ரங்குப் பெட்டியும் காத்தான் குடி பூட்டும்-பத்தி-சஞ்சயன்

பால்யத்துக்காலம். மட்டக்களப்பின் மெதடிஸ்த மத்திய கல்லூரி விடுதியில் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தது. அந்நாட்களில் காலை 08.00 மணியில் இருந்து மாலை 3.30 வரையில் பாடசாலை நடைபெறும். இடையில் மதிய இடைவேளை உண்டு. இவை தவிர்ந்த நேரங்களில் எல்லாம் விடுதியிற்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்.

சிறிய மாணவர்கள் சற்றே வளர்ந்தவர்களுக்கும், வளர்ந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அதிபருக்கும் பயந்து நடுங்கிய அழகியதொரு காலம் அது. விடுதியில் தங்கியிருந்து படித்த காலம் முழுவதும் பசித்துக்கொண்டே இருந்தது. கொடும் பசியில் நாய் தட்டை நக்கி நக்கித் துடைத்தெடுப்பதுபோல் ஒரு பருக்கை சோற்றையேனும் விடாமல் நாவால் தட்டைத் துடைத்தெடுக்கும் கலையில் விண்ணர்களாக இருந்தோம். மதிய இடைவேளையின்போது விடுதியில் உண்டபின், பாடசாலைக்கு உணவு கட்டிக்கொண்டுவரும் நண்பர்களிடமும் வாங்கி உண்ட பின்னும், பசி எம்மை கலைத்துக்கொண்டே இருந்தது. உற்ற நண்பர்கள் எமக்காக சற்று அதிகமாகவே தங்கள் உணவைக் கட்டிக்கொண்டுவருவார்கள். இதைவிட சிற்றுண்டிச்சாலையில் கடன்வேறு இருக்கும். பசி அப்படிப்பட்டது.

அந் நாட்களில் எங்கள் விடுதியில் ஒரு வாசிகசாலை இருந்தது. அங்கு இருந்தெல்லாம் டச்சுக்காலத்துப் புத்தகங்கள். மகாத்மா காந்தி, ஆறுமுகநாவலர், விவேகானந்தர் போன்றவர்களின் சுயசரிதைகள் மற்றும் புரியாத செந்தமிழில் தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், இலக்கிய இலக்கணப் புத்தகங்கள் மற்றும் இறைவழிபாட்டுப் புத்தகங்கள். இவையெல்லாம் ஒரு பதின்மவயதுக்குள் நுழையாத சிறுவனின் வாசிப்புப் பசிக்கு இரைபோடுமா?

என்னுடன் தங்கியிருந்தவர்களில் பலருக்கும் வாசிப்புப் பழக்கம் இருந்தது. அவர் நகரத்து மாணவனோ அல்லது கிராமத்துப் பாலகனோ என்று விதிவிலக்கு இல்லை. அனைவரிடமும் வாசிப்புப்பழக்கம் இருந்தது. எங்கள் பேராசானும் அதிபருமான, பிரின்ஸ் காசிநாதருக்கு தமிழ் தட்டுத்தடுமாறித்தான் அவரது வாயினூடாக வெளியே வரும். அப்படி வரும்போது லகரமும் ரகரமும், நெளிந்தும் நசிந்தும் கிழிந்தும் வருவதைக் கேட்கும்போது சிரிப்பு வந்தாலும், அவருக்கு முன்னே சிரிப்பது தற்கொலைக்குச் சமமம் என்பதால் அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருப்போம்.

அவர் கை துடைப்பதற்கேனும் தமிழ்ப்பத்திரிகையை கையில் எடுக்கமாட்டார். அவரது வீட்டில் ஒரு தொகை ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. வாசிகசாலைக்கு புத்தகங்கள் வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது, அவரிடம் இருந்த ஆங்கிலப்புத்தகங்கள் எங்கள் வாசிகசாலைக்கு வந்துசேர்ந்தன.

ஆங்கிலப் புத்தக அலுமாரியில் உள்ள புத்தகங்களை விடுதியை மேற்பார்வையிட வருபவர் மட்டுமே வாசிகசாலைக்குள் சில நிமிடங்கள் உட்கார்ந்திருக்கும்போது வாசிப்பார். அவர் வேறு யாருமில்லை. எமக்கு ஆங்கில அறிவை புகுத்த நினைத்து அப்புத்தகங்களை எமக்குத் தந்த பேராசான்தான். நாம் ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பதில்லை என்பதை அதிபர் அறிந்துவிடக் கூடாது என்பதற்காகவே மாணவர் தலைவர்கள் ஒரு சில ஆங்கிலப் புத்தகங்களை மேசையில் வைத்துவிடுவார்கள். அதிபரும் தனது மாணவர்கள் ஆங்கிலம் வாசிக்கிறார்கள் என்று தனக்குள் பெருமைப்பட்டிருப்பார்.

