வன்னிவளநாடு-கிராமங்களை அறிவோம்-பாவற்குளம்-தமிழ்க்கவி

தமிழ்க்கவிவவுனியாதான் தமிழர்களின் பூர்வீக எல்லை. இங்கே நீராலும் குன்றுகளாலும் வரையப்பட்டதான் எல்லைகளையே காண்கிறோம். அந்த வகையில் கிழக்கே நாம் பார்த்த ஆசிகுளம் சிதம்பரபுரத்தை அடுத்து இன்று மத்தியிலமைந்த எல்லைக்குளமான பாவற்குளம் பற்றிப்பார்ப்போம்.

இதன் அமைவிடம் வவுனியாவிற்குத் தெற்கேயாகும். நாம் மன்னார் செல்லும் பிரதான வீதியில் நெழுக்குளம் கடந்து போனால் நெழுக்குளத்தின் மத்தியில் நேரியகுளம் செல்லும் வீதி பிரிகிறது. இவ்வீதியில் சுமார் பத்துக் கிலோமீட்டர்வரை சென்றால் பாவற்குளம் வருகிறது. அதாவது குளம் வருகிறது. பாவற்குளம் ஒரு பாரிய குளமாக இருந்தாலும், அது ஆரம்ப காலத்தின் குடித்தொகை கணக்கெடுப்பின் போது ஒரு கிராமமாகவோ குடியிருப்பாகவோ இருக்கவில்லை. அங்கு ஒரு பாரிய குளம் கைவிடப்பட்டிருந்தமை தெரிய வந்தது. அதனைத்   திருத்தும் முயற்சிகள் இலங்கை சுதந்திரமடைவதற்கு சில ஆண்டுகள் முன்பே ஆரம்பிக்கப்படடது. நுவரவௌ அதிகாரியாகவிருந்த புலன்குளம் முதியான்சேயும் அவரது குடும்பத்தினரும்  1814ம் ஆண்டு கண்டி அரசனுக்குப்பயந்து அவன் பிடியிலிருந்து தப்பித்து இந்த ஊருக்குள் வந்து வசித்தாக வரலாறு சொல்கிறது.  அவரது சந்ததியினரே இதன் ஆதிக்குடிகளாக உழுக்குளம் பகுதியில் இருந்துனர். முதலாவது சனத்தொகை கணக்கெடுப்பில் இதன் குடித்தொகை 47 ஆகவே இருந்ததாக வன்னிமாவட்டங்கள் எனும் நூலில் ஜே.பி. லூயிஸ் குறிப்பிடுகிறார்.

இற்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னர் இக்குளம் கட்டப்பட்டதாக பண்டைக்கால  ஆய்வுகளில் இருந்து தெரியவந்தாலும் இதன் பெயர் ‘பொசோகொட்டுவ’ என அழைக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன் கட்டுமானத்தின் மாதிரிகள் துட்டகாமினி காலத்தில் இருந்த  “மாகாசேன குளத்தின்” அமைப்புடனும் “பதவியா குளத்தின்” அமைப்புடனும் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது. நிற்க இந்தக்குளத்தின் கட்டுமானத்துக்காக பாவிக்கப்பட்ட அந்த களிமண் மற்றும்  அறுக்கப்பட்ட பாறைக்கற்கள், செங்கற்கள், அதன் பாரிய கனதியான மூன்றடி நீளமும் முக்காலடி உயரமாகவும் இரண்டடி அகலமாகவும் காணப்படுகிறது. எனினும் வெறும் மனித முயற்சியில் இவை குளக்கட்டில் வைத்துக்கட்டப்பட்டது ஆச்சரியமாக கொள்ளப்படுகிறது. இக்குளம் சார்பாக ஏதும் கல்வெட்டுகள் இருந்திருக்கலாம். என்றாலும் அவை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு புதைந்தோ, அல்லது முட்புதர்கள் அடர்ந்த காட்டில் மறைந்தோ இருக்கலாம். அவை வெளிக் கொணரப்படவில்லை என்பது கவலைதான்.

இக்குளத்துக்கு நீர்வழங்கும் அருகிலமைந்த மூன்று குளங்கள் என்பனவும் வியப்புக்குரிய முறையில் தேர்வு செய்யப்பட்டு குளம் கட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . மல்வத்து ஓயாவிலிருந்து பிரியும் ‘சங்கிலிகனதறஓயா’விலிருந்தும் நீரைப் பெறுகிறது. எனினும் பெருமளவு நீர் மழை நீராகும்.  இது பண்டைக்கால குளமாக இருந்தாலும் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் குடியேற்றப் பிரதேசமாகவும் இருந்தது. பாவற்குளம் வவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபைக்குள் அடங்குகிறது . பாவற்குளம்’ ஒவ்வொரு யூனிட்டுக்கும் வெவ்வேறு வழிகளில் பயணம் செய்ய முடிகிறது. வவுனியா மன்னார் விதியிலிருந்தும் பாதைகள் பிரிகின்றன.

