ஆத்மா – சிறுகதை-இதயா ஏசுராஜ்

கனிவுமதி

படிகளில் இறங்கி இடுப்பளவு ஆழத்தில் நின்றதும் நதியின் ஆவேசத்தை உணர முடிந்தது. கால்களை அழுந்தி வைத்தவாறு அவர் வெறிக்கொண்டோடும் அந்நதியைப் பார்த்தார். கரையோரம் இருக்கிற அடர்ந்த விருட்சத்திலிருந்து வால் நீண்ட பெயர் தெரியா பறவை ஒன்று படபடவென தன் சிறகுகளை அடித்தபடி அவரைக் கடந்து போனது.  நாலைந்து முறை முங்கி எழுந்து குளித்துவிட்டு கரையேறினார். பின் நிதானமாக திரும்பி மறுபடியும் நதியை உற்று நோக்கினார். ஓரிடத்தில் நீர் சுழற்சி உண்டாகி அது வளையங்களாக இங்கும் அங்குமாக அலைபாய்ந்து படியினோரம் வந்ததும் சடாரென மேலெழும்பி உடைப்பெடுத்து பின் எவ்வித சலனமுமின்றி அமைதியாகிப் போனது. மந்திரமூர்த்தியின் உதடுகளில் லேசான புன்முறுவல் பூக்க அவர் திரும்பி வீடு நோக்கி நடந்தார்.

காலை பனியில் சிறிது தூரத்தில் இருக்கும் அவருடைய வீடு மங்கிய சித்திரமாக காட்சியளித்தது. இப்படி ஊரை விட்டு ஒதுங்கியிருக்கும் அவருடைய அந்த சிறிய மாளிகை அவ்வூரை சேர்ந்தவர்களுக்கு பீதியூட்டும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தேவை இருக்கிறவர்கள் மட்டுமே அவரைத் தேடி வருவார்கள். மற்றவர்கள் அப்பாதை வழியே செல்லும்போது விரைவாக சென்று சீக்கிரமாகவே அவ்விடத்தைக் கடந்துவிட வேண்டும் என்றே நினைப்பார்கள்.

அவரைப் பற்றியும் அவரது வீட்டின் பின்னணி குறித்தும் அங்கே பலவிதமான கதைகள் உலாவி வருகின்றன. அவர் தனித்திருக்கவில்லை. ஆவிகளின் கூடாரமான அவ்வீட்டில் அவற்றுடன்  சல்லாபித்து கிடக்கிறார் என்று பேசிக்கொண்டார்கள். அத்து மீறி யாராவது அங்கு நுழைந்தால் ரத்தம் கக்கி செத்துப் போவார்கள் என்றும், ஒரு முறை அங்கு திருட வந்த ஒரு திருடன் நதிக்கு அக்கரையில் இருக்கும் வனத்தில் கழுத்தறுபட்டு இறந்து கிடந்தான் என்றும், அவரைப் பகைத்துக் கொண்ட ஒரு செல்வந்தர் நாக்கு வெட்டுண்டு அல்லாடி ஊரை விட்டு ஓடிவிட்டார் என்றும், தினமும் நள்ளிரவில் வேதாளத்தின் மீதேறி ஊரை சுற்றி வருகிறார் என்றும் சொல்லிக்கொண்டார்கள்.

அவரது தந்தையும் தாத்தாவும் இவ்வித்தையில் சோதனை முயற்சிகளை மட்டும் மேற் கொண்டவர்களாக இருந்தார்கள். அதைத் தாண்டி முன்னேற முடியாமல் ஏதோவொரு தடை அவர்களுக்கு இருந்தது. ஆனால் மந்திரமூர்த்தியோ முழுமூச்சுடன் இதனை கற்று, இதற்காக பலவித இன்னல்களை அனுபவித்து, தனது உயிரை பணயம் வைத்தே வெற்றி அடைந்திருந்தார்.

தன் எதிரில் இருப்பவரின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் விருப்பத்துக்கிணங்க, அவர்களுடைய இறந்து போன உறவுகளை அழைக்கும்போது அந்த ஆத்மா அவருக்குள் புகும் வேளையில் மரணத்துக்கு ஒப்பான வலியினை  தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. தனக்குள்ளே வேற்றொரு உயிர் ஆளுமை செய்ய துவங்கியதும், அவர் காணாமல் போய், சொல்லும் செயலும் அந்த ஆத்மாவின் அம்சமாகவே மாறிவிடும். பெண் என்றால் பெண், ஆண் என்றால் ஆண்.

நெருங்கிய பந்தங்கள், இத்தகைய அட்சரம் பிசகாத குரல் வடிவத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறார்கள். உள்ளம் கரைந்து விட, நம்பிக்கையின் ஊற்றுக்கண் பெருக்கெடுத்தோட தங்களுடைய விண்ணப்பத்தை வைப்பார்கள். விடை தெரியா கேள்விகள், குடும்ப ரகசியங்கள், தகுந்த ஆலோசனைகள் என அவர்கள் முன்மொழியும் போது, திருப்தியுறும் வகையில் காரியங்கள் நிறைவேறும். இதில் நேசமாகவும், மிடுக்கோடும், திமிராகவும், கடும் சினத்தின் வயப்பட்டும் அவைகள் வெளிப்படுவதுண்டு.

வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே சென்றார். பூஜை அறையில் சென்று உட்கார்ந்ததும் மனம் சமநிலை கொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. சமீப நாட்களாகவே இந்தத் தவிப்பு அவரை கலக்கமடைய செய்கிறது. இன்றைக்கு லலிதகுமாரி தன்னைத் தேடி வருவாள் என்று அவருடைய உள்ளுணர்வு அறிவுறுத்தியது. பாவம் அந்தப் பெண். தன் அம்மாவின் ஆவியோடு பேச வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறாள். எத்தகைய கொடூரமான ஆன்மாவாக இருந்தாலும் அவருடைய கட்டளைக்கு அடிபணிந்து பவ்யத்துடன் வந்து உட்கார்ந்து விடும். ஆனால் அவளுடைய அம்மாவின் ஆவி மட்டும் முரண்டு பிடிப்பது ஏனென்று அவருக்கு விளங்கவில்லை.

தன் தந்தையார் எழுதி சென்றிருக்கும் குறிப்புகள் அடங்கிய ஏடுகளை எடுத்து தீவிரமாக வாசிப்பதும், அர்த்தஜாம பூஜைகள் செய்வதும், மந்திரங்களை லட்சோப லட்சம் தடவைகள் உச்சரிப்பதுமாக, தனக்கு எதிராக தலை தூக்கியிருக்கும் இந்த சவாலை முறியடிப்பதற்கு அவர் போராடிக் கொண்டிருந்தார். பூஜை முடிந்து வெளியே வந்தபோது அவர் நினைத்தது போலவே, அவரைக் காண்பதற்காக வருகை தந்திருந்தவர்களின் கூட்டத்தில்  லலிதாகுமாரி இருந்தாள்.

அவர் வீட்டு முற்றத்தைக் கடந்து இணையாய் நின்றிருந்த வேம்பு, அரச மரங்களுக்குக் கீழே ஆண்களும் பெண்களுமாய் பலர் இருந்தார்கள். அவர்களுடன் தான் லலிதகுமாரி நின்றுகொண்டிருந்தாள். வீட்டுத் திண்ணையில் சுவரோரமாய் ஒன்றும் அதற்கு எதிராக இன்னொன்றுமாக இரண்டு கருங்காலி மர பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. நான்கு நான்கு பேர்களாக எட்டு மனிதர்கள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் எழுந்து உள்ளே சென்றதும் காலியாக இருக்கும் அந்த இடத்தில் அடுத்ததாக இருப்பவர் வந்து உட்காருவார். இப்பொழுது வெளியில் இருப்பவர் ஒருவர் வந்து எட்டாவது ஆளாக அவர்களுடன் சேர்ந்து கொள்வார். இப்படி மந்திரமூர்த்தியைப் பார்க்க வருகிறவர்களின் ஒழுங்கு, எந்த வித சச்சரவுமின்றி சீராக இயங்கிக் கொண்டிருந்தது.

லலிதகுமாரி வந்து பெஞ்சில் உட்கார்ந்தாள். தன்னோடு இருப்பவர்களின் முகங்களை ஏறிட்டுப் பார்த்தாள். சோகத்தை தாங்கிய அவர்களின் வதனங்கள் யூகிக்க முடியாத கதைகளை கொண்டவைகளாக இருந்தன.

வீட்டின் கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தாலும் அங்கிருந்து ஓங்கி ஒலிக்கின்ற மந்திர மூர்த்தியின் குரல், கதவிடுக்கின் வழியாக சன்னமாக வெளியே கசிந்து கொண்டிருந்தது. அது பெண் தன்மைக் கொண்டதாக இருந்ததால் யாரோவொரு பெண் ஆத்மாவை அழைத்திருக்கிறார் என புரிந்தது.

அடுத்தடுத்து உள்ளே சென்றவர்களுக்காக தொடர்ந்து பெண் குரல்களே ஒலிப்பதைக் கேட்டதும், இறந்து பல வருடங்களாயினும் இன்னும் கோபம் குறையாத தன் அம்மாவை நினைத்து நடுக்கம் கொண்டாள். தன் துரோகத்தையும் அதன் விளைவுகளையும் தனி மனுஷியாய் நின்று தாங்கிய அத்தாயின் பெரும் வலிகளை  உணர்ந்து கொள்ள முடிந்தது.

பெரியவர் மாணிக்க வேலுவின் காடுகளில் வேலைக்குச் சென்றபோதுதான் லலிதகுமாரி முதன்முதலாக ஆனந்தனைப் பார்த்தாள். முதன்முதலாக என்று சொல்வது தவறு. அவன் வளர்ந்து காளைப் பருவம் எய்திய இக்காலத்திலான முதல் சந்திப்பு என்றே சொல்லலாம். அவளது சின்ன வயது தோழன் அவன். இன்றைக்கு இருப்பதை விட அன்றைய காலகட்டத்தில் ஜாதி மனப்பான்மை இன்னும் உக்கிரமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் உயர்ஜாதி மாணவர்கள் தனியாகவும், சேரி பிள்ளைகள் தனியாகவும் உட்கார வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுடன் இவர்கள் பேசக்கூடாது, விளையாடக்கூடாது, அவர்களுடைய பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று ஏகப்பட்ட விதிமுறைகள் இருந்தன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி இவளுடன் பேசுவதிலும் விளையாடுவதிலும் அதிக ஆர்வம் காட்டினான் ஆனந்தன். பெரிய விழிகளை உருட்டி எப்போதும் துருதுருவென இருப்பதும், ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதல் ஆளாக எழுந்து கடகடவென இவள் பதில் சொல்வதும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை  எவருக்கும் தெரியாமல் அவன் இவளுக்குக் கொடுப்பான். இவளும் மரங்களில் கல்லெறிந்து பொறுக்கிய புளியங்காய்களையும், கொடுக்காப்புளிகளையும் அவனுக்குக் கொடுப்பாள்.

