பிறழ்வு-சிறுகதை-உமையாழ்

உமையாழ்‘அந்த சம்பவம்’ நடந்து சரியா ஏழாண்டுகள் கடந்து, என்ட பதினஞ்சாவது வயசில வாப்பா மாரடைப்பால காலமானார். அது ஒரு வெள்ளிக்கிழம. கவலையை விட ஆறுதல் மிகைச்சிருந்த நாள் அது. மூச்சு முட்ட அடைச்சு வைச்சவன வெளிய உட்டது போல காற்றில ஒரு ஆசுவாசம் படர்ந்திருந்திச்சு. சுற்றி இருந்த எல்லோரும் அழுதார்கள் என்பதால எனக்கும் கண்கள்  பிசுபிசுத்திருந்திச்சு.  மத்தப்படி மனசு கொஞ்சமும் கவலையில அழல.  நீங்களே சொல்லுங்க, வாப்பா அகாலமா மௌத்தா… போயிட்டார் என சொல்றதுல உங்களுக்கு ஆறுதல் என்று சொல்ல நேர்வது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்!?

கொஞ்சம் பொறுங்கோ, நான் வலது பக்கமாக கொஞ்சமா திரும்பிக்கிறேன். அப்பதான் நீங்க சொல்றத என்னால தெளிவா கேட்கமுடியும்.

ம்ம், இப்ப சொல்லுங்க.

வாப்பாவ வெறுத்ததற்கான காரணத்தையா கேட்கிறீங்க?

சொல்றன். ஆனா எனக்கு ஞாபகம் தப்பிபோச்சி. துல்லியமா சொல்ல முடியுமான்னு தெரியலயே..

ஆ… முதன் முதல்ல வாப்பாவ நான் வெறுக்கக் காரணமாக இருந்த சம்பவம் மங்கலா எனக்கு ஞாபகம் வருது. வாப்பா, உம்மாட கூந்தல புடிச்சி தரதரன்னு இழுத்து ரோட்ல போட்ட அந்தண்டு, பெரிய மாமாக்கும் வாப்பாக்கும் பெரிய வாய்த்தகராறாகிருச்சு! வாப்பா சாறனுடுத்த ஒரு வெறிநாய போல நிண்டவர்! அந்த சம்பவம்தான். அந்த நாளுக்குப் பொறகுதான் கால்ல அப்பின நரகல போல வாப்பாவ வெறுக்க ஆரம்பிச்சன். அதுவுமில்லாம வாப்பா இல்லாம இருந்தா கொஞ்சம் சொதந்திரம் கெடைக்கும் என நான் நெனச்சதும் ஒரு காரணமா இருக்கலாம்.  என்னதான் காரணமாக இருந்தாலும் வாப்பாவ வெறுப்பத அல்லது வாப்பாட மரணத்தில ஆறுதல் அடைவத நியாயப்படுத்த முடியாது என நீங்க சொல்ல வருவதும் எனக்குப் புரியாமலில்ல. ஆனா அது நீங்க நினைப்பத போல இல்ல. அத பத்தி நான் கொஞ்சம் விரிவ தெளிவாகச் சொன்னா உங்களால என்னைய புரிஞ்சிக்க முடியும். அதுக்கு நான் அஜிமீர்ல இருந்து ஆரம்பிக்கணும். உங்களுக்கு ஆறுவிரல் அஜிமீர தெரியுமா?

ஆமா………, அரசியல் ரௌடி ஆறுவிரல் அஜிமீர்தான். அவன் எண்ட பள்ளித்தோழன். கோடை மாங்காயைப் போல எனக்கென இருந்த ஒரே ஒரு நண்பன். அவனுக்கு அதிசயமாக இரண்டு கையிலயும் ஆறாறுவிரல்கள் இருந்ததால அவன நாங்க ‘ஆறுவிரல்’ அஜிமீர், ஆறுவிரல் அஜிமீர்’ எண்டுதான் கூப்பிடுவோம். காரணமே இல்லாம ஒரு குழந்த பொம்மைய விரும்பி இருப்பத போல அஜிமீர் என் மீது ரொம்ப பாசமாக இருந்தான். பள்ளிகூடத்தில எங்கள சோடி போட்ட வண்டி மாடென்ணுதான் சொல்லுவாங்க.

ஒருநாள், எனக்குப் பனிரெண்டு வயசா இருக்கும் போது, என்னைத் தேடி வீட்ட வந்த அஜிமீரை, வாசல்ல நிற்க வைச்சி வாப்பா ஏசிவச்சார்;

“உனக்கென்னடா இஞ்ச வேல ? ஒங்கும்மா ஒன்ன இங்க தொறத்தி உட்டிட்டு அங்க எவன் கூட படுக்கா? நீ இனிமே இங்கெல்லாம் வரப்போடாது, கேட்டா? அவனோட ஒன்னைய பார்த்தன், தோலை உரிச்சி உப்பு போட்றுவன், படுவா”

வாப்பா பேசப் பேச ஒரு மெழுகுருகுவதைப் போல கூனிக் குறுகி கரைஞ்சி நின்டான் அஜிமீர். அவன்ட கண்கள்ல தண்ணீர் தாரைதாரையாகக் கொட்டிற்று. அன்று அழுது கொண்டே போன அஜிமீர், அதற்குப் பிறகு ஒரு கிரகண நாள்ல நாம பார்த்திருக்க மறைஞ்சி போற சந்திரனைப் போல என்னில இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிச்சான். ஆறாம்வகுப்ல இருந்து நான் பள்ளிக்கூடத்தில் கூட்டாளிகளே இல்லாம ஒத்த ஆளாத்தான் திரிஞ்சன்.

