அமானுஷ்யங்களின் உபாசகன் – Isaac B. singer யின் The Cafeteria சிறுகதையை முன்வைத்து.. -உமையாழ்

உமையாழ்அண்மையில் முகநூலில் நிகழ்ந்த ஒரு உரையாடலில் நான் மிகவும் மதிக்கும் ஒரு தோழர், உலக இலக்கிய வாசகர்கள் மீதான பொதுவான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அது பின்வருமாறு அமைந்திருந்தது;

‘அதிகம் ஆங்கிலத்தில் வாசிப்பவர்களுக்கு தமிழில் எழுதுபவர்கள் மீது ஒரு இளக்காரம் உண்டு’

இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள் என்றில்லை, பொதுவாக உலக இலக்கிய மொழிபெயர்ப்புக்களை அதிகமாக தமிழில் வாசிக்க நேரும் ஒரு சாதாரண தமிழ் வாசகனுக்கும், தமிழ் எழுத்தாளர்கள் மீதான ‘இளக்காரம்’ தோன்றுவது இயல்பானதுதான். ஆனால் எல்லா தமிழ் எழுத்தாளர்கள் மீதும் அந்த ‘இளக்காரம்’ தோன்றுகிறது என பொதுமைப்படுத்திவிடவும் முடியாது. இதற்கு வாசக மனநிலையின் மமதையையும் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

இரண்டு விடயங்களை இங்கே கவனிக்க வேண்டியவை.

a.

ஆங்கிலத்திலோ அல்லது தமிழ் மொழிபெயர்ப்பிலோ உலக இலக்கியத்தை வாசிப்பவர்கள், ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்ட மிகத் தரமான இலக்கியப் பிரதி ஒன்றை வாசிக்கிறார்கள். ஏனெனிலில் ஒரு மொழியில் எழுதப்படும் எல்லாமும் மொழிபெயர்க்கப்பட்டு உலக இலக்கியவாசகர்களை வந்தடைவதில்லை. மிகத் தரமான படைப்புக்கள் மாத்திரமே ஒருமொழியில் இருந்தும் இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு விமர்சகர்களால் கொண்டாடப்பட்டு ஒரு தமிழ்

வாசகனை வந்தடைகிறது. அதை வாசிப்பதும் கொண்டாடுவதும் புரிந்து கொள்ளப்படக் கூடியதுதான்.

b.

தமிழில் வாசகர்களின் எண்ணிக்கையின் சற்றேறக்குறைய சமமான அளவில் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு மிகையான கூற்றல்ல. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றை எல்லோரும் எழுதிக் கொண்டேதான் இருக்கிறார்கள். சமூக ஊடகங்களின் பரவலாக்கம் பலரையும் எழுத்தாளர்களாக்கி இருக்கிறது. முகநூல் எங்கும் குட்டிக் குட்டிக் ‘கதைகளாக(!)’ எழுதித் தள்ளுகிறார்கள். கவிதை புத்தகங்கள்(!) கடற்குதிரை குட்டி போடுவதைப் போல பிரசுரித்துத் தள்ளப்படுகிறது. வருடத்திற்கு இரண்டு மூன்று நாவல்கள் எழுதுபவர்கள் எல்லாம் தமிழில் உண்டு.

இப்படியான தமிழ் சூழலில் ஒரு இலக்கிய வாசகன் ஏதோ ஒருவகையில் பலதையும் வாசிக்க வேண்டி இருக்கிறது. அவனது வாசிப்புகளினூடே, ‘பிரதிகளுக்கிடையேயான ஒப்பீடு’ தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. பனிக்கட்டியில் சுடுதண்ணி கலந்த கணக்காய் வாசக மனநிலை வாய்க்கப் பெற்ற அவனுக்கு, தன் நேரத்தை வீண்டிக்க வைத்த, தேறாத பல தமிழ் இலக்கியப் படைப்புகளை கேலி செய்வதை தவிர வேறேதும் மார்க்கம் இருப்பதில்லை! அந்தக் கேலியைத்தான் தோழர் ‘இளக்காரம்’ என நவீனப்படுத்தி இருக்கிறார். இங்கே தோழர் மறந்த அல்லது மறைத்த ஒரு சேதி இருக்கிறது; அவ்வாறு இளக்காரமாகப் பார்க்கும் வாசகன்தான், நல்லதொரு தமிழ் படைப்பை வாசிக்க நேர்கையில் அதைத் தலையில் வைத்து கொண்டாவும் செய்கிறான். ஆனால் அது மிக அரிதாகவே நிகழ்வது அந்த வாசகனின் தவறில்லையே!

02.

