வாசம்-சிறுகதை-ஐ.கிருத்திகா

கிருத்திகாவெளிச்சம் விழுந்ததில் ஈரம் மினுங்கியது. சொட்டு, சொட்டாய் மினுங்கிய ஈரத்தில் சிவப்பு  ரெட் ஆக்சைடு பூசப்பட்ட  தரை பளபளத்தது. காற்றில் ஈரச் சொட்டுகள் தளதளத்தன.  சாப்பாடு கொடுத்து வாயைத் துடைத்த கையை உதறியதில் சிறிதும், பெரிதுமாய் விழுந்த  நீர்த்துளிகள் அவை.

அம்மா பெரிதாய் ஏப்பம் விட்டு கண்களை மூடிக் கொண்டாள். மழிக்கப்பட்ட  தலையில், அறுவடைக்குப்பின்பான வயல்வெளியின் தாள்களைப் போல ரோமங்கள் குத்திட்டு நின்றன. தோல் சுருங்கிய கூட்டில் குட்டைத் தண்ணீரையொப்ப அவள் உயிர் தேங்கிக் கிடந்தது.

“போன ஜென்மத்துப் பாவம். அனுபவிச்சு தீர்க்கணும். வேற வழியில்ல.”

குரல் அவ்வபோது மெலிதாய் வரும்.

‘பாவம் செய்தது உடலா, ஆன்மாவா……..”

வெகுநாட்களாக தியாகுவுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி இது. ஆன்மா என்றால் உடல்  ஏன் அவஸ்தைகளை அனுபவிக்கவேண்டும். நோய்களும், வலிகளும்  அதற்குத்தானே……ஒருவேளை உடலென்றால் ஆன்மாவுக்கு அங்கென்ன  வேலை…..கூட்டைத்  துறக்க வேண்டியதுதானே…..’

தியாகுவின் நெற்றி சுருங்குவதை அம்மா கவனித்துவிட்டு கையசைத்துக்  கூப்பிட்டாள். அருகில் சென்றதும் மெலிந்த விரல்களால் அவன் கன்னத்தைத் தடவிக்  கொடுத்தாள். பின்,

“ரொம்ப யோசிக்காதடா……எவ்ளோ யோசிச்சாலும் சில விஷயங்கள் பிடிபடாது. விட்டுடு” என்றாள்.

ரசம் பூசப்பட்ட கண்ணாடி அவள். அவளது சில்லிட்ட விரல்களை அவன் கன்னத்தில் அழுந்த  பதித்துக்கொண்டான். எஸ் அளவு நைட்டி அம்மாவின் ஒட்டிப்போன உடம்புக்கு சற்றே  பெரிதாயிருந்தது.

அழுக்குப்பட்டால் தெரியக்கூடாது என்பதற்காக நிர்மலாக்கா அடர் பச்சையிலும், கருஞ்சிவப்பிலும் இரண்டு நைட்டிகள் வாங்கித் தந்திருந்தாள். அதை கழுத்திலிருந்து  கால்வரை அணிந்துகொண்டு அம்மா கட்டிலில் படுத்திருந்ததை முதன்முதலில் பார்த்தபோது  அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. வாயில் சேலைகளில் வெண்பாதங்கள் தெரிய  வளையவந்த அவளைப் பார்த்து பழகிவிட்டு நைட்டியில் பார்த்ததில் மனம் ஒப்பவேயில்லை.

“இனிமே புடவைய சுத்தறது கஷ்டம். நைட்டி நமக்கும் வசதி, அவங்களுக்கும் வசதி.”

நிர்மலாக்கா தீர்மானித்துவிட்டபிறகு அவன் சொல்வதற்கு என்ன இருக்கிறது. அவள்தான்  ஒருநாள்விட்டு ஒருநாள் அம்மாவை குளிக்க வைத்து விடுகிறாள். உடம்பு துடைத்து நைட்டி  போட்டுவிட்டு அவள் அகலும்போது அம்மாவின் கண்கள் குற்றவுணர்ச்சியில் மூடிக்  கிடக்கும்.

ஒரு மணி வெயில் ஆளோடியில் தாழ்ந்திருந்தது. நாற்கர கண்ணாடித் துண்டுபோல அது  பளபளத்தது. தெருவில் ஈங்குருவி நடமாட்டமில்லை. எங்கோ துளைபோடும் டிரில்லர்  கருவியின் ஒலி சன்னமாக கேட்டது. மாங்கொம்பு ஒன்று காற்றில் அசைவதை அம்மா சன்னல்  வழியே பார்த்தவாறிருந்தாள்.

