காளி-சிறுகதை-ஐ.கிருத்திகா

“இந்த  வருசம்  எப்புடியும்  வூட்ட  வித்துடுறதுன்னு  முடிவு  பண்ணிட்டேன். நூறு  வருசத்து  வூடு. எங்க  தாத்தா  கட்டுனது. நாலு  தாவாரம், நடுவுல  முத்தம், விரிச்சிப்  போட்டமாரி  அம்புட்டு  பெரிய  கொல்லை. சிம்மாசனத்துல  ஒக்காந்துருக்க  ராசா  கணக்கா  அந்த  தெருவுலயே  எங்க  வூடு  கம்பீரமா  நிக்கும், தெரியுமா……”

சொன்னபோது  சிவநேசனின்  கண்கள்  பெருமையில்  ஒளிர்ந்தன.

“அப்புறம்  எதுக்கு  விக்கணுங்குறீங்க….?”

பேருந்தில்  பக்கத்து  இருக்கையில்  அமர்ந்திருந்த  அந்த  மனிதர்  கேட்டார்.

“அடிக்கொரு  தடவ  ஓடு  மாத்த  வேண்டியிருக்கு. தவிரவும்  மண்ணு  சொவரு  அங்கங்க  பேந்து  வுழுவுது. ஆனா  தரையில  மட்டும்  கை  வச்சதேயில்ல. செங்கல்லு  பதிச்ச  தரை. மேல  சிமிண்டு  பூசாம  செக்கசெவேர்ன்னு  பாக்க  பளிச்சுன்னு  இருக்கும்.”

“வந்து  பாக்கலாமா….?”

அவர்  கேட்க, சிவநேசன்  தலையசைத்தார்.

“பாத்தீங்கன்னா  ஆசப்பட்டு  போயிடுவீங்க. பத்தாயிரம்  சதுர  அடி. பாதிக்கொல்லையும், பாதி  வூடுமா  பாக்கவே  கண்நெறஞ்சி  போவும். என்  ஆத்தா, தாத்தா, அப்பனாத்தாவோட  சுவாசமும், ஆசாபாசமும்  இப்பவும்  வூடு  முழுக்க  நெறஞ்சி  கெடக்கு.”

சொல்லும்போதே  அவர்  குரல்  அடைத்தது. விட  விருப்பமில்லாத  ஒன்றை  வலுக்கட்டாயமாக  உதறித்தள்ள  வேண்டிய  நிர்பந்தம்  உண்டாகிப்  போனதை  அவர்  குரல்  காட்டி  கொடுத்தது.

“ஆடி  மாசம்  மூணாஞ்செவ்வா  காளிகட்டு  திருவுசா( திருவிழா). செவ்வா, பொதன், வியாழன்  மூணு  நாளும்  ஊரே  அமக்களப்படும். நானெல்லாம்  செறுவயசுல  மூணுநாளும்  காளி  பின்னாடி  சுத்தியிருக்கேன். அதெல்லாம்  கண்ணுக்குள்ளாற  நிக்கிது. வெள்ளிக்கெழமதான்  கிளைமாக்சு. வெள்ளிக்கெழம  காளி  திரும்பவும்  கோயிலுக்குள்ள   போறது கண்கொள்ளா  காச்சியாயிருக்கும். அங்க  காளி  கோயிலுக்குள்ள  போனதும்  இங்க  மூட்ட, முடிச்சிய  கட்டிட  வேண்டியதுதான்.”

“நாளு  ரொம்ப  கொறைவா  இருக்கே. அதுக்குள்ளாற  வூட்ட  வித்துட  முடியுமா…?”

“விக்காட்டி  பூட்டி  போட்டுட்டு  கெளம்பிட  வேண்டியதுதான். எங்கூட்டு  மவராசிக்கு  அம்மாம்  பெரிய   வூட்ட  பராமரிக்க  முடியலியாம். தெனந்தெனம்  மூக்கால  அழுவுறா. அவளச்  சொல்லியும்  குத்தமில்ல. காத்து  செத்த  வேகமா  வீசுனா  ஓட்டுல  கொட்டி  கெடக்குற  குப்பைங்க  பூராவும்  வூட்டுக்குள்ளாற  வந்துடும்.”

