சிறுகதை மொழிபெயர்ப்பு-தொழில் அமா அடா ஐடூ-எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்“நான் சொல்வதைக் கேளுங்கள் எனது மாமன்மாரே! நீங்கள் அகா நகரத்துக்குப் போய் அங்கே ஒருவர் உங்களிடம் சுற்றுவட்டாரத்துக்கருகில் பேரூந்திலிருந்து இறங்கும்படி கூறினால் உண்மையிலேயே அவர் உங்களுக்கு உதவி செய்தவராவார்.

ஆனால்…ஹ்ம்ம்… அங்கே அங்குமிங்கும் ஓடுவது நிஜமாகவே மனிதர்கள்தானா? மக்கள் இவ்வளவு வாகனங்கள் வாங்கியது பணம் கொடுத்துத்தானா? என்னிடம் அதை விவரிக்க வார்த்தைகளில்லை.

மாமன்களே, உங்களது நேரத்தை நான் வீணாக்கத் தேவையில்லை. நான் சுற்றிவர உற்று நோக்கினேன். எனது பொதியைக் காணவில்லை. நான் நிலத்தைப் பார்த்துக் கொண்டே நடந்து சென்றேன். அது ஏனென்று என்னிடம் கேட்க வேண்டாம். நிறைய வாகனங்கள் என்னைக் கடந்துசெல்வதைப் பார்த்து எனக்கு வெறுப்பாகிவிட்டது. ஓரிடத்தில் நின்றுகொண்டிருப்பதுவும்  எனக்கு அசௌகரியமாக இருந்தது. நின்றுகொண்டிருக்கும்போது முழு உலகமுமே ஓடும் வாகனங்களால்தான் உருவாகியிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. ஆனால்…ஹ்ம்ம்… நீண்ட உரையாற்றி உங்கள் செவிகளை நோகடிக்க நான் விரும்பவில்லை.

பேரூந்திலிருந்து சுற்றுவட்டாரத்தினருகில் இறங்கி முன்பு நின்றுகொண்டிருந்த இடத்திலேயே எனது நடையை நிறுத்திய நான் நீண்ட  நேரம் அங்கு நின்று கொண்டிருந்தேன்.  வெகுநேரம் கழிந்ததன் பிறகு அங்கு ஒரு லொறி வந்தது. நான் கையசைத்து லொறியை நிறுத்தும்படி சைகை செய்தேன். எனினும் லொறியை முழுவதுமாக நிறுத்தவில்லை. ‘எங்கே போகிறாய்’ என லொறி சாரதி கேட்டான். ‘நான் மாம்ப்ரோவுக்குப் போகணும்’ என்று சொன்னேன். ஏறிக் கொள்ளும்படி கூறிய அவன் வண்டியின் வேகத்தை படிப்படியாக அதிகரித்தான். ஹ்ம்ம் ! லொறியில் ஏறும்போது தரைக்கு விழுந்து விடப் போவதைப் போல நான் உணர்ந்தேன். பலகையால் செய்யப்பட்ட விசாலமானதொரு பாத்திரமொன்றைப் போன்ற ஒன்றைச் சுற்றி நாம் பயணித்தோம். எனக்கு அதனை நன்கு பார்த்துக் கொள்வது அவசியமாக இருந்தது. அதிலிருந்து ஆகாயத்தை நோக்கி தண்ணீரை விசிறடிப்பதாக ஒரு நாள் டுயாமி என்னிடம் கூறினான். ஆனாலும் சாரதி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்த காரணத்தால் அதனை என்னால் நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியாமல் போனது. தான் மாம்ப்ரோ வரை போவதில்லையெனவும், புகையிரத நிலையம் வரை போவதாகவும் அவன் கூறினான். புகையிரத நிலையத்துக்கருகில் மாம்ப்ரோ வரை செல்லும் லொறியொன்றில் ஏறிச் செல்ல முடியுமென அவன் மேலும் கூறினான்.

