அழுத்தம்- சிறப்புஎழுத்துகள்- க.சட்டநாதன்

க.சட்டநாதன்அவனைப்பார்த்த ஐயா, “என்ன ரமணா…! குட்டி போட்ட பூனை போல வளைய வளைய வாறை… ஏ.எல் சோதனை வெள்ளிக்கிழமை, ஏழாம் திகதி……! இன்னும் மூன்று நாள்தான் கிடக்கு, எழுந்து படியன்ரா….!”

ஐயாவின் பேச்சு அவனுக்கு எரிச்சல் தருவதாய் இருந்தது. உயர்தரப்பரீட்சைக்கு இரண்டு முறை படையெடுத்து, அவனுக்கு தோல்விதான் மிஞ்சியது. ‘இன்னுமொரு முறை அந்தத்தொந்தரவா….?’

சலிப்புடன் அவன் புரண்டு படுத்தான்.

“ அம்மா இருந்திருந்தால் என்னைப்புரிந்து கொண்டு அனுசரணையாக இருந்திருப்பாளோ…? அம்மான்ரை இதமும் பிரியமும் ஏன் ஐயாட்டை இல்லை… சரியான சுடுதண்ணி…. சுடுதண்ணி…’

மீளவும் ஐயாவின் அந்த நாராசமான குரல்;; –

“ எழும்படா தொலைவானே…! வந்து, முதுகில ஒண்டு வைச்சாத்தான் தெரியும்… தறுதலை… தறுதலை…”

அவன் அசிரத்தையுடன், மறுபக்கம் திரும்பிப்படுத்தான்.

உள்ளே வந்த ஐயா, எடுத்து வந்த வாளி நீரை அவனது தலையில் கொட்டினார்.

எருமை மாடொன்றின் அசைவுடன் அவன் எழுந்து கொண்டான்.

ஐயாவை நேர்ப்பார்வையில் சந்திக்கவிரும்பாதவனாய், அவன் தலையைக்குனிந்து கொண்டான்.

வெளியே வந்தவன், பிறஷையும், பேஸ்ரையும் எடுத்துக்கொண்டான்.

‘முகம் அலம்புவதா… குளிப்பதா..?’

நூறு தடவைகளுக்கு மேலாகவே அவனது மனம் அதைக்கேட்டுக்கொண்டது.

ஷ்வரைத் திறந்து விட்டான். நீர் பூப்போலச் சிதறியது. அதன் அழகையே பார்த்தபடி பல நிமிஷங்கள் நின்றான். பல் விளக்கவில்லை என ஞாபகம் வந்ததும், பல் விளக்கினான். வாயலம்பிய பின்னர், ஷ்வரில் நின்றான்.

குளிர்ந்த நீர் உச்சியிலும் உடலில் பட்டதும் குதூகலனாய் ஏதோ ஒரு பாட்டைச் சீழ்க்கை அடித்தான். மீண்டும் மீண்டும் சோப்பை உடலுக்குப் போட்டுக் கழுவிக்கொண்டான். கையிலிருந்த சோப் முழுமையாகத் தேய்ந்து காணாமல் போன பின்னர்தான் அவன் குளியலறையை விட்டு வெளியே வந்தான்.

“ என்ன குளிப்போ… கூத்தோ… ஒரு ‘ராங்’ தண்ணி முழுதும் குளிச்சிருக்கிறான்…”

முணுமுணுத்த ஐயா, ‘ராங்’குத்தண்ணி ஏற மோட்டாரைப்போட்டார்.

சுவாமி அறைப்பக்கம் போக வேண்டுமென்றோ, விபூதி பூசவேண்டுமென்றோ, அவனுக்குத் தோன்றவில்லை. சாப்பாட்டு மேசையிலிருந்த ஃப்ளாஸ்கைச் சரித்து, ஒரு கப்பில் கோப்பியை வார்த்துக் கொண்டான். சுண்டக் காய்ச்சிய பசுப்பால் கோப்பி ருசியாய் இருந்தது. ‘ஐயா கோப்பி குடித்திருப்பாரா… இல்லையா..?’ அதுபற்றி அக்கறைப்படாதவனாய், கடைசித்துளிக்கோப்பி வரை வார்த்து ருசித்து ருசித்து குடித்தான். ‘சாப்பிடுவமா’ என நினைத்தவன், வண்டி முட்டிப்போய்க்கிடக்கு….. இப்ப வேண்டாம்’, என்ற முடிவுடன் தனது அறைக்கு வந்தான்.