பால்யத்து வயதுக்கு மேற்கூறிய ஆங்கலப்புத்தகங்களில் இருந்த you, they, he, she, him,come, run, jump போன்ற சில சொற்கள் மட்டுமே எமக்குப் புரியும். இப்படியான ஒரு சொல்லை புத்தகத்தில் கண்டால், ஒரு ஆங்கிலப் புத்தகத்தையே வாசித்து முடித்த பெருமை ஏற்பட்டுவிடும். மறுவாரம் ஆங்கில வகுப்பில் பாலசிங்கம் டீச்சர் யார் யார் ஆங்கிலப் புத்தகம் வாசித்தீர்கள் என்று கேட்கும்போது எழும்பி நிற்கும் முதல்வரிசை மேதைகளுடன் கடைசிவரிசையில் நானும் இக்கதையின் கதாநாயகனும் எழும்பி நிற்போம். ரீச்சர் வாசித்த புத்தகத்தின் பெயரைக் கேட்டால் நாம் இருவரும் எழும்பியது தெரியாத விதத்தில் உட்கார்ந்துவிடுவோம்.

எமது வாசிகசாலையின் புத்தகங்கள் மீது எமக்கு சலிப்பு ஏற்பட்டது. இடையிடையே வீட்டுக்குச் செல்லும்போது அனைவரும் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிவரும் பணத்தில் அம்புலிமாமா, தெனாலிராமன், இயந்திரமனிதன், ரிப்கிர்ப்பி, ஜானி, இரும்புக்கை மாயாவி, வேதாளம், சிந்துபாத், ரொபின்சன் குறூசோ போன்ற கதைப்புத்தகங்களும், சித்திரக் கதைப்புத்தகங்கள் இன்னும் சில சிறுவர்களுக்கான புத்தகங்களையும் வாங்குவோம். ஆனாலும் எமது யானைப்பசிக்கு இவையும் சோளம்பொரிதான். இதைவிட இன்னுமொரு பிரச்சனையும் எமக்கு வந்தது. நாம் புத்தகங்களை வாங்கி வந்தால் மாணவர் தலைவர்களும், பெரிய மாணவர்களும் எம்மை வெருட்டி எமக்கு முன் இவற்றை வாசித்தனர். அப்புத்தகங்கள் எமது கைக்கு வரும்போது கிழிந்து இரண்டொரு பக்கங்கள் இன்றி வந்தன. உருவத்திலும் அதிகாரத்திலும் அவர்கள் எம்மை மேவியவர்களாக இருந்ததால் எம்மால் எதுவும் செய்துவிட முடியவில்லை.

எனது வகுப்பில் படித்த இன்னுமொரு வாசிப்புக் குரங்கும் எங்களுடன் விடுதியில் தங்கியிருந்தது. இப்போதைய காலத்தைப் போன்று அவனுக்கு அப்போதும் “அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறியவேண்டும்” என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவன் அவன். எமக்கு வாசிப்பதற்கு நேரம் தேவைக்கு அதிகமாக இருந்தது. ஆனால் புத்தகங்கள் இல்லை. கிடைக்கும் புத்தகங்களையும் மாணவர்தலைவர்களும் வயதுக்கு மூத்தவர்களும் கொள்ளையடிக்கிறார்கள் என்பதால் எனது நண்பன் ஒரு திட்டம் தீட்டினான். விடுதிக்குள் இன்னுமொரு வாசிகசாலையை ஆரம்பிப்பது என்பதுதான் அது. அதுவும் அது அவனது தனியார் பிரைவேட் லிமிட்டெட் வாசிகசாலை. யாராகினும் புத்தகம் வாசிக்க கட்டணம் செலுத்தவேண்டும். இலாபம் அவனுக்கு மட்டுமே. அங்கு அவன் வைத்ததே. சட்டம்.