யுத்தங்கள் மனிதர்களை கூட்டங் கூட்டமாக இடம்பெயரச் செய்ததை சென்ற நூற்றாண்டின் வரலாற்றேடுகள் படங்களுடன் பதிவு செய்து வைத்திருக்கிறது. இலங்கையில்  சிவில் யுத்தம் தரைதொட்ட ஆரம்ப நாளொன்றில், ரத்தம் பூத்த அந்த மண்ணில் பிறந்து, ஆயிரம் தலை உண்ட அந்த அசுர யுத்தத்துடனேயே வளர்ந்து, அதன் கர்ண கொடுரங்களுக்கு சாட்சியாகி, ஒரு மாபெரும் வரலாற்றின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் கண்ணுற்ற சபிக்கப்பட்ட ஆயிரமாயிரம் பாவாத்மாக்களில் நானும் ஒருவன் எனும் வகையில், யுத்த இடப் பெயர்வையும், யுத்த வடுக்களையும் சுமந்த இலக்கியங்களை என்மனதிற்கு நெருக்கமாக இருத்தி,  எப்போதும் பேராவலுடனும், பெருந்துயருடனும் வாசித்துக் கடந்திருக்கிறேன். ஆனாலும் கண்டு, கேட்டு உணர்ந்த யுத்த வடுக்களை விஞ்சி, நான் வாசித்துக் கடந்த எந்த ஒரு இலக்கியப் படைப்பும் என் நெஞ்சை கசக்கிப் பிழிந்தெறிந்ததில்லை. மனித படைப்பு மனத்தின் எல்லையும், புனைவின் சாத்தியங்களின் எல்லையும் நிஜத்தை தொட எப்போதும் எத்தனித்துக்கொண்டே இருக்கிறதே தவிர, அது எப்போதுமே நிஜத்தைத் தொடவோ, அல்லது அதை விஞ்சிவிடவோ சக்தி அற்றது என்பதுதான் எனது இப்போதைய நம்பிக்கைகளின் சாரம். இருந்தாலும், நவீன இலக்கியத்தில் யுத்தத்தை எழுதியவர்களை மனது கொண்டாடத் தவறியதே இல்லை. Earnest Hemingway யில் இருந்து, Albert Camus, Paul Louis boon, Milan Kundera என ஒரு நீண்ட பட்டியல் உலக இலக்கியப்பரப்பில் இருக்கிறது.

தமிழில், எஸ்பொவில் தொடங்கி, தேவகாந்தன், ஷோபாசக்தி, சயந்தன் , குணாகவியழகன் என இன்னொரு பட்டியல். எம்மவர்களும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை எனச் சொல்லும் அளவிற்கு தரமான யுத்தம் சார்ந்த இலக்கியப் பிரதிகளும் எங்களது tamil Exile literature பரப்பில் இல்லாமலில்லை. ஆனால் வழமை போல, எங்களுடைய படைப்புக்களுக்கு உலக அரங்கில் கிடைத்த அங்கிகாரம்தான் என்ன! எனும் கேள்வி சோர்வைத்தான் தருகிறது.

000000000000000000000000000

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாசிப் படைகளால் விரட்டி விரட்டி கொண்டொழிக்கப்பட்டவர் போக, மீதம் இருந்த யூதர்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரு  மாபெரும் வல்லரசாக, அல்லது வல்லரசுகளின்  அதிகார மையமாக மாறிப் போன வரலாறு நிகழ்ந்து ஒரு நூற்றாண்டு தாண்டவில்லை. கூடி நின்ற யூதர்கள், அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கலை இலக்கியம் என எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கினர். நோபல் பரிசில் கிடைக்கப்பெற்றவர்களின் பட்டியிலில் வேறெந்த இனத்தவரையும் விட அதிகமான யூதர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது இதற்கொரு சான்று. இலக்கியத்திற்கான நோபல் பரிசை மட்டும் இதுவரையும் பதின்மூன்று யூதர்கள் பெற்றிருக்கிறார்கள். இது, இதுவரையும் வழங்கப்பட்ட பரிசிலில் 13%.

03.

உமையாழ்இலக்கியத்தின் எந்தவொரு வடிவத்திற்கும் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறுத்துச் சொல்லக்கூடிய வடிவமைப்புகளோ, வரையறைகளோ என்றைக்குமே இருந்ததில்லை. அந்தந்த வடிவங்களில் கைதேர்ந்தவர்கள் தமக்கான வரையறைகளையும் எல்லைகளையும் அவர்களாகவே உருவாக்கிக் கொண்டு இலக்கியம் படைத்தனர். அந்த வகையில் IBS என இலக்கிய உலகில் அறியப்படும் Isaac Bashevis Singer தான் 1968ம் வருடம் The Paris Review இலக்கிய இதழுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்;

…from my childhood I have always loved tension in a story. I liked that a story should be a story. That there should be a beginning and an end, and there should be some feeling of what will happen at the end. And to this rule I keep today. I think that storytelling has become in this age almost a forgotten art. But I try my best not to suffer from this kind of amnesia. To me a story is still a story where the reader listens and wants to know what happens. If the reader knows everything from the very beginning, even if the description is good, I think the story is not a story.

00000000000000000

‘கற்பனையிலும் பார்க்க யதார்த்தம் விநோதமானதும் சுவையானதும் என உணர்ந்து கொண்டவன்’

ஈழத்தின் மஹா கதைசொல்லியான எஸ்.பொன்னுதுரை எனும் எஸ்பொ தன்னுடைய புத்தகம் ஒன்றில் தன்னைப் பற்றிச் சொன்ன வாசகங்கள்தாம் மேலே எழுதப்பட்டுள்ளது. தமிழின் மிக அற்புதமான சிறுகதைகளை எழுதியவர் எஸ்பொ. அவரது ‘ஆண்மை’  வரிசைச் சிறுகதைகள் புனைவினதும் யதார்த்தத்தினதும் கலவையின் உச்சம். மிக அசாதாரனமாக புனைவும் தமிழும் கூடி வந்தவர்களில் எஸ்பொவும் ஒருவர். அந்த எஸ்பொ கற்பனாவாதத்தின் பொய்மை பற்றியும் அதன் பாரம் பற்றியும் எழுதி நிறையவே பதிவு செய்திருக்கிறார். மேற்சொன்ன வாசகமும் அதில் அடங்கும்.

