அமைப்பாய் திரள்வோம் – அதிகாரம் பெறுவோம்-நூல் விமர்சனம்-சு.கஜமுகன்

‘’உங்கள் கொள்கை என்னவென்று கேட்டால், ஒரு நிமிசம் தலையே சுத்திப் போச்சு’’ எனக்  கூறும் கொள்கை கோட்பாடில்லாதவர்கள் அரசியலுக்கு வரும் இக்காலகட்டத்தில் கொள்கையை முன்வைத்து எழுதப்பட்ட அமைப்பாய் திரள்வோம் என்னும் இந்நூலானது அமைப்பின் அவசியத்தைப் பற்றியும், அமைப்பின் நோக்கம், கொள்கை, கோட்பாடுகள் பற்றியும், அமைப்பினுள் எழும் சிக்கல்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசுகின்றது.

தனி உதிரியாக இருக்கும் மக்களை விட அமைப்பாக திரளும் மக்களுக்கே அரசியல் வலிமை அதிகம். ஆகவே ஒரு கட்சியின் சுயநலனுக்காக அல்லது வெறும் வாக்குகளாக மக்கள் திரளாமல் ஒரு அமைப்பாக மக்கள் திரளவேண்டும் என்பதே  இந்நூலின் அடிநாதமாகும். பெரியார் முதல் அண்ணா வரை, கடந்த காலத்தில் திராவிடக் கட்சிகள் தமது கொள்கையை எழுத்து, பேச்சு மற்றும்  உரையாடல் மூலமாகவே மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தன. அதன் தொடர்ச்சியாகவே திருமாவளவன் மக்களை விழிப்படையச் செய்யவும், அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் மக்களை அமைப்பாக திரட்டவும் எழுத்தை தனது ஆயுதமாக பயன்படுத்துகிறார். அவரது அரசியல் போரின் கருத்தியல் ரீதியான  எழுத்து வடிவமே, அமைப்பாய் திரள்வோம் என்னும் இந்நூலாகும்.

இந்தியாவில் மோடி,  அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், இங்கிலாந்தில்  போரிஸ் ஜோன்சன் என வலது சாரிகள் பலம் பெற்று வரும் இன்றைய சூழ்நிலையில் , இவர்களின் மூலம் பிற்போக்குத்தனமான அரசியற் கருத்துக்கள் மக்களை சென்றவடைத் தடுக்க,  இது  போன்ற முற்போக்கான தத்துவதை முன்வைக்கின்ற, கோட்பாட்டைப் பேசுகின்ற அரசியல் நூல்கள் வெளிவருவது அவசியமாகும். ஒவ்வொரு மனிதனின் செயலுக்குப் பின்னாலும் அறிந்தோ அறியாமலோ அவர்கள் உள்வாங்கியிருகின்ற கோட்பாடுகள்தான் முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது. அக்கோட்பாடுகள்தான் அவர்களை வழி நடத்துகின்றது. ஒருவன் அடிப்படைவாதியாக, மதவாதியாக, ஆணாதிக்கவாதியாக இருப்பதற்கான காரணம் அவர்கள் நம்பும் கோட்பாடே ஆகும்.  இத்தகைய பிற்போக்குத்தனமான கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி முற்போக்குச் சிந்தனையை முன்வைக்கின்றது இந்நூல்.