“அடப்பாவமே….”

“அதுமட்டுமா…..நாலுநாளு  பூட்டிப்போட்டா  வௌவ்வாலுங்க  வூட்ட  குத்தகைக்கு  எடுத்தாப்ல  அட்டகாசம்  பண்ணி  வச்சிடுங்க. சீலத்துணிய  கிழிச்சி  போட்டாப்ல  ஒட்டடைங்க வேற  அங்கங்க  தொங்கிக்கிட்டிருக்கும். எம்பொஞ்சாதி  பொழுதனிக்கும்  வெளக்கமாரும்  கையுமாத்தான்  நிப்பா…..”

“அம்மாம்பெரிய  வூட்ட  வச்சி  காவந்து  பண்றது  கஸ்டம்தான்னு  சொல்லுங்க.”

அவர்  கேட்க, சிவநேசன்  பரிதாபமாக  தலையாட்டினார்.

வெயில்  காலத்தில்  காற்றாடியின்றி  படுத்துக்கொள்ளலாமென்பதையோ, மார்கழியில்  முற்றம்  வழியாக  உள்நுழைந்து  தாழ்வாரத்தில்  விழுந்து  கிடக்கும்  வெயிலில்  குளிர்காயலாம்  என்பதையோ  அவர்  சொல்லவில்லை.

சொல்லி  வீட்டின்  மீதான  தன்   அபிப்ராயத்தை  வலுவிழக்க  வைக்க  அவருக்கு  விருப்பமில்லை.

அவருடைய  பால்யகால  கொண்டாட்டங்களில்  அந்த  வீடு  நிறைய  பங்கெடுத்து  கொண்டிருக்கிறது.

நீளத்திண்ணைகளில்  ஓடிப்பிடித்து  விளையாடியும், பித்தளை  பாத்திரங்கள்  அடுக்கப்பட்ட  பரணில்  ஒளிந்துகொண்டும்  அவர்  அந்த  வீட்டில்  வெகுவாக  புழங்கியிருக்கிறார்.

ஆளோடியில்   ஓடிய  தேக்கு  உத்திரத்தில்  தூளிகட்டி  அவரை  தூங்க  வைத்ததாக  அம்மா  சொல்வாள்.

“ஒனக்கு  அடிக்கடி  கழுத்துல  ஒரம்  வுழுந்துரும். விராட், விராட்டுன்னு  கத்துவ. அப்ப  ஒன்னைய  மொறத்துல  போட்டு  சாமியறையில  ஒக்காந்து  அப்பத்தா  பாட்டு  பாடிகிட்டே   அப்புடியும், இப்புடியுமா  உருட்டுவாங்க. அஞ்சு  நிமிசத்துல  கண்ணு  தண்ணியோட  நீ  சிரிப்ப. அப்பதான்  எங்களுக்கெல்லாம்  உசிரே  வரும்” என்றாள்  அம்மா  ஒருமுறை.

தாழ்வாரத்தில்  தவழ்ந்தது, முற்றத்தில்  கொட்டும்  மழைநீரில்  கும்மாளமடித்தது, சமையற்கட்டில்  புகையும்  அடுப்பில்  பலாக்கொட்டைகளை  போட்டு  சுட்டு  தின்றது  என்று  எதுவும்  சிவநேசனுக்கு  மறக்கவில்லை.

பச்சைக்களிமண்ணில்  அழுந்த  பதிந்த  கால்  சுவடுகள்  போல  மனதில்  பழைய  சம்பவங்களின்  நினைவுகள்  படிந்து  கிடந்தன. திண்ணையில்  கால்நீட்டி  தொப்பை  பெருத்த  தூணில்  சாய்ந்து  அமர்ந்து  புத்தகம்  படிக்கவோ, தெருவை  வேடிக்கை  பார்க்கவோ  அவருக்கு  அவ்வளவு  பிடிக்கும்.

