண்டரைக்கு ஐந்து நிமிடங்கள் இருந்தது. மற்றைய நான்கு வங்காளிகளிடமும் இருந்து விடைபெற்றுக்கொண்டு’எமனி மார்க்கட்டை’ நோக்கி நடக்கத் தொடங்கினான். வழியில் 20 றியால் ‘Sawa போன் டொப் அப்’ கார்ட் ஒன்றை வாங்கிப் பத்திரப் படுத்திக்கொண்டான். ஏதோ ஞாபகம் வர, குற்ற உணர்ச்சியில் துவண்டு, போனை எடுத்து நாட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தி மனைவியை தொடர்புகொண்டான். கடைசியாக எப்போது அவன் வீட்டுக்கழைத்தான் என்பதை எண்ணிப்பார்த்தான். சரியாக ஞாபகத்தில் இல்லை. இரண்டு மூன்று மாதங்கள் இருக்கலாம். ஒவ்வொருமுறை பணம் அனுப்புகிற போதும் வட்ஸ் அப்பில் ஒரு செய்தியை தட்டிவிடுவதுடன் சரி.  ‘ரீங்….ரீங்…..’ காதில் இருந்த தொலைபேசியின் அழைப்பொலி அவனது இதயத்துடிப்பை பிரதிபலிப்பது போல ஒலித்தது. இதயம் சட்டைப் பையில் துடிப்பதைப் போல உணர்ந்தான். மனைவி உடன் பேசுவதற்கு எதற்கு இவ்வளவு தயக்கம்! ‘ஹலோ’ அந்தப் பக்கத்தில் மனைவியின் குரல் எப்போதும் போல சோர்ந்து போய் ஒலித்தது. திருமணமான புதுதில் அவள் இப்படிச் சோர்ந்து கிடந்தவள் இல்லை. அந்த நாட்களில் அவளின் துருதுருப்பு எப்போதும் அவனைப் பரவசப்படுத்தும். இப்போதெல்லாம் அவளது பேச்சில் எந்த வித உணர்ச்சிகளும் இருப்பதில்லை. அவளது குரல் காய்ந்த கொப்பறாத் தேங்காயின் முதுகில் நகத்தால் கீறும் போது எழும் ஒலி போல சொர சொரத்துக் கிடந்தது. ஒரு வறண்ட வாழ்க்கையின் சொர சொரப்பின் எச்ச சொச்சங்கள் குடிகொண்ட அவளில், துரு துருப்போ, கிளு கிளுப்போ மருந்துக்கெனக் கேட்டாலும் எடுப்பதற்கில்லை. இவனும் அதை எல்லாம் இப்போது அவளில் எதிர்பார்ப்பதுமில்லை.

பரந்த இந்த பூமியில் மனிதனின் காலடித்தடம் பதிந்த இடமெல்லாம் அன்பு வியாபித்திருக்கிறது. அன்பின் வழியே காலம் மனிதர்களை சேர்ந்தும், பிரிந்தும் இருக்கப் பணிக்கிறது. தனிமனித மனநிலையைப் போலவே உறவில் தற்காலிகமான பிரிவின் தியாகங்களும் சமயங்களில் புரிந்துகொள்ளப்படுவதே இல்லை.

இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவள் ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த போது, இரண்டு வருட வீசாவில் ‘பலதியாவில்’ கிடைத்த வேலைக்காக சவுதி வந்தவன் அவன். கர்பிணியாய் இருந்த மனைவியை விட்டு விட்டு வந்த சோகமும், வெம்புழுதியில் வீதியில் குப்பை பொறுக்கித் திரியும் வேலையும் அவனைப் பாடாய்ப் படுத்தியது. இருந்தாலும் தவறாமல் வாரம் ஒருமுறை அவன் அவளுக்கு எழுதிய கடிதங்களில் தான் இங்கே மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நீயும் மகிழ்ச்சியாக இருப்பதையே தான் விரும்புவதாகவும், உடம்பைப் பார்த்துக் கொள்ளும்படியும் மறக்காமல் எழுதுவான். பிறக்கப்போகும் குழந்தை பற்றிய அவனது கனவுகளும் அந்தக் கடிதங்களில் நிறைந்து கிடக்கும். ஊரில் யாரோ ஒருவர் அவளுக்காக வாசித்துக்காட்டும் அந்தக் கடிதங்களில் காதலுக்குப் பதிலாய், கரிசனையும், நலன் விசாரிப்புக்களுமே நிறைந்திருந்தது. ஒருவகையில் கரிசனையும், நலன் விசாரிப்புக்களும் காதலின் கூறுகள் தானே!

காலம் விரைந்தோடியது. சூடுகாலம் போய், வந்த முதல் குளிர்காலத்தில் பாலைவனத்துக் குளிர் அவனை வாட்டி எடுக்க, கம்பனியில் கொடுத்த ஒரு தடித்த போர்வையை போர்த்திக்கொண்டு சூடு தேடி, சுருண்டு அவன் படுத்திருந்த போது, அங்கே ஊரில் ஒரு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவளுக்குக் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை. சேதி சுமந்துவந்த தந்தி அவனை வந்து சேர முழுதாய் மூன்று நாளாயிற்று. வீதி விளக்கும், வானத்து நிலவும், இன்னும் அவன் கண் காணும் பலதும் அவன் பிள்ளையின் முகவடிவம் என கற்பனை செய்துகொண்டான். யுகங்கள் போல நீண்ட இரவில் தூக்கங்கொள்ளாது எழுந்திருந்து பிள்ளையையும் மனைவியையும் வாஞ்சையோடு எண்ணிக்கொண்டான். முட்டிய அழுகையும், அதைத் தொடர்ந்து வந்த கண்ணீரையும் துடைத்துக்கொண்டு ‘அது ஆனந்தக் கண்ணீர்’ என அவனே அவனுக்கு சாமாதானம் சொல்லிக்கொண்டான். ஒரு வாரம் பத்து நாளில் ஊரில் இருந்து வந்த கடிதத்தில், பிள்ளை அவனைப் போலவே மூக்கும் முழியுமாய் இருப்பதாய் எழுதி இருந்தார்கள். அதை வாசித்ததும் தன் மூக்கையும் கண்ணையும் ஒருமுறை தொட்டுப் பார்த்தான். அது அவனுக்குப் போதவில்லை. எழுந்து, நிலைக்கண்ணாடிக்கு அருகில் தன் மூஞ்சை நிறுத்தி, கன நேரமாய் அவனது விம்பத்தை உற்றுப் பார்த்தான். வாய்க்குள் ஏதேதோ முணுமுணுத்தான். அநேகமாக அது ‘என் மகள் அழகி’ என்பதாகத்தான் இருந்திருக்கும்.