இதுக்கெல்லாமா கோவிப்பார்கள் என்று நீங்க கேட்க முதல, வாப்பா செய்த இன்னொரு காரியத்தையும் நீங்க தெரிஞ்சிக்கணும். அண்டு அஜிமிருக்கு ஏசியதோட மட்டும் வாப்பா நிக்கல. என்னையும்  கூட்டிகிட்டு அஜ்மீரிற்ர வீடு தேடிப்போய், அவன்ட உம்மாவ வாய்க்கு வந்தபடி திட்டினார். ஊர்வாய்க்குப் பயந்த அஜிமீற்ர உம்மா காதுகளை கைகளால மூடிக்கிட்டா. வெயில் சுட்ட மண்புழு போல ஒடுங்கி ஒரு மூலையில குந்தி கெடந்தா. வாப்பாவ பொறுத்தவரை, அஜிமிர் ஒரு தறிகெட்டவன். வாப்பா இல்லாம போன எல்லாருமே தறிகெட்டதுகள்தானாம், வாப்பா சொல்லுவார். இந்த வார்த்தைய வாப்பாட்ட இருந்துதான் நான் கத்துகிட்டன்;

தறிகெட்டவன்…

அஜிமீர் மட்டும்தானா நண்பன்? அவனுக்குப் பொறகு வேறு நண்பர்களே எனக்கு வாய்க்கலயா என நீங்க கேட்பது நல்ல கேள்விதான். ஆனா பெரியவனாகியும், பள்ளிக்கூடத்தில காற்சட்டைக்குள்ள கக்கா போன ஒருவனது கதையைத்தான் நீங்க கேட்டிட்டிருக்கீங்க என்கிறதையும் நினைவில வச்சிக்கங்க. அதுவுமில்லாம பக்குவமில்லாம, பெண் வயப்பட்டிருந்த என்னோட மனச அவ்வளவு எளிதில உங்களுக்கு புரிய வைத்துவிட முடியாது. அதனால உங்க கேள்விகள வரம்பு மீறாம பார்த்துக்கிடுங்க, ஆமா.

………!

இல்ல கோவமா சொல்லல. ஆனா நீங்க புரிஞ்சிக்கிடனும்.

…….!

நான் கோவப்பட்டு ஒண்ணும் ஆகாது.  அதனால நான் கோவப்படுவத சிறுபராயத்திலேயே விட்டிட்டன். ஆனா அப்பப்ப மண்ட சூடாகும். வாப்பாவ போல காது மடல் செவக்கும். ஆனா கோவம் வராது. கோவம் எண்டா வாப்பாக்கு வாரதுதான் கோவம். ஓசிக்காம கைல கெடைக்கிறத்த தூக்கி அடிச்சிறணும்! நான் அதொண்டும் செய்றதில்ல. ஆமா!

…….

என்னுடைய சிறு பராயம் பற்றியா கேட்கீங்க. அத பத்தி என்ன சொல்றது?

அப்பல்லாம், அக்கம் பக்கத்தில இருந்த பொம்புள புள்ளைகளோட சேர்ந்து விளையாட முடிஞ்சளவுக்கு, ஆண்கள் மட்டுமே படிக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தில இருந்த ஆண் நண்பர்கள என்னால இலகுவில் அணுக முடிஞ்சிருக்கல. அஜிமிர் மட்டுமே விதி விலக்காக இருந்தான். அவன் என்னை அந்த வயதில புரிஞ்சிகிட்டான் என நினைக்கன். ஒரு பாதுகாப்பு அரண் போல மத்தப் புள்ளைகளிண்ட கிண்டல் கேலிகள்ல இருந்து என்னைய காப்பாத்தி வந்தான். வாப்பா அவனை வைய முன்னர் அவன் ஒரு போதும் என்னை பிரிந்திருந்ததே இல்ல. எங்கு போறெண்டாலும் என்னையும் அழைச்சிட்டு போவான். வாப்பா அவனை திட்டிய அன்றும் அவன் என்னைய கடற்கரைக்கு கூட்டிப் போறதா சொல்லி இருந்தான். அவன ஒரு காட்டு மரம் என உம்மா ஒருநாள் சொன்னா. வாப்பா அவனொரு ரோட்டு நாய் எண்டார். அந்தண்டும் வாப்பாக்கும் உம்மாக்கும் பெரிய சண்டை நடந்தது. எப்படியோ, தந்தை இல்லாமல் வளர்ந்த அவன் நிச்சயமாக பாக்கியவான்தான் என அப்பல்லாம் அவனைப் பற்றி நான் நெனைப்பதுண்டு.

 ……….

இதெல்லாம் எப்படி எண்ட ஞாபகத்தில இருக்கு என்கிற ஒங்கட கேள்விக்கு எப்படி பதில் சொல்றது!

எல்லாம் பழைய கதைகள்தான். ஆனா ஒண்டுக்கு பின்னால ஒண்டா எல்லாம் சம்பவங்களாக ஞாபகத்தில இருக்கு. ஒரு பெரிய மணல் குவியல் போல மலை  மலையா குமிஞ்சி கெடக்கிற சம்பவங்கள். அதுல சில சம்பவங்கள நெனச்சிகிட்டா மகிழ்ச்சியா இருக்கும். அதுகள அப்பப்ப நெனச்சிகிடுவன். சிலது கஷ்டமா இருக்கும். அதுக அப்பப்ப ஞாபகத்திற்கு வரும். நான் கண்ண இறுக்கமா மூடிகிடுவன். அப்படி செஞ்சிகிட்டா ஒரு நிம்மதி. இப்படியா, ஒரு பைசா பெறாத ஒரு சம்பவம்  ஒரு ஆறாத வடுவப் போல வருசமா எனக்குள்ள குட்டி நாக்கு போல துடிச்சிட்டே இருக்கு. அந்த வடு அப்பப்ப பிச்சைக்காரன் நோண்ற கைப் புண் போல நோண்டப்பட்டு, நோண்டப்பட்டு, விஸ்வரூபமாகி இருக்கு.

என்னங்க…?