நிர்மலாக்கா அம்மாவுக்கு மூன்றுவேளை சாப்பாடு தந்துவிடுவாள். காலையில் அவள்  வரும்போதே ஒயர்கூடையில் இரண்டு வேலைக்கான உணவு வந்துவிடும். இரவில் அவள்  கணவன் எடுத்துவருவார். தியாகு அடுத்த தெருவிலிருந்த மெஸ்ஸில் கணக்கு  வைத்துக்கொண்டான்.

“மணியாச்சே. போயி சாப்பிட்டு வாயேன்டா.”

அம்மா மெதுவாய் தலையசைத்தாள். தியாகு பெரும்பாலும் உணவை வரவழைத்துவிடுவான். அம்மாவை தனியே விட்டு செல்ல பயம். அம்மா என்றாவது வற்புறுத்தி அனுப்பி வைப்பாள்.

“ஒரு மாறுதலாயிருக்கும்” என்பாள்.

சமையலறை  டீ, காபி தயாரிக்க என்றானது. மற்ற நேரங்களில் அது இருண்டு கிடந்தது. முன்பக்க ஆளோடியை ஒட்டிய அறைக்குள் அம்மா படுத்திருந்தாள். அதனால் அவன்  புழக்கமும் அந்த எல்லைக்குள்ளே நின்று போனது.

அம்மாவைப் பார்க்க வருகிறவர்களுக்காக தியாகு இரு மடக்கு நாற்காலிகளை அறை சுவரில்  சாய்த்து வைத்திருந்தான். ஆரம்பத்தில் வந்த கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து  இப்போது நாற்காலிகளுக்கும், சுவருக்குமிடையில் எட்டுக்கால் பூச்சியொன்று வலை பின்னி  ஊஞ்சலாடுகிறது.

” டவுனுக்குப் போவும்போது ஸ்பிரே வாங்கியாறேன். அத அடிச்சிவுட்டா இந்த வாடை  இருக்காது.”

நிர்மலாக்கா சொன்னாள். அவள் ஸ்கூட்டி வைத்திருக்கிறாள். அதை எடுத்துக்கொண்டு எட்டு  கிலோமீட்டர் தொலைவிலுள்ள டவுனுக்கு செல்பவள் போகும்போது அம்மாவிடம் லிஸ்ட்  வாங்கிக்கொண்டுப் போவாள். வெண்ணெய், காபித்தூள், ஜாதிபத்திரி, படி ஏலக்காய்  என்று  அம்மாவுக்குத் தேவைகள் இருந்து கொண்டேயிருக்கும்.

கட்டில் அடியில் பீங்கான் கிண்ணம் இருந்தது. அதில் அம்மா கழிக்கும் சிறுநீரை கையோடு  கொட்டிவிட்டு கழுவி வைத்தாலும் அறைக்குள் துர்நாற்றம் அடித்துக் கொண்டேயிருந்தது. நோயாளிகளின் அறைக்கே உரிய இயல்பான வாடை.

அது நிரந்தரமாக தங்கிவிடக்கூடும் என்றெண்ணியபோது தியாகுவின் அடிவயிற்றில்  சிலீரென்று ஒரு உணர்வு எழுந்து அடங்கியது.

உள்ளறையில் இரண்டு உத்திரங்களை இணைப்பது போல ஒரு மூங்கில் கழி  கிடக்கும். அதில்  அம்மா தினப்படி புடவைகளை நேர்த்தியாக மடித்து தொங்க விட்டிருப்பாள். மழைக்காலத்தில்  அது கொடியாக மாறிப்போயிருக்கும்.

பத்தாயத்தின் ஓரமாக அம்மா ஒரு கம்பு சார்த்தி வைத்திருப்பாள்.

அலசி, பிழிந்து வைத்திருக்கும் புடவையை கழியில் எக்கி எறிந்து இந்தப்புறமும், அந்தப்புறமும்  கம்பால் விரித்து விடுவாள். மடித்த புடவைகளை கம்பின் நுனியில் போட்டு அலேக்காக  கழியில் தொங்கவிடுவாள்.

நிர்மலாக்கா புடவைகளை மடித்து டிரங்க் பெட்டிக்குள் வைத்துவிட்டாள். கழி வெறுமனே  கிடந்தது. கூரையோட்டில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடி சில்லின் வழியாக வெயில் உள்ளே, நட்டநடு அறையில் விழுந்து கிடக்கும். அதைத் தவிர அறைக்குள் வேறு புழக்கமில்லை.

