ரெங்கா- சிறுகதை-ஐ.கிருத்திகா

 

ஐ.கிருத்திகாரயில்  கிளம்ப  ஐந்து  நிமிடமிருக்கையில்  அந்தப்பெண்மணி  ஓடிவந்து  ஏறினாள். வந்து  உட்கார்ந்த  நிமிடத்திலிருந்து  அடிக்கடி  முகத்தை  அழுந்த  துடைத்துகொண்டாள். கண்கள்  சிவந்திருந்தது.

“எங்கே இறங்கணும்… ?”

பக்கத்திலிருந்த  வயதான  பெண்மணி  கேட்க,

“மாயவரம்…” என்றபடி சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

ரயில்  நகரத்தொடங்கியது. நான்  அன்றைய  தினசரியை  விரித்து  பார்வையை   ஓட்டினேன். ஆனால்  மனம்  அதில்  லயிக்கவில்லை. பெண்கள்  இருவரும்  பேசிக்கொள்வதை  கவனிக்க  தொடங்கியது.

“அம்மாவை   அந்த நெலமையில விட்டுட்டு வர கஷ்டமாதானிருக்கு. என்ன  பண்றது…..புருஷன், குழந்தை, குட்டின்னு  ஆயிட்டபிறகு  சட்டுன்னு  தங்கிட  முடிய  மாட்டேங்குதே…”

அவள்  அங்கலாய்த்தாள்.

“அம்மா படுத்த படுக்கையா கெடக்கறாங்களா…?”

வயதான  பெண்மணி  ஓரளவு  விஷயத்தை  ஊகம்  செய்துகொண்டு  கேட்க, அவள்  தலையசைத்தாள்.

“ரெண்டு வருஷமா படுத்தபடுக்கைதான். அது  படுற  கஷ்டத்தை  பாக்க  சகிக்கலை. சிவனேன்னு  கெடந்தாலும்  எடுத்து  போட்டு  செஞ்சிடலாம். முடியாம  கத்துறப்ப  நமக்கு  மூச்சு  நின்னுடுது.”

வயதான  பெண்மணி  அமைதியாயிருக்க  அவள்  தொடர்ந்தாள்.

“தண்ணி ஆகாரம்தான் குடுக்கறது. திடமா எதுவும்  குடுக்கமுடியாது. அப்படியிருந்தும்  வெளிய  போவ  கஷ்டப்படுது. கையைவுட்டுதான்  எடுத்தாவணும்.” என்றவள்  கண்களை  துடைத்து  கொண்டாள். அவள்  சொல்ல, சொல்ல  என்னுள்  பழைய  நினைவுகள்  ஓடின.

“ரெங்கா, எடுத்து விடுடா…”

அப்பா  கத்தும்போது,

“இதோ வந்துட்டேன் மாமா…” என்று ரெங்கா ஓடுவான். நானும், அண்ணனும்  அருவருப்போடு  பார்த்து  கொண்டிருக்கும்போதே  ரெங்கா  அப்பாவின்  அறையிலிருந்து  கழுவிய  கைகளோடு  வெளியே  வருவான்.

அப்பாவுக்கு  ஒரு  கையும், காலும்  இழுத்து  படுக்கையில்தான்  சகலமும்  என்றானபிறகு  அம்மா  உட்பட  எங்கள்  அனைவருக்கும்  அவர்  வேண்டாத  பொருளாகிப்போனார்.

“கெஜா, கொஞ்சம் வர்றியா… ?” என்று  அப்பா  கூப்பிட்டால்  அம்மா  முகத்தில்  எள்ளும், கொள்ளும்  வெடிக்கும்.

“எதுக்கு இப்படி கூச்சல் போடறீங்க…..?” என்று  எரிச்சலோடு  கேட்பாள்.

ஜோசியர்  தொழிலில்  பெரிதாக  எதையும்  அவர்  சாதிக்கவில்லையென்றாலும்  குடும்பத்தில்  ஐந்து  வயிற்றை( ரெங்காவையும்  சேர்த்து) கழுவ  அவர்  சம்பாத்தியம்  போதுமானதாயிருந்தது.