எதைப் பேசினால் அதிக விற்கும், எதைப் பேசினால் அதிக கை தட்டல் கிடைக்கும், எதைப் பேசினால் இங்கு நன்றாக எடுபடும் எனத் தெரிந்தும் அதைப் பற்றிப் பேசாமல், மக்களை ஒன்று திரட்டி அரசியல்மயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் களத்தில் தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளாகவே ஒவ்வொரு கட்டுரைகளும் காணப்படுகின்றன. பெரியார், அம்பேத்கர் , காரல்மார்க்ஸ் என எந்தவொரு தலைவரைப் பற்றியோ அல்லது அவர்களின் இயக்கத்தைப் பற்றியோ இந்நூல் பேசவில்லை. மாறாக அவர்களின் தத்துவத்தை முன்வைத்து  கொள்கை பூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே இது வெறுமனே விடுதலை சிறுத்தைக் கட்சியின் ஆதரவாளர்களுக்கான அல்லது அதன் தொண்டர்களுக்கான நூலாக அல்லாமல் அனைத்து உழைக்கும் மக்களுக்கான, ஒடுக்கப்படும் மக்களுக்கான நூலாக காணப்படுகின்றது. மேலும்  மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்பதற்காக வெறுமனே கொள்கை தூய்மைவாதம் பேசி மக்களிடையே  பிளவுகளை ஏற்படுத்தாமல், முற்போக்கு சிந்தனைகளை  மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.

இக் கட்டுரைத் தொகுப்பானது அன்பான சர்வாதிகாரத்தை போதிக்கவில்லை, பிறிதொரு இன மக்கள் மீதான வெறுப்பரசியலை கட்டமைக்கவில்லை, மக்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தவில்லை  அல்லது நாளைக்கே புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கிலும் எழுதப்பட்டவையும்  அல்ல, மாறாக மக்களுக்கு அரசியல் புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளே இவையாகும். அரசியல் பயிலும் மாணவர்களுக்கான ஒரு பாட நூல் இது என்றால் அது மிகையாகாது. அது மட்டுமல்லாமல் பெண்கள் கட்சி சார்ந்த, அமைப்பு சார்ந்த மக்கள் பணிகளில் ஈடுபடலாமா ? சமூகம் அதை அங்கீகரிக்குமா என்பது பற்றியெல்லாம் தெளிவான பார்வையை  தனது கட்டுரைகளில் முன் வைக்கிறார் திருமாவளவன். இது வெறுமனே படிப்பதற்கான நூலல்ல, கற்பதற்கான நூல்.

ஜாதி, மதம் , குடும்பம், இனம், தேசம் , அரசு, மொழி  என பல கட்டமைப்புகள் உள்ள இன்றை சமுதாயத்தில் தவிர்க்க வேண்டிய, திணிக்கப்பட்ட  செயற்கையான அமைப்புகள் என்ன என்பதைப் பற்றியும் , மானிடத்தின்  தவிர்க்க முடியாத  தேவைகளிலிருந்து உருவான அமைப்புகள் பற்றியும் பேசுவதோடு மட்டுமல்லாமல் தவிர்க்க வேண்டிய அமைப்புகள் தவிர்க்க முடியாமல் தொடர்வதற்கான பின்னணி காரணங்களையும் அலசி ஆராய்கிறது இந்நூல்.

தனி மனிதனால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, மனிதர்கள் ஒரு அமைப்பாக திரளும்போதுதான் மனித சமுதாயத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியும். அவ்வாறு அமைப்பாக திரளும்போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. அந்தவகையில், தன்னை முன்னிறுத்தல் என்பது அமைப்பில் பொதுவாக காணப்படும் மிக முக்கியமானதொரு பிரச்சனையாகும். அதற்கு தீர்வைக் காணும் பொருட்டு அமைப்பு சார்ந்து செயற்படும் பொழுது ஏற்படும் உளவியல் சிக்கல்கள், உட்பகை,  தன்முனைப்பு போன்றன பற்றியும் தனது கட்டுரைகளில் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்.

அரசியல் மயப்படுத்தல் என்பது ஒவ்வொரு தனி நபரின் ஆளுமையை மேம்படுத்தி வலுப்படுத்துவதாகும். அந்த வகையில் மக்களை அரசியல் மயப்படுத்தி மேம்படுத்துவதற்கான அறிவாயுதமே ‘’அமைப்பாய் திரள்வோம்’’ என்னும் இந்நூலாகும்.

சு.கஜமுகன்-ஐக்கிய இராச்சியம்

(Visited 189 times, 1 visits today)