சுடும் வினை-சிறுகதை- ஐ.கிருத்திகா

“ஒண்டி கருப்புக்கு படையலு போடணும். கடா  வெட்டி  பொங்க  வச்சி  படையலு  போடணும்…..”

அமுதவள்ளி  ஆழ்ந்த  மயக்கத்திலிருந்து  சடாரென்று  விழித்தெழுந்து  அரற்றினாள். கண்களுக்கு  கீழ்  கனத்த  பைகள்  தொங்கின. அழுது, களைத்து  கிடந்த  கண்கள்  குங்குமம்  அப்பியதுபோல்  சிவப்பேறிக்கிடந்தன. அவள்  மயங்குவதும், விழிப்பதுமான   நிலையில்  ஸ்திரமில்லாது  இருந்ததில்  காவேரி  பயந்துபோய்  தூணோரம்  ஒண்டியிருந்தாள்.

“காலையிலேருந்து பச்சத்தண்ணி பல்லுல படாம கெடக்குறா. இப்புடியே  இருந்தா  ஏதாவது  கோளாறாயிரப்போவுது. சக்கர  வியாதிக்காரி  வேற. யாராச்சும்  போயி  ஒரு  டீத்தண்ணி  வாங்கியாங்க.”

மாரியம்மா  அருகிலிருந்தவர்களை உசுப்பேற்ற  ஒருவரும்  அசையவில்லை.

“ஏத்தா, இத்தோட எட்டு டீ வாங்கியாந்தாச்சி. ஒரு  மடக்கு  வாயில  எறக்க  மாட்டேங்குறா. மறுபடியும்  வாங்கியாந்து  அதையும்  ஆறவுட்டு  தூக்கி  வீசணுமா….?”

சந்திரகாசு  கேட்டுவிட்டு  எழுந்து  காசியிடம்  சென்றார்.

“மாப்ள, எவ்ளோ நேரந்தான் இப்புடியே நின்னுக்கிட்டிருப்ப. வந்து  ஒக்காரு.”

“இல்ல மாமா. எம்புள்ள  உள்ளாற  கெடக்குறான். எப்புடியிருக்கான்னு  ஒரு  வெவரமும்  தெரியல. ஆருஞ்  சொல்லவும்  மாட்டேங்குறாங்க. என்னால  எப்புடி  மாமா  நிம்மதியா  ஒக்கார  முடியும்…?”

வழியும்  கண்ணீரோடு  அவன்  கைகளை  விரித்து  கேட்டபோது  சந்திரகாசுவுக்கே  என்னவோ  போலத்தான்  இருந்தது. வந்தபோது  இருந்த  பதைபதைப்பு  அடங்கி  எல்லோரும்  ஒருவாறு  இயல்பு  நிலைக்கு  வந்து  சூழ்நிலைக்கு  பொருந்திப்போய்  அமைதி  காத்தாலும்  பெற்றவளும், உயிர்  கொடுத்தவனும்  தவிக்கத்தான்  செய்தனர்.

“தலையில பலத்த அடி. ரத்தம்  ஏகமா  சேதமாயிருக்கு. இப்ப  எதுவும்  சொல்லமுடியாது.”

டாக்டர்  சொன்னபோது  அமுதவள்ளிக்கு  கண்களை  சுழட்டிற்று.

நான்கு  வருடங்கள்  கழித்து  பிறந்த  பிள்ளை. குழந்தை  குறுக்காக  நின்றபோது  பக்குவமாக  பிரித்தெடுத்து  உயிரை  காப்பாற்றியது  ஒண்டி  கருப்புதான்  என்பது  அமுதவள்ளியின்  நம்பிக்கை.

“ஒண்டி கருப்பு, எம்புள்ளைய மறுக்கா காப்பாத்திரு. அன்னிக்கி  காப்பாத்தி  கையில  குடுத்தமாரி  இன்னிக்கிம்   காப்பாத்திரு…….”

அமுதவள்ளி  சொல்லிக்கொண்டே  அவிழ்ந்து  விழுந்த  மயிரை  அள்ளி  முடிந்து  கொண்டாள். புடவை  முந்தானை  சரிந்து  விழ, அதை  எடுத்துப்போட  சுரணையற்று  ஆஸ்பத்திரி  வராந்தாவில்  கால்பரப்பி  அமர்ந்திருந்தவளை  மாரியம்மாவால்  தேற்றமுடியவில்லை.

