சுபாவம்-சிறுகதை-சட்டநாதன்

சட்டநாதன்கிழமையில் ஓரிரு முறையாவது என்னைச் சந்திக்காது விட்டால் அவளுக்குப் பத்தியப்படாது. அவள் என்னை வந்து காணும் போதெல்லாம்-உயர்பீடத்தில் இருந்தபடிக்கு, ஒரு மிதப்புடன்-சக படைப்பாளிகளையும் அவர்களது எழுத்து வல்லபத்தையும் நன்னித், துகள் துகளாகத் துப்புவாள். அதை அசிரத்தையுடன், எதுவித எதிர்வினையும் இல்லாமல் ஒரு சடங்காக,நல்ல பிள்ளைத்தனத்துடன் நான் கேட்டிருப்பேன். இது அவளுக்கு மிகவும் பிடிக்கும். எதிர்த்து எதுவும் சொல்வதை நான் தவிர்த்துக் கொள்வதுடன் இடைக்கிடை அவளது உரையாடலைக் குளிர்விப்பதற்காக ‘ம்……’ கொட்டிக்கொள்வதுண்டு.

முழுமையான இலக்கியச் சூழலையும் தன்னுடைய கைக்குள் பொத்தி வைத்திருப்பதான நினைப்பு அவளுக்கு எப்பொழுதும் இருந்தது. அத்துடன்,தன்னை முழுமையாகக் கருத்துரைக்கும் புள்ளிகளில் அவள் முக்கியமானவளாக இருந்தாள்.

நீண்ட காலத் தொடர்புடைய  எங்கள் இருவருக்கும் நட்பு என அழுத்தமாகச் சொல்லக்கூடிய எதுவும் இருந்ததில்லை. இந்த நிலையைத்தான் அவள் பெரிதும் பேணி வந்தாள். ஆனால் நான் அப்படியல்ல,அவளிடத்தில் எனக்கு மதிப்பும் மரியாதையும் அன்பும் இருந்தது. இது அவளது ஆளுமை விகசிப்பால் ஏற்பட்டிருக்கலாம். நல்ல படைப்பாளியான அவள்,சில நல்ல கதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளாள். இவற்றை விடவும்- அவள் ஒரு சிறந்த சஞ்சிகையாளராகவே பலராலும் அடையாளப் படுத்தப் பட்டிருந்தாள். இதற்கு அவள் நடத்திய சஞ்சிகைகள் சான்றாக இருக்கின்றன. அத்துடன் நடத்தையில் கோணல் எதுமில்லாது நேர்மையாக இருக்க வேண்டுமென்ற அவளது விருப்பம்  கூட, உண்மையும் பொய்மையும் சமவிகிதத்தில் கலந்த ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.

அவளை,அவளது இயல்புகளைச் சீண்டிப் பார்ப்பவர்களைத் தனி ஒருத்தியாக நின்று நான் சாமாளித்திருப்பதுடன்,அவளது நன்மை கருதி அவர்களிடம் நீண்ட நேரம்-அவள் சார்பாக-வாதிடவும் செய்திருக்கின்றேன். இது பற்றி அவளுக்கு ஓரளவு தெரியும். அவள் அப்படி எனக்காக நடந்து கொண்ட சந்தர்ப்பம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவளது நடத்தை இது விஷயத்தில் எப்பொழுதும் ஒரு மறை பொருள்தான். நல்லதும் அல்லாததுமான பண்புகள் அவளிடத்தில் இருந்தமை எனக்குத் தெரியும். இது,அவளது மன இயல்புகள் சார்ந்த ஒன்றாகும். எந்த மனிதனிடத்திலும்-அவர் தேவனாக இருந்தாலும் அவள் தன் இயல்புக்கு மாறாக நடந்து கொண்ட சந்தர்ப்பங்கள் மிக மிகக்குறைவு.