அவன் ‘பலதியாவில்’ வேலைக்குச் சேர்ந்து ஒன்னரை ஆண்டுகள் கழிந்திருந்த ஒருநாளில், அங்கிருந்து ‘பாய்வது’ என அவன் முடிவெடுத்தருந்தான். அவனுடைய பல நண்பர்களும் ஏற்கனவே பலதியாவில் இருந்து ‘பாய்ந்து’ சுயமாக, நல்ல வருமானத்துடன் வேலை தேடிக்கொண்டனர். இங்கே கிடைக்கும் ஊதியத்தைவிட நான்கு மடங்கு ஊதியம் கிடைக்கும் எனவும், வேலையும் இதைப் போல கடினமாக இருக்காது எனவும் அவர்கள் இவனில் ஆசையை தூண்டிவிட்டனர். அது பற்றி அவன் கடந்து மூன்று மாதங்களாக சிந்தித்திருந்தான். ‘பாய்ந்துவிட்டால்’ இவன் சட்டவிரோத குடியேற்றவாசி. ‘ஷோர்தாவில்’ (பொலிஸ்) பிடிபட்டு, தண்டனை அனுபவிக்காது நாட்டுக்குத் திரும்ப முடியாது. மேலும் அப்படிப் பிடிபட்டுச் சென்றுவிட்டால், இன்னும் ஐந்து வருடங்களுக்கு சவுதி வீசா கிடைக்காது. ஏற்கனவே, ஓராண்டாயிற்று, பிறந்த பிள்ளையை இன்னும் பார்க்கவில்லை எனும் கவலை வேறு அவனுக்கு இருந்தது. இவ்வளவு காரணங்கள் இருந்தாலும், பல்லைக் கடித்துக்கொண்டு இன்னும் இரண்டாண்டுகள் இருந்துவிட்டால், கையில் ஒரு தொகைப்பணம் சேர்ந்துவிடும். பின்னர் நாட்டுக்குப் போய் அமைதியாக இருக்கலாம் என முடிவெடுத்திருந்தான். எவ்வளவுதான் காரணங்கள் சொன்னாலும் முடிவு பாதகமானதுதான். ஆனாலும், பணந்தானே ஈற்றில் எல்லா முடிவுகளினதும் தோற்றுவாயாய் இருக்கிறது.

அந்த மாதத்தின் ஐந்தாம் திகதியில், கடந்த மாதத்துக்கான ஊதியம் கிடைத்தது. அன்றில் இருந்து பலதியாவில் வேலைக்குப் போவதை நிறுத்தி கொண்டான். வீடுவீடாய் அரபிகளின் கார்களைக் கழுவிச் சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பித்தான். பத்தாஃவில் சின்ன விளையாட்டுப் பொருட்கள் விற்கும் நண்பனுக்கு உதவியாக அவனது தள்ளு வண்டியைப் பார்த்துக்கொண்டான். அங்கேயே கடைகளில் இருக்கும் சின்னச் சின்ன வேலைகளை கேட்டு வாங்கிச் செய்ய ஆரம்பித்தான். முதல் மாதத்திலேயே அவன் பலதியாவில் பெற்ற ஊதியத்தை விட இரண்டு மடங்கு பணம் கிடைத்தது. அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்தான். கையில் சற்றுப் பணம் புரள ஆரம்பித்தது. தவறாமல் மாதா மாதம் வீட்டுற்கும் பணம் அனுப்பி வைத்தான்.

வேகமாக நகர்ந்த நாட்களினூடே, வீட்டில் இருந்து வந்த கடிதங்கள் மனைவியின் கண்ணீரைச் சுமந்து வந்தது. வெட்கம் மறந்து அவள் சொல்லச் சொல்ல யாரோ எழுதிக்கொடுத்த அந்தக் கடிதங்களில் ஏக்கமும், பெருமூச்சும் நிறைந்திருந்தன.  மனைவின் எண்ணங்கள் மனதெல்லாம் நிறைந்திருக்க, எண்ணத்தில் அலைமோதிய அந்தரங்கங்கள் அவனில் மோகங்கூட்டி , அவன் விறைப்புற்று நிற்பான். அவன் வெளியே காணும், முகத்தை மூடி, நீண்ட கருத்த ஆடை தரித்த பெண்களின் பூச்சுப் பூசிய நகங்கள், தலையை மூடாத பெண்களின் விரித்துப் போட்ட கூந்தல், நீண்ட கறுத்த ஆடைக்கு அடியில் தெரியும் கொலுசணிந்த பெண்களின் கணுக்கால், துப்பட்டா போட்டு மறைக்கப்படாது விம்மிப் புடைத்த மார்புகள், பருத்த பெண்களின் குலுங்கும் பின்னங்கங்கள் என பலதும் அவனில் காமத்தைத் தூண்டப் போதுமாக இருந்தது. ஆண்டுகளாய் பெண்ணுடல் தீண்டாத அவனது தேகம், பொழுதுகளில் கனலென கொதிக்க, சுய இன்பம் மட்டுமே அவன் முன்னே இருந்த ஒரே வழியாயிற்று. இப்படியாக, இத்தனை ஆண்டுகளில் காமம் சார்ந்த அவனின் உடலியல் தேவைகளைக் கையாள்வதில் அவன் தேர்ச்சி பெற்றிருந்தான்.

