செ.யோகநாதனின் படைப்பு வல்லபம்-கட்டுரை-க.சட்டநாதன்

செ.யோகநாதன் அவர்கள் பொது வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டபோதும்; எழுத்து ,இலக்கியம் என்று வரும் போது -வாழ்வின் இறுதி மூச்சு வரை வளமான படைப்பாளியாகவே செயற்பட்டார். நல்ல எழுத்தாளரான  செ.யோ அவர்கள் தமது அறுபத்தாறாவது வயதில்-ஓரளவு ஆரோக்கியமாக இருந்த பொழுது-திடீரென உயிர் நீத்தது ,தமிழுக்கும் தமிழ் சூழலுக்கும் தீம்பானதுதான். அவரது பணியின் தொடர்ச்சி தடைப்பட்டமை சக படைப்பாளி என்றவகையில் எமக்கு கவலை தருகின்றது.

பொதுவாக எழுத்துப்பணி என்று வந்தவர்கள் எல்லோருமே இளமை தொட்டு தீவிர வாசகர்களாகவே இருந்திருக்கின்றார்கள். செ.யோ வும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல.அவரது தந்தையார் வாங்கி உதவிய சஞ்சிகைகள் நூல்கள் அவருக்கு வாசிப்பு மீதான ஆர்வத்தையும் எழுத்தின் மீதான பிரியத்தையும் ஏற்படுத்தின. அவர் அவ்வகையில் பெற்ற தேட்டமும் தெம்பும் தான் ஈழகேசரி போன்ற பத்திரிகையில் அவரை எழுத வைத்தன எனலாம். பின்னர் சிற்பி சரவணன் அவர்கள் நடாத்திய ‘கலைசெல்வியில்’ எழுதத்தொடங்கினார். அவரது முதற் சிறுகதையாக ‘மணக்கோலம்’ கலைச்செல்வியில் தான் வெளியாகியது.அவரது ‘மலர்ந்த்தது நெடு நிலா’ என்ற குறுநாவல் கலைசெல்வியின் தான் வெளியாகிப் பரிசிலும்  பெற்றது.

கல்லூரி பின்னர் பல்கலைக்கழகம் என அவரது கல்விச்செயற்பாடுகள் விரிவு கொண்ட போதும் எழுத்தின் மீது கொண்ட காதலை அவர் துறக்கவில்லை. பல்கலைக்கழக வாழ்வு அவரை நல்ல வாசகனாக எழுத்தாளனாக நிலை நிறுத்திக் கொல்லப் பெரிதும் உதவியது.

“நான் பல்கலைக்கழத்தில் பட்டம் பெறப் படித்தேன் என்பதை விட பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் கற்றேன் என்று சொல்லலாம்”. எனும் செ.யோவின் ஒப்புதல் உச்சரிப்பு உண்மையானது.பல்கலைக்கழக நூலகத்தில் தான் அவர் உலகில் தலைசிறந்த படைப்பாளிகளின் புனைவாக்கங்களைப் படிக்கும் வாய்பினைப் பிêருக்கின்றார். அந்த உள்வாங்கல் அவரளவில் படைப்பென்று வரும்பொழுது விகாசம் கொள்வதை நாம் கவனம் கொள்ளலாம். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில்தான் அவரது சிறந்த கதைகளில் ஒன்றான ‘சோழகம்’ வெளிவருகின்றது. பட்டப்பிடிப்பின் இறுதியாண்டில் பொழுது அவரது முதற் சிறுகதை தொகுதியான ‘யோகநாதன் கதைகள்’ பிரசுரமாகின்றது. இத்தொகுதியில் உள்ள கதைகள் ஒரு ஆரம்ப எழுத்தாளனின் அனுபவ அருட்டுணர்வின் வெளிப்பாடாக இருந்த போதும் செ.யோவின் எழுத்தின் செல் திசையை நான் அறிந்து கொள்ள உதவியது.

இளமைக்காலத்தில் தமிழ்த்தேசியத்தின் பால்  மீது மிகுந்த ஈடுபாடு உடைய இவர் இலங்கை தமிழரசு கட்சியின் இளந்தமிழர் இயக்கப் பொருளாளராகச் செயற்பட்டுள்ளார். பல்கலைக்கழக வாழ்வும் போராசிரியர் க.கைலாசபதி அவர்களது வழிகாட்டாலும் மற்றும் மார்க்சிய எழுத்தாளர்களான டானியல், என்.கே.இரகுநாதன், அந.கந்தசாமி,அகஸ்தியர்,பொ.பெனடிக்ற் பாலன், நீர்வைபொன்னையன், செ,கதிர்காமநாதன் ஆகியோரது தோழமையும் இவரை மார்க்சியத்தின் பால் ஈர்த்தது. அக்காலத்தில் சீன தேசியத்தலைவர் மாஓ சே துங்அவர்களின் அடிநிலை சீடனாகவும் உபாசகானாகவும் இவர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். இருப்பினும் இவரது தமிழ்த்தேசிய உணர்வு பீறிட்டு வெளிப்படுவதை இவரது பின்னைய படைப்பகளிலும் நாம் அடையாளம் காணலாம்.