அவனது அறை அலங்கோலமாகக் கிடந்தது. பயிற்சிப் புத்தகங்கள், கொப்பிகள், முன்னைய ஆண்டுகளுக்குரிய வினாத்தாள்கள் என எல்லாமே மேசையில் சிதறிக்கிடந்தன. கட்டிலில் ஏறி உட்கார்ந்து கொண்டான். தலையணையொன்றை எடுத்து, சுவரோடு சேர்த்து தனது முதுகை முட்டுக்கொடுத்தவன், சுற்றிவரப்பார்த்தான். அவனது அறையின் கோலம் அவனுக்கே கூச்சம் தருவதாயிருந்தது. அழுக்காகிப்போன – கதவு, ஜன்னல்திரைச்சேலைகள், தூசு படிந்த நீர் ஜாடி, அறை நிரம்பிய – கிழித்து வீசப்பட்ட கடதாசிக்குப்பைகள், குடித்து வீசிய சில சிகரெட் துண்டுகள் என எல்லாமே கால்வைக்க முடியாதளவு அருவருப்பைத்தந்தன.

முன்னர் அவனது அறை இப்படி இருந்ததில்லை. அவனளவில், எந்த வேலையைச் செய்தாலும் ஒரு ஒழுங்கும் துல்லியமும், தூய்மையும் இருக்கும். பரீட்சை பற்றிய பயமும் அதனடியான அழுத்தங்களும்தான் அவனை மட்டுமல்ல, அவனது அறையையும் மிக மிக அலங்கோலமாக்கி விட்டிருக்கிறது. ஏதோ ஒன்று பாரமாய் அவன் மீது உட்கார்ந்திருப்பது போலவும் அதை அகற்ற முடியாமல் வலு இழந்து கிடப்பது போலவும் அவனுக்கு இப்பொழுதெல்லாம் தோன்றுகிறது. முக்கியமான மூன்று பாடங்களையும் அவன் நன்றாகவே படித்து வைத்திருக்கிறான். இருந்தபோதும், மனதில் எதுவுமே இல்லாது – முழுமையாக துடைத்து விட்டது போன்ற ஏதோ ஓர் உணர்வு அவனை ஆட்டிப்படைக்கிறது.

குப்பையாய்க் கிடந்த புத்தகக் குவியல்களிடையே ஒரு வினாத்தாளை இழுத்து எடுத்தான். அது உயிரியல் பாடத்துக்கு உரியது. முதல் நாள் பரீட்சை உயிரியலா… பௌதீகமா…? பௌதீக இயல்தான்! மனது குழம்பிய நிலையில் எதுவித முடிவுக்கும் வர முடியாமல், தலையைப் பிய்த்துக் கொண்டான். அவனுக்குப் பரீட்சை நேர அட்டவணையைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. எடுத்துப் பார்த்தான். உயிரியல்தான் முதல் பாடம். மனம் திருப்தியடைந்ததும் கையில் இருந்த வினாத்தாளைப் புரட்டினான். அது பத்தாம் வருஷத்துக்குரிய உயிரியல் கேள்வித்தாள். முதலில் எம். சி. கியூ வினாக்களைப் பார்த்தான். சற்றுப்பொறுமை இழந்தவன், அமைப்பு வினாக்களுக்குத் தாவினான் .முதல் கேள்வி ‘மனிதக்கண்ணின் மொத்தக்கட்டமைப்பைச் சுருக்கமாக விபரிக்குக’, என்றிருந்தது. கேள்வியை மட்டும்தான் அவனால் படிக்க முடிந்தது. பதிலை வாசிக்கவோ, அதனை மனதில் இருத்திக் கொள்ளவோ முடியவில்லை. கண் என்றதும் அவள்… அந்தப்பெண்…! அவனது கனவுகளில் பட்டாம் பூச்சியாய் சிறகடித்து வளையவரும் அவளும் அவளது கண்களுமே அவனது ஞாபகத்துக்கு வந்தன.

எழுந்தவன், சுவரில் மேசைக்கு மேலாக இருந்த கலண்டரைப் பார்த்தான். அதில் இருந்த பெண் உருமாற்றம் அடைந்து, அவனுக்குப் பெரிதும் பிரியத்துக்குரிய அவனது கனவுக்கன்னியாகவே தோற்றம் காட்டினாள். பிரக்ஞை தவறியவன் போலத் தவித்தவன், அவளையே பார்த்தான். உதட்டோரம் தவழும் சிரிப்புடன் அவள் அழைப்பது போலிருந்தது. நெருங்கி வந்தவன், அவளது கண் மலர்களைக் கவனித்தான், அவை அங்குள்ள மொட்டுக்கள் போல இருந்தன.

