காது-சிறுகதை-அகமது ஃபைசல்

 

அகமது ஃபைசல்“கப்பல் நீளத்தில் ஒரு பறவையும், நீரின் நிறத்தில் ஒரு வானமும் என் கனவில் வந்தன. உயர்ந்து கிளைகள் பரப்பியிருக்கும் மண்ணும், கடலில் ஆனந்தமாகத்  துள்ளிக் குதிக்கும் ஒரு எறும்பும்  என் கனவில் மீண்டும் வந்தன”.

என்று சொல்லி தேநீரை மிடறு   மிடறாக  அருந்திக்கொண்டு ஆரம்பித்தான்.

அப்போதுதான் அவள் மார்பிள் தின்ணையில் கிடந்த வேப்ப மரத்தின் இலை ஒன்றைக் கண்டாள். அதுவும் உடைந்து சிதறிய இளம் மஞ்சள் நிற பலூன் துண்டு போன்றுதான் கிடந்தது. அவளுக்குத் தூக்குவதற்கு இரண்டு விரல்கள் தாராளமாக இருந்தன.

அந்த இலை கடைசியாக கொஞ்சம் துடித்தாற்போல் இருந்தது.  அது மரத்தின் முதல் இலையாகவும் இருக்கலாம். மார்பிள் தின்ணையின் குளுமை அவள் பாதங்களைப் படர்ந்து பிடித்துக்கொள்கிறது. ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் தாய்ப் பசுவின் முலையில் இருந்து பிரிந்த கன்றின் வாய் போன்று சுருங்கி விரிந்தது மார்பிள்.

நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்தது. இன்னேரம் வாசல் மண்ணிலிருந்து வருகிற ஒரு வகை சத்தம்  கேட்டிருக்கிறீர்களா? அவள் கேட்கத்தொடங்கினாள்.

இரு விரல்களுக்கும் இடையில் தொங்கிக்கொண்டிருந்த இலையை மரத்தின் கீழே விட்டுவிட்டு அப்படியே வாசலில் குந்தியிருந்து, தலையை வலது பக்கம் சாய்த்து, காதை நிலத்திற்கு காண்பித்துக்  காது கீழே விழுந்துவிடாது என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருப்பதுபோல் அவளுக்கும் இருந்தது. அந்த நம்பிக்கையுடன் நிலத்தில் இருந்து வரும் அந்த சத்தத்தை கேட்டு ரசிக்கிறாள். அந்த சத்தம் நெல் மூட்டையை அவிழ்த்து கீழே சாய்த்துவிட்டதும் வருகிற அதே சத்தமாகக் கூட இருக்கலாம்.

‘அவளுக்குத்தான் கடந்த சில மாதங்களாக இரு காதும் கேட்காமல் போயிட்டே. பார்த்த டாக்டரெல்லாம் அவள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறாள் என்று சொல்லிவிட்டார்கள். வேறென்ன நடந்தது இவளுக்கு’? என்று அவளைப் பார்த்த கணத்திலே மனதால் மட்டும் பேசியபடி அவள் குந்தியிருக்கும் காட்சியை சில வினாடிகளில் கண்களால் வரைந்துகொண்டான் அவன்.

அவன் கண்களின் ஓரமெங்கும் வேதனை படிந்திருந்தது. ஆனாலும் அவன் கண்கள் அந்தக் காட்சியை ஒழுக்கமாகவே வரைந்துள்ளது எனலாம். அவள் உடம்பில் ஒரு ஜங்கியைத் தவிர வேறெதுவுமில்லை. வேப்ப மர இலைகளில் இருந்து அவள் முதுகில் வந்து விழும் மழைத் துளிகளையும் அவன் கண்கள் வரைந்ததோ என்னவோ! அவன் கண்களின் ஓரம் சிறிது நீர் மிச்சமிருப்பது போல தெரிந்தது.