அவரும்  படுத்த  படுக்கையில்  விழுந்தபிறகு  அண்ணன்  ஒரு  மளிகைக்கடையில்  வேலைக்கு  போக  ஆரம்பித்தான். அப்பாவுக்கு  எங்களைவிட  ரெங்காமேல்  பற்று  அதிகம்.

சிறுவயதிலிருந்தே  கைக்கு  அடக்கமான  பிள்ளையாக  அவன்தான்  இருந்தான்  என்று    அடிக்கடி  சொல்லிக்கொள்வார்.

ஊர், பேர்  தெரியாத  அனாதையையும்   கட்டி  மேய்க்க  வேண்டியிருக்கிறதே  என்ற  எரிச்சல்  அம்மாவுக்கு. ஒவ்வொரு  செயலிலும்  அதை  வெளிப்படுத்துவாள்.

ரெங்கா  எங்களைவிட  பெரியவனென்றாலும்  உடல்  ரீதியாகவும், மனரீதியாகவும்   பலவீனமாக  இருந்ததால்  எங்களது  ஏளனப்பார்வையில்  நிறையவே  அடிபட்டிருக்கிறான்.

வீட்டின்  முக்கால்வாசி  வேலைகள்  அவன்  தலையில்தான்  விழும். மிஷினுக்கு  போவது, ரேஷன்  வாங்கிவருவது, தோசைமாவு  அரைப்பது( அம்மா  தள்ள, அவன்  சுற்றுவான்)  என்று  ஒருவேலை  பாக்கி  வைத்ததில்லை. அம்மா  எங்களை  தவிர்த்துவிட்டு  அவனை  வறுத்தெடுப்பாள்.

“அவன் உடம்பு முடியாதவன்டி. திணிக்காதே. தாங்கமாட்டான்” என்று  அப்பா, அம்மாவை  திட்டும்போது,

“பரவாயில்ல மாமா…” என்று ரெங்கா சிரிப்பான்.

அப்பா  முதன்முறையாக  மலம்  கழிக்க  சிரமப்பட்டபோது,

“கையை விட்டுதான் எடுத்தாகணும். வேறவழியில்ல” என்று  மருத்துவர்  கூறிவிட,

“கவலைப்படாதீங்க மாமா. நான்  செய்யறேன்” என்றவனைப்  பார்த்து  அப்பா  கையெடுத்து  கும்பிட்டார்.

கிட்டதட்ட  மூன்று  வருடங்கள்  அப்பா  படுக்கையில்  கிடந்தார்.  அவருக்கு  சோறூட்டி, குளிப்பாட்டி, மலத்தை  கையால்  எடுத்து  எல்லாமே  ரெங்காதான்  செய்தான்.

அப்பா  இறந்தபிறகு  அவன்   எங்களுடன்  இருக்க  யாருக்கும்  உடன்பாடில்லை. அவனும்  மறுபேச்சில்லாமல்  வீட்டைவிட்டு  வெளியேறினான்.

ரயில்  ஸ்டேஷனில்  நின்றபோது  நான்  நினைவு  கலைந்து  நிமிர்ந்து  உட்கார்ந்தேன். அந்தப்பெண்மணி  இன்னமும் அருகிலிருந்தவளிடம்  பேசிக்கொண்டிருந்தாள்.

“அண்ணி தெய்வம்மாதிரி. அதுதான்  சகிச்சிகிட்டு  எல்லாம்  செய்யிது.  இல்லேன்னா  அம்மா  கதி  அதோ  கதியாயிருக்கும்.”

அவள்  சொல்ல  எனக்கு  சுரீரென்றது.