ஆமாம் மாமன்மாரே, சாரதி உண்மையைத்தான் கூறியிருந்தான். நாம் புகையிரத நிலையத்தை நெருங்கிய போது, மாம்ப்ரோ எனக் கத்தியபடியிருந்த லொறிச் சாரதிகளை காண முடிந்தது. கடிகாரத்தில் இரண்டு முப்பதாகும்போது என்னால் டுயாமி வீட்டுக் கதவைத் தட்ட முடியுமாக இருந்தது. அதிக நேரம் கதவைத் தட்டும் முன்பாகவே கதவு திறந்தது.

ஆஹ்! அவன் கடும் தூக்கத்திலில் இருந்திருந்தான். சனிக்கிழமை மாலையில் உறங்குவதற்கு நேரம் கிடைப்பது எவ்வாறு? நான் என்னிடமே கேட்டுக் கொண்டேன். அவன் முழுமனதோடு என்னை வரவேற்றான். எனது மாமன்மாரே, டுயாமி தனது எதிர்கால நலனுக்காக பலவற்றைச் செய்திருக்கிறான். அவனது தாய் செடவா அதிர்ஷ்டக்காரப் பெண்மணி.

பள்ளிக் கூடங்களில் சில மாணவர்கள் அதிர்ஷ்டக்காரர்களாகவும், ஏனையவர்கள் அவ்வாறில்லாமல் போவதும் ஏன்? மன்ஸாவும், நானும் ஒரே பள்ளிக்கூடத்துக்குச் சென்றது எனக்கு நினைவிலிருக்கிறது. மன்ஸாவுக்கு பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்த வேண்டி வந்தது எதனால்? நாம் என்ன செய்திருக்க வேண்டும்?

அதை விடுவோம். நான் எனது கதையை தொடர்ச்சியாகச் சொல்ல வேண்டும். ஆமாம். டுயாமி தனக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். அவனது அறையினுள் பல உபகரணங்களைக் காணக் கூடியதாக இருந்தது. ஒரேயொரு குறைபாடு அந்த அறை சிறியதாக இருந்தது மாத்திரமே. அது ஏனென நான் அவனிடம் கேட்டேன். பெட்டியொன்றைப் போன்ற அவ்வாறான சிறியதொரு இடத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தாலே அதிர்ஷ்டம்தானென அவன் கூறினான். நகரத்தில் உறங்குவதற்கு இடமொன்றைப் பெற்றுக் கொள்வதுவும்  கடினமானது.

நான் எதற்காக வந்திருக்கிறேன் என டுயாமி வினவினான். நான் எல்லாவற்றையும் கூறினேன். அவனும் அறிந்திருந்த விதத்தில், எனது சகோதரி மன்ஸா பள்ளிக்கூடம் செல்ல மறுத்தது ஏன்? அவளுக்கு பள்ளிக்கூடத்தை விரும்ப வைக்க எனது தாய் எவ்வளவு பாடுபட்டாள்?! எனது தாய் என்னைத் தடுக்கவில்லை. தனது மகளுக்காக அவள் எல்லாவற்றையும் செய்தாள் என்பதனை இங்கு கூடியிருக்கும் அனைவரும் அறிவர்.

ஆமாம், மன்ஸா பள்ளிக்கூடம் செல்ல மறுத்த விதத்தை நான் அவனுக்கு தெளிவாக விபரித்தேன். அவளுக்கு வீட்டுப் பரிபாலனத்தையும், தையலையும் கற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்திருந்த பெண்ணிடம் அவளைக் கூட்டிச் சென்றதையும் நான் கூறினேன். அந்தப் பெண் அவளைக் கூட்டிச் சென்றதன் பிறகு வந்த நத்தார் பண்டிகைக்கு மன்ஸா வீட்டுக்கு வந்த விதத்தையும் நான் அவனிடம் கூறினேன். ஆனால் அதன்பிறகு வந்த பன்னிரண்டு வருடங்களில் ஒரு நாள் கூட அவள் வீட்டுக்கு திரும்ப வரவில்லை என்பதையும் கூறினேன்.

‘நகரத்திலிருக்கும் சகோதரி பற்றித் தேடிப் பார்ப்பதற்காக வந்திருக்கிறாயா?’ என டுயாமி என்னிடம் கேட்டான். நான் ‘ஆமாம்’ என்று கூறினேன்.