கண்ட கனவைப் பற்றி இனி எப்படிச் சொல்வது, எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியாமல் அந்த அதிகாலையில் தன்னைப் பார்க்க வந்த நண்பனுடன் சில நிமிடம் அமைதியாக இருந்தான்.

அவனுடைய கனவில் வந்த கப்பல் நீளப்பறவை, நீரின் நிறத்திலான வானம், உயர்ந்து கிளைகள் பரப்பிய மண் எல்லாம் அந்த நிமிடத்திற்குள் மறைந்து போய்விட்டன. அவன் முகமும் அப்படியான ஒரு சோர்வில்தான் சுருங்கியிருந்தது.

தொடர்ந்து கதிரையில் சௌகரிகமாக இருக்க முடியாமல் அவன் நண்பன் இடுப்பை அசைத்துக்கொள்வதும், காலைப் பொழுதின் அமைதியும், வேப்பந்துளிர் போன்று பளிச்சென்று இருக்கும் சிறு வெளிச்சமும், விட்டு விட்டு கேட்கும் பறவைகளின் சத்தமும் அந்த வாசலில் வியாபித்திருந்தது .

“என்னமோ கனவு சொல்ல வந்தாயே சொல்லன்” என்றான் முஜீப்.

நிலத்தில் விழுந்து படுத்துக் கிடக்கும் அத்தனை இலைகளும் அவளைப் போலவே காது கேளாதவைகள்தான். என்று மனதைத் தேற்றியவன்போல் பெருமூச்சு விட்டதைத் தவிர அவன் கனவைச் சென்ன பாடில்லை.

அவனால் தேநீரை முழுவதுமாக குடித்துத் தீர்க்க முடியவில்லை. அவன் நண்பனைப் பார்த்து “தேநீரக் குடி. நல்ல இதமான பொழுதுவேற, எங்க உம்மாட கைப்பக்குவத்தில தேநீர் போட இந்த ஏரியாவுல ஆளே இல்லன்னா பாரேன். இல்லயா ஓமா நான் சொல்றது?” என்றான்.

“ம்…நல்ல சுவையா இருக்குடா. நாக்குல இன்டைக்கெல்லாம் நின்று விளையாடும்” என்று பதில் சொன்ன முஜீபின் கண்கள் அவள் குந்தியிருக்கும் திசையை நாடின.

“மேசையிலிருந்து கரண்டி கீழே விழுந்தாலும் இப்படித்தான் காதைக் கிட்டக் கொண்டுபோய்த்தான் கேட்பாள். அவள் ஒரு விசித்திரமான ரசனைக்காரி” என்று சொன்னான்.

நண்பன் தனக்கு முன்னாடி முந்திக்கொண்டு ஏதும் கேட்டு தொலைத்துவிடுவானோ என்ற பயத்தில்.

திரும்பத் திரும்ப அந்த மரத்தின் கீழ் பழுத்த இலைகள் விழுந்துகொண்டிருந்தன. அப்போதும் அந்த இலைகள் உடைந்த மஞ்சள் நிற பலூன் துண்டுகள் போலவே இருந்தன.

“அவள் ஒரு விசித்திரமானவள். தான் படிக்கும் புத்தகங்களை கதிரையின் கீழேதான் வைத்து பாதுகாப்பாள். தெரியுமா? நம்பிக்க இல்லென்னா இந்த ஜன்னல் வழியா பாரேன் அவள்ட அறைய”. என்று அவளின் விசித்திரங்களை நண்பனுக்கு மீண்டும் ஒப்புவித்தான் அவன்.

அந்த ஜன்னல் ஆடை எதுவும் இல்லாமல் வயதானவரின் உடல் போன்று இருந்தது. நண்பன் சொல்லிவிட்டான் என்பதற்காக முஜீப் கொஞ்சம் கூச்சத்தோடு எட்டிப் பார்த்தான்.

“நஜீம்..பகலைக்கு இருந்து சாப்பிட்டுப் போகச் சொல்லு” என்ற மைமுனாவின் குரல் ஜன்னல் வழியாக நசுங்காமல கம்பிகளிலே கொஞ்சமும் உரசாமல் வெளியே வந்து முஜீபின் காதுகளைத் துளைத்தது.

