திறப்பு-சிறுகதை- அகமது ஃபைசல்

அகமது ஃபைசல்

வாசிக்கத் தொடங்கினேன் எதிரில் வானொலி சத்தம் போட்டபடி இருந்தது. சத்தத்தை நிறுத்தினேன். சுவரில் பதித்திருந்த மின் விளக்குகளின் பொத்தான்களை கீழ் நோக்கி அழுத்தினாள் ஆசிபா. விளக்குகள் எரிந்தன. ஆனால் அது இரவல்ல. வெளிச்சத்தைப் பார்த்து எதையோ கேட்க நினைத்தவள் போன்று நின்றாள். எரியும்போது மின் விளக்குகள் சத்தம் போடுமோ என நினைத்து அதை முந்திக்கொண்டு நான் சத்தமாக வாசித்தேன் எனக்கு அந்தக் குதிரையை பரிசாகத் தந்தவரின் பெயரை. அவரது பெயரில் ஒரு எழுத்து அடி நாக்கில் இருந்து கொண்டு மிருதுவாக வெளியே வந்தது ஒரு மண் புழுவைப்போல.

“பருந்திற்கும் மேகத்திற்கும் என்ன ரகசியம் வேண்டியிருக்கு” என்று வானத்தில் என்றோ பார்த்த ஒரு காட்சியை நினைத்து என் முன்னே நின்று கோபப்பட்டாள் ஆசிபா. நான் அவர் பெயரை ஒரு தடவைக்கு மேல் வாசிக்காமல் நிறுத்திக்கொண்டேன். ஒரு தடவை வாசித்தாலே புரிந்துவிடும் சில புத்தகங்கள் போல இருந்தது அவரது பெயர்.

கோபம் தணிய, ஆசிபா வாசலுக்குப் போய் பறவையின் கூட்டைத் திறந்தாள். அவளுக்கு விருப்பமான, முதுகில் மஞ்சள் நிற கோடுகள் போடப்பட்ட கிளியை கையால் பிடித்து அதன் அலகைத் திறந்தாள். அதன் அலகு மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் விரிந்தது. அந்த கிளிக் கூட்டிற்கு இரு பக்கமும் அழகான சிறிய ஜன்னல்களும் இருந்தன. அந்த ஜன்னல் பக்கமாக நின்று  பறவை சிறகை விரிக்கும். அப்போது அந்த ஜன்னலுக்கு திரைச் சீலை விரித்தாற்போல் சிறகுகள் சில நேரங்களில் என்னை ஏமாற்றும்.

அந்த ஜன்னல்கள் கிளியை விட சற்று பெரிது என்றும் சொல்ல முடியாது, சிறிது என்றும் நம்ப முடியாது. அதற்கு திறப்பு இல்லை. விரலினால் பிடித்து மேல் நோக்கி இழுத்துவிட்டால் கிளிகளுக்கு விடுதலை கிடைத்தாற்போல் இருக்கும். ஆனால் அந்தக் கிளிகள் ஜன்னல் வழியாக வெளியே வர முயற்சிப்பதுமில்லை. அது வேண்டி நிற்பது நிரந்தர விடுதலையைத்தான். மாறாக தப்பி ஓடுவதையல்ல என்பதை ஆசிபா எப்போது புரிந்துகொள்வாளோ! அது இரண்டும் காதல் கிளிகள். love birds.

அன்று அந்த கிளிகளை வாங்குவதற்கு சந்தைக்குப் போகும்  வழியில்; அவளுக்கு ஏழு வயது என்ற என் நினைப்பு என்னை  முந்திக்கொண்டு சந்தைக்குச் சென்றது.

இப்போது அவளின் வயது என்ன?

அவளின் இரு கால்களையும் பெரிய கண்கள் உள்ள சங்கிலியால் சுற்றி ஒரு நடுத்தரமான, செம்பு நிற பூட்டை போட்டு பூட்டிவிட்டார்கள். அந்த பூட்டின் திறப்பை என்னிடம் கொடுத்திருந்தார்கள். இப்போது அவளுக்கு வயது எத்தனை என்று நான் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதில்லை. யாரோ கண்டுபிடித்து பதின்மூன்று என்று சொன்னார்கள்.