“தாயோட  கருப்பைக்கு  சமானம்  இந்த  வூடு. கருவுல  இருக்க  கொழந்தைக்கு  கவலை  எதுவும்  இருக்காது. அந்தமாரி  இது  எனக்கு  பாதுகாப்பு  தர்ற  எடம். இதவுட்டு  நான்  வேறெங்கியும்  போவமாட்டேன்” என்று  சொல்லிக்கொண்டிருந்தவர்  சமீபகாலமாக  மனைவியின்  நச்சரிப்பில்  தன்  எண்ணத்தை  மாற்றிக்கொண்டு  விட்டார்.

பட்டணத்தில்  கொஞ்சகாலம்  வாழ்ந்து  பார்க்க  வேண்டுமென்கிற  ஆசை  லெட்சுமிக்கு. போதாக்குறைக்கு  மகன்வேறு  தன்னுடன்  வந்து  இருக்க  சொல்லி  வற்புறுத்த, அவனுடைய  மார்பிள்  தரை  வீடும், ஏசி  ரூமும்  லெட்சுமியை   அதிகமாகவே  ஈர்த்துவிட்டன. வீட்டை  விற்க  சொல்லி  சிவநேசனை  நச்சரிக்க  ஆரம்பித்துவிட்டாள்.

“நாலுதாவாரம், நடுவுல  முத்தம், பத்திருபது  பேரு  தாராளமா  பொழங்கலாம். தெக்கு  பாத்த  வூடுங்குறதால  காத்து  அப்புடியே  அள்ளும்.  இத  வுட்டுட்டு  டவுனுல  புறாக்கூண்டுல  அடையணும்னு  ஆசப்படுறியே….” என்று  சிவநேசன்  சொல்லிப்பார்த்தார். லெட்சுமி  காதில்  வாங்கவில்லை.

“இரும்புக்கம்பி  போட்ட  முத்தம்…… மூங்கித்தட்டுல  மொளவா, உளுந்து, பயிறைக் கொட்டி  முத்தத்து  கம்பியில  காயவச்சா  பட்டு, பட்டா  காஞ்சிரும். இந்த  வசதி  அங்க  வருமா…?”

இன்னொருமுறை  இப்படிக்  கேட்டார்.

” ராத்திரி  வாயப்பொளந்து  தூங்குறப்ப  வௌவாலுங்க  வந்து  எச்சமிட்டுட்டு  போயிரும். இதுவும்  அங்க  கெடையாது. இதுக்கு  என்னா  சொல்லுறீங்க…?” என்று  லெட்சுமி  மடக்க  சிவநேசன்  செய்வதறியாது  திகைத்தார்.

அவருடைய  வாதம்  லட்சுமியின்  எதிர்வாதத்தில்  எடுபடாமல்  போனது. நாளாக, ஆக  அவள்  வீட்டின்  மேல்  அடுக்கிய   குற்றச்சாட்டுக்கள்  சிவநேசனை  மனம்  மாறச்செய்தன.

இருந்தும்  எரிந்து  முடிந்த  அடுப்பின்  அடிமடியில்  கனன்று  கொண்டிருக்கும்  தணல்  போல  வீட்டின்  மீதான  பாசம்  அவர்  மனதின்  அடியாழத்தில்  புதைந்து  கிடக்கவே  செய்தது. அது  அவ்வபோது  பீறிட்டு  வருவதும், அவர்  அதை  அடக்கி  அமர்த்துவதும்  வாடிக்கையாகிப்போனது.

கெட்டியான  கல்திண்ணையில்  பேரன்  ஓடிப்பிடித்து  விளையாடுவதைப்  பார்க்கையில்  சிவநேசனுக்கு  சந்தோஷம்  பொங்கும்.

“தாத்தா, இந்தத்  திண்ணைய  மட்டும்  நான்  எடுத்துட்டு  போயிடுறேன். எனக்கு  இது  ரொம்ப  பிடிச்சிருக்கு…” என்பான்  பேரன்.