அவன் ஒரு புதியதொரு புத்தகத்தை வாங்கிவரும்போதே அவனுக்குப் பின்னால் சீனியைக் கண்ட எறும்புக் கூட்டம்போன்று நீண்டதொரு மாணவர் வரிசை நின்றிருந்தது. இதைத் தவிர்க்க கொப்பியில் முன்பதிவு என வியாபாரம் சூடுபிடித்ததால் ஒரு புத்தகத்தை 6 மணிநேரங்களில் தரவேண்டும் என்று புதிய விதிகளைப் பிறப்பித்தான். இதனால் பாடசாலை நேரத்திலும், இரவு விடுதியில் படிக்கும் நேரத்திலும் கொழுக்கட்டையினுள் இனிப்பு கலந்த பருப்பு இருப்பது போல் புத்தகத்தினுள் புத்தகம் வைத்துப் படித்தோம். கல்லாவில் காசு நிரம்பிற்று. புதிய புத்தகங்கள் வந்தன. கடைக்காரருக்கும் அவனில் பிடிப்பு வந்தது. கொழும்பு ரயிலில் எந்த எந்த நாட்களில் புத்தகம் வரும் என்பது ரயில்நிலையத்தாரைவிட நம்ம பையனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

விடுதியில் குறைவான பொழுதுகளில் மதிலேறிப் பாய்ந்து பாடசாலைக்கு அருகில் இருந்த புத்தக்கடைக்குச் (சிவசக்தி புத்தகக்கடை என்றே நினைக்கிறேன்) சென்று புத்தகங்களுடன் வருவான். நான் வகுப்புத்தோழன் என்பதால் அவனுக்கு அடுத்ததாக எனக்கு வாசிக்கும் உரிமை இருந்தது. முன்பதிவு அதிகரித்தால் ஒரே நாளில் இரண்டு புத்தகங்கள் வாங்கினான். காலப்போக்கில் ஒரு தனியார் நூல்நிலையம் சீராக இயங்கியபோதுதான் பிரச்சனைகள் ஆரம்பித்தன.

எனக்கு நீ புத்தகம் தருவதில்லை. அநியாய விலை சொல்கிறாய். வாசிப்பதற்கான நேரம் போதுமானதாக இல்லை. புத்தகம் கிழிந்தால் புதுப்புத்தகம் வாங்கித்தரச் சொல்கிறாய். கிழமைக்கு கிழமை வாசிப்புக்கட்டணம் அதிகரிக்கிறது என்று மக்கள் புரட்சி வெடிக்க ஆரம்பித்தது. என்ன தான் புரட்சி வெடித்தாலும் இவனிடம்தான் அனைவரும் மண்டியிடவேண்டும் என்ற இரகசியத்தை அறிந்த அவன் ‘பண்ணுவதை பண்ணிப்பாருங்கள்’ என்றுவிட்டு வாசிகசாலையில் சர்வதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருந்தான். விடுதி மாணவர்களுக்கு மட்டுமே இவன் புத்தகங்களை வாடகைக்குக் கொடுத்தான்.

அந்நாட்களில் பலரும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளுக்குச் செல்வார்கள். சிலரது பெற்றோர் விடுதிக்கு வருவார்கள். தூரதேசங்களில் இருந்தும் (பண்டாரவளை, பதுளை, அம்மாறை, பொத்துவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பாணமை, வெருகல், மூதூர்) பெற்றோர்கள் வருவதுண்டு. அப்படித்தான் ஒரு மாணவனின் தந்தையார் வந்தார். மிகவும் வசதியானவர். அவர் ஈன்ற மூன்று குரங்குகள் எங்கள் விடுதியில் தங்கியிருந்தன. எப்படியோ தந்தையை உருக்கி 5 புதிய புத்தகங்களை வாங்கிவிட்டான் அந்த மூன்றில் ஒரு குரங்கு.

இப்படித்தான் நண்பனின் தனியார் வாசிகசாலைக்கு எதிரான முதலாவது கீரைக்கடை உருவானது. அவன் புதியதொரு வசதியையும் செய்தான். தன்னிடம் விடுதியில் இல்லாதவர்களும் புத்தகங்களை வாடகைக்குப் பெறலாம். இதனால் பாடசாலை மாணவர்களும் அவனது பக்கம் சாய்ந்தார்கள். நண்பனின் கடை ஒரு வாரத்தில் படுத்துவிட்டது. எனக்கு வாசிப்புப்பசி. நண்பன் புதிய புத்தகம் வாங்குவது ஒரு வாரத்திற்கு ஒருமுறை என்றாகி மாதத்திற்கு ஒருமுறை என்றாகியது. நானும் மற்றைய நூலகத்தில் சாந்தாக்காரன் ஆகிவிட்டேன் என்றதும் எமக்குள் முறுகல் நிலை வந்துபோயிற்று. இந்த இரண்டாவது வாசிகசாலையை வைத்திருந்த சந்திரமோகன் இப்போது கொழும்பில் பிரபல வைத்தியராக இருக்கிறான்.