செவ்வரி ஓடிய அவளது கண்களில் லேசான கலக்கம் ‘ஏன்..? எதற்கு…?’ என இவன் கலங்கினான்.

அவளது திரட்சியான உதடுகளில் தேன் சிந்தியது. அவளை நெருங்கி, ஆர்வத்துடன் முத்தமிட்டான். சிறிது மனக்கிலேசப்பட்டவன், தன் உணர்வடைந்து, அந்தக் கலண்டரைத் திருப்பிப் போட்டான். அதற்கு மேலாக, அதை மறைப்பது போல, முண்டாசு பாரதி இருந்த கலட்டரைப்போட்டான். பாரதியைப்பார்த்ததும் அவனது மனது பதகளிப்பு நீங்கி ஆசுவாசப்பட்டது.

மீளவும், அந்த உயிரியல் வினாத்தாளைப்பார்த்தான். அப்பொழுது ஐயா கூப்பிடுவது போலிருந்தது. அறையை விட்டு வெளியே வந்தவன், நேராகச்சாப்பாட்டு மேசைக்கு வந்தான். மேசையில் ஐயா சாப்பிட்டபடி இருந்தார். அவருக்கு அருகாக உட்கார்ந்து கொண்டவன், மேசை மீது இருந்த, எல்லாவற்றையும் தனது கோப்பையில் வழித்துப் போட்டுக்கொண்டான்.

“கோப்பி வேணுமா… போடட்டா..?”

ஐயாதான் கேட்டார்.

‘இல்ல…. வேண்டாம்’ என்றவன், ஆர அமர இருந்து சாப்பிடத்தொடங்கினான்.

000000000000000000000000000000

“மணி பதினொன்டரையாகுது. இப்ப போனால்தான் பரீட்சை மண்டபத்தில்… நேரத்துக்கு நிக்கலாம்…”

ஐயாவின் குரல் யந்திரத்தனமாகத் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

‘லிங்’ போல் பொயின்ற் பேனா மூன்று, வீனஸ் பென்சில், கட்டர், அடிமட்டம், ஃபைல் என்று எல்லாவற்றையும் எடுத்து, ஸ்கூல் பாக்கில் வைத்துக்கொண்டான்.

கறுப்பு நிற லோங்ஸும் வெள்ளை புஷ்சேர்ட்டும் அணிந்து கொண்டவன்; தலைவாரி, லேசாய்பட்டும்படாமலும் வூடு பவுடர் பூசிக்கொண்டான்.

நெற்றியின் மேற்புறத்தில் ஏதோ வீக்கம் கண்டிருந்தது. பாக்குத்திரட்சியினும் சின்னதாக அது இருந்தது. அதை அழுத்தி அழுத்திப் பார்த்ததில் சில நிமிடங்கள் அவனுக்குச் செலவாயின.

சாமி கும்பிடு, விபூதி பூசு. மீளவும் ஐயாவின் தொணதொணப்பு.

ஸ்கூல்பாக்கைத் திறந்தவன், அதன் உள்ளே வைத்த பொருட்களை ஒவ்வொன்றாக திரும்பவும் வெளியே எடுத்துச் சரி பார்த்தான். எல்லாம் சரியாக இருந்தன.

மனசு அலை பாய்ந்தது, ‘சைக்கிளில் போவதா..? பஸ்ஸிலா…?’ குழம்பினான்.

சைக்கிளை உருட்டியபடி வெளியே வந்தபோது ஐயா அவனது முதுகைத் தடவியபடி சொன்னார்:

“பேப்பரைக் கையில் வாங்கியதும் – பதட்டப்படாமல் ஒருக்கால் எல்லாக் கேள்வியையும் நல்லாப்படி. படிச்சபிறகு, பதிலை எழுது. முதல்பாடம் உயிரியல் – பகுதி 1 தானே… நீ கட்டாயம் பாஸ் பண்ணுவையடா…. நல்லூரான்ரை கிருபை உனக்கு எண்டைக்கும் இருக்கும்.”

