ஜெயமோகன் எனும் மந்திரவாதி ரெயிலில் சொன்ன கதை! -உமையாழ்

உமையாழ்அண்மையில் வாசித்த ஜெயமோகனின் ‘ரயிலில்’ சிறுகதை நல்கிய வாசிப்பனுபவம் பதிவுசெய்யப்பட வேண்டியது. ஜெயமோகன் பெரும்பாலும் மையமான ஒரு புள்ளியில் இருந்து கதை சொல்பவர் அல்ல என்பது எனது அவதானிப்பு. தான் பேச எடுத்துக்கொண்ட கதையின் எல்லா சாத்தியமான சந்துபொந்துகளுக்கும் நுளைந்து பிரித்து மேய்ந்து விட வேண்டும் என்கிற ஜெயமோகனது வேட்கையை அவரது பலகதைகளிலும் அவதானித்திருக்கிறேன். மேலும், கதை முடிந்துவிட்டது என வாசகன் நினைக்கும் ஒரு புள்ளியில், இல்லை, கதை இன்னும் முடியவில்லை எனச் சொல்லி மிக நுணுக்கமான விடயங்களை கதையின் கடைசியிலும் வாசகனின் மண்டையில் உறைப்பது போல சொல்ல ஜெயமோகனுக்கு எப்போதும் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது.

‘ரயிலில்’ கதையின் கடைசியில் சாமிநாதன் பிரித்து உண்ட அந்த இட்லிப் பொட்டலம் வாசகனுக்கு செரிக்க முதலே இந்தக் கதை அவனுள் வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. இப்படித்தான் கதை வாசித்து முடித்த பின்னர் ஒவ்வொரு கதாபாத்திரமாக மனதில் ஓட்டிப் பார்த்துக்கொண்டேன். கதையின் பிரதான பாத்திரங்களாக சாமிநாதனும், முத்துசாமியும் எனக்கு ரொம்ப நெருக்கமானவர்களாகவே தெரிந்தார்கள். கதைச் சம்பவங்களும் அவர்களது பாத்திரப் படைப்பும் அவர்களை வாசகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த யாருடனோ நிச்சயம் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள போதுமானதாகவே இருக்கிறது. அதுவே, கதையில் இருவரில் யார் நல்லவன் யார் கெட்டவன் என்கிற மேலோட்டமான பஞ்சாயத்தைப் பேசி பலனில்லை என்கிற முடிவுக்கு வாசகனை வரவைத்துவிடுகிறது. ஜெயமோகனும் எழுத வந்தது நல்லது கெட்டது பற்றியதல்ல என்பதை ஒரு தேர்ந்த வாசிப்பு மனம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இடத்தை கடக்க முடியாது போனால், நல்லவன் வாழ்ந்து,  கேட்டவன் வீழ்ந்து, அறம் எப்போதும் வெல்லும் என்பது போன்ற குழந்தைக் கதையாக புரிந்து கொள்ளப்படக் கூடிய எல்லா சாத்தியங்களும் உள்ள கதைதான் ரயிலில். ஆனால் ஜெயமோகன் அந்தப் புள்ளியில் இருந்து விலகி மையத்தில் நின்றுகொண்டு, கதையின் பிரதான பிரச்சினையுடன் நேரடியாக சம்மந்தப்பட்ட இருவரை ஓடும் ஒரு ரயில்யில் எதிரெதிர் இருக்கைகளில் அமர்த்தி, அவர்களுக்கிடையேயான சம்பாசனையாக கடந்த காலத்திற்கு எங்களையும் அழைத்துச் செல்கிறார். கடந்த காலம் காலைக் கறுக்களில் நிழல் நீழ்வது போல மூன்று தலைமுறைக்கு நீண்டு கிடக்கிறது.