எட்டாவது முடித்ததும்  மேலே படிக்க நாகர்கோவிலில் இருக்கும் மாமா வீட்டுக்கு அவன் போய்விட்டான். அத்தோடு இவள் படிப்பும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அவனைப் பார்க்கவே முடியவில்லை. ஊர் திருவிழாகளுக்கு வந்திருப்பதாக கேள்விப் படுவாள். ஆனாலும் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படவே இல்லை. அதன் பிறகு அவனைப் பற்றிய நினைவுகள் முற்றிலுமாக மறந்து போயின. இப்பொழுது அவனை மீண்டும் பார்த்ததும் பூரிப்பில் அவள் இதயம் புது மலராக விரிந்தது. வெட்கத்தில் முகம் சிவந்தாள். வேண்டுமென்றே தெரியாதது போல அவள் தாயிடம், “யாரம்மா இந்த ஆளு, புதுசா இருக்காரே” எனக்கேட்டாள். அவளும் வெள்ளந்தியாக,  “இந்த தம்பிய தெரியாதா உனக்கு, மாணிக்கவேலு அய்யாவோட பிள்ள. சின்ன வயசுல உன்கூட படிச்சவருதான். இப்பதான் படிப்பை முடிச்சிட்டு ஊருக்கு வந்திருக்கிறாரு” என்றாள்.

ஆனந்தன் தன் பழைய தோழியைக் கண்டதும் இனம்புரியாத உணர்வுக்கு ஆளானான். அந்நாளைய நினைவுகள் ஓடோடி வந்தன. அவளுடன் பழகியதற்காக தன் தாயும் தகப்பனும் தன்னைக் கடிந்து கொண்டதை நினைத்துப் பார்த்தான். இப்பொழுதும் அவளுடன் இங்குமங்குமாக தனித்து தான் உரையாடுவது போலவும், அதைக் கண்டு தன் பெற்றோர்கள் தன்னை திட்டுவது போலவும் கற்பனை செய்து அவன் தனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டான். இது சிரிப்பதற்கான விஷயம் அல்ல. அவள் தன் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட போகிறாள், இதனால் பலவித விபரீதங்களை சந்திக்க நேரிடும் போன்ற அறிகுறிகளை அவன் ஆழ்மனம் அறிவித்துக் கொண்டே இருந்தது.

பிறகான நாட்களில் அவன் தாங்கள் சிறுவயதில் ஓடிப்பிடித்து விளையாடிய இடங்களை நினைவுகூர்ந்தான். பொன்னங்கரை அம்மன் கோவிலின் பின்புறம், ஆற்றுப்படுகை, வாழை மரங்கள் நிறைந்த உறைகிணறு வளாகம் என அவள் நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கத் தொடங்கினான். அவன் நம்பிக்கை வீண் போகவில்லை.

ஒருநாள் மாலை நேரம் ஆற்றில் குளித்துவிட்டு ஈரப் பாவாடையுடன் துவைத்த தாவணியைத் தோளில் சரிய விட்டபடி அவள் வருவதை பார்த்தான். அவள் முன்பாக போய் நின்றவுடன், அவள் ஒரு கணம் பதறிப்போனாள். எதிர்பாராத இந்தச் சந்திப்பு அச்சத்தையும் ஆனந்தத்தையும் ஒருசேர கொண்டுவந்தது.

“நல்லா இருக்கியா… லலிதா” என்றான். அவள் “ம்”என்று தலையாட்டினாள். சிறிது நேரத்துக்குப் பிறகு தயக்கங்கள் உடைபட , “இன்னும் என்னைய உங்களுக்கு ஞாபகம் இருக்கா” என அவள்  கேலியுடன் கேட்டாள். “எத்தனை காலம் ஆனால் என்ன, உன்னை மறப்பேனா” என்று அவன் பதிலுரைத்தான். கலகலவென்று சம்பந்தமில்லாமல் அவர்கள் சிரித்தார்கள்.

கன்னங்கள் உப்பி, முகம் மினுமினுப்போடு, உடல் சதை போட்டிருக்கும் தன் இளைய மகள் கோதையைப் பார்த்ததும் பேச்சியம்மாளின் அடி வயிறு கலங்கியது. சீக்கிரத்தில் இவள் உட்கார்ந்து விடுவாளோ என்று அஞ்சினாள். பெரியவள் வயசுக்கு வந்து ஆறு வருடங்கள் ஓடிவிட்டது. அவளை நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கான நேரம் கூடி வராதது கவலையளித்தது.  இந்நிலையில் இவளும் உட்கார்ந்து விட்டால் என்ன செய்வது என்ற பதைபதைப்பு உண்டானது. இவர்கள் இருவரைக் காட்டிலும் சின்னவன் சோமுவின் நினைப்புதான் அவளை அனுதினமும் படாதபாடு படுத்தியது.பிறக்கும்போதே கால் விளங்காமல் பிறந்த பையன்.  எழுந்து நடக்க முடியாமல் புட்டத்தால் நகர்ந்து நகர்ந்து  வருவதைப் பார்க்கும் போது ரத்த கண்ணீரே வந்துவிடும். படிப்பின் மீது அவனுக்கு கொள்ளை ஆசை. அவனது அப்பா உயிரோடு இருந்தவரை அவனைத் தோளில் தூக்கிக்கொண்டு காலையில் பள்ளிக்கு செல்வதும் மாலை கூட்டி வருவதுமாக இருப்பார். இப்பொழுதெல்லாம் அவன் பள்ளியில் படிக்கும் யாராவது ஒருவர் சைக்கிளில் வந்து அழைத்து போய் வருகிற புண்ணிய காரியத்தைச் செய்கிறார்கள்.