சில நாட்களில் அந்தப் புதிய கடைக்கும் எதிராக புரட்சி வெடித்தது. இதன்பின் மூன்றாவது வாசிகசாலையை அமீர் அலி தொடங்கினான். சிறுபையன் தான். ஆனால் தொழிலில் கறாரானவன். (அமீர் அலி வாழைச்சேனையில் இப்போது அரசியல்வாதி என்று அறியக்கிடைக்கிறது) இதன்பின் ஒவ்வொரு படுக்கை மண்டபத்திலும் இரண்டு மூன்று வாசிகசாலைகள் ஆரம்பித்தன. இப்போதும் எனது நண்பன் மற்றையவரிடத்தில் புத்தகம் வாங்கினான் இல்லை. ஒவ்வொரு வாசிகசாலையும் மற்றையவர்கள் வாங்கிய புத்தகத்தை வாங்கவே மாட்டார்கள். மட்டக்களப்பு டவுன் கடையில் இல்லாத புத்தகங்களையும் எங்கள் விடுதியில் வாசிக்கக் கிடைத்தது என்றால் பாருங்கள்.

எனக்கு இனிப்புக் கடையில் இலவசமாக உண்ணக்கிடைத்த சந்தோசம். காலையில் சர்மா சேரின் சமூகக்கல்வி பாடநேரத்தில் இருந்து பாலசிங்கம் டீச்சரின் ஆங்கலப் பாடத்திற்கிடையில் நான் இரண்டு புத்தங்கள் வாசிப்பேன். மாலை இரவுநேர கற்கும் நேரத்தில் இன்னும் இரண்டு. இப்படி எனது காட்டில் அடைமழை பெய்தது.

இந்நாட்களில் தான் சூறாவளி மட்டக்களப்பை சுறுட்டி வீசியது. அதன் காரணமாக நீண்டதொரு விடுமுறைக் காலம் வந்து போனபோது, விடுதிக்கு புதிதாய் ஒரு மாணவன் வந்து சேர்ந்திருந்தார். வயதில் மூத்தவர். பலசாலி. வேறு பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சையில் இரண்டுமுறை முயன்று தோற்றவர். அவருக்கு இருக்கும் ஒரே ஒரு சந்தர்ப்பம் மூன்றாவது வருடம். இதிலும் கோட்டைவிட்டால் வாழ்க்கையே இல்லை என்ற நிலை. அவரது தந்தை, தனது நெருங்கிய நண்பனான எங்கள் அதிபர் பிரின்ஸ் காசிநாதரிடம் அவரை அனுப்பியிருந்தார். பிரின்ஸ்-இன் பாடசாலைக்குச் சென்றால் மகன் உருப்பட்டுவிடுவான் என்று அவர் நம்பினார். எங்கள் அதிபருக்கு இவன் உருப்படவே மாட்டான் என்று முதற்பார்வையிலேயே தெரிந்திருக்கவேண்டும். இருப்பினும் தனது அடியால் இவனை திருத்துவேன் என்று தப்புக்கணக்கு போட்டார் என்பதை அவர் பின்புதான் அறிந்துகொண்டார்.

அந்த மாணவன் யாழ்ப்பாணத்தில் தங்கியியிருந்து படித்து எழுதிய பரீட்சையில் F என்னும் எழுத்தை அனைத்துப் பாடங்களிலும் பெற்று சாதனை படைத்தவர். அவருக்கு எமது விடுதி விதிகளுக்கும் ஒத்துவரவில்லை. பாடசாலைநேரத்தை தவிர்ந்த நேரங்களில் காலையிலும் மாலையிலும் கட்டாயக் கல்வி, மாதத்தில் ஒரு நாளைக்கு மட்டும் நான்கு துண்டு இறைச்சி, வாரத்தில் இரண்டு மணிநேர விடுமுறை, 3 மாதங்களுக்கு ஒரு திரைப்படம் என்றால் யாருக்குத்தான் ஒத்துவரும்?