“மொத்த  வூடும்  ஒன்னோடதுதான், முடிஞ்சா  தூக்கி  இடுப்புல  வச்சிக்கிட்டு  போ…” என்று  சிவநேசன்  சிரிப்பார். அவர்  சிறுவனாக  இருந்தபோது  வீட்டின்  வலது  பக்கத்தில்  கருங்கல்  தூண்கள்  பதித்து  சார்ப்பு  இறக்கி  மாடுகளுக்கு  தொழுவம்  அமைத்திருந்தார்கள். அதில்  ஏழெட்டு  மாடுகள்  வரிசையாக  நின்றிருக்கும்.

“கள்ளிச்சொட்டாட்டம்  பாலு.  அத  பொங்க  காய்ச்சி, புதுசா  டிகாசன்  எறக்கி  காலையில  அஞ்சி  மணிக்கெல்லாம்  அம்மா  காப்பி  கலந்து  குடுக்கும். காப்பி  ருசி  குடிச்ச  பிற்பாடும்  நாக்கை  வுட்டு  எறங்காது. மறுகாப்பி  பத்து  மணிக்கி. அது  வூட்டுல  இருக்க  பெரியவுங்களுக்கு  மட்டும். நாங்க  கேட்டா  அடிதான்  கெடைக்கும்.”

பேரன், பேத்தியிடம்  கதை  சொல்லும்  சிவநேசனின்  கண்களுக்குள்  அந்த  நாட்களின்  காட்சிகள்  விரியும்.

மழைநாளில்  முற்றத்து  கூடல்வாயில்  வழியும்  நீர்  குழாய்  மூலமாக  சிறு  தொட்டிக்குள்  கொட்டும்போது  சிவநேசன்  அதைப்பிடித்து  குடிப்பார்.

“சளி  புடிச்சிக்கும்டா. சொன்னாக்கேளு. அந்தாண்ட  போ…” என்று  அம்மா  விரட்டுவாள்.

கிட்டதட்ட  அறுபத்தைந்து  வருடங்கள்  ஆசைதீர  அந்த  வீட்டில்  வாழ்ந்து  விட்டாலும்  இன்னமும்  மனசு  ஏங்கித்தான்  கிடக்கிறது  அவருக்கு.

ஆடிமாத  மூன்றாம்  செவ்வாய்…… காளி   கிளம்பிவிட்டது.

“காளியம்மன்  படுகளத்துக்கு  வந்துருச்சி….”

புறங்கையால்  ஒழுகிய  மூக்கை  துடைத்துக்கொண்டு  வலது  கையால்  அவிழ்ந்து  விழும்  கால்சட்டையை  பிடித்தபடி  பொடியன்  ஒருவன்   கத்திக்கொண்டே  ஓடினான்.

ஊரே  விழாக்கோலம்  பூண்டிருந்தது. தெருவில்  கடைகள்  மண்டிக்கிடந்தன. வீடுகள்  தலைகளால்  நிறைந்திருந்தன.

லெட்சுமி  அரிசிமாவில்  வெல்லம்  சேர்த்து  உருண்டை   பிடித்து நடுவில்  கட்டைவிரலால்  குழி  உண்டாக்கி  அதன்  விளிம்பில்  மூன்று  குங்குமப்பொட்டுக்கள்  வைத்து  நெய்யூற்றி, திரி  போட்டு  மாவிளக்கு  தயார்  செய்துவிட்டு  அடுப்பு  வேலை  கவனிக்க  அவசரமாய்  எழுந்தோடிப்போனாள்.

சிவநேசன்  ஆணியில்  மாட்டப்பட்டிருந்த  ரோஜாப்பூ  மாலை  உதிராமல்  இருக்கிறதா  என்று  அனேகதடவைகள்  தொட்டுப்பார்த்து  திருப்தி  பட்டுக்கொண்டார்.

உள்ளுக்குள்  இனம்புரியாத  பரவச  உணர்வு. காளி  ஆட்டம்  ஆரம்பித்தால்  நாடி, நரம்பெல்லாம்  முறுக்கேறிப்போகும்  அவருக்கு. அவருக்கு மட்டுமில்லை. ஊர்மக்கள்  எல்லோருக்கும்தான்.

