வாங்கோவன் பறைவம்- பாகம் 13-‘பிழைபிடி வாத்தியார்’- உழவாரப்பொன்னையர்

தமிழக்கு நூறெடுத்த புழுகத்திலை, பொடிச்சி பேப்பரைக் கொண்டந்து எல்லாருக்கும் நீட்டேக்கை எனக்கும் நீட்டினாள். நானும் ”கெட்டிக்காரி” எண்டு முதுகிலை தட்டினதோடை விட்டிருக்கலாம். அந்தப் பேப்பரை வாங்கிச் சும்மா பாத்தன். என்ரை பருந்துக் கண்ணுக்கு, அங்கனை ஒண்டிரெண்டு எழுத்துப் பிழையள் தெரிஞ்சுது. யாரெண்டாலும் பிழையைப் பிழையெண்டு சொல்லத் தானே வேணும் பாருங்கோ! ரெண்டு சுழிக்கும், மூண்டு சுழிக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதிறாள் எண்டு போட்டு, நானும் வஞ்சகமில்லாமல், ”எடி பிள்ளை உது பிழை. ஒழுங்கா எழுது” எண்டு என்ரை ஒரு பேத்தியாருக்குச் சொல்லப் போக, அவவுக்கு அது பிடிக்கேல்லைக் கண்டியளோ! அது தான் சின்னப்பிள்ளை எண்டு பேசாமல் விட்டால், தாய்க்காரிக்கும் கோழ்வம் பொத்துக் கொண்டு வந்து பெரிய பிரச்சனையாப் போச்சு.

அட! கோதாரி நான் நல்லதுக்குத் தானே சொன்னான். கண்ணை மூடிக் கொண்டு திருத்தின ரீச்சரிலையெல்லோ நியாயமாப் பாத்தா, கோபம் வரோணும். நூறு எடுத்தா இப்ப என்ன? அதுக்காண்டி தமிழைப் பிழையா எழுதிறதே! என்ன படிப்பித்தலுகள்? என்ன படிப்புகள்? இப்பத்தையாண் எண்டு விளங்கேல்லை. அந்த நாளையான் வாத்திமார், கண்ணுக்கை எண்ணை விட்டுக் கொண்டெல்லே படிப்பிச்சவை. அதுவும் தமிழ் வாத்திமாரெண்டா இன்னுமொரு படி மேலை கண்டியளோ ! எனக்கொரு வாத்தியாரிருந்தவர். ஆ….அ…….டொட்டடாங் பண்டிதர் எண்டு வைப்பமன். பேரைச் சொன்னா ஊரை மோப்பம் பிடிக்கிறனெண்டு திரியிற சிங்கனுகளிட்டை இருந்து தப்பிறதெண்டா ”டொட்டடாங் பண்டிதர்” எண்டு இருக்கட்டுமன்.

பின்னை அந்த மனிசன், தமிழ் படிப்பிச்சுதெண்டா, ஒரு பயல் அரங்க மாட்டான். எழுத்து உறுப்பில்லையெண்டா கொப்பி பறக்கும். ஒவ்வொரு சொல்லுக்கும் இடையிலை ஒவ்வொரு சுண்டு விரல் இடைவெளி இருக்க வேணும். முற்றுப்புள்ளி,கம, ஆச்சரியக்குறி எல்லாம் அந்தந்த இடத்திலை ரிப்ரொப்பாய் இருக்க வேணும். இல்லையெண்டா ஒண்டில் காது சரி. இல்லை வயிறு சரி. பிடிச்சு வைச்சு முறுக்கும் மனிசன். எழுத்துப் பிழைக்கு, பிடரிப் பக்கத்தாலை வந்து டொங் எண்டு ஒண்டு உச்சி மண்டையிலை வைச்சுதெண்டா, சும்மா நாலு மணிக் கோயில் மணி அடிச்ச மாதிரியிருக்கும். ஒரு நாளும் ஒருதருக்கும், தமிழுக்கு நூறு போட்டதாய் கதையே இல்லை. ” கொப்பி கொப்பியா இருக்கோணும். எழுத்து அச்சுப் போலை இருக்கோணும். படிக்கிற பிள்ளை படிக்கிற பிள்ளை மாதிரி இருக்கோணும். சுத்தம் சுகாதாரம் முக்கியம். படிப்பை விட ஒழுக்கம்,பண்பு பெரிய விசயம்.”  இதெல்லாம் பண்டிதர் நாளும் சொல்லிற வசனங்கள். இப்பவும், எனக்கு அப்பிடியே பாடமாயிருக்கெண்டால் பாருங்கோவன். எப்பிடி அந்த நாளையான் வாத்திமார் மனசுக்குள்ளை பதிஞ்சிருக்கினமெண்டு.

