ஒத்திசைவு–சிறுகதை-லோகேஷ் ரகுராமன்

மூன்று வாரப் பயணக் களைப்பில் இருந்துவிட்டு அன்று காலை ஆறு மணியளவில் லோரரா தன் வீட்டு வாசலில் டாக்ஸியில் வந்திறங்கினார். நன்கு பனியிறங்கி பூமி குளிர்ந்திருந்தது. வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்தது. ஈர மண்ணில் டாக்ஸியின் டயர் தடம் பதிந்திருந்தது. அவர் இறங்கியதன் சலசலப்பை அறிந்து கொண்ட வாசலில் கட்டப்பட்டிருந்த அவரது நாய் அவரை நோக்கி தாடை உயர்த்தி எழுந்து கொண்டு குழைந்து அவரிடம் வரப்பார்த்தது. ஆனால் கட்டப்பட்டிருந்ததால் அது இயலவில்லை. அதை கண்டுவிட்ட லோரரா அதனை தடவிக்கொடுத்துவிட்டு சங்கிலியை அவிழ்த்துவிட்டு கொதிப்புடன் வீட்டிற்குள் நுழைந்தார்.

“இத ஏன் வீட்டு வாசல்ல கட்டினேள். இந்த வீட்ல எனக்குன்னு ஒண்ணும் நான் பண்ணிக்க கூடாதா? “

“பழனிய கூப்டு நான் தான் கட்டச்சொன்னேன்” என்றாள் அவரது மனைவி. கையில் கோலமாவுடப்பாவுடன் வாசல் பக்கம் போனாள்.

“அப்படி என்ன குடிமுழுகி போற விஷயம். இது என்னோட பெர்சனல் ரூம்லயே இருக்கட்டும்னு நான் சொல்லிருக்கேன்ல” என்றார்.

“நேத்து உங்க அண்ணா பாராயணம் பண்ணிண்டிருந்தார். அது அவர் மேலயே பட்டுண்டு இருந்தது. போதாக் கொறைக்கு அவர் பஞ்சாத்தரத்துல இருந்த ஜலத்த நக்கித்து. உங்க அண்ணா என்ன சொன்னார் தெரியுமோ? நாயக்கொண்டு நடுவீட்ல கட்டினா இதத்தான் செய்யும்’ னு. எனக்கு என்ன பண்றதுண்ணே தெரியல.” என்றாள்.
பின்னர் “இங்க பாருடி” என்று கோவம் உச்சிக்கு ஏற அடிக்க வந்து விட்டார்.

“ஏன் வந்ததும் வராததுமா இப்படி பண்றேள்? இந்த நாய கட்டிண்டு ஏன் இப்படி அழறேள்? இதுவா கடைசி வரைக்கும் உங்க கூட வரப்போறது? “ என்றாள்.

அவர் “ஆமாண்டி ஆமா. கண்ணதாசன் பாடினானே. வீடு வரை உறவு. வீதி வரை மனைவி. காடு வரை பிள்ளை. கடைசி வரை யாரோ? னு. அதுக்கு எனக்கான பதில் இந்த நாய் தான். உம் புள்ளையாண்டான் எங்கயாவது வெளிநாட்டுல உக்காந்துண்டுருப்பான். கொள்ளி வைக்கக்கூட வருவானோ மாட்டானோ. ஆனா நான் பாடை’ல ஏறி நாலு கால் ஊர்வலத்துல போகும் போது இது அதோட நாலு காலோட என் பின்னாடியே வரும். மயானத்துல நான் ஏரிஞ்சு சாம்பலானதுக்கப்புறம் அந்த சாம்பலோட எதத்துல மொகத்த பொதச்சுண்டு படுக்கும். வெட்டியான் வந்து வெரட்டி வெரட்டி விட்டாலும் போகாம அங்கேயே திரும்பி திரும்பி வந்து படுத்துண்டுருக்கும்.”

இதைக்கேட்ட அவள் அழாத குறைதான். என்னமோ போல் ஆகிவிட்டது அவளுக்கு. அதும் இந்த காலை வேளையில்.

“என்ன மச்சுனரே, ஏன் ரஞ்சனி மேல இப்படி கோபிக்கறேள்? இந்த ஒன்னுமில்லாத விஷயத்துக்கு போய்” என்று சமையல்கட்டு வேலையைவிட்டு வந்து கேட்டாள் அவரது அண்ணாவின் மனைவி.

“மன்னி நீங்க ஒன்னும் ஒங்க சொந்த தங்கையாட்டம் இவளுக்கு பரிஞ்சுண்டு வரவாண்டாம்” என்று அவரது மண்ணி மேலும் ஒரு எகிறு எகிறினார். அப்படி சொன்னது அவளுக்கும் தூக்கிவாறிப் போட்டது. அதை அவள் எதிர்பார்க்கவில்லை. லோரரா மனைவிக்கும் மன்னியை இப்படி சொல்லிவிட்டாரே என்று இருந்தது.
எப்போதும் நாய்ச்சண்டை தான் அவர் வீட்டில். வேறு எதற்கும் அவர்கள் வீட்டில் பிரச்சனை வராது. அண்ணாவும் அவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே குடித்தனத்தில் வாழ்ந்து வந்தனர். இவர் மனிதவியலாளர். பல நாள் பயணத்திலும் ஆய்வகத்திலும் இருப்பார். இவரது அண்ணா விலங்கியல் பேராசிரியர். மேலும் பாகவத ப்ரியர். க்ருஷ்ண பக்தர். “பிரளயப யோஜித லே ஹரே முகுந்தா” என்று ஜெயதேவர் அஷ்டபதியை எப்போதும் முணுமுணுத்துக்கொண்டிருப்பார். பால்யத்தில் கும்பகோணத்தில் இருந்தபோது அவர்கள் அம்மா அவர்கள் இருவரையும் பச்சயப்ப முதலித் தெருவில் அஷ்டபதி கிளாசுக்கு இழுத்துக்கொண்டு செல்வாள். அதனுடைய தாக்கம் தான் இன்றும் அண்ணாவின் நாவில் தவழ்கிறது.