கதையின் பிரதான பிரச்சினை சாமிநாதனின் தாத்தாவிற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட ஒரு கடைத்தொகுதியை சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. சாமிநாதனின் அப்பா காலத்தில் அந்தக் கட்டிடம்  முத்துசாமியின் அப்பாவிற்கு 175ரூபாய்க்கு வாடகைக்கு விடப்படுகிறது. வாடகைக்கு இருந்தால், வாடகையை சரியாகக் கொடுப்பதுதானே நியாயம். ஆனால் முத்துசாமியின் அப்பா வாடகை கொடுக்காமல் ஏய்கிறார். கேட்டுப் போனால் முதலில் பௌயமாகப் பேசி, பின்னர் நாள்பட ஆளை வைத்தே விரட்டுகிறார்‌. Observations broken into lines என்பார்கள். இந்த இடத்தில் ஜெயமோகன் சாமிநாதனின் அப்பாவை நலிந்தவர் என முன்னமே நிறுவி விடுகிறார். எந்தளவிற்கு நலிந்தவர் என்றால் ஆற்றாமையின் உச்சத்தில் முத்துசாமியின் அப்பாவின் காலில் விழும் அளவிற்கு நலிந்தவர். வல்லோனுக்கு வல்லோன் வையத்திலே உண்டு என்பது உண்மை என்றால் முத்துசாமியின் அப்பாவை விட வல்லோன் இருக்கத்தானே வேண்டும்! இந்த இடம் இந்தக் கதைக்கு எவ்வளவு அவசியமானது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள இலக்கிய பயிற்சி எதுவும் வேண்டியதில்லை. ஆனால், கதையின் முடிவில் ‘சின்ன மீனை பெரிய மீன் விழுங்கும். அந்தப் பெரிய மீனை அதைவிடப் பெரியமீன் விழுங்கும்’ என தரகர் சொல்வதாக கதையின் சாரத்தை நியாயப்படுத்தும் போது, ஜெயமோகன் கதையைப் பின்னிய விதத்தை புரிந்துகொள்ள  unbroken observations தேவையாக இருக்கிறது.

ஒரு சிறுகதையில், அதன் வாசகனால் கதையின் ஏதாவது ஒரு இடத்துடன் தன்னை, தன் வாழ்வை சம்பந்தப்படுத்தி பார்க்க முடியுமாக இருந்தால் அவனளவில் அந்தக் கதை சிறந்த கதைதான். ஆக சிறுகதை என்பது தனி ஒரு வாசிகனின் உள எழுச்சியுடனும் வீழ்ச்சியுடனும் எப்போதும் நெருக்கமான தொடர்புடையதே. ஒரு தேர்ந்த கதைசொல்லி நூல்பிடித்ததைப் போல கதையை நகர்த்தி, ஏதோ ஒரு இடத்தில், தான் சொல்ல வந்த கதையை வாசகனுடன் ஐக்கியப்படுத்திவிடுகிறான். ஜெயமோகனும் அப்படியான பல இடங்களை இந்தக் கதையில் வைத்திருக்கிறார்.

சாமிநாதனின் அப்பா இருந்த வரை கோர்ட்டு கேஸ் என அலைந்து திரிந்தார். எப்பாடுபட்டாவது தனக்கான சொத்தை அடைந்துவிட வேண்டும் என தான் உழைத்த பணத்தை எல்லாம் வக்கீலுக்கே செலவு செய்தார். சொத்து கைக்குக் கிடைக்காத ஏக்தத்துடனே போய்ச் சேர்ந்துவிட்டார். கிடைத்திருந்தாலும் ஆயிரமாண்டு இருந்து வாழ்ந்து ஆண்டு அனுபவிச்சிருப்பாரா என்ன! பின்னர் ஏன் இவ்வளவு போராட்டம்! ஏன் என்பதைத்தான் ஒரு தேர்ந்த எழுத்தாளன் கோடிட்டுக் காட்டுகிறான். மேலோட்டமாக மட்டுமே பார்த்து அப்படியே கடந்து போய்விடுகிற மனித வாழ்வின் சிக்கல்களை, இலக்கியம் கோடிட்டுக் காட்டி, அதை வேறோரு கோணத்தில் பார்க்கக் கற்றுத் தருகிறது. தனக்கான ஒன்றை தான் அனுபவிக்க முடியவில்லை என்பதைக் காட்டிலும் இன்னொரு வல்லான் அனுபவித்து தன் கண் முன்னாலேயே தன்னைவிட சிறப்பாக வாழ்கிறானே என்பதுதான் மனிதனை மிகத் துன்புறுத்துவதாக இருக்கிறது. இந்தக் கதையைப் பொறுத்த வரை சாமிநாதனின் தந்தை தனக்கான சொத்தை பெற போராடியதற்கான காரணங்களும், அவரது காலத்திற்குப் பிறகு சாமிநாதன் போராடியதற்குமான காரணங்களும் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் சாமிநாதன் சொல்வதாக வருகிற இந்த இடம் முக்கியமானது;