அவன் கார் கழுவச் செல்லும் ஒரு அறபின் வீட்டில் உள்ள ட்ரைவருக்கும் இவனுக்கும் நல்ல பழக்கம் இருந்தது. அந்த ட்ரைவர் இலங்கைகாரன்தான் என்றாலும், இவன் மீது இரக்கங்கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளின் ட்ரைவர்மாருடனும் பேசி இவனுக்கு அந்த வீடுகளில் கார் கழுவும் ‘கன்ட்ரக்ட்டை’ வாங்கிக்கொடுத்திருந்தான். இவனும் அவ்வப்போது அவனுக்கு சிகரட்டு, சொக்கலட் என ஏதாவது கொண்டு கொடுப்பதும் உண்டு. அவர்களது நட்பு நன்கு வளர்ந்திருந்த நாட்களில், அவர்கள் நிறைய விடயங்கள் குறித்து ஒளிவு மறைவின்றிப் பேசுபவர்களாக ஆகி இருந்தனர். அப்படித்தான் ஒருநாள் ட்ரைவர், அவன் வேலைசெய்யும் வீட்டு எசமானி ஒரு 22வயதுப் பெண் என்றும், அவள் அவனுடைய ஐம்பது வயதான ‘கபீலின்’ (எசமானின்) மூன்றாவது மனைவி என்றும், கபீல் இவளை திருமணம் முடித்து மூன்றாண்டுகள் ஆன நிலையில், இவளை பெரிதாக கண்டுகொள்வதில்லை எனவும், இவன் கபீலிடம் பல ஆண்டுகளாய் வேலை செய்வதால் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் இவனை அவளுக்கு ட்ரைவராக்கியதாகவும்,  அந்த எசமானி பார்க்க ஒரு தேவதையைப் போல அழகானவள் என்றும் சொல்லி இருந்தான். மற்றொரு ஒருநாள், ரகசியம் பேசுபவனைப் போல இவனது காதருகே ஒரு சேதி சொன்னான்; அவன் வீட்டு எசமானி அவனுக்கு முன்னாள், வேண்டுமென்றே ஆடைகள் கலைய வந்து நிற்பதாகவும், வண்டில் ஏறும் போதும் இறங்கும் போதும் தேவையில்லாமல் அவனை உரசுவதாகவும், அவனுக்கு பயமாக இருப்பதாகவும் சொன்னான். பின்னர் ஒருநாளில் யாரோ ஒரு அறபி அந்த வீட்டிற்குக் கள்ளத்தனமாக வந்து போனதாகவும், இனி அவன் அந்த வீட்டில் வேலை செய்யப் போவதில்லை எனவும், நாட்டிற்குப் போய்விடப் போவதாகவும் சொன்னான். அவன் போக முதல் ‘இந்த நாட்டில், மது மாது இந்த இரண்டு விசயத்திலும் மாட்டிவிடக்கூடது. தலையை வெட்டிவிடுவானுகள்’ எனச் சொல்லிச் சென்றான். இவனுக்கு எதுவும் மண்டையில் ஏறவில்லை. அந்த வீட்டு எசமானியின் மூஞ்சை மூடிய முக்காடு இல்லாமல் எப்படியாவது ஒரு தரம் பார்த்துவிட வேண்டும் என்றிருந்தது. ஆனால் முறைகூட அவனுக்கு அந்தச் சந்தர்ப்பம் வாய்ததே இல்லை. ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு காமம் இருக்குமா என்பதே இவனுக்கு வியப்பாக இருந்து. அந்த எசமானி பற்றி எண்ணம் வந்த போதெல்லாம் இவனுக்கு மனைவியின் ஞாபகம் வருவதை இவனால் தவிர்க்க முடிந்ததே இல்லை.

மனைவியைப் பற்றி எண்ணிக்கொள்வான். அவளும் மனுஷிதானே, அவளுக்கும் உடலியல் தேவைகள் இருக்குமே என நினைக்கும் போதெல்லாம் ஏதோ பயம் வந்து ஒட்டிக்கொள்வதை உணர்ந்தான். ஆண்புத்தியின் சபலமது. அவள் ஏதாவது ஏடாகூடமாக செய்து வைத்தால்! ‘ச்சீ, அவள் அப்படிச் செய்பவள் இல்லை’ அவனாகவே பேசிக்கொள்வான். அதன் தொடர்ச்சியாய் அவள் மீது பெருங்கருணை கொள்வான். மனைவியை ஆறுதல்படுத்த உடனே கடிதம் எழுத உட்கார்ந்து விடுவான். அன்பே, ஆருயிரே எனத் தொடங்குவான். தனிமனித ஒழுக்கம் கடிதத்தின் பிரதான கூறாய் வந்துவீழும். முடிவாய், அடுத்த மழைக்காலம் ஆரம்பிக்க முன் வந்துவிடுவேன் என எழுதுவான். பொய்யான நம்பிக்கைகளை அவளில் விதைக்கின்றோமே எனும் குற்ற உணர்ச்சி உடன்தான் எழுதுவான். அவனுக்கு வேறு மார்க்கம் இல்லை. எப்படியாவது அவளது நம்பிக்கைகளை அணையவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதெல்லாம் கோடையும், மாரியும் மாறி மாறி அவர்களுக்கு நம்பிக்கையின் குறியீடுகளாயின. அவளும் இப்படியாக பல கோடைகளையும், மாரிகளையும் ஏக்கத்துடனே கடந்துவிட்டாள். ஒழுக்கம் குறித்தான அவனது போதனைகள், பொழுதுகளில் அவளில் பெரும் அயர்ச்சியை உண்டுபண்ணியதும் உண்டு. இருந்தாலும் அவள் எதையும் காட்டிக்கொள்வதில்லை. காலம் அவளைத் திடப்படுத்தி இருந்தது. அவள் காலத்தையும் விதியையும் நொந்தவளாய் பொறுமையை ஆடையெனப் போர்த்தி இருந்தாள். இப்போதெல்லாம் அவள் அவரிடம் இருந்து பணம் மட்டுமே எதிர்பார்ப்பளாய் ஆகிப்போனாள்.