அண்ணா மன்னியும் அவருடைய மனைவியும் வெவ்வேறு இடத்திலிருந்து வந்து இங்கு வாக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்குள் பூசல்களே இருந்தது கிடையாது. அவ்வளவு ஒற்றுமை. அக்கா தங்கை போல் இருப்பார்கள். அண்ணா லோரராவை விட இரு அகவை மூத்தவர். ஆனாலும் இருவருக்கும் இருபத்தைந்து வயதிற்குள்ளேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. சொல்லப்போனால் இருவருக்குக்கும் ஒரே நாளில் தான் திருமணம் நடந்தது. அந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கான கல்யாண செலவு ஏகத்துக்கும் இருந்தபோது, இவர்களது அம்மா அவராகவே முன் வந்து இரண்டு பெண் வீட்டாரிடமும் பேசி ஒத்துக்கொள்ள வைத்து, ஒத்த மனுஷியாக இருவரின் கல்யாணத்தையும் ஒரே மேடையில் நடத்தி வைத்தார். இரு பெண் வீட்டாரின் சுற்றத்தினரும் அடிவயிற்றுப் புகைச்சலுடன் ‘இவாளுக்குன்னு அடிச்சது பார் யோகம். பாதி செலவ மிச்சப்படுத்திட்டா பாத்தியா. சம்பந்தம் பண்ணிண்டா இப்படி ஒரு எடத்துல’னா பண்ணிக்கணும். கெட்டிக்காரா” என்று விட்டு மணமக்களுக்கு அட்சதையிட்டுச் சென்றனர். இவர்கள் இருவருக்கும் தலா ஒரு ஒரு மகன் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் ஒரே அகவை. ஒருத்தனுக்கு இரண்டு நாள் பிந்தி இன்னொருத்தன் பிறந்தான். இப்போது அவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தான் உலகம் தெரியட்டும் என்று அவர்களை தில்லியில் ஒரு பிரபல ரெஸிடென்ஷியல் பள்ளியில் சேர்த்து விட்டிருக்கின்றனர்.

லோரராவிற்கு பொதுவாகவே நாய்பித்து உண்டு. சதா சர்வகாலமும் அதனுடனே செலவிடுவார். அவர் அதை தன்னோடு தன் அலுவலகத்திற்கும் ஆய்வகத்திற்கும் கொண்டு செல்வார். ஆனால் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது மட்டும் வீட்டில் தான் விடவேண்டும். வேறு வழியில்லை. அலுவலகத்தில் அந்த நாய்க்கு ஏக உபச்சாரம். வேளா வேளைக்கு பால், பிஸ்கட், பருப்பு சாதம், பால் சாதம் என்று. அதை சைவ நாயாகவே வளர்த்தார். அலுவலகத்தில் ப்யூனாக இருந்த முருகேசன் தான் அவர் வேலையாக இருக்கும் போது அதனைப் பார்த்துக்கொள்வான்.

வீட்டில் இருக்கும்போது நாள் தவறாமல் தன் நாயுடன் காலை நடைக்குச் செல்வார் லோரரா. பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இவர் நாயைக் கூட்டி வந்தாரா? இல்லை நாய் இவரை கூட்டிக்கொண்டு வந்ததா என்று. அப்படி அவரை இழுத்துக்கொண்டு நடக்கும். இவரும் மூச்சிரைக்க அதன்பின் ஓடி வருவார். அவர் நாய் வளர்ப்பது வீட்டில் யாருக்கும் பிடிக்காது.

“அந்தப் பூனைய மடியில கட்டிண்டே திரியுங்கோ” என்று அவரது மனைவி திட்டாத குறையாக சொல்ல, அதனுள் ஒரு தர்க்கப்பிழை கண்டுபிடித்து “இது பூனை இல்லடி நாய்டி” என்பார் வாஞ்சையாக அதை தடவிக்கொடுத்தபடி. அவள் “தலையெழுத்து” என்று தலையில் அடித்துக்கொண்டே போவாள்.
ஒருமுறை மனைவியிடம் அவர் “மனுஷன் காட்டுல வேட்டயாடிண்டு திரிஞ்சிண்டுருந்தான். அவன காட்டுலேந்து தரதர’னு இழுத்துண்டு வந்து, தாக்குதலுக்கும் தற்காப்புக்குமான கோட்ட தாண்டி அழச்சிண்டு வந்து, அவனோட வேட்ட கொணத்த அழிச்சு, ‘தோ பார்டா, இனிமே இதான்டா உன்உலகம்’னு இங்க வாழ வழிகாமிச்சது இதான். இது இல்லன்னா வேட்டயாடிண்டே இருந்துருக்க வேண்டிதான். அப்படியே இருந்திருந்தா வெவசாயமும் இருந்துருக்காது, நாகரீகமும் வளந்துருக்காது” என்றார்.

