இலையுதிர் காலப்பாடல்-கவிதை-மொழிபெயர்ப்பு-வாசுதேவன்

இலையுதிர் காலப்பாடல்

குளிர் மண்டிய கொடுமிருளுள்
விரைவில் நாம் அமிழ்ந்து விடுவோம்,
குறுகிச் சென்றுவிட்ட எம் கோடைகளின் வெயில்
ஒளியே சென்று வா !
கொல்லைப் புறத்தின் கல்லுப்பாதையில் சாவின் அதிர்வுகளுடன்
பேரிரைச்சலிடும் மரம் சாய்து வீழ்வதை இப்போதே கேட்கிறேன்.
சினம், வெறுப்பு, நடுக்கம், பயங்கரம் கடினமானதும்
தவிர்க்க முடியாததுமான உழைப்பு என,
குளிர்காலம் முழுவதுமாக என்னிருப்பினுள் நுழையப்போகிறது.
தன் துருவ நரகத்துள் துலங்கும் சூரியன்போல்
என்னிதயமும் உறைந்ததோர் செந்தசையாகவேயிருக்கும்
விறகின் ஒவ்வொரு துண்டும் வீழ்வதை
அச்சத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
நாம் நிர்மாணிக்கும் தூக்குமேடைகூட இத்தனை
செவிடான ஒலி கொண்டதல்ல.
கொழுப்பேறிய செம்மறியாட்டின் களைப்பற்ற இடிகளால்
சாய்ந்து வீழும் கோபுரம் போலிருக்கிறது என் மனம்.
சலிப்பூட்டும் இவ்விடியதிர்வின் தாலாட்டில்
மிக அவசரமாய் எங்கோவொரு சவப்பெட்டிக்கு
ஆணியடிப்பதுபோல் எனக்குக் கேட்கிறது.
யாருக்கு ? நேற்று கோடையாயிருந்தது,
இதோ இலையுதிர்காலம்.
இந்த மர்மச் சத்தம் ஒரு புறப்படலுக்கான மணியாக அடிக்கிறது.

உன் நீள் விழியின் பசுமையொளியை நான் நேசிக்கிறேன்.
மென்மையழகே, இப்போதனைத்துமே கசந்துபோகிறது.
உன்காதலோ, களிப்பறையோ,அன்றில் அங்குள்ள தீந்தணலோ,
கடல்மேல் தன் கற்றைகளை வீசும் ஆதவன் போலில்லை.
நன்றியற்றவனாய், கொடியவனாய் நானிருப்பினுமென்ன,
இளகிய இதயமே, தாயாயிரு.
சகோதரியோ அன்றில் காதலியோ,
பெருமைமிகு ஒரு இலையுதிர் காலத்தின்
அன்றில் அஸ்தமனச் சூரியனின் கணப்பொழுது இதமாகவிரு.
சிறுபொழுதுக் கடமைதான் ! கல்லறை காத்திருக்கிறது.
அது பேராசை கொண்டது.!
ஆ ! உன் முழந்தாள்களில் என் தலை சாய்த்து,
தகித்துச் சென்ற கோடையை எண்ணிக் கவலையுற்று,
பின்பருவத்தின் மஞ்சள் ஒளியின் இதத்தைச்
சுவைக்க விடு.
-சார்ல் போதலயர்-

0000000000000000000000

“வெண்சொர்க்கம்”- Michel Berger – Le Paradis Blanc

கருமையிலிருந்து வெண்மையையும்
ஏமாற்றத்திலிருந்து எழுச்சியையும் பகுக்கமுடியாதளவில்
அங்கே எவ்வளவோ அலைகள் எவ்வளவோ புகைகள்
தொலைபேசி சத்தமிடட்டும்
பதிலளிக்க யாருமில்லை.
சொல்வதற்கும் ஏதுமிலை.
நிசப்தம் மாத்திரம் சுவாசத்திற்காய்.
உலகம் உருவாகிய இடத்திலிருந்து மீள ஆரம்பிப்பதற்காய்.
இரவுகள் நீண்டதும், காலங்களை மறக்கவைப்பதுமான
வெண்சொர்க்கம் சென்று குழந்தையின் கனவுகளில்போன்று
காற்றுடன் மட்டும் தனியாகத் துயில்கொள்வேன்
வெறுப்புப் பார்வைகளிலிருந்தும், குருதி யுத்தங்களிலிருந்தும்
விலகி வெண்சொர்க்கம் சென்று ஓடிமகிழ்வேன்
திமிங்கிலங்களைக் காண்பேன்
மின்னும் மீன்களுடன் உரையாடுவேன்
முன்னரைப்போல் முன்னரைப்போல்….
உண்மையிலிருந்து பொய்யைத் தீர்மானிக்க முடியாமல்
அங்கே எவ்வளவோ கருத்துகள் எவ்வளவோ அலைகள்.
அனைத்தையும் கொடுத்த பின்னர்
துணிந்ததனால் இசைப்பலகையும் தேய்ந்த பின்னர்
யாரை நேசிப்பது அல்லது கண்டிப்பது.
அனைத்தையும் அனுபவிக்கவும்
உலகம் உருவாகிய இடத்திலிருந்து மீள ஆரம்பிக்கவும்
எப்போதும் ஆசை கொள்ளல்.
ஆதவனின் உதிப்புடன் ஆனந்தங்கொள்ளும் பென்குயின்கள்
விளையாடியபடியே அவை வாழ்தல் என்றால்
என்னவென நமக்குக் காட்டும் வெண்சொர்க்கம் சென்று
துயில் கொள்ளுவேன்.
தூய்மை குன்றாக்காற்றில் குளிப்பேன்
முன்னரைப்போல், முன்னரைப்போல்,
குழந்தைகளின் கனவுகளில்போல்
காற்றுடன் விளையாடுவேன்.
மின்னும் மீன்களுடன் உரையாடுவேன்
முன்னரைப்போல் முன்னரைப்போல்….