சைக்கிளை ஸ்ராண்ட் போட்டு நிறுத்தியவன், வீட்டினுள்ளே போவதற்குத் திரும்பினான்.

“என்னடா இது… வெளியேவந்திட்டு அபசகுனமா திரும்பவும் உள்ளே போற…”

“சைக்கிளுக்கு காத்துப்போனால் என்ன செய்யிறது….? அதுதான் காசு எடுப்பம் எண்டு…”

அவனது முன் ஜாக்கிரதை ஐயாவுக்கு எரிச்சல் தருவதாய் இருந்தது.

“சதா பயந்து பயந்து சாவதைப்போல ஆகப்போற… இந்தா இந்தக்காசை வைச்சிரு, கன்ரீனிலை ரீ கீ வேணுமென்டாலும் குடி…” கூறியவர். ஓர் ஐம்பது ரூபாய் நோட்டை அவனிடம் தந்தார்.

ஐயாவின் அந்தப்பிரியம் அவனுக்குப் பிடித்திருந்தது.

தனிப்பட்ட மாணவர்களுக்கான பரீட்சை இந்துவில் குமாரசாமி மண்டபத்தில்தான்  நடைபெறுகிறது என்பது இவனுக்குத் தெரியும்.

மண்டபத்துக்கு வெளியே மேற்குச்சாய்வில் இருந்த பார்க்கில் சைக்கிளை நிறுத்தியவன், சைக்கிளைப் பூட்டித் திறப்பை எடுத்துக்கொண்டான்.

நாலடி நடந்தவன், குழப்பத்துடன் திரும்பவும் அவ்விடத்துக்கு வந்து, சைக்கிள் பூட்டியிருக்கிறதா என்று பூட்டை இழுத்தும் பார்த்தான்.

பூட்டியிருப்பது உறுதியானதும் வெளியே வந்து மண்டபத்தினுள் நுழைந்தான்.

அவனது சுட்டெண் 843481. சுட்டெண்ணை சரிபார்த்தவன், தனது இருக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டான். பரீட்சை ஆரம்பமாக இன்னும் அரை மணி நேரம் இருந்தது. பரீட்சை மேற்பார்வையாளர்கள் எவரும் வந்த சிலமனில்லை. ஒரு சில பெடியளும் பெட்டையளும் தான் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தி மட்டும் இவனைக்கவர்ந்தாள். மெலிசாக வத வத என வளர்ந்திருந்த அவள் – சற்று தூக்கலான நிறத்தையும் கொண்டிருந்தாள்.

இவன் பார்ப்பதைக் கண்டதும் – கண்கள் படபடக்க அவளும் இவனைப் பார்த்தாள். அவளைப் பார்ப்பதில் ரசனைக் குறைவு தட்டியபோது மீளவும் அவனுக்கு சைக்கிள் நினைவு வந்தது. ‘சைக்கிள் பூட்டப்பட்டிருக்குமா….? இல்ல…. இல்ல எண்டால் ஆரன் எடுத்திருவாங்கள்.’

சந்தேகம் வலுக்க, அவன் மாடியிலிருந்து இறங்கி வந்து, சைக்கிள் பூட்டை ஒருமுறைக்கு இருமுறை இழுத்துப்பார்த்துக் கொண்டான். திறப்பை எடுத்துப் போட்டுத் திறந்து பார்க்கவும் செய்தான். மீளவும் பூட்டி கழிசானின் பின் பொக்கற்றில் வைத்துக் கொண்டான்.

மண்டபம் மேற்பார்வையாளர்களாலும் மாணவர்களாலும் நிரம்பி வழிந்தது. பிரதான மேற்பார்வையாளரது கட்டளைக்கு அமைவாக மண்டபம் நிசப்தத்தில் ஆழ்ந்து கிடந்தது.