‘போரும்… உங்களோட நாய் பெருமை’ என்று அலட்சியப்படுத்திவிட்டாள்.

பின்பொருமுறை “நாய்’னா ஏன்டி எல்லாரும் எளக்காரமா பாக்கறேள். மனுஷன் நாயால் வழி நடத்தப்படுறான். இல்லாட்டி இந்த வாழ்க்கை நமக்கு சாத்தியமில்லை கேட்டுக்கோ. நான் சொன்னா நீ நம்புவியோ, மாட்டியோ. நான் என் வேல சம்பந்தமா மத்திய பிரதேசத்தோட பீம்பேத்கா குகைகளுக்கு போயிருந்தேன். நாகரிகமெல்லாம் பொறக்கறத்துக்கு முன்ன குகைல வாழ்ந்த மனுஷா வரஞ்சு வச்சுட்டு போன சுவரோவியம். அதுல ஒருத்தன் தன் நாயோட அது கழுத்து சங்கிலிய புடிச்சுண்டு நிக்குறா மாதிரி ஒரு ஓவியம். அசந்து போய் நின்னுட்டேன் தெரியுமா? அந்தச் சங்கிலி இன்னும் என் கையில இருந்துண்டே இருக்குறா மாதிரி தோணறதுடி ரஞ்சு“ என்று சொல்லியிருக்கிறார். அதை அவளால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் அனுமதிக்க முடியவில்லை.

அன்று லோரரா சீக்கிரமாகவே தன் காரில் நாயை ஏற்றிக்கொண்டு ஆய்வகம் கிளம்பிவிட்டார். இந்த இரு பெண்களுக்கும் ஏதும் புரியவில்லை. “புருஷனாப்பட்டவனுக்கு இத்தன ஆங்காரம் கூடாது” என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். அண்ணாவும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் கழித்தும் லோரரா வீடு திரும்பவில்லை. ஆய்வகத்திற்கு ஃபோன் செய்த போது எடுக்க மறுத்துவிட்டார். பின்னர் முருகேசனுக்கு ஃபோன் பண்ணி கேட்டார்கள். அவனும் அவர் வேலையாக இருக்கிறார். நீங்கள் ஒன்னும் கவலைப்படவேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னான். ஆனால் அண்ணாவிற்கு மனது கேட்கவில்லை. எங்கு இவன் கோபித்து கொண்டிருக்கிறானோ என்னவோ சமாதானப்படுத்தப் போவோம் என்று நினைத்து லோரராவைப் பார்க்கக் கிளம்பினார்.

00000000000000000

“டேய் லோரரா…என்னடா இதுக்குப்போய் கோச்சுண்டு வந்துட்ட. எனக்கு கிருஷ்ண பித்து மாதிரி. உனக்கு நாய் பித்து புடிச்சுருக்குடா. நாய்’னா லேசு பட்டதுன்னு சொல்லல. கால பைரவர் ஆச்சே.. இருந்தாலும்..” என்று இழுத்து “சரி பேசாம ஆத்துக்கு வா” என்று சொல்லிக்கொண்டே உள் நுழைந்தார். லோரராவின் நாய் ஆய்வகத்தின் பிரதான கதவிற்கு பின் நின்றிருந்தது. அண்ணாவைக் கண்டதும் வாலாட்டிக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்தது. பின்னர் கால்களை மடக்கி அவர்களுடன் மூன்றாவது நபர் போல அமர்ந்துகொண்டது.

“அதலாம் ஒன்னும் இல்லண்ணா… அந்த கோபமெல்லாம் அப்பவே தணிஞ்சாச்சு” என்றார் லோரரா.

“பின்ன ஏன்டா, ஆத்துக்கு வரல”

“அண்ணா நான் உங்கள்ட பலநாள் கேட்டுருக்கேனே அதுக்கு பதில் தெரிஞ்சுடுத்து”

“என்னடா கொழப்பற. அப்படி என்னத்த தெரிஞ்சுண்ட நீ?”

“அண்ணா நான் சமீபத்துல ஆஸ்திரேலியா போயிருந்தேனோல்லியோ”

“ஆமா உன் வேல நிமித்தமா போயிருந்த”

“அங்க யோலுங்கு பழங்குடியின மக்கள நாங்க ஆராஞ்சுண்டிருந்தோம். அவா ஆஸ்திரேலியாவின் தொல் பழங்குடிகள். அவளோட வாழ்க்கை முறைய பார்த்துண்டிருந்தோம். கணக்கெடுத்து பாத்ததுல அங்க அந்தப் பழங்குடி பெண்கள்லாம் வித்தியாசமான ஒரு வழக்கம் கொண்டிருக்கா ”

“என்ன வழக்கம்டா அது?”

“அந்த பழங்குடி பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி எப்போ வர்றது தெரியுமோ? அத்தனை பேருக்கும் சொல்லி வச்சாப்ல சரியா அமாவாசை அன்னிக்கு.”

“என்னடா சொல்ற, அத்தனைப் பேருக்கும் ஒரே சமயத்துலயா?”

