குந்தவையின் யதார்த்தமும் புனைவும்-கட்டுரை-க.சட்டநாதன்

குந்தவை தமிழுக்கு கிடைத்த நல்ல படைப்பாளிகளில் ஒருவர். ஈழத்தின் பெண் எழுத்தாளர்கள் என்று வரும்பொழுது கவிதைக்கு ஊர்வசியும் சிறுகதைக்கு குந்தவையும் தான் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர்கள்.இவர்களது எழுத்துக்கள் யாவும் எனக்கு நிரம்பிய சந்தோசத்தையும் திருப்தியையும் தருபவை. குந்தவை சற்றுத் தூக்கலாக எனது வாசக அனுபவத்துக்கும் ரசிப்புக்கும் தெரிகிறார்.

இவருடைய திறமைக்கு வெறும் இருபத்திரண்டு கதைகள் மட்டும் போதுமா ?இன்னும் இன்னும் சற்றுக்கூடுதலாக இவர் தந்திருக்கலாமே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. இவருடைய முதலாவது சிறுகதை நூலான “யோகம் இருக்கிறது” தொகுதியில் பதின்மூன்று  கதைகளும் இரண்டாவது தொகுதியான “ஆறாத காயங்கள்” இல் ஒன்பது கதைகளும் உள்ளன. இது போதுமா ?

இவரது எழுத்தில் பயின்று வரும் புத்தம் புதிய சொற்கள்,யதார்த்தத்தை வழியவிடும் அவற்றின் இயல்பு என்பன படித்த மாத்திரத்தில் பெரிதும் கவர்கின்றன. படைப்புகளுக்கு ஒரு மெல்லிய திரையாக, போர்வையாக  மனோரதியக்கசிவு, அழகுக்கு அழகு சேர்ப்பதை நாம் அறிவோம். ஜெயகாந்தனும்,ஜானகிராமனும்,ஜெயமோகனும் இவ்வகையில் சமர்த்தர்கள். இந்த ரசத் துளிர்ப்பு எதுவுமில்லமல் புதுமைப்பித்தனாகப் போல் கறாராக யதார்த்தத்தை இறுக்கமாகப் பற்றி நிற்பது குந்தவையின் பெரிய பலம் என நினைக்கின்றேன்.

இவரது பெரும்பாலான கதைகள் தன அனுபவச்சரடு இழையோடப் பின்னப்பட்ட படைப்புகளாகும். அத்துடன் அவை மனித வாழ்வின் சோபிதங்களையல்ல-அதன் அவலங்களை,பாரிய நெருக்குதலுக்கு,சமூகநிலையில் உட்படும் மனித மனத்தின் துயரங்களை-மிகையான சித்தரிப்பு ஏதுமில்லாமல் பிரசங்கிப்பவையாக அமைந்துள்ளன.

கதைகள் உருவாகி வரும்பொழுது-புற உலகத்தோற்றங்கள் புலன்உணர்வில் லகிரியில் சிறைப்பட்டு, அதில் ஸ்தம்பித்து,ஆலாபனை ஏதும் செய்யாது-பழுதற்ற முழுமையுடன் பிறப்பெடுத்து விடுகின்றன. இதனை இவரது பாரிய கலை வெற்றி என்றே நினைக்கின்றேன். இவ்விடயத்தில் வண்ணதாசன்-பலகதைகளில் சந்திக்கும் தோல்விகளை இவர் சந்திப்பதில்லை. இது மிகவும் ஆறுதலான விடயம்.

இதுமட்டுமல்ல,கதாமாந்தர்களின் சிறு சிறு மனஉணர்வு வெளிப்பாடுகளையும் உணர்ச்சிவசப்பட்ட மனோநிலை மாற்றங்களையும் கதைகள் நெடுகிலும் இவர் செய்து வருகின்றார். இந்தப்போக்கு அவற்றிற்கு மிகுந்த அழகைத் தருகின்றன.