திடீரென ஏதோ ஒளி வெள்ளம். அவனது கனவுகளில் நிதம் நிதம் வந்து தொந்தரவு தரும் அவள்…. அவனது தேவதை மண்டபத்தின் படிகளில் ஏறி, மேலே வந்துகொண்டிருந்தாள். அவளில் எல்லாமே பிடித்துப் பிடித்துச் செல்லமாய்ச் செதுக்கி வைத்தது போல இருந்தன. அவள் இள நீல நிறத்தில் சேலையும் உடலோடு ஒட்டியமாதிரி ‘டீப் நெக்’ ப்ளவ்ஸ்ம் அணிந்திருந்தாள். லேசான சரும நிறத்தில்  உதட்டுச்சாயம் வேறு தீற்றியது போலவும் இருந்தது. இவனுக்கு அருகாக மிதந்து, இவனைக் கடந்து போனபோது – அவளது முகமும் கண்களும் உதடும் தெரிந்தன. எல்லாமே மென்மையும் பொசு பொசு தன்மையும் கொண்டவையாக இருந்தன. பொன்துகள்களில் கொஞ்சம் மஞ்சள் தூளைக் கொட்டிக் கலந்தது போல ஒரு நிறமும் தேஜஸும் அவளில் ஒளிர்ந்தன. பின் முதுகு முழுமையும் தெரிய நடந்து போகும் அவளது பிருஷ்டத்தின் திரட்சி அவனை அசர வைத்தது.

அவனது அந்தப் பிரியை தான் அவனுக்கு அருகாக வந்து வினாத்தாளைத் தந்தாள். தரும் போது, “All the best” என அவளது உதடுகள் உதிர்த்த சொற்கள் இவனுக்கு மதுரமாய் இருந்தன.

எம்.சி.கியூ அறுபது. வினாத்தாளைப் பார்ப்பதை விட்டு, அவளையே விடுத்து விடுத்துப் பார்த்தான்.

சடாரென அவள் யாரென்பது அவனுக்குப் பிடிபட்டது. ‘மடத்தடி வளவு மணியம் மாஸ்ரரின்ரை மகள்…. சுகர்ணி…..! ஓ.எல் படிக்கேக்க கண்டது… ஆசிரிய பயிற்சி முடிச்சு… பரீட்சை மேற்பார்வையாளரா இப்ப இங்க… எப்பவோ எங்கையோ கண்டது அடிமனதில் ஊறலாய் கிடந்து, உயிர்ப்பேளையாய்த் திரண்டு, இப்படி… தொந்தரவு செய்கிறாளே…. இவளுக்கு என்னை விட இரண்டொரு வயசு கூட இருக்குமா…? இருந்தாலென்ன குடியா முழுகிப்போயிடும்….!’

அவனது பதகளிப்பை நன்றாகவே புரிந்து கொண்ட அந்தப் பெண், அவனுக்கு கிட்டவாக வந்து, கண்களால் அவனை ஒற்றி எடுப்பது போல பார்த்து: “கேள்வியள் கடுமையா….? படித்துப் பார்த்து விடை எழுதும்…” என்றாள்.

அவள் கேட்டுவிட்டாளே என்பதற்காக கேள்விகளை திரும்பத்திரும்ப வாசித்தான். 40 கேள்விகள் வரை அவனால் புள்ளடியிட முடிந்தது. அனேக கேள்விகள் அவனது பாடப்பரப்பை மையப்படுத்தியதாகவே இருந்தன. ஒரு சில கேள்விகள் பொதுவாக இருந்தன. அவனைத் தடுமாற வைத்தன. ஐம்பது விடைகளாவது சரிவரும் என அவன் நினைத்துக்கொண்டான்.

விடை எழுதி முடிந்ததும் – மீளவும் அந்தப் பெண்ணையே விழுங்கி விடுவது போலப் பார்த்தபடி இருந்தான்.

“என்ன விண்ணாணமான பார்வையும் கொஞ்சலும்….” நுனி நாக்கு வரை வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவள் – ஒரு வித பசப்பலுடன், “எழுதின விடையை சரியா என்று பாருமன்….!” எனக் கூறினாள். கூறியவள், சிரித்தபடி அவன் அருகாக வரவும் செய்தாள்.

அப்பொழுது பரவிய அந்தப் பெட்டை வெடில் அவனை ஆட்டிப்படைத்தது. “உயிர்க்கொல்லி…… உயிர்க்கொல்லி…….” என முனகுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

பரீட்சை நேரம் முடிந்ததும் அவளே இவனிடம் வந்து விடைத்தாளைப் பெற்றுக்கொண்டாள். அவனது சுட்டெண்ணையும் சரி பார்த்துக் கொள்ளவும் செய்தாள்.

“மிஸ் நீங்க நல்ல வடிவு….. பூங்கொத்து மாதிரி…”

அவன், ஒலி உயராமல் மெதுவாகத்தான் சொன்னான். அதை அவள் கேட்ட போது அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை மெலிதாக மட்டும் சிரித்து வைத்தாள்.