காளி  படுகளத்தில் ( ஆடு  பலியிடும்  இடம்)  நின்றிருந்தது. ஆட்டுக்கு  மாலையிட்டு  பூசைமுடித்து  அதை  பலிகொடுத்த  பிறகே  காளி  அடுத்த  அடி  எடுத்து  வைக்கும்.

வழக்கமாய்  சின்ராசு  அண்ணன்தான்  காளிகட்டி  கொள்வார்( சுதையினால்  செய்யப்பட்டிருக்கும்  சிரசையும், கழுத்திலிருந்து  வயிறு  வரையிலான  பகுதியையும்  சேர்த்து  காளி  உருவத்தை  மேலே  தாங்கிக்கொள்வது) . முறைப்படி  விரதமிருந்து, கையில்  காப்பு  கட்டி  காளி  கட்டிக்  கொள்பவரை  மக்கள்  காளியாகவே  பாவித்து  சிலிர்த்து  போவர்.

தாழம்பூ  வடிவ  சிரசு. அகன்ற  முகம், கனிந்த  கண்கள், கடைவாயோரப்பற்கள், நெற்றிக்கு  நேர்மேலே  சிரசில்  படமெடுக்கும்  நாகம்……பார்க்க, பார்க்க  பரவசம்.

சிவப்பு  வர்ணம்  பூசப்பட்ட  காளியின்  முகத்தில்  வெள்ளை  விபூதிப்பட்டை. புருவமத்தியில்  செஞ்சாந்து  குங்குமம். காளியின்  கழுத்தில்  நெக்லஸ், காசுமாலை  என்று  விதவிதமான  அணிமணிகள்.

அதுதவிர  ரோஜா, மல்லிகை, சம்மங்கி, செவ்வந்தி, எலுமிச்சை  மாலைகள். ஆறு  கரங்கள்.  கரங்களில்  கிளி, தாமரைப்பூ, உடுக்கை, கத்தி, சூலாயுதம், கண்ணாடி  என்று   விதவிதமான  பொருட்கள்  தாங்கி  அழகாக  பாவாடையுடுத்தி  பின்பக்க  சிரசிலிருந்து  இடுப்பு  வரை  பிர்க்கா  போர்த்தி  நடந்து  வரும்  காளிக்குள்  சின்ராசு  அண்ணன்  இருப்பதாக  எவருக்கும்  தோன்றாது.

காளி  கூட்டம்  புடைசூழ, ஜல்ஜல்  என்று  சலங்கை  சப்திக்க  பட்டுக்குடையின்  கீழ்  ஆடியசைந்து  நடந்து  வந்தது.

“முன்னெல்லாம்  தெருவுக்கு  பத்து   வூடுங்க  இருந்தா  பெரிய  விசயம். அதனால  டாண்ணு  பன்னெண்டு  மணிக்கெல்லாம்   காளி  நம்மூட்டுக்கு  வந்துரும். இப்பதான்  வூடுங்க  கூடிப்போனதுல  மூணுமணிக்கு  மேல  ஆயிப்போயிருது.”

சிவநேசன்  தெருமுனையில்  கண்பதித்து  அருகில்  நின்றிருந்தவரிடம்  சொல்லிக்கொண்டிருந்தார்.

மேளதாளத்திற்கேற்ப  காளி  மெதுவாக  அசைந்து  ஆடுவதைப்  பார்க்க  சிறிசுலிருந்து, பெரிசுவரை  தவம்  கிடக்கும்.

பின்னால்  நின்று  ஒருவர்  பிடித்துக்கொள்ள  காளி  மெல்ல  ஆடும். சில  நேரங்களில்  எவர்  உதவியுமின்றி  தன்னிச்சையாகவும்  ஆடும்.

காளி  எல்லோருடைய  வீட்டிலும்  ஆடிவிடாது. ஆடத்தோன்றினால்  மட்டுமே  ஆடும்.

“ஆடு  பாம்பே……வெளையாடு  பாம்பேன்னு  நாயனக்காரரு  வாசிச்சா எங்கேயிருந்துதான்  அவளுக்கு  உற்சாகம்  வருமோ  தெரியாது.  அம்புட்டு  அருமையா  குனிஞ்சி, குனிஞ்சி  ஆடுவா. செரசு  மண்ணத்தொட்டுடும்.”

