கடவுளின் பயிற்சியாளர்-மொழிபெயர்ப்புச்சிறுகதை–நர்மதா வர்கீஸ்-தேசிகன்ராஜகோபாலன்

கடந்த காலத்திலும்கூட, லீலா அத்தை மீதான கற்பிதங்கள் பழுத்து வீங்கி இருந்தன. அவள் ஒரு சூன்யக்காரி அல்லது மந்திரவாதி என்ற வதந்தி பரவியது. திருமணத்திற்காகவும் மதமாற்றத்திற்காகவும் தனது கணவனை தூண்டியிருந்தார். கருத்த, கூன்விழுந்த ஒரு பெண்ணால் எப்படி டாக்டர் ராஜேஷை அவள்மீது நம்பிக்கை வைத்து, தனது குடும்பம், சொத்து அனைத்தையும் அவளுக்காக அர்ப்பணிக்க அவரை இணங்க வைத்தது என்பதை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. லீலா அத்தையின் நம்பிக்கை இவ்வாறாக அமைந்தது: மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவியாக, தனது நெருங்கிய நண்பியின் சகோதரனிடம் மனத்தைப் பறிகொடுத்திருக்கிறார். நல்ல உயரமும், பார்ப்பதற்கு அழகானவராகவும் இருந்த அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் அவளோ தீவிர கிறிஸ்தவ மதப்பற்றுக் கொண்டவள். அவள்மீது அவர் மட்டுமே கவனத்தைச் செலுத்தியிருந்தால், அவர்களது நட்சத்திர பலன் பாலிவுட் திரைப்படத்தின் காதல் ரசத்திற்கு கருவாக அமைந்திருக்கும். பல வருடங்களாக, அவள் அவனைப் பின்தொடர்ந்தபடியே இருந்தாள். திடீரென்று ஒரு நாள் இரவு, அவன் அவளுடைய தந்தையை அழைத்து அவளை தனக்கு திருமணம் செய்துதரும்படி கோரினான். சுமாவின் தாத்தா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முன்பாக அவர் தனது பரிபூர்ண சம்மதத்தைத் தெரிவித்ததுடன் புராணக்கதைகளில் வருவதைப்போன்றே மிகவும் பவ்வியமான குரலில் மாப்பிள்ளையை மதம்மாறுமாறு கோரினார். பொதுவெளியில் லீலாவும் ராஜேஷும் தங்களுக்குள் ‘ஹலோ’ சொல்லிக் கொள்வதைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் பரிமாறிக்கொண்டதில்லை.

அரட்டை அடிப்பதிலும், உண்பதிலும், பிரார்த்தனையிலும் சூறாவளியாகச் சுழல்பவள் லீலா. அவளுக்கு தான்தான் கடவுளின் பேச்சாளர் என்ற நினைப்பு. சுமாவைப் பொறுத்தவரை லீலா அத்தை மந்திரவாதி என்பதைவிட பெண்கடவுளாகவே திகழ்ந்தாள். ஒட்டுமொத்தத்தில், சுமா தனது ஏராளமான இந்திய விஜயத்தின்போது அவளுடன் வெறும் பதினெட்டு மணி நேரம் மட்டுமே செலவிட்டுள்ளாள். தான் நன்கு திட்டமிட்டு ஆவலுடன் எதிர்பார்த்து வந்ததை லீலா இரண்டு மணிநேரத்திற்குள் கொள்ளை கொண்டுவிடுவாள். அரட்டை அடிப்பதிலும், சாப்பாட்டிலும் பிரார்த்தனையிலும் லீலா சூறாவளியாகச் செயற்படுவாள். அவள் கடவுளுடன் தினமும் அரட்டை அடிப்பாள், அவளது தலைமுடி ஒரு துப்பட்டாவால் மூடப்பட்டிருக்கும், அவளது உள்ளங்கைகள் விரிந்தபடியே ஆடிக்கொண்டிருக்கும். அதற்குப் பதிலாக, கடவுளும் அவளுக்கு செய்திகளை வழங்கினார், அந்த செய்திகளை பின்னர் அவள் தனது குடும்பத்தினருக்கு இரவு உணவு வேளையின்போது உணவு மேசையில் மெல்லிய குரலில் ஆனால் அதிகார தொனியில் தெரிவித்தாள். அவள் இதனைச் சொல்லியபோது அவளது கண்கள் பிரகாசமாகவும் அவளது வாசனை திரவியம் செரிவு கூடியதாகவும், அடர்த்திமிக்கதாகவும் இருக்கும் பெண்ணிற்கே உரிய இரகசியம் நிறைந்ததாகவும் இருக்கும்.

ஒருமுறை, மீன்கறி சமைத்து முடித்திருந்த வேளை, அப்பொழுது சுமாவிற்கு ஐந்தோ அல்லது ஆறு வயதோ இருக்கும், அவளது அப்பா பிறந்து இருபத்தாறே மாதங்களான அமரர் றோய் சேரின் மகனை அழைத்து வந்திருந்தார். தத்தித் தடுமாறி நடைபயிலும் அந்தக் குழந்தை அதன் தாய் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் தப்பித்துச் சென்று வீட்டின் பின்புறமுள்ள கிணற்றினுள் விழுந்துவிட்டது. சுமாவின் அப்பா அனுதாபமிகுதியால் றோய் சேரின் வீட்டிலேயே அந்தக் குழந்தையை விட்டுவிடுவதென்றும் அவர்களது குடும்பச் சுமையைக் குறைப்பதற்கு உதவும் வகையில் ஒரு தொகையை என்வலப்பில் வைத்துக் கொண்டுபோகுமாறும் யோசனை கூறினார்.

உடனயாகவே லீலா ‘அப்படிச் செய்ய வேண்டாம்’ என்று கூறினாள். அவள் சாப்பாட்டு வேளையில் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தாள். ஒரு குழந்தையைப் போல் சோற்றையும் மீன்கறியையும் பந்துகளாக உருட்டியபடி, தனது படைப்பை தட்டினுள் வட்டமாக அடுக்கிக்கொண்டிருந்தாள். ‘அவன் மரணிக்க வேண்டும் என்று கடவுள் என்னிடம் சொன்னார்.’

எண்ணெயில் ஊறிய ஆறு நெல்லிக்காய் தலைகளும் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தன.
அன்று இரவு சுமாவின் அம்மா இளஞ்சிவப்பு பளிங்கு கற்கள் பதித்த குளியலறையில் ஒரு சில வாளிகள் பச்சைத்தண்ணீரை அவள் தலையில் ஊற்றினாள். அப்பொழுது சுமா அவளிடம் லீலா அத்தை பேயாக இருந்தாளா அம்மா என்று கேட்டாள்.

அதன் பின்னர் பல ஆண்டுகளாக சுமா, லீலா அத்தை கடவுளின் நிகரற்ற பயிற்சியாளர் என்றே கருதியிருந்தாள். அவளது அம்மா நடப்பதை நிறுத்தி, சிவப்பு வாளியை நீண்டநேரம் தொங்கவிட்டபடியே இருந்ததால் சுமாவின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. இறுதியில் அவள், ‘மோளே அதற்கான அறிகுறிகள் இல்லை’ என்றாள். ‘சில நேரங்களில் அவள் கடவுள் என்ன சொன்னார் என்பதை அவதானிக்க மாட்டாள் அவ்வளவுதான்.’ அவரது செய்திகளை திரித்து எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் போன்றவற்றைச் சரிபார்க்காமல் மின்னஞ்சலில் அனுப்பு என்னும் சொடுக்கியை அழுத்துபவள் என்றே நினைத்திருந்தாள்.

அவரது பெற்றோருடன் ஏற்பட்ட விரிசலின் காரணமாக லீலா அத்தை தங்களுடன்தான் வசிக்கப்போகிறார் என்பதை சுமா அறிந்துகொண்டாள். அவளது அம்மாவின் குரல் உரத்தும், அப்பாவின் குரல் மென்மையாகவும் இருந்தது.

‘அவள் எனது சகோதரி,’ ‘நாம் தான் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார்.

‘இதையே நீங்கள் எனது சகோதரிக்கும் செய்வீர்களா? எனது தந்தை இறந்தபோதுகூட, நீங்கள் எனது அம்மா நம்முடன் இருக்கட்டும் என்று சொல்லவில்லையே. ஆனால் இப்போ, ஏனெனில், அது உங்களது சகோதரி, அதனால் நாம் செய்யணுமோ?’

‘லின்சி, நியாயமாக நடந்துகொள்-‘

‘நீங்க நியாயமா நடந்துக்கோங்க.’

சுமா மூக்கை உறிஞ்சினாள். அவளது பெற்றோர் அமைதியாகினர்.

‘மகளே சுமா?’ ‘நீ அங்கேயே இருக்கியா?’ கடைசியில் அம்மா கேட்டாள்.

அவள் அறைக்குள் தவழ்ந்து சென்றாள். ‘நான் நீரை எடுத்துக்கொண்டிருக்கும்போது மன்னித்துவிடு என்னும் குரல் கேட்டது.’

‘நீங்க ஒன்னும் வருந்தவேணாம்.’ அவளது அம்மா, அப்பாவை முறைத்துப் பார்த்தாள். ‘நீங்க வருந்துவதற்கு அதில் ஒன்னும் இல்லை’

அவள் தந்தை பெருமூச்சு விட்டபடியே, ‘சுமா, உனக்கும் கேட்டிருக்கும், லீலா அத்தை சில நாட்கள் எம்முடன் தங்குவதற்காக வருகிறாள்.’

‘ஓ அவள் வருகிறாளா? இதுல விவாதிக்கிறதுக்கு என்ன இருக்கு? அவள் வரப்போகிறாள் அவ்வளவுதானே?’ சுமாவின் அம்மா ஏளனத்துடன் தனது கைகளை காற்றில் வீசியபடி,

‘உனக்கு என்ன தெரியும், நான் இதற்கு மேல் கவலைப்படமாட்டேன். நீங்கள் யாரை வேணாலும் கூப்பிடுங்கள். உங்க சகோதரியை உங்க அம்மாவை, அவங்களோட நாயைக்கூடக் கூப்பிடுங்கள், நான் அவர்களுக்கு மலத்தைக்கூட கொடுக்கமாட்டேன்.’ என்று சொல்லியபடியே சுமாவையும் ஒரு கையில் பிடித்தபடி அறையைவிட்டு அகன்றாள்.

திருவனந்தபுரத்திலிருந்து லீலா அத்தை விமானத்தில் வருவதற்கு முதல்நாளிரவு, பிரஷர் குக்கரின் விசில் சத்தம் கேட்டு விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்தாள் சுமா. பைஜாமா குருதா அணிந்திருந்த அவள் தூக்கக் கண்களுடன் தூசி படர்ந்த வளைந்த குசினியில் தனது அம்மாவைத் தேடி நடந்தாள்,

‘சாரி குட்டி,’ முக்கால் கை வைத்த சல்வார் அணிந்த கையினால் தனது மகளின் முகத்தை வாஞ்சையுடன் தடவி, ‘நான் உன் தூக்கத்தைக் கலைத்துவிட்டேனா?’ என்று கேட்டாள் அவள் அம்மா.

சுமா தனது முன்னங்கைகளால் மாவைப் பிசையத் தொடங்கினாள். சில தட்டுகளில்; சப்பாத்தி நிறைந்திந்தது, அடுப்பில் பானைகளில் ஆவிபறந்தது. அம்மாவின் தயாரிப்புகள் வெகு நேரத்திற்கு முன்பாகவே வேகமாக ஆரம்பித்துவிட்டன என்பதை சுமா உணர்ந்துகொண்டாள். சில நாட்கள் ஊறிய பின்னர் பயன்படுத்த வேண்டிய மாங்காய் ஊறுகாய் தயாரிக்கும் வாசனையை அவள் மூக்கு கண்டுபிடித்துபிட்டது.

‘இல்ல பரவாயில்ல.’ என்றவாறே சுமா அரைமனதாக சீனத்துப் பீங்கான் தட்டில் பூக்களைப்போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அச்சப்பங்களை (குண்டுதோசை – குழிப்பணியாரம்) எடுத்துக்கொண்டாள்.

‘இருந்தாலும் என்னால் அதிகம் தூங்கியிருக்க முடியாது.’

அவளது அம்மா செருமலில் தொடங்கி, பின்னர் அதனை இருமலால் மறைத்தாள். ‘

லீலா அத்தை வரதனால உனக்கு சந்தோஷம்தானே?’

“அட போம்மா நீவேற.” என்று சுமா மிகவும் அவதானமாக பதிலளித்தாள்.

“எனக்கு இன்னிக்கு பயாலஜி சோதனை இருக்கு.” என்றாள்.

“ஏய் அதைப்பத்தி ஒன்றும் அலட்டிக்கொள்ளாதே குட்டான்………” என்று செல்லமாக தனது மகளிடம் சொனன்னாள்.

“நீ நல்லாவே செய்வே. நீ புத்திசாலி. நீ உனது அறிவை உனது தந்தையின் பரம்பரையிலிருந்து பெற்றிருக்கிறாய்.”

“நீ பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது, நான் இங்க சமையல் செய்துகொண்டும் வீட்டை சுத்தம் செய்துகொண்டிடும் இருப்பேன். நான் அதிகம் சமைக்க வேண்டும். ஏன்னா நான் வேலைக்காரி, சரிதானே? நான் இங்க உங்கப்பாவுக்கும் இந்த உலகத்தில இருக்கற ஒவ்வொருத்தருக்கும் சேவை செய்யத்தான் வந்திருக்கேன். நான் இதுக்குத்தான் லாயக்கானவள்.”

அவள் அத்தையின் வரவு அவளது ஆழ்மனத்தில் அதிகம் பாதித்துள்ளதை அவளது ஏளனப் பேச்சு உணர்த்தியது. கண்களில் ஒட்டியிருந்த மாவின் வெண்புகையும் அவளது உதடுகள் இறுக்கமாக மூடியிருந்ததை உணர்த்தியது.

சுமா ஒன்றும் பேசவில்லை. அம்மா உணர்சிவயப்படும் சந்தர்ப்பங்களில், அவள் தனக்குள்ளேயே முணு முணுத்துக்கொள்வதுதான் நல்லது என்று அவளது அப்பா அவளுக்குச் சொல்லியிருக்கிறார். அதனாலேயே இத்தகைய சூழ்நிலைகளில் சுமா தனது தாயின்மீது அதீத அன்புகொண்டிருந்தாள். அவள் தனது உலகில் ஒருவித மனநிறைவை அடைகிறாள் என்ற ஆழமான சிறிய நம்பிக்கை.

அன்று சுமா பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய வேளையில், லீலா அத்தை தான் நீண்டநாட்களாக அந்த வீட்டில் வசிப்பவரைப் போல தேனீரை (சாயாவை) ருசித்தபடி சோபாவில் சரிந்திருந்தாள். அவள் சுமாவின் அம்மா தனது கல்லூரி நாட்களில் மெல்லிய உடலை ஒட்டி அணிந்திருந்த கிழிந்துபோன சல்வாரை (சுடிதார்) அணிந்திருந்தாள். எலும்பும் தோலுமான லீலா அத்தையின் உடலுக்கு அது பாந்தமாக இருந்தது. அழுக்கு இந்தியராகத் தெரிந்தார். லீலா அத்தை சுமாவைப் பார்த்ததும் ஹை என்றோ ஹலோ என்றோ சொல்லாததுடன் தனது இருக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட இல்லை. அதற்குப் பதிலாக, அவள் சுமாவை தனது ஒத்தை விரலை நீட்டி அழைத்தாள். ‘சுமா குட்டி,’ என் அழைத்தவுடன் சுமா மிகவும் கவனமாக அவளருகே சென்றாள். ‘நீ பெரியவளா வளந்துட்டே. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும், மோளே (மகளே)’ என்று சொல்லியபடியே அவள் சுமாவின் தலையை தனது கையால் வாஞ்சையுடன் தடவினாள். அவளது குரல் மெல்லியதாக இருந்தது, உதடுகள் சிவந்திருந்தன, அவளது கண்கள் மூடி இருண்டிருந்தன.

லீலா அத்தை வானத்திலிருக்கும் மனிதனின் உண்மையான ஆசீர்வாதத்தைப் பெற்றவளாக இருந்தபோதிலும், அவள் தனது தலையை வருடியது சுமாவுக்கு ஒரு வித்தியாசமான தெம்பைக் கொடுத்தது. இது வானத்திலிருக்கும் மனிதன் தன்னையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவள் விரும்பியதன் காரணமாக இருந்திருக்கலாம். அவள் மெலிதாக ஹலோ சொன்னாள். சுமாவிற்கு உரித்துடையதாக இருந்தபோதிலும், லீலா அத்தை அவளைத் தன்னருகே அழைத்து அமர்த்தினாள். அவர்கள் இருவரும் அதில் அமர்ந்திருந்தனர், அங்கு அமைதி நிலவியது. சுமா நெளிந்தபடியும், லீலா சாந்தமாகவும் இருந்தனர். இந்த நிசப்தத்தைக் குலைப்பதுபோல் சுமாவின் அம்மா அவர்களை இராப்போசனத்திற்கு அழைத்தார்.

இரவு உணவின்போது அது நடந்தது. லீலா அத்தை பைஜாமாவிற்கு மாறி அவளது கழுத்தைச் சுற்றியிருந்த துப்பட்டாவை அகற்றினாள். அப்போது அவள் அணிந்திருந்த இளஊதா கல்பதித்த மோதிரம் சுமாவின் கண்களுக்கு கழுத்தில் அணிந்திருக்கும் நெக்லசில் பதிக்கப்பட்ட கல்லைப்போன்று தோன்றியது. லீலா அத்தை தனது தொழில் (அவள் ஒரு மருத்துவர்) மற்றும் வாழ்க்கை (மதம்) சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த மோதிரத்தைப் பற்றியோ, அவள் கழுத்தில் இருந்ததைப் பற்றியோ, அவளது விரலிலிருந்த மோதிரம் காணாமல் போனது பற்றியோ அவள் மூச்சுக்கூட விடவில்லை.

அது நீண்ட நாட்களுக்கு முன்னர் பரப்பப்பட்ட வதந்தி இல்லை. அது மாயாஜால கலையாகத் தெரியவில்லை அது அபூர்வமாக இருந்தது. அவள் விரும்பிய போதிலும் சுமாவினால் அதை ஒதுக்கித்தள்ள முடியவில்லை. இந்தமுறை, அது ஒரு மாயாஜால கலையாக இல்லை அது மோசமாக இருந்தது.

‘என் அம்மா அவள் சகோதரியிடமிருந்து உங்களது மாமாவின் சகோதரியுடன் நண்பர்கள் கூறக் கேட்டதாகச் சொன்னாள்’ உத்தேசமாக, இது ராஜேஷின் சகோதரி, றோமா என்ற பெயரில் ஒரு கதையாக மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்பட்டு வந்தது – ‘உனது மாமாவும் அத்தையும் திருமணம் செய்து கொண்டதற்கான உண்மையான காரணத்தை அந்த கதை சொல்கிறது. மேலும் அவள் பிரிந்து சென்றதற்கான உண்மையான காரணத்தையும் சொல்கிறது.’ என்று பள்ளிக்கூடத்தில், சுமாவின் சினேகிதி அவளிடம் சொன்னாள்.

‘ஏன்?’ சுமா கேட்டாள். ஆனால் அவளது சினேகிதி ‘உங்கள் அத்தையிடமேகேள்’ என்று சொல்லி கள்ளச்சிரிப்பை உதிர்த்தபடி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

‘ஓ………. றோமாவா,’ என்று சுமாவின் கேள்விக்கு லீலா அத்தை பதில் சொன்னாள். அவள் தனது கண்களை உருட்டினாள். “றோமா மோசமானவளாக மாறுகின்றவரை எனது நெருங்கிய சினேகிதியாகத்தான் இருந்தாள். நான் எப்பொழுதாவது அந்தக் கதையைச் சொல்லியிருக்கிறேனா?”

தொண்டைவரை மூச்சை இழுத்துவிட்டபடியே, “இல்லை, இதுவரை சொன்னதில்லை” என்றாள் சுமா.
‘நல்லது,’ லீலா அத்தை சொல்லத் தொடங்கினாள். அவளது கண்கள் பளிச்சிட்டன. “அது எல்லாம் மருத்துவக் கல்லூரியில் ஆரம்பமானது. உனக்கு றோமா ராஜேஷின் சகோதரி என்பது தெரியுமா? நாங்கள் இருவரும் கல்லூரி விடுதியில் ஒன்றாகத் தங்கியிருந்தோம், நான் அவள் மூலமாகவே ராஜேஷைச் சந்தித்தேன். அவர் எங்களைவிட இரண்டு வயது பெரியவர். நாங்கள் சந்தித்த அன்றைய இரவு, நான் ஒரு கனவு – காட்சியைக் கண்டேன். அது கடவுளிடமிருந்து வந்த காட்சி.”

“கடவுளிடமிருந்தா?”

“ஆமாம், கடவுளிடமிருந்துதான். பின்ன வேறுயாரிடமிருந்து? அவர்தானே முதலானவரும் முழுமையானவரும். எல்லாவற்றிற்கும் மேலானவரும் அவரேதான். அவர் அவரேதான் அவரைத்தவிர வேறுயாருமில்லை சாக்ஷாத் அவரே. என்னிடம் ராஜேஷ் நான் திருமணம் செய்துகொள்வதற்காகவே படைக்கப்பட்டவர் என்று கூறினார். ராஜேஷுக்கும் இந்த உண்மையை விளக்கும் வகையில் மூன்று அறிகுறிகள் தென்படும் என்று எனது கனவில் தெரிந்தது. அவர் தலையில் ஒரு மாங்காய் விழும், வீதியில் ஒரு முச்சக்கரவண்டி அவரை மோதும், இறுதியில் ஒரு ஞானி இவை கடவுளின் செயல்’ என்று கூறுவார்.”

“ம்… அப்புறம்?”

“அப்புறம் என்ன நடந்திருக்கும் நீ நினைக்கிற? நாங்கள் திருமணம் செய்துகொண்டோம், இல்லையா? மூன்று சமிக்ஞைகளும் நடந்ததா இல்லையா?’

அவளது பெருமூச்சுக்கு சுமாவினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“உனக்கு அதிர்ச்சியாக இருந்ததா?” தொண்டைவரை மூச்சை இழுத்தவாறு சிரித்தபடியே கேட்டாள் லீலா அத்தை.

“ஒருபோதும் கடவுளின் திட்டத்தை சந்தேகிக்கக்கூடாது மோளே. நீயும் உன் விடயத்தில் அதனை வெகுவிரைவாக உணர்வாய்.”

உடனடியாகவே சுமாவின் மனத்தில் ஒரு பொறிதட்டியது. ‘பொறுங்கோ,’ சட்டென்று நினைவு வந்தவளாக, “இதில் றோமா எப்படி நுழைந்தாள்? அவள் என்ன செய்தாள்?” என்று கேட்டாள்.

‘ஓ…’ லீலா அத்தை றோமாவின் அசுத்த வாடை வந்துவிட்டதைப் போலவும் அதனை விரட்டியடிப்பது போலவும் அவளது முகத்தின் முன்னால் தனது கையை அசைத்தாள். ‘அவள் ஒரு கருப்பழகி’ – இதனை சொல்லும்போது அவளது கைகள் காற்றில் கோலம் போட்டன – ‘அவளை ஒருவரும் காதலிக்க முன்வரவில்லை, எனது காதலை ஏக்கத்துடன் பார்த்தபடியே வாழ்ந்துவந்தாள். நான் கண்ட கனவைப் பற்றியும் அதில் ராஜேஷுக்கு நேரக்கூடிய மூன்று சமிக்ஞைகள் குறித்தும் விரிவாக விளக்கி ராஜேஷுக்கு கடிதம் ஒன்றை எழுதினேன். றோமாதான் அதனை அவரிடம் சேர்ப்பித்தாள். அவளுக்கு அதில் எழுதியிருந்த விடயம் எதுவுமே தெரியாது.’
சுமா தனது முதுகில் நாற்காலியின் இரும்பு குத்துவதுகூட தெரியாதவளாய் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தாள். ‘வாவ். அவள் உங்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. பிறகு?’

‘உண்மையைப் போல சில மோசமான கதைகளைச் சொல்லியிருக்கிறாள்’ என்றாள் லீலா அத்தை. அவள் மீண்டும் சிரித்தாள். ‘அவள் எப்பொழுதும் இட்டுக்கட்டி பேசுவாள். அவள் அத்தகைய மோசமான கற்பனை குணம் படைத்தவள்.’

பள்ளிக்கூடத்தில், சுமா தனது சினேகிதியிடம் உண்மையை விளக்கினாள். கடவுளின் உண்மை. அவளது சினேகிதி கண்களை உருட்டியபடியே, ‘நீ சொல்வது மிகவும் தவறு. அது மிரட்டல். உனது மாமி உனது மாமா தன்னைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று மிரட்டினாள்.’

சுமா தனது பார்வையைப் பின்புறம் திருப்பினாள். ‘என்னைவிட என் மாமியை உனக்கு நன்றாக தெரியுமோ? நான் சொல்வதுதான் சரி. எப்படியிருந்தாலும், உனக்கு கடவுளின் திட்டம் புரியாது.’ இந்த நேரம் அந்த இடத்தைவிட்டு அவளே அகன்று சென்றாள். அவளது நடையில் ஒரு மிடுக்கு தெரிந்தது.

அந்த வருடம் முழுவதும் லீலா அத்தை அவர்களுடன் தங்கியிருந்தாள். அவள் மதுபோதைக்கு அடிமையானவள் என்றும் தங்கத்தின்மீது மோகம் கொண்டவள் என்றும், அதனாலேயே அவள் ராஜேஷுடன் இணைந்து உறங்கவோ அவருக்கு குழந்தைகளைப் பெற்றுக்கொடுக்கவோ மறுத்துவிட்டதாக சுமா கேள்விப்பட்டிருந்தாள். லீலா அத்தையும் இவை அனைத்தையும் கேள்விப்பட்டிருந்த போதிலும் அவள் தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவள் கண்களை மூடியவாறு கிறிஸ்தவ பாடல்களை முணுமுணுத்தபடி இருந்தாள். சுமாவின் குடும்பத்தினர் பங்கு உறுப்பினராக உள்ள தோமையர் தேவாலயத்திற்கு அவள் தானே விரும்பிச் சென்றாள். அவள் வீடற்ற மனிதர்களுக்கு உடைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து பின்னர் அவர்களை மதம் மாற்றுவதற்கும் முயற்சித்தாள். வேறு விதமாகச் சொன்னால், அவள் தன்னை பிஸியாக வைத்திருந்தாள்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை, ஏறத்தாழ எட்டுமாதங்களாக சுமாவின் வீட்டில் தங்கியிருந்த லீலா அத்தையுடன் இனி தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று அவளது அப்பா அவளை தடுத்து நிறுத்தினார்.

‘இன்றைக்கு மட்டும் இல்லை, சரியா?’ என்று சொன்னார்.

‘ஏன்?’ சுமா எதிர்த்துக் கேட்டாள். அவள் லீலா அத்தையுடன் இணைந்து தேவாலயத்திற்குச் செல்வதை கடந்த சில மாதங்களாக வழக்கமாகக் கொண்டிருந்தாள். அதற்காகவே அவள் ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது வரும் என்று அந்த வாரத்தைக் கழித்தாள். அவள் சிறு பிள்ளையாக இருந்தபொழுது, தோமையர் ஆலய திருப்பலிகளில் கலந்துகொள்வதில் விருப்பமின்றியிருந்தபோதிலும் அவளது குடும்பத்தினர் அவளை அதில் கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தினர். அவள் தன்னை மீண்டும் புரொட்டஸ்டண்டின் உணர்ச்சிவயப்பட்ட அனுபவத்தைப் பெறுவதற்காகவே லீலா அத்தை பிறந்துள்ளதாக உணர்ந்தாள்.

மக்கள் தமது கைகளை காற்றில் பறக்க விட்டதுடன், தமது மகோன்னத வியர்வைக் கறைகளை உலகிற்காக அற்பணித்தனர். அவர்களுக்கு எப்பொழுதெல்லாம் தோன்றியதோ அப்பொழுதெல்லாம் ‘ஹல்லேலுயா!’ என்று கூட்டாக அவர்களது அடிவயிற்றிலிருந்து மூச்சையிழுத்து நுரையீரலின் உச்சியிலிருந்து முழக்கமிட்டனர். பெண்கள் தரையில் வீழ்ந்து உருண்டு, புரண்டு தங்களது இரகசியங்களை தமது நாவினாலேயே வெளிப்படுத்தினர். அந்த திருப்பலிகள் யுவதியான சுமாவின் ஹார்மோன்களை அடிவயிற்றைக் குடைந்து சுண்டியிழுத்தது. லீலா அத்தை ‘கடவுளுடன் உறவைக் கட்டியெழுப்புதல்’ என்பதைப் பற்றி கூறியதன் பொருள் இப்பொழுது அவளுக்குப் புரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவள் லீலாமாமியுடன் செல்லும்போதும், ‘ஹே, உங்கள் இரண்டு பேருக்கும் இடையில்தான் நல்ல உறவு இருக்கே அதனால கடவுளிடம் எனக்காக ஒரு ‘ஹை’ சொல்லுங்களேன்’ என்று கேலி செய்வாள். லீலா அத்தையும் சலிக்காமல் ஒவ்வொரு ஞாயிறன்றும், ‘நீயே அவரிடம் சொல்லு’ என்று பதில்சொல்வாள்.

‘ஏனென்றால் நான் உனக்கு சிலவற்றைச் சொல்ல வேண்டும்.’ சுமாவின் தந்தை தனது கழுத்தைத் தடவிக்கொண்டார், தனது அப்பா அப்படிச் செய்தால் அவர் ஏதோ முக்கியமான விடயம் பேசப்போகிறார் என்பதை அவள் தெரிந்திருந்தாள். அவள் லீலா அத்தை தனக்காக வாங்கிவந்திருந்த சிவப்பு வெல்வட் பட்டியில் ரோஜாப்பூக்கள் பதித்த பளிச்சிட்ட ஆடையைக் கழற்றிவிட்டு, வருத்தத்துடன் பூசைக்குப் போகாமல் தங்கிவிட்டாள்.

‘உன் அம்மாவும் நானும், நீ லீலா அத்தையின் தேவாலயத்தோடு மிகவும் ஈடுபாட்டோடிருப்பதையிட்டு கொஞ்சம் கவலையடைந்திருக்கிறோம்.’ என்றார் சுமாவின் அப்பா. அவர் அமர்ந்திருந்த விதம் சுமாவிற்கு தான் கூர்ந்து அவதானிக்க வேண்டிய ஏதோ ஒரு விடயத்தைக் கூறப்போகிறார் என்பதை உணர்த்தியது. ‘நீ உன் ஆன்மீக நம்பிக்கையை வெளிக்கொணர்வது நல்லதுதான். ஆனால் லீலா அத்தையின் தேவாலயம் ஒருபடி கீழானதுதான். அடிப்படைவாதிகள் எமது எதிர்பார்ப்பிற்கு மாறானவர்கள். உண்மையிலேயே நீ தேவாலயத்திற்குப் போக விரும்பினால், நானும் அம்மாவும் உன்னை எம்முடன் இம்மானுவேல் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.’ என்றார்.