 

‘நீயொரு கோமாளி. இந்தப் பிரதேசத்தில் பெண்ணொருத்தியைத் தேடிக் கண்டுபிடிப்பதென்பது ஒரு இலகுவான வேலையென நீ நினைத்திருக்கிறாயோ? அவள் எங்கு தங்கியிருக்கிறாள்? அது உனக்குத் தெரியாது. அவள் திருமணம் முடித்தவளா? அதுவும் உனக்குத் தெரியாது. நாம் எப்படி அவளைத் தேடிக் கண்டுபிடிப்பது? அவள் கௌரவமான ஒருவரைத் திருமணம் முடித்து நகரத்திலிருந்து தொலைவில் பல மைல்களுக்கப்பாலுள்ள ஒரு வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும்’ என்று அவன் சிரித்தவாறே கூறினான்.

ஐயோ கடவுளே! அம்மா! அம்மா அழுகிறாயா?  நான் கல்யாணம் பற்றிக் கதைக்கும்போது நீ ஆச்சரியப்பட்டாயா? அந் நேரம் அவன் அப்படிக் கூறியபோது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. நானும் அழுதேன். ஆமாம் எனது அம்மா. நானும் அழுதேன். ஆனாலும் அம்மா, அம்மாவுக்கும் எனக்கும் எங்கள் இருவருக்குமே ஒரு விடயம் மறந்துபோயிருந்தது. அது மன்ஸா இப்பொழுது ஒரு பருவப் பெண்ணாகியிருப்பாள் என்பது. சிறுமியொருத்தி பருவப் பெண்ணாக மாற அதிக காலம் செல்வதில்லை. எமது சிந்தனையிலுள்ள மன்ஸா, நாம் அவளை இறுதியாகக் கண்ட போதிருந்த சிறுமி. நாம் அவளை அவ்வாறுதான் நினைத்திருந்தோம். அப்போது அவளுக்கு பத்து வயது. ஆனால் அம்மா அது இன்றைக்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு.

ஆமாம். அவள் இப்பொழுது திருமண வயதை எட்டியிருப்பாளென டுயாமி என்னிடம் கூறினான். ‘அவள் இருக்குமிடம் பற்றி ஏதாவது உனக்குத் தெரியுமா? அவளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனரா?’ என டுயாமியிடம் கேட்டேன். ‘குழந்தைகள்?’ டுயாமி சிரித்தான். அது ஒரு விந்தையான சிரிப்பு.

அவன் கதைக்கும்போது நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் மன்ஸாவைத் தேடுவதைத் தடுப்பதற்கு தான் முயற்சிக்கவில்லை என அவன் கூறினான். ஆனால் அது மிகச் சிரமமான ஒரு செயல் என்பதை எனக்குத் தெளிவுபடுத்துவது அவனுக்கு அவசியமாக இருந்தது. ஆனாலும் ‘நான் பின்வாங்குவதில்லை’ என நான் கூறினேன். அவள் இறந்துபோயிருந்தால் கூட நாம் அவளை மறந்துவிடவில்லை என்பதை மன்ஸா தெரிந்து கொள்ள வேண்டும். வேற்று மனிதர்களது நகரங்களில் கால் போன போக்கில் நடந்து செல்ல அவளுக்கு இடமளிக்க முடியாது. எமது முயற்சியானது, திரும்ப அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகும்.

ஏன் அம்மா காரணமில்லாமல் கண்ணீர் வடிக்கிறாய்?  மன்ஸா செத்துப் போய்விட்டாள் என எண்ணச் செய்யும்படியாக நானேதும் கூறிவிட்டேனா?

