கண்ணாடி வளையல்-கவிதை மொழிபெயர்ப்பு-சுகதகுமாரி-தி.இரா.மீனா

கண்ணாடி வளையல்

தி.இரா.மீனா
ஓவியம் : டீன் கபூர்

பாருங்கள், சிவப்பு வளையலுக்கான
வேட்கையுடன் என் கண்கள்
அங்கேயே நிற்கின்றன.
ஒரு காலத்தில், இளமை நாட்களில்
ஓர் அந்திப் பொழுதில்,
வறுமை வாட்டியபோது
கேட்க தைரியமின்றி
அம்மாவின் விரல்நுனியைப் பிடித்தபடி
ஒரு சிறிய கடை முன் நின்றிருந்தேன்–
அந்தச் சிவப்பு வளையலை
என் கண்களால் முத்தமிட்டேன்.
என் சின்ன இதயம் தனக்குள் அழுதது.

ஆண்டுகள் கடந்தன,
பல பாதைகளைக் கடந்து,
நான் வெகுதூரம் வந்துவிட்டேன்.
அன்பனே!
என் இளமையின்,
உணர்ச்சிகரமான பொழுதில்
பரவசமாய் ,உன் முன்னால் நின்றுகொண்டு
என் மெல்லிய மினுமினுப்பான
அழகிய கரங்களை நீட்டி,
“அந்த ஒளிரும் சிவப்பு வளையல்களை
நீ வாங்கித் தருவாயா என்று கேட்டேன்”.
அவமதிப்பான ஒரு சிரிப்புடன்
வேகமாக நடந்தபடி
“கண்ணாடி வளையல்கள் ! வெட்கமாயில்லை?
சின்னக் குழந்தையா? ப்ச்”
ஏளனம் செய்தாய்.
என் மனமும், முகமும் கருகிப் போனது.
வேகமாக வாடிப் போனேன்.
மீண்டும் அவளுடைய விரல்நுனியைப்
பிடித்துக் கொண்டிருக்கும்
சிறு குழந்தையானேன்.

அதற்குப் பிறகு
எவ்வளவு வருடங்கள் கடந்து விட்டன?
வெள்ளை நட்சத்திரங்கள் வந்து போகின்றன!
என் நீண்ட பயணத்தில்
என் இலையுதிர் காலத்தின் இருளில்
உட்கார்ந்து அந்தச் சிவப்பு வளையல்களை
ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.

என் சுருங்கிய கைகள்
முடிவற்ற உழைப்பில், முற்றிலும் தளர்ந்து.
அவைகளுக்குத் தெரியவேயில்லை
ஒரு கண்ணாடி வளையலின் செம்மை!
அவற்றின் குதூகலச்
சிரிப்பை அவை கேட்டதேயில்லை.

இன்னும் நான் சிரிப்பதை உணர்கிறேன்.
ஏனெனில் என் இதயத்தைச் சுற்றி
சில நொறுங்கிய வளையல்கள்
சிதறிக் கிடக்கின்றன;
ஒரு சிராயின் குத்தலால்
நான்கு அல்லது சிவப்புத் துளிகள்
உள்ளேயே கூடிக் கிடக்கின்றன.

தமிழில் : தி.இரா.மீனா- இந்தியா

000000000000000000000000000

கவிதாயினி பற்றிய சிறுகுறிப்பு :

தி.இரா.மீனாமலையாள இலக்கிய உலகின் சமகாலக் கவிஞர்களில் நுண்ணுணர்வும் தத்துவப் பார்வையும் கொண்டவராக அடையாளப்படுத்தப்படும் , சுகதகுமாரி பெண்ணியம்,சூழலியல் போன்ற இயக்கங்களில் தீவிரப் பங்காற்றியவர்.அவர் கவிதைகள் பெரும்பான்மை சோக உணர்வைப் பிரதிபலிப்பவை. ராத்திரிமழை, அம்பலமணி ,மணலெழுத்து முத்துச் சிப்பி,இருள் சிறகுகள் உள்ளிட்டவை அவர் கவிதைப்படைப்புகளில் சிலவாகும்.சாகித்ய அகாதெமி ,எழுத்தச்சன் விருது,வயலார்,சரஸ்வதி சம்மான் உள்ளிட்டவை அவர் பெற்ற விருதுகளில் சிலவாகும்.

தி.இரா.மீனா

 

 

(Visited 194 times, 1 visits today)