Isaac B. singer (IBS) பற்றி எப்போது எண்ணினாலும் வண்டி மாடுகள் போல இந்த வாசகங்களும் கூடவே எனக்கு ஞாபகம் வருவதுண்டு. எஸ்போவைப் போல, IBSயும் யதார்த்தம் விநோதமானதும், சுவையானதும் என உணர்ந்து கொண்ட ஒருவர் என எனக்கு தோன்றிக்கொண்டே இருக்கும். IBSயின் புனைவுகளை மட்டுமே வாசித்தவர்களுக்கு, என்னுடைய எண்ணம் ஒருவகையில் மஹா முரண் எனத் தோன்றலாம். IBS எனும் கதைசொல்லி பேய்கள், ஆவிகள், சைத்தான்கள், பாதாள உலகம், சொர்க்கம், நரகம் என தன்னுடைய படைப்புகளின் மையத்தை முழுக்க முழுக்க யதார்த்தத்தில் இருந்தும் தூரமாக்கிக் கொண்டும், கற்பனையின் முழு விசாலத்தையும் சாத்தியப்படுத்திக் கொண்டும் புனைவில் இயங்கிய ஒரு எழுத்தாளன். அப்படி இருக்கையில் யதார்த்தத்தை நியாயப்படுத்தும் எஸ்பொவின் வரிகளை IBSஉடன் இணைப்பதில் உள்ள முரண்   கைப்புண் போல தெளிவாகப்  புரிந்துகொள்ளக் கூடியதுதான். இருந்தாலும் IBS பற்றிய என் எண்ணங்களை நியாயப்படுத்துவதற்கான காரணங்களை நான் எப்போதும் தேடிகொண்டே இருந்திருக்கிறேன். காரணம் ஆள்மனது உணர்ந்துகொள்கிற விடயங்களில் எப்போதும் ஒரு உண்மைத்தன்மை இருக்கும் என்பதை ஆழமாக நம்புபவன் என்கிற வகையில் IBS பற்றிய என் தேடல்களில் நான் சலிப்புற்றதே இல்லை.

IBS 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினான்கு நாவல்களையும் தன்னுடைய Yaddish மொழியில் எழுதி உள்ளார். அதில்  நூற்றி ஐம்பது கதைகளுக்கும் மேல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பதிமூன்று தனித்தொகுப்புகள். அது தவிர்த்து, IBS தான் எழுதிய சிறுகதைகளில் சிறந்தது என அவர் எண்ணிய நாற்பத்தேழு கதைகளைத் அவரே தெரிந்தெடுத்து ‘The Collected Stories of Isaac Bashevis Singer’ எனுந் தலைப்பில் வெளியிட்டார். உலக இலக்கியப் பரப்பில் தொகுக்கப்பட்ட மிகச் சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றாக இந்தத் தொகுதியும் கொண்டாடப்படுகிறது.

ஒரு எழுத்தாளன் அவனது படைப்புகளின் மொழிபெயர்ப்புச் செயற்பாட்டின் போது காணாமல் செய்யப்படுகிறான் என ஒரு இடத்தில் பதிவு செய்யும் IBS, அதனால்தான் தன்னுடைய மொழிபெயர்ப்பாளர்களுடன் சேர்ந்து தானே மொழிபெயர்ப்பில் நேரடியாக இறங்கியதாகவும் குறிப்பிடுகிறார். IBS யின் மொழிபெயர்ப்பாளர்கள் எல்லோருமே ஒருவிடயத்தை குறிப்பிடுகிறார்கள்; IBS மொழிபெயர்ப்பின் போது மூலத்தில் இருப்பதை நீக்குவதிலும், இல்லாததைச் சேர்ப்பதிலும் ஆர்வங்காட்டி இருக்கிறார். அதாவது ஆங்கிலத்தில் கிடைக்கும் எந்தவொரு IBSயின் படைப்பும் மூலத்தின் நேரடியான வரிக்கு வரியான மொழிபெயர்ப்பில்லை. அதுபற்றிக் கேட்டபோது,

‘ஆங்கிலத்தில் கிடைக்கும் என்னுடைய படைப்புக்கள் வெறும் மொழிபெயர்ப்புகள் அல்ல. Yaddish மொழியில் எழுதப்பட்ட என்னுடைய படைப்புகளை அதன் செறிவுடன் அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியும் என்று நான் நம்பவில்லை. உண்மைச் சொல்வதென்றால் என்னுடைய மொழியில் எழுதப்பட்ட ஒருகதையை தேவையான மாற்றங்களுடன் நான் ஆங்கிலத்தில் மீண்டும் எழுதுகிறேன். வேண்டுமென்றால் அதை நீங்கள் ஒரு கதையின் இரண்டாம் மூலம் என வைத்துக்கொள்ளுங்கள்’

எனச் சொல்கிறார்.

உமையாழ்மிகையான நகைச்சுவை உணர்வும், அபாரமான ஆங்கில அறிவும் கொண்ட IBSயின் நேர்காணல்களை வாசிப்பதும், தொலைக்காட்சிப் பேட்டிகளைக் காண்பதும் அலாதியானது. அவர் கேள்விகளை எதிர்கொள்கிற விதமும் அவரது பதில்களில் இருக்கும் ஆழமும் எம்மை வியக்க வைக்கிறது. அவ்வாறாக அவர் அடிக்கடி எதிர்கொண்ட ஒரு கேள்வி;

‘படிப்பதற்கே ஆட்கள் இல்லாத Yaddish மொழியில் நீங்கள் ஏன் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?’