எனது படைப்புகள் பற்றி அவள் சிலாகித்துப் பேசிய சந்தர்ப்பங்கள் இருந்த போதும்-சில சமயங்களில் ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து நகையாடுவதிலும்-என்னைச் சிறுமைப்படுத்துவதில் ஒரு வன்முறை மிக்கவளாக இருந்துள்ளாள். இவளது இந்தச்  தீச் சொடுக்கல்கள் என்னை மட்டுமல்ல,சக இலக்கிய படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகளையும் தீண்டிப் பஸ்பமாக்கி விடுவதுண்டு. இவை எல்லாமே அவளது கருத்துப்படி விமர்சனம்!

அவள் ஒரு விமர்சனப் பிரம்மம். இத்தகைய பிறவியினுடனான எனது தொடர்பு ஒரு வகையில் Paradoxied-லானது தான்.

எது எப்படி இருந்த போதும்-இவள் எனது நேசிப்புக்கு உரியவள். அவள் இரண்டு கிழமைக்கு மேலாகவே என்னிடம் வராதது எனக்கு லேசான பதகளிப்பையும் கவலையையும் தந்தது. எதையோ இழந்து விட்டதான தவிப்புடன்,அவளை நாடி அவளது வீடுவரை சென்றேன்.

அவள் வீட்டு விறாந்தையில்,சோர்ந்து போய் ஒரு ஸோபாவில் கிடந்தாள். கிழடு தட்டிய தோற்றம் அவளுக்குத் திடீரென வந்து விட்டது போல் எனக்குத் தோன்றியது. அது எனக்கு கவலை தருவதாய் இருந்தது.

‘என்ன ………?’ என்பது போல் அவளை பார்த்தேன்.

“சுகமில்லை ……இரண்டு கிழமைக்கு மேலாகக் காச்சல் ………அதுதான் ……” என்றாள்.

அவளது முகம் லேசாக வீங்கி இருந்தது. உதடுகள் வெடித்து,சிறு சிறு புண்களுடன் இருந்தன.

“என்ன இது………மருந்து எடுக்கேலையா?”

“எடுத்தனான் ………மருந்தால்தான் வாய் அவிஞ்சு போச்சுது……வயிறும் எரியுது………காய்ச்சல் கொ தியும் அடங்கேல்லை……..”

“ஆர் டொக்டர்……?”

சில்வெஸ்ட்டர்…”

“அவர் சரியாய் உம்மை Drug பண்ணியிருக்கிறார். மருந்துகளை இரண்டு நாளைக்கு எடுக்காமல் விடும் …….விட்டுப் பாரும் …….”

“ம் …….” சொன்னவள் உள்ளே குரல் கொடுத்தாள்.

அவளுடைய சகோதரி தேநீருடன் வந்தாள். அவள் மிகவும் எளிமையும் இனிமையும் நிறைந்தவள். மிகவும் அன்பு பாராட்டும் குணம் அவளிடம் நிரம்ப இருந்தது.

“மயூரியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்”என்றேன்.

“ம் ……..” என்றாள் இனிமையான மலர்ச்சியை முகத்தில் கசிய விட்டவாறே.

“பேசிக்கொண்டிருங்கள். எனக்கு வேலை இருக்கு.”என்று கூறியவள்,உள்ளே சென்றாள். அவள் போன கையுடன் இவள் பேசத் தொடங்கினாள்.

“எழுத்தாளர் எல்லாரும் கொட்டிச் சிந்திறதைப் பொறுக்கிற பொறுக்கியள். உம்மையும் சேத்துதான் சொல்லுறன்.”

“அய்யோ தொடக்கி விட்டாள்.”என்று எனது மனம் அடித்துக் கொண்டது.

எனக்கு அப்பொழுது நாவேந்தன் இலக்கிய விருது-எனது நாலாவது சிறுகதைத் தொகுதியான ‘ஒதுக்கத்துக்கு’ கிடைத்திருந்தது.

‘இதில் யார் பொறுக்கி?,நானா இல்லை அந்த அருமந்த நாவேந்தனா …….?

ஒன்றும் புரியாது விழித்தேன்.

“என்ன முழுசிறீர்….”?