ஆமை வெளியே காட்டிய தலையை உள்ளிழுப்பது போல் இழுத்து வந்து கதிரையில் அமர்ந்துகொண்டான்.

“கட்டாயம் இருந்து சாப்பிட்டுத்தான் போற உம்மா சொல்லிட்டா” என்றான் அவன் உரிமையோடு.

கத்தரிக்காயின் குமிழ்களை தும்புத் தடியினால் குசினிப் பக்கமாக வெளியே தள்ளிக்கொண்டுவந்து விட்டாள் மைமுனா. தன் மகனைக் கூப்பிட்ட சத்தத்தின் இரைச்சல் அவள் வாயில் இரு வினாடிகள் இருந்துவிட்டுத்தான் போனது.

இதற்கு இடையில் சுத்தம் செய்யப்பட்ட மாட்டு இறைச்சியின் கழிவுத் தோல் ஒரு துண்டை அந்தக்  கறுப்பு நிற சேவல் கொத்திக்கொண்டு மெல்ல நடந்து சென்றதையும் இலேசாகப் பார்த்துக்கொண்டன அவன் கண்கள்.

வாசலில் குந்தியிருந்தவள் ஒரு புதிய செடி துளிர் விடுவதுபோல் மெதுவாகவும், அழகாகவும் எழுந்து நிமிர்ந்து நின்று  தான் வெளியே வரும்போது பின்னால் கூடவே வந்த பாதங்களை திரும்பவும் உள்ளே கூட்டிச் செல்வதுபோல் வாசலில் பதிந்திருந்த தன் பாதங்கள் மீது மீண்டும் கால்களை வைத்து  நடந்து உள்ளே சென்றாள்.

காற்று குளுமையாக வீசியது.

சூரியன் தென்படவில்லை. ஆனாலும் அது காலைப் பொழுதுதான் என எல்லோரும் நம்பி வெளியே வந்து தங்கள் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர். வீதியில் சைக்கிளில் ஆட்கள் செல்லும் சத்தம் கேட்கத் தொடங்கியது.

“இரவு நல்ல மழ பெஞ்சி தள்ளித்தானிருக்கு. வெதச்ச வயலுக்கு இந்த மழதான் வேணும். சரியான நேரத்திலதான் பெஞ்சிருக்கு” என்ற குரலையும் கூட்டிக்கொண்டு செல்கின்றது சைக்கிள்.

“இது சொந்த வயல்காரனாக இருக்க முடியாது கூலிக்கு நிற்பவனால்தான் இப்படி சந்தோசமடைய முடியும்” என்றான் அவன்.

“பேசிக்கிட்டே இந்த ஜவ்வரிசிக் கஞ்சிய குடிங்க” என்று இரண்டு கிளாஸ் ஜவ்வரிசிக் கஞ்சியை நீட்டினாள் மைமுனா. அதிலிருந்து ஏலக்காய் வாசமும் வெளியேறிக் கொண்டிருந்தது. இப்படி சுடச் சுட கஞ்சியை கையில் வாங்கிய அடுத்த கணமே யாரும் குடிப்பதற்கு முயற்சிக்கமாட்டார்கள். அவ்வாறே அவனும், அவன் நண்பனும் முன்னால் இருந்த சிறு மேசை மீது கஞ்சிக்கிளாஸை வைத்துவிட்டு ஐந்தோ அல்லது பத்தோ நொடிகளாக இருக்கலாம் காத்திருந்துவிட்டு கஞ்சியைக் குடிக்கத் தொடங்கினார்கள். “ஆய்……..” என்ற மெல்லிய சத்தம். மேல் உதட்டைச் சுட்டுவிட்டது. முஜீப் உதட்டை பிடித்தபடி கஞ்சிக் கிளாஸை மேசை மீது வைத்துவிட்டான்.