திடீர் திடீரெண்டு எழுப்பி விடுவார். சத்தமா வாசிக்க வேணும். புத்தகத்தை ஒழுங்கா, நேராய் பிடிச்சு வாசிக்கிறதே ஒரு பெரிய வேலையெண்டு, அந்தாள் காட்டித் தந்து தான் தெரியும். மனிசன், சைக்கிள் ஓடினாலும் அப்பிடித் தான். சும்மா தூண் மாதிரி நேராய் நிமிர்ந்திருந்து தான் ஓடுவார். உறுப்பெழுத்து, வாசிப்பு, சுருக்கியெழுதிறதெண்டு, தமிழைத் தமிழாய் தான் மனிசன் படிப்பிச்சு விட்டது. அந்தப் பசளையிலை தான், இண்டைக்கும் ஓரளவுக்கு செழிச்சு நிக்குது என்ரை தமிழ். சொல்லுகளை முடிஞ்ச வரைக்கும் பிரிக்க கூடாது. பொருள் மயக்கமாக எழுதக் கூடாது. இரத்தினச் சுருக்கமா எழுதோணும். விசயத்துக்கு தக்கதா, பந்தி பிரிக்கத் தெரியோணும்.  எண்டு பள்ளிக் கூடப் புத்தகத்துக்கு அப்பாலை எத்தினையைச் சொல்லித் தருவார். இனி, தான் வாசிச்ச புத்தகங்களையும், கொண்டந்து, எல்லாருக்கும் ஒரு சுற்று வாசிக்க தந்து விடுவார். படிப்பெண்டு மாத்திரமில்லை. நகம் கடிக்கிறது, காலாட்டிறது,எண்ணெய் வைச்சு தலை இழுக்கிறது எண்டு எல்லாம் பார்க்கும் மனிசன். வீட்டிலை கூட, அப்ப எங்களை இந்தாளளவுக்கு கவனிச்சதில்லை எண்டாப் பாருங்கோவன்.

இப்பத்தையான் பெரியாம்பியளுக்கு, பிழையைக் கண்டு, “திருத்துங்கோ” எண்டு சொன்னாலெல்லே கோபம் வருகுது. அதுகும் எங்கடை முகப் புத்தக பண்டிதர்மார் ஒரு படி மேலை. “முட்டையிலை மயிர் பிடுங்க வந்திட்டியோ?” எண்டு கேக்காத குறை தான். அவேன்ரை அரைப் பந்தி இலக்கியப் பாயாசத்துக்குள்ளையே, அறுபத்தெட்டுப் பிழையள் முந்திரியக் கொட்டை மாதிரி மிதந்து கொண்டிருக்கு. சொல்லப் போனா, “ நீயென்ன பெரிய நக்கீரப் பரம்பரையோ? ” எண்டீனம். சில பெருந்தலையளுக்கே, தங்கடை பிழையளை மற்றவை என்ன திருத்திறதெண்டு பிடிக்கேல்லைக் கண்டியளோ! இடை வெளியில்லாமல் சேர்த்து எழுதிறதும் பெரும் பிழை தான் பாருங்கோ.

இப்பிடித் தான் அண்டைக்கொரு பெரும் எழுத்தாளர் சிறு நீர்ப்பாசனம் எழுதப் போய் இடைவெளியில்லாமல் சிறுநீர்ப் பாசனம் எண்டு எழுதி வைச்சிருந்தார். நானுமென்னவோ, முந்தி அங்கனை மாட்டு மூத்திரத்தை கலந்து, மிளகாய் கண்டுக் குருமனுக்கு அடிச்ச மாதிரி, ஏதோ புது முறையிலை தோட்டஞ் செய்யிறதெண்டு நினைச்சு விழுந்தடிச்சு வாசிச்சன். அது பாத்தால், அந்தாள் சிறுநீர்ப் பாசன முறையை சொன்னவராம். ஐயா! சாமி. இது பெரிய பிழையெல்லோ எண்டு கேக்கப் போக, மனிசன் உருவாடத் தொடங்கீட்டுது. “எல்லாருக்கும் விளங்கினது உமக்கு விளங்காதோ! விசர்க்கதை பறையிறதை விட்டிட்டு விசயத்தைப் பாரும்” எண்டு சன்னதம் ஆடினார்.

சிலருக்குப் புத்தி சொல்லப் போகக் கூடாதெண்டிறது உதுக்குத் தான். என்னத்தைச் சொன்னாலும், எருமை மாட்டிலை மழை பெய்த மாதிரித் தான். அட! ஆர்வக் கோளாறிலை, அவசரத்திலை பிழை விடிறது வேறை. நானும் தான் பிழை விடிறன். இல்லையெண்டேல்லை. அதை சொன்னா திருத்திற மனமும், திருந்திற குணமும் இருக்கோணும் பாருங்கோ. அதில்லாமல் என்னத்தை எழுதி, என்னத்தை கிழிச்சு என்ன பலன்? நீங்க கவிதை எழுதுங்கோ, கட்டுரை எழுதுங்கோ, சிறுகதை புனையுங்கோ, ஆய்வுகள், அதிரடிகள் எண்டெல்லாம் அடிச்சு விடுங்கோ. யாரிப்ப கேட்கிறது?ஓரு பிரச்சனையுமில்லை. எல்லாம் சரி. ஆனா இந்த, அருமந்த தமிழை முதல்லை நிம்மதியாய் இருக்க விடுங்கோவன்.  சும்மா, சிவனே எண்டு கிடக்கிற தமிழையெல்லே சாகடிக்கிறியள். நாறடிக்கிறியள். உந்த றேடியோக்காரர், ரீவிக்காரர் எல்லாருக்கும் சேத்துத் தான் சொல்லிறன். தமிழைத் தமிழாய் இருக்க விடுங்க. குரங்கின்ரை கையிலை பூமாலையைக் குடுத்த மாதிரி ஆக்காதையுங்கோ. தயவு செய்து கும்பிட்டுக் கேக்கிறன். உண்ணாணப் பெரிய புண்ணியமாப் போகும் உங்களுக்கு.

உழவாரப் பொன்னையா

உழவாரப் பொன்னையா

(Visited 105 times, 1 visits today)