திறப்பு என் கையில், பூட்டு அவள் காலில். ஆஸ்பத்திரியில் இருந்து அவர்கள் வருகிறார்கள் என்றால் மாத்திரம் பூட்டுவேன். ஆசிபாவின் உடல் நிலையை அவர்கள் சோதித்துவிட்டுச் சென்ற மாத்திரத்தில் திறந்து விடுவேன். அவள் சில நேரம் என் தலை மயிரைப் பிடித்து இழுத்து விளையாடுவாள். நான் மாடு மாதிரி நடந்து கத்துவேன்.

ஆசிபாவுக்கு அந்தக் குதிரையின் முதுகில்; அடர்த்தியும், அடர்த்தி இல்லாமலும் இருக்கும் இள மஞ்சள் உரோமங்களை மிகவும் பிடிக்கும். தொட்டுப் பார்த்த நொடியே “என்ன உரோமங்கள். என்ன மென்மை. மொறு மொறுவென்று காதுக்கு கேட்காமல் கேட்கும் சத்தம் வருதே” என்பாள். அந்தக் குதிரையை பரிசாகத் தந்தவர் அவர்தான். அவரென்றால்? அவள் தந்தை.

அவள் புல்லாங்குழலை உதட்டில் வைத்து  மெதுவாக வாசிக்கத் தொடங்கினாள். குதிரை அந்த அறையின்  ஜன்னல் வழியாக எப்படி வெளியேறிச் சென்றது என வியக்கும்படி ஜன்னலுக்கு வெளியே புல் மேய்ந்துகொண்டிருந்தது. குதிரையின் வாய் பட்ட புல் நுனியில் இருந்து சின்ன, மென்மையான சிறகுகள் கொண்ட அந்துப் பூச்சிபோல அவை பறந்து பக்கத்தில் உள்ள புல் நுனியில் உட்கார்ந்தன. அந்தக் காட்சியை திறந்து கிடக்கும் ஜன்னல் வழியாக பார்த்தால் மனதுக்கு இதமாக இருக்கும். ஆனால் அதைப் பார்க்க அவள் உம்மாவும் இல்லை யோகா வகுப்புக்குச் சென்றுவிட்டாள்.

குதிரை இடமும் வலமுமாக வாலை ஆட்டுகிறது. அவள் குழந்தைப் பருவத்தில் கெத்தி நடந்ததை விடவும் மெதுவாக நடக்கிறது. புல்லாங்குழல் இசை வீடெங்கும், அறை அறையாக நிறைந்திருந்தது.

ஆசிபாவுக்கு பத்து வயது நடக்கும்போது, புல்லாங்குழல் ஊதும் போட்டி ஒன்றில் ஜனாதிபதி கையால் தங்கப்பதக்கம் வென்றாள். அன்றிலிருந்து அவள் வீட்டுக்கு வகை வகையான புல்லாங்குழல்கள் வரத் தொடங்கிற்று. அதன் பிறகு அடிக்கடி வாசல் கதவு திறந்தே கிடந்தது. இதைக்  காரணமாக வைத்துக்கொண்டு அவன் அழகிய புல்லாங்குழல் ஒன்றுடன் இரண்டாவது முறையாக வீட்டிற்குள் நுழைந்தான்.

அவசரமாக நுழைந்தான். அவசரமாக நுழைந்ததில் அவன் பாதணிகள் பிரிவைச் சுமந்துகொண்டு கிடந்தன. இவ்வளவு தூரம் கூடவே வந்த பாதணிகள் அவள் வீட்டுக்குள் போய்ப் பார்க்க ஆசைப்படாதா? அங்கிருக்கும் புதிய பாதணிகளிடம் தன்னையும் அறிமுகம் செய்ய விரும்பாதா? பாதணிகளைப் பற்றி அறியாத மக்கு இவ்வளவு அவசரமாகப் போய் தன்னை அவளிடம் அறிமுகம் செய்ய என்ன வேண்டிக் கிடக்கு.

ரெக்கார்டர் – விசில் குடும்பத்தின் ஒரு நீளமான புல்லாங்குழல்.