“ஆமா, இந்த நிலவு இருக்கே. அதுதான் காரணம். அந்த நிலவு பூமிய சுத்த எடுத்துக்கற நாட்கள் இருபத்தெட்டு. பெண்ணோட மென்ஸஸ் பீரியடும் இருபத்தெட்டு நாளுக்கு ஒரு முறை தானே. ‘மென்ஸஸ்’ னாலே ‘மாதம்’னு அர்த்தம் லத்தீன்ல. நம்மளோட ‘மாதம்’ நிலாவக்கொண்டு தானே கணக்கறியப்பட்றது. நிலா சொல்றது அத்தனை பெண்கள்’டயும் நான் பெளர்ணமியாகும் போது நீ பூப்ப. நான் அமாவாசையாகும் போது நீ உதிர்வ’ னு. அதுக்கேத்த மாதிரி இவாளும் ஒத்து போயிருக்கா பாருங்கோ. இத ‘லூனார் இன்ஃப்ளுயன்ஸ் ஆன் மென்ஸ்ட்ருயேஷன் – ஓவுலேஷன் ஆன் ஃபுல் மூன் – மென்ஸ்ட்ருயேஷன் ஆன் நியூ மூன்’ னு விளக்கிச் சொல்ல முடியும். முழு நிலா வெளிச்சத்துல முட்டை செழிப்படஞ்சு இருக்கும். ஆனா மாதவிடாயின் போது முழு இருட்டு வேணும். இப்ப புரியறதா ? நம்ம சொந்த ஊர்ல இருக்கும் எட்டு கட்டு அக்ரஹாரத்து வீட்டுல நம்ம அத்தப் பாட்டி சித்திப் பாட்டி காலத்துல தூரமானாள்’லாம் கடக்கோடியா இருக்கற இருட்டு அறைக்குள்ள அடைஞ்சு கெடப்பானு நம்ம அம்மா சொல்வாளே ஞாபகம் இருக்கா?”

‘இதுக்கு மேல என்ன ஆச்சரியம்’னா. நீங்கள் கேள்விபட்ருப்பேளே ‘ஆல்ஃபா மேல்’ கான்சப்ட். தாட்டான் குரங்கு’னு சொல்வாளே ஆதி காலத்துல. ‘இனக்குழுத் தலைவன்’ அப்படியொரு கான்சப்ட் அந்த பழங்குடிகள்’ட இன்னும் அழியாம இருக்கு. அங்குள்ள அத்துனை பெண்களும் அவன அடையவே பூக்கறா”

“என்னடா சொல்ற. புரியலயே”

“நீங்க உங்க நாமசங்கீர்த்தனத்துலயும் பஜனேலயும் குறிப்பிடுவேளே ஜீவப்பிரம்ம ஐக்கியம் அதான்.”

‘இது என்னடா புது பூதம்?’

‘அதாண்ணா, மனுஷாளாகிய நாமெல்லாம் ஜீவாத்மா அதாவது கோபிகைகள். பரப்ரம்மமாகிய பகவான் கிருஷ்ணர் பரமாத்மா. நாமெல்லாம் கிருஷ்ணனை அடையும் போது தானே முக்தி கிட்றது. அதானே ஜீவபிரம்ம ஐக்கியம்.”

“ஆமாம் அதுக்கென்ன இப்போ?”

“அதான் கோகுலத்துல கோபிகைகள்’லாம் ஏன் கிருஷ்ணன தேடிப் போறா? கிருஷ்ணன் ஒரு ‘ஆல்ஃபா மேல்’ இல்லியோ. அதனால தானே. அந்த பழங்குடில இருக்குற ஒரு ஒரு பெண்ணும் அந்த இனக்குழு தலைவனுக்காக பூக்கறா. தன்னை தயார்படுத்திகறா”

“நம்பவே முடியல. நாகரிகம்’ங்கிற நெழல் படாத போது நமக்கு என்ன என்ன தரிசனம்லாம் தென்படறது பாரு. ஆச்சரியந்தான்”

“ஆமாண்ணா. அதுல பாருங்கோ ஒரு முரண். இயற்கையோட இந்த தாய விளையாட்ட. அதாவது ஒரு ஆணோட ஆயிரமாயிரம் உயிரணுக்கள் பெண்ணோட ஒரு கருமுட்டைக்கு போட்டி போட்றது. ஆனால் இந்த பெண்கள் எல்லாரும் ஒரு ஆணுக்காக போட்டி போட்றா. வேடிக்கயா இல்ல” என்று இளித்தார் லோரரா.
“மேலும் அந்த ஆல்ஃபா ஆண் அவா அத்தன பேத்தோடயும் ஒரே சமயத்துல கூட முடியாது. யாராது ஒருத்தரத்தான் அவன் புணர முடியும். இயற்கை அங்க ஒரு லாக் போட்டு வச்சுருத்து பாருங்கோ.”
இப்போ கூடப்படாம இருக்கும் மிச்ச பெண்கள்’லாம் இருக்காலோல்லியோ அவாள்டேந்து தான் நான் ஆய்வ தொடரப்போறேன்.

நான் அவாளோட நடத்தை மாற்றங்கள கணிச்சு தொகுத்து வச்சுண்டுருக்கேன். மூணு ஊகங்களா அத முன்மொழியப் போறேன். அவாள்டேந்து ஆரம்பிச்சு நாகரிகம் முதிர்ச்சி அடைஞ்சு இருக்குற இப்ப வரைக்கும் இருக்குற சங்கிலி தொடர்ப எடுத்துவிளக்க போறேன் கோர்வையா. எதையும் கண்டும் காணாம அப்படியே விட்றதுக்கு தெரிஞ்சவரை சரடுகள பிரிச்சும் சேர்த்தும் எல்லா சாத்திய கதவுகளயும் தொறந்து வச்சுட்றது நல்லது பாத்தேளா.