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் தினமும் வின்சர் தியட்டரில் டியுசன் எடுத்தவராம். தினமும் இரவுநேரங்களில் கொத்துரொட்டியுடன் வாழ்ந்தவராம். இவரிடமும் சில புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் தலதா மாளிகையில் புத்தரின் பல்லைப் போல் எவருக்கும் காண்பிக்காது பாதுகாப்பது போன்று எமது கண்களிலேயே பட்டுவிடாது பாதுகாத்தார். பெரிய மாணவர்கள் சுற்றியிருந்து கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருப்பார்கள். தனியே கட்டிலில் போவையால் போர்த்தபடியே வாசிப்பார்கள். அண்ணை! தாங்கோவன் வாசிப்பம் என்று கேட்டால் கட்டிலில் இருந்து எழும்பாமலே அருகில் இருப்பதை எடுத்து எம்மைநோக்கி வீசிக் கலைப்பார்கள். சிலர் திடீர் என்று எழும்பி கழிப்பறைக்குள் ஓடுவார்கள். இப்போது அந்த அண்ணரின் புத்தகங்களுக்கு ஏக மவுசு. பெரிய மாணவர்கள் எங்கள் வாசிகசாலைய விட்டு விலகி அங்கு சேர்ந்துவிட்டார்கள். அந்த அண்ணனுக்கு வாராவாரம் புத்தகம் வரும்.

இந்த நாட்களில் நலிந்து கிடந்த எங்கள் வாசிகசாலைகளுக்குள் பிரச்சனை மூண்டது. யாரோ ஒருவன் எனது நண்பனின் வாசிகசாலை இருந்த ரங்குப்பெட்டியை உடைத்துக் கொள்ளையடித்துவிட்டான். நண்பன் அன்றுதான் முதன் முதலில் நல்லவார்த்தைகள் பேசக் கற்றுக்கொண்டான். துக்கம் தாளாது அழுதான். மீண்டும் ரங்குப்பெட்டியை திருத்தி ரங்குப்பெட்டியைவிடப் பெரியதொரு ஆமைப்பூட்டை காத்தான்குடியில் இருந்து வாங்கிப் போட்டான்.

இப்போது வாசிகசாலை உரிமையாளர்கள் ஒருவருக்கு ஒருவர் விரோதிகளாகிவிட்டனர். உணவு மண்டபத்தில் அருகருகே உட்கார மறுத்தனர். மாலை நேர உதைபந்தாட்டத்தில் எதிரணிகளில் மதம்கொண்டு மோதி நொண்டிக்கொண்டு நடந்தனர். இரவுநேரதில் முகமூடித் தாக்குதல்கள் நடந்தேறின. இவ்வாறு விடுதியில் இருந்த வாசிகசாலைகளுக்கு ஏழரைச்சனி பிடித்த ஒரு நாள், பெரிய மாணவர்களிடத்தில் அந்த அண்ணனிடம் இருந்த ஒரு ஆங்கலப் புத்தகத்திற்காய் சண்டை வந்து இரத்தம் சிந்தியது. மாணவர் தலைவர்கள் உள்ளிட்டு புத்தகத்தைப் பறித்து சண்டையை நிறுத்தினர். அன்று மாலை தலைமைமாணவரின் மேசை லாச்சியில் அந்தப் புத்தகத்தை திருட்டுத்தனமாக எடுத்துப் பார்த்தபோது நான் பயந்துவிட்டேன். உடல் நடுங்கியது, வியர்த்தது, விறைத்தது. அதில் இருந்து ஒரு பக்கத்தை கிழித்து எடுத்துவந்தேன். எனது தோழர்களுக்கும் நடுங்கி வியர்த்து விறைத்தது.

அடுத்து வந்த சில நாட்கள் எமக்கு பெரும் கொடுமையானவையாக இருந்தன. அதை வாசித்தவர்கள் ஏன் எழுந்து கழிப்பறைக்குள் ஓடினார்கள் என்று புரியத்தொடங்கியது. நாங்களும் ஓடத்தொடங்கினோம். தலைமை மாணவர்தலைவர் அந்தப் புத்தகத்தை அதிபரிடம் சமர்ப்பித்தபோது கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போன்று எங்கள் வாசிகசாலை விடயங்கள் அனைத்தும் அவருக்குத் தெரியவந்தன. தனியார் வாசிகசாலைப் புத்தகங்கள் அனைத்தும் உடனடியாக தனது கந்தோருக்கு வரவேண்டும் என்று கட்டளையிட்டார், அதிபர்.

மறுநாள் இரவு திடீர் என்று இன்றிரவு விடுதிமாணவர்களுக்கு “அசெம்பிளி” என்று இராப்போசனத்தில் அறிவித்தார்கள். அசெம்பிளியில், “வாசிப்பது மிகவும் நல்ல பழக்கம்” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தார் அதிபர். எனக்கு ஏகத்துக்கும் பெருமையாக இருந்தது. அதன்பின் நடந்தது எல்லாம் சரித்திர முக்கியம் வாய்ந்த சோகக்கதைகள். வாசிகசாலை முதலாளிகளை மேடைக்கு அழைத்தார். இரண்டு கைகளாலும் முகத்தில் நர்த்தனமாடி அனுப்பினார். முகத்தில் மசுக்குட்டி பட்டது போன்று திட்டுத் திட்டாக வீங்க ஆரம்பித்திருந்தது புத்தகக்கடை முதலாளிகளுக்கு.

அந்த பலான புத்தகம் வைத்திருந்த மாணவரை ஏன் இவர் இன்னும் அழைக்கவில்லை என்று நாம் யோசித்துக்கொண்டிருந்தோம். இறுதியில், “ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பது மிகவும் நல்ல பழக்கம். 80 மாணவர்கள் தங்கியிருக்கும் இந்த விடுதியில், ஒரே ஒரு மாணவனுக்கு மட்டுமே ஆங்கிலம் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது என்பது பாடசாலைக்கு பெருமை. அவனை எங்கள் பாடசாலையில் சேர்த்தது நான் தான் என்றவாறு அந்த வின்சர் தியட்டரில் Phd செய்த மாணவரை மிக அன்பாக மேடைக்கு அழைத்தார். கையாலும் பிரம்பாலும். சுளன்று சுளன்று அடித்தார்.

இறுதியில், “போடா வெளியே! போய் கொப்பரிட்ட சொல்லு பிரின்ஸ் இங்கிலீசு புத்தகம் வாசித்த படியால் அடிச்சு கைலைத்துவிட்டான் என்று” என்றார்.

அன்றிரவே அந்த அண்ணன் அழுதபடியே புறப்பட்டுப்போனார். அதன்பின் அந்த அண்ணரை நான் இன்றுவரை காணவே இல்லை. மேடையில் நின்றபடியே இந்தப் புத்தகங்கள் எல்லாம் விடுதியில் இருந்து எடுத்தது. எல்லாவற்றையும் விடுதியின் வாசிகசாலையில் போடுங்கள். புத்தகக் கடையில் சில வாராந்த புத்தகங்களுக்கு சொல்லியிருக்கிறேன். மாணவர் தலைவர் எடுத்துத் தருவார் என்றார். இனி எவரும் தனிப்பட வாசிகசாலை திறக்க முடியாது என்று விடுதியின் அரசியல் யாப்பினை மாற்றியமைத்தார் அதிபர்.

மண்டபம் எங்கும் ஊசி விழுந்தாலும் கேட்கும் அமைதி. என்னருகில் நின்றிருந்த, தற்காலத்தில் ஞானம், மாஸ்டர், M. R. Stalin என்று பெயரை மாற்றிவைத்துக்கொண்டு, பாரஸ் நகரத்தில் வாழ்ந்தபடி, இன்பவல்லியுடன் இணைந்து இரண்டு குட்டி ஈன்று, பெரும் அரசியல் பேசிக்கொண்டு, கிழக்கின் தலைமை கிழக்கிடமே இருக்கவேண்டும் என்று ஆணித்தரமாக வாதாடும் நண்பனும் விடுதியில் முதலாவது வாசிகசாலையை ஆரம்பித்தவனுமாகிய மாசிலா மணி ராஜேந்தின் கையைத் தட்ட… மெது மெதுவாக முழுமண்டபமும் கையைத்தட்டியது.

மறுநாள் அனைத்துப் புத்தகங்களும் விடுதியின் வாசிகசாலையில் கிடந்தன. நான் எனது ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள அந்தப் புத்தகத்தைத் தேடினேன். அது மட்டும் மாயமாக மறைந்திருந்தது. பாடசாலை வாழ்க்கை முடிந்து பல பத்துவருடங்களின்பின் இக்கதையை எங்கள் பேராசானிடம் சொன்னபோது ….

“டேய் .. உன்னை நம்ப ஏலாது……… எனது மேசை லாச்சியில் தேடினாயா?” என்றார் பெருத்த சந்தேகத்துடன்.

“சேர்.. உங்களுக்கு அது எப்படித் தெரியும்” என்றேன். இடிபோல வெடித்துச் சிரித்தார் பேராசான்.

சஞ்சயன்-நோர்வே

சஞ்சயன்

(Visited 226 times, 1 visits today)