பிக்கோலோ புல்லாங்குழல் – குறுக்கு புல்லாங்குழல். வழக்கத்தை விட இரண்டு மடங்கு குறைவு. இது மிக உயர்ந்த ஒலியைக் கொண்டுள்ளது. டிம்பர் மிகவும் பிரகாசமானது, மற்றும் மியூசிக் டைனமிக் ஃபோர்டே.ஸ்விஜி மூலம் இது மிகவும் துளையிடுகிறது.

நவீன ஓபோ: மியூசெட், கூம்பு பெல் கொண்ட ஓபோ, பாரிடோன் ஹார்ன்,

ஆங்கில ஹார்ன் பரோக் ஓபோ: பரோக் ஓபோ டி “மன்மதன், ஓபோ ஆம் கச்சா அல்லது வேட்டை ஓபோ.

ஆசிபா படித்துக்கொண்டிருந்த “காற்றின் கருவி” புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மாடிப்படியை அண்டியுள்ள சுவரில் ஏறு வரிசையாக  தொங்கவிடப்பட்டிருந்த வகை வகையான  புல்லாங்குழல்களின் பக்கம் விரைந்தாள். அதில், அந்த இரு விரல்களையும் வைத்து கண்களால் ஏறி  மாடிக்குச் சென்றாள்.

இவன் என்ர கூட்டாளி. என்னைத்தான் காண வந்திருக்கிறான் என்று அலட்சியமாகவும்,  படி ஏறுவதிலே ஆர்வமாகவும் இருந்தாள் ஆசிபா. அவன் கையில் இருந்த புல்லாங்குழலோடு ஒரு சிவப்பு ரோஜாவும் இணைந்தே இருந்தது. அதன் இதழ்கள் புல்லாங்குழலின் துளைகளை உரசிக்கொண்டிருந்தன. அடுத்த விநாடியே ஒரு மெல்லிய குழல் இசை கேட்பதுபோல இருந்தது. அவள்  நின்றவாறு  திரும்பிப் பார்த்தாள்.

அப்போதுதான் அவன் அதைச் சொன்னான். “உன் கையில் இருக்கிற மச்சம் அழகா இருக்கு” அது அவளுடைய கை என்பதால் திரும்பவும் கையைப் பார்க்க அவள் விரும்பவில்லை. அவனைப் பார்த்தாள். அவன் கையைப் பார்த்தான்.

அது வலது முன் கை. அதில் இருந்தது  திறப்பு வடிவிலான மூன்று இஞ்சி நீளமும், ஒரு இஞ்சி அகலமும் கொண்ட  ஒரு மச்சம். மச்சத்தின் குடும்ப நிறம் கறுப்பு என்பதால் இது சற்று வித்தியாசமான இளங்கறுப்பாக இருந்தது. தவிடு படிந்தாற்போல் சாந்தமான மெல்லிய உரோமங்களும் அதில் இருந்தன. இந்த மச்சம் திடீரென உருவானதல்ல. ஒரு யுத்தத்தைப்போல, காலமெடுத்து, நேரமெடுத்து, சந்தர்ப்பமொன்றை காத்திருந்துதான் உருவானது.

அந்த சந்தர்ப்பத்தை அவள் அடைந்தபோது அவள் வயது, ஒரு கையில் இருக்கும் விரல்களின் எண்ணிக்கைதான். ஔித்து விளையாடுவதற்காக அந்த விரல்களின் எண்ணிக்கையொத்த  அல்லையகார பிள்ளைகளோடு சேர்ந்துவிட்டாள்.

“காக்கையரே காக்கையரே”

“ஓ”

எத்தின முட்ட இட்ட”

“மூனு”

“மூனுல ரெண்டக் குடிச்சிட்டு ஒன்ட எடுத்திட்டு ஓடியா” என்றாள் ஒரு பிள்ளை. ஆசிபா அந்த பழங்கால அலுமாரிக் கதவைத் திறந்து உள்ளே ஔித்துக்கொண்டு கதவை அடைத்துவிட்டாள்.

கன நேரமா. நானும் ஏன்ட தந்திரமெல்லாம் செய்து பார்த்தன். கதவு விடியச் சாமம்தான் திறந்தது.