சொல்லிய  சிவநேசன்  உள்ளே  சென்று  தண்ணீர்  குடித்துவிட்டு  வந்தார். சரியாக  மூன்று  மணிக்கு  காளி  வந்தது.

வாசலில்  போடப்பட்டிருந்த  பெஞ்சில்  காளியை  பிடித்து  அமரவைத்தார்கள். லெட்சுமி  குடம்  தண்ணீர்  கொண்டுவந்து  காளியின்  பாதத்தை  குளிர்வித்தாள்.

சிவநேசன்  ரோஜாப்பூ  மாலையை  பவ்யமாய்  தர, அருகிலிருந்தவர்  காளியின்  கழுத்திலிருந்த  பழைய   மாலையை  அகற்றிவிட்டு  ரோஜாப்பூ  மாலையை  அணிவித்தார்.

மாவிளக்கு  சட்டியை   காளி  முன்னால்  வைத்து  விளக்கேற்றி  அர்ச்சனை  முடித்து  ஒவ்வொருவராய்  விழுந்து  கும்பிட்டனர்.

லெட்சுமி  காளியின்  முன்னால்  குனிய  ஒருவர்  அவள்  தலையை  காளியின்  கையிலிருந்த  விபூதியில்  அழுத்தினார். லெட்சுமி  நெற்றி  நிறைய  விபூதியோடு  நகர, சிவநேசன்  குனிந்து  விபூதி  வாங்கிக்கொண்டார்.

அந்தவினாடி  மளுக்கென்று  உள்ளே  ஏதோ  உடைய, கண்களில்  நீரோடு  திரும்ப  முற்பட்டவரின்  கையை  காளி  கப்பென  பிடித்துக்கொண்டது.

காளி  இப்படி  கையைப்  பிடித்துக்கொண்டால்  அந்த  நபர்  பொறுமையோடு  நின்றிருப்பார். இது  வழக்கமாக  நடப்பதுதான். ஆனால்  சிவநேசனுக்கு  அது  நடந்ததில்லை. சிவநேசன்  கண்ணீர்  வழிய  நின்றிருந்தார். காளியின்  சிரசு  மெல்ல, மெல்ல  அசைந்தாடிற்று,

“தாயி, கைய  வுடு. அடுத்த  வூடு  போவணுமுல்ல….”

ஒருவர்  குனிந்து   அதன்  காதில்  சொல்ல, காளி, சிவநேசன்  கையை  விடுவித்தது.

வாத்தியம்  ஒலிக்க  சிறிதுநேரம்  ஆடிய  காளி  மெல்ல  அடுத்த  வீடு  நோக்கி  நகர்ந்தது.

சிவநேசன்  உடல்  வெடவெடத்து  நின்றிருந்தார். வீட்டுவாசலில்  ரோஜா  இதழ்களும், மல்லிகையும்  உதிர்ந்து  கிடந்தன.

“என்னாங்க…….உள்ளாற  வாங்க….”

லெட்சுமி  அவரை  உலுக்கினாள்.

சிவநேசன்  நீரில்  மிதந்த  பூக்களைப்  பார்த்தார். காளியின்  வாசம்  சுமந்த   பூக்கள், பசுமையான  நினைவுகளை  சுமந்த  அவரின்  மனதைப்போல  நிலைப்பாடின்றி  அங்குமிங்கும்  நீரில்  அலைந்தன. சிவநேசன்  லெட்சுமியைப்   பார்த்தார்.

“அடுத்தவருசம்  காளிகட்டு  திருவுசா  முடிஞ்சதும்  மூட்ட, முடிச்சிய  கட்டிரலாம்.”

ஸ்பஷ்டமாக  சொன்னார். லெட்சுமி  மறுத்து  ஒருவார்த்தை  சொல்லவில்லை.  காளி  அடுத்தவீட்டில்  நின்றிருந்தது.

ஐ.கிருத்திகா-இந்தியா      

   

                       

(Visited 251 times, 1 visits today)
 

One thought on “காளி-சிறுகதை-ஐ.கிருத்திகா”

Comments are closed.