திடீரென எதையோ நினைத்துக் கொண்டவன், அவளது கையிலிருந்த தனது விடைத்தாளைப் பறித்தெடுத்து சுட்டெண்ணை திரும்பத் திரும்ப சரிபார்த்தான். திருப்திப்படாத தடதடப்பு அவனில் தெரிந்தது.

அவனிடமிருந்து பேப்பரை திரும்ப வாங்கிக்கொண்ட சுகர்ணி சொன்னாள் “எல்லாம் சரியாய் இருக்கு… பார்த்துப் போம்…. எங்கையாவது முட்டிக்கொண்டு நிற்கப்போறீர்……”

“முட்டிக் கொள்றது நானா இல்ல…. நீங்களா பார்ப்பம்….” கூறியவன் தன்னை மறந்த நிலையில் கலீரென உரத்து சிரித்தபடி, படிகளில் இறங்கி நடந்தான்.

அவன் போவதைப் பார்த்தபடி நின்ற அவள் – ‘இது… இது ஒரு சுவாரஸ்யமான கேஸ் போல…’ உதிரத் துடித்த வார்த்தைகளை மீளவும் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

0000000000000000000000

இரவு எட்டு மணிக்கு ஐயாவுடன் சாப்பிட்டவன், ஒரு இரண்டு மணி நேரமாவது படிக்க வேணும் எனும் நினைப்புடன் உயிரியல் வினாக்கொத்தைப் புரட்டினான்.

மனிதச் செவி, நுண்ணங்கிகள், கலங்களின் புரதக் கட்டமைப்பு, இருவித்திலைத் தாவரத் தண்டின் வெட்டுமுகத்தோற்றம், இழையங்களின் தொழில்கள் என்று பலதையும் பத்தையும் படித்தான்.

அயர்ச்சியாக இருந்தது. நேரத்தைப்பார்த்தான். பத்துமணி. ‘மீதிக் கேள்விகளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம்…’ என நினைத்தவன் – கட்டிலை ஆயத்தம் செய்தான். படுப்பதற்கு முன்னதாக அறையை விட்டு வெளியே வந்தான்.

முன்கேற் பூட்டவில்லை என்ற ஞாபகம் வந்தது. கேற்றைப்பூட்டியவன், பூட்டை இழுத்துப்பார்ப்பதில் சில கணங்களைச் செலவிட்டான். பின்னர், தனது சைக்கிளையும் ஐயாவின் சைக்கிளையும் முன்கூடத்தில் எடுத்துவிட்டான். வீட்டு முன் கதவையும் பின்கதவையும் பூட்டி வந்து, படுக்கையில் சரிந்தான். திடீரெனச் சந்தேகம் கிளர்ந்தெழ, முன்கதவைத் திறந்து கேற்வரை சென்று பார்த்தான். கேற் பூட்டிக்கிடந்தது. முன் கதவை பூட்டியவனுக்கு பின் கதவு பார்வையில் பட்டது, பின் கதவுக்கு குறுக்குச்சட்டம் போடப்படாமல் இருப்பதைக் கண்டான். சட்டத்தை எடுத்துப்போட்டவன், கூடத்துக்கு வந்தான். தனது சைக்கிளையும் ஐயாவின் சைக்கிளையும் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். சைக்கிள்கள் உள்ளே நிற்பது உறுதியானதும் – தனது படுக்கைக்கு வந்தான்.

அவனுக்கு பயமாக இருந்தது. கேற்றையும், கதவுகளையும், சைக்கிள்களையும் மறப்பதற்கு அந்தக்கனவுக்கன்னி – சுகர்ணியை நினைத்துக்கொண்டான். அவளது நினைவுகள் ஊறலிப்பாக அவனோடு கிடக்க, அவன் அயர்ந்து தூங்கினான்.

தூக்கத்தில் புரண்டு படுத்தவனுக்கு, தனது படுக்கை வெதவெதப்பாக இருப்பதை உணர முடிந்தது. ஓரக்கண்பார்வையில் அவனது மார்பில் அவள்… அவனது சுகர்ணி சரிந்து கிடப்பது தெரிந்தது.

இது… இதென்ன மாயம்… இவள் இங்கே எப்படி….? அம்மணமாகக்கிடந்த  அவளது அழகை பல கோணங்களில் அவன் ரசித்தான். அவளது  பூ இதழ் போன்ற உதடுகளை வருடியவன், மென்மையாக முத்தமிடவும் செய்தான். அவனது கரங்கள் பரபரப்படைந்தன. அதனை உணர்ந்த அவள் அவனைப்பார்த்து சிரித்தபடி சொன்னாள்:

“ஒரு டசினடா…!”