ஆசிபாவின் உம்மா பொலிஸிக்குப் போக வெளிக்கிட்டாள் நான்தான் தடுத்தன். வாப்பாக்காரன் பிரான்ஸில. இதெல்லாம் அவருக்குத் தெரியாது. வால் பக்கமாக  மஞ்சள் பூசியிருந்தது. உடல் கறுப்பு. தலை ஒரு இரத்தத் துளிபோலவும், அலுமாரிக்குள்ளே பலகையில் ஒட்டி  இருந்தது அந்த புழு.  அன்று காய்ச்சலோடுதான் ஆசிபாவின் பொழுது விடிந்தது. பயப்பாட்டுக்கு  தண்ணி ஓத மைமுனாச்சியை கையோட கூட்டியந்து எதுக்க நின்றாள் றிபாயா. அவளுக்கு பிள்ளை என்று ஆசிபா மட்டும்தான். பெரிய சில்வர் வாளி நிறைய தண்ணீர் கொண்டுவந்து மைமுனாச்சிக்கு முன்னால் வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.  சுவரோடு முதுகைச் சாய்த்துக்கொண்டிருந்த மைமுனாச்சி தண்ணீரை ஒரு பார்வை பார்த்தாள். தண்ணீரின் இதயம் திக் தக் என்றது என்னவோ வாளிக்குள் இருந்தபடி அசைந்தது. குழந்தை உறங்குவதற்காக ஆட்டிவிட்ட தொட்டிலின் கடைசி ஆட்டம் போல.

தண்ணீரை மைமுனாச்சி ஓதிப் பார்க்கும் போது கடவாய் கிழியாதபடி “ஆ” வென்று கொட்டாவியை பறிய விட்டாள். வெற்றிலை போட்ட வாய்தான் இருந்து சுத்தமாக இருப்பது வாளிக்குள் இருந்த தண்ணீரில் தெரிந்தது. மொத்தம் எத்தனை கொட்டாவிகள் என்று எண்ணிக்கொண்டுவந்தேன் இறுதிக் கொட்டாவி பறிந்த விதத்தைக் கண்டு  மொத்தக் கொட்டாவியும் எத்தனை என்பதை மறந்துவிட்டேன்.

அப்போது ஆசிபா என்னைப் பார்த்து மெல்ல சிரித்தாள். மூன்று முறை உள்ளங்கையில் தண்ணீரை எடுத்து ஆசிபாவின் முகத்தில் விசிறியடித்தாள் மைமுனாச்சி. சற்றுமுன் சிரித்துக்கொண்டிருந்த அந்தப் பிஞ்சி முகத்தைப் பார்த்த எனக்கு கண் கலங்கிற்று.

மிச்சத் தண்ணீரால் ஆசிபாவின் உடல் முழுவதையும் கழுவிவிட்டு உள்ளே துவாய் எடுக்கப் போனாள் றிபாயா. தனது சேலை மற்றும் உள்ளாடைகளையும் கழுவுவதற்காக எடுத்த வாக்கில் கொஞ்சம் உதறினாள். அதன் உள்ளிருந்து அவளின் நேற்றைய உடல் கீழே விழுந்ததோ என்னவோ அப்படி அவள் குனிந்த குனி நிமிராமல் கீழே பார்த்துக்கொண்டு  நின்றாள். அப்போதுதான்  அவள் கண்களில் படாமல் ஊர்ந்து அலுமாரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதுபோல் நின்று மறைந்தது அந்தப் புழு.

சிறு கம்புத்துண்டொன்றால் அதைத் தூக்கி வெளியே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கென்னமோ இந்தப் புழுதான் அதைச் செய்திருக்க வேண்டும்.  இந்தப் புழுவைப் பார்த்துதான் ஆசிபா பயந்து கத்தியிருக்க வேண்டும்.  என் கையில் இருந்த கம்பின் சிறு பகுதியால் அந்தப் புழுவைத் தொட்டேன் புழு கம்பைக் கட்டி அணைத்துக்கொண்டது. நீண்ட நாள் பாசத்திற்காக ஏங்கியிருக்கும்போல. வெளியில் கொண்டுபோய் மண்ணில் போட்டு உற்றுப் பார்த்தேன். அதன் கண்களில் அந்தக் கனவு தெரிந்தது. இத்தனை நாளாக அலுமாரிக்குள் இருந்துகொண்டு ஒரே கனவைத்தான் கண்டிருக்கிறது. அதன் கனவில் தோன்றியது அந்த பழைய அலுமாரித் திறப்புதான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்தக் கதவைத் திறப்பதற்கான முயற்சியில் புழு திறப்பைத்தான் முதலில் தேடியிருக்கும். இது காட்டில் வாழும் ஒரு வகைப் புழு. கனவு காண்பது இதற்கு மிகவும் பிடிக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

