உங்களுடன் நாங்கள்- ஆசிரியர் குறிப்பு

நடு லோகோஅண்மையில் ப சிங்காரம் தொடர்பான பதிவுகளை சமூகவலைத்தளங்களில் அவதானித்து வருகின்றேன் . ஒரு உன்னதமான இலக்கியனை வெளிச்சத்துக்கு கொண்டுவர ‘ஜனரஞ்சக நிகழ்வு’ ஒன்றின் துணை வேண்டும் என்ற  துயர்மிகு அவல  நிலையையும் காண்கின்றேன். எமது சக்திக்கு உட்பட்டு இலக்கியர்களை பொதுவெளிக்கு கொண்டு வருவதில் நடு தொடர்ச்சியான இயங்கு நிலையை கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ப சிங்காரத்தின் நேர்காணல் ஒன்று, அதனைச் செய்திருந்த முனைவர் ந.முருகேசபாண்டியனின் முன் அனுமதியுடன் சிறப்பு பதிவாக இந்த இதழில் வெளியாகின்றது என்பதை அறியத்தருவதுடன் ப சிங்காரம் தொடர்பாக எனது எண்ண ஓட்டங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

ஏறத்தாழ 1930 களில் ப சிங்காரம் இந்தோனிசியாவுக்கு பொருளாதார தேவைகள் நிமித்தம் புலம் பெயருகின்றார். அங்கே சிலகாலங்கள்  இருந்து விட்டு மீண்டும் இந்தியா வருகின்றார். தனது இறுதிக்காலம் வரையில் மதுரையிலேயே வாழ்ந்தார். இவரின் ஊடாக ‘புயலிலே ஒரு தோணி’ என்ற புதினமும், ‘கடலுக்கு அப்பால்’ என்ற குறுநாவலும் எமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு படைப்புகளின் பின்னர் தனது பேனையை இவர் மௌனித்துக் கொண்டார். ‘ஏன் தான் தனது பேனையை மௌனித்துக் கொண்டேன்’ என்று ந முருகேசபாண்டியன்- உடனான கதையாடலில் நேரிடையாகவே அவர் அறுதியிடுகின்றார். ஒரு படைப்பாளியின் அங்கீகாரமும் அவனது வினைத்திறனும் அவன் வாழுங்காலத்தில் அவனுக்கு வழங்கப்படவில்லையாயின் அவன் தனது பேனையை முறித்துக் கொள்வதே அவன் அவனைச்  சூழ இருக்கின்றவர்களுக்குக் கொடுக்கின்ற சரியான தண்டனையாக இருக்க முடியும் என்ற கருதுகோளிற்கே வருவதற்கு இங்கு இடமுண்டு. ஏனெனில் ப சிங்காரத்தின் இரு படைப்புகளும் பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டியே வெளியே வரத்துடித்து  இருக்கின்றன. ‘புயலிலே ஒரு தோணி’ புதினம் கலைஞன் பதிப்பகத்தால் பலத்த செம்மையாக்கங்களின் பின்னரே பிரசுரமாயிற்று. புயலிலே ஒரு தோணி புதினத்தை பிரசுரம் செய்வதற்கு பல பதிப்பகங்கள் மறுத்து விட்ன என்பது தமிழ் எழுத்துப்பரப்பின் கறுப்பு பக்கங்களாகும். கடலுக்கு அப்பால் குறுநாவலை கலைமகள் பதிப்பகமே  இறுதியில் பிரசுரம் செய்தது.