“என்ன… பன்ரென்டா….?

“ம்… பன்ரெண்டு முடிஞ்சுது… இப்ப நீ ஆயத்தப்படுத்தறது பதிமூண்டு…”

“எனக்கு எதுவுமே தெரியேல்லை… நினைவுகள் திசை தப்பி நழுவின மாதிரி…”

“ரமணா போதுமடா… போதும்… திரும்பத்திரும்ப ஒரே மாதிரி அலுப்பாயிருக்குது வேண்டாம்…”

“இல்ல… இல்ல… இப்ப வித்தியாசமாயிருக்கும்.” என்று கூறியவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள். அப்பொழுது அவள் சற்றுப்புரண்டு கொடுத்தாள்.

அவளது இடது மார்பு மடிப்புகளுக்குக் கீழாக அது … அந்த மறு அவனுக்குத் தெரிந்தது. மைதடவியதுபோல அதுபடர்ந்து கருமையாக இருந்தது. இவனது பார்வை பட்டதும் அந்தக்கருமை நிறம் ஊதாவாக மாற்றம் கொண்டது.

அவன் பார்த்திருக்க அது சின்னஞ்சிறிய நாகதாளிப்புதராக மாறியது. சிறிதாக இருந்தாலும் கண்களால் பார்க்க கூடியதாக இருந்தது. தட்டையான தடித்த இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் என எல்லாமே இருந்தன. அந்த  ஊதா நிறமட்டும் மாறாமலே இருந்தது. முட்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. பழங்களைத்தேடி தேடிப்பார்த்து, அவன் பறித்தெடுத்தான். பழங்கள் அவனது சின்னிவிரலின் அளவை விட சிறியதாக இருந்தன. சில பழங்களை நாவிலே இட்டான். நாவில் கரைந்த பழங்கள் அவனது உதடுகளையும் வாயையும் ஊதா நிறமாக்கின. சில பழங்களை அவளது உதடுகளை பிரித்து அவளது வாயினுள் திணித்தான். அவளது உதடுகள் வாய் என்றில்லாமல், அவளது முழு உடலும் திடீரென அடர் ஊதாவாகி ஒளிர்ந்தது. திரும்பி வாகாகப்படுத்துக்கொண்டவள் இருகைகளையும் நீட்டி, அவனை வரவேற்கும் தோரணையில் கிடந்தாள். அவள் மீது படர்ந்த அவன், இயங்கத்தொடங்கினான்.

“பெண்ணே! இது என்ன….? ரத்தமும் தசையுமாய்…. உயிர் உறிஞ்சும் வெதவெதப்பையும் அதே சமயம் நீரின் தளதளப்பையும் ஒருங்கே, எங்கே…. எங்கே இருந்து பெற்றுக்கொண்டாய்… சுகர்ணீ…..! நீ என்னவள் எனக்கே ஆனவள்…” கலவிக் களிப்பில் கூத்தாடியவன், அவளுடன் ஆசை தீர முயங்கினான்.

அவனது குரல் ஐயாவுக்குக் கேட்டிருக்க வேண்டும். “என்ன கனவா… கனவில பிசத்திறாயா……? எழும்பு… எழும்பி முகத்தைக் கழுவிப்போட்டுப் படி அப்பு…”

ஐயாவின் குரலில் இருந்த ஆதரவு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘கண்டது கனவா, கனவு மட்டும் தானா…? ஏமாற்றத்துடன் எழுந்தவன் ‘இந்தக் கனவு நனவாகுமா…?

சுகர்ணி எனக்குக் கிடைப்பாளா…? என நினைத்தவன் அறையை விட்டு வெளியே வந்து ஐயாவைப் பார்த்துக் கேட்டான்:

“சுகர்ணி ரீச்சரை உங்களுக்குத் தெரியுமா…?”

“சுகரிணியா ஆரது…..”

“தெரியல்லையா…? அவ உங்களோட சரஸ்வதியில படிப்பிக்கிற மணியம் மாஸ்ரரின்ரை மகள்…. அவதான் என்ரை கனவில அடிக்கடி இப்ப வாறா….”

வெக்கத்தை விட்டு ஐயாவிடம் அவன் உளறினான்.