“வீரபுரம்” அண்மையில உருவான தற்போது மிகவும் பிரபலமான பகுதி. இது ஒரு மாதிரிக்கிராமமாக உருவாகியுள்ளது. நேரியகுளம் பகுதியிலேயே பாவற்குளம் வைத்திய சாலையும் கல்குவாரியும் அமைந்துள்ளது. அடிக்கடி ஏற்பட்ட போர் காரணமாக இடப்பெயர்வுகள் கைதுகள் படுகொலைகள் என்பன இங்கு தாராளமாகவே நடந்து முடிந்துள்ளன. 1986ல் நடந்த சாம்பல்தோட்ட படுகொலையில் பாவற்குளம் பகுதியிலிருந்து பிடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் இருநூறு பேர்வரை ஒரே நாளில் கொல்லப்பட்டனர். போராட்டத்திற்கான ஆரம்ப களமாகவும் பாவற்குளத்தை அண்டிய வனப்பிரதேசங்கள் அமைந்திருந்தமை மறுக்க முடியாத உண்மையுமாகும்.

பாவற்குளம் புதிதாக யூனிட்டுகளாக பகிரப்பட்டுள்ளது. முதலில் இவை சிங்களவர்களுக்கென்றே வரையறை செய்யப்பட்டாலும் அன்றைய அரசியற் கட்சிகளின் தலையீட்டால் அந்த குடியேற்றம் மற்ற இனத்தவர்களுக்கும் பகிரப்பட்டது. முதலாம் யூனிட், உழுக்குளம் இரண்டும் சிங்களக்கிராமங்களாகவும் இரண்டாம் மூன்றாம் யூனிட்டுகள் முஸ்லீம் மக்களுக்காகவும், நான்கு ஐந்து ஆறு மூன்றும் தமிழர்களுக்காகவும் பகிரப்பட்டது.

பூமடுக்குளத்தின் கீழ் வயல்நிலமாகவும் வாரிக்குட்டியூர் பின்புறமாகக் கொண்ட குடிநிலம் ஒவ்வொரு ஏக்கரும் வீடுகட்டி தெருக்கிணறு அமைத்து  வழங்கப்பட்டது.

பாவற்குளம் தொடர்பான மேலதிக படங்கள்

கிழக்கே சூடுவெந்தபுலவு மேற்கே வாரிக்குட்டியூர். தெற்கே ஏழாம்கண்டம் இருபத்தொன்பதாம் யூனிட், வடக்கே பூவரசன்குளம் வரை பாவற்குளத்தின் நீர் பாயும் பிரதேசங்களாக உள்ளன. எனினும் நீர் வழங்கும் சிறு சிறு குளங்களும் இடையே நிரம்பி இம்மண்ணை பெரு வளமுள்ள பிரதேசமாக செய்கிறது.   பாவற்குளத்தின் நீர் இந்த சிறிய குளங்களை நிறைத்து நீர்ப்பாசனத்தை செய்தது. அதன்பின்னராக மணியர்குளம் வழியே காடுகளைக் கடந்துசெல்கின்றது. பாவற்குளம் பிரதேசம் ஒரு மாதிரிக்குடியிருப்பாக அமைந்துள்ளதால் இங்கு வாழும் மக்களுக்கான தேவைகள் இப்போது பெரும்பாலும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.  சிறீசுமண நவோதயகல்லூரி,உழுக்குளத்திலும்  அல்.இக்பால் முஸ்லீம் வித்தியாலயம்,இரண்டாம் யூனிட்டிலும், விவேகானந்தாதமிழ்பாடசாலை நாலாம் யூனிட்டிலும் அமைந்திருக்கிறது.

மக்கள் பெரும்பாலும் கிராமிய வளத்தில் வாழ்வது இங்குள்ள சிறப்பாகும். அரிசி மீன் பால் முட்டை இறைச்சி மரக்கறிவகைகள் எல்லாமே இங்கு கிடைக்கிறது. கைத்தொழில் தச்சுத்தொழில் என்பனவும் விருத்தியாகியுள்ளது. வளமான குளத்தின் கீழ் வாரிக்குட்டியூரை அடுத்ததாக சிங்கள மக்களுக்காக பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் ‘ரன்கெத்கம’ என்ற பெயரில் ஒரு மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு அங்கிருந்த குன்றின் மேல் ஒரு புத்த விகாரையும் அமைக்கப்பட்டது. ஆயினும் அது போர்க்காலத்தில் அழிவடைந்து வாரிக்குட்டியூரில் ஏற்கெனவெ வாழ்ந்த மக்களையும் அள்ளிக் கொண்டு மறைந்து போனது. இப்போது அவர்கள் மீளக்குடியேறினாலும் போதிய வசதிகளற்றே வாழ்கிறார்கள். பாவற்குளம் தன்னைச்சுற்றியுள்ள பத்துமைல் சதுரப்பரப்புக்கு மேலாக வளமாக வைத்திருக்கிறது .

தமிழ்க்கவி -இலங்கை   

தமிழ்க்கவி

(Visited 271 times, 1 visits today)