ஒருநேரம்  வேகம்  வந்ததுபோல்  பேசுவதும், மறுநேரம்  ஓங்கி  அழுவதுமாய்  வெயிலேறிய  வராந்தாவில்  அவள்  பொழுது  அவஸ்தையோடு  கழிந்தது.

வெயில்  ஒரு  இடம்  விட்டுவைக்காமல்  உஷ்ண  நாக்கால்  பகல்பொழுதை  தின்றுகொண்டிருந்தது.

காசி  காய்ந்த  கண்ணீர்க்கோடுகள்  தாங்கிய  கன்னங்களுடன்  சுவரில்  சாய்ந்து  உட்கார்ந்திருந்தான்.  நர்ஸுகள்  மருந்து  ட்ரேக்கள்  ஏந்தியவண்ணம்  அறைக்குள்  போவதும், வருவதுமாக  இருக்க, நிகழ்வின்  நிலை   புரியாது   குடும்பமே  காத்துக்கிடந்தது.

“ரத்தம் நெறைய தேவைப்படுது. பி  பாசிட்டிவ்  ரத்தம். சீக்கிரம்  ஏற்பாடு  பண்ணுங்க.”

தெரிவிக்கப்பட்டதும்  பதறியடித்து  வந்த  முருகனின்  நண்பர்  பட்டாளம்  ரத்தம்   கொடுத்து  ஆறுதலும்  சொல்லிவிட்டுப்போய்  அதாயிற்று  ஒருமணி  நேரத்துக்குமேல். காவேரி  மெல்ல  எழுந்து  அமுதவள்ளியிடம்  வந்தாள்.

“யம்மா, பசிக்கிது. …..”

வயிறு  தொட்டுக்காட்டினாள்.

“ஐயோ…பசிக்க கூடாதுடி. அங்க  உசிரு  துடிக்கிறப்ப  நமக்கு  பசியெடுக்ககூடாதுடி. ஏய்யா, இந்தப்புள்ள  பசிக்கிதுங்குறாளே. இது  நல்ல  சகுனமா  படலியே. நான்  என்னா  பண்ணுவேன்…..”

அவள்  தலையிலடித்துக்கொண்டு  அழ, காசியின்  தம்பி  சந்துரு  மெதுவாக  அருகில்  வந்தான்.

” சின்னப்புள்ள பசி தாங்காம சொல்லுது. அதப்போயி  பெருசா  எடுத்துக்கிட்டு  அழுவுறீங்களே…..ஒன்னும்  ஆவாது  அண்ணி. முருகன டாக்டருங்க  காப்பாத்திருவாங்க. நீங்க  அழுவாம  இருங்க.”

“சந்ரு, எனக்கு பயமா இருக்குடா. பெத்தப்புள்ளைய  வாரிக்குடுத்துடுவேனோன்னு  பயமா  இருக்குடா.”

“ந்தா…என்னாப் பேச்சி பேசுற…இன்னொருக்கா அப்புடி சொன்ன நாக்க இழுத்துவச்சி அறுத்துப்புடுவேன், சொல்லிட்டேன்.”

காசி  பாய்ந்து  வந்து  கத்தினான்.

“செத்த நேரம் எல்லாரும் அமைதியா இருங்க. சண்ட  போடுற  எடமா இது. போறவுங்க, வாரவுங்க  எல்லாரும்  பாக்குறாங்க. காசி, நீ  போயி  அப்புடி  குந்து. யம்மாடி, ஒனக்குந்தான், வாய  மூடிக்கிட்டு  கம்முன்னு  இரு.”

சந்திரகாசு  அவர்களை  அமைதிப்படுத்த  முனைந்தார். சந்துரு,  காவேரியை  ஆஸ்பத்திரி  வளாகத்திலிருந்த  கேன்டீனுக்கு  அழைத்துப்போய்  பன்னும், டீயும்  வாங்கித்தந்தான்.

“சித்தப்பா, அண்ணே செத்துடுமா… ?”

காவேரி  பன்னை   டீயில்  முக்கி  விழுங்கியபடியே  கேட்க, சந்துருவின்    தலை  வேகவேகமாக  அசைந்தது.

“அப்புடியெல்லாம் ஆவாது. ஒங்கண்ணனுக்கு  உசிரு  கெட்டி. பொழச்சிக்குவான்.”

சொல்லிக்கொண்டே  ரூபாயை  கொடுத்துவிட்டு  அவளை  அழைத்துவந்து  அமுதவள்ளியின்  அருகில்  அமரவைத்தான்.