“நான் முழுசேல்லை…….இதையெல்லாத்தையும் விட்டுட்டு பதட்டப்படாமல்,மனசைப் பக்குவமாய் வைச்சிரும். அப்பத்தான் உம்மட வருத்தம் மாறும். முடிஞ்சால் நாளை வாரும் ………பின்னேரம் எண்டால் நல்லம் ……என்ரை பெறாமகள் யாழ்ப்பாணம் ஆஸ்பத்தியிலை H.O வா இருக்கிறாள். நல்ல ராசியான டொக்டர்  எண்ட பேர் அவளுக்கு இருக்கு. அவவிட்டை ஒருக்கால் போவம்.”

“ம்…….” சொன்னவள்,அந்த இயலாத நிலையிலும் கேற் வரை வந்து என்னை வழியனுப்பினாள்.

அவளது கண்கள் லேசாகி கலங்கி இருப்பதைக் கண்டேன். அதை மறைத்துக் கொள்ளும் பாவனை அவளிடம் இருந்தது.

“என்ன ………..?” என்று அவளைப்  பார்த்தேன்.

“இல்லை ……ஒருவர் தானும் என்னைப் பார்க வரேல்லை…………நீர் …….நீர் மட்டும்தான்!” என்றாள்.

அவளது குரலில் கனிவும் பட்சமும்.

“அட கல்லுக்குள் ஈரமா …….” என்று அதிசயப்பட்ட நான், சைக்கிளில் ஏறி மிதித்தேன். பிரதான வீதியில் ஏறும்வரை என்னையே அவள் பார்த்தபடி நிற்பது தெரிந்தது.

சனிக்கிழமை போல அவள் என்னிடம் வந்தாள் தந்த தேநீரை அரையும் குறையுமாகக் குடித்து விட்டு எழுந்தவளைப் பார்த்து நான் கேட்டேன்,

“வாய்க்கச்சல் மாறேல்லைப் போல ……. ரீ குடிக்கிறேல்லை போல ……காய்ச்சல்லெண்டால் எதையும் ருசிச்சு குடிக்கேலாமல்த் தான் இருக்கும்.”

என்னைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவள்,வேறு எதுவும் பேசவில்லை.

கந்தர்மடத்துக்கு இருவரும் சைக்கிளில்தான் போனோம். டொக்டர் வீட்டில் தான் இருந்தார். என்னையும் அவளையும் கண்டதும் எங்களை வரவேற்று, “இருங்கோ …….” என்று கூறியவர் உள்ளே சென்றார். ஸ்ரெதஸ்கோப்பும் கையுமாக வந்தார். மயூரியைப் பூரணமாகப் பரிசோதித்தார். பின்னர் அவளை பார்த்துக் கூறினார் :

“பயப்பிட வேண்டாம் ………..நெருப்புக்காய்ச்சலாய்த்தான் இருக்கும் ……,எதுக்கும் இரத்தத்தை ஒருக்கால்  சோதியுங்கள். நான் தாறதை காலையிலையும் மாலையிலையும் சாப்பாட்டுக்குப் பின்னாலை இரண்டு இரண்டு வில்லைகளாய் எடுங்கள் ………..” என்று கூறியவர், சில மருந்து வில்லைகளை பொதியிட்டு அவளிடம் தந்தார்.

“தாங்ஸ் ……..!” என்று கூறிய மயூரி, டொக்டரிடம் விடைபெற்றாள். நானும் விடைபெற்றுக்கொண்டேன்.

“நல்ல கைராசியான டொக்டர். அன்பாக நடக்கின்றார். இப்படித்தான் டாக்குத்தர்மார்,சினக்காமல்,இணக்கமாய், இனிமையாய் இருக்கவேணும்”.

‘அன்பா …………? இணக்கமா …..? இவைபற்றியெல்லாம் உனக்குத்தெரியுமா?’ மனதில் தோன்றிய அனுங்கலை வாய்வழி சொல்லத்தயங்கியபடி,அவளுடன் இணைந்து நடந்தேன்.

சூழலில் கவனம் ஏதும் கொள்ளாமல் நல்லூர் வரை இருவரும் வந்தோம். சைக்கிளில் இருந்தபடி,கால்களைத் தரையில் ஊன்றியவாகில் நின்ற மயூரி சொன்னாள்:

“அப்ப நான் வாறன்……..இதால வைமன் றோட்டாலை போறது எனக்கு சுகம்………”

‘சரி…….’ எனத் தலையசைப்பில் விடைதந்தேன்.