கால ஓட்டத்துடன் பத்தாஃ நகரெங்கும் புற்றீசல் போல தொலைபேசி நிலையங்கள் திறக்கப்பட்டது. ஊருக்கு ட்ரங் கோல் போட மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அவனும் இப்போதெல்லாம் முன்னரைப் போல வீட்டிற்கு தொடர்ந்து கடிதம் எழுதுவதில்லை. வரிசையில் காத்திருந்து வாரத்துக்கு ஒருமுறை ஊரில் உள்ள பொதுத் தொலைபேசிக்கு அழைத்து இரண்டு நிமிடம் மனைவி உடன் உரையாடுவதுடன் சரி. அந்த உரையாடலில் காதலும் இருப்பதில்லை, கரிசனையும் இருப்பதில்லை. சம்பிரதாயமான நலவிசாரிப்புகள் கூட சில நேரங்களில் இருப்பதில்லை. பணம் அனுப்பியதும், பெற்றதுமே பேச்சுகளை ஆக்கிரமித்திருந்த நாட்கள் அவை.

மனிதனின் தேவைகள் ஒருபோதும் குறையப் போவதில்லை. அவை ஒன்றன் பின் ஒன்றாக சங்கிலித் தொடராய் அணிவகுத்து நிற்கும் என அவன் உணர்ந்த ஒருநாளில், இந்த வாழ்க்கை பெரும் சலிப்புற்றிருக்கக் கண்டான். இப்போதெல்லாம் நாட்டிற்குப் போக வேண்டும் எனும் எண்ணம் அடிக்கடி வரத்தொடங்கி இருந்தது. அதன் தொடர்ச்சியாய் ‘ஊருக்குப் போய் தொழிலுக்கு என்ன செய்வது?’ எனும் ஒரு கேள்வியும் அவனில் எழாமல் இல்லை. கூடவே சொல்லி வைத்தாற் போல, அப்போதுதான் நண்பன் சொன்னதும் ஞாபகம் வரும்; நண்பன் அதைச் சொன்ன போது, வளைகுடா அரபு நாடுகள் வங்களாதேசத்துக்கான வேலைவாய்ப்பு வீசாக்கள் வழங்குவதை நிறுத்தி இருந்தன.

 “ஏற்கனவே வீசா வழங்கப்பட்டு சட்டபூர்வமாக வசிப்பவர்கள் விடுமுறையில் போனால் திரும்பிவரலாம், நம்மைப் போல ‘பாய்ந்து’ இருப்பவர்கள் பிடிபட்டு நாட்டுக்குப் போனால் ஆயுசுக்கும் திரும்ப முடியாது”

எதிர்காலம் பற்றிய பயத்தில் நிகழ்காலத்தைத் தொலைத்த, அவனைப் போன்று ‘பாய்ந்து’ சட்டவிரோதமாக வளைகுடாவில் வசித்துவந்த ஆயிரமாயிரம் வங்காளிகள் தசாப்தங்கள் கடந்து அந்த பாலைவன மண்ணில், வெம்புளுதியில் தினக்கூலிகளாக-மனித ஜடங்களாக- வாழத் தலைப்பட இதுவும் ஒரு காரணமாகப் போயிற்று. இதோ இவனும் கையில் எந்த விதமான சட்ட ரீதியான ஆவணங்களும் இல்லாமல் இருபத்து மூன்றாண்டுகளை அவன் கால்களுக்கடியில் நழுவ விட்டு, ஒரு ஜடத்தைப் போல, இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

000000000000000000000000000

வெள்ளிக் கிழமைக்குரிய எல்லா ஆர்பாட்டங்களுடனும் பத்தாஃ நகரம் பர பரத்துக் கொண்டிருந்தது. அவன் எமனி மார்க்கட்டை ஏற்கனவே வந்தடைந்திருந்தான். மணிக்கட்டை உயர்த்தி நேரத்தைப் பார்த்துக்கொண்டான். மணி 3:10யைக் காட்டியது. 3:00 க்கு அழைப்பதாகச் சொல்லி இருந்தாள். அவன் வாங்கிருந்த இருபது ரியால் Sawa டொப்அப் கார்ட்டின் நம்பரை அவளுக்கு SMSயில் ஏற்கனவே அனுப்பி இருந்தான். அவன்தான் எப்போதும் அவளுக்கான போன்கார்ட்டை வாங்கி கொடுப்பவனாக இருக்கிறான். அவளுக்காக அவன் இப்படியும் செலவு செய்துகொண்டிருந்தான். மீண்டும் ஒருமுறை நேரத்தைப் பார்த்துக் கொண்டான். 3:12. எப்படியும் அவள் இந்நேரத்துக்கு அவனை அழைத்திருக்க வேண்டும். அவனும் பத்து நிமிடத்தில் இருபது முறை கடிகாரத்தைப் பார்த்துவிட்டான். ‘ம்ம்’ இன்னும் அவளிடம் இருந்து அழைப்பு வரவில்லை. அவளாகத்தானே அழைப்பதாகச் சொல்லி இருந்தாள்! அதுதானே அவர்கள் பேசி வைத்துக்கொண்டது. இவன் அழைப்பை எடுத்து ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால்! அப்படி ஒருமுறை ஏற்கனவே நடந்திருந்ததே! அது அவளை பெரும் பிரச்சினையில் கொண்டு போய்விட்டது என அவள் சொன்னாள் அல்லவா! அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவளது ‘கஃபீல்’ (அவள் பணிப்பெண்ணாக வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர்) அவளை அடித்ததாகச் சொன்னாளே! அது பொய்யாகவும் இருக்கலாம். ஒருவேளை அது உண்மையாக இருந்துவிட்டால்! இப்படி எல்லாம் சிந்தித்து அவன் அன்றில் இருந்து அவனாக அவளை போனில் அழைப்பதில்லை. அவளாக அழைத்தால்தான் உண்டு. அதுதான் அவளுக்கு வசதியாக இருப்பதாகவும், இவனில் பிடித்த விடயமாக இருப்பதாகவும் அவளே அவனிடம் ஒருமுறை சொல்லி இருக்கிறாள். மீண்டும் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். 3:15. இப்போது அந்த நகரத்தின் பரபரப்பு அவனிலும் தொற்றிக்கொண்டது போல இருந்தது. அல்லது அவனின் பரபரப்பு அந்த நகரத்திற்கு தொற்றிக்கொண்டதாக கூட இருக்கலாம். அவனைப் போல பல ஆயிரம் பேரின் பரபரப்புத்தானே அந்த நகரத்தின் பரபரப்பு. மீண்டும் கைத்தொலைபேசியை ஒருமுறை பார்த்துக்கொண்டான்.