‘ரெங்கா யாரோ, எவரோ…ஆனால் அவன் மட்டும் இருந்திருக்காவிட்டால் அப்பாவின் நிலைமை….. அவருடைய அறையை  எட்டிப்பார்க்ககூட  எனக்கோ, அண்ணனுக்கோ  ஏன்…அம்மாவுக்கோகூட  சகிப்புத்தன்மை  இருந்ததில்லை. அப்படியிருக்க  யார்  அந்த  வேலையை  அசூயை  படாமல்  செய்திருக்ககூடும்.’

ரெங்காவை  நினைத்து  முதன்முறையாக  பரிதாபம்  எழுந்தது. அவனிடம்  அன்பு  காட்டியிருக்கவேண்டாம். கரிசனமாக  ஒருசொல்  அவ்வபோது  சொல்லியிருந்தால்கூட  அதுவே  அவனுக்கு  போதும் . அதை செய்யாமல்  போனதை  எண்ணி  மனம்  இப்போது  படுத்தியது.

கடைத்தெருவில்  எங்கேயாவது  பார்த்தால்  ரெங்கா  தலையை  சொரிந்தபடி  சிரிப்பான்.

“பத்து ரூபா இருந்தா குடேன். காபி  குடிச்சிக்குறேன்” என்பான். ஒவ்வொரு  முறையும்  அவன்  கேட்கும்  போதெல்லாம் ,

“சில்லறை இல்லை” என்று பொய் சொல்லத்தான் தோன்றியதேயொழிய கொடுக்க  வேண்டுமென்ற எண்ணம்  ஏற்பட்டதேயில்லை.

அவன்   எங்கே  தங்கியிருக்கிறான், எப்படி  சாப்பிடுகிறான்  என்றெல்லாம்  எங்களுக்கு  தெரியாது, அல்லது  தெரிந்துகொள்ள  விருப்பமில்லை.

 “அவனுக்கு ஒண்ணும் தெரியாதுடா. அவனை  விட்டுடாதீங்க. ரெண்டு  சோறு  போட்டா  நாய்மாதிரி  காலை  சுத்திகிட்டு  கெடப்பான்” என்று  அப்பா  சாகும்  தருவாயில்  கூறியபோது, நிச்சயம்  முடியாது  என்று  மனம்  மறுதலித்தது  ஞாபகத்துக்கு  வந்து  இம்சித்தது.

நான்  பெருமூச்சோடு  ரயிலை  விட்டிறங்கினேன். ரெங்காவைப்  பார்த்தால்  தேவலாமென்றிருந்தது.

ஒடிசல்  தேகம், லேசாக  கூன்  விழுந்த  முதுகு, இழுத்த  நடை. இதுதான்  ரெங்கா.

கடைத்தெருவில்  எங்காவது  தென்படுகிறானா  என்று  கண்களால்  துழாவினேன், பார்த்தால்  வீட்டுக்கு  வரச்சொல்லலாம் என்கிற  எண்ணத்தில்

சாரதி  எதிரே  வந்தான். கண்கள்  கலங்கியிருந்தது.

“ரெங்காவைப் பாத்தியா… ?”

நான்  ஆர்வத்துடன்  கேட்க, அவன்  சொன்னான்.

“ரெங்கா செத்துப்போயிட்டான்ப்பா…”

நான்  அதிர்ந்தேன்.

“வழக்கம்போல கோவில்ல உக்காந்து பேசிகிட்டிருந்தானாம். திடீர்ன்னு  அப்படியே  சரிஞ்சிட்டானாம். மாரடைப்பு….தெய்வத்தோட  சந்நிதானத்துல  கடைசி  மூச்சை  விட்டிருக்கான். நேரா  சொர்க்கத்துக்குதான்  போவான்.”

அவன்  அழுதுகொண்டே  சொல்ல, நான்  மனதுக்குள்  சொல்லிக்கொண்டேன்.

‘நிச்சயமாக…ரெங்காக்கள் போகாமல் வேறு யார் போவர்.’

.கிருத்திகா- இந்தியா

ஐ.கிருத்திகா

 342 total views,  1 views today

(Visited 93 times, 1 visits today)