அவன் எதிர்காலம் பற்றிய கவலையே அவள் மனசை பிசையும் கேள்வியாக உள்ளுக்குள்ளே சுழன்று கொண்டே இருக்கும்.

லலிதகுமாரியின் நடவடிக்கைகளில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருப்பதை மிகத் தாமதமாகவே பேச்சியம்மாள் கவனித்தாள். எப்பொழுதும் சாயம் போன பழைய பாவாடை தாவணிகளை உடுத்துபவள், அவளிடம் இருக்கும் சுமாரான சிகப்பு மற்றும் மஞ்சள் தாவணிகளையே சமீபகாலமாக மாற்றி மாற்றி கட்டுகிறாள். ரசம் போன கண்ணாடியில் மணிக்கணக்கில் முகம் பார்க்கிறாள். செய்யும் வேலைகளில் கவனம் இல்லை. எங்கோ வெறித்துப் பார்த்து கனவுலகில் சஞ்சரிப்பவள் போல காட்சி தருகிறாள். இதெல்லாம் பருவம் செய்யும் கோளாறு என்று அத்தாய்க்கு நன்கு புரிந்தது. இதன் காரணமாக தனது கட்டுப்பாட்டை அதிகரித்து அவளைக் கண்காணிக்கும் பொறுப்பினை தீவிரப்படுத்தினாள்.

ஒரு நாள், உடம்பு நோகிறது என சொல்லி தலையோடு போர்த்தி கிடந்த லலிதகுமாரி, அம்மா சுள்ளி பொறுக்க மலையடிவாரப் பகுதிக்கு புறப்பட்டு சென்றதும் உற்சாகத்தோடு எழுந்தாள்.  வாசனை சோப்பு போட்டு முகம் கழுவி, பொட்டிட்டு வேறு தாவணி உடுத்தியவள், வீட்டை பூட்டி, படலையும் சாத்திவிட்டு வடக்கு நோக்கி நடந்தாள்.

பேச்சியம்மாள் எப்போதும் செல்லும் மலையடிவாரத்திற்கு போகாமல் ஓடைக்கரை பக்கமாக சென்று காய்ந்து கிடக்கும் கருவேல முள் செடிகளை கொத்தாகப் பிடித்து இழுத்து அரிவாளால் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டி சுமக்க முடியும் அளவுக்கு பெரிய கட்டாகக் கட்டினாள். சேலை தலைப்பால் சும்மாடு இட்டுக்கொண்டு தலையில் தூக்கி விட யாராவது வருகிறார்களா என பார்த்தாள்.

இளம் வயதிலும் முதியவர்களாகவும் பல ஆண்கள் அப்பகுதியைக் கடந்து சென்றும் அவள் யாரிடமும் உதவி கேட்கவில்லை. எங்கோ போய்விட்டு டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கி, கையில் மஞ்சள் பையுடன் நடந்து வந்து கொண்டிருந்த முனியம்மாவைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.

“அத்த இந்த முள்ளு கட்ட கொஞ்சம் தூக்கி விடு”

வியர்வை வழிந்திட  வெயிலில் நடந்து வந்த அம்முதியவள் தன் சிரமத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அதற்கென்ன தூக்கி விடுகிறேன் தாயீ” என்றே மஞ்சள் பையை தரையில் வைத்துவிட்டு கையில் முள் குத்திக் கொள்ளாமல் லாவகமாகத் தூக்கி வைத்தாள். வழியில் அவள் வீடிருக்கும் பாதை வந்ததும் முனியம்மா பிரிந்து சென்றிட, இவள்  அய்யனார் சிலையைத் தாண்டி மொட்டைப் பாறையின் பக்கம் வந்த போது அதன் பக்கவாட்டில் இருந்த ரெட்டை வேப்பமரத்தின் நிழலில் ஒரு ஆணும் பெண்ணும் நிற்பதைப் பார்த்தாள்.

“உலகம் கெட்டுப் போச்சு. பொட்ட வெயிலில் இதுங்க என்ன பண்ணுதுங்க கருமம்”

என்று முகம் சுளித்து நடக்க முயன்றாலும், அந்த மஞ்சள் தாவணியைக் கண்டதும் துணுக்குற்றாள்.ஒற்றைக் கையால் சுமையைத் தாங்கி பிடித்தபடி மறுகையை நெற்றியில் வைத்து கண்களை இடுக்கி கவனித்தாள். அது லலிதகுமாரியே தான். உடலெல்லாம் உஷ்ணம் பரவ சீறும் சினத்துடன் தலைச் சுமையைத் தரையில் சாய்த்து விட்டு விடுவிடுவென அங்கே போனாள். தன் மகளுடன் இருப்பவன் ஆனந்தன் எனத் தெரிந்ததும் அவளது ஆவேசம் இன்னும் அதிகமானது.

“லலிதா…ஆ” வென்ற  அவளது கடும் கூச்சலில் அவர்கள் விலகி நின்றார்கள். அச்சத்தில் முகம் வெளிறிப் போயிருந்த மகளின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்தாள்.