கூடமும், தாழ்வாரமும் வெறிச்சோடிக் கிடந்தன. அம்மா புழங்கியபோது கூடமும், நான்கு  தாழ்வாரங்களும், முற்றமும், ஆளோடியும், சமையல்கட்டும், அறைகளும் அவளின் ஆக்கிரமிப்பில் நிறைந்திருந்தன.

இப்போது வியாபித்திருக்கும் வெறுமை இணுக்கு விடாமல் ஒட்டுமொத்தமாக அந்தகாரத்தை  கொட்டி நிறைத்து வைத்திருந்ததில் தியாகுவுக்கு பெரும் அவஸ்தையாக இருந்தது.

கூடத்திலிருந்த டிவியை அறைக்கு மாற்றினான். ரவி வந்து கேபிள் ஒயரை கத்தரித்து   அறைக்கு கொண்டுவந்து இணைப்பு கொடுத்துவிட்டுப் போனான். சாயந்தரம்  பக்திப்பாடல்களை போட்டுவிட்டபோது அம்மா பெருமூச்சு விட்டாள்.

கூடத்துக்கும், சமையல் உள்ளுக்குமாக நடந்து கொண்டிருக்கும்போது பிடித்த  பாடலாயிருந்தால் ஒரு  நிமிடம் நின்று பார்ப்பாள். சிலசமயம் ரசனையின் தீவிரத்தில் கண்கள்  மூடி தலையசைத்து ஹம் செய்வாள். பழைய பாடல்கள் எந்நேரமும் ஒலித்தபடியே இருக்கும்.

அம்மா மாடத்திலிருந்த விபூதி மடலை எடுத்து வரச் சொன்னாள். ஆறு மணியானால்  முகமலம்பி விபூதி இட்டுக்கொள்வாள். எதையும் செய்ய இன்னொருவர் உதவி தேவை  என்றானபிறகு பல பழக்கங்கள் அவளிடமிருந்து விடுபட்டுக்கொண்டன.

அம்மாவின் நெற்றி விபூதியின் அரை வெள்ளையில் முத்துப்  பதக்கம் போல மின்னியது. பெரிய நெற்றி அவளுக்கு. முன்நெற்றியின் வலது பக்கத்தில் வகிட்டிலிருந்து ஒரு சாணளவு  மயிர் வெள்ளை அருவியென சரிந்து காதின் வளைவில் ஒதுங்கியிருக்கும்.

இப்போது மயிர்க்கால்களில் வெள்ளை பெரும்பான்மையாக மினுங்கிற்று. அம்மா கைகள்  கூப்பி கண்கள் மூடி படுத்திருந்தாள்.

“தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ”   என்று வாய் மெலிதாக முனகியது.

வாசல் காம்பவுண்டு சுவரையொட்டி நின்றிருந்த மகிழ மரத்தின் பூக்கள் கோலம் போடும்  தரையில் கொட்டிக் கிடந்தன. காம்பவுண்டு ஓரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள்  சீட்டில்  ஒற்றைப்பூ விழுந்திருந்தது. தியாகு அதைப் பார்த்தபடி நின்றிருந்தான். சற்றே பெரிய மரம். காம்பவுண்டுக்கு இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் கிளைகள் விரித்து நின்றது. வீட்டுக்கு  வருகிறவர்கள் மரத்தடியில் சைக்கிளையோ, வண்டியையோ விட்டுவிட்டு வருவார்கள். நிர்மலாக்காவும் அப்படித்தான் செய்வாள்.

கோடைகாலத்தில் தாராளமாய் கொட்டிக் கிடக்கும் மரநிழலில் ஆடுகள் அமர்ந்து  அசைபோடும். மரத்துக்கு உன் வயசிருக்கும் என்று அம்மா, தியாகுவிடம் சொல்வாள். மாங்கன்று ஓரளவு வளர்ந்து இளமரமாகியிருந்தது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு  தியாகுவுக்குத் தெரிந்து அம்மா அதை நட்டு வைத்தாள்.

“பாதிரி கன்னு. ….பழம் கல்கண்டாட்டம் இனிக்கும். மாயவரத்த தவிர வேறெங்கியும்  கிடைக்காது” என்றாள் அம்மா.

“இன்னும் நாலஞ்சு வருஷத்துல காய்க்க ஆரம்பிச்சிடும்.”

ஒருநாள் தண்ணீர் ஊற்றியபடியே சொன்னாள். தியாகு சைக்கிள் சீட்டில் கிடந்த மகிழம்பூவை  எடுத்து வந்து அம்மாவிடம் நீட்டினான். அம்மாவின் கண்கள் பரவசத்தில் ஒளிர்ந்தன.