Yaddish மொழியை ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் ஒரு சிறுபகுதினர் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக IBS பிறந்து வளர்ந்த Poland உட்பட சில கிழக்கைரோப்பிய நாடுகளிலும், ஜேர்மனின் சில பகுதிகளிலும் இந்த மொழியை உபயோகிப்பவர்கள் இருந்திருக்கிறார்கள். உலகப் போர்களின் பின்னர், சிதறுண்ட ஐரோப்பிய யூதர்களுடன் அந்த மொழி வேகமாக வழக்கொழிந்து வரும் ஒரு மொழியாக அறியப்படுகிறது. ஆனால் இதுவரையிலும் அந்த மொழியில் எழுதிய மூவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசில் கிடைத்திருக்கிறது. மூவரும் Exile literature என்னும் வகையின் கீழ் புனைவில் இயங்கியவர்கள். அதில் இருவர் Yaddish மொழியில் எழுதுவதை விட்டுவிட்டு வேறு மொழிகளில் இயங்க ஆரம்பித்தனர். ஆனால் IBS தொடர்ந்தும் Yaddishயிலேயே எழுதிக்கொண்டிருந்தார். நோபல் பரிசில் பெற்ற மூன்று Yaddish எழுத்தாளர்களிலும், IBSக்கு மட்டுமே இன்றளவும் பரவலான வாசகர்கள் இருக்கிறார்.

ஏன் Yaddish யில் எழுதுகிறேன் என்பதற்கு IBS பலமுறை பதில் கொடுத்திருக்கிறார். அதில் உட்சமாக 1978ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஏற்றுக்கொண்ட பின் அவர் ஆற்றிய உரையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

‘நான் பேய்க்கதைகள் எழுதுபவன். அதைச் சாத்தியப்படுத்துவதற்கு செத்துக்கொண்டிருக்கும் ஒரு மொழியில் எழுதுவதை விட சிறந்த வழி ஒன்றை நான் அறிந்திலேன்’

தன் மொழியின் வீழ்ச்சியையும் அதன் தாங்க முடியாத வலியையும் ஒரு எழுத்தாளனாய் வெளிப்படுத்த நகைச்சுவையை விட சிறந்த வழி ஒன்று இருப்தாக நான் நம்பவில்லை.

04.

இந்தக் கட்டுரைக்காக The Collected Stories of Isaac Bashevis Singer தொகுதியில் உள்ள நாற்பத்தேழு சிறுகதைகளையும் மீண்டும் ஒருமுறை வாசித்து முடித்தேன். IBS யின் அக உலகத்துக்குள் புகுந்து அவர் வாழ்ந்த என்பத்தெட்டு வருட வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை நான் வாழ்ந்து கடந்த ஒரு பேருணர்வு உண்டானது. ஒரு தேர்ந்த எழுத்தாளன் தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை வெவ்வேறு சந்தர்பங்களில் புனைவுடன் கலந்து எழுதி தன் வாழ்க்கை வரலாற்றை மொத்தமாக எழுதி வைத்திருக்கிறான் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இந்த இரண்டாம் வாசிப்பின் முடிவில், IBS யின் சிறுகதைகளில் இருந்து அவரைப் பற்றி நான் தொகுத்த விடயங்களின் பட்டியல் ஒன்றை தயாரிக்க விரும்பினேன். அதன் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்தது;

IBS சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த அப்போதைய போலாந்து நாட்டில், வார்சோவிற்கு (Warsaw) அண்டிய கிராமம் ஒன்றில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்திருக்கிறார்.

அவரது தந்தையார் ஒரு ராபி-யூத மதப் போதகர். அவர்களது ஊரில் தலைமை ராபியாகவும் இருக்கிறார்.

IBSயின் தாயின் தந்தையாரும் ஒரு ராபியாக இருந்திருக்கிறார். அதனால் IBSயின் இளமைக்காலம் முழுவதும் கட்டுக்கோப்பான யூதக் கலாச்சாரத்தின் நிழலில் கழிந்திருக்கிறது.

IBSயின் மூத்த சகோதரர் எழுத்துத் துறையில் ஆர்வங்கொண்டு Warsawவிற்கு அருகில் உள்ள நகரமொன்றிக்கு இடம்பெயர்ந்து அங்கே ஒரு பத்திரிகையில் பணிபுரிந்திருக்கிறார்.

தனது பதின்மத்தின் இறுதியில் IBSஉம் இடம்பெயர்ந்து போய் தனது சகோதரருடன் பத்திரிகைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்.

உமையாழ்அங்கே Yaddish இலக்கியவாதிகள் ஒன்றுகூடி விவாதிக்கும் writers club ஒன்று இருந்திருக்கிறது.

அப்போது IBS ஒரு எழுத்தாளர் இல்லாததினால் அந்த writers clubயில் உறுப்பினர் அங்கத்துவம் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், IBSயின் அண்ணன் அங்கே உறுப்பினராக இருந்த காரணத்தினால், IBSயிற்கு ஒரு விருந்தினராக அங்கே போய்வர சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கிறது. அங்கே அவர் பார்த்த கேட்ட இலக்கியவாதிகள் பற்றி பல கதைகளில் குறிப்பிடுகிறார்.