இல்லையென்றால் எப்படி அந்த பழைய அலுமாரியின் திறப்பை உரிச்சி வச்சாப்போல் இருக்கிறது அந்த மறு. புழு பட்ட இரண்டாம் நாளே சிறிய தழும்பாகத்தான் வந்தது  பிறகு மறைந்து விட்டது. மீண்டும் சில நாட்களின் பின் வந்துவிட்டது. இதை நானோ அவள் உம்மாவோ கண்டுகொள்ளவில்லை. பிள்ளையின் உடம்புக்கு எந்தப் பிரச்சினையும் அது தோற்றுவிக்கவில்லை மாறாக பிள்ளையின் வலது முன்னங்கைக்கு அது அழகாகத்தான் இருந்தது. இப்போதும் அது அப்படியே அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த டொக்டர் மாருக்குத்தான் சந்தேகம். இவள்  அடைக்கப்பட்ட அலுமாரிக் கதவுகளைத் திறப்பு இல்லாமல் கையை வைத்தே திறக்கின்றாள். ஐந்து வயதில் இருந்த சுறுசுறுப்பான பேச்சு எதுவுமே இல்லை. அடிக்கடி வீட்டை விட்டு வெளியே ஓடுகிறாள் என்றால் இதை மன நோய் என்று சொல்ல முடியாது மாறாக என்னவென்பது. இனி ஆசிபாவின் கால்களுக்கு சங்கிலிப் பூட்டுத் தேவையில்லை. எந்த மருந்துகளும் தேவையில்லை. என்று டொக்டர் முடிவு செய்துவிட்டார். என்ற சந்தோசமான செய்தியைக் கேட்கும் தொலை பேசி அழைப்பிற்காகத்தான் நான் காத்திருந்தேன்.

“குதிரை எப்படி இருக்கு? நீ சவாரி போக பழகிவிட்டாயா?” என்று கேட்டான் அவன்.

“இல்லை இன்னும் இல்லை” என்றேன் நான் எதிரே வந்து. கதிரையில் இருந்தவன் எழுந்து நின்றான். றிபாயா தனது அறைக்குள் நாளை யோகா மாணவிகளுக்கான செய்முறைப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தாள்.

“நான் இன்னும் ஒரு வாரத்தில் பிரான்ஸ் போகிறேன். ஆசிபாவின் வாப்பா அவளை நலம் விசாரித்து வரச் சொன்னார்”

“அவர் சொல்லி நீங்கள் வாங்கிக் கொடுத்த குதிரை சுகம் என்று சொல்லுங்கள் போதும். உங்கள் பெயரைத்தான் நான் இங்கு அடிக்கடி சொல்வது அவ்வளவு அழகான பெயரது.”

“உங்கள் மனைவி லமாவுக்கு என் சலாத்தைச் சொல்லுங்கள்” என்றாள் றிபாயா உள்ளே இருந்தவாறு.

“வீட்டில் அவரின் புகைப்படம் ஒன்றுகூட இல்லை என்றும் சொல்லுங்கள்” என்றேன். எங்கள் மூவரையும் மாறி மாறிப் பார்ப்பதற்கு அவனுக்கு இன்னும் இரண்டு கண்கள் தேவைப்படுபவன்போல இருந்தான்.

“மூன்று வருடத்திற்கு இரண்டு வாரம் லீவில் வாரவர்தானே” என்று புல்லாங்குழலை ஆசிபாவின் பக்கம் நீட்டினான்.

“என் வாப்பாவின் பெயர் எனக்குத் தெரியாது உங்களுக்குத் தெரியுமா?” என்று அவனருகில் வந்த ஆசிபா அவன் கொடுத்த புல்லாங்குழலின் பெயரை மறக்காமல் சொன்னாள்.

அகமது ஃபைசல்-இலங்கை

அகமது ஃபைசல்

 

(Visited 105 times, 1 visits today)