“நிறைய பூத்திருக்காடா…”

“உனக்குத் தெரியாதாம்மா…”

“போன வருஷம் மழை பெய்யிறாப்ல பொழிஞ்சு தள்ளுச்சு. அதுக்கு முந்தின வருஷம்  அவ்வளவு பூக்கல. அதனால கேட்டேன்.”

“இலை தெரியாத அளவுக்கு பூத்திருக்கு. கமலி, கூட்டறதுக்குள்ள இடுப்பொடிஞ்சு  போயிடுதுங்கறா.”

அம்மா இதழ் பிரியாமல் சிரித்தாள். முன்பெல்லாம் காலை எழுந்தவுடன் வாசல் கூட்டுவதே  அம்மாவுக்கு பெரிய வேலையாக இருக்கும். காம்பவுண்டு சுவரோரம் அடர்ந்திருக்கும்  புற்களுக்கிடையில் கிடக்கும் சருகுகளை, பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்து அழும்  குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிடித்திழுத்து கொண்டு  விடுவதைப் போல அம்மா தள்ளிக்  கூட்டுவாள்.

வாசற்படிக்கெதிரில் அரை வட்டமாய் விரிந்து கிடக்கும் சாணத்தரையில் சாணம் கரைத்த  தண்ணீரை சளப், சளப்பென்று தெளித்து படியக் கூட்டி அரிசிமாவால் இழைத்து  கோலமிடுவாள். கிட்டத்தட்ட அரைமணி நேரம் முழுதாய் அதற்கு தேவைப்படும்.

அப்போது அம்மாவின் நெற்றியிலும், மேலுதட்டிலும் வியர்வைத்துளிகள் துலக்கமாய் மின்னும். மகிழமரம் சீசனில் ஏகத்துக்குப் பூக்களை கொட்டி வைத்திருக்கும். அதை விளக்குமாறால்  கூட்டித்தள்ள மனசு வராது என்பாள் அம்மா. அப்போதுமட்டும் ஜாடு வைத்து பூக்களை  ஒதுக்குவாள். ஓரிரு பூக்கள் அவள் தலையில் விழுந்து முடியில் சிக்கிக்கொள்ளும்.

நிர்மலாக்கா வண்டி நிறுத்தும் சத்தம் கேட்டது. வேகுவேகென்று வெயிலில் வந்திருந்தாள். முகம் கருத்து, அனல் தளர்ந்த கரி போலிருந்தது.

“டவுனுக்குப் போயிட்டு அப்படியே உங்களைப் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.”

கையிலிருந்த பையை சன்னல் திட்டில் வைத்தாள்.

“இந்த வெயில்ல போவாம சாயங்காலமா போயிருக்கலாமில்ல. ”

அம்மாவின் கேள்விக்கு அவள் தலையாட்டினாள்.

“அவரு கடைக்கு சரக்கு எடுத்தார போயிட்டாரு. விமலா பொண்ணு சடங்குக்கு சீர்  செய்யணுமில்ல. நாளைக்கு சடங்கு. அதான் டவுனுக்குப் போயி பழமெல்லாம்  வாங்கியாறேன். சாயங்காலம் புட்டுக்கு மாவிடிக்கணும்.”

அவள் துப்பட்டாவால் முகத்தில் விசிறிக்கொண்டாள். சுடிதார் வியர்வையில் உடம்போடு  ஒட்டிக்கொண்டிருந்தது. அம்மா, தியாகுவை தண்ணீர் கொடுக்க சொன்னாள். பிளாஸ்டிக்  ஜக்கிலிருந்த நீரை தம்ளரில் வார்த்து அவளிடம் கொடுத்தான். தொண்டைக்குழி ஏறி, இறங்க  குடித்தவள் இன்னொரு தம்ளர் கேட்டு வாங்கிக் குடித்தாள்.

“நீங்க எதுவும் பணம் வச்சி குடுக்கணுமா…அத கேக்கதான் வந்தேன்.”

தம்ளரை ஜக்கின் தலையில் கவிழ்த்தபடியே கேட்டாள்.

“ஆமா…விமலா, பெரியவன் கல்யாணத்துக்கு வந்து செஞ்சிருக்கா…”

அம்மா கண்சாடை காட்டினாள். தியாகு மர பீரோவிலிருந்த அந்த சிறிய மரப்பெட்டியை  எடுத்து வந்தான். அம்மா எப்போதும் அதில்தான் பணம் வைத்திருப்பாள். ராசியான பெட்டி  என்பாள். சிவா மாதாமாதம் அனுப்பும் பணம் அதற்குள் போய் பின்புதான் செலவுக்காக  வெளியில் வரும். அம்மா இருநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தாள்.