ஆசிரியராக சிலகாலம் கடமையாற்றிய செ.யோகநாதன் பின்னர் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து உதவி அரசாங்க அதிபராக வாக்கரைப் பிரதேசத்திலும் கிளிநொச்சியிலும்(கரைச்சி) கடமையாற்றினார். குறிப்பாக வாகரையில் கடமையாற்றிய காலத்தில் அவரது கள அனுபவங்கள் ‘கிட்டி’ எனும் நாவலை எழுத்துவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தன.வாகரை வாழ் பழங்குடி மக்களின் வாழ்வையும் அவர்களது வேதனையை ,இக்கட்டை ஆழ்துயரத்தைப் பதிவு செய்த இந்த நாவலும் இவரது அளவில் பெரிய நாவலான ‘நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’ என்பதும் படித்துப் பார்க்க வேண்டிய படைப்பாகும்.

அவரது குறு நாவல்களில், ‘இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்’ ‘காவியத்தின் மறுபக்கம்’,’இரவல் தாய்நாடு’, ‘சுந்தரியின் முகங்கள்’, மேலோர் வட்டம்’ என்பன படிக்கப்பட வேண்டிய குறுநாவல்களாகும்.

சிறுகதை என வரும்பொழுது : ‘சோழகம்’, ‘கண்ணீர் விட்டே வளர்த்தோம்’, ‘தேடுதல்’, ‘பொய்முகம்’, ‘திசைகள் ஆயிரம்’, ‘வினோதினி’ என்பன நல்ல கதைகள். ‘சரணபாலாவின் பூனைக் குட்டி’ தமிழில் வெளியாகிய விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றென துணிந்து கூறலாம்.

இவருடைய ஆரம்பகால படைப்புகளில் தூய மொழி புனைவுக்குப் பயன்படுத்தப் பட்ட போதும் அம்மொழி சற்று நெருடலாகவும் எளிமை குறைந்ததாகவும் இருப்பதைக் கவனம் கொள்ளலாம். இக்கதைகள் உள்ளடக்கவலு உள்ளவையாக இருந்த போதும் உருவப்பொலிவு சிதைந்ததாகவே காணப்படுகின்றன.

1980 ஆண்டுகளின் பின்னான இவரது படைப்புகளில் ஒரு திட்டம், தெளிவு, நறுக்கென்று சொல்லும் இயல்பு விரவியிருப்பதுடன் உள்ளடக்க உருவ ஒத்திசைவும் செறிவாகக் கைகூடிவருவதை நாம் அவதானிக்கலாம். ஏலவே கூறிய இக் கூற்றுகள் இவரது புனைவிலக்கிய ( நாவல்,குருணாவால் ,சிறுகதை) முழுமையும் உள்ளடக்கிய கணிப்பாகவே நாம் கருத வேண்டும்.

1983-ல் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த இவர் ஒரு தசாப்த காலத்துக்கு மேலாகவே தமிழக மண்ணில் வாழ்ந்தார். அக்காலத்தில் தமிழக எழுத்தாளர்களுடனான இவரது உறவும் உசாவுகையும் இவரை தமிழ் உலகு நன்கு அறிந்த படைப்பாளி ஆக்கியது. இவர் தமிழகத்தில் பல பிரசுர கர்த்தாக்களுடன் இயல்பான பழகுமுறை இவரது கணிசமான நூல்கள் வெளிவர உதவின. இவர் முழுமூச்சுடனும் வீச்சுடனும் எழுதிய கால கட்டம் இது எனலாம்.

இவர் புனைவிலக்கியத்துக்கு அப்பால் சிறுவர் இலக்கிய முயற்சியிலும் மிகுந்த ஈடுபாடுடையவராக இயங்கினார்.இவர் ஏறக்குறைய பதினோரு நூல்களை சிறுவர்களுக்காக எழுதியுள்ளார்.இவர் எழுதிய சுவாமி விபுலானந்தர் பற்றிய வாழ்க்கை வரலாறு பலராலும் விதந்துரைக்கப்பட்ட நூலாகும். நவீன சினிமா பற்றிய நாட்டமுள்ள இவர் பல பயனுள்ள கட்டுரைகளையும் ‘பெண்களும் சினிமாவும்’ எனும் நூலையும் எழுதியுள்ளார். அத்துடன் மலையாள சினிமா ஒன்றிற்கு( கண்ணாடி வீட்டிலிருந்து ஒருவன்’ ) திரைப்பிரதியும் புனைந்துள்ளார்.

செ.யோ அவர்கள் தமது படைப்புகளுக்குப் பல பரிசில்களை இளமை தொட்டே பெற்று வந்த போதும் அவர் பெற்ற இலங்கை சாகித்திய மண்டல பரிசு ( மூன்று தடவைகள்) தமிழக அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது (மூன்று தடவை) இலக்கிய சிந்தனை விருது ( நேற்றிருந்தோம் அந்த வீட்டிலே’ நாவலுக்கு ) என்பவனவற்றை விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.

