க.ஆதவனின் நான்கு காலக்கவிதைகள்

இலை துளிர்காலம்

தொடக்கூட முடியாதளவு
மென்மையாய்ச் சில
அரும்புகள் தெரியும்.

கரு மரங்களின்
பசிய நிற மூலமே தாங்களென
அரும்புகளின் ஆரவாரம்
நெஞ்சள்ளும்.

பனிப்பாரம்
தாங்கியது போதும்.
இனியென் இறகை
இலகாக்கிக் கொள்வேனேயென
ஒரு அம்மாப் பறவை-
தன் இறகைசைக்கும்.

குளிர் நடுங்கிச்
செத்தே போனாயா..?
உறைபனிக் கடலினுள்
சொண்டுகளால் துளையிட்டு..
கழுத்தை உள்ளிட்டு
காணேனெடி கண்மணியே
எங்கிருக்கிறாய் எனத்
தேடுமொரு அன்னம்.

இனியெலாம் சுகமே
எனும்
ஆனந்த இள மூச்சு
தெருவெலாம்.

000000000000000000

கோடை

அங்ஙனமேயாகுக வென
ஒரு மாமுனியின்
தவம் போல
முகில் மேலெழுந்து சூரியன்
வருவான்.

சிறு மழலை கூட
சிணுங்கல் நிறுத்திக்
கதிரவன் நோக்கும்.
சீரியலை நிறுத்தித்
தாயவளும் வெளிவரும் காலம்.

ஒரே வெண்மை.
பசிய பின் திரையில்
வெள்ளை வெள்ளோட்டம்.

மெல்லெனவொரு
கடற் குளியல்.
அப்புறமொரு மது.

விடிவதும்
மடிவதும்
முடிவதும் தெரியாமலே போகும்.

பனி விழும் நாட்டில்
கோடையில்
சோழகத்தை நினைக்கும் மனசு.

மனசுக்குத் தீனி போடப் போய்
உடலுக்குத் தீங்காய்
உழலுமொரு பொழுது.

கோடை
ஒரு கொடை.

பூக்களும்
புழுதி மணமில்லாத் தரைகளும்
யாருக்காகவோ
குதூகலிக்கும்
காதற் காலம்.

மெய் நிறை
வாழ்வுக்கு
பொய் போர்த்திய காலந்தான்
புகலிடக் கோடை

00000000000000000000

இலையுதிர் காலம்

இலையுதிர் காலமென்றால்
பூக்களுந்தான்.-
என்று
அன்று அவள் பிரிந்தபோது எழுதி
மனந் தேற்றிய கவிதைக் காலம்.

முதுமையைச்
சட்டென முகத்திலறையும்
மூக்கின் மேல் விழுந்த
ஒர் மஞ்சளிலை.

காதோரத்துக்
காற்றினோசையை விட
பாதை யோரத்துப்
பழுத்தலிலை யோசை
பயங்கர வித்தை காட்டிப்
பின்னர் தத்துவம் பேசும்.

வர்ணங்களில்
மனசு கரையும்.

செம்மஞ்சள் மரத் தோப்பில்
அம்மணமாய்
ஓடச் சொல்லும்
கவி மனசு.

கரையுங் காலம்.

உறங்குவதற்காய்
மெத்தை விரிப்பை
இலைகளாலும்
வர்ணங்களாலும்
தயார் செய்தாலும்
உறக்கம் வரா
இரவுகளை..
மீட்டியும் தந்தும் கொண்ட்டிருக்கும்
காலமே
இலையுதிர் காலம்.

000000000000000000

குளிர்

வெண்பஞ்சுக் குளிரள்ளி
முகம் பூசுமொரு மழலை
அது ஐஸ் என்றறியாது.

பரவிக்கிடக்குமொரு
பனிச் சறுக்கலில்…
பேரனும்
குழைந்தையாவான்.

மரமெங்கும் பனி.

முற்றமெலாம் பனி.

விறகினால்
விளக்கெரித்த காலம்
மனசைக் கவ்வும்.

வீழ்ந்து விடு.
வெண்பஞ்சு ஐஸ் மலையில்
நீந்து.

அகதி எனப் பெயர்கொள்.
அப்புறம்
பார்க்கலாம்
நான்கு காலக் கவிதையை

ஆதவன் கதிரேசர்பிள்ளை-டென்மார்க்

ஆதவன் கதிரேசர்பிள்ளை

(Visited 187 times, 1 visits today)