“கவரு போட்டு வச்சிக் குடுத்துடு. கடையில கவரு இருக்குல்ல…..?”

“இருக்கு ”

நிர்மலாக்கா லெட்சுமி நகைக் கடையில் கொடுத்த ஹேண்ட்பேக்குக்குள் பணத்தை வைத்துக்  கொண்டாள்.

“வேர்த்து வடியிது. இப்புடி பேனுக்கு நேரா ஒக்காரு.”

அம்மா கைக்காட்டினாள்.

“இல்லத்த. நான் கெளம்புறேன். வேல கெடக்கு.”

” இரு, தம்பி காபி போட்டு குடுப்பான். குடிச்சிட்டு போவலாம்.”

அம்மாவுக்கு யார் வந்தாலும் காபி கொடுத்து உபசரிக்க வேண்டும். நிர்மலாக்காவுக்கு காலை  நேரத்தில் காபி நிச்சயம் உண்டு. அவளே தயாரித்து தியாகுவுக்கும், அம்மாவுக்கும்  கொடுத்துவிட்டு தானும் குடிப்பாள். மழையோ, வெயிலோ அம்மாவுக்கு காபிதான் உயிர்.

மழைக்கு காபி இதம். தொண்டைக்குள்ளிறங்கும் காபி உடல் மொத்தத்துக்குமான சூடு. புது  டிகாஷன் காபிக்கு தனி மணமுண்டு.

அந்த மணம் வாழ்க்கையின் ஐந்து நிமிடங்களை அர்த்தமுள்ளதாக்குவதாக அம்மா  சொல்வாள்.

அதற்காக அதிகாலை நாலரைக்கே எழுந்து பில்டரில் வெந்நீர் ஊற்றுவாள். வெயிலிலும்  அம்மாவுக்கு காபி வேண்டும். பில்டரில் அளவாய் நீரூற்ற அவள்தான் தியாகுவுக்கு சொல்லித்  தந்தாள். அவன் வேகமாக எழுந்தபோது நிர்மலாக்கா தடுத்துவிட்டாள்.

“அய்ய…அவனப்போயி காபி போட சொல்லிக்கிட்டு. நான் வீட்டுக்குத்தான போறேன். போயி  குடிச்சிக்கறேன்.”

அவளின் ஸ்கூட்டி சத்தம் மெதுமெதுவாக தேய்ந்து கரைந்தது. உள்முற்றத்தில் அணில் இறங்கி  விளையாடிக் கொண்டிருந்தது. தியாகு சத்தம் வராமல் பீரோவைத் திறந்து பெட்டியை உள்ளே  வைத்தான். மரபீரோவில் அம்மாவின் புதுப்புடவைகள் கலையாமல் மடித்து  வைக்கப்பட்டிருந்தன. எல்லாம் நூல் புடவைகள்.

பத்து, பன்னிரண்டு இருக்கும். அம்மா அதை நிர்மலாக்காவுக்கு கொடுக்கப் போவதாக  சொன்னாள். புடவைகள் புதுக்கருக்கு குலையாதிருந்தன. அம்மா எப்போதுமே அப்படித்தான். பாந்தமாக வைத்துக்கொள்வாள். விளிம்போரம் அழுக்கடைந்து போன புடவைகள்   அவளிடமில்லை. எல்லாமே பெட்டி போட்டதுபோல அடுக்கப்பட்டிருந்தன.

“நிர்மலாக்கா நூல் பொடவ கட்டுவாங்களாம்மா…….நீ கேட்டுக்கிட்டு குடு…”

தியாகு சொன்னபோது அம்மா தலையாட்டினாள். பெங்களூரிலிருக்கும் மருமகள் புடவை  கட்டமாட்டாள் என்று அம்மாவுக்குத் தெரியும். அவளுக்கு கிராமமும் செட்டாகவில்லை. அம்மாவின் பழக்கவழக்கங்களும் செட்டாகவில்லை.

சிவா, தன் காதல் விஷயத்தை சொன்னபோது அம்மாவால் மறுக்க முடியவில்லை. தலையாட்டிவிட்டாளேயொழிய அவளுக்கு சொந்தத்திலேயே பெண்ணெடுக்க  வேண்டுமென்று பெரும் ஆசை. நிர்மலாக்காவை மனதில் நினைத்து வைத்திருந்தாள். தன்  தம்பி மகள்மேல் அப்படியொரு வாஞ்சை.