எதிர்ப்புறமிருந்த   புறநோயாளிகள்  பிரிவுக்கு  கூட்டம்  வருவதும், போவதுமாக  இருந்ததில்  இரைச்சல்  மிகுந்திருந்தது. கையில்  மருந்தும், முகத்தில்  கவலையும்  தாங்கியபடி  உடலில்  நோய்களை  சுமந்த  மனிதர்கள்  அங்குமிங்கும்  அலைந்தனர்.

வராந்தாவை  ஒட்டியிருந்த  வேப்பமரத்தின்  கிளைகளுக்கு  தப்பிய  வெயில்  ஆங்காங்கே  வடிவமற்று  சிதறிக்கிடந்தது. நிழலைக்  கிழித்த  வெயிலின்  தாக்கம்  அங்கு  குறைவாயிருந்ததில்  சிலர்  ஆசுவாசமாக  அமர்ந்திருந்தனர்.

மரத்தில்  பறவைகளின்  இரைச்சல்  அதிகமாயிருந்தது. பறவைகளின்  எச்சங்களும், வேப்பம்பழங்களும்  சிந்திக்கிடந்த  தரையை  அமுதவள்ளி  ஈரம்  உலர்ந்த  கண்களால்  வெறித்தாள்.

“ஒரு லச்ச ரூவா பைக்கு. எம்புள்ள  ஆசையா  கேட்டான். வாங்கித்  தந்துட்டேன்.”

காசி  பெருமையாக  சொன்னபோது  அமுதவள்ளிக்கு  கவலையாக  இருந்தது.

“சைக்கிள்லயே சிட்டாப் பறப்பான். வண்டியில  என்னமாப்  போவானோ…..அதுலேயும்  அந்த  பைக்கு  இத்தேதண்டி  இருக்கு. அலைகள்  ஓய்வதில்லை  படத்துல  தியாகராசன்  ஒட்டிக்கிட்டு  வருவாரில்ல…அந்த  புல்லட்டாம். படிக்கிற  புள்ளைக்கி  இதெல்லாம்  தேவையா…?” என்று  அவள்  மாரியம்மாவிடம்  சொல்லி    கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள்.

“காலேஜிக்கு இனிமே பைக்குலதான் போவேன் ” என்றான் முருகன்.

“எம்புள்ள என்னையமாரி. செறு  வயசுல  நானும்  இப்புடித்தான். புடிச்ச  மொயலுக்கு  மூணு  காலுன்னு  நிப்பேன். என்னோட  தெனாவட்டானப்  பேச்சி, திமுருத்தனம்   எல்லாம்  அப்புடியே   எம்புள்ளைக்கு இருக்கு ” என்ற  காசிக்கு  புதுக்காசு தந்த  போதை  உச்சிக்கேறிக்கிடந்தது.

அமுதவள்ளிக்கு  சற்று  நமைச்சல்தான். அனுபவிப்பதா, வேண்டாமா  என்கிற  எண்ணத்தில்  ஒரு  ஊசலாட்டம். இருவேளை  சோற்றுக்கே  அல்லாடிய  நிலமைப்போய்  சதா  கோழிக்கறியும், மீன்  குழம்பும்  தின்பதற்கான  வாய்ப்பு  ஏற்பட்டதில்  மனசு  நியாயத்தை  கொஞ்சம்  தள்ளி  வைக்கத்தான்  செய்தது.

“ஆத்த சொரண்டுறது தப்புன்னு பேசிக்கிறாங்களேய்யா. அதுல  சம்பாரிக்கிற  காசு  நமக்கு  செரிக்குமா…” என்றுமட்டும்  அடிக்கடி  காசியிடம்  கவலைப்பட்டாள்.

“அந்த வேலைய நாமளா செய்யிறோம். செய்யிறவுங்களுக்கு  தொணை போறோம். ராமருக்கு  அணிலு  ஒதவுனாப்ல  நான்  ஒத்தாசை  பண்றேன். அதுக்கு  கெடைக்குற  கூலியிலதான்  நீ  இப்புடி  மினுக்கிக்கிட்டு  திரியிற. அதனால  வாய  மூடிக்கிட்டு  கம்முன்னு  கெட…” என்ற  காசியின்  இயல்பான  திமிர்த்தனம்  இரண்டு   வருடங்களாக  அவனை  உல்லாசமாக   வாழ வைத்து  கொண்டிருக்கிறது.