கடந்த ஆறு மாதங்களாக அவன் அவளுடன் தொடர்பில் இருக்கிறான். அவளை இதே போன்றதொரு வெள்ளிக்கிழமை அந்தியில் தான் சந்தித்தான். அன்று அவனது தள்ளுவண்டியில் பழம் வாங்கியவள் ஒரு துண்டுச் சீட்டை போட்டுவிட்டுப் போனாள். அதில் அவளது தொலைபேசி இலக்கம் இருந்தது. அது ஒரு சாதாரனமான நிகழ்வுதான். அவனுடைய நண்பர்கள் பலருக்கும் இப்படி நடந்திருக்கிறது. அவர்கள் இப்படி தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக்கொண்ட பெண்களுடன் விடிய விடிய கதைப்பதையும், போன் செக்ஸில் ஈடுபடுவதையும் அவன் கண்டிருக்கிறான். ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவனுக்கு இப்படி நடந்ததே இல்லை. தன்னை ஒரு பெண் தேர்ந்தெடுக்க எந்தவிதமான நியாயமான காரணங்களையும் அவன் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் இப்படியான பெண்களுக்கு ஒரு ஆணைத் தேர்ந்தெடுக்க, முதலில் எந்தக் காரணங்களும் தேவையில்லை என்பதையும், அவன் அவளுக்காக ‘செலவு’ செய்யத் தயாராக இருப்பதாக இருந்தால் அவள் அவனுடன் தொடர்பில் இருப்பாள், இல்லை என்றால் அவள் அவனை விட்டுப் போய்விடுவாள் என்பதையும் அறியாதவன் இல்லை அவன். அவனது நண்பர்கள் அவர்களது பிலிப்பைன் நாட்டுக்காரத் தோழிகளுக்கு போன்கார்ட் வாங்கி ரீசார்ஜ் பண்ணி  விடுவதையும், சிலர் வெம்பாடுபட்டுழைத்த பணத்தில் போன் வாங்கிக் கொடுப்பதைக்கூட அவன் கண்டிருக்கிறான். அவன் அவர்களை முட்டாள்கள் என திட்டியதும் உண்டு. ஆனால் அவன் அவனை இப்போதைக்கு முட்டாள் என நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டான். அவன் அதிஸ்டக்காரன், அவ்வளவுதான். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும்தான் உத்தமர்களையும் முட்டாள்களையும்  தீரமானிக்கிறது போலும்.

அன்றிரவு அவனுக்கு தூக்கம் வரவில்லை. அந்த ஒற்றை இரும்புக் கட்டிலில் கிடந்த கிழிந்த தும்பு மெத்தையில் அவன் மூட்டைப் பூச்சிகளுடன் போராடிக்கொண்டே புரண்டு புரண்டு தூக்கத்தை வரவழைக்க முயன்றுகொண்டிருந்தான். அன்று மாலையில் அவள் போட்டுவிட்டுச் சென்ற அவளது தொலைபேசி இலக்கம் எழுதிய துண்டுக் காகிதம் அவனது சட்டைப் பையில் இருந்தது. அதன் ஞாபகம் வேறு அவனை தூங்கவிடாது செய்திருக்கலாம். அவன் எழுந்து உட்கார்ந்து கொண்டான். அவளது முகத்தை ஞாபகப்படுத்த முயன்று தோற்றான். எவ்வளவு முயன்றும் அது முடியவில்லை. அவளது வெள்ளைத்தோல் மட்டுமே மனதில் நின்றது. மற்றதெல்லாம் பனிக்கப்பால் ஒதுங்கிய சலனங்களாகவே தெரிந்தது. சரி, எனக்கு ஏன் துண்டு போட்டாள்! இப்போது என்ன செய்வது!  அவளுக்கழைத்து ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால்! மானம் போய்விடுமே! அவனுக்குள்ளாகவே தர்கித்துக்கொண்டான். கண் முன்னே காற்றில் ஆடிய சட்டைப் பையில் இருந்த துண்டு ‘வா வா’ என அவனை அழைப்பதைப் போல இருந்தது. அவ்வளவு நேரமாக அவனுக்குள்ளாகவே தர்கித்துக்கொண்டிருந்த அவன் ஒரு முடிவிற்கு வந்திருந்தான். அந்த தொலைபேசி இலக்கம் எழுதி இருந்த துண்டை எடுத்து அதில் இருந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தினான். ‘அய்வா’ என சொல்லிக்கொண்டே அவள் மறுமுனையில் பேச ஆரம்பித்தாள். அவளுக்கும் இவனைப் போல சரளமாக அரபியில் பேச முடியுமாக இருந்தது. அன்று தொடங்கியது, ஆறு மாதங்களாக பேசிக்கொண்டே இருந்தார்கள்.

முதலில் அவன் அவளை பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரி என நினைத்தான். அவள்தான், இல்லை, நான் இந்தோனேசியா எனச் சொன்னாள். இந்தோனேஷியா என்றால் என்ன, பிலிப்பைன்ஸ் என்றால் என்ன, எல்லாம் ஒன்றுதானே என நினைத்துக்கொண்டான். சப்பை மூக்கும் வெள்ளைத் தோலும் கொண்டவள்கள் எல்லாம் அவனுக்கு ஒன்றுதான்.