“ஒரு கரண்டி கொண்டுவாங்க உம்மோ” என்று சத்தம் வைத்தான் அவன்.

கவனிப்பு என்னமோ அமோகமாகத்தான் இருக்கு. தான் வந்த விசயத்தைச வாய் திறந்து சொன்னால் என்ன சொல்வானோ என்ற ஏக்கமும் கலந்தே முஜீப் முகம் காட்சியளித்தது.

“சரி முஜீப் நீ வந்த விசயத்த சொல்லாமலே இருக்கிறாயே. சொல்லன்டப்பா” என்றான் அவன்.

வந்த விசயத்தை சொல்லலாமா? இப்பவே சொல்லலாமா? இல்லை ஜவ்வரிசி கஞ்சியை குடித்துவிட்டுச் சொல்லலாம் என்ற முடிவுக்கு அவனால் உடனே வர இயலவில்லை. பணம் இல்லை என்று கையை விரித்துவிட்டால் ருசியான இந்த ஜவ்வரிசிக் கஞ்சை குடிக்க மனம் இடங்கொடுக்காதே. என்ற எண்ணமும் முஜீபுக்கு தோன்றிற்று. சொல்வதற்குத் தயாரானவன் போன்று வாயை உள்ளங் கையினால் துடைத்துக்கொண்டான். ஆனால் சொல்லவில்லை.

அவனுக்குத்தான் தெரியும் அசராங்க உத்தியோகம் என்பதே ஒரு யோகம் மாதிரித்தானே. எத்தனை மாதங்கள் எத்தனை இடங்களில் எல்லாம் ஏறி இறங்கி கடைசியில் இரண்டு லட்சம் இருந்தால்தான் அந்த யோகமும் சாத்தியமாகும் என்ற நிலையில் ஒரு லட்சம் புரட்டி மாண்ட கதையை நினைக்கவே முடியாமல்போய் பால்ய சினேகிதன் வசதிக்காரனாக இருப்பதால் நம்பிக்கையுடன் வந்து கதிரையின் எரிச்சலையும் பெரிசு படுத்தாமல் உட்கார்ந்திருக்கிறான். அந்தக் கதிரை பிள்ளைகள் விளையாடிவிட்டு அப்படியே விட்டதால் கொஞ்சம் மழையிலும் நனைந்திருந்தது.

ஜவ்வரிசிக் கஞ்சியை குடித்து முடித்ததும் வந்த விசயத்தைச் சொல்வதா? இல்லை பகல் சாப்பாட்டையும் முடித்துவிட்டுச் சொல்வதா? இல்லை ஜவ்வரிசிக் கஞ்சோடு ஆரம்பித்துவிடலாம். சில நேரம் கேட்கிற பணம் கிடைக்காமல் போனால்.. பகல் சாப்பாடு ஒரு பெரிய கடனாக வயிற்றுக்குள் கனக்குமே. என்றெல்லாம் மனதோடு பேசிக்கொண்டுதான் அந்த ஜவ்வரிசிக் கஞ்சியை குடித்து முடித்தான். கிளாஸின் உட்புறம் கொஞ்சம் பாலுடன் ஜவ்வரிசியும் ஒட்டிக்கொண்டிருந்தது. அப்படியே எதிரில் இருந்த சிறு மேசை மீது கிளாஸை வைத்து கரண்டியையும் அதன் உள்ளே போட்டான். “டிங்” என்ற சிறிய சத்தம் மட்டும் வெளியே வந்தது.

அவள் ஊதா நிற பாவாடை அணிந்து அந்த சத்தத்தின் பின்னால் ஓடி வந்தவள்போல் எதிரே நின்றாள்.

“என்ற தங்கச்சி எட்டு வயதுதான் ஆகுது”.

என்று செல்லமாய் தன் பக்கம் கையைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்டான் அவன்.

திரும்பவும் ஒரு தரம் அந்தக் கரண்டியை எடுத்து கிளாஸில் தட்டிவிட்டு வீட்டுக்குள் ஓடிச் சென்றாள்.