“உனக்கு இந்த O.C.D யோட உந்தப் பொம்பிளை விசரும் வந்திட்டது போல…”

“O.C.D யா, என்ன சொல்லிறயள்…”

“சின்னதா ஒரு மன அழுத்தம்… கடுமையான வேலைப்பளுவில லேசா இருக்கிறதெல்லாம் கடுமையா உனக்குத் தெரியுது…. இப்ப உனக்குப் பரீட்சை நடக்கிறதெல்லா… அதுதான் நீ இப்டிக் கசங்கிக் கடக்கிறை… மன நல மருத்துவர் சிவயோகனைக் கண்டு கதைச்சனான். ஒருக்கால் அவரிட்டை நாம போறது நல்லம்”

ஐயா கூறியவை அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. லேசாக முனகியவன்: “அதொண்டும் இல்லை…. நீங்க சொன்னமாதிரிப் பரீட்சைதான் இதுக்கெல்லாம் காரணம். பரீட்சை முடிஞ்சதும் எல்லாம் சரியாப் போயிடும்….”

“சரியடா…. இதெல்லாம் தானா மாறக்கூடியது தான்… எண்டாலும் நாம டொக்டரைப் பார்க்கிறது நல்லம்….”

“ம்…” சொன்னவன், பிறஷ்சுடன் பாத்ரூம் பக்கம் போனான்.

“சரி ராசா… குளிச்சிட்டுக் கெதியில வா…” சொன்ன ஐயாவின் மனசெல்லாம் டொக்டர் சிவயோகன் கூறியவை அடர்த்தியாக ஆக்கிரமித்துக் கொண்டன.

“மாஸ்டர்  O.C.Dஅது தான் இந்த Obsessive Compulsive disorder எண்ணச்சுழற்சியும் அதனடியான அழுத்தமும் – ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வரும். உங்க மகனுக்கும் இதுதான் பயப்பிடாதேங்க… இந்தப் பேதலிப்பு வலைச்சிக்கலாய் மனசில சடைப்புக் கொள்ளேக்க…. வேண்டாத நினைப்பெல்லாம் வரும். அதால அதிக பயம், துக்கம், பதகளிப்பு, அமைதியின்மை எல்லாம் ஏற்படும். இதுகளில் இருந்து தப்பிக்கிறதுக்கு, விடுபடுகிறதுக்கு அல்லது அதைக்குறைப்பதுக்கு ஒரே விஷயத்தை திருப்பத் திரும்பச் செய்யிற முனைப்பும் பழக்கமும் வந்திடும். அதோட பாலியல் சம்பந்தப்பட்ட அழுத்தங்களும் – அந்த அழுத்தங்களாலை, அது சார்ந்த கற்பிதங்களும் இருக்கும். பாதிக்கப்பட்ட ஆள் இது விஷயத்தில மூர்க்கத்தனமா மாறிறதும் உண்டு. எதுக்கும் கவனமா இருங்க. பரீட்சை முடிஞ்சதும் மகனை ஒருக்கால் என்னட்டைக் கூட்டிக்கொண்டு வாருங்களன்.”

டொக்டர் சொன்னவற்றை அசைபோட்ட ஐயாவுக்கு வேறு சில சிந்தனைகளும் தொற்றிக் கொண்டன.

‘இவனுக்கு ஆறுதல் தரும் என்டா அந்தச் சுகர்ணியை – மணியம் மாஸ்ரரின்ர மகளை இவனுக்கே முடிச்சுக் கொடுக்கலாம். எதுக்கும் இவன் படிச்சுக்கிடிச்சு சொந்தக் காலிலை நிக்கவேணும். மாஸ்ரரையும் கண்டு, ஒரு வார்த்தை இது பற்றிச் சொல்லி வைக்கிறது நல்லம்.’

‘பாவம் அவன்…’ என்ரை முசுட்டுத்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு, அவன்ரை மனசு ஆறுதல் படுற மாதிரி நான் இனி நடக்க வேணும்?

கவலை மிகுந்தவராக ஐயா, அவனது வருகைக்காகக் காத்திருந்தார். குறைந்தது இரண்டு மணி நேரமாவது அவன் குளிப்பான் என்பது அவருக்குத் தெரியும். காத்திருப்பதைத் தவிர வேறு வழி எதுவும் அவருக்கு அப்பொழுது தெரியவில்லை.

க.சட்டநாதன்-இலங்கை

சட்டநாதன்
சட்டநாதன்

(Visited 181 times, 1 visits today)