இவரது தொகுதிக்கதைகளில் மிகச்சிறப்பானவையாக பெயர்வு ,யோகம் இருக்கிறது ,இணக்கம் ,இடமாற்றத்துக்காய் ,பயன்படல்,வீடுநோக்கி ,திருவோடு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

நல்ல கதைகளாக :கோழிக்கறி ,புழுக்கம் ,ஊழியமும் ஊதியமும் ,நாடும் நம் மக்களும் பாதுகை ஆகியனவற்றைச் சொல்லலாம். ஏனைய கதைகளும் எடுத்துச்சொல்லும் விதத்தில்,கதை பின்னப்பட்ட முறையில் மொழித்திறனில் சோடைபோனவையல்ல.

இவரது முதலாவது தொகுதி-யோகம் இருக்கிறது ,ஓரளவு சிறப்பான வடிவமைப்புடன் அடக்கமான அளவில் நல்ல கதைகளாகக் கொண்டுள்ளது. இரண்டாவது தொகுதி- ஆறாத காயங்கள் அழகிய வடிவமைப்பு ஏதுமில்லாமல், ஏதோ பாடப்புத்தகம் மாதிரி வந்துள்ளது. அத்துடன் மிகுதியான எழுத்துப்பிழைகள்; அப்பிழைகள் படிப்பதற்கு மிகுந்த சிரமத்தைத் தருவதுடன், வாசகரசனையையும் மட்டுப் படுத்துபவையாகவும் உள்ளன. மிக மோசமான தொகுதிக்கு- கதைகளை நான் கூறவில்லை-இது அசல் உதாரணம்.

இவற்றுடன் இன்னுமொரு குறைப்பாட்டையும்-இத்தொகுதி பற்றி நான் கூற வேண்டும். தொகுதியில் உள்ள கதைகளின் தலைப்புக்கள் பற்றியது அது. சில கதைகளின் தலைப்புகள் ஏதோ கட்டுரைகளின் தலைப்புக்கள் போல அமைந்துள்ளன. உதாரணத்துக்கு சில : காலிழப்பும் பின்பும், ஊழியமும் ஊதியமும், நாடும் நம்மக்களும்.

கதையின் மையத்தடத்தை,வலுவை, அதனுள் இழையும் அழகை சுட்டுபவையாகத்தான் கதைத்தாயாரிப்புகள் அமைய வேண்டும்.அந்தவகையில் ஆசிரியர்-இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை- பொறுப்புடன் செயற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டாவது தொகுதிக்கு ஒரு திருத்திய பதிப்பு மீளவும் வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவரது நல்ல கதைகள் பற்றி  இனிச் சிறிது பார்ப்போம்.”பெயர்வு”இவருடைய மிகச்சிறந்த கதையென்று துணிந்து கூறலாம். தொண்ணூறுகளின் நடுக்கூறில்-உள்நாட்டு  யுத்தத்தால்-இடம்பெயர்ந்த,குடாநாட்டு மக்களின் துயரத்தைப் பகைப்புலமாகக் கொண்ட கதையிது. ஒரு குடும்பத்தின் அவலநிலை பற்றிய சித்தரிப்பு. இது ஒரு குடும்பத்தின் கதை மட்டுமா? இல்லை , இடம்பெயர்ந்த சகல குடும்பங்களின் துயர் பகிரும் கதையும் கூட. கதையின் முதன்மைப்பத்திரங்கள் சிவரஞ்சனி ,அவளது கணவன்,அவர்களது குழந்தை அமுதன் ஆகியோர்.

வீட்டை இழுத்து மூடிக்கொண்டு புறப்பட்ட அவர்களது கைகளில் சில உடமைப்பொருள்களைத் தவிர-சிறிதளவு குழையல் சோறு, பிஸ்கட் பக்கெட்டுகள் சில, ஒரு அங்கர் பால் பெட்டி ஆகியவையும் இருந்தன. உணவுப்பண்டங்கள் என்றவகையில் இவை எல்லாமே அமுதனுக்குத்தான். பயணத்தின் பொது இப்பண்டங்கள் தீர்ந்த  நிலையில் மீதமாக இருந்தது ஒரு பாண்துண்டு மட்டும்தான்;அதனைச் சிவரஞ்சனி மகனுக்குத் தருவதற்குப் பாதுகாத்து வைத்திருந்தாள்.