சைக்கிளை மெதுவாகச் செலுத்தி வந்த எனக்கு அவளது நினைப்பே திரும்பத் திரும்ப மனதில் மிதப்புக்கொண்டன.

கனிவான, மலர்ந்த சிரிப்புடன்கூடிய அவளது தோற்றம். வேட்டைப்பற்கள் வெளித்தெரிய இரையைத் தாக்கிக் குதறும் துர்மிருகத்தின் குரூரமான முகம் என எனது மனக்கண் முன்னால் மாறி மாறித் தோன்றின. கிலேசத்துடன் சலனப்பட்ட மனதை சமனப்படுத்தியபடி வீடு நோக்கிச் சைக்கிளைச் செலுத்தினேன்.

காலையில் அல்லது மாலையில்-நேரம் ஒதுக்கி அவளைப் பார்பதற்குத் தினம் தினம் செல்வது எனது வழக்கம். அன்று காலையிலேயே அவளிடம் சென்றேன். அவள் உடல் நிலை தேறி வருவது தெரிந்தது. என்னை,தானாகவே வந்து,தனது படிக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள். மேசைக்கு அருகாக இருந்த கதிரையில் அமர்ந்தவள்,என்னையும் அமரச் சொன்னாள். நான் அவளுக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் உட்கார்ந்து கொண்டேன்.

அறையின் நான்கு சுவர்களுடனும் பொருந்தியமாதிரிப் பெரிய புத்தக அலுமாரிகள்.

என்னைப் பார்த்த மயூரி ,”விருப்பமான புத்தகங்களை எடும் …………” என்றாள்.  இந்தச்சலுகை அநேகமாக எனக்கு மட்டும்தான் என்பது தெரியும். எந்தப் புதிய புத்தகம் என்றாலும் அவளுக்கு நான் படிக்கத் தருவதுண்டு. அந்தப் பெருந்தன்மையைக் கடமை பண்ணும் செயல் இது என்பதாய் நான் புரிந்து கொண்டேன்.

இரு புனைகதைகளை எடுத்துக்கொண்ட என்னைப்  பார்த்ததும்,

“Fiction எதுவும் நான் இப்ப படிக்கிறேல்லை………Non fiction, litearary polimics எனக்குப் பிடிக்கும். அவற்றைத்தான் இப்ப படிக்கிறனான். வெ.ச எனக்கு குரு மாதிரி ………….அவருடைய ‘இலக்கிய ஊழல்கள்’ எனக்கு நிரம்ப பிடித்த புத்தகம். மனிசன் என்ன மாதிரிக்  கருத்துக்களை முனை மழுங்காத மொழியில் மிகக் கூர்மையாக முன் வைக்கின்றார்”.

எனக்கு அந்தத் ‘தேவவழிபாடு’ பிடித்திருந்தது. தேநீர் வந்தது. அருந்திக்கொண்டிருந்த பொழுது அவள் சொன்னாள்:

“உம்மடை புதுத்தொகுதி படிக்கேலை.’ஒதுக்கம்’ இப்பதான் படிக்கிறன். எல்லாக் கதைகளையும் படிச்சு முடிச்ச மாதிரித்தான். கதைகள் எடுப்பாயில்லை. திசையில் வந்த ‘பக்குவம்’,இன்னும் ‘உலா’,’மாற்றம்’கதைகள் பரவாயில்லை. உம்மை ஒரு எழுத்தாளர் எண்டு சொல்லுறதெல்லாம் ஒரு Myth…………..A.J இப்ப எல்லாம் நல்ல கருத்துக்களையும் பதியிறேல்லை”.

‘ஒதுக்கம்’ தொகுதிக்கு  A.J  முன்னுரை எழுதியிருந்தார், கதைகள் பற்றிய அவரது சிலாகிப்பு இவளை பாதித்திருக்க வேண்டும். அதனால்தான் ‘இந்தக்கொதிப்பா……..’? என நினைத்துக்கொண்டேன்.

குட்டக் குட்ட குனியிறவனும் மடையன் என நினைப்பு வர,”எனக்கு முள் முடி வைக்கிறவையையும் தெரியும் பொன் முடி வைக்கிறவையையும் தெரியும்….” என்றேன்.