கூரைக்கட்டு  இருந்த  இடத்தில்  ஒட்டு  வீடு  முளைத்ததும், உடம்பில்  செழுமைக்  கூடிப்போனதும், பேச்சில்  மிடுக்கு  தொற்றிக்கொண்டதும்  சமீப  காலத்தில்  ஏற்பட்ட  மாற்றங்கள்.

ஊரின்  தெற்காய்  ஓடும்  அந்த  மிகப்பெரிய  ஆற்றின்  மடியில்  கைவைக்கும்  அரசியல்வாதிகளுக்கு  காசி  எடுபிடி. ஆற்றில்  லாரி, லாரியாக   மணல்கொள்ளை  நடக்கும்.

அப்போது  ஊரில்  பிரச்சனை  வராமல்  காசி  பார்த்துக்கொள்வான். அவனுடைய  அடாவடி  குணம்  அதற்கு  கைகொடுத்தது. ஊர்மக்கள்  உள்ளுக்குள்  புகைந்தாலும்  அவனை  எதிர்க்கும்  திராணியின்றி  ஒதுங்கிப்போயினர்.

“அவன் அரசியல்வாதிங்களோட கைக்கூலி. அவனை  ஒண்ணுஞ்செய்யமுடியாது”  என்று  மௌனமாயிருந்தனர்.

காசில்லாமல்  அலைந்து  கொண்டிருந்த  காசியின்  கையில்   ரூபாய்  நோட்டுக்கள்  புழங்க  ஆரம்பித்தன.  மழைக்கு  முளைத்த  திடீர்க்காளான்  போல  வாழ்க்கை  ஏற்றம்  கண்டது.

தொடையிரண்டும்  உராய்ந்து, உராய்ந்து  அமுதவள்ளிக்கு  எரிச்சல்  கண்டுப்போனது. கழுத்தில்  பிசுபிசுத்த  வியர்வையில்  சங்கிலி  புரண்டு  நமைச்சலை  உண்டு  பண்ணிற்று.

மஞ்சள்  கயிறில்  தாலிமுடிந்திருந்தது  போக   இப்போது மூன்று  சவரன்  சங்கிலியும்,  தாலியோடு  காசும்,  குண்டுகளும்  தொங்கியதில்  ஒருவித  பாரமாய்  இருந்தது.

“ஆபரேஷன் பண்ணியாச்சு. இருபத்திநாலுமணி  நேரத்துக்குள்ள  நினைவு  திரும்பிடும்….திரும்பணும்.”

மருத்துவர்  போட்ட வார்த்தை  கொக்கியில்  காசி  தவித்துப்போனான்.

“நெனவு வந்துடும்ல… ?”

பரிதாபமாக  கேட்டான்.

“கடவுளை வேண்டிக்குங்க…” என்ற அவர் எளிதில் கடந்துபோனார். காசிக்கு   இதயம்  படபடத்தது. சத்தமின்றி  நாற்காலியில்  வந்தமர்ந்தான்.

“புள்ள பொழச்சிக்குவானாய்யா… ?”

அமுதவள்ளி  நடக்கமுடியாமல்  நடந்து  வந்து  முழங்காலில்  கைகளை  ஊன்றி  குனிந்து  அவன்  முகம்  பார்த்து  கேட்டாள்.

“பொழச்சிக்குவான்டி. ஒண்டி  கருப்பு  பொழைக்க  வச்சிரும். நீ அழுவாத…”

இதைச்  சொல்ல  அவன்  மிகுந்த  பிரயாசைப்பட்டான்.

“பாசனத்துக்கு ஒதவுன ஆத்த மலடியாக்கி பாசான பூமியாக்கிப்புட்டாங்க…. வயிறு  காஞ்சி  கெடக்குறா  அந்த  மவராசி….  இதுக்கு  நீயுந்தான  காரணம்…..”

அமுதவள்ளி   குரல்  நடுங்க  கேட்டாள். காசி   அவளை  பார்க்கமுடியாமல்  தலையை  தாழ்த்திக்கொண்டான்.

“காசுக்காவ அந்த அயோக்கியப்பயலுங்களுக்கு கைக்கூலியாயிட்டியேய்யா. நானும்  அந்தக்காசுல  குளிர்  காஞ்சிட்டேன்.  நம்ம  ரெண்டுபேரு  பாவமும்  புள்ள தலையில  விடிஞ்சிருமோன்னு  பயமா  இருக்குய்யா….”