அவளின் முதுகைப் பார்த்த மறு கணம் முகத்தை அவன் பக்கம் திருப்பி,

“எனக்கு கடனா ஒரு லெட்சம் காசி வேணும். மறுக்காம தந்திடு. ஒரு க்ளாக் வேல கெடக்கிறாப்போல இருக்கு அதுக்கு ரெண்டு லெச்சம் காசி கேக்குறானுகள் ஒரு லெட்சம் இருக்கி இன்னொரு லெட்சம் வேணும். நம்பிக்கையோட வந்திருக்கன்” என்று சொல்லி முடிக்கும்போது,

“ஒரு லெட்சமா? அம்பட்டுக் காசிக்கி எங்கடாப்பா நாங்க போற?”

என்று மைமுனாவின் குரல் உள்ளிருந்து வெளியேறி வந்தது. அப்படி ஒரு விதமான பாம்புக் காது அவளுடையது. அந்த காதோரமாக விழுந்து கிடந்த தலை முடியில் சில தேங்காய்ப் பூக்களும் தொங்கிக்கொண்டிருந்தன.

“டியே மகள் இங்க வா. இவளொருத்தி காதும் கேக்காம என்னதான் செய்யப்போறாளோ என்ற றப்பே..”

என்று வெறுப்பை காண்பித்தாற்போல் பேசினாள் மைமுனா.

ஒரு மீன் தொட்டியில் இருக்கும் மீனுக்கு உண்டான சுதந்திரத்தைப் பெற்றவள் போல் மீண்டும் வந்து முஜீப் முகத்தைப் பார்த்து சிறு புன்னகையை பூத்துவிட்டு திரும்பிச் சென்றாள் அவள்.

இதற்கு மேல் எப்படி கடன் கேட்பது? பிச்சைக்காரன் மாதிரியா? அது இந்த ஜென்மத்திலும் வராதே. இது வரை அழகாகத் தெரிந்த ஈர வாசல் முஜீப் கண்களுக்கு வறண்டுபோய்த் தெரிகிறது. கிடைக்கவிருந்த க்கிளாக் வேலைக்கு யாரோ முந்திக்கொணடு பணம் கட்டுவதுபோலும்  தெரிகிறது.

முஜீப் அமைதியில் உறைந்துவிட்டான்.

“சாப்பாடு முடியப்போகுது இருந்து சாப்பிட்டு போகச் சொல்லு” என்றாள் மைமுனா.

சாப்பிடச் சொல்கிறாளா? இல்லை எழுந்து போடா  என்கிறாளா இந்த மனிசி. என்ற சொற்களை மனதுள் போட்டு இடித்துக்கொண்டான். அப்போதுதான் காது வெடிக்கும் சத்தம் கேட்டது.

இரு காதுகளையும் கைகளால் பொத்தியபடி மலைத்துப்போய் இருந்தான் நஜீம்.

நாய்க்கு யாரோ குறி பார்த்து எறிந்திருக்க வேண்டும். அவ்வளவு நேர்த்தியாக  இருந்தது அந்த சத்தம்.

சத்தம் சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும் அதை காதுதான் கேட்டாக வேண்டும். தொன்று தொட்டு இருக்கும் இந்த பழக்கத்தை மாற்ற யாராலும் முடியாது.

வாசல் கேற்றை தலையால் தள்ளித் திறந்துகொண்டு நுழைந்தது ஒரு சாதிக் கலர் நாய். புடவைக் கடையில் பெண்கள் முகம் சுளிக்கும் கலர் அது.

தொடங்கிற்று மைமுனாவின் வசை.

நாய்க்கு நல்ல காது இருந்த படியால் வந்த வழியே திரும்பிப் போய்விட்டது. அந்த நாயை விடக் கேவலமாக குந்திக்கிட்டு இருக்கோமே என்று அனுக்கு  ரோசம் உடைத்துக்கொண்டு வந்தது.