சிறிதுகாலமே இந்தோனிசியாவில் வாழ்ந்திருந்த ப சிங்காரத்தின் படைப்புகள்  ‘புகலிட இலக்கிய எழுத்து’ என்ற பகுப்பினில் எவ்வாறு வரமுடியும் என்றவோர் உசாவலும் வருவது தவிர்க்க முடியாதது தான்.  ஆயினும் இரண்டு படைப்புகளை மட்டுமே தந்திருந்த ப சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்  ‘ குறுநாவல் இந்தோனிசியாவின் கதைக்களத்தையும் கதைமாந்தர்களையும் வைத்து புனையப்பட்டதால்  ‘புகலிட இலக்கிய எழுத்து’ என்ற பகுப்பினுள் அடக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. அதன் பின்னர் 1962களில் இந்தியாவில் வைத்தே புயலிலே ஒரு தோணி புதினத்தை எழுதினார். இதை எந்தப்பகுப்பினுள் அடக்குவது என்பதில் குழப்பங்களே மிஞ்சுகின்றன. இருந்தபோதிலும் இந்தப்புதினத்தில் ப சிங்காரம் எவ்வாறு சிகரத்தை தொடுகின்றார் என்றால், நேதாஜியின் தேசிய இராணுவத்தின் பங்காளியாக இல்லாது ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்து கொண்டு இந்தப்புதினத்தில் ஒரு யுத்தத்தை இரத்தமும்  சதையுமாக எம்முன்னே காட்ட எப்படி இவரால் மட்டும் முடிந்தது ? அதுவும்  குறிப்பாக  குண்டடிபட்ட பார்மிய கதைக்களத்தின் காட்சிகளை விபரிப்பதில் இவரது புனைவு நுட்பம் பிரமிக்க வைக்கின்றது. ப சிங்காரத்தை சமகாலத்தமிழ் பரப்பிற்கு வெளிக்கொண்டு வந்தவர்களில் எஸ் ராமகிருஷ்ணனும், ந முருகேசபாண்டியனும், கோணங்கியும்  முக்கிய பங்காளிகளாக இருக்கின்றனர். அதுவரை இவரை யார் என்றே தெரிந்திராத தமிழ் இலக்கிப்பெருவெளி இவர்களின் சந்திப்பின் பின்னர் ப சிங்காரத்தைக் கொண்டாடத்தொடங்கியது.

தமிழ் எழுத்துப் பரப்புக்கு இவர் தந்திருக்கின்ற வகிபாகத்தை ஒப்பிட்டளவில் நோக்கின் குறைவாகவே இருந்த போதிலும்,  ஒரேயொரு புதினத்தையும் ஒரு குறுநாவலையும்  மட்டுமே தந்து எழுத்தின் உச்சிக்கே சென்ற ப சிங்காரத்தின் எழுத்துக்களைக்  கடந்து யாருமே தமிழ் எழுத்துப்பரப்பின் படிகளைக்கூடத் தொட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. ஹெமிங்வேயின் தீவிர உபாசகாராக இருந்த இவரது இரண்டு படைப்புகளும் ஹெமிங்வேயின் தாக்கங்களையே அதிகம் கொண்டிருந்தன.

அதிகாரம், செல்வாக்கு, நட்பு, அரசியல் போன்ற பல குறிக்கீடுகளால் மட்டுமே ஒரு படைப்பு கொண்டாடப்படுவதும் மறுதலிக்கப்படுவதும் என்ற நாற்றம் பிடித்த எழுதாத கோட்பாடுகளை  கொண்டிருக்கின்ற தமிழ் எழுத்துச் சூழலில், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொள்ளாது ‘ எழுதுவது மட்டுமே எழுத்தாளனின் வேலை ‘ என்று இருந்தது தான் ப சிங்காரம் செய்த ஒரேயொரு தவறு என்றே எண்ணத்தோன்றுகின்றது. அதே வேளையில் பம்மாத்துகளும் தன்முனைப்புகளும் நிறைந்திருக்கின்ற தமிழ் எழுத்துப்பரப்பில்,  தான் சார்ந்த சமூகத்துக்காகவும் தான் நம்பிய இலக்கியத்துறைக்கு இறுதிவரை விசுவாசமாக இருந்து தனது எழுத்தூழியம் அனைத்தையும் ஒரு சமூக நலத்துறை அறக்கட்டளைக்கு வழங்கிய ஒப்பற்ற மனிதரையும்,  ‘தனது மரணத்தை வெளியிலே தெரிவிக்கக்கூடாது’ என்று கூறிய இறுக்கமான இந்த சிங்காரத்தை அவ்வளவு இலகுவாக கடந்து செல்ல முடியவில்லை

கோமகன்
நடு குழுமம்

 

 

(Visited 142 times, 1 visits today)
 

2 thoughts on “உங்களுடன் நாங்கள்- ஆசிரியர் குறிப்பு”

Comments are closed.