வீட்டில், லலிதகுமாரியின் மேனி புண்ணாகும்படி விளக்குமாற்றால் பேச்சியம்மாள் விளாசித் தள்ளியும், சுளீரென விழும் அடிகளை தாங்கிக் கொண்டு எந்த வித சுரணையுமின்றி அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கையில் ஆயாசமே உண்டானது.

சில நாட்களுக்குப் பிறகு,  களத்தில் வென்றான் பேட்டையில் ஒன்றுவிட்ட சகோதரி இறந்த செய்தி அறிந்து மனமே இல்லாமல் அங்கு புறப்பட்டுப் போனாள். இந்த சந்தர்ப்பம் லலிதகுமாரிக்கு உவகையை அளித்தது. தங்கையும், தம்பியும் பள்ளிக்கூடத்திற்கு கிளம்பி சென்றதும் ஆனந்தனை பார்க்கச் சென்றாள். அவளைக்கண்டதும் ஆனந்தன் ஓடிவந்து வாரியணைத்துக் கொண்டான். “அம்மா திட்டினார்களே.. அடித்தார்களா” என்று தவிப்போடு கேட்டான். “எங்கம்மாவே இப்படி என்றால், உங்கள் வீட்டை நினைத்தால் பயமாக இருக்கிறது”  என்றவள், அவன் நெஞ்சில் புதைந்து அழுதாள்.

மறைவிடத்தில் இருக்கிறோம் என்ற தைரியத்தில் அவர்கள் தழுவல்களோடும் முத்தங்களோடும் உரையாடிக் கொண்டிருக்க கொஞ்ச நாட்களாக அவன் வீட்டில் தங்கியிருக்கும் அவனுடைய தூரத்து உறவினரான அல்லிமுத்து மாமா, உடல் உபாதையை தணிக்க அச்சமயம் பார்த்து அவ்விடம் வந்ததும் அதிர்ந்து போனார்.

“மாப்ள என்னடா இது”  அவர் இன்னும் முன்னேறி வந்ததும் லலிதகுமாரி பீதியில் நடுங்கியவளாக பாறையில் ஒதுங்கிக் கொண்டாள். “மாமா” வென்று அவன் ஏதாவது சமாதானம் சொல்ல முயற்சிக்க, அவர் கையை நீட்டி தடுத்துவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தார். மேனியில் பொட்டுத் தங்கம் இல்லாமல் பழம் துணியில் இருக்கும் அவளது தோற்றம் அவள் யாராக இருக்கக்கூடும் என்று ஊகிக்க வைத்திருந்தது. ஆனாலும் குரலை உயர்த்தி “யாருடா இவ” என்றார். பதிலேதும் சொல்லாமல் அவன் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்து “கீழ்சாதி பொண்ணுதானே” என்று உறுமினார். அவன் தலையாட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

மிகுந்த வன்மத்தோடு அவர் லலிதகுமாரியின் தலை முடியை கொத்தாகப் பிடித்து இழுத்து மறைவிடத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தார். “நீ மேய்றதுக்கு வேற இடமா கிடைக்கல” என்று அவளை அங்கிருந்து விரட்டியடித்தார்.

அல்லிமுத்து மாமா அவனை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்ற நேரம் நல்லவேளையாக அவனது அப்பாவும், அண்ணனும் இல்லை. சற்று தொலைவில் இருக்கும் ஊரான விரகாலூருக்கு ஒரு திருமணத்திற்காக போயிருந்தார்கள். கூடவே அம்மாவும் சென்றிருந்தாள். காலையில் அவனையும் வருமாறு அவர்கள் அழைத்தது நினைவுக்கு வந்தது.

வீட்டில் அண்ணி மட்டுமே இருந்தாள். அவளிடம் நடந்ததை சொல்லி மாமா முறையிட்டதும் அவள் திகைப்படையவே செய்தாள். அவளது நற்குணத்தைப் பற்றி நன்கு தெரிந்திருந்ததால் ஆனந்தன் கலவரம் அடையவில்லை. “ஏன் தம்பி உங்களுக்கு புத்தி இப்படி போகுது” என்று கண்டித்துவிட்டு, “நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் பேசாமல் இருங்கள்” என்று மாமாவிடம் சொன்னாள். அவர் ஆத்திரம் அடங்காமல் நாற்காலியை இழுத்து வாசலில் போட்டு உட்கார்ந்து காத்திருக்க ஆரம்பித்தார்.

அவர் அசந்திருந்த சமயம் ஆனந்தன் வீட்டுக்குள் போவது போல உள்ளே சென்று பின்வாசல் வழியாக வெளியேறி லலிதகுமாரியை பார்க்கச் சென்றான். அவனது கையில் துணிமணிகள் அடங்கிய பெட்டி ஒன்று இருந்தது. பள்ளியிலிருந்து பிள்ளைகள் இருவரும் வந்திருந்தார்கள். ஆனால் பேச்சியம்மாள் இன்னும் வீடு திருப்பவில்லை. அவள் எந்த நேரத்திலும் வந்துவிடக் கூடும் என்ற நிலையில், ஆனந்தன் பின்பக்க ஜன்னலில் வந்து நின்று லேசாக குரல் கொடுத்தான். லலிதகுமாரி பதற்றத்துடன் அருகே சென்றாள். அவன் என்னமோ ரகசியம் சொல்ல தலையாட்டியபடியே ஒரு துணிப்பையில் தன்னுடைய உடைகளை  திணித்துக்கொண்டாள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கோதை, “அம்மா உன்னைய எங்கேயும் போகக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க அக்கா’ என்றே கிளம்பியவளின் கையை பிடித்து தடுத்தாள்.  அவள் பிடியை உதறி விட்டு வெளியேறினாள்.