முதலாவது ஊகம் மிச்சமிருக்கும் பெண்கள்லாம் அந்த குழுவின் அடுத்த படிநிலைகள்ல உள்ள ஆண்களை அதாவது பீட்டா, காமா ஆண்களை தேர்வு செஞ்சு கூடலாம். இப்படி பண்றதுனால அந்த இனக்குழுல ‘ஆல்ஃபா மேல்’ கான்சப்டே பின் வரும் காலத்தில வழக்கொழிந்து போய்டும். எல்லா ஆண்களுக்கும் சமமான வாய்ப்புகள் வந்துடும்.

ரெண்டு, ஒரு இனக்குழு ‘ஆல்ஃபா மேல்’ கான்சப்ட தக்க வச்சுக்கணும்’னா, அவா பெண்கள் கொஞ்சம் வளஞ்சு குடுக்கணும். அதாவது, அவாளோட மாதவிடாய் சுழற்சிய ஒரே சமயத்துல வர மாதிரி இல்லாம விலக்கிண்டு ஆளாளுக்கு தனித்தனி நாட்கள கொண்டிருக்கணும். அப்படி இருந்தா ஆல்ஃபா மேலோட ஆதிக்கம் தொடரும். அவன் வெவ்வேறு நாட்களில் அவாளோட கூட முடியும். இதுல பாருங்கோ ஒரு இனக்குழுல ஒரு ஆணோட ஜீன் ஆதிக்கத்த உறுதிபடுத்தற ஆற்றல் பொண்ணுக்குத் தான் இருக்கு. அதாவது அவன ‘டாமினண்ட்’ ஆக்குறதும் ‘டம்மி’ ஆக்குறதும்.

மூனு, எந்த ஆணோட வாசனையும் வேணான்னு ஒதுக்கும் பெண் சமூகம். இதுல இரு வேறு ஊகங்கள் இருக்கு.
முதலாவதா ஒரு பொண்ணு தன்னந்தனியளாவே இருந்துக்கறது ஒரு ஆணோட தேவயில்லாம. இதுலேந்து அந்த சமூகத்துக்கான ‘ஆல்ஃபா ஃபீமேல்’ உருவாயிடலாம். அப்றம் பெண்ணியக் குரல்கள் ஒலிக்கலாம். பெண்ணியம் ங்கறது ஆணோட நிராகரிப்பு லேந்து எழறது தானே. ரெண்டாவதா தன்பால் ஈர்ப்புக்கொண்டு அவாளுக்குள்ளயே உறவு வச்சுக்கறது.” என்று விளக்கினார் லோரரா.

‘ஹ்ம்ம் என்னனம்மோலாம் சொல்றியே நீயாச்சு உன் உத்யோகமாச்சு’ என்று சலித்துக் கொண்டார் அண்ணா.
‘இப்ப சொல்லுங்கோ நான் அடிக்கடி கேப்பேனே உங்கள்ட அந்த கேள்விய, அதுக்கான பதில’

“என்னடா சின்ன கொழந்த மாதிரி வெளயாட்ற. எந்த கேள்வி? எந்த பதில்?”

“ரஞ்சுவும் மன்னியும் எப்படி இப்படி ஒத்தருக்கொருத்தர் அனுகூலமா ஒத்துமையா இருக்கான்னு கேப்பேனே?”

“ஓ அதுவா, நான் தான் பலதடவ சொல்லிருக்கேனே. அதலாம் நம் குலதெய்வத்தின் அணுக்ரஹம். பித்ருக்களின் ஆசிர்வாதம்’னு” , ‘அதலாம் ஒன்னும் கிடையாது’ என்று எள்ளினார் லோரரா.

“போரும் டா. லோகத்துல இனி வேற யார் கண்ணும் பட வேணாம். உன் கண்ணே போதும். ப்ராரத்த கர்மா. ஆத்துக்குப் போய் மொத காரியமா அவாளுக்கு த்ருஷ்டி சுத்திப் போடணும்.”

“இல்லண்ணா அந்த பழங்குடிகள்-ட ஒரு பழங்கதை ஒன்னு இருக்கு. ஒரு அக்காவும் தங்கையும் சடையொட்டி பிறந்தவர்களாம். அவா கூந்தலால இணைக்கப்பட்டிருக்கா. அவா ரெண்டு பேரும் பெரியவளா ஆனதுக்கப்றம் ஒரு பூரண அமாவாசையின் போது அவா ரெண்டு பேரும் அவா ரெண்டு கால்களையும் அகட்டிண்டு சேந்தாமாதிரி நெலத்துல உக்காந்துருக்கா, அப்போ அவா தொடயிடுக்குலேந்து ரத்தம் வழிஞ்சுதாம், அந்த மாதவிடாய் ரத்தம் ரெண்டும் கலந்து ஒரு பெரிய ஆறா ஓடறதாம்.”

“என்னடா இது, எதோ அமானுஷ்ய கதை மாரி’னா இருக்கு.”

“மனுஷாள்ட ஒளிஞ்சிருக்கற இத்தகைய அமானுஷ்யங்கள வச்சு அவாளோட ஆழ்மனத ரொம்ப தெளிவா புரிஞ்சுக்க முடியும். அவாளோட வாழ்க்கையோட எதோ ஒரு புள்ளிய அந்த அமானுஷ்யங்கள் தொட்டிருக்கும். அதுலேந்து இந்த மாதிரி கதைகள் உருவாகியிருக்கும். நாம செய்ய வேண்டியது அதுல இருக்கற உண்மையத் தேடி போறது மட்டும் தான்.”

“இதலாம் பழம்பாட்டு. கட்டுப்பெட்டித்தனம்.”

“இது கட்டுபெட்டித்தனம் இல்ல. இந்த இணைப்ப நீங்க ஒன்னும் சரியா புரிஞ்சுக்கல.
அந்த கதையில் நான் கண்டுண்டது என்னன்னா, அக்கா தங்கை ரெண்டு பேரும் தனக்கு மேல தன் கூந்தலாலும் தனக்கு கீழ தன் மாதவிடாய் குருதியாலும் கட்டப்பட்டுருக்கா.”

‘மாதவிடாய் சுழற்சி ஒத்து வர்றதுனு சொன்னேனே. தனித்த இனக்குழுக்களில் உள்ள பெண்கள் வெறும் நிலவுனால மட்டும் ஒத்திசைந்து போகல. அவா அவாளுக்குள்ளயே உரையாடிக்கறா. அதாவது அந்த ஒத்திசைவுக்கான ஆதியும் அந்தமும் இல்லாம போனாலும், காரணமும் கர்த்தாவும் இல்லாம போனாலும் கூட அந்த ஒத்திசைவு மட்டும் நடந்துண்டே இருக்கு.”

“அது சரி அந்த உரையாடல் எப்படி அவாளுக்குள்ள நடக்கறது?”

“அதுக்கு அறிவியல் தரப்புலேந்து ஒரு விளக்கம் இருக்கு. பெரமோன்கள்‘னு அதுக்குப்பேரு. அதாவது உடம்புல சுரக்குற ஒருவித வேதிப் பொருள். அது மூலமா ஒருத்தர்டேந்து ஒருத்தருக்கு தெரிய வருது. இப்போ பாருங்கோ, ஆண்களோட ஷர்ட்’ட அவாளோட காதலிகள் எத்தனை ரகசியமா நுகர்ந்து பாத்துருப்பா? அந்த ஷர்ட் க்ளாத்தின் வாசனைய மீறி அல்லது டிடர்ஜெண்ட்’டோட வாசனைய மீறி அந்த ஷர்ட்’ல அவங்களோட வாசனைய அவாளால இணங்கண்டு கொள்ள முடியறது தானே. அது போல ஒரு பொண்ணோட மாதவிடாய் குருதியின் வாசனையே இன்னொரு பொண்ண மாதவிடாய்க்கு தயார் படுத்தறது. அந்த குருதியில நொதிக்கும் ஒரு வேதிப் பொருள் அதற்கு காரணமா இருக்கு. ஒருத்தியோட ரத்தக் கறைய இன்னொருத்தி பாத்தான்னாலும் அப்படி ஆகும் வாய்ப்பு இருக்கு.”

“மனசளவுலயும் உணர்ச்சி வசத்தாலயும் தனிப்பட்ட முறையில் ஒன்றி இருக்கும் பெண்கள் குழுக்களில் இந்த மாதிரி நிகழ்வுகள் இருந்துண்டுருக்கு. நடந்துண்டுருக்கு.”

“மேலும் கணக்கெடுப்புல இந்த மாதிரி நிகழ்வுகளின் சாத்தியக் கூறுகள் இரண்டு பெண்கள் மட்டுமே உள்ள குழுக்களில் அதிகமா காணப்படறது’னு தெரியவருது. இணை’னா குறைந்த பட்சம் ரெண்டு பேராது வேணுமோனோ. உருப்படிகளின் எண் குறையும் போது சாத்தியம் ஏறும்’னு தானே நிகழ்தகவு விஞ்ஞானம் சொல்றது.”

“அதான் நீங்க சொல்லுங்கோ இப்போ. ரஞ்சுக்கு மதன் பொறந்த போது அவளுக்கு சீக்கிரமே பால் கட்டிண்டுடுத்து. அப்போ மன்னி தானே மதனுக்கு பாலூட்டினா?”

“ஆமாம் அப்போ மணிக்கும் மதனுக்கும் சேந்தா மாதிரி பால் குடுத்தா ராஜி.”

“மதனும் மணியும் கிட்டதட்ட ஒரே சமயத்துல தானே பொறந்தார்கள்?”

“ஆமா.”

“ரஞ்சுவுக்கும் மன்னிக்கும் தூர நாள் எப்போதும் ஒன்னாவே தான வரும். ஓரிரு நாள் முன்ன பின்ன வரும்”

“சரியாப்போச்சு. அப்போ ராஜியும் ரஞ்சுவும் அவாள அறியாமலே ஒத்திசையறானு சொல்றியா?”

“ஆமாம். நம்ம அம்மா நமக்கு ஒரே நாள்ல கல்யாணம் பண்ணி வச்சாளே அந்த நாள்’லேந்து இது தொடர்றது. நாமளும் அப்பலேந்து இப்ப வரை ஒரே வீட்ல தான குடித்தனம் இருக்கோம். நம்ம கல்யாணம் என்னவோ தன்னிச்சையா நடந்ததுதான். அதுக்கப்றம் இதுவும் ஒரே நாட்கள்ல நடக்கறது’னால தன்னிச்சைன்னு சொல்லி ஒதுக்கிட முடியாது. பரஸ்பரம் உரையாடிண்டு வரா ஒருத்தருக்கொத்தர். அந்த உரையாடலே ஒத்துப்போக வைக்கிறது அவாள இந்த விஷயத்துல.”

“இதுதான் அவாளோட அன்யோன்யத்துக்கு காரணமா இருக்கறது.”

இதைக் கேட்டவுடன் அண்ணா சற்று அமைதியானார். இப்படி எல்லாவற்றையும் ஒற்றைப் படையாக பார்க்க முடியுமா என்ன? அவருக்குள் ஒரு கேள்வி இருந்தது. அதை தன் தம்பியிடம் கேட்கலாமா என்று யோசித்தார். அந்த அமைதி லோரராவைச் சீண்டியது.

“என்னண்ணா, எதும் பேசமாட்டேங்கறேள்?”

“ஒன்னு கேட்கணும்னு தோணறதுடா.”

“கேளுங்கோண்ணா.”

“இல்ல வேணாம் விடுடா.”

“பரவால்ல கேளுங்கோ. என்ன இத்தன தயக்கம்?”

“இல்ல வேணாம்.” என்றார்.

“என்ன சந்தேகம்ணா சொல்லுங்கோ?”

இவன் தெரியாமல் தான் இந்த கேள்வியைக் கேட்கிறானா இல்லை தெரிந்து கொண்டே கேட்கிறானா என்று எரிச்சல் வந்தது அண்ணாவிற்கு. ஏன் நம் வாயிலிருந்து வார்த்தையைப் பிடுங்குகிறான் இவன் என்று உள்ளுக்குள் திட்டினார். ஒருவேளை இப்படி ஒரு தரப்பை இவன் யோசிக்கவேயில்லையா? என்னென்னவோ யோசித்திருந்தும் இது ஏன் அவன் மூளைக்கு அகப்படவில்லை? ஒரு மானுடவியலாளராக இவனது ஊகங்கள் சரிதான். ஆனால் தன் வீட்டிலேயே அதற்கான பதில்களைத் தேடிக் கொள்வது எத்தனையொரு அபத்தம். ஒரு சம்சாரியாக இல்லத்தரசனாக அவன் யோசிக்கவே இல்லையா? தனக்கு தெரிந்தவற்றையெல்லாம் புட்டு புட்டு இன்ன இன்ன பெயர் சொல்லி இன்ன இன்ன காரணங்களோடு அந்த அந்த பெட்டிக்குள் அடைக்க முயல்வது எந்த மாதிரி வகைமை?

பின், நிலை மீண்டு லோரராவிடம் “இல்லடா ராமா, நம்ம ரெண்டு பேருமே ஒத்த கொழந்தயோட நிறுத்திண்டோம். நீயும் பயணம் ஆய்வகம்னு போய்டற. நானும் காலேஜ் விட்டா கிருஷ்ணா ராமான்னு பஜனைக்கு போயிண்டுருக்கேன். ஆத்துல அவா ரெண்டு பேரும் தனியா தானே இருக்கா. நாமளும் அவாள கண்டுக்கறதே இல்ல தானே. நீ சொன்ன மூனாவது ஊகத்தின் படி அவா ரெண்டு பேரும்…
எசகுபிசகா எதாவது….” என்று தயங்கி குரலின் ஸ்தாயி குறைய அந்த வாக்கியத்தை நிறைவு செய்யாமல் இழுத்தார்.

பிறகு அவரே தான் சொல்லியவற்றை திரும்ப பெறுபவர் போலவோ இல்லை காற்றில் அவர் உதிர்த்த அந்த சொற்களை அழிப்பவர் போலவோ “மஹாபாவி நான். நெனைக்க கூடாததலாம் நெனச்சுண்டுருக்கேன். கேட்கக் கூடாததலாம் கேட்டுண்டுருக்கேன். என் குடியக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு நானே தான். இனி எப்படி இந்த எண்ணத்தோடு அவா கண் முன்ன முழிக்கறது” என்று புலம்பி ‘இல்ல. இல்ல. நாமளே நம்பாத்துப் பொம்மனாட்டிகள சந்தேகப்படப்டாது’ என்று ஒருகணம் தேற்றிக்கொள்ள முயன்றார்.

அண்ணாவைப் இப்படிப் பார்த்த பிறகு லோரராவிற்கு ஒருவகை குற்றவுணர்வு தொற்றிக் கொண்டது. அது அவரது அறிவால் விளைந்தது. அறிவால் நாம் எதையெல்லாம் அறிய – அளக்க நேரிடுகிறது. ஆழியை கைத்தலத்தில் அடக்கி அறிய முடியுமா என்ன? நாவில் இட்டு அதன் கரிப்பை அறியலாம். கையின் குழிவைக் கொண்டு அதன் ஆழத்தை அறியமுடியுமா என்ன? அறிவதன் எல்லை தான் எதுவரை? சிற்றிடைவெளியில் மொத்தமும் நழுவி நொறுக்கப்பட்டுவிட்டதே. என்ன செய்ய இயலும் இனி?

இப்படி ஒரு சந்தேகப் பேயை ஏவி விட்டது சரியாகுமா? எவருக்கும் எளிதில் எழக்கூடிய சந்தேகம் தான் இது. நான் அதனை பெரிதாகவே பொருட்படுத்தவில்லையே. ஆனால் அண்ணாவிடம் எப்படிச் சொல்லி தெளிவடைய வைப்பது. அதில் நான் கோட்டைவிட்டு விட்டேனே. ஒரு வேளை நான் அதைப் பொருட்படுத்தாதைப் போல பாவனை செய்கிறேனா என்ன?

எனக்குள் ஏன் அந்தக் கேள்வி அடிக்கடி எழுந்தது? நான் ஏன் அதை கேட்டுக்கொண்டேயிருந்தேன்? எனக்குள் இருந்த அந்த சந்தேகம் தான் என்னையறியாமல் அந்த கேள்வியாய் எழுந்ததா? நான் எடுத்துரைத்த இத்தனை ஊகங்களும் விளக்கங்களும் என் சந்தேகத்தை அண்ணாவிற்கும் கடத்தும் பொருட்டா? கடத்தும் போது தான் சந்தேகவுணர்வு வீரியம் பெறுகிறதோ என்னவோ? இல்லை வீரியம் பகிரப்படுதலினால் குறைகிறதா?
லோரரா பிறகு நன்கு தொகுத்த தன்னிலை விளக்கம் ஒன்றை வைத்தார். ‘நான் அவாளோட அன்யோன்யத்துக்கான இயற்கையாவே உருவான அடிப்படை காரணத்த தான் எடுத்துச் சொன்னேண்ணா. அவாள தப்பா நெனைக்கல. எல்லாத்துக்கும் ஒரு ஆழம் இருக்கு அத மட்டும் தான் நாம எடுத்துக்கணும். மேல மேலனு வந்து பாத்தா நமக்கு மிஞ்சறது என்னவோ நுரையான நுரையா இருக்கும் வெறுமை தான். அதனால இத மனசுல வச்சுண்டுருக்காதேள். போட்டு கொழப்பிக்காதேள்’. இதைச் சொன்னபிறகு அந்த வார்த்தைகளை தனக்குள் மீண்டும் சொல்லிப்பார்த்துக்கொண்டார். அது அவரைக் கொஞ்சம் தேற்றுவதாகப்பட்டது.
‘சாதக பாதகங்களை இப்படி ஆத்து தண்ணீல விழுந்த இலையா சாதாரணமா கடந்து செல்லக்கூடியவனா இவன்?’ என்று எண்ணிக்கொண்டார் அண்ணா. எதற்கு இதையெல்லாம் என்னிடம் சொன்னான் மஹாபாவி. அவனிடமே வைத்திருக்கலாமே.

உண்மையில் அந்த யூகம் சரியாக இருந்தால்? அய்யய்யோ. அசிங்கம். மஹா கேவலம். வேண்டாம். அது ஊகமாகவே எஞ்சட்டும். அண்ணா மிகவும் குழம்பி இருந்தார்.

லோரரா மீண்டும் மீண்டும் சொற்களை குவித்தார். அதை மேடாக்கினார். மலையாக்கினார். அந்த சொற்களாலான குவியலின் உச்சியில் நின்று அண்ணாவை சமாதானப்படுத்த முயன்றார். அவை அத்தனையுமே சப்பைகட்டுகளாகப் பட்டது அண்ணாவிற்கு. மேலும் சொற்கள். வெற்று சொற்கள். சந்தேகத்தின் திரிமுனையைக் கிள்ளி கங்கிட்டுவிட்டு அதன் சீற்றத்தை சொற்களைக் கொண்டு தடுக்கவியலுமா என்ன?

இனி லோரராவின் எந்தச் சொல்லையும் செவிக்கொள்ளப்போவதில்லை என்பது போல இருந்தார் அண்ணா. ஒரு கட்டத்தில் அவர் சலிப்புற்றார். அத்தனைக் கோபமும் வசையும் சலிப்பாய் அவருக்குள் தேங்கியது. அவருக்கு சொல்ல ஏதுமில்லை. வெறுமையில் தளும்பும் காலி குடம் போல இருந்தார்.

அருகில் கிடந்த லோரராவின் நாய் இவை அனைத்தையும் கண் கொட்டாமல் கவனித்து வந்தது. இத்தனை நேரம் அமைதியாய் படுத்திருந்தது எழுந்து தலையை சிலுப்பியது. அதன் சிலும்பலில் அதன் காதுகள் ஆடின. நெட்டி முறிந்தன. குழைந்து கொண்டே ஒற்றைக் காலைத் தூக்கி செவி மடலை சொறிந்தது. பின் அது தன் முன்னங்கால்களை தரையில் அழுத்திப் பதித்து உடம்பை வளைத்து பின் தள்ளி சோம்பல் முறித்து அதன் நா வெளியில் தொங்கி அசைய வாயைப் பிளந்து கொட்டாவி விட்டது. அதே கணம் சொல்லி வைத்தாற் போல, அண்ணாவும் தன் வலதுகையை வாய்க்கு அருகில் கொண்டு போய் சொடுக்கி தன் கொட்டாவியை வரவேற்றார். லோரரா ஒரு வித அதிர்ச்சியில் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு அவருக்குள்ளேயே எங்கோ ஒளிந்திருந்த சோர்வொன்று எழுந்து கொட்டாவியாக வெளிவந்தது. அதை அவர் வெளிகாட்டாமல் உள்ளடக்கிக் கொண்டார். அதை நாயும் அண்ணாவும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

லோகேஷ் ரகுராமன் -இந்தியா

லோகேஷ் ரகுராமன்

(Visited 239 times, 1 visits today)