அவர்கள் சந்தித்து இரண்டு மாதங்களில் அவள் ஒருமாத விடுப்பில் இந்தோனேஷியா போவதாக இருந்தது. அதற்கு முதல் ஒருநாளில் நேரில் அவர்கள் சந்தித்துக்கொள்வதென தீர்மானித்திருந்தார்கள். அன்றொரு வெள்ளிக்கிழமை. அவன் அவளுக்காக நிறைய சாக்லேட்கள், இனிப்புகள் என வாங்கிவைத்திருந்தான். அவர்கள் பத்தாஃ சென்டரின் முதல் தளத்தில் சந்தித்துக்கொள்வதென முடிவாயிற்று. அன்றுதான் அவன் அவளை முதன்முறையாக நேரில் பார்க்கப்போகிறான். இவ்வளவு காலமும் Skype-இல் அவர்கள் பேசிக்கொள்கிற போது, போன்திரையில் அவளது முகத்தைப் பார்ப்பதைவிட அவளது மார்பகங்களைப் பார்ப்பதிலேயே அவன் முனைப்பாக இருப்பான். அவளும் ஒரு தேர்ந்த நாடகக்காரி போல அவனைத் தவிக்க விட்டு, கடைசியில் இரக்கங்கொண்டு தன் ஆடைகளை விலக்கிக் காட்டுவாள். அப்போதெல்லாம் உணர்ச்சிப் பெருக்கத்தில், யாரோ அவனது உயிரை அடியோடு அறுத்துவிடுவது போல அவன் உணர்வான். இப்படித்தான் அவர்கள் அந்த இரண்டு மாதங்களைக் கடந்திருந்தனர். அன்று அவளை நேரில் காண்பது எனும் நினைப்பே, அவனில் பெரும் பிரளயங்களை தோற்றுவித்திருந்தது. ஒருபுறத்தில் யாரும் பார்த்துவிடுவார்களோ என்கிற பயமும், இன்னொரு பக்கம், அருகில் இருப்பாளே, எதுவும் செய்ய முடியாதே என்கிற எண்ணமும் அவனை ஆட்டிப்படைத்தது.

பத்தாஃ சென்டரின் முதல் தளத்தில்தான் ‘சிறிலங்கா ஹோட்டல்’ இருக்கிறது. அது இலங்கையர்களின் கோட்டை. வங்காளிகளுக்கு அங்கு எந்த வேலையும் பெரிதாக இருப்பதில்லை. அதனால்தான் அவன் இந்த இடத்தை தெரிவு செய்திருந்தான். அவளுக்கும் அவர்கள் சந்தித்துக்கொள்ள அது சரியான இடம் என்று தோன்றவே அவளும் சம்மதித்தாள். ஆனால் எப்படியும் ஒரு மாலை வேளையில் அந்தத் தளம் முழுக்க ‘கதாமா’ பெண்களால் நிரம்பி வழியும் என்பதை அவன் அறிந்திருந்தான். அந்தப் பெண்களைச் ‘சந்திக்க’ எங்கிருந்தெல்லாமோ வந்து போகும் யார் யாரோவால் அந்த இடமே கசகசத்துக் கிடக்கும். அன்றும் அப்படித்தான் இருந்தது. அது அவனில் பெரும் எரிச்சலை உண்டு பண்ணியது. இருந்தாலும் அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். அவன் அவளை ஆசை தீரப் பார்த்தான்.  அவள் போன்திரையில் தெரிவதைவிட அழகாக இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அது உண்மைதான். அவள் அழகிதான்.

இன்னும் சற்று நேரத்தில் அஸர் தொழுகைக்கான அழைப்பு, ‘அதான்’ சொல்லப்பட்டுவிடும். இஸ்லாமிய கலாச்சாரக் காவலர்களான (!) ‘முத்தவ்வாக்கள்’ வந்துவிடுவார்கள். அவர்கள் அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டவர்கள்.   அவர்களால் யாரையும் கேள்வி கேட்கவும், கைது செய்யவும் முடியுமாக இருக்கும். அவர்கள் மேலே வந்துவிட்ட பிறகு இப்படி நின்று பேசுவதுகூட சாத்தியமில்லாமல் போகும். என்ன செய்வது என யோசித்தவன், அவளை பின்னே வரச் சொல்லிவிட்டு முன்னே நடக்க ஆரம்பித்தான். அந்த முதல் தளத்தின் தென் மேற்கு மூலையில் கடைகள் எப்போதும் மூடியே இருக்கும். சற்றே இருளும் குப்பைகளும் நிறைந்த அந்த இடத்தில் ஆள்நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அந்த மூலைக்கடையின் கதவோடு சாய்ந்து நின்றுகொண்டான். அவளை எதிரே நிறுத்தி சுற்றும் முற்றும் பார்வையைச் சுழல விட்டான். சரியான தருணம் பார்த்து அவளது மார்பகங்களை தடவிப்பார்த்தான். அவள் சிணுங்கினாள். முதன் முறையாக ஒரு பெண்ணின் மார்பகங்களைத் தொடும் ஒரு பதின்ம வயது இளைஞனின் மனநிலையை அவன் கொண்டிருந்தான். இருபது வருடங்கள் மழையற்றுக் காய்ந்து வெடித்துக்கிடந்த நிலத்தில் முதல் மழைத்துளி விழுந்த போது பூமி கொண்ட பூரிப்புப் போல அவனது முகம் மலர்ந்து போயிற்று. வளர்ந்து நாற்பத்தைந்தைத் தாண்டிய ஒரு ஆணில் ஒரு பெண்ணின் ஸ்பரிசம் இவ்வளவு பூரிப்பையும் புதுத் தனத்தையும் உண்டுபண்ணுவது என்பது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்!