இல்லைங்க… அதற்கு வாப்பா காரணமில்ல. அந்த சம்பவம் எங்க வீட்டுக்கு முன்னாலை உள்ள ரோட்ல நடந்ததும், அதை ஒட்டி கோவப்பட்ட வாப்பா என்னைய ஓங்கி அறையும் போது நெடிய மூஸா சேர் அந்த ரோட்ல சைக்கிளில எங்கள கடந்து போக விதிக்கப்பட்டதும்தான் காரணம்.

……..

ஏன் அமைதியாகிட்டீய!

ஓ…… அந்த பைசா பெறாத சம்பவத்த பத்தி யோசிக்கயலா?

ஏன் பைசாபெறாத சம்பவம்னு சொன்னன்னு கேட்கீங்களா?

முதல்ல, ‘அந்த சம்பவத்தை’ ஒரு பைசா பெறாத சம்பவம் என நான் சொன்னது சற்று மிகைதான்னு தோணுது. ஏன்னா வாப்பா எப்போதும் சொல்வதைப் போல, நிகழுற எல்லா சம்பவங்களுக்கும் மனிச மனதில ஏதோ ஒருவகையில ஒரு எடம் இருக்கத்தான் செய்யிது. ஒப்பீட்டளவில ஒரு சம்பவத்தின் முக்கியத்துவம், அதன் விளைவுகள வச்சே மதிப்பிடப்படுமாம். வெற்றுச் சம்பவங்களின் விளைவுகள் வாழ்வையே மாற்றிப் போடுவதாக அமைந்துவிடுவதும் உண்டாம். எனக்கு இதெல்லாம் புரியாம போனாலும், மணல் குவியலைப் போல குவிஞ்சி கெடக்கிற சம்பவங்கள்ள பகுதியா வாப்பா சொன்ன இதெல்லாம் ஞாவகத்தில குவிஞ்சு கெடக்கு. ஆக வாப்பா சொல்வதப் பாத்தா, பெறுமதி அற்ற வெற்றுச் சம்பவங்கள் என உலகத்தில எதுவுமில்ல.

நீங்க என்ன நெனக்கயல்?

வாப்பா சொல்றது சரிதான்ல! ஆமா.

ஆ… அந்த சம்பவத்த பைசா பெறாத சம்பவம் என சொன்னதற்கான காரணத்த என்னால உங்களுக்கு விளக்கிட முடியும்னே நெனக்கன். அதற்கு நான் முதல்ல உங்களுக்கு பானுவைப் பற்றி சொல்லியாகணும்.

அழக இப்படித்தான் வரையறுப்பது எனத் தெரிந்திராத ஒரு வயதில, உலகில மிக அழகான பெண் பானுதான் என நான் எண்ணிக் கிடந்த ஒரு காலம் இருந்தது. வட்ட முகமும், பெரிய கண்களும், நீளமான கூந்தலும் பானுவிற்கு இருந்தன. அவள் ஆண் பிள்ளைக்கு நிகராக மரம், மதில் ஏறுவதும், வாய்க்கு வாய் கதைப்பதும், மற்றப் பிள்ளைகளுடன் சண்டைக்கு நிற்பதும் எனக்கு அவளிடம் புடிச்சிருந்திச்சி. அந்த வயதில எல்லாப் பெண்களுடனும் சாதாரணமாக பேச முடிஞ்ச என்னால, பானுவோட மட்டும் முகம் பார்த்து பேச முடிந்ததே இல்லை. இயலாதவன் பிடிச்சவங்க கிட்ட வன்மத்த கொட்டித் தீர்ப்பதைப் போல, அவள் என்ன செஞ்சாலும் குற்றமும் குறையும் கண்டுபிடிச்சி சண்ட போடுவதிலேயே குறியாக இருந்தேன். அப்படி அவளை நெருங்குவதுதான் எனக்கு தெரிந்திருந்த ஒரே வழியாக இருந்திச்சு.

அப்போ ஒரு பத்து அல்லது பதினொரு வயசிருக்கும். ஒருநாள் அக்கம் பக்கத்தில் இருக்கும் பிள்ளைகள் சேர்ந்து குஞ்சிச் சோறாக்கி விளையாடிட்டிருந்தோம். அன்று பானு ஒரு வெள்ள கௌன் போட்டிருந்தாள். குட்டைல கானாங்குருவிக மத்தியில வெள்ளக் கொக்கு நிற்பது போல அண்டு என்ட கண்ணுக்கு அவள் மட்டும் தனிச்சு தெரிஞ்சாள். அவள நான் ஓரக்கண்ணால பார்ப்பதும், அவள் என்னைப் பார்க்க நேர்ந்தா, பார்வைய தாழ்த்திக் கொள்வதுமா இருந்தன். ஆனா அவளுடைய குவிக்கப்பட்ட கவனம் என்மீது எப்போதும் இருக்கணும் என மனது ஆசைபட்டு கெடந்திச்சு. அதுக்கு அவள நோண்டனும். அப்படியான நோண்டலின் போது அவளது முழுக்கவனமும் என்மீது இருப்பதை நான் அறிஞ்சிருந்தேன். என்ன செய்வது என யோசிச்சிட்டு இருக்கைக்க, முருங்க இலைச் சொதிய அகப்பக்கண்ணையால கெண்டிட்டிருந்தாள் பானு. என்ன தோனிச்சோ தெரியல,