“வேணாம்டி. நீ  எதுவும்  சொல்லாத. வுட்ரு…”

காசி  எழுந்துபோய்  ஐ. சி. யூவை  வெறித்தான். ரத்தம்  வழிந்த  தலையோடு, நினைவிழந்து  கிடந்த  மகனை  ஆஸ்பத்திரிக்கு  தூக்கிக்கொண்டு  ஓடிவந்தது  ஞாபகத்துக்கு  வந்தது.

“லாரிங்க வரிசையா போறப்ப காத்துல மணல் பறந்து ரோட்டுல செதறுது. அதக்கூட்டி  பெருக்க  ஆளுங்க  இருக்காங்கதான். ஆனா  அதையும்  மீறி  மண்ணு  பறந்து  ரோட்ட  நறநறக்க  வைக்கிது. அதனால  அதுக்கு  ஏதாவது  ஏற்பாடு  பண்ண  சொல்லுப்பா. ரோட்டுல  கெடக்குற  மணல்  சைக்கிள், வண்டிய  சரிச்சி  வுட்ரும். இதனால  உயிரிழப்பு  ஏற்பட  வாய்ப்புண்டு…”

 ஒருவர்  வந்து  சொன்னபோது  காசி  அவரை  ஏறெடுத்தும்  பார்க்கவில்லை.

“பாக்கலாம்………பாக்கலாம்…” என்றான் எதையோ யோசித்தபடி. அப்போது  அவனுக்கு  தெரியாது,  மகன்  வண்டியில்  வேகமாக  வந்து  மணலில்  சறுக்கி  விழுவானென்று.

அமுதவள்ளி  கடந்து  சென்ற  ஸ்ட்ரெச்சரை  தன்னையுமறியாமல்  பார்த்தாள். பத்து  வயது  சிறுமியின்  உடல்  கிடத்தப்பட்டிருந்தது. பின்னோடு  வந்த  அந்த  நால்வரும்  கதறியழுபடி  சென்றனர். ஸ்ட்ரெச்சர்  மார்ச்சுவரியை  நோக்கி  சென்றது.

“பாவம்ப்பா…பத்து வயசுப்புள்ள.  ஒரு  குடிகாரப்பய  சீரழிச்சிப்புட்டான். புள்ள  செத்துப்போச்சி…..”

இருவர்  பேசிக்கொள்ள  அமுதவள்ளி  எழுந்தோடி  வந்து  முன்பு  அமர்ந்திருந்த  இடத்தில்  அமர்ந்தாள்.

“யம்மா, ஒரு டீயாவது குடிம்மா…”

காவேரி  அருகில்  வந்து  கெஞ்ச, அவளை   இழுத்து அணைத்துக்கொண்டாள்.

நேரம்  நத்தையாய்  ஊர்ந்தது. சந்திரகாசு  கிளம்பிவிட்டார்.

“போயிட்டு காலையில வர்றம்மா…”

“பெரியம்மாவையும் கூட்டிட்டு போயிரு பெரியப்பா.”

“அது. இருக்கட்டுமேம்மா . ஒனக்கு  தொணையா  இருக்குமில்ல…”

“ஒண்டி கருப்பு தொணையிருக்கு பெரியப்பா. நீ  கூட்டிட்டு  போ.”

அமுதவள்ளி  பிடிவாதமாக  சொல்ல  சந்திரகாசு, மாரியம்மாவை  அழைத்துக்கொண்டு  கிளம்பினார். சந்துரு  ஒருபக்கம்  கட்டையை  நீட்டியிருந்தான்.

காவேரி, அமுதவள்ளி  மடியில்  சரிந்து  உறங்கிப்போயிருந்தாள்.

காசி  மெல்ல  அவளருகில்  வந்தமர்ந்தான்.

“வள்ளி, நான் செஞ்சது தப்புத்தான்டி. ….எல்லாத்தையும்  வுட்டுடுறேன்.”

குரல்  நடுங்க  சொன்னான்.

“இந்த சங்கிலி தூக்குக்கயிறுமாரி கழுத்த இறுக்குதுயா. இதுவேணாம். வூட்டுக்குப்  போனதும்  மொதல்ல  இத  அவுத்துட்டு  மஞ்சக்கயித்துல  தாலிய  மட்டும்  கோத்து  போட்டுக்கப்போறேன்.”

அமுதவள்ளி  ஈனஸ்வரத்தில்  முனகினாள்.

மறுநாள்  காலை  முருகன்  கண்  விழித்து  விட்டான்.

ஐ.கிருத்திகா-இந்தியா

(Visited 264 times, 1 visits today)
 

One thought on “சுடும் வினை-சிறுகதை- ஐ.கிருத்திகா”

Comments are closed.