“அப்படியா லதா ……..? இது என்ரை அபிப்பிராயம்;அவ்வளவுதான். ரூபன்,மயூரன்,ராஜி என்றெல்லாரும் என்னை மாதிரித்தான் சிந்திக்கின கதைக்கின ……”

மூளைச் சலவை செய்வதில் அவள் அரசி. சிறிசுகளாய் அவளை சூழ உள்ள இலக்கிய குஞ்சுகளுக்கு,சிறுகச் சிறுக நஞ்சு தருவது போல ஏதேதோ …..சக எழுத்தாளர்களது ஆளுமையையும் பிம்பத்தையும் கருக்குவதில் அவள் அதி சமர்த்து. நானும்  எனது எழுத்தும் அதில் அடக்கம் என்பது எனக்குத் தெரியும்.

உம்முடைய கருத்துகளை வேதவாக்காக எடுக்கிற தவ்வல்கள் தானே அவர்கள். உம்மை Role Model லாக எடுக்கிற அந்தப் பிள்ளைகளுக்கு வேறு என்ன தெரியும்”.

“இல்லை ……அப்படி இல்லை ……அதை ஓரளவு அவர்களாலையும் கிரகிக்க முடிகிறது”. என்று ஏதேதோ சொல்ல முனைந்தாள்.

அப்பொழுது,அவளது முகத்தில் இயல்பாக இருக்கும் கனிவு உதிர்ந்தது, கண்களில் ஒருவித ஆழ்ந்த சந்தேகப் பார்வை படர்ந்தது.

“இந்தத் தொகுதியில் இருக்கிற ‘நகர்வு’கதை பற்றி ஜெயமோகன் நல்லாய் சொல்லியிருக்கிறார்”.

“ஜெயமோகன் என்ன கொம்பா ……? அவர் ஒரு இந்துத்துவ ஊது குழல் தானே…..? ஸ்தலபுராணங்களும் அதீத புனைவுகள் என்ற பெயரில் போலியாய் ஏதேதோ குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார். அவரை எல்லாம் போய் பெரிசாய் எடுக்காதையுங்கோ. அவரைப் பற்றின உங்கள் மதிப்பீடு அபத்தமாய் இருக்கு …..”

அவள் முன்னால் இருப்பதற்கு அசௌகரியப்பட்ட நான் எழுந்து கொண்டேன். ஆனால், நாளையும் நான் வருவேன் என்ற எதிர்பார்ப்பு  இருந்தது. “நாளைக்கு வரேக்கை ஜெயமோகன்ரை ‘ஏழாம் உலகம்’ நாவலைக் கொண்டு வாரும்………படிக்கவேணும். அதைத்தான் அவர் எழுதினதிலை உச்சம் எண்டு இஞ்சை சிலபேர் புளுகிறங்கள்.

“அப்படியா ……..?”  என்று சிரித்தபடி நான் வெளியே வர, உடன் வந்து என்னை வழியனுப்பினாள்.

தினந்தினம் அவளை நான் சென்று பார்த்து வந்தேன். அவளது உடல் நிலை ஓரளவு தேறி, பழைய கலகலப்பு அவளிடம் தெரிந்தது.

அன்று புதன்கிழமை! நாலு மணியளவில், ஏறக்குறைய ஒருமாத கால இடைவெளியில் எனது வீடு தேடி அவள் வந்தாள். அவள் சற்று மகிழ்ச்சியாக இருந்தது போலத் தெரிந்தது. வந்ததும் வராததுமாக அவள் சளசளக்கத் தொடங்கினாள்.

“லதா …….எனக்கு உன்னை பிடிக்கும்….. நிரம்பப் பிடிக்கும். ஏன் தெரியுமா …..? நீர் உம்மடை Image ஐ- அதாவது பிம்பத்தை கட்டி வளர்ப்பதில்லை. அதுக்கு எதுவிதமான முயற்சிகளும் எடுப்பதில்லை.”

நெஞ்சொடு நெருங்கி வந்த பேச்சல்ல அது என்பது எனக்குத் தெரிந்தது.