சிவாவுடைய விருப்பம் வேறுவிதமாக இருந்தது. தன் படிப்புக்கும், வேலைக்கும் பொருத்தமான  பெண்ணை அவன் தேர்வு செய்திருந்தான். அம்மாவால் மறுக்கமுடியவில்லை. அவள், தன்  ஏமாற்றத்தின் இரு துளிகள் உருண்டு கன்னத்தில் இறங்கிவிடாமல் கண்களை மூடிக்  கொண்டாள்.

“டிவி பாக்குறியாம்மா…….?”

தியாகு கேட்டபோது அம்மா தலையை இடவலமாக அசைத்தாள். டிவியை அறைக்கு மாற்றி  பிரயோஜனமில்லை என்று புரிந்தது. இடம் பெயர்ந்ததிலிருந்து அது மவுனமாகவே கிடந்தது.

” நீ வேணாப் பாருடா…”

அம்மா மெலிந்த விரல்களை நீட்டி சொன்னபோது தியாகுவுக்கும் வேண்டாமென்றே  தோன்றியது.

” உனக்குப் பழைய பாட்டு புடிக்குமே. அத கேக்கலாமில்ல. வெட்டு, வெட்டுன்னு சும்மாவே  படுத்துக் கெடக்குற….”

நிர்மலாக்காவுக்கு அங்கலாய்ப்பாக இருந்தது. ஒன்றாம் தேதியானால் அண்ணனிடமிருந்து  தியாகுவின் அக்கவுண்டிற்கு பணம் வந்துவிடும். அதிலிருந்து ஒரு தொகையை  நிர்மலாக்காவுக்கு கொடுப்பது வழக்கமாகிவிட்டிருந்தது. அவள் போராடிப் பார்த்தாள்.

“இம்மாஞ்சோறு குடுக்குறதுனால நான் ஏழையாயிடப் போறனா. அத்தைக்கி செய்யிறதுக்கு  காசு வாங்கலாமா…..”

சொன்ன சொல் எதுவும் அம்மாவின் காதில் ஏறவில்லை. கடைசியில் அம்மாவின் பிடிவாதம்  வென்றது. ஆளோடியின் ஜன்னல் திரைச்சீலை  அசைந்து வெயில் உள்ளே ஒழுகியது. தங்கப்பாளம் போல அது தளதளத்து தரையில் வழிந்து, திரைச்சீலை மூடிக்கொள்ளும்போது   சட்டென்று காணாமல் போனது.

தியாகு பாடப்புத்தகங்களை மேசை மேல் பரவலாகப் போட்டிருந்தான். அஞ்சல் வழிக்கல்வி. அம்மாவின் நடமாட்டம் அற்றுப்போன வீட்டில் உறைந்து கிடந்த அமைதி படிப்பதற்கான  சூழலை முற்றிலுமாக குலைத்திருந்தது.

அம்மா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். தினமும் இந்த நேரம் தூங்குவது என்றில்லாமல்  நியதியற்று, வரும்போது உறங்கிக்கொண்டிருப்பவளுக்கு இரவுப் பொழுதுகள் மீது மிகுந்த  பரிச்சயம் ஏற்பட்டுப்போனது. இதை அவளே சொன்னாள்.

“ராத்தூக்கம் சுத்தமா கெடையாது. கொட்டு, கொட்டுன்னு முழிச்சிக்கிட்டே படுத்துக்  கெடக்குறேன்.”

“பகல்லதூங்குனா ராத்திரி தூக்கம் வருமா…கொஞ்சநேரம் டிவி பாத்து, புத்தகம் படிச்சு நேரத்த ஓட்டலாமில்ல. ”

நிர்மலாக்காவின் இதமான ஒரு திட்டல் அம்மாவுக்கு தினப்படி தேவையாயிருந்தது. குளிர்காலத்தில் மேலூறும் இளவெயில் போல அது அவ்வளவு உணக்கையாக இருந்திருக்க வேண்டும். ஸ்கூட்டி சத்தம் கேட்டால் அம்மாவின் முகம் தெளிந்துவிடும். நிர்மலாக்கா  அவளைக் குளிப்பாட்ட தியாகுவை உதவிக்கு அழைப்பாள். அறை சற்று பெரியது. வலது  மூலையில் தண்ணீர் போக துவாரம் இருக்கும்.

அதற்கருகில் மர நாற்காலி போட்டு அதில் அம்மாவை அமர வைப்பார்கள். அதன்பிறகு தான்  பார்த்துக் கொள்வதாக நிர்மலாக்கா தியாகுவை அனுப்பி விடுவாள். முன்பக்க பட்டன்களைத்  தளர்த்தி நைட்டியை கழற்றி எறிந்துவிட்டு வெற்றுடம்போடு அமர்ந்திருக்கும் அம்மாவின்  உடம்பில் நிர்மலாக்கா கைப்பொறுக்கும் சூட்டிலிருக்கும் வெந்நீரை விளாவி ஊற்றுவாள்.