அஸர் தொழுகைக்கான ‘அதான்’ ஒலித்தது. ‘எழ்ழாஹ் ஹபீபி, பர்ராஹ், பர்ராஹ், இக்காமத்துஸ் ஸலா’ என தொழுகைக்காக போகச்சொல்லி மக்களைப் பணிக்கும் முத்தவ்வாக்களின் குரல்கள் கீழே இருந்து நாலாபக்கமும் கேட்க ஆரம்பிக்க, மேல்தளத்தில் இருந்தவர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். இவர்களும், இவன் ஒரு பக்கமும், அவள் ஒரு பக்கமும் என பிரிந்து போயினர்.

அன்று பத்தாஃ சென்டரை விட்டு இறங்குகையில் ஆசை அவன் கண்களை நிறைத்து நின்றது. அவளது மார்பகங்களைத் தொட்ட கையை ஒருமுறை தடவிப்பார்த்துக்கொண்டான். அது அவனில் பெரும் கிளுகிளுப்பை உண்டாக்கியது. பெண் மோகம் காலைச் சுற்றிய பாம்பைப் போல, ஒருமுறை பற்றினால் விடாது. அப்படித்தான் அவன் அன்று ஒரு முடிவெடுத்துக்கொண்டான்; எப்படியாவது இவளை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துவருவது என. அது ஒன்றும் அவ்வளவு இலகுவானதில்லை. இஸ்லாமிய ஷரியா, தலைக்கு மேல் தொங்கவிட்ட கத்தி போல, எப்போது வேண்டுமானாலும் இவனில் இறங்கலாம். அவனின் இத்தனை ஆண்டுகால சவுதி வாழ்க்கையில் அதை அறியாதவன் இல்லை. ஆனாலும், கண்களை நிறைத்து நின்ற ஆசை, அவன் புத்தியை மறைத்தும் நின்றது. அதன் உந்துதலில் எப்படியாவது அதைச் செய்தவது என குரு ட்டுமுடிவெடுத்திருந்தான்.

அவள் லீவு முடித்து வந்த கடந்த மூன்று மாதங்களாக பேசிப் பேசியே அவளை சம்மதிக்க வைத்தான். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன், நீ பயப்படாதே வா எனச் சொல்லி இருந்தான். அவள் அவனை முழுதாய் நம்பினாள். வீட்டில் நண்பர்களைச் சமாளித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டு, சென்ற வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்து யமனி மார்க்கட்டில் நின்றுகொண்டு அவளது அழைப்புக்காக காத்திருக்கிறான்.

ஈற்றில் அவளுடைய அழைப்பும் வந்தது. தான், அவன் சொன்ன குடும்பங்கள் வசிக்கும் வீட்டுத்தொகுதியின் இடதுபக்க மூலையில் நிற்பதாகவும், நீ இப்போது வரலாம் எனவும் அவள் செய்தி சொன்னாள். சவுதியில், குடும்பங்கள் வசிப்பதற்கு தனியான வீட்டுத்தொகுதியும், தனியே இருக்கும் ஆண்கள் வசிக்க வேறு வீட்டுத்தொகுதிகளும் இருக்கும். தவறியும் ஒன்றோடொன்று கலந்துவிட முடியாது. தவறியும் ஆண்கள் வசிக்கும் வீடுகளுக்கு பெண்கள் தனியே போய்விடக்கூடாது. ஆகவேதான், யாருக்கும் சந்தேகம் வராதிருக்கவே அவன் அப்படி ஒரு ஏற்பாடு செய்திருந்தான். அதாவது, அவள் முகத்தை மூடி, கருத்த புர்கா அணிந்து கொண்டு, குடும்பங்கள் வசிக்கும் வீட்டுத்தொகுதிக்கு அருகில் நிற்பாள். இவன் அவளைக் கடந்து போக, அவளும் அவனைப் பின்தொடர்ந்து, மின்னல் வேகத்தில் அவனது வீட்டுத்தொகுதிக்குள் நுளைந்துவிட வேண்டும். அவனது வீடு, அந்த வீட்டுத்தொகுதியின் பிரதான நுளைவாயிலோடு சேர்த்தால் போல தரைத்தளத்தில் இருந்ததால் அதுவும் அவர்களுக்கு வசதியாக இருக்கும் எனப் பேசி வைத்திருந்தார்கள்.

அவன் தூரத்தே நடந்து வருவதை அவள் கண்டுகொண்டு, ஏற்கனவே பேசி வைத்ததைப்போல ஒரு கையை உயர்த்தினாள். அதைக் கண்டுகொண்ட அவனும், பதிலுக்கு ஒரு கையை வேறொரு திசை நோக்கி உயர்த்திக்காட்டினான். அந்தப் பகுதியில் வெள்ளி மதியம் ஆள்நடமாட்டம் அவ்வளவாக இருப்பதில்லை. அவன் விசுக்கென நடந்து அவளைக் கடந்து போனான். அவள் அவனைப் பின்தொடர்ந்தாள். இப்போது இவன் அவளை, அவன் வசிக்கும், ‘பெசளர்ஸ்’ வீட்டுத்தொகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவன் பதட்டத்தில் உண்டாகும் நிதானத்தின் உச்சத்தை எப்போதோ கடந்திருந்தான். இப்போது அவனில் தொற்றி இருப்பது அப்பழுக்கில்லாத படபடப்பு. அவனது இதயம் மார்புக்கூண்டுக்கு வெளியே துடித்தது. காதெல்லாம் அடைத்துக்கொண்டது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. வியர்க்காத தேசத்தில், அவனுக்கு வியர்த்தது. ஆனால், அவளில் எந்தப் பதட்டங்களும் இல்லை. பெண் சமயங்களில் நம்ப முடியாத தைரியம் கொண்டவளாக இருக்கிறாள். பொறுமையைப் போலவே வைராக்கியமும் மிதமிஞ்சிய மனம் பெண்ணுடையது. அவள் அவனை சாதாரணமாகக் கடந்து திறந்திருந்த கதவு வழி விசுக்கென மின்னல் வேகத்தில் உள்நுழைந்தாள். அவனும் உள்ளே வந்ததும் படார் என அந்தக் கதவு அறைந்து சாத்தப்பட்டது.