“சொதிக்குள்ள ஏன் உப்பள்ளிப் போற” எனப் போலியான சத்தம் போட்டு பானுவ திட்ட ஆரம்பிச்சன். என் எண்ணமும் ஈடேறிச்சு. அவள் தன்னோட முழுக் கவனத்தையும் திரட்டி, என்னோட வாய்த் தகறாரில ஈடுபட்டாள். நானும் அவளை நன்கு திட்டிக்கொண்டிருந்தேன். அவள் திடீரென, கையில இருந்த அகப்ப கம்பால என்னைய அடிச்சாள். அதப் பார்த்த மற்ற புள்ளைக சிரிச்சதுகள். எங்க இருந்துதான் எனக்கு அவ்வளவு ரோசம் வந்திச்சோ தெரியல! நான் அவள செவரோட சாத்தி கழுத்த நெரிச்சன். அந்த சமயம் பார்த்து, எங்கள கடந்து போய்ட்டிருந்த வாப்பா,  சைக்கிளைப் போட்டிட்டுப் பாஞ்சி வந்தார். எங்கள வெளக்கி உட்டுட்டு, என்னைய தரதர என இழுத்திட்டு வீட்டுக்கு வந்த வாப்பா அவரது யானைக் கையால்- வாப்பாவிற்கு இடது உள்ளங்கை முறம் போல அகண்டிருக்கும்- எனது வலது கன்னத்தில் ஓங்கி அறைஞ்சார். தகரத் தொட்டியில் கல் அடித்ததைப் போல ‘டமார்’ என இடது காதில சத்தம் கேட்டது. வலது காது சற்று மந்தமென்பதால, அவ்வளவு வெறைப்பா சத்தம் கேட்டிருக்கல்ல. ஆனா அற தரமான அற.

வலது காது ஏன் மந்தம் என்றா கேட்கீங்க? மூஸா சேர் வீதியால கடக்கும் போது பார்த்த அந்த சம்பவத்திற்குப் பொறகும், இப்படித்தான் வாப்பா என்ட வலது கன்னப் பக்கமாக அறைஞ்சதில, வலது காதில ‘ங்கொய்’ என ஒரு இரைச்சல் ஒரு வாரம் பத்துநாள் கடந்தும் கேட்டிட்டே இருந்திச்சு. அத நான் உம்மாட்ட சொன்ன போது, அது ஒண்ணுமில்ல என என் காதை பிடிச்சி ஒரு தேய் தேய்ச்சி ஊட்டா. ‘ங்கொய்’ குறைந்தது போல இருந்தாலும், அந்தப் பக்கத்துக் காதில கேள்திறன் குறைஞ்சிருந்திச்சி. அதப்பத்தி பின்னர் நான் உம்மா உட்பட யாரிடமும் வாய்திறக்கல.  ஏன் என்டா, வாப்பாவும் உம்மாவும் அப்பதான் வேறொரு விசயமா சண்ட புடிச்சி ஓச்சிருந்தாங்க.

பானுவின் கழுத்த பிடிச்சி நான் நசுக்கியதால வாப்பாக்கு ஏன் அவ்வளவு கோவம் வந்ததென்றே தெரியல! ஆனா எப்போதும் போல வெளிய போட்டு அடிக்காம, இந்த முற என்ன வாப்பா உள்ள இழுத்துச் சென்று  அறைஞ்சதால, அண்டு நான் காற்சட்டைக்குள்ள ஒண்டுக்குப் போனதற்கு சாட்சியாக உம்மா மட்டுமே இருந்தா. நான் காற்சட்டைக்குள் ஒண்டுக்கு போறத பானு பார்க்க நேர்ந்திருந்தா பெரிய அவமானமாக இருந்திருக்கும். அது ஒரு வகையில ஆறுதல்தான் எண்டாலும், வாப்பா அறைவதற்கு முன்னர் சொன்ன வார்த்தைகள்தான் அறையை விட கடுமையாக வலித்தது;

“பொட்டப் புள்ளைகளோட விளையாடாத, பொட்டமாதிரி இருக்காத என எத்தன மொற ஒனக்குச் செல்றது ? மொகம் எல்லாம் பௌடர அப்பிக்கு, பொடவையை சுத்திக்கு நிக்கயே! நீ என்ன பொட்டயா?”

நான் ஏற்கனவே சொன்னதைப் போல ஏன் ஏசுகிறார் என்று அர்த்தம் புரியாத வயதிலும் அந்த அறைய விட அந்த வார்த்தைங்க நொந்திச்சி. செல வார்த்தைங்க இப்படித்தான், அர்த்தமே புரியாம வலிச்சிட்டே இருக்கும். அதற்கும் வாப்பா காரணமில்லை. அண்டு என்னைய கட்டுக்கொண்டு “ஓ……….” என அழுத உம்மா, வாப்பா சொன்ன அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டி, கனமாக்கி, மனச ரணமாக்கி இருந்தா. கடுப்பில இருந்த வாப்பா போகிற போக்கில் உம்மாவையும் சேர்த்து ஒரு உதை கொடுத்துவிட்டு நகர்ந்தார். என்னைய நகர்த்தி உம்மா அந்த உதையை தன்ட சள்ளையில வாங்கிக்கிட்டா. உம்மா ஆ…… என அலறிய போது வாப்பாட வார்த்தையைவிட உம்மாட அலறல் வலிச்சிச்சு.

இப்படியா முடிவில என்ட கஷ்டங்களுக்கு வாப்பா நேரடியாக காரணமில்லாம இருந்தாலும், அந்த கஷ்டங்கள கொண்டு வந்த எல்லா சம்பவங்கள்ள மூலமும் அவராக இருந்ததால, அவர் மீதான வெறுப்ப மனது தன்னாலேயே வளர்த்துக்கிச்சு என நெனைக்கன். அப்படி இல்ல எண்டா ‘அந்த சம்பவம்’ நடந்த அடுத்த நாளே நெடிய மூஸா சேர் பள்ளிக்கூடத்தில மற்றைய மாணவர்கள முன்னால வைச்சி என்னை கேலி செய்து  சிரிச்சத மன்னிக்க முடிஞ்ச என்னால, வாப்பாவ மன்னிக்கவே முடியாம போனது பெருஞ் சோகம்தான்.

நெடிய மூஸா சேர் அன்டு பள்ளிக்கூடத்தில என்ன சொன்னார் என்றா கேட்கயல்! சொல்றன்;

‘அந்த சம்பவத்தை’ சக மாணவர்கள் மத்தியில் விபரித்துச் சொன்ன நெடிய மூஸா சேர்,

“இவன் அப்படிச் செஞ்சதால இவன்ட வாப்பா இவனை நடு ரோட்டில் வைச்சு குடுத்தார் ஒரு அற. பையன் ரௌசருக்க ஒண்டுக்கு போயிட்டான்” என்றார் சிரித்துக்கொண்டே. முழு வகுப்புமே சிரித்தது.