இலவு வீட்டிலிருந்து திரும்பிய பேச்சியம்மாள் நடந்ததை அறிந்ததும் இடிந்து போனாள். அழுவதற்குக் கூட அவளிடம் திராணியில்லை. பிள்ளைகளை இறுக கட்டிக்கொண்டாள். “நாம் உயிர் பிழைக்க வேண்டுமானால் உடனே இவ்வூரை விட்டுப் போயிடணும்” என்றவள், வேண்டியதை எடுத்துக் கொண்டு பிள்ளைகளுடன் வீட்டுக்கு வெளியே வந்தபோது மாணிக்கவேல் பெரிய மகன் அடியாட்களோடு வருவதைப் பார்த்து வெலவெலத்து போனாள்.

“எங்கடி உன்னோட மவ” ஓடிவந்து அவன் வெறியுடன் அவளை எட்டி உதைத்தான். அவள் அலறலுடன் சுருண்டு மூலையில் போய் விழுந்தாள். கோதை அம்மாவை தூக்கி உட்கார வைக்க, சோமுவும் அவளும் பெருங்குரலில் அழுதார்கள். “எங்கடி ஒளிச்சு வச்சிருக்கீங்க அவுங்க ரெண்டு பேரையும்” அவனது மிரட்டலுக்கு பேச்சியம்மாள் “தெரியாது தெரியாது” என்று கதறியும் அடி விழுந்தவாறு இருந்தது. “எங்க அம்மாவ அடிக்காதீங்க. அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. களத்தினாம் பேட்டைக்கு எழவுக்கு போயிட்டு இப்பதான் வந்தாங்க” எழுந்து நின்று அழுதபடியே கோதை சொன்னாள். ஆனந்தனின் அண்ணன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். “அப்ப உனக்கு தெரியும் தானே, சொல்லுடி உங்கக்காவும் ஏந்தம்பியும் எங்க போயிருக்காங்க” அவள் கழுத்தை இறுக பிடித்து அழுத்தினான். அவள் விழி பிதுங்கி திமிற,  பேச்சியம்மாள் வந்து தடுக்க முயன்றாள்.

அவன் ஓநாய் பார்வையோடு கோதையை இழுத்து தன்னோடு அணைத்தபடி, “ஏய் உன்னோட பெரிய மவள கொண்டாண்டு விட்டுட்டு இவளக் கூட்டிட்டு போ” என்றவாறு சின்னவளை இழுத்து சென்று வண்டியில் ஏற்றினான். புழுதியைக் கிளப்பிக்கொண்டு அம்மாட்டு வண்டி தெருவை கடந்து போனது. பேச்சியம்மாள் செய்வதறியாமல் திகைத்து நின்றாள்.

மாணிக்கவேலின் வீட்டுக்கும் தன் வீட்டுக்குமாக அந்த இரவு முழுவதும் அவள் அல்லாடிக் கொண்டிருந்தாள். அந்த பெரிய வீட்டின் வாயில் காவலன் எவ்வளவு கெஞ்சியும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

“ஐயா என் மக பச்ச மண்ணுயா, அவள என் கூட அனுப்பிடுங்கய்யா” என்று அழுது அரற்றி கொண்டிருந்தாள். இடையில், கால் விளங்காத பிள்ளையை வீட்டில் விட்டு வந்த நினைப்பு வர அங்கே ஓடிவிட்டு வருவாள். அவள் கத்திக் கூப்பாடு போட்டு அழுது புரண்டும் அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியில் வரவில்லை. ஒரே ஒருமுறை மட்டும் மாணிக்கவேலுவின் மருமகள் மாடியில் இருந்து பரிதாபமாக பார்ப்பது தெரிந்தது. வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்து விட அதைவிட பேரருள் இவள் மனதில் சூழ்ந்திருந்தது.

வீட்டுக்கு சென்று சோமுவை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தாள். இவ்வீட்டின் எதிரே இருக்கும் வாதநாராயணன் மரத்தடியில் இருவரும் நெடுநேரம் உட்கார்ந்திருந்தார்கள். பையன் தூங்கி விழுந்தான். பனிப்பொழிவு அதிகமாகி மரத்தின் இலைகளில் இருந்து நீர் சொட்டு சொட்டாக அவர்கள் மேல் விழுந்து கொண்டிருந்தது. பிள்ளை நடுங்குவதைப் பார்த்து அவனை மறுபடியும் வீட்டுக்கு தூக்கி போனாள்.

பொழுது விடிந்து ஊர் விழித்து கொள்ளும் நேரத்தில் அவள் வீட்டின் வாசலில் அந்த ஓலம் கேட்டது. அவள் எழுந்து வாசலுக்கு போக, அங்கு அலறிக் கொண்டிருந்த வண்ணாத்தி செங்கமலம் அதிர்ச்சிதரும் அச்செய்தியை சொன்னாள். தலையில் அடித்துக்கொண்டு கதறிய பேச்சியம்மாள் மகனை தூக்கிக்கொண்டு ஊருணிக்கு ஓடினாள்.