ஹமாம் சோப்பைக் குழைத்து கை, கழுத்து, மார்பு, வயிறு என்று அழுத்தம் கொடுக்காமல்  பூப்போல் தேய்த்து விடுவாள். அடிவயிறு, அதன் கீழே, பின்முதுகு, பிருஷ்டம் ஒவ்வொன்றாக  இதமாக தேய்க்கும்பொழுது அம்மா கண்கள் சொருக அமர்ந்திருப்பாள்.

அம்மாவின் இளமை உணர்வுகள் பூரித்து ததும்பிக் கொண்டிருந்தபோதே அப்பா  இன்னொருத்தியுடன் ஓடிப்போனார். நெற்றியில் பொட்டிட்டுக்  கொள்ளாமல் அவரை பழி வாங்கிவிட்ட  திருப்தியில் வாழ்ந்துவிட்டவளுக்கு உடல் உலர்ந்த பிறகு நிர்மலாக்காவின்  ஸ்பரிசம் ஆசுவாசத்தைத் தந்தது.

அவள் இமை நுனிகளில் பாசிகள் கோர்த்தது போல் நீர்ச்சரங்கள் மின்னியதை நிர்மலாக்கா  கவனிக்கத் தவறவில்லை. அவள் அம்மாவின் மெலிந்த  விரல்களைப் பற்றிக்  கொண்டாள்.

அம்மா உறக்கம் கலையாதிருந்தாள். அவள் மார்பின் சன்னமான ஏற்ற, இறக்கங்கள்  பெருமூச்சுகளின் புற அசைவை வெளிக்காட்டின. தியாகு வாசலைப் பார்த்தான். மர நிழலில்  புல் செதுக்கப்பட்ட காம்பவுண்டு உள்ளில் நிறையப் பூக்கள் கொட்டிக்  கிடந்தன.

அதில் கைப்பிடி பூக்களை அள்ளிவந்து சன்னல் திட்டில் வைத்தான். ஏனோ திருப்தியின்மை  உண்டானது. ஒரு  மண்மடக்கில் நீர் நிரப்பி அதில் பூக்களை மிதக்க விட்டான். அம்மா கண்  விழித்தபோது அறைக்குள் மகிழம்பூவின் மெல்லிய வாசம்.

“கனவுல பத்தி கொளுத்தி சாமி படத்துக்கிட்ட சொருகி வைக்கிறேன். அதுலேருந்து ரெட்டைப்  புகை திரி மாதிரி கிளம்பி வளையம், வளையமா  வட்டமிடுது. வாசனை  நல்லாயிருக்கேன்னு   நினைக்கிறப்ப தூக்கம் கலைஞ்சிடுச்சு. இதான் காரணமா……?”

அம்மா மகிழம்பூக்களைப் பார்த்து  கண்கள் மலர சிரித்தாள்.

“உனக்குப் புடிச்சிருக்காம்மா… ?”

“நல்லா இருக்குடா. துர்வாடை கொஞ்சம் குறைஞ்சாப்ல இருக்கு.”

மறுநாளும் மடக்கு  நீரில் பூக்கள் மிதந்தன. அன்று நிர்மலாக்காவுக்கு இரண்டாவது  கல்யாணநாள். முதல் கல்யாணநாளன்று அம்மா அவளையும், அவள் கணவனையும் சாப்பிட  அழைத்திருந்தாள். உதவிக்கு வருவதாக சொன்ன நிர்மலாக்காவை தடுத்து ஒருத்தியாய்  எல்லாம் சமைத்து நிரப்பிவிட்டாள்.

நிர்மலாக்கா வடை, பாயசம் கணவனிடம் கொடுத்து விட்டிருந்தாள். நான்கு வடைகளும், இரண்டு தம்ளர் அளவு பாயசமும். தியாகு தன்னுடையதை  முடித்திருந்தான்.

அக்கா பத்து மணிவாக்கில் ஆசீர்வாதம் வாங்க வந்தாள். புதுப்புடவைக் கட்டியிருந்தாள். பார்டரில் ஜரிகை வைத்து தைத்த புடவை. இளநீல நிறப் புடவையில் ரோஸ் வண்ண நூல்  பூக்கள் சிதறியிருந்தன. தலையில் மல்லிகையும், கனகாம்பரமும் முழம், முழமாய் தொங்கின. அவள் கணவன் பழசுதான் அணிந்திருந்தார்.