அடுத்த நாள் எமது தேடுதலை ஆரம்பிக்கும் முன்பு செய்ய வேண்டியவை குறித்து டுயாமி சில தீர்மானங்களை எடுத்தான். இதற்கிடையில் அவன் எனக்குக் குளிக்கத் தண்ணீரும், உணவும் கொண்டு வந்து தந்தான். நான் உணவு உட்கொள்ளும்போது அருகில் அமர்ந்திருந்த அவன், தகவல்கள் சிலவற்றை வினவினான். அவனது தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக அவனும், கடந்த வருடம் அகாரிஸ் நோய் தாக்கி எமது கொக்கோ பயிர்ச் செய்கை அழிந்து போனதைப் பற்றி நானும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். நான் உணவு உட்கொண்டதன் பிறகு படுக்கைக்குச் சென்று ஓய்வுகொள்ளும்படி டுயாமி கூறினான்.

 

நான் கண்விழிக்கும்போது இருளடைந்திருந்தது. அதன் மூலம்  நான் நன்கு உறங்கிப் போயிருந்தேன் என்பதாக எனக்குத் தோன்றியது. டுயாமி மின்குமிழ்களை எரிய விட்டான். அப்போது அறையினுள் ஒரு பெண்ணிருப்பதை என்னால் காணக் கூடியதாக இருந்தது. அவளை எனக்குக் காட்டிய டுயாமி, அவள் தனது தோழியெனக் கூறினான். குடும்பத்தாரின் விருப்பத்துக்கு மாறாக அவன் திருமணம் செய்ய எண்ணியிருக்கும் யுவதி அவளாக இருக்கக் கூடும் என எனக்குத் தோன்றியது. அவள் விடியல் சூரியனைப் போல அழகானவள். ஆனால் எமது பிரதேச யுவதியொருத்தியல்ல.

டுயாமி அவளை எனக்குக் காட்டும்போது நான் நன்கு விழித்திருந்தேன். அப்பொழுது நேரம் இரவு எட்டு மணியென அவன் என்னிடம் கூறினான். அவனது தோழி உணவு எடுத்து வந்திருந்ததோடு, நாம் மூவரும் ஒன்றாக உணவினை உட்கொண்டோம்.

சீயெனக் கூற வேண்டாம் மாமா. நகரத்திலுள்ள மக்கள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். பெண்கள், ஆண்களோடு சேர்ந்தே உணவு தயாரித்து, அவர்களோடு சேர்ந்தே உணவும் உட்கொள்கிறார்கள். ஆமாம். அவர்கள் வழமையாகவே அப்படித்தான் செய்கிறார்கள்.

அந்த உணவை என்னால் வாயில் வைக்க முடியவில்லை. தானிய மாவினாலும், மரவள்ளிக் கிழங்கினாலும் அது தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது ஒரு புதுமையான உணவாக இருந்தது. நான் இயன்றவரை உண்ண முயற்சித்தேன். உணவின் பிறகு அம் மாலை நேரத்தைக் கழிப்பதற்காக வெளியே சென்று வரலாமென டுயாமி தனது எண்ணத்தைக் கூறினான். அப்போதுதான் நான் அவனிடம் எனது காணாமல் போன பையினைப் பற்றிக் கூறினேன். புதிதாக களிசான், சட்டை அணிய இல்லாதிருப்பதனால் என்னால் வெளியே செல்ல வர இயலாது எனக் கூறினேன். அவன் கேட்கவில்லை. நகரத்துக்கு வந்து, அதுவும்  சனிக்கிழமை தினத்தில் வெளியே செல்லாதிருப்பது ஒரு குற்றம் என அவன் கூறினான். நிறையப் பேர் ஒழுங்காக உடையணிவதில்லை எனக் கூறிய டுயாமி, ஆடையைப் பற்றி யோசிக்காதே எனவும் எனக்கு அறிவுருத்தினான்.

எனக்குத் தண்ணீர் கொஞ்சம் கொடுங்கள். எனது தொண்டை வரண்டு போய்விட்டது மாமா.

நாங்கள் தெருவில் செல்லும்போது என்னால் எனது கண்களையே நம்ப முடியவில்லை. முழு பிராந்தியமுமே ஆகாயத்தைப் போல தெளிவாக இருந்தது. சில மின்சார விளக்குகள் உண்மையிலேயே மிகவும் அலங்காரமானவை.  எல்லோருமே அவ்வாறான மின்சார விளக்குகளைக் காண வேண்டும். இந்த மின்சