அன்னம் – சிறுகதை-லோகேஷ் ரகுராமன்

லோகேஷ் ரகுராமன்“ராமா, மர பெஞ்சு மேல இருக்கற அரிசி மூட்டைய பிரிச்சு இந்த சம்புடத்துல கொட்டு. நேத்திலேந்து சொல்லிண்டுருக்கேன். ஒருத்தரும் கேட்டபாடு இல்ல” என்றாள் அம்மா எப்போதும் போல. காலையில் சமையல் அவசரம் அவளுக்கு. அப்பா நேற்றுக்கு முந்தைய நாள் வாங்கி வைத்த அரிசி மூட்டை. பிளாஸ்டிக் சாக்குப்பை. மொத்தம் பத்துகிலோ. பச்சை அரிசி. வீட்டு வாசலில் இருந்து வலது பக்கம் திரும்பி நடந்தால் ஆறாவது கடை. நாங்கள் எப்போதும் வாங்கும் கடை தான். நாடார் கடை. அருகில் வேலிக்குள் ஒரு காலி மனைக்கட்டு. அவரது தோட்டம் தான் அது. அதையொட்டி அவர் கடை போட்டிருந்தார். அம்மா “மொத்தமா வாங்காதீங்கோ. அஞ்சு அஞ்சு கிலோ வா வாங்கிகலாம், தேவப்படும்போது.” என்று சொல்லித்தான் அனுப்பியிருந்தாள் அப்பாவிடம். ஆனால் அப்பா கேட்கவில்லை. கிலோ ஐம்பத்தைந்து ரூபாய்க்கு கடையில் வேலைப்பார்த்த சிறுவனிடம் வீட்டுக்கு வந்து போட்டுவிடுமாறு சொல்லிவிட்டார். அவருக்கு தோள்பட்டை வலி. மொத்த எடையை தாங்க முடியாது. அப்பா வந்த இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தான் மூட்டை வீட்டிற்கு வந்தது. மூட்டையைப் பார்த்துவிட்டு கடை சிறுவனிடம் பணத்தை கொடுத்தனுப்பினார்.  நான் தான் மூட்டையை பிரிக்காமல் கொண்டு போய் உள்ளறையில் இருந்த அந்த மரபெஞ்சில் வைத்தேன்.

 

மூட்டையை எடுத்துக்கொண்டு வந்து கட்டவிழ்த்தேன். இந்த சம்புடம் பத்து கிலோ பிடிக்குமா சந்தேகமாய் இருந்தது. ஆனால் அம்மா சொல்லியிருக்கிறாள். கண்டிப்பாக பிடிக்கும். மூட்டையின் விளிம்பை காலி சம்புடத்தில் புகுத்தி மூட்டையை தலைகீழாக அதனுள் கவிழ்த்தேன். சரியாக இருந்தது. பிறகு அரிசியைப் பார்த்தேன். ஓரத்தில் சடை சடையாக கோர்த்துக்கொண்டு எதுவோ தென்பட்டது. கூடவே ஏதோவொரு பழவாடையும் வந்தது. பின்னர் சம்புடத்தை சற்று சலிப்பது போல ஆட்டிப் பார்த்தேன். அங்கங்கு முண்டு முண்டாக அரிசி வெளிவந்து காணப்பட்டது.

“அம்மா, அம்மா இதப்பாரு.”

அம்மா வந்து பார்த்தாள். பின் அரிசி சாக்கை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அடியில் எதோ ஈரப்பதமாக இருந்தது. பழவாடையும் அதிலிருந்து வந்தது.

“எதோ பழச்சாக்குல அரிசிய போட்டு குடுத்துருக்கான்”

“சம்புடம் காலியா தானே இருந்தது. பழைய அரிசி ஏதும் இல்லையே. நல்லவேள அதுல இத கொட்டி கவுக்காம இருந்த” என்றாள்.

பின்னர் என்னை சட்டையை மாட்டிக்கொண்டு போய் கொடுத்துவிட்டு வா என்றாள். மீண்டும் சம்புடத்தில் இருந்து மூட்டைக்கு கொட்டிக்கொண்டு மூட்டையை தூக்கிக்கொண்டு போய் கடைமுன் நின்றேன். என்னை அந்த கடை அண்ணன் அறிந்தவர் இல்லை. நானும் அடிக்கடி வருபவனுமில்லை. கடையில் ஏழெட்டு பேர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். நாடார் கடை அண்ணன் லுங்கியை மடித்து கட்டி முண்டா பனியனோடு இருந்தார். ஒரு காலில் கீல் வாதம். எலும்பு ஒட்டி கால் சூம்பிப் போய் இருந்தது. நடையில் தள்ளாட்டம் தெரிந்தது.

“அண்ணா, அண்ணா”

“கொஞ்சம் இருங்க”

“சொல்லுங்க”

மூட்டையை கையில் இருந்து கீழே வைத்தேன்.

“முந்தா நாள் வாங்கினதுண்ணா, பையன் கொண்டு போட்டான். அரிசி கெட்டுப் போயிருக்கு”

அவர் திறந்து பார்த்தார். கட்டிகட்டியாய் இருந்த அரிசியை எடுத்துப்பார்த்தார். அதில் ஒன்றை எடுத்து நசித்துப்பார்த்தார். பின்னர் வாடையை முகர்ந்தார்.

“ஏதோ பழத்தை போட்டு வச்சுருக்கீங்க. திருப்பி எடுத்துக்க முடியாது”

“நாங்க போடலண்ணா. இன்னிக்கு தான் மூட்டைய பிரிச்சோம்”

“இங்க பாருப்பா. நாங்க எதுக்கு பழத்த உள்ள போடப்போறோம். எல்லா மூட்டைலயும் என்ன பழமா வச்சுருக்கோம். எடுத்துட்டுப் போங்க”

“இன்னிக்கு தான்னா நாங்க பிரிச்சோம். இது உங்க மூட்ட தானே. நாங்க எதுக்கு பழத்த உள்ள வைக்கப்போறோம்.”

பின்னர் பொட்டலம் மடித்துவிட்டு வந்த அவரது மனைவியும் இணைந்து கொண்டார். “இந்தா பாரு, பழத்த வச்சு உங்களுக்கு விக்கணும்னு என்ன எங்களுக்கு தலயெழுத்தா? ஒழுங்கா போப்பா. காலைல கடை முன்னாடி வந்து பிரச்சினை பண்ணிட்டு” என்றாள்.

நான் எரிச்சல் கொண்டேன். “என்னங்க நான் தான் மூட்டய இன்னிக்குத் தான் பிரிச்சேன்னு சொல்றேன். எங்க இது உங்க கடை சாக்கு தானே” என்று கேட்டேன்.

“இந்தா பாரு, தேவயில்லாம பிரச்சனை பண்ணாத. சும்மா சும்மா சொல்லிட்ருக்க முடியாது” என்றாள் அவர் மனைவி.

“இந்த சாக்கு உங்களுது தானே. அப்ப உங்கள்ட தான கேக்க முடியும். நான் இன்னிக்கு தான் பிரிச்சேன்னு சொல்றேன்.“ என்று நானும் உரக்க பேசினேன்.

அண்ணன் கடுப்பாகி மூட்டையில் இருந்த அரிசியை எடுத்துக்கொண்டு கடையில் நின்ற மற்றவர்களிடம் “இங்க பாருங்க இதுல ஏதோ பழ வாசன வருதுல்ல. பழத்த போட்டிருந்து வச்சுட்டு இப்ப அரிசி கெட்டுப்போச்சுன்னு வந்து கேக்கறான் பாருங்க” என்று அனைவரிடமும் காட்டி பீடிகையிட்டார்.

“எப்படி வந்து கடைக்காரன ஏமாத்துறானுங்க பாருங்க வாங்கி எடுத்துட்டு போய்டு. உன்ன மாதிரி ஆளுனால தான் நாட்டுல நோய் நொடிலாம் பரவுது” என்றார்.

எரிச்சலாகி, “நான் எவ்ளோ சாதாரணமா கேட்டுட்டு இருக்கேன். நீங்க ஏன் தேவை இல்லாம சத்தம் போட்றீங்க. நான் என்ன அப்படி ஏமாத்தறேன்? நோய் கீய் நு பேசறீங்க. ஒழுங்கா பேசத் தெரியாதா?” என்று கேட்டேன்.

“நாங்களும் என்ன தேவை இல்லாம பேசறோம்?” என்று இறைந்தார்.

“திருப்பி எடுத்துக்க முடியாது. பேசாம எடுத்து போ அவ்ளோ தான்.”

பொறுமை தாங்கமுடியாமல் மூட்டையை எடுத்துக்கொண்டு வந்து வீட்டிற்கே வந்தேன். அந்த மூட்டையை நடு ஹாலில் வைத்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். அம்மா காலி சம்புடத்தோடு வந்து, “என்னடா குடுத்தானா?” என்றாள்.

“நல்லா குடுத்தான். பழத்த நாம தான் உள்ள வச்சோமாம். திரும்ப எடுத்துட்டுப்போன்னுட்டான்”

“நாம எங்கடா வச்சோம். வாங்கி வச்சுருந்த பழத்தயெல்லாம் நேத்தே நறுக்கியாச்சே. எதையும் அந்த மூட்ட மேல கூட வைக்கலியே” என்றாள்.

“என்கிட்ட எதுக்கு சொல்ற. அவன்கிட்டப் போய் சொல்லு”

“நாரக்கம்மனாட்டி. சாக்க கூட மாத்தல. இன்னிக்கு தான் பிரிச்சுது. நாம போட்டோம்ன்னு வேற சொல்றானே” என்று சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

நான் சொல்லிக்கொண்டிருந்தேன். “ஏன் இந்த கடையில தான் எப்போதுமே வாங்குவீங்களா? வேற கடை ஏதும் இல்லையா? இவ்ளோ அடாவடியா இருக்கானே அந்த கடக்காரன். அவன் கடையில் போய் வாங்குறீங்களே. மூஞ்சியே சரியில்ல” என்று என் பங்குக்கான வார்த்தைகளை கொட்டினேன்.

“அவன் கடை தான் முன்னடிலயே இருக்குன்னு அங்க தான் வாங்குறது. ஆளப்பாத்து எப்படி எடை போட முடியும். இப்படி ஆவும்னு ஜோசியமா கண்டோம்”

“அப்படியே ஒன்னும் தெரியாதவளா நீ? சும்மா பேசாத” என்று சினந்துகொண்டேன்.

பின் “அந்த அம்மா யாரு? அவன் பொண்டாட்டியா? இந்த கத்து கத்துது. அதும் அடாவடி. அப்படியே வாயிலயே ரெண்டு இழு இழுக்கலாம்னு இருந்துது தெரியுமா?”.

பின்னர் அம்மாவே கொதித்தவளாய் வெளிவந்து “இப்படி பொழைக்கிறானுங்களே. நாம ஏன் ஏமாத்தப் போறோம்?” என்றாள்.

பக்கத்து அறையில் அப்பா மாத்யானீகம் செய்துகொண்டிருந்தார். “இந்த மனுஷன்ட முட்டிண்டேன். மொத்தமா ஏதும் வாங்காதீங்கோ. கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கலாமேன்னு. கேட்டாத்தான”. அப்பா அமைதியாகவே இருந்தார்.

“நானே போய் அவன்கிட்ட கேக்கறேன்” என்று சென்றாள். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாள்.

நான் வாசலில் நுழைந்தவளிடம் “என்ன சொல்றான்?” என்றேன்.

“உங்க அப்பா அரிசி நெருத்து மூட்டையில போட்டது வரை இருந்து வாங்கிண்டு போனாளாம். நாம தான் பழத்த பழுக்க வைக்கிறதுக்காக அந்த அரிசில போட்டு வச்சுருந்தோமாம். அதுல கை கால் வச்சு அப்படியே நசுக்கிட்டோமாம். சொல்றா என்கிட்ட. அவ அப்டியே நேர்ல கண்டா. கழிச்சல்ல போக. காலியாக போக. அந்த அரிசிய அவன் கடையிலயே போய் வச்சுட்டு வா. காசு போனா போறது பரவால்ல” என்றேன்.

நான், “சும்மா கடை முன்னாடி வச்சுட்டு வரக்கூடாது. மூஞ்சில வீசிட்டு வரணும்” என்றேன்.

கொத்தமல்லி ஆய்ந்து கொண்டிருந்த என் மனைவி எங்கள் இருவரையும் சமாதானம் செய்தாள். “விடுங்கோமா. ஓரமா வச்சுருந்து தெனம் ரெண்டு ரெண்டு புடி அரிசியா வாசல்ல வர மாட்டுக்கு போட்டுடலாம். எப்பவும் நாம தான் கழநீர் தண்ணீ வைக்கிறோமே”

“இல்ல. அந்த அரிசியைப் பாக்கப் பாக்க எனக்கு பத்திண்டு வருது. இது இந்த வீட்டுல எங்கயும் இருக்கக்கூடாது. இது அவனுக்கு வாய்க்கரிசி “ என்றாள்.

நான் மனசு கேட்காமல் “மொத்த அரிசியயும் தண்ணியில போட்டு அலசி உலர்த்தினா இந்த வாசனை போயிடாதா?” என்றுவிட்டேன்.

“ஆமா ஒக்காந்து ஒவ்வொரு அரிசியா அலம்பிண்டு இரு” என்றாள் அம்மா.

“எல்லாம் இவர சொல்லணும் அஞ்சு அஞ்சு கிலோ வா வாங்கிலாம்ன்னு சொன்னேன் கேக்கல. தோள்பட்ட வலின்னு மொத்தமா கொண்டு போட சொன்னவரை சரி கொண்டு போட்டதும் அந்த மூட்டைய சித்த பிரிச்சு பாத்துருக்கப்டாதோ. எல்லாமே நானே தான் பாக்கணுமா வீட்ல. “

அப்பாவுக்கு சுறுக்கென ஏறியது. நின்று கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தவர், “ஊருக்கு எளச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டினு நான் தான் கெடச்சேனா இந்த வீட்ல. கேக்கறேன். சும்மா எகிறுறீங்க. அடிக்கடி போய் வாங்க வேண்டாமேன்னு மொத்தமா வாங்கி வச்சது தான் என் தப்பா? சும்மா கெடந்து சத்தம் போட்றீங்க. நான் தான வாங்கிண்டு வந்தேன். நானே பாத்துக்கறேன்” என்றார்.

பின்னர் தான் அம்மா அமைதியானாள். அப்பா உள்ளிருந்து வந்தார். மூட்டையை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அம்மா அவரை தடுத்தார். “டேய் நீயும் கூட போடா இதத்தூக்கிண்டு”

“ஒன்னும் வேணாம். நான் தூக்கிக்கிறேன்” என்றார் அப்பா.

“நீ கூட போடா. அப்புறம் வந்து தோள்பட்ட வலி, மூட்டு வலி, முழங்கால் வலிங்க வேண்டியது” என்றாள் அம்மா.

நான் மூட்டையை தூக்கிக்கொண்டு அவர் பின் சென்றேன். அப்பாவை கடை வாசலில் ஏறுவதைக் கண்டதுமே கடைக்கார அண்ணன், “உங்க மவனும் உங்க ஊட்டம்மாவுக்கு ஒழுங்கா பேசத் தெரியல சார். பாத்து இருந்துக்க சொல்லுங்க” என்று பொலு பொலுவென சண்டை பிடிக்க வந்தார். நான் மூட்டையை கடை வாசலிலேயே போட்டுவிட்டேன்.

“தேவையில்லாம ஜாஸ்தி பேசாதீங்க. முந்தா நாள் நான் வந்தப்ப உங்க பையன்ட சொல்லி நீங்க தான போட சொன்னீங்க. கையில காமிச்ச அரிசிய பாத்துட்டு சரின்னு பத்து கிலோ போட சொல்லிட்டுதான போனேன். நானே கொண்டு போனதா வீட்டுக்காரம்மாட்ட சொல்லிருக்கீங்க. ஏன் வர்றவங்கக்கிட்ட மாத்தி மாத்தி பேசறீங்க. பழகின கடைனு தானே நம்பி இங்க வாங்குறது. பத்துகிலோவும் தூக்க முடியாதுன்னு தானே கொண்டு போட சொல்றது.”

“சார் இங்க வாங்க. இங்க இருக்கற சாக்குல எதுலயாச்சும் பழ வாசனை வருதா பாருங்க” என்றார் கடைக்காரர் அருகில் இருந்த மற்றவர்களிடம்.

“இந்த மூட்டைல பாருங்க வெள்ளரிப்பழம் எதையோ போட்டு வச்சிருக்காங்க. வாசனை வருது” என்று நான் இறக்கி வைத்த மூட்டையை காண்பித்து சாதித்தார்.

பின்னர் வாங்க வந்த ஒரு வயதான அம்மாவிடம் எங்கள் அரிசி மூட்டையில் இருந்து எடுத்த அரிசியையும், அவர் உள்ளே வைத்திருந்த அதே போன்ற மூட்டையில் இருந்த எதோ ஒரு அரிசியையும் கொடுத்தார்.

“இது ரெண்டு, வேற வேற அரிசி” என்றாள் அந்த அம்மா.

அவர் செய்வதைப் பார்த்து பொறுக்கமுடியாமல் நான் கேட்டேன். “என்னங்க இப்ப என்ன சொல்ல வர்றீங்க? நாங்க வேற அரிசிய உங்க கடை அரிசின்னு சொல்லிட்டு வந்து ஏமாத்த வந்துருக்கோம்னா?”

“பின்ன” என்றார் தலையை கவிழ்த்தியபடி.

“வேலமெனக்கெட்டு வந்து வேற கடையில பத்து கிலோ அரிசி வாங்கிட்டு வந்து உங்கள்ட கொண்டு வந்து காட்டி நாங்க ஏமாத்துணுமா?” அப்பா வெகுண்டவராகவே மாறிப்போனார்.

“யோவ், நாங்களும் ஆரம்பத்துலேந்து சொல்லிட்ருக்கோம். சாக்கு உங்களுது. இன்னிக்குத்தான் பிரிச்சுதுன்னு. எதோ பழம் போட்ட சாக்குல மாத்தி அரிசி போட்ருப்பீங்க இல்ல சொசைட்டி ஆளுங்க மூட்டைய தப்பா போட்டுப் போய்ருப்பாங்க எங்கயோ சின்ன தப்பு நடந்து போயிருக்கும் கேட்டுப்பாக்கலாம்னு வந்து இந்தளவுக்கு பணிஞ்சு பேசினா, அதப் புரிஞ்சுக்காம நாங்க உங்கள ஏமாத்றோம்னே பேசிட்டு இருக்க என்னமோ. மொத்தம் ஐந்நூத்தைம்பது ரூபாய் கொடுத்துருக்கேன். சும்மா இல்ல. யார் ஏமாத்திப் பொழைக்கிறா? காச திருப்பித் தா. இல்ல இந்த மூட்டைய இங்கயே விட்டுட்டுப் போய்டுவோம். எங்கள ஏமாத்தீட்டு ஒரு பருக்கய உன்னால முழுங்கிட முடியுமான்னு பாத்துடறேன்” என்று உரக்க கத்திவிட்டார் அப்பா.

“போட்டுட்டுப் போறதுனா போங்க. எங்களுக்கு ஒன்னுமில்ல. அந்த மூட்டைய நாங்களும் தொடப் போறது இல்ல” என்றாள் அவர் மனைவி.

கடைக்காரரோ கண்டுகொள்ளவே இல்லை. அப்பா என்னிடம் “மூட்டைய போட்டுட்டு வாடா” என்றார். நான் எரிச்சலுடன் அந்த மூட்டையை அவர் தோட்டத்திற்கு பக்கமாக இருந்த கடை வாசலில் எறிந்துவிட்டு வந்தேன். “இனிமே இந்த கடை படி ஏறினா என்ன என்னன்னு கேளு” என்று முனகி கொண்டே அகன்றார் அப்பா.

வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். அம்மா புலம்பிக்கொண்டே இருந்தாள். அப்பாவுக்கும் தாங்க முடியவில்லை. எனக்கு அது நினைப்பாகவே தான் இருந்தது. நான் வெளிக்காட்டிக்கொள்ளவே இல்லை. அன்று எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். அம்மா சமைத்த பாதி பதார்த்தங்களில் உப்பில்லை. மணமில்லை. நாள் முழுதும் அந்த நினைப்பே பீடித்து இருந்ததை எங்களது ஒவ்வொரு செய்கையும் ஒவ்வொரு பேச்சும் காட்டிக்கொடுத்தது.

அந்த அரிசி மூட்டை அங்கேயே சரிந்து கிடந்தது. எவரும் சீண்டவே இல்லை. எப்போவாவது கடைக்கு அந்த வழியாக போகும் போது அப்பாவின் பார்வையில் அந்த அரிசி மூட்டை தட்டுப்படும். வெயிலுக்கும் மழைக்கும் இரவுக்கும் பகலுக்குமென அது அங்கேயே தான் கிடந்தது. நாட்பட நாட்பட அடிக்கும் வெயிலில் காய்ந்து ப்ளாஸ்டிக் நார்கள் நொய்ந்து உளுத்துப்போய் ஒருபக்கம் மூட்டை கிழிந்து வெளிப்பக்கமாய் பிதுங்கியது. காகங்களும் குருவிகளும் மூட்டையில் வந்து அமர்ந்து கொண்டு கிழிந்த பகுதியில் இருக்கும் அரிசியினை கொத்திக்கொண்டு இருந்து விட்டு பறந்து சென்றன.

மூன்று மாதத்திற்கு பின்னர், அந்த கடைக்காரர் ஒரு காலை வேலையில் கடையின் ஷட்டரை திறந்திருக்கிறார். அப்போது ஒன்றைக் கண்டார். அந்த நொடியில் ஆடிப் போய் அதிர்ந்து அழுதுவிட்டவர் போல ஆனார். கண்கள் அவரை அறியாமலேயே கலங்கின. மூட்டையிலிருந்து பிதுங்கிய பகுதியில்

வந்திருந்தது ஒரு பசும் வெள்ளரித் தளிர். ஈரிலைகளைக் கொண்ட இளந்தளிர். ஆற்றாமையால் சில கணங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். பின்னர் உள்ளிருந்து எதுவோ உந்தி தள்ளி வெளிப்பட்டவராய் செயலாற்றத் தொடங்கினார். அருகில் இருந்த தன் தோட்டத்து வேலியின் படலைத் திறந்தார். களக்கொத்தை எடுத்துக்கொண்டு குழி பறித்தார். பின்னர் அந்த தளிரை அடியோடு பிடிங்கி வந்து அடியில் சிறிது பிடி அரிசியையும் வைத்து தோண்டிய இடத்தில் மண்ணைக் கொட்டிப் புதைத்தார். பின்னர் அந்த மூட்டையை மொத்தமாக எடுத்துக்கொண்டு வந்து தோட்டம் முழுவதுமாக அரிசியினைக் கொட்டி மண்ணைக் கொண்டு மூடினார்.

தொடர்ந்து நீர் பாய்ச்சினார். வடமேற்கு பருவ மழையும் கைகொடுத்து அத்தனையும் தளிர்த்தது. வெள்ளரிக் கொடி படர்ந்து அவரது தோட்டம் முழுதும் நிறைந்திருந்தது. அப்பா அந்த வழியாக கடக்கும் போதெல்லாம் அவர் அப்பாவை அணுக முயன்று தயங்கி பார்வையாலேயே எதிர்கொள்பவராக இருந்தார். அப்பா அவரை தவிர்த்துவிட்டதாய் ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். ஊருக்கு வந்த போது நானும் அவர் கடை வழியாக ஒருமுறை மாலை நடை சென்றிருந்தேன். வேலியை மீறி படர்ந்த ஒரு வெள்ளரிக் கொடியில் அத்தனை கணத்துடன் மஞ்சள் மஞ்சளேரென ஒரு வெள்ளரிப்பழம் பறிக்கப்படாமல் தொங்கிக் கொண்டிருந்தது, மாலையின் மஞ்சள் ஒளியைச் சூடிக்கொண்டு.

லோகேஷ் ரகுராமன்இந்தியா

 

(Visited 425 times, 1 visits today)