அவர்கள் சென்ற படகு கிளாலியைக் கடந்து வன்னி நிலப்பரப்பை அடைந்த நிலையில், கிளிநொச்சியில் ஒரு மரநிழலில் அவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். அப்பொழுது குழந்தை பசியால் துடித்தான். பாண் சாப்பிடுவதற்கு இசைவு கொண்டான். இடியப்பத்திற்கும் சொதிக்குமே வாய் திறப்பவன் பழைய பாண் துண்டுக்கு வாய் திறந்தது பெற்றவளைப்  பொங்க வைத்தது. பாணின் ஒரு துண்டைப் பிய்த்து அவனுக்குத் தந்தாள். அவன் சாப்பிட்டதும் பிறிதொரு துண்டைபி பிய்த்தெடுத்த பொழுது யாரோ அவளை பார்ப்பது போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தாள். அவர்களோடு மர நிழலைப் பகிர்ந்து கொண்ட பிறிதொரு குடும்பத்தின் சிறுவன்! அமுதனின் வயதை ஒத்தவன். சற்று விலகி நின்று அவளது கையில் இருந்த பாணைப் பார்த்தபடி……….  அந்தக் குழந்தைக்கு ஒரு துண்டு பாணைத் தந்தவள், மீதிப்பாணை மகனுக்கு மீதப்படுத்திக் கொண்டாள். அவ்வேளை அவளது முதுகுப் பக்கமாக ஏதோ குறுகுறுப்பு. அவள் திரும்பிய பொழுது தாயின் பின்னாலிருந்து அவளது கையில் இருந்த பாணைப் பார்த்தபடி இன்னுமொரு குழந்தை ! சிவரஞ்சனி துயரத்தால் நிலைகுலைந்து துடித்துப் போகின்றாள். வாசக மனதிலும் அவளது மௌனத்துடிப்பு அப்பிக்கிக் கொள்கின்றது. இடப்பெயர்வும்-அதனால் , பசிப்பிணியால் அவதியுறுபவர்கள் பற்றியும் குறிப்பாகக் குழந்தைகள் பற்றியதுமான ஓர் அவலச்சித்திரமே இந்தக் கதை.

அடுத்த கதை “யோகமிருக்கிறது”. நம்மிடையே வாழ்ந்து மரித்த எழுத்தாளரும் -குந்தவையின் பல்கலைக்கழக மாணவர் பற்றியதுமானதே இக்கதை. அவர் பட்டம் பெட்ரா பின்னர், உயர் பதவியில் இருந்த வேளை,வேலையில் இருந்து இடை நிறுத்தப்படுகின்றார்.அவரது தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும்  கதையாக மட்டும் நான் இதனை நான்  பார்க்கவில்லை. வேலை இழந்திருந்த காலத்தில் அந்த மனிதரின் மனஉளைச்சல்களையும் ,மனஅழுத்தங்களையும் இக்கதை கூறுவதோடு,அத்தொல்லைகளில் இருந்து மீறுவதற்கு முயற்சிக்கும் அவரது எத்தனங்களைக் கூறுவதாகவும் இக்கதை உள்ளது.

நண்பன் ஒருவனது உதவியால் வேலை மீளவும் கிடைக்கும் எனும் நம்பிக்கைத் துளிர்ப்பு அவரை மகிழ்ச்சியடைய வைக்கின்றது. இது கதையின் இறுதிப்பகுதியில் வருகின்றது. இருவேறு மனநிலைகைளில் அந்த மனிதரை நுண்உணர்வுடன் படம் பிடித்துள்ளார் ஆசிரியர்.

அடுத்தது “இணக்கம்”: இக்கதையில் சின்னச்சின்னச் செய்திகள் காட்சிப்படிமங்களாகக் கதையை நிரப்பி அழகு செய்கின்றன. சுற்றுப்புற சுழலும் காட்சிகளும் மனிதர்களும் அவர்தம் விசித்திரமான இயல்புகளும் கதையில் படமாகிறது. புத்தளம் நகரம் ,அங்குள்ள கடை கண்ணிகள், சந்தைத்திடல் போன்றவற்றை நம் கண் முன்னே முழுமையாகக் கொண்டுவரும் கதை இது. மனிதர்களின் இணங்கிப் போகும் சுபாவத்தை நெடுகிலும் பேசும் இக்கதை-அதனுடைய இறுதிப்பகுதியில் இணக்கமின்மையின் சலசலப்பையும் பதிவு செய்கின்றது. இந்த முரண் கூட ,கதைக்கு அழகு சேர்ப்பதாகவே அமைகின்றது.

யாழ் வைத்தியசாலை-கண்சிகிச்சைப் பிரிவில் தனது கண்களைச் சமர்ப்பிக்க வந்த பெண்ணின்(ஆசிரியர்தான்) அனுபங்களைக் கூறும் கதை ‘பயன்படல்’.

கண் மருத்துவநிபுணர் டொக்ரர் பராமநாயகம் நோயாளியின் கண்களைப்  பரிசோதித்துப் பரிகரிப்பதிலும் பார்க்க மாணவியர்களுக்குப் பாடம் நடத்துவதிலேயே அதிக அக்கறைப்படுகின்றார். அவராலும் மாணவர்களாலும் அவஸ்தைக்குள்ளாகும் நோயாளியின் மனோநிலையும்,பரிதவிப்பும் ,பதக்களிப்புமே கதையின் பிரதான மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியையொட்டி முன்பின்னாக யுத்தகால யாழ் நகரத்தோற்றத்தையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் சந்தித்து உறவு கொண்ட மனிதர்கலைப் பற்றியதாகவும் இக்கதை இருக்கிறது .

‘வீடு நோக்கி’ என்பது இன்னொரு நல்ல கதை. இக்கதை இழந்துபோன முன்னைய வாழ்வு பற்றிய, அதன் தாபங்கள், அவலங்கள்,ஏக்கங்கள் பற்றிய Nostalgie தன்மையுடைய கதை. ஊரைப்பற்றிய, வீட்தைப்பற்றிய,பழைய நினைவுகள் கதையில் செறிவாகப் பின்னப்பட்டுள்ளது. குறிப்பாக இக்கதையின் வீட்டின் வலப்பக்கம் அமைந்துள்ள விசாலமான படுக்கையறை பற்றிய குறிப்புகளும் விபரங்களும் துயரம் தரும்வகையில் வருகின்றன.

கதை முடிவில் ,அப்படியென்ன அவசரத்துடன் கதையின் நாயகியின் கால்களைக் காவு கொள்வது போல அந்த மிதிவெடி வெடிக்க வேண்டும்.ஆசிரியர் பரிதாப உணர்வை ஓ ஹென்றி பாணியில் உருவாக்க முயற்சித்துள்ளதா ? இந்த முயற்சி கதையுடன் ஓட்டவில்லை.

‘திருவோடு’ கதை மனித மனோபாவங்களை-குறிப்பாகப் பெண்களின் குணநல விவகாரங்களை விரிக்கும் கதை. கதையின் பிரதானமான பாத்திரமாக வரும் சந்திரா எதிலுமே பட்டுக்கொள்ளாமல் நல்லியல் புகழுடன் நடந்துகொள்வது கதைக்கு வலு சேர்கின்றது. அத்துடன் கதைக்குத் திருவோடு என்று தலைப்பு இட்டது கூட அருமையிலும் அருமை. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள நம்மவர்கள் அங்கு அகதிப் பணம் பெறக் கையேந்துவதைக்க கதைத்த தலைப்பு Suggestive-ஆகச் சுட்டுவது மிக நேர்த்தி.

கலியாணப் பலகாரம் சூடம் வித்தாரம் விலாவாரியாக விபரிக்கப்படும் கதையே ‘புழுக்கம்’.இது சொந்த பந்தமும் அயலவரும் திரண்டு வந்து பலகாரம் சுடும் விதம் பற்றியும் அவர்களது வாய் வல்லபம் பற்றியும் சொல்லும் கதை. சூழலின் புழுக்கத்தை மட்டுமல்ல ,பலகாரம் சுடவந்த பெண்களின் மனப்புழுக்கத்தையும் கதை வெளிச்சமாக்கின்றது.குறிப்பாக நான்கு பெண்களின் தாயான நாகம்மா அடுப்பில் என்னைச் சட்டியை வைக்க அழைக்கப்படுகின்றாள். அவள் சட்டியை வைப்பதற்கு முன்பாக விளக்கேற்றி முருகனை வழிபடுகின்றாள். அப்பொழுது வலது உணர்வுகள் இவ்வகையில் வெளிப்படுகின்றது :

‘அப்பனே ! முருகா என்ரை வீட்டிலை எண்ணை சட்டிவைக்க எப்ப விடப் போறாய் ……….?’