வடக்கு பக்கம் நான்கைந்து கழுதைகள் நின்றிருக்க, அதற்கு கொஞ்சம் தள்ளி இரவு முழுவதும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த உடல் தண்ணீரில் பாதியும் தரையில் பாதியுமாக கிடந்தது. பேச்சியம்மாள் மகனை இறக்கி விட்டு, ஓடி கோதையை இழுத்து தரையில் போட்டு மடியில் கிடத்தி கொண்டு அழுதாள்.

ஊர் சனங்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். அவளுடைய இனத்தை சேர்ந்தவர்களும் அங்கிருந்தார்கள். எல்லோருக்கும் நடந்தது என்ன என்று தெளிவாக தெரிந்திருந்தது. யாரும் பேச்சியம்மாளுக்கு ஆறுதல் சொல்லவோ தேற்றவோ முன்வரவில்லை. சோமு மெல்ல நகர்ந்து சென்று செத்துக் கிடக்கும் அக்காவின் கையைப் பிடித்தவாறு, அவள் தூங்கி எழுவது போல எழுந்து விடமாட்டாளா என்று ஏக்கத்துடன் பார்த்தான்.

அந்நேரம் ஊருணியின் கரையோரம் வில்வண்டி வந்து நிற்க மாணிக்கவேலுவும், அவனுடைய மனைவியும், பெரிய மகனும் அதிலிருந்து குதித்து இறங்கினார்கள். அங்கிருந்து வரும்போதே “நாடு மாறி நாயே” என்று பேய் குரல் எழுப்பியபடி வந்தாள் ஆனந்தனின் தாய். பேச்சியம்மாளின்  கூந்தலை பிடித்து இழுத்ததும் அவள் வலியோடு பின்புறம் சாய அவள் மடியில் இருந்த கோதையின் உடல் புரண்டு மண்ணில் விழுந்தது. யானை பாதம் போன்ற தனது பெரிய வலது காலை பேச்சியம்மாள் கழுத்தில் வைத்து அழுத்தியதால் அவள் மூச்சு விட முடியாமல் கைகளையும் கால்களையும் உதறி துடித்தாள்.

சோமு வேகமாக உந்தி வந்து பலம்பொருந்திய அந்த காலை தனது பிஞ்சு கைகளால் பிடித்து அகற்றி அம்மாவை காப்பாற்றிவிட போராடினான். ஆனந்தனின் அண்ணன் அவனைப் பிடித்து தலைக்கு மேலாக தூக்கி வீசியெறிந்தான். கூரான பாறை ஒன்றில் மோதி அவன் தலை பிளந்து ரத்தம் கொட்டியது.  சன்னதம் வந்தவளைப் போல தன்னை உதறிக்கொண்டு பேச்சியம்மாள் எழுந்து மகனிடம் ஓடினாள். உயிரற்ற அவ்வுடலை அள்ளி அணைத்துக் கொண்டபோது, இத்தனைக்கும் காரணமான லலிதகுமாரியின் மீதே ஆவேசம் மூண்டது. “நம்ப குடும்பத்தையே நாசமாக்கிட்டியே, நீ விளங்குவியா.. அழிஞ்சு போவ” அவள் வானத்தை பார்த்து கைகளை நீட்டி ஆத்திரத்தோடு சாபமிட்டாள். அப்பொழுது பெரிய கல்லொன்றை தூக்கி வந்தார் மாணிக்கவேல். அவர் வாயிலிருந்து கேட்க சகிக்காத வார்த்தைகள் நாராசமாக வெளிப்பட்டன. அக்கல் பேச்சியம்மாளின் தலையில் விழுந்து அவளுக்கும் இவ்வுலகுக்குமான தொடர்பை துண்டித்தது.

00000000000000000000000000000

தன்னுடைய பெயர் அழைக்கப்பட்டதும் முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பெஞ்சிலிருந்து எழுந்தாள் லலிதகுமாரி. தெய்வங்களின் படங்களாலும் சிலைகளாலும் நிறைந்திருந்தது அந்த அறை. எதிரே உட்காருமாறு அவளுக்கு ஜாடை காட்டிவிட்டு, கைகளைக் கூப்பி சுவரில் மாட்டியிருக்கும் அவருடைய மூதாதையர்களின் உருவப்படங்களை வணங்கிவிட்டு கண்களை மூடிக்கொண்டார் மந்திரமூர்த்தி. பேச்சியம்மாளை அடையாளம் காண்பதற்காக அவள் கொடுத்திருந்த பொருள்களின் ஊடாக அவரது ஆழ்மன தேடல் துவங்கியபோது உருவம், மங்கிய தோற்றமாகவே தெரிந்தது. அது பிம்பமே தவிர வேறொன்றுமில்லை. அப்பிம்பத்தின் வழியாக மேலும் பயணித்து பார்த்தார். காரிருள் சூழ்ந்து எங்கும் பொட்டுக் கூட வெளிச்சம் இல்லாமல் தூரம் அதிகரித்துக்கொண்டே சென்றது. இடையில் இரைச்சல் மிகுந்த ஏதோதோ கூக்குரல்கள். கண்களை மூடிய சில நொடிகளிலேயே குபீரென பாய்ந்து வருகிற ஆத்மாக்களின் சந்தடிகள் ஏதுமின்றி கண்ணாமூச்சி காட்டும் மனோநிலை. நெடுநேர தவிப்புக்கு பிறகு கண்களைத் திறந்து வேகவேகமாக மூச்சிரைத்தார்.