‘முடியாது!’ துள்ளிக்குதித்தாள் சும்மா. ‘இம்மானுவேல் சுத்த போர் அப்பா. ஒரு தேவாலயம் போரடிக்கறமாதிரி இருக்கக்கூடாது. அது அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்க வேண்டும்! அது நெஞ்சம் முழுவதையும் ஜீசசின்மீதான பக்தியில் திளைத்திருக்கச் செய்ய வேண்டும்.

‘என்ன பேசற நீ,’ அவளுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் மன்னிப்பு கோருபவர்போல் கைகளைப் பற்றிக்கொண்டார். ‘நாம் தனிப்பட்ட ரீதியில், ஒரு குடும்பமாக, அதில் நம்பிக்கையற்றவர்கள் சுமா.’ என்றார் அப்பா.

‘அப்பா, உங்களுக்குப் புரியாது. லீலா அத்தை உண்மையாகவே கடவுளுடன் பேசுகிறார்.’

‘அவள் ஒன்னும் கடவுளோட பேசலை.’ ‘அவா பேசுறா!’ இது சுமா. அவள் எதிர்பார்த்தபடியே அவளது தந்தை தனது விரலை நீட்டியபடி சொல்ல ஆரம்பித்தார். ‘அவள் எப்படி ராஜேஷ் மாமாவைச் சந்தித்தாள் என்று உனக்குத் தெரியமா?’

சுமாவின் அப்பா தன்னை யாரோ கொல்ல வருவதைப் போன்று அலறினார். பலமுறை இருமினார். அவர் சோர்ந்துபோய் தனது வழிக்கு வரும்வரை காத்திருந்த சுமா, ‘அவள் அதைப்பற்றி உங்களிடம் என்ன சொன்னா?’

சுமா உணர்ச்சிவசப்படாமல் மிகவும் மெல்லிய குரலில் அதே சமயம் லீலா அத்தையின் கதையை தனது அப்பாவிடம் இரகசியமாகச் சொல்வதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தாள். அவளது அப்பா இன்னும் கொஞ்சம் இருமி தான் கவனித்துக்கொண்டிருப்பதை தெரிவித்தார். பின்னர் அவர் அவளுக்கு அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான கதையைச் சொன்னார்.

அந்த கடிதத்தில் எழுதியிருந்த விடயம் குறித்து லீலா சொன்னது உண்மைதான். அந்த கடிதத்தை அவள் இளஞ்சிவப்பு நிற காகிதத்தில் நீலநிற பேனாவினால் எழுதியிருந்தாள். அதில் எழுதப்பட்டிருந்தது இதுதான்: கனவில், கடவுள் லீலா அத்தையிடம் அவள் ராஜேஷை திருமணம் செய்துகொள்வதற்காகவே படைக்கப்பட்டவள் என்று கூறினார். இருப்பினும், அதன் உள்ளடக்கம் இங்கு வேறுபடுகிறது. மத நம்பிக்கையுடையவராக இருந்தபோதிலும், லீலா அத்தை இத்தகைய அறிகுறிகளை முற்றிலும் கடவுளின் திறமையின்மீது நம்பிக்கை வைத்து விட்டுவிடவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அவர் பிசியானவர் என்பதுடன் அதனால் அவருக்கு மறதி ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே அவருக்கு உதவுவதற்கு சில கரங்கள் தேவைப்பட்டிருக்கலாம். அதற்குப் பதிலாக, அவள் ஒரு தெருச் சண்டியனிடம் நூறு ரூபாய் நாணயத்தாள் ஒன்றைக் நழுவவிட்டு அருகில் உள்ள மாமரத்தின்கீழ் அவனை ஒளிந்திருக்கச் செய்து சரியான சந்தர்ப்பம் வரும்போது மாம்பழத்தை வீழ்த்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தாள். முச்சக்கர வண்டியின் சாரதியிடம், ராஜேஷ் தனது அலுவலகத்திலிருந்து வெளிவரும் சமயம் பார்த்து தானும் அந்த வண்டியில் ஏற முற்படுகையில் முச்சக்கர வண்டியின் சக்கரத்தில் ஒரு நுளம்பு மாட்டிக்கொண்டுவிட்டது என்று தான் போடும் அலறலைக் கேட்டு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கட்டளையிட்டாள். எதிர்வரும் தென்னாப்பிரிக்க சுவிசேஷ ஆராதனைக் கூட்டங்களில் ராஜேஷ் மேற்கொள்ளப்போகும் திருப்பலி ஆராதனைகளுக்காக தான் தயாரித்துள்ள ஜெபத்தினை பயிற்சி செய்யுமாறு சுவிசேஷப் பழக்கவழக்கங்களுடன் மீண்டும் கிறிஸ்தவராகப் பிறப்பெடுத்த தனது சினேகிதியிடம் அன்பாகக் கேட்டுக்கொண்டாள். ஒத்திகை பார்க்க வேண்டும் என்பதில் ராஜேஷும் தெளிவாக இருந்தார்.