“எங்களை ஆசீர்வாதம் பண்ணு அத்த…”

“இரு…இரு…”

அம்மா, தியாகுவுக்கு சைகைக் காட்டினாள். மடக்கின் மேல் பார்வை விழுந்தது. தியாகுவுக்குப்  புரிந்தது. இரண்டு பூக்களை எடுத்துத்  தந்தான். நீர் கோர்த்த பூக்கள் அம்மாவின் விரல்களை  நனைத்தன.

“ம்…….”

தலையாட்டினாள். இருவரும் கட்டிலுக்குக் கீழே விழுந்தனர். அம்மா தலா ஒவ்வொன்றை  அவர்கள்மேல் தூவினாள்.

“ஒக்காருங்க…”

மடக்கு நாற்காலிகளை தியாகு விரித்துப் போட்டான். அம்மா இரண்டு தட்டு, தம்ளர், எடுத்து வர  சொன்னாள்.

“அலமாரி மேல்தட்டுல இருக்குடா…”

நிர்மலாக்கா அவள் கையைப் பிடித்துக்  கொண்டாள்.

“போன வருசம் என்னமா சமைச்சிப்போட்ட. இந்த வருசம் இப்புடியாவும்னு நெனைக்கல. ”

கண்களைத்  துடைத்துக் கொண்டாள். தியாகு வந்து நின்றான். அம்மா வடை, பாயசத்தை  இருவருக்கும் நிரந்து கொடுக்க சொன்னாள்.

“வீட்டுல ஏகத்துக்கு இருக்கு. இது உனக்காவ குடுத்து விட்டது. அத எங்களுக்கு பங்கு  போடுறியே.”

நிர்மலாக்காவுக்கு இஷ்டமில்லை என்பதை அம்மா  லட்சியம் பண்ணவில்லை.

“சாப்புடுங்க…”

இரண்டு கைகளையும் மார்புக்கு மேல் கோர்த்துக்கொண்டு அம்மா தலையசைத்தாள். ஏனோ  முகம் தங்க இழைகள் ஓடியது போல மின்னியது. அந்திசாயும் நேரத்தில் வெயில் பழுத்த  மஞ்சளாக இல்லாமல் சற்றே சிவந்த மஞ்சளாக இருக்கும். அது போலிருந்தது அவள் முகம். அம்மா நிர்மலாக்காவைப் பார்த்தவாறிருந்தாள்.

“வடையும், பாயசமும் ரொம்ப நல்லாயிருக்கு அத்த…”

நிர்மலாக்கா சிரித்தாள். அம்மா அவளை அழைத்தாள். அவள் அருகில் சென்று  மண்டியிட்டுக்கொண்டாள். அம்மா அவளுக்கு திருஷ்டி கழித்து கன்னம் வழித்து முத்தம்  கொடுத்தாள். தியாகு மரபீரோவிலிருந்த மரப் பெட்டியை எடுத்து வந்தான்.

“பணமெல்லாம் வேணாம். ”

நிர்மலாக்காவுக்குப் போராடி தீரவில்லை. இரண்டு  இருநூறு ரூபாய் நோட்டுகள் அவர்கள் கைக்கு மாறிற்று. மறுபடியும் வடை, பாயசம் அம்மாவுக்கு வந்துவிட்டது. நீரில் கிடந்த மகிழம்பூக்களின் வாசம் காற்றில் மிதந்தது. அம்மா வடை, பாயசத்தை சாப்பிட்டுவிட்டு  லேசாக வாய் பிளந்தவாக்கில் உறங்கிக்  கொண்டிருந்தாள்.

தியாகு சன்னல் திட்டில் கால் நீட்டி நாற்காலியில் சரிந்து அமர்ந்திருந்தான். மனதில் அந்த  எண்ணம் அலைமோதிற்று.

‘பாவம் செய்தது உடலா, ஆன்மாவா…ஆன்மா என்றால் உடல் ஏன் அவஸ்தைகளை அனுபவிக்கவேண்டும். நோய்களும், வலிகளும் அதற்குத்தானே……ஒருவேளை  உடலென்றால்  ஆன்மாவுக்கு அங்கென்ன வேலை…..கூட்டைத்  துறக்க வேண்டியதுதானே…..’

கிருத்திகா-இந்தியா

ஐ.கிருத்திகா

 

 

(Visited 212 times, 1 visits today)
 

2 thoughts on “வாசம்-சிறுகதை-ஐ.கிருத்திகா”

Comments are closed.