இத மனசில வைச்சிகிடுங்க; இது நடந்தது நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது. இதே கதையை அதன் தொனி கூட மாறாம, நாங்க எட்டாம் வகுப்பு படிக்கும் போதும் எங்களுக்கு இஸ்லாம் பாடம் படிப்பிக்க வந்த நெடிய மூஸா சேர் மீண்டும் ஒருமுறை சொன்னார். அவருக்கு ஞாபக சக்தி ஜாஸ்தி. ஒரு வார்த்த பிசகாம அப்படியே சொன்னார். அன்றும் வகுப்பு பூராகச் சிரித்தது. அன்று அதற்குப் பிறகு அவர் வகுப்பில சொல்லிக்கொடுத்த ‘நபி அவர்களின் நற்பண்புகள்’ பாடத்தின் ஒரு வரியிலேனும் மனது ஒட்டாது நான் அழுது கொண்டே இருந்தேன்.

உங்களில் எவருக்காவது மூஸா சேர் பற்றித் தெரிஞ்சிருக்கலாம். அவர் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கவே பிரியப்படுவார். அப்படி அவர் சிரிக்கும் போது அவரது இடது கன்னத்தில் குழிவிழும். அப்போது அவர் அவ்வளவு அழகாக இருப்பதை நான் ஓரக்கண்ணால் பார்த்து ரசித்திருக்கிறேன். அவரது கற்றை மீசையில் ஒன்றிரண்டு வெள்ளை முடிகள் இருட்டில் உதித்த வால் நட்சத்திரங்கள போல நீட்டிக்கொண்டிருக்கும். அவர் எங்கிட பாடசாலையில் விஞ்ஞான டீச்சரா இருந்த சபீஹா டீச்சரின் குண்டியை மாணவர்களிடம் விபரித்துக் கூறி ரசிப்பவராகவும் இருந்தார். பதின் வயதின் மத்தியில் இருந்த மாணவர்களுக்கு அவரது பகிடிகள் பிடித்துப் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனா நான் அவர் அப்படி பேசுகிறபோது தலையை குனிந்து கொள்வேன். அஜிமீருக்கும் அது பிடிக்கல்ல என்பது எனக்குப் புரிந்தது. அவனுக்கு பானு மேல காதல்னு மதியம் போகிற வகுப்பில எல்லாரும் பேசிகிட்டாங்க. அதனாலதான் மூஸா சேர் சபீஹா டீச்சர அப்படிச் சொன்ன போது அவனுக்கு அதுபிடிக்கல என நான் ஊகித்திருந்தன்.

ஆ, சொல்ல மறந்து போனேன்; சபீஹா டீச்சர் வேறாருமில்ல, பானுட உம்மாதான். உலகத்தில் ரண்டாவது பெரிய அழகி சபீஹா டீச்சர்தான்.

பானுவிற்கு என்ன நடந்தது என்றா கேக்கீங்க?

பெரிசா ஒன்றுமில்லை. அவளுக்கு பதினொரு வயசா இருக்கும் போது அவ வயதுக்கு வந்துடா. அதற்குப் பிறகு அவள் மரம், மதில் ஏறுவது முற்றாக நின்று போனது. வாய்க்கு வாய் பேசுவதும் படிப்படியாக குறைஞ்சி போச்சு. அவளது உம்மாவைப் போல அவளது மார்பகங்களும் பெரிதாகிப் போய் இருந்திச்சி. படிப்படியாக அவள் மீது எனக்கிருந்த ஒரு விதமான கிறுக்குத்தனமும் குறஞ்சி போச்சி. அவள மற்ற பிள்ளைகள போல பார்க்கப் பழகிவிட்டன். அவள் அதிகதிகமாக வெட்கப்பட்டதும் எனக்குப் பிடிக்கல்ல.

இப்படித்தான் ஒருநாள் விளையாடிட்டிருந்த போது, கிணற்றடியில வைச்சு பாலாடைக்குள்ள வெண்ணெய்யைப் போல திரண்டிருந்த அவளது மார்பகங்களப் பார்த்திட்டிருந்தன். அவை ஒருநாள்ள எப்படி இவ்வளவு தடித்து எழும்பி இருக்கிறது என்பது ஆச்சரியமாகவே இருந்தது. குனிந்து என்ட நெஞ்சப் பார்த்தன். தடவிய போது அவை தட்டையாக இருப்பது ஏமாற்றமாக இருந்தது. பானுவை நிமிர்ந்து பார்த்தேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். தலையை ஆட்டி என்னை அருகே அழைத்தாள். போனேன். கைகளைப் பிடித்து தனியே அழைத்துப் போனாள். வாழை மரங்களின் மறைவில் நிறுத்தி ‘எங்க பாக்காய்’ என்று கேட்டாள். சொன்னன். எதுவும் பேசாம என்ட கைய எடுத்து அவளது மார்பகங்களில் வைச்சிகிட்டா. அப்போது அவளது முகம் பூரித்துப் போய் இருந்தது.

உங்களால இதை நம்ப முடியுதா? இல்லல? நான் ஆறு விரல் அஜிமிரிடமும் இதைச் சொன்ன போது உங்களைப் போலவே அவனும் அத நம்பல. அதனால தான் நான் பானுவிடம் அஜிமிர் நம்பாததைச் சொல்லி அவனையும் அதை தொட்டுப் பார்க்க அனுமதிக்கச் சொன்ன போது பானு எனது முகத்தில் அறைஞ்சாள். அது நீரில முக்கிய செண்பகப் பூவ முகத்துக்கருகில உதறிவிடுவதைப் போல இருந்தது. எனக்கு காற்சட்டைக்குள் ஒண்டுக்கும் போகல்ல. வாப்பாக்கும் பானுவைப் போல கைகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என அப்போது தோன்றியது.

அதற்குப் பொறகு பானுவும் நானும் ஒருநாளும் பேசிக்கொள்ளல. பானு அதை ஏன் அவ்வளவு பெரிய விடயமாக எடுத்துக்கொண்டாள்னு அப்போ எனக்கு புரிபடவே இல்லை. ஏனென்டா நானும் அஜிமிரும் மாறி மாறி எங்களது ஆண் குறிகள தொட்டும் பிடித்தும் விளையாடி இருக்கிறோம். அவன் என்னை விட இரண்டு வயது பெரியவனாக இருந்ததால, அவனது குறி தடித்து பெருத்திருக்கும். அப்படித்தான் ஒருநாள் வீட்டிற்கு புறத்தே உள்ள பாழ்வளவில உள்ள கிணற்றுக் கட்டில இருந்துகொண்டு, நானும் அவனும் மாறி மாறி எங்களது குறிகளைப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது, வாப்பா எங்களை பின்னால இருந்து பார்த்திட்டார். அஜிமிர் எதுவும் நடக்காதது போல இரு என மெல்லமாகச் சொன்னான். நானும் கமுக்கமாக இருந்திட்டன். வாப்பா ஒரு வார்த்தைகூட பேசாமல் என்னை அழைத்துக்கொண்டு போனார்.

……

ஏன் அமைதியாயிட்டீங்க? ஏதாவது பேசுங்க… இல்லாடி நான் மட்டும்தான் பேசிட்டிருக்கணும்..

…….

சரி, வாப்பா மீதுதான் நான் ஒருபோதும் வெளிக்காட்டி இராத எனது எல்லாக் கோபங்களும் குவிந்திருந்தன; மற்றவர்கள் மீது எனக்கு கவலைகள் இருந்ததே தவிர கோபமில்லை எனச் சொன்னேனே, அதற்கான காரணத்த என்னால உங்களுக்கு சொல்ல முடியும்.

வாப்பா ஒருநாள் வாக்குவாதத்தின் நடுவில உம்மாவை கைநீட்டி அறைஞ்ச போது ஆற்றாமையில நான் என் தலைய சுவரில் முட்டி முட்டி என் எதிர்ப்பைத் தெரிவித்தேன். மாமா ஒருநாள் சொன்னது ஞாபகம் வந்தது. எளியவர்கள் தங்களை வதைத்துத்தான் எதிர்ப்பைக்கூட பதிவு செய்ய வேண்டி இருக்குமாம்.  நான் செய்வதைக் கவனித்த உம்மா வீறிட்டுக் கத்த, ஏற்கனவே கோபத்தில இருந்த வாப்பாவ எண்ட செயல் இன்னும் கோபப்படுத்த, வெறிகொண்டு, என்னை தூக்கிக்கொண்டு வெளிய வந்தவர், தரையோடு சேர்த்து என்னை அடித்தார். முயன்று எழும்பி நின்ற எனது இடது பக்கக் கன்னத்தில் ஓங்கிப் பலமாக அறைந்தார். தகர வேலியோடு சாய்ந்த பின்னர்தான், நான் அணிந்திருந்த காற்சட்டைக்குள்ள மூத்திரம் போயிருந்ததே தெரிந்தது. அதற்கு முன்னர் அப்படி ஒருநாளும் ஆனதில்லை. ஆனா   அதற்குப் பிறகு ஒவ்வொரு முறை யாராவது அடிக்கும் போதும், காற்சட்டைக்குள்ள சிறுநீர் கழிப்பதை என்னால் கட்டுப்படுத்தி இருக்க முடிந்ததே இல்லை. அதனால கூட உருவான கோவமாக கூட இருக்கலாம். விசயம் அதுவல்ல, பானு ஏன் அந்த விசயத்தை ஒரு பெரிய விடயம் போல கருதி என்னைய அறைந்தாள்!? அஜிமீரை தொட்டு பார்க்க அனுமதிப்பதில் என்ன பிரச்சினை!? எண்ட கைய எடுத்து அங்க வச்சவள் தானே! பின்ன எதுக்கு அவ்வளவு கோவம்!? இப்படி எனக்கு பல விசயங்கள் அந்த வயசில புரிஞ்சிருக்கவே இல்லை. அப்போ என்னிட்ட இருந்த  கேள்விகளுக்கு பதிலும் இருந்ததில்ல.

பானுவின் வாப்பாவிற்கும் பானுவைப் போலதான் கோவம் வரும். நான் அத பார்த்திருக்கன். ஏன் மனுசனுக்கு கோவம் வரனும்!?

என்ன? பானுட வாப்பாட கோவத்தை கேட்கீங்களா?

ஒருநாள் இப்படிதான் பானுவின் வாப்பா நெடிய மூசா சேரை வீதியில் போட்டு அடிச்சி தொவச்சிட்டிருந்தார்.  மழ பெய்து வீதியில கணுக்கால் அளவு நீர் தேங்கி இருந்த அன்று, அது நிகழும் போது நேரம் மதியம் 2:00 மணி இருக்கும். ரோட்ல, சண்டையிட்டுக் கொண்டிருந்த அவர்களையும் என்னையும் தவிர ஒரு காக்கா குருவிதானும் இல்ல. ஆறடி உயரமான பானுவின் வாப்பா, நான்கய முக்கா அடி உயரமான நெடிய மூஸா சேரை கீழே தள்ளி விட்டு தன் கால்களால மூஸா சேரின் வகுத்தில மிதித்துக்கொண்டிருந்தார். நான் ஓடிப்போய் பானுட உம்மாவ கூட்டி வந்துதான் அந்தச் சண்டையை விலக்கி வைச்சன். மழையில நனைச்ச குருவியப் போல ஒடுங்கி, யானை மிதித்த விளாம்பழக் கோது போல கசங்கி வீதியில கிடந்த மூஸா சேரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நான் கைகொடுத்து மூஸா சேரை தூக்கி விட்ட போது, அவரது காற்சட்டையில பீ போயிருந்ததை பார்க்க நேர்ந்தது.

மூஸா சேர், “இது பற்றி யாரிடமும் சொல்ல வேணாம்டா” என என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தார். அன்று அவருக்காக நான் பரிதாபம் பட்டன். இது நிகழ்ந்தது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது. இது வரை அது பற்றி நான் யாரிடமும் மூச்சு விட்டதில்ல.

பானுவின் வாப்பாவ அடக்கிற அங்குசம் சபீஹா டீச்சர்தான் என்பது எங்க ரோட்டுக்கே தெரியும். அவ ஒரு பார்வ பார்த்தா அவர் அடங்கி போவார். அவருக்கு பயமில்லை. அவ மேல காதல் எண்டு எல்லாரும் சொல்லுவாங்க. அவங்க ரண்டு பேரும் சண்ட போட்டு நான் பார்த்ததே இல்ல. பானுட தம்பிகிட்ட ஏன்டா உங்கட வாப்பா உங்கும்மாவ சத்தம் போடுவதில்ல என நான் ஒருதடவ கேட்டதற்கு அவன் என்னை ஒருமாதிரியாக பார்த்தான்.

என்ன கேட்டீங்க? இப்ப வாப்பவ பத்திய எண்ணங்களையா கேட்டீங்க! இப்போ கூட வாப்பா பற்றி எண்ணும் போது நாவுக்கடியில வைச்ச வேப்பம்பூ போல அடிமனதில் ஏதோ ஒரு கசப்பு இருக்கத்தான் செய்யிது. இப்போ அதுபற்றி எல்லாம் நான் அதிகம் அலட்டிக் கொள்றதில்ல. அந்தக் கசப்பு பழகிவிட்டது. அதுவுமில்லாம மௌதான அந்த மனுசன பத்தி பேசி என்னாகப் போகிது!? ஆனா அந்த மனுசன பத்தி பேசாம எப்படி முடியும்!?

உம்மா சொன்னதப் போல ஒருவேள நான் பொம்புளப் புள்ளையா பொறந்திருந்தா, வாப்பா மௌத்தாகாம இருந்திருப்பாரோ என்னவோ!

வாப்பா மௌத்தாகி கெடந்தப்போ உம்மா அதைச் சொல்லித்தான் என்னைய அடிச்சா. நெஞ்சி வெடிச்சித்தான் அவர் மௌத்தான எண்டுதான் எல்லாரும் சொன்னாங்க. ஆனா உம்மா மட்டும்தான் நான்தான் வாப்பாவ கொன்னு போட்டன் என்டு ஒப்பாரி வச்சி வச்சி அழுதா. என்னைய கழுத்தப் புடிச்சி நெரிச்சா. மாமாமார்தான் என்னைய பிச்சி எடுத்து காப்பாத்தினாங்க. சத்தியமா வாப்பாவ நான் கொல்லல்ல.

உம்மாக்கு கூடப்பொறந்த ராத்தா தங்கச்சிமார் இல்ல. ரண்டு தம்பிமார்தான். நான் பொம்புளையா பொறப்பன் என்டு, ஜெய்லானிக்குப் போய் காசி முடிஞ்சி, பனிக்கொடம் எடுத்து, தல பாத்திஹா ஓதி என்னெல்லாமோ செஞ்சும்  ஒண்டும் பலிக்கல. நான் ஆம்புள புள்ளையா பொறந்த ஏமாற்றத்திலதான் உம்மாக்கு கிறுக்கு புடிச்சிடிச்சி எண்டு மாமா ஒருநாள் கத்துறது எனக்கும் கேட்டிச்சி. நீங்களே சொல்லுங்க பாப்பம், நான் ஆம்புளயா பொறந்தது எண்ட குத்தமா என்ன!?

என்னதான் எண்டாலும் உம்மாக்கு அந்த கவல இருந்துதான் இருக்கு போல. நான் சின்னவனா இருந்தப்போ எனக்கு ரெட்ட ஜட போட்டு, முடிய நீளமா பின்னி, ராணி பௌடர மொகத்துல அப்பி, ஒத்தக் கண்ணத்தில பொட்டும் வச்சி வாப்பா கடையில இருந்து வீட்ட வார வரைக்கும் உம்மா என்னைய குத்த வச்சி பாத்திருப்பா. வாப்பா கண்டா ஏசுவார் எண்டு, அவர் வீட்ட வார நேரத்திற்கு மொதல்லயே எல்லாத்தையும் கலைச்சு போடுடுவா. அதையும் மீறி வாப்பா எப்பவாது என்னைய அந்தக் கோலத்தில கண்டா எனக்கு ஏசுவார். உம்மாவ புடிச்சு கத்துவார். உம்மா பதிலுக்கு கத்துவா.

என்னது? மூசா சேர்ர ஊட்டுக்கு கல்லடிச்சது பத்தியா கேட்கயல்?.

சொல்றன். நான் காற்சட்டைக்க ஒண்டுக்கு போன கதைய, எட்டாம்பு படிக்கும் போது மூஸா சேர் பள்ளிக்கூடத்தில ரண்டாவது முறையா சொன்னார்னு சொன்னேன்லயா? அப்போ இன்னொரு விசயத்தையும் சேர்த்துச் சொன்னார்;

“நான் சம்மந்தம் சம்மந்தமில்லாம கதைப்பன் எண்டும், ஒரு விசயத்த என்னால கோர்வையா சொல்ல முடியாதெண்டும் சொல்லி”, என்னைய கிண்டல் பண்ணி வகுப்பைச் சிரிக்க வைத்தார். நீங்களே சொல்லுங்க நான் இவ்வளவு நேரமா ஒரு கோர்வையா எல்லாத்தையும் சொல்றன்ல? பின்ன ஏன் மூஸா சேர் அப்படிச் சொன்னார்!? அவர் இப்படித்தான் எல்லோரையும் கிண்டல் பன்னுரார்னு, ஒருநாள் மற்ற மாணவர்கள் சிலரை சேர்த்துக்கிட்டு மூஸா சேர்ர ஊட்டுக்கு கல்லடிப்போம் என அஜிமிர் சொன்ன போது நானும் அவன் கூட போய் கல்லெடுத்து எறிந்துவிட்டு ஓடியாந்தன்.