சொத்து போனதில்ல பெரிசு. வே, ஒரு இடி விழுந்து போயிருச்சுன்னா போட்டும்னு நினைப்போம். நம்ம தப்புன்னாலே போயிருச்சுன்னா நாலுநாள் அழுதிட்டு ஆறிருவோம்.நம்மகிட்ட ஒருத்தன் அடிச்சுப்பிடுங்கும்போது, அந்த அநீதியப்பாத்து ஒண்ணுமே செய்யமுடியாம நிக்குறது இருக்கு பாத்தியளா அதுதான் நரகம். அங்க மனுஷன் செத்திருதான். தான் வெறும் ஒடம்புதான், நாறிட்டிருக்கிற சவம்தான் அப்படின்னு தானே நெனச்சுக்குற ஒரு எடம் இருக்கே….

0000000000000000000000000

இந்தக் கதையில் பெண் கதாபாத்திரங்களின் நிலையும் குறிப்பிடப்பட வேண்டியவையே.

குறிப்பாக சாமிநாதனின் மனைவி மற்றும் முத்துசாமியின் அம்மாவின் பாத்திரங்கள். இரண்டு குடும்பங்களின் பொருளாதார நிலைகளைத் தாண்டி, வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் வீட்டில் தமது கணவன்மார்களால் நடத்தப்படும் விதத்தில் பெரிய மாறுதல்கள் இல்லை என்பது எவ்வளவு பெரிய சமூக உண்மை! எவ்வளவு பெரிய சமூக அவலம்! ஆண்களின் தன்மானப் பிரச்சினையில் பெண்கள் நிம்மதி இழக்க நேர்வதை எங்கனம் நியாயப்படுத்துவது!

முத்துசாமி தன் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நடந்த ஒரு உரையாடல் பற்றி இப்படிச் சொல்கிறார்;

எப்பவோ ஒருநாளைக்கு அம்மா,

“என்ன இருந்தாலும் அவங்களுக்குள்ளதுதானே, பாதியாவது குடுத்துருவோமே, இப்படியே மொத்தமா நாம கொண்டு போனா நல்லா இருக்கான்னு சொன்னா. திருணையில இருந்தவர் சீ சவத்துமூதீன்னு கத்திக்கிட்டு கையஓங்கி அடிக்க வந்திட்டாரு. எரணம்கெட்ட மூதி, உள்ள போடி .பொட்டப்புள்ள பேச்ச கேட்டு எவன் உருப்பட்டிருக்கான்?. இந்த வாசலுக்கு வந்து நின்னு பேசற பேச்செல்லாம் உங்க ஊர்ல வெச்சுக்கோ. இங்க பேசுன வெட்டிப் பொதச்சிருவேன்னு கத்தினார். அம்மா எதிர்ப்பேச்சு பேசி வழக்கம் இல்ல. அப்படியே உள்ள வந்துட்டா”

இதுவே சாமிநாதன் தன் மனைவிக்கு சொன்னது;

”நீ பொண்ணாப் பொறந்தவ, இதெல்லாம் ஒனக்கு புரியாது. இது ஆம்பள விஷயம். தன்மானம்தான் ஆம்பிளைக்கு பெரிசு”.