“சரி நஜீம் நான் வாரன்” என்று எழுந்திருக்க குண்டியைத் தூக்கும்போது அவன் மடியில் ஒரு புத்தகத்தை வைத்துவிட்டுச் சென்றாள் அவள். அது வரைக்கும் காதுகளிலிருந்து கைகளை எடுக்காமலிருந்த நஜீம் திடீரென் கையை எடுத்து அவன் வலது கையில் தட்டி

“இரு இரு கொஞ்சம் இரு” என்றான்.

அப்போதுதான் வெளித்தது வானம். நஜீம் எப்போதும் பஞ்சாபிக்காரன் போல் தலையில் நேர்த்தியாக கட்டியிருப்பானே ஒரு துணியால் தலப்பாக்கட்டு அது எதுக்கு என்ற இரகசிய வானம் வெளித்தது.

அவன் இடது பக்க காது சூம்பி, சுருங்கி, பல மடிப்புகளுடன் காது ஓட்டை தெரியாத அளவுக்கு இருந்தது. இந்த விசயம் வீட்டைத் தவிர வெளியே யாருக்கும் தெரியாமல் இத்தனை வருடங்களும் பொத்தி பாதுகாத்து வந்திருந்தானே.

எப்போதும் காலையில் எழுந்தால் வீட்டில் ஒரு பஞ்சாபிக்காரன் இருப்பதைப் பார்க்கலாமே. இன்றைக்கென்று எப்படியோ மறந்துவிட்டான்.

குழந்தையாக இருக்கும்போது மைமுனாதான் காது மறையும் படி தொப்பி இடத்தொடங்கினாள். பிறகு பிறகுதான் இந்த பஞ்சாபிக்கட்டை ஆரம்பித்தது விட்டாள்.

உண்மை எப்போதாவது வெளிப்படும். பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் இல்லையா அதுமாதிரி ஆயிற்று இன்று.

பொசு பொசுவென்ற ஈரம் குண்டியில் நெளிய ஒன்றும் தெரியாதவன்போல் புத்தகத்தை புரட்டி படிக்கத் தொடங்கினான் முஜீப்.

“சரி நீ கேட்ட காச நான் தாரன். என்ற காது இப்படி சூம்பி இருக்கிற விசயத்த யாருக்கிட்டயும் சொல்லி வச்சிடாத முஜீப் பிளீஸ்” என்று கதிரையை இன்னும் கொஞ்சம் அருகில் இழுத்துப்போட்டுக்கொண்டு அவன் வலது கையை அழுத்தி அழுத்திக்கொண்டிருந்தான் அவன்.

முஜீப் சந்தோசப்பட்டான். இல்லை. எப்படி சந்தோசப்பட முடியும்?

இவன் பிறந்ததிலிருந்து தலைக்கு தொப்பி இட்டு, காது இரண்டையும் மறைத்து வந்த மைமுனா இவனுக்கு ஐந்து வயதானதும் பஞ்சாபி தலைப்பாக்கட்டை நேர்த்தியாக கட்ட ஆரம்பித்ததிலிருந்து ஊருக்குள்ளும் ஒரு மாதிரி பேச்சு தொடங்கியிருந்தது.

ஒரு நாள்…

“மைமுனா ரெண்டு வருசம் சவுதியில இருந்துட்டு வந்தாள் எனக்கென்னமோ அங்கதான் ஒரு பஞ்சாபிக்காரனோட தொடர்பா இருந்திருப்பாள் அவன்ட புள்ளதானோ இது.. இல்லாட்டி எப்புடி இந்த தலப்பக்கட்டு. ஊருல இல்லாத ஒரு தலப்பக்கட்டு”

என்று மைமுனாவின் காதில் விழ ஒருத்தி கதைத்துவிட்டாள். எடுத்துப் பிடித்தாள் பாரு வாசல் கூட்டும் ஈக்குத் தடி. சோப்பு சோப்பென சோப்பிவிட்டாள். அன்றோடு ஊரின் வாய் அடைத்தேபோயிட்டு.