வாப்பாதான் நெடிய மூஸா, அஜிமிர்ர உம்மா தனியா இருக்கும் போது அங்க போய் வாரதா அஜிமிர்ர உம்மாக்கு ஏசும் போது சொன்னார்லா! அஜிமிருக்கு அந்தக் கோவம் வேறு இருந்திருக்கல்லாம்.

……

பானு என்னானாளா?

அவளுக்கு என்ன! நல்லா இருக்காள். ஒரு இன்ஜினியர் மாப்புள்ளைய கலியாணம் முடிச்சிக்கிட்டு சந்தோசமா இருக்காள். இப்பதான் ஒரு புள்ள பொறந்திருக்கு. பொம்புள புள்ள. நான் போய் பார்த்துவிட்டு வந்தன். ஆனா பானுதான் மாறி போய்டா. கொஞ்சங் குண்டாகி, சத போட்டு… நான் போனப்ப பேசுறத்துக்கே தயங்கினா. பயந்து நிண்டது போலவும் இருந்தது. சரிதானே, நான் திடீரென போய், பேயப் போல நிண்டா அவ பயப்புடுவாதானே! அதுவுமில்லாம பானு பழைய பானு இல்லயே; நானும் பழைய நானில்லையே.

இப்ப கிட்டத்தில, எலக்சன் சமயத்தில, நெடிய மூஸா சேர்ர கைய கால அடிச்சி ஒடைச்சி, அவர்ர ஊட்டயும் ஒடைச்சி விட்டதா பேசிக்கிறாங்க. ஆறு விரல் அஜிமிர்தான் செஞ்சிருக்கான் என்டும் கேள்வி என்டு பானு சொன்னா.

அஜிமிருக்கு கோவம் கொஞ்சம் ஜாஸ்திதான். அவன் வெஞ்சம் வச்சி ஆக்கள அடிக்கிறத நான் கனதரம் பார்த்திருக்கன். வாப்பாவ போல அவனும் கோவம் வந்த கண்டத தூக்கி அடிப்பான். ஏன் கோவப்படனும்!?

மூசா சேர் பார்த்த ‘அந்த சம்பவம்’ என்ன எவ்வளவு பாதிச்சதென்டா கேட்குறீங்க? அத என்னத்த சொல்ல! அது நடந்துதான் எல்லாம் மாறிப் போச்சு. வாப்பா அடிக்கடி சொல்றது போல எல்லாம் நடக்கிற நல்லதுக்குத்தான். அல்ஹம்துலில்லாஹ். அதனால அதைப் பற்றி நான் இப்போதெல்லாம் அதிகம் யோசிப்பதில்ல. அது பாட்டு மூளையில ஒரு ஓரத்தில அரிச்சிக்கிட்டு நிற்கும். இந்த பீ வண்டு ‘இஸ்ஸ்…’ போடுமே, அப்படி எறைஞ்சிகிட்டே இருக்கும். சில நேரம் நான் கைய எடுத்து மண்டையில ஓங்கி அறை குடுத்தா சத்தம் கொஞ்சம் குறைவது போல இருக்கும். எல்லாம் மன பிரமைதான் என டொக்டர் சொன்னதா சின்ன மாமாதான் சொன்னார். எனக்கு சரியா தெரியல. இப்ப எல்லாத்தையும் சின்ன மாமாதான் பார்த்துக்கிறார். அவருக்கும் வயசாகிப் போச்சி. ரொம்ப ஒடைஞ்சி போய் இருக்கார்.

………!

நான் எப்படி இருக்கன் எண்டு நீங்க வருத்தப்படுவது போல இருக்கு. வேணாம். வருத்தப்படாதிய. நான் நல்லாத்தான் இருக்கன். எனக்கு யார் மேலேயும் கோவம் இல்ல. வாப்பாதான் மௌத்தா போய்ட்டார். அவர் இருந்திருந்தா ஆம்புள புள்ள இப்படி ஊட்டுக்குள்ள அடஞ்சி இருக்கப்டாது. வெளிய போயிட்டு வான்னு ஒரு அறைய போட்டு சரி அனுப்பி வைப்பார். இப்ப எனக்கு அப்படி போகச் சொல்லத்தான் யாருமில்ல. எனக்கு போகவும் ஏலாது. கதவ மூடி வச்சிருக்காங்க. சில நேரம் அதோ அந்த சங்கிலியால கட்டி வைப்பாங்க. உம்மாவையும் இப்படித்தான் வச்சிருந்தாங்க. எப்பவாச்சிம் தான் தொறந்து விடுவாங்க. அதுவும் டொக்டர் சொல்லி ஊசி போட்டுத்தான் அனுப்புவார். போன மொற என்னய வெளிய விட்டபோது தான் நான் பானுற கொழந்தைய பார்க்க போனன். அவதான் அஜிமிர் மூஸா சேர் ஊட்ட ஒடைச்ச கதைய சொன்னா. அடுத்த மொற வெளிய போறப்போ, அஜிமிரையும், நெடிய மூஸா சேரையும் பாக்கணும். மூஸா சேருக்கு இனி அடிக்காத, கோவப்படாத எண்டு அஜிமிர்ட சொல்லணும். எதுக்கு கோவப்படனும்!? நான் சொன்னா அஜிமிர் கேட்பான். ஆனா எப்போ வெளியே போவன் எண்டுதான் சரியா சொல்ல தெரியல. ஆனா போகணும்.

உமையாழ்- ஐக்கிய இராச்சியம்

உமையாழ்

 

(Visited 202 times, 1 visits today)
 

5 thoughts on “பிறழ்வு-சிறுகதை-உமையாழ்”

Comments are closed.