ஆக இந்தக் கதையில் பெண்கள் பிரச்சினையில் இருந்து ஒதுங்கி இருக்கவே நினைக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆணாதிக்க மனநிலை கொண்ட ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு இது. இன்றைக்கும் பல குடும்பங்களில் இதுதான் நிலைமை.

எல்லா நியாயங்களையும் தாண்டி, கதை சாமிநாதனை நல்லவனாகவும், முத்துசாமியை கெட்டவனாகவும் பிரதிபலிப்பதை தவிர்க்க முடியவில்லை. வாசிப்பில் இருந்து மேலெழுந்த எல்லாத் தளங்களிலும் இந்த நிலைமை தொடர்கிறது. மேலும் முத்துசாமியின் பெண் மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையை, தந்தை, பாட்டன் என முன்னோர் செய்த வினை அவர்களில் வந்து விடிந்தது எனக் கொள்வதா! தந்தையும் பாட்டனும் ஊரார் சொத்தை தின்றனர். உங்களுக்கு ஊட்டி உடம்பு வளர்த்தனர். அதனால் உங்களுக்கு இந்தப் பங்கு என முத்துசாமியின் பெண்களுக்கு நடந்த கொடுமை நியாயப்படுத்துதா!

மனிதன் தனது செயல்களுக்கான நியாயங்களை எப்படி எல்லாம் உருவாக்கிக் கொள்கிறான் என்பதையும் தெளிவாகவே விவரிக்கிறது இந்தக் கதை.

சாமிநாதனின் அப்பாவின் சொத்தை அபகரித்த முத்துசாமியின் அப்பா முத்துசாமியிடம் சொல்கிறார்;

நாம் ஒண்ணும் யோக்கியனோட காசைத் திருடல. கோயில்லயோ சத்திரத்துலயோ கொள்ள அடிக்கல. அயோக்கியன் காசு இப்படித்தான் போணுமின்னு சாஸ்திரம் இருக்கு. நம்ம கையில வந்திருக்குன்னா நமக்கு லட்சுமி அருளிருக்குன்னு அர்த்தம். நம்ம பிள்ளயளுக்கு நல்லது பண்ணுவோம். நாலு கோயில் குளத்துக்கு குடுப்போம் .நல்லநாள் கெட்டநாள்னா பத்து ஏழைகளுக்கு சோறு போடுவோம். நம்ம சாமிட்ட நாம சொல்லிக்கலாம்னு சொன்னார்”

‘சரி அந்தாள் திருடியதால் யோக்கியனில்லை. அவன் பணத்தை நாம திருடுறம். நாம என்ன யோக்கியமா? நம்ம பணத்த வேறோருவன் திருடுவான்ல’ என்று சொல்ல அப்போது முத்துசாமிக்கு மனதில்லை. ஏன்னா அது பணம், சொத்து. நம்ம கிட்டேயே இருக்கட்டும். அத வச்சி நம்ம ரெண்டு பொண்ணுங்களையும் நல்ல இடத்தில கட்டிக்கொடுக்கலாம்னு நினைச்சார். அமைதியாக இருந்து விடுகிறார்.

மற்றவரின் சொத்தின் மீது ஆசை இருப்பவர்கள் தங்களையும் தங்கள் சந்ததிகளையும் பாதுகாத்துக் கொள்ளட்டும்!