‘நீ கேட்பதற்கு முன்பு நானே சொல்கிறேன்.’ என்று சுமாவின் அப்பா தனது பேச்சை முடிக்கும் நோக்குடன், ‘எனக்கு தெரியும் அவளே இதை என்னிடம் சொல்லிவிட்டாள் என்று சொல்லக்கூடும். என்னிடம் சொல்லும்போதுகூட அவள் சிரித்துவிட்டாள். அதன் பின்னர், அவள் ஒரு போதும் மதத்தின்மீது விசுவாசமாக இருந்ததில்லை. அவள் அம்மாச்சியுடன்கூட தேவாலயத்திற்கு வருவதில்லை. சிலவேளைகளில் அத்திபூத்தாற்போல நத்தார் போன்ற ஒரு சில விசேட தினங்களுக்கு வேண்டுமானால் வந்திருக்கலாம். ஆனால் அவள் ராஜேஷை மணமுடித்த பின்னரே இப்படி மாறியிருக்கிறாள். அத்தகைய அனைத்து மோசமான திட்டமும் தவறாகவே முடிந்தன. அவளது கற்பனை மிகவும் கொடூரமானது, சுமா. உன்னைப் போலவே. லீலாவைப் பொறுத்தவரை மதம் மிகவும் ஆபத்தானது. அது உனக்கும் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் உன்னைப் பாதுகாக்கவே விரும்புகிறோம்.’

சுமாவிறகு மூச்சே நின்றுவிட்டது. ஈரமான ஒரு குரல் இரகசியமாக அவள் காதில் ஒலித்தது, அவள் அதை அசட்டை செய்வதற்குக் கடுமையாகப் போராடினாள். அது ஒரு இனம்புரியாத உள்ளுணர்வாக இதுதான் என்று சொல்ல முடியாததாக இருந்தது. அந்த அறைமுழுவதும் அமைதி நிரம்பியது.

அடுத்த சில வாரங்களின் பின்னர், லீலா அத்தை அமைதியடைந்தாள். அவள் சுமாவின் கைகளைப் பற்றியபடி அவளுடன் இணைந்து படுக்கையில் பிரார்த்தனை செய்வதை நிறுத்தியிருந்தாள். தோசை உண்ணும்போது கடவுளைப் பற்றிய அண்மைய செய்திகளை வழங்குவதையும் நிறுத்தியிருந்தாள். அவளது கழுத்திலிருந்து ஊதா நிற அடையாளங்கள் மங்கியிருந்தன. டெக்சாஸில் நிலவிய வெப்பத்தின் காரணமாக அவள் ஸ்கார்ப் அணிவதை நிறுத்தியிருந்தாள். ஒரு இரவு, வீட்டில் இருந்த அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கையில் அவள் யாரிடமோ தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதைக் கேட்டாள். அப்பொழுது இந்தியாவில் காலைநேரம். உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவளால் சரியாக கணிக்க முடியவில்லை இருப்பினும் அந்த உரையாடலில் லீலா அத்தை தோல்லியடைவதையும் வெற்றியடைவதையும் அவளது குரலின் மூலம் தெரியவந்தது. தான் மீண்டும் இந்தியா வர விரும்பவில்லை தனிமையில் தான் நன்றாகவே இருப்பதாகவும் அவள் சொன்னாள். தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே அவள் சொன்னாள். அதன் பின்னர் அவள் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து சுமா தூங்கும்வரை தேம்பித்தேம்பி அழுதாள்.
இறுதியில் ஒருவழியாக லீலா அத்தைக்கு வேலை செய்வதற்கான விசா கிடைத்துவிட்டது.

அவள் அமெரிக்காவில் மருத்துவத் தொழிலை தொடர்வதற்கான சோதனைகளில் சித்தியடையாத போதிலும், அருகிலிருந்த மருத்துவமனையில் முடநீக்கியல் வைத்தியராக சேவையாற்றும் பணி கிடைத்தது. அவளுடைய சம்பளத்துடன் சுமாவின் அப்பாவின் சிறிய உதவியும் சேர, சில மைல்கள் தூரத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் அவள் ஒரு வீட்டைப் பெற்றுக்கொள்ள வழிசெய்தது. உலகத்திலேயே அவளுக்கென்றிருந்த இரண்டு கப்புநிற சூட்கேஸ்களுடன் அவள் வீட்டை வெளியேறியபோது சுமாவினால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘ஹே லீலா மாழி, கடவுளிடம் நானும் ‘ஹை’ சொன்னதா சொல்லுங்கோ,’ என்றாள் சுமா.

‘ஓ கண்டிப்பாக-‘ லீலா அத்தையின் குரல் கம்பீரமாகவும் உச்சஸ்தாதியாகவும் ஒலித்தது. ‘இனி நானும் கடவுளும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம்.’

ஆசிரியர் குறிப்பு:

Namrata-Vergheseநம்ரட்டா வர்கீஸ் ஒரு இளமானி பட்டதாரி என்பதுடன் எமோரி பல்கலைக்கழகத்தில் டபிள்யூ. வூட்ரஃப்பின் புலமைப்பரிசில் பெறுபவர். அவரது படைப்பு நிம்ரோட் இன்டர்நேஷனல் ஜோர்னலிலும், PRISM இன்டர்நேஷனலின் தென்பகுதி கதையிலும் இன்னபிற இடங்களிலும் வெளிவந்திருக்க வேண்டும் அல்லது இனி வெளிவரக்கூடும். அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு, Hyphenated, is forthcoming from Speaking Tiger Books in 2019. in 2019.) ஸ்பீக்கிங் டைகர் புக்ஸ் என்னும் தலைப்பில் 2019-இல் வெளியாகவுள்ளது.

தமிழில்: தேசிகன் ராஜகோபாலன்- இலங்கை

தேசிகன் ராஜகோபால்

(Visited 94 times, 1 visits today)