இந்த மன உணர்வின் விரிவும் விகசிப்புமே இக்கதை.

குந்தவையின் நல்ல கதைகள் எல்லாவற்றைப்பற்றியும் நான் இங்கு பதிவிட வேண்டுமென்பதில்லை. அவற்றை வாசகர்கள் இனங்கண்டு இரசிப்பதற்கு வழி விடுகின்றேன்.

கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன்பாக  குந்தவையின் படைப்பாற்றல் பற்றி இரு பெரும் இலக்கிய ஆளுமைகள் தந்த குறிப்புகளை இங்கு தரலாமென நினைக்கின்றேன்.முதலில் எமது எஸ்.பொ அடுத்தது விமர்சன ஜாம்பவான் வெங்கட் சுவாமிநாதன்.

எஸ் பொ என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம் :

‘இந்த நூலின் உடாகப் பயணிக்கும் பொழுது, குந்தவையின் இலக்கிய நோக்கும் வாழ்க்கை முறையும் வேறுபட்டு அமைந்தனவையாக எனக்குத் தோன்றவில்லை. தமிழ் சமூகத்தை ஆட்டிப்படைக்கும் அவலங்கள் அவசரங்கள், விசனங்கள்,விக்கினங்கள் ,துக்கங்கள்,துயரங்கள் ஆகியவற்றில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்ளாமல் ,அதில் வாழும் ஒரு உயிர்ப்புள்ள சாட்சியாகக் கதைகளை நகர்த்துகிறார். தாமரையிலைத் தண்ணீர்! அத்தகைய நிதானந்தான் குந்தவையை மற்றைய சமகால ஈழத்து கதைஞ்சர்களிடம் இருந்து வேறுபடுத்தி ,தனித்துவப்படுத்திக் காட்டுவதாக எனக்குப் படுகின்றது’.

அத்துடன் அவர் இன்னுமொரு விடயத்தையும் கூறுகின்றார் :

‘குந்தவை எந்தக்கட்டத்திலும் தம்மை ஒரு பிரசாரகராகத் தாழ்த்திக் கொள்ளாமல் தான் ஒரு கலைஞன் என்கிற பிரக்ஞையை வலியுறுத்திப் (தன்னை) புகுத்திக் கொள்ளாமலும் லாவகமாக கதை நிகழ்ச்சிகளின் ஊடாக அழைத்துச் செல்லுதல் உண்மையில் கலை நயத்துடன் தனித்துவமாய் அமைகின்றது.

அடுத்து வெங்கட் சாமிநாதனின் கருத்துகள்:

‘குந்தவை எழுதியது அதிகமில்லை. ஆனால் ,மிகுந்த தேர்ச்சி பெற்ற எழுத்து. அபாயங்கள் நிறைந்த சூழலில் நீண்ட பல வருடங்களாக போரின் அழிவுகளையும் மீறி அங்கு பிடிவாதமாக வாழ்ந்துவரும் குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேடமானவை. அவரது எழுத்தும் அலங்காரங்களோ, உரத்தகுரலோ , ஆவேச உணர்வோ அற்றது. குந்தவை மிக விசேஷமான எழுத்தாளர். அவரது எழுத்தும் அவரைப்போலவே விசேஷமானது.அவரது நிதானம், அலட்டல் இன்மை, தேர்ச்சி எல்லாம் என்னைக் கவர்ந்தன. அவரிடம் ஒரு பரிகாச உணர்வும் இழையோடியிருக்கும்.

நல்ல சிறுகதைகளை,தமிழுக்குத் தந்தவர் குந்தவை. அவர் எழுத உத்தேசித்து இதுவரை எழுதாமல் நாவலை எழுதி முடிக்க வேண்டும் என்பதே தரமான தமிழ் வாசகர் பலரது எதிர்பார்ப்பாகும்! அவர் நலமுடன் இருந்த எழுத்துப்பணியாற்ற எனது வாழ்த்துகள்.

.சட்டநாதன்-இலங்கை  

சட்டநாதன்
சட்டநாதன்

             

(Visited 182 times, 1 visits today)