இப்போது நஜீமுக்கு முப்பத்தொரு வயதாகிறது. அன்று மூடிய ஊர் வாய் இன்னும்  மூடியேதான் இருக்கு.

“என்னை நீ அப்படி எட போடாத மனசு தாங்குதில்ல. நீ வேற என்னமோ சொல்ற. என்ன நம்பு நஜீம். இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. நீ இத பெரிசா நினைக்காத விடு விடு”  என்று அவனை ஆற்றுப்படுத்தினான் முஜீப்.

உடனே வீட்டுக்குள் ஓடிப்போய் சில நிமிடங்கள் கழித்து  ஒரு அசல் பஞ்சாபி மாதிரி வெளியே வந்தான் அவன்.

“சரி நஜீம் நான் போய் வாரன்” என்று சொல்லி விடைபெறப்போனவன் கையில் இருந்த புத்தகத்தை ஓடி வந்து பிடித்து இழுத்தவாறு “என்ற புக்க கொடுங்க அங்கிள்” என்றாள் அவள்.

அதற்கு அவன் “இல்லை இது என்ற புக் தரமாட்டேன் போங்க” என்று மறுத்தான்.

“இல்லை தாங்க இது என்ற புக்”

“இல்லை தர மாட்டேன் என்ற புக்”

“இல்ல என்ற புக்” என்று அழ ஆரம்பித்தாள் அவள்.

“சரி உங்க பெயரைச் சொல்லுங்க” என்றான்

“சுல்பிக்கா” என்றாள் அவள்.

நஜீம் அதிர்ந்து போய் பார்த்துக்கொண்டு

நின்றவன்;

“இவளுக்கு காது கேக்குதா? அப்ப ஏன் இத்தன நாளா காது கேக்காம இருந்தாள்”

என்று சொல்லிச் சொல்லி தன் சந்தோசத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினான்.

“அதொன்றுமில்ல நஜீம் இந்த புக்ல வார கதை ஒன்றில இருக்கிற சிறுமிக் கேரெக்டர் காது கேட்காத கேரெக்டர் சரியா. கதைய படிச்ச உன்ட தங்கச்சி அது போலவே தானும் செய்து பாத்திருக்கிறாள். அவ்வளவுதான். சின்ன பிள்ளைகளுக்கு நல்ல புத்திமதி சொல்ற கத புத்தகத்த வாங்கி கொடு. இது நீங்க விட்ட பிழ. இப்ப எல்லாம் சரியாகியிட்டு விடு. என்று சொல்லிவிட்டு

“சுல்பிக்கா செல்லம் நாளைக்கு உங்களுக்கு நான் புதிய புக் வாங்கிட்டு வாரன் சரியா இந்த புக் படிச்சது போதும் எனக்குத் தாங்க” என்றான் முஜீப்.

அவளும் தலையை அழுதுகொண்டு மெதுவாக அசைத்தாள்.

“சரி முஜீப் சாப்புடுவம் இரு” என்றான் தோளில் கையைப் போட்டுக்கொண்டு.

“இல்ல பிறகு பார்ப்போம் நான் போய் வாரன்டா”

“அப்ப நீ சாப்புடல்ல”

“இன்னொரு டைம்ல சாப்புடுறன்”

“சரி என்ற தங்கச்சிட காது கேக்குற சந்தோசத்துல இருக்கேன்.  இரவைக்கு நான் உன்ற வீட்ட காசோட வாரன் சரியா கவலய விடு. சந்தோசமா போய்ட்டு வா” என்று வழியனுப்பிய கையோடு

“உம்மா..உம்மோ  ஓ… சுல்பிக்காட காது சரியாயிட்டு நல்லா கேக்குது” என்று ஆரவாரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அழுதுகொண்டு வீட்டுக்குள் போனவள் கதிரையின் கீழே இருந்த தனது மற்றொரு புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினாள்.

அகமது ஃபைசல்-இலங்கை

அகமது ஃபைசல்

(Visited 76 times, 1 visits today)