அவள் தொடர்ந்து பேசினாள் :

“நாலுவரி கிறுக்கிப் போட்டு மிதப்போடை தலைகீழாய் நடக்கிற அரைவேக்காட்டு எழுத்தாளர்களுக்கு மத்தியிலை நீங்கள் வித்தியாசம்”.

“அப்படியா …………இருக்கட்டுமே….”என்றேன். எனது அமைதியும் பக்குவமும் எனக்குப் பிடித்திருந்தது. அவளது பேச்சுக்கு எதுவிதமான எதிர் வினையும் என்னிடத்தில் இல்லாமல் போனது அவளுக்கு ஆச்சரியமாகவும் எரிச்சலாகவும் இருந்திருக்க வேண்டும்.

என்னை வைத்த கண் வாங்காது பார்த்தபடி இருந்தாள்.

“சாகக் கிடந்த என்னை நல்ல ஒரு டொக்டரிடம் கொண்டு போய்க் காட்டி, உயிரைப் பிடிச்சு தந்ததுக்கு நன்றி………..”  என்று சொல்லப் போகிறாள் எனும் எதிர்பார்ப்போடு இருந்த எனக்கு அவளது பேச்சு உயிர்ப்பு ஏதும் இல்லாது சப்பென்றிருந்தது. அத்துடன் ஏமாற்றம் தருவதாகவும் இருந்தது.

மற்றவர்களுடைய மனசைத் தொடுகிற மாதிரி,நெகிழ வைக்கிற மாதிரி எல்லாம் அவளால் எதுவும் சொல்ல முடியாது, செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். அது அவளது சுபாவம். அந்த இயல்பு அவளை பொறுத்தவரையில் தானாக மாற்றம் அடையும் என நினைப்பது தவறானது என்பது எனக்கு அப்பொழுது விளங்கியது.

வாழ்க்கை,இலக்கியம்,நண்பர் தெரிவு என்று எதையுமே போட்டுக் குழப்பாது நிதானமாக வாழ்வது போல் பாசாங்கு பண்ணும் அவளுக்கு நான் என்ன புத்திமதி சொல்லிவிட முடியும்!! அவளது வாழ்க்கை முழுமையுமே,இட்டுக்கட்டுதலோடு கூடிய,நடத்தைக் கோலங்களின் தொகுதிதானே!!

திடீரென எதையோ நினைத்துக்கொண்டவள் மீளவும் பேச ஆரம்பித்தாள்:

“இரவு உங்கடை ‘தாம்பத்யம்’ கதையைப் படிச்சன். கதை Near Perfection. பழைய கதை எண்டாலும். நல்லா வந்திருக்குது. பெரிய எழுத்தாளர்கள் எண்டு பேரெடுத்த ஆக்களின்ரை கதைகள் எல்லாம் பிரதி நிலையில் அடைச்சலா இருக்கும். என்ரை ஆலோசனையால தான் அவையள் திரும்பத் திரும்ப திருத்தி எழுதி போடுகின. உங்கடை கதைகளில் பலது உருவ அமைப்பிலை Excellent. சில கதையளின்ரை உள்ளடக்கம் கூட அச்சாவாய் வந்திருக்கு…………”

“சந்தோஷம்……..”.

“ஆனாலும் உந்த செக்ஸ் விசயங்களை,நீர் தூக்கலா எழுதுற மாதிரி தெரியுது. இந்த விசயங்களை இப்பிடி ……இப்பிடி எழுத வேணுமா …..? கொஞ்சம் படும் படாமலும் பாத்துக்கொள்ளும்.”

“அப்படியா எனது கதையளிலை வாற செக்ஸ் எல்லாம் பச்சைத் தண்ணீர் தனமாய் இருக்கிறதாத்தான் எனக்குப் படுது. அதோடை அந்த விசயங்களை கூர்ந்து படிச்சா அவை ஆக்க பூர்வமா வந்திருப்பது தெரியும்.”

“Nonsense!” சற்று உறைப்பாகவே கோபப்பட்டாள்.

அவளது அந்த ஆக்ரோஷத்தை,நான் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தது அவளை சீண்டியிருக்க வேண்டும். அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள்:

நோஞ்சான்களோட எல்லாம் இலக்கியம் பேசுறதை நான் வெறுக்கிறன்”.