ஆனால் எல்லா நியாயங்களையும் தாண்டி, ஜெயமோகன் இந்தக் கதையில் இரண்டு பிரதான பாத்திரங்களுக்கிடையில் ஒரு நடுநிலைத் தன்மையை உருவாக்க நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. அது பெரிதாக வெற்றியளிக்கவில்லை. அது சாத்தியமுமில்லை எனத்தான் தோன்றுகிறது. முன்னர் சொன்னதைப் போல கதையில் சாமிநாதன்தான் நல்லவன் என்கிற எண்ணத்தை மாற்றவே முடியவில்லை. மேலும் முத்துசாமியின் பெண்பிள்ளைகளை ரௌடி கடத்திக்கொண்டு போவதாக வருகிற இடங்களை வாசிக்கும் போது பல தமிழ் சினிமாக்கள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை‌. நாற்பது பேர் சேர்ந்து அந்தப் பெண்களை நாசம் செய்வதும் அதற்குப் பிறகான அந்தப் பெண்களின் நடத்தையும் மஹாநதி திரைப்படத்தை ஞாபகப் படுத்தியது‌.

இந்தக் கதையில் ஜெயமோகன் சில அற்புதமான தருணங்களை எழுதி இருக்கிறார்.

வாழ்க்கை சாக்கடை போல ஒரே இடத்தில் நின்று விடுவதில்லை. அது ஏற்ற இறக்கங்களில் ஊர்ந்து போகிற ஒரு காட்டாறு சருகுகளை அடித்துச் செல்வது போல மனிதனை அடித்துச் செல்கிறது‌. 

சாமிநாதனின் அப்பா எந்தக் கடைத் தொகுதியில் வைத்து முத்துசாமியின் அப்பாவின் காலில் விழுந்தாரோ, அதே இடத்தில் அதே காரணத்திற்காக முத்துசாமியை மற்றவர்களின் காலில் விழுந்து கதறி வைக்கிறது இந்த வாழ்க்கை.

ரயிலில் வைத்து முத்துசாமி கதறி அழுத போது அங்கே இருந்த, தமிழ் தெரியாத மார்வாடி தலையில் ‘காந்தி’ப் படம் போட்ட குல்லா இருக்கிறது.

போலவே, குற்ற உணர்ச்சியில், ரயிலில் முத்துசாமிக்கு முன்னால் இருக்கும் சாமிநாதனுக்கு, தன்னுடைய இட்லிப் பார்சலை பிரித்து சாப்பிடுவதற்கும் ஒரு நியாயம் வேண்டி இருக்கிறது. உண்மையை மறைத்துத்தான் தன் மகளை இன்னொருத்தனுக்கு கட்டிக்கொடுக்கிறார் முத்துசாமி எனத் தெரியும் வரை சாமிநாதனை, தான் முத்துசாமி குடும்பத்திற்கு தவறிழைத்துவிட்டோம் என்கிற குற்ற உணர்வு அழுத்துகிறது. சாப்பிட மனமே இல்லாமல் அமர்ந்திருக்கிறார். முத்துசாமியும் நல்லவனில்லை எனத் தெரிகிற போது நிம்மதி கொள்கிறார். முத்துசாமியின் அப்பாக்கு சாமிநாதனின் குடும்பத்தை ஏமாற்ற   ஒரு நியாயம் இருந்ததைப் போலவே சாமிநாதனுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது. சாமிநாதனே சொல்வதைப் போல “அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம்”. சாமிநாதன் இட்லி பொட்டலத்தை பிரித்து சாப்பிட ஆரம்பிப்பதுடன் கதை முடிகிறது.

தேர்ந்த இலக்கியவாதிகள் மேடையில் நிற்கும்  மந்திரவாதிகள் போல தங்களது மாயாஜாலத்தை எப்போதும் நிகழ்த்திக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கீழே இருக்கும் நாங்கள் எப்போதும் அவர்களை வியந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம்!

உமையாழ்

உமையாழ் – ஐக்கிய இராச்சியம்

(Visited 129 times, 1 visits today)
 

2 thoughts on “ஜெயமோகன் எனும் மந்திரவாதி ரெயிலில் சொன்ன கதை! -உமையாழ்”

Comments are closed.