000000000000000000000000

துவிதானச்சங்கேதம் – Binary code

தூசிக்குள்.
வெறுமைக்குள் சாய்ந்து சுழல்கிறது சிறுதூசிப்பம்பரம்
எந்த மர்மத்தையும் கசியவிடாது
இறுகிப்போய் கிடக்கிறது பிரபஞ்சம்
ஒளியின் வேகம் வானத்தைப் பொய் கூறவைக்கிறது
பல்லாயிரம் ஒளியாண்டுகளுக்கப்பால்
வெடித்துச் சிதறிப்போன ஒரு மாதாரகையின்
ஒளியோ ஒலியோ என் மூளையிலத்திரன்
அசைவுகளின் திசைகளை இன்று தீர்மானிக்கவில்லை
என்பதை எப்படி அறுதியாக கூறமுடியும்
என்நேரத்தை விரயம் செய்ய வரவிருக்கும் தத்துவவாதிக்கு
நான் இல்லையென்ற செய்தியைக் கூறிவிடவேண்டும்
இல்லாத இரண்டு நான்களின் உரையாடல்கள்
பிரபஞ்சம் போன்றே பொய்யானவை
எந்த நட்சத்திர வெடிப்பில்
எந்தச் சுப்பர் நோவாவிலிருந்து
புறப்பட்ட தூசியிலிருந்து உருவாகியதென் மூளை
இதற்குள் உயிரைப்பற்றியென்ன சொல்வது
ஒழுங்கு குலைந்துலைந்தழியும் ஒவ்வொன்றிற்குள்ளும்
கள்ளத்தனமாய் ஒரு விதியுண்டென்றால்
சொல்வதற்கென்னயிருக்கிறது
ஐதரசன் அணுவின் தாகத்திற்குள்ளா கிடக்கிறது.
என் மோகத்தின் இரகசியம்
‘நான்’ ஏன் தீயுடன் காத்திருக்கிறது
மற்றையதேன் தீயை யாசித்தவண்ணமாயுள்ளது
மறுக்கமுடியாதவைகளின் பொறிமுறையில்
சிக்கிக்கொள்ளல்தானே ஆசையின் இரசாயனப் புரிதல்
ஆசைகள் நட்சத்திர சிதறல்களில் பிந்திய விளைவுகள்
இது இலையுதிர்காலம்.
காற்றின் விசை ஊர்வலம்
வானிருந்திறங்கும் மழைத்துளியின் வன்மம்
வீழும் பழுப்பிலைகள்
மரத்தைவிட்டகன்று மடிய மறுக்கும் சன்னதங்கள்
முலைகள் மறுக்கப்பட்ட பின்னும்
உயிர்வளர்க்கத் துடிக்கும் பேதமைப் பிரயத்தனங்கள்
மனமொத்திசையும் மரங்களை நிர்வாணப்படுத்த
விசைக்காற்றும் வன்மத்துளிமழையும்
எந்த நேரங்காட்டியை பார்த்துவிட்டுப் புறப்பட்டுவந்தன
மரத்தின் செய்தியை எந்தத் துவிதானச்சங்கேதம் *
மழையிடமும் காற்றிடமும் கொண்டு சென்றது.
இது இலையுதிர்காலமாம்
மகரந்தவறுமையைப் பறைசாற்றும் மரங்களின்
மர்மங்களைச் கசியவிடாது இறுகிப்போய் கிடக்கிறது
பிரபஞ்சம்.

வாசுதேவன்-பிரான்ஸ்

வாசுதேவன்
வாசுதேவன்
(Visited 152 times, 1 visits today)