ஈழத்து எழுத்தாளர்களில் பல முறை மொழி மாற்றம் செய்யப்பட்ட புனைவுகளை உடையவர் செ.யோகநாதன் அவர்கள் தான். ரஷ்ய ,ஜெர்மன் ,ஆங்கிலம் ,மலையாளம் ,தெலுங்கு ,சிங்களம் ,ஆகிய மொழிகளில் இவரது புனைவுகள் வந்துள்ளன. இவரது ‘தோழமை என்றொரு சொல்’ என்னுங் குறுநாவல் யுனெஸ்கோ தெரிவு செய்யப்பட்டுள்ளது.இக் குறுநாவல் 43 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கின்றது.

இவரைப்பற்றி ,இவரது படைப்பாளுமை பற்றி இலக்கிய விமர்சகர்கள் சிலர் கூறிய கருத்துக்களை இனிப்பு பார்ப்போம் :

பேராசிரியர் க கைலாசபதி அவர்களது கருத்து :

“யோகநாதனின் கதைகள் வாழ்வில் யதார்த்தத்தை சித்தரிக்கின்ற வேளையிலேயே அதன் உள்ளடக்க வலுவினையும் பெற்றிருக்கின்றன. கதைகளின் கலையழகு வெகு இயல்பாகவே உள்ளடக்கத்தோடு ஒட்டி நிற்பதற்கு எழுத்தாளனின் சிந்தனைத்தெளிவு பார்வை என்பனவே காரணமென்பர் மேனாட்டு விமர்சகர்.யோகநாதனின் கதைகள் இத்தகைய அம்சங்களைப் பூரணமாகப் பெற்றிருக்கின்றன என்று துணிந்து கூறலாம்”.

சோவியத் தமிழறிஞர் விக்ரர் ஃபூர்னிகா இவ்வாறு கூறுகின்றார்:

“தங்கள் கதைகளின் விமர்சன யதார்த்தப் பண்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. இலங்கையிலே வாழுக்கின்ற தமிழர்களின் மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற எழுத்தாளர்களில் நீங்கள் தனித்துவம் பெற்றவர் என்பது எனது எண்ணம். அதே வேளையில் தங்களின் நடையின் எளிமை என்னைக் கவர்கின்றது. இதனாலேயே ருஷ்ய மொழியில் நான் உங்களை அறிமுகம் செய்கின்றேன்.

பேராசிரியரும் விமர்சகருமான ந.வானமாமலை கூறுகின்றார்:

“இலங்கையின் சமுதாய வளர்ச்சியில், தமிழர்களின்  பிரிவில் ஏற்படும் மாறுதல்களை யோகநாதன் கூர்மையாக காண்கின்றார். இலக்கியத்தை சமுதாய ஆய்வான கலைப்படைப்பாகச் செய்து வழங்குகின்ற யோகநாதன் சிறு கதைகளுக்கு நிகழ்காலத்தை மாற்றுகின்ற ஆற்றலும் வருங்காலத்தை உருவாக்குகின்ற சக்தியும் உண்டு”.

தாமரை ஆசிரியர் சி.மகேந்திரன் செ.யோ பற்றி :

“தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தனது படைப்புகளை ஒரு ஆயுதமாகக்  கொண்டு போராடி வருகின்றார். இவருடைய ‘இரவல் தாய் நாடு’ ,’அகதியின் முகம் ‘ முதலான படைப்புகள் இன்றய ஈழத்து நிலைமைகளை கூர்மையாக வெளி உலகத்துக்கு எடுத்துச் சொல்ல வல்லன”.

இறுதியாக ஒரு வார்த்தை , செ.யோ அவர்கள் நண்பர்களோடு இதமாகப் பழகும் இயல்புடையவர். சக படைப்பாளிகளின் படைப்புகளைத் தேடித் படிப்பர். தரமானதை பொச்சரிப்பு ஏதுமற்று மனம்திறந்து பாராட்டும் தன்மையினர். இத்தகைய பண்புதான் இழைத்துப் படைப்பாளிகளின் புனைவுகளை-‘வெள்ளிப்பாதரசம்’,’ஒரு கூடைக்கொழுந்து’ என இரு தொகுதிகளாக காந்தளக உரிமையாளரான  சச்சிதானந்தம் அவர்களது அனுசரணையுடன் வெளியிட ஊக்கியாக இருந்தது எனது துணிந்து கூறலாம்.

மனித இயல்புக்கு ஏற்ப சில குறைகளுடனும் நிறைகளுடனும் எம்மிடையே வாழ்ந்த இந்த எழுத்துச் சிற்பியை மனங்கொள்வதில்  நாம் கிலேசமுறத் தேவையில்லை என்றே நான் எண்ணுகின்றேன்.

க.சட்டநாதன்-இலங்கை 

(Visited 194 times, 1 visits today)