“அட இது முதுகெலும்பு விசயமா……..?” என்ரை முதுகெலும்பு வளைசல் ஏதும் இல்லாமல் பலமாய்,பத்திரமாய் இருக்குது …….”

“நல்லது …….” என்று கூறியவள்,என்னிடம் விடைபெற்று செல்ல எழுந்தாள். அப்பொழுது அவளை பார்த்து நான் கூறினேன்:

“உம்மடை முதுகெலும்புதான் லேசாய் உள்வளைஞ்சிருக்கிற மாதிரித் தெரியுது. கவனம்.”

கூறியபடி  மென்மையாகச் சிரித்தேன்.

“……………….”

மௌனமாக,எதுவும் பேசாமல்,இயல்பான அந்த வசீகரமான புன்னகையுடன் அவள் என்னிடமிருந்து விடை பெற்றுக் கொண்டாள்.

‘இந்த மனுசியைப் பற்றி, எவ்வளவு நல்லதும் அல்லாததும் சொல்ல முடியும்,எழுத முடியும். அதையெல்லாம் இங்கு எழுத வேண்டுமா? வேண்டாமே.’ என்ற நினைப்புடன் நான் எழுந்து கொண்டேன்.

வெளியே வந்த அவள், தனது நெடிந்துயர்ந்த உருவத்தையம் நீண்ட கால்களையும் பயன்படுத்தி சைக்கிளில் அநாயாசமாக ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

இந்த அருமந்த பெட்டையின் முரட்டுத்தனமும் கொதி நிலையும் தணியுமா…….? இசைவு கொள்பவரிடத்திலான இவளது விலகலும்,விரிசலும் எனக்கு எப்பொழுதும் உவப்பானதாக இருந்ததில்லை. அவளது இந்த Alienation-னும் தான் ஒரு Introvert- அகமுகி-என்பதில் அவள் கொள்ளும் உவப்பும் பரிதாபத்துக்குரியவளாகவே அவளை எனக்கு இனங்காட்டியது.

‘அவள் இப்பொழுதெல்லாம் நேருக்கு நேர் பேசுவதற்குத் தயங்குவதோடு- கருத்தைக் கருத்தால் உடைக்கும் பக்குவமும் இழந்து வளை நண்டு போல உள்ளொடுங்கி உறைந்து போகிறாள். சமகால கற்கை நெறிகளுடனான அவளது அழுத்தமான பற்றும் புரிதலும் தேய்ந்து வருவதால், சில இளம் படைப்பாளிகளின் கூர்மையான வாதங்களுக்கு முகங்கொடுத்துப் பேசுவதற்கு அவளால் இப்பொழுது முடியாமல் போய் விடுகிறது. இந்தப் பலகீனம் பூதாகரமாக உருக்கொண்டு அவளை சிதைத்து விடுகிறது. அவள் மீளவும் கிளர்ந்து எழ-கிளர்ந்தெழும் வல்லபத்தைப் பெற்றுக்கொள்ள அவளுக்குக் காலம் தான் கற்றுத்தர வேண்டும். கற்றுத்தரும் எனவும் நம்பிக்கை எனக்குண்டு.’

நினைவுகள் தொடர, நான் வீட்டுக்குள்ளாகத் திரும்பிட வந்தபோது எனது தங்கை கேட்டாள்:

“அந்த ஆட்டக்காரியோடை உங்களுக்கு என்ன குசலமும் விசாரிப்பும் ……….பேசாமல் உள்ளே வாருங்கள் ……..”

அவளை நிமிர்ந்து பார்த்தேன்; அவளது முகம் கோபத்தில் சிவந்து கிடந்தது.

‘அவளது கோபம் என்னிலா இல்லை அவளிலா……..?’ எனக்கு விளங்கவில்லை.

அவளது நடத்தை இயல்பு தப்பிய ஒன்றாகவே அப்பொழுது எனக்குத் தோன்றியது.

சட்டநாதன்- இலங்கை 

சட்டநாதன்
சட்டநாதன்

 

 730 total views,  1 views today

(Visited 148 times, 1 visits today)