00000000000000000000000000

கட்டையோடு சேர்த்துக் கட்டப்பட்ட அவனது கைகள் அரிப்பெடுக்க ஆரம்பித்தது. பள்ளியில் ‘குத்பா’ பேருரை முடிந்து ‘துவா’ ஓத ஆரம்பித்திருந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் தொழுகை ஆரம்பித்துவிடும். வெள்ளிக்கிழமை ஜும்மாஃ தொழுகை இரண்டு ‘ரக்காஃத்துகள்’தான். அது உடனே முடிந்துவிடும். அவனுக்கான நேரம் குறுகிக்கொண்டே வருவதை அவன் உணர ஆரம்பித்தான். இவ்வளவு ஆண்டுகளும் அவன் கொண்டாடிய வெள்ளிக்கிழமையை இப்போது அவன் சபிக்க ஆரம்பித்தான். ‘நாசமா போன வெள்ளிக்கிழமை’

ஐயோ, என் கைதேசமே!

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால்……

நான் அவளைச் சந்திக்காமல் இருந்திருந்தால்….

அவளை வீட்டுக்கழைக்காமல் இருந்திருந்தால்…..

என் அழைப்பை அவள் நிராகரித்திருந்தால்…….

அறைந்து சாத்தப்பட்ட கதவு தட்டப்படாமல் இருந்திருந்தால்…..

திறந்த கதவுவழி வீடியோ கமெரா சகிதம் ‘முத்தவ்வாக்கள்’ உள்நுழையாமல் இருந்திருந்தால்…..

நுழைந்தவர்கள் எங்களைக் கையும் களவுமாக பிடிக்காமல் இருந்திருந்தால்…..

முத்தவ்வாக்கள் காட்டிய சாட்சி வீடியோ ஆதாரத்தையும், நால்வர் சாட்சியையும் ‘காதி’ (நீதிபதி) நிராகரித்திருந்தால்….

அவனுடைய இந்த ‘இருந்தால்..’ பட்டியல் நீண்டுகொண்டே இருந்தது. இவனை கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்தில் இவனுக்குப் பொறுப்பாக இருந்த, நீண்ட வெள்ளை ஆடை தரித்து, முகத்தை மூடி இருந்த அரச குற்றவியல் தண்டனைப் பிரிவின் காவலாளி, சூட்டைத் தணிக்க, கடைசியாக ஒருமுறை, இவனது தலையை மூடி இருந்த கம்பளியில் குளிர்ந்த நீரை ஊற்றினான். கம்பளியின் திறந்த, சிறிய துவாரங்களின் வழியே நீர் நேர்கோடாய் ஒழுகி, அவனது முகம் நனைத்துச் சென்றது. அவன் நாசியை ஒருமுறை ஆழ்ந்து உள்ளிழுத்தான். நீர் ஊறிய கம்பளியில் மூத்திரவாடை சற்றுத் தூக்கலாக இருப்பது போல இருந்தது. கூர்மையான காதுகள், தொழுகை முடித்து வெளிவருவோரது காலடித்தடங்கள் எழுப்பிய ஓசையை பின்தொடர்ந்தது. சற்று நேரத்துக்குள்ளாக, அவனைச் சுற்றி வட்ட வடிவில் மனிதர்கள் நின்றுகொண்டிருப்பதை அவன் உணர்ந்துகொண்டான். அதில் அவனது மனைவியும், மகளும் இருப்பார்களோ என அவனுக்குத் திடீரென தோன்றிய எண்ணத்தை மறுதலித்து, அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என இறைவனைப்ப பிரார்த்தித்துக்கொண்டான். அதுவே அவனது இறுதிப் பிரார் த்தனையாகவும் இருந்தது. கடலலை போல ஒன்றன் பின் ஒன்றாக  மனைவியையும் மகளையும் குறித்து எழுந்த சிந்தையை, வலிந்து இல்லாமல் செய்ய முயன்று தோற்றான். அப்போது அவனுடைய தோழியின் ஞாபகம் வந்தது. அவளுக்கு இந்தோனேசியாவில் குழந்தைகள் இருப்பதாகச் சொன்னாளே! அந்தக் குழந்தைகளுக்காகவாது அவளை மன்னித்துவிடுவார்களா! இல்லை, அப்படிச் செய்யவே மாட்டார்கள். அவளால் இனி ஒருபோதும் அந்தக் குழந்தைகளைப் பார்க்க முடியாது என்ற எண்ணம் வந்ததும், என்னால்தானே அவளுக்கு இந்த நிலைமை. நான் எவ்வளவு பெரிய பாவி எனச் சொல்லிக்கொண்டான். கண்களில் இருந்து கண்ணீர்துளி வழிந்துகொண்டிருந்தது. சம்மந்தமே இல்லாமல் அவனுடைய ட்ரைவர் நண்பனின் எசமானி பற்றி எண்ணிக்கொண்டான். பாவமும் பலியும் மாட்டிக்கொள்கிற வரைதான் எனச் சொல்லிக்கொண்டான். பள்ளியில் ஏதோ அறிவிப்புச் செய்வதற்காக ஒலிவாங்கியை ‘ஆன்’ செய்தவர் செருமியது கேட்கிறது. அநேகமாக அந்த அறிவிப்பு இவனுக்கு இன்னும் சற்று நேரத்தில் பொதுமக்கள் முன்னிலையில், நிரூபிக்கப்பட்ட விபச்சாரக் குற்றச்சாட்டுக்காக நிறைவேற்றப்படப் போகிற மரண தண்டனை பற்றியதாக இருக்கலாம்.

உமையாழ் – பிரித்தானியா 

உமையாழ்

(Visited 92 times, 1 visits today)
 

One thought on “பாவமும் பலியும்-சிறுகதை-உமையாழ்”

Comments are closed.