தனது முப்பதுகளில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்திருக்கிறார் IBS. முதல் இரண்டு வருடங்கள் coney island எனும் கடலோர நகரில் வாழ்ந்திருக்கிறார். (பல கதைகளில் இந்த வாழ்க்கை பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டிருக்கிறது. A day in Coney Island என்ற தலைப்பில் தனியே கதை எழுதி இருக்கிறார்). அங்கே அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி வசித்த Esther எனும் பெண்ணின் மீது அவருக்கு ஆர்வமிருந்திருக்கிறது. (இந்த Esther எனும் பெயரை அவருடைய பல கதைகளிலும் பயன்படுத்தி இருக்கிறார்). அமெரிக்காவில் ஒரு அகதியாக தொடர்ந்து இருப்பதிலும், அந்த நாட்டு குடியுரிமை பெறுவதற்காகவும் நிரம்ப சிரமப்பட்டிருக்கிறார்.

பின்னர் அவர் Manhattan, New Yorkயிற்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அங்கே ஒரு Yaddish தினப்பத்திரிகை வெளியாகி இருக்கிறது (Jews daily forward). அதில் IBS வேலை செய்திருக்கிறார்.

IBS யிற்கு Arron என ஒரு நண்பன் இருந்திருக்கிறார். அவர் ஒரு Yaddish மொழிக் கவிஞர்.

IBS 17ம் நூற்றாண்டின் யூத தத்துவவியலாளரான Spinoza வின் கொள்கைகளை விரும்பிப் படிப்பவராகவும், அவற்றைப் பின்பற்றுபராகவும் இருந்திருக்கிறார். சமயங்களில் Spinoza சொன்ன விடயங்களை மறுத்துரைக்கவும் IBS தயங்குபவர் இல்லை.

இந்த விசயங்களின் பட்டியலை IBSயின் 47 சிறுகதைகளை மட்டுமே வாசித்து தொகுத்திருந்தேன். இந்தக் கட்டுரை எழுதுவதற்காக IBS யின் நேர்காணல்களை வாசித்துக்கொண்டிருந்த போது நான் தொகுத்த விடயங்கள் எல்லாம் பெருமளவிற்குச் சரிதான் என்பதை தெரிந்துகொண்டேன். ஒரு மனிதன் தன் வாழ்வில் தான் கடந்த நிமிடங்களை இவ்வளவு துள்ளியமாக ஒரு புனைக்கதையில் கொண்டிருத்த முடியுமா என்பது ஆச்சரியமாக இருந்தது.

ஒரே மாதிராயான மனிதர்களும் இடங்களும் IBSயின் கதைகளில் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருக்கிறது. அப்படி என்றால் அந்தக் கதைகள் வாசிக்க அசுவாரஸ்யமாக அல்லவா இருக்க வேண்டும்! ஆனால் IBS யின் எந்த ஒரு கதையும் வாசிப்பின் நடுவே தோய்ந்து அசுவாரஸ்யமாகி இருந்ததே இல்லை. வாசிக்க ஆரம்பித்தால் இருக்கையின் நுனியில் அமர்த்தி அடுத்தது என்ன எனும் பேராவலுடன் ஒவ்வொரு கதையும் நகர்ந்து செல்லும். இந்த இடத்தில் நான் மேலே குறிப்பிட்ட The Paris Review வின் நேர்காணலில் சிறுகதைகள் குறித்து IBS சொன்ன விடயத்தை ஞாபகப்படுத்துகிறேன்.

from my childhood I have always loved tension in a story. I liked that a story should be a story. That there should be a beginning and an end, and there should be some feeling of what will happen at the end. And to this rule I keep today. I think that storytelling has become in this age almost a forgotten art. But I try my best not to suffer from this kind of amnesia. To me a story is still a story where the reader listens and wants to know what happens.

IBS கடைசி வரையும் இந்தக் கூற்றை ஒரு தவம் போல கடைப்பிடித்திருக்கிறார். அவருடைய எல்லாக் கதைகளிலும் ஒரு ‘suspense element’ இருந்துகொண்டே இருக்கிறது. வரலாற்றில் IBSயிற்கு முன்னரும் பின்னரும் Suspense கதைகளை எழுதியவர்கள் பலரும் இருக்கிறார்கள். அந்தப் பலருள் எனக்கு IBSயை Mappussnt உடன் பொருத்திப் பார்ப்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது. இருவரும் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட Super powers பற்றி நிறைய ஒன்று போல கதைகளை எழுதி இருக்கிறார்கள். ஆனால் IBS வெறுமனே suspense கதைகள் எழுதுகிறேன் என்று பேய்க்கதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்தவரில்லை. அவரது கதைகளுக்குள் இருக்கும் மனித மனத்தின் அகச் சிக்கல் சார்ந்த பிரச்சினைகளை அவர் கையாண்ட விதமும், மனித உறவுகள் அவரது கதைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் விதவும் ஆச்சரியமாக இருக்கும். இந்த யதார்த்தவாதக் கதைக்கூறுகளை IBS தன்கதைகளில் இருந்த Super power elements உடன் இணைத்த விதம்தான் அவரை ஒரு தேர்ந்த கதை சொல்லியாக காட்டுகிறது என்பது எனது எண்ணம்.

05.

ஒரு சாதாரண  கதை IBSயின் எழுத்தில் எங்கனம் கலையாகிறது என்பதை வரையறைத்தல் முக்கியமானது.

இந்த இடத்தில், IBS யின் The Cafeteria கதையை நினைத்துக்கொள்கிறேன்.

1950களில் அமேரிக்காவின் New York பகுதியில் நடப்பதாக கதை தொடங்குகிறது. கதையின் பிரதான பாத்திரமான எழுத்தாளர், பேராசிரியர் Aaronக்கு இப்போது ஐம்பது அறுபது வயதிருக்கும். அவரே இந்தக் கதையின் கதைசொல்லியும் கூட. 1930களில், ஹிட்லரின் அராஜகத்தின் போது, போலாந்தில் இருந்து அமேரிக்காவிற்கு இடம்பெயர்ந்த அவர், கடந்த முப்பது ஆண்டுகளாக Broadway பகுதியில் வசிக்கிறார். அந்த வீதியின் மூலையில் அமைந்திருக்கும் ஒரு Cafeteriaவில் எப்போதும் உணவருந்த வருகிறார். அங்கே Aaronயைப்போல அகதியாக அமேரிக்காவில் தஞ்சமடைந்த Yaddish எழுத்தாளர்கள் பலரும் கூடி, இலக்கியம் பற்றி விவாதிப்பார்கள். அங்கேதான் Aaron, Esther சந்திக்கிறார். Estherஉம் அவளது தந்தையரும் இரண்டாம் உலகப்போரின் பேரழிவில் இருந்தும் தப்பியவர்கள். ஆனாலும் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். Aaronயின் படைப்புகளை விதந்து பாராட்டுகிறாள். அவளது வீடுவரை சென்று அவரது தந்தையுடன் உரையாடக்கூடிய அளவிற்கு அவர்களது உறவு இருக்கிறது. இவ்வளவும் 5 பகுதிகளைக் கொண்ட இந்தக் கதையின் முதலாவது பகுதியில் சொல்லப்படுகிறது.

இந்தக் கதையை IBS பகுதிகளாக பிரித்து எழுதுகிறார். முதலாவது பகுதி இந்தச் சிறுகதைக்கான அறிமுகம் போல அமைந்திருக்கிறது. கதை நடக்கும் இடமும் கதாபாத்திரங்களும் அவர்களது பின்னனியும் கனகச்சிதமாக அறிமுகம்படுத்தப்பட்டு விடுகிறது. இந்தப் பகுதியில் கதை எது குறித்தது என்கிற தகவல்கள் எதுவும் சரிவர சொல்லப்படவில்லை என்றாலும், கதையின் சரடை நோக்கி வாசகர்களை நகர்த்தும் எல்லாமும் இந்தப் பகுதியில் ஆங்கங்கே வைக்கப்பட்டிருக்கும் சின்னச் சின்ன வசனங்கள் மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கதையை முழுதாக வாசித்து முடித்த பின்னர் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, தன்னைப் பற்றிய அறிமுகத்தில் கதைசொல்லி சாதாரனமாகச் சொல்வதாக கீழ்க்கண்டவாறு ஒரு இடம் வரும்;

Women with whom I have had affairs live on the side streets

இது ஒரு பந்தியின் நடுவில் எந்தக் கரிசனமுமில்லாமல் சேர்ந்துகொண்ட ஒரு வசனம் போலவே தெரியலாம். ஆனால் கதையின் முடிவில் இந்த இடத்தை எங்கனமாய் வாசகன் கதையுடன் தொடர்புபடுத்துகிறான் என்பதுதான் IBS யின் கலையின் வெற்றி. இங்கனமாக IBS தனது கதைகளில் அழகியலை லாவகமாக கலையின் உன்னதத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்.

கதையின் இரண்டாவது பகுதி Arronயின் பயணத்துடன் ஆரம்பிக்கிறது. ஒரு வேலை நிமித்தமாக இஸ்ரேல் சென்ற Aaron, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் சுற்றிவிட்டு சில மாதங்கள் கழிந்து திரும்பி வந்து பார்க்கையில் Cafeteria வில் Estherயை காணக்கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் இருந்த போதுகூட அவளை தொடர்புகொள்ள அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. Cafeteria வில் பலரிடமும் விசாரிக்கிறார். யாரும் Esther குறித்து துல்லியமான தகவல்களை தரவில்லை. இப்படியான ஒருநாளில், அவர்கள் எப்போதும் சந்தித்துக்கொள்கிற Cafeteria எரிந்து கிடக்கிறது. பல மாதங்கள் கடந்து ஒருநாள் புதுப்பிக்கப்பட்ட Cafeteriaவில்  அவளை சந்திக்க நேர்ந்த போது ‘miracles do happen’ எனச் சொல்லி அவள் பேச ஆரம்பிக்கிறாள். இந்த miracles do happen என்பதுதான் இந்த மொத்தக் கதையின் சமநிலையை பேணும் வசனம்.

உமையாழ்ஒரு தேர்ந்த கதைசொல்லி சம்பவங்களின் மூலம் மட்டுமன்றி சம்பாசனைகள் மூலமும் தன் கதையை நகர்த்தும் கலையை அறிந்திருப்பான்.

Arronயிற்கும் Estherக்கும் இடையேயான சம்பாசனையாக அமைந்த இந்தக் கதையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதியில் Esther வாழ்வின் கஷ்டங்களைப் பற்றி மட்டுமே பேசுபவளாக இருக்கிறாள். Aaron வாழ்வின் நம்பிக்கைகள் குறித்துப் பேசுகிறான். Optimism உம் pessimism நேரடியாக மோதிக்கொள்கிறது.

IBSயின் கதைகள் தொடங்குகையில் எப்போதும் ஆண் பெண் கதாபாத்திரங்கள் எதிர் எதிர் சிந்தனை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். Escape from the civilisation அல்லது three encounters போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். அந்தக் கதாபாத்திரங்கள் தங்களுக்கிடையிலான சம்பானைகளினூடே ஒரு முடிவை நோக்கி நகர்கிறார்கள். ஈற்றில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் புரிதலின் அடிப்படைகளை மற்றக் கதாபாத்திரம் சரிகாண்பதாக கதை முடிவை நோக்கி நகரும். இதில் எழுத்தாளனின் முடிவுகளை திணிக்கும் ஒருதொனி இருப்பதில்லை. பாத்திரங்கள் தங்களை தாங்களே செதுக்கிக்கொண்ட ஒருதன்மையை இந்தப் பத்துப் பதினைந்து பக்கச் சிறுகதைகளில் காணமுடிகிறது. பல கதைகளும் நீண்ட காலத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இருக்கிறது. ஆனால் காலத்தை முன் பின்னாக்கி கதையை சிக்களுக்குள்ளாக்கும் ஒருதன்மையை IBS தன்னுடைய எந்தக் கதையிலும் கையாண்டதாகத் தெரியவில்லை. மிகத் துள்ளியமான விபரனைகள் தெளிவான செறிவான அறிமுகத்தை கதைகளுக்குக் கொடுக்கிறது. அதில் இருந்து முன்னோக்கி நகரும் கதையில் எந்தப் பிசிறும் இருப்பதில்லை. ஆனால் இந்தக் கதைகளில் ஒரு தேர்ந்த வாசகனுக்கான இடைவெளி என்பது முடிவிலியாய் பரந்து கிடக்கிறது.

ஓ.., IBS ஒரு மகத்தான கதைசொல்லி!

குறிப்பாக The Cafeteria கதை முழுவதும் குறியீடுகளால் ஆனது என்பதுதான் எனது புரிதல். இது ஒரு தவறான எடுகோளாகவும் இருக்கலாம். ஆனால் IBS போன்ற போரின் பாதிப்புள்ள ஒரு கலைஞன் தன் படைப்புகளின் உச்சமான படிமங்களில் நின்றும் எதைப் பேசுவான்!

இந்த எடுகோளின் அடிப்படையில் சில புரிதல்களைக் கோடிட்டுக் காட்டுதல் அவசியமாகிறது.

The Cafeteria  கதையில் காலமாற்றத்துடன் விவரிக்கப்படும் புறச்சூழலின் மாற்றம் அல்லது அசைவு, வரலாற்றின் பெரிய நிகழ்வுகளின் குறியீட்டு வடிவம். Cafeteria எரிவதும் பின்னர் மீள் கட்டப்படுவதும் அந்த வகையான குறியீடுகள்தாம். Esther கதாபாத்திரம், அமேரிக்க வாழ் ஐரோப்பிய யூத அகதிகளின் ஒட்டுமொத்த மனநிலையின் வெளிப்பாடு. இவை எல்லாமும் இந்தக் கதைமாந்தரின் மனித மனத்தின் மாற்றத்துடன் ஒன்றித்து விவரிக்கப்படுவது எழுத்தாளரின் எழுத்தாளுமையின் உச்சம். இவ்வாறாக இந்தக் கதையின் இரண்டாவது பகுதி முழுக்க அமைந்த சம்பாசனைகளில், ஒரே மாதிரியான கடந்தகால வாழ்வு வாய்க்கப்பெற்ற இருவரின், வாழ்க்கை குறித்தான இரண்டு வேறுபட்ட கோணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கதையின் மூன்றாவது நான்காவது பகுதிகளில் கால மாற்றமும் கதை சொல்லியின் வாழ்வியல் மாற்றமும் விபரிக்கப்படுகிறது. அவை கதையுடன் எங்கனம் இசைந்து எழுதப்பட்டுள்ளது என்பது வாசித்து மட்டுமே உணரக் கூடியது.

இப்படியாக கதையின் நான்காவது பகுதியின் முடிவில், பல ஆண்டுகள் கழிந்து Aaron, Esther யை சந்திக்கிறார். அவர்கள் இருவரும் Aaronயின் வீட்டில் இருந்த ஒருநாளில் அவள், தான் Hitlerஉம் அவனது நாசிப் படை அதிகாரிகள் சிலரும் Cafeteria வில் சந்தித்து ஏதோ ஆலோசனை செய்வதை கண்டதாகவும், அதற்குப் பிறகுதான் Cafeteria தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் சொல்கிறாள். பின்னர் அவர்கள் அது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். Aaron, அவளது புத்தி சுயாதீனத்தைச் சந்தேகிக்கிறார்.

இதை எழுத அமர்ந்திருக்கையில் யோசிக்கிறேன், miracles do happen என்ற வாசகம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

கதையின் ஐந்தாவது பகுதியில், எந்த Esther யை எப்போதும் சந்திக்க வேண்டும் என்று காத்திருந்தாரோ, அந்த Esther தனக்குப் பெருந் தொந்தரவு என உணர ஆரம்பிக்கிறார் Aaron. அவளில் நின்றும் தூரமாக நினைக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் தான் என்ன செய்வேன் என்பது பற்றியும் சிந்திக்கிறார். நாட்கள் கடந்து போகிறது. Aaron ஒரு வெற்றிகரமான எழுத்தாளராக ஆகிவிட்டிருந்தார். ஆனால் தன்னுடைய வீடும் ஒருநாள் Hitlerயின் நாசிப்படையால் கொழுத்தப்பட்டுவிடும் என்கிற அச்ச உணர்வு அவருக்குள் அதிகரித்திருந்தது.