“லலிதா உங்க அம்மாவோட பிடிவாதம் பெரும் புதிராக இருக்கு. எப்ப அவங்க மனசு மாறும்னு தெரியல. நேரம் வரும் வரைக்கும் நாம காத்திருக்க வேண்டியதுதான்”

அவர் தயக்கத்துடன் சொன்னார்.

“ஐயா, எங்கம்மா என்கிட்ட எதுவும் பேச வேண்டாம். என்ன மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும். என் பாவமெல்லாம் கரைஞ்சு போயிடும்”

அவள் தேம்பி அழுதாள். அவர் அவளை நிதானமாக பார்த்துவிட்டு “இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது” என்றார். “உங்க அம்மா மனசு குளிர்கிற மாதிரி நீ நடந்துகிட்டா அவங்க மௌனம் கலைய வாய்ப்பிருக்கு”

லலிதாகுமாரி காரில் திரும்பி வரும்போது மறுபடியும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள். பத்து ஆண்டுகள் கல்கத்தா வாசம். ஆனந்தனின் நண்பன் குலசேகரனின் உதவியில் வேலை கிடைத்து ஏதோ வாழ்க்கையை ஓட்டினார்கள். இதற்கிடையில் ஊரில் நடந்ததை அவர்கள் கேள்வி படவே செய்தார்கள். தன்னால்தான் தன் குடும்பமே அழிந்துபோனது என்ற குற்றவுணர்ச்சியில் அவள் நிலை குலைந்து போனாள்.  இத்தனை வருடங்கள் கடந்தும் தனக்கு குழந்தை பிறக்காததற்கு காரணம் அம்மாவின் சாபமே என்று நம்பினாள். இதுபோலவே நோயுற்று ஆனந்தனின் அப்பாவும், பாம்பு கடித்து அவனது அண்ணனும், ஆற்று வெள்ளத்தில் சிக்கி அவன் அம்மாவும் அடுத்தடுத்த வருடங்களில் மரணமடைந்தார்கள். பேச்சியம்மாளின் குடும்பத்தை அழித்த பாவம்தான் அவர்களது சாவுக்கு காரணம் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள்.

ஆனந்தனும் லலிதகுமாரியும் சொந்த ஊருக்கு வந்தபோது அவர்களை விரோதித்துக் கொள்ள அங்கு எவருமே இல்லை. அவனது அண்ணி மட்டுமே அங்கிருந்தாள். அவள் பிரியமாக நடந்து கொள்ளவும் செய்தாள். மந்திரமூர்த்தியைப் பார்த்து விட்டு வந்த லலிதாகுமாரி, தாயின் மனம் குளிர என்ன செய்ய வேண்டும் என்று பலவாறு யோசித்து தன் கணவனுடன் கலந்து பேசி இறுதியில் அவ்வூரில் ஆதரவற்றோர் விடுதி ஒன்றை கட்டுவது என முடிவெடுத்தனர். கூடிய விரைவில் கட்டடம் கட்டப்பட்டது. ஏராளமான அனாதைகள் அகமகிழும் சூழல் உருவானது. அன்னதானம், மாணவர்களுக்கு சீருடை, கோயில் கும்பாபிஷேகம் என்று நிறைய நல்ல காரியங்கள் நிறைவேற தொடங்கின.

கணவனின் ஒப்புதலுடன் அவள் மூன்று குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டாள். இரண்டு பெண்ணும் கால் விளங்காத ஒரு பையனுமாக. முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் மந்திரமூர்த்தியின் எதிரில் உட்கார்ந்திருந்தான். தாத்தாவுக்கு மட்டுமே தெரிந்து தன் குடும்பத்தில் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக அவன் வந்திருந்தான். எந்தவித  சிரமமும் இல்லாமல் அவனது தாத்தாவை மந்திரமூர்த்தியால் கண்டறிய முடிந்தது. இவருக்குள் அவர் இறங்கிவிட்டார். அன்பொழுக பேரனிடம் பேசினார். அவனுக்கு தேவையான விவரத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.

இடையில், மந்திரமூர்த்தியின் முகம் மாறியது. அவரது புருவங்கள் மேலும் கீழுமாக ஏறி இறங்கின. சற்று நடுக்கத்துடன் கூடிய முதியவரின் குரலில் இருந்து விடுபட்டு,

“அவள மன்னிச்சிட்டேன்னு சொல்லு. அவள மன்னிச்சிட்டேன்னு சொல்லு” என்று ஒரு பெண் குரலாய் ஓங்கி ஒலித்தது.

ஏதோ முரணாக நடந்திருக்கிறது என விளங்கி தன் கண்களைத் திறந்தார் மந்திரமூர்த்தி. குழப்பத்துடன் எதிரிலிருந்த இளைஞனிடம் “இப்ப என்ன நடந்தது. நான் என்ன சொன்னேன்’ எனக் கேட்டார். அவன், தாத்தாவின் குரல் மாறி யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்டது என்றும், இருமுறை அவளை மன்னிச்சிட்டேன்னு சொல்லு என்று சொன்னதாகவும் கூறினான். அவரது மனக்கண்ணில் லலிதகுமாரி வந்து போனாள். மெல்ல இதழ் விரிய சிரித்தார்.

இதயா ஏசுராஜ்-இந்தியா

இதயா ஏசுராஜ்

 

 

 

(Visited 217 times, 1 visits today)
 

4 thoughts on “ஆத்மா – சிறுகதை-இதயா ஏசுராஜ்”

Comments are closed.