இப்படியாக முழுக்கதையை இங்கே எழுதுவது எனக்கே அலுப்பாக இருக்கிறது. ஆனால் இந்தக் கதையை எப்படி சுருங்கங் கூற முடியும்! IBSயின் எல்லாக் கதைகளும் இங்கனமே. முழுக்கதையையும் சொன்னால்தான் உண்டு. ஏனெனில் கதையின் முக்கியமான திருப்பம் ஒவ்வொரு பந்தியிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அல்லது கதையின் ஏதாவது முக்கியமான கூறு போகிற போக்கில் சொல்லப்பட்டிருக்கும்.

இந்தக் கதையைப் பொறுத்த வரையில் Aaron ஆரம்பத்தில் ஒரு optimistic ஆகச் சொல்லப்படுகிறார். ஆனால் கதையின் போக்குடன் அவரில் நிகழும் மாற்றங்கள் ஒரு பெரிய கென்வஸ் போல விரிகிறது. இரண்டாம் உலகப் போரில் மிஞ்சிய யூதர்களின் மனநிலையை இதைவிட வேறெப்படி விவரித்து விட முடியும்! அவர்களை ஆட்கொண்டிருந்த பயத்தை ஒருகதையில் பெரும் நாடகத்தன்மை அற்று எழுதுவது IBSயில் எப்படி சாத்தியமாயிற்று!

எப்போதும் அமானுஷ்யமான கதைகளை எழுதுவதில் ஆர்வங்கொண்டிருந்த IBS, இந்தக் கதையில், இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர் அமெரிக்காவில் அகதிகளாக குடியேறிய Yaddish மொழி பேசும் யூத அகதிகள் கொண்டிருந்த பயத்தை கதையாக எழுதினார். ஆனால் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான நெருக்கமும் பிரிவுமாய் பெரும் விபரணைகளுடன் விரிகிறது.

Esther யில் இருந்து விலகி இருந்த Aaron உடைய வாழ்க்கை ஒரே ஆண்டில் தலை கீழாக மாறி இருந்தது, எல்லா விதத்திலுமே. அவர் பிரபல்யமான எழுத்தாளராகி இருந்தார். ஆனால் பயம் அவரின் உலகை சூழ்ந்திருந்தது. எப்போதும் காதுக்குள் தீ அணைப்புப்படை வண்டியின் சைரன் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. இரவில், படுக்கையில் திடுக்கிட்டு எழும்புபவராக மாறி இருந்தார். இந்த நாட்கள் ஒன்றில் கனடா செல்வதற்காக டக்ஸி ஒன்றை வாடகைக்கு அமர்த்த வீதியில் நின்று கை அசைக்கிறார். யாருமே நிறுத்த வில்லை. அதை IBS இவ்வாறு எழுதுகிறார்;

..Didn’t the drivers see me? Had I suddenly become one of those who see and are not seen?

இந்த இடத்தில் இருந்து IBS யின் அமானுஷ்ய இதயம் விழித்துக்கொள்கிறது. அடுத்த வரியில் subwayயில் வைத்து Estherயை காணுகிறார். அவள் ஒரு வயதான எழுத்தாளருடன் வீதியில் நிற்கிறாள்.

இப்போது கதையின் முதலாவது பகுதியின் இடையில் வந்த அந்த சொருகு வசனத்தை ஞாபகப்படுத்திப் பாருங்கள்;

Women with whom I have had affairs live on the side streets

இப்படியாக கதையின் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னர் சொன்னதைப் போல IBS யின் கதைகள் பெருங்கலையாக மாறுகிறது தருணங்களில் இதுவும் ஒன்று.

அமானுஷ்யங்கள் தனக்கு நிகழ்கிற போது முன்னர் தான் மறுத்த விடயங்களை எந்தவித மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறது மனது. Esther தான் (தற்கொலை செய்து இறந்துவிட்டதாக நம்பம்பட்ட) Hitler யை உயிருடன் கண்டதாகச் சொன்ன போது அவளுக்கு மனநிலை சரியில்லை என முடிவு செய்த IBS, தான் கண்ட உலாவித் திரியும் உயிரற்ற உடல்களை;

Yes, corpses do walk on Broadway

என மிக இலகுவாக கடந்து செல்கிறார்.

Estherக்காக Aaron வருத்தப்படுவதுடன் கதையை முடிக்கும் IBS, வாசிக்கும் வாசகர்களின் மனதில் ரோல கோஸ்டரில் இருந்து இறங்கிய ஒருவனில் ஏற்படும் பெருமூச்சுப் போல ஒரு ஆசுவாசத்தை நிலைக்க செய்கிறார். கதைக்குள் நிகழ்ந்த ஏற்ற இறக்கங்களை மனது அசைபோட்டுக்கொள்கிறது.

IBSயை வரலாறு, அழிவின் விளிம்பில் நின்ற தன் மொழியை தனியொரு ஆளாய் தன் தோளில் ஏற்றி அதன் மீட்சிக்காய் தன் இறுதி மூச்சிவரை போராடிய ஒரும் பெரும் போராளியாக, ஒரு மகத்தான கதைசொல்லியா, இன்னும் என்னெல்லாமாகவோ, வர இருக்கும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் வகையில், தன் பக்கங்களில் பத்திரமாக பதிந்து வைத்திருக்கும்.

உமையாழ் – பெரியபிரித்தானியா

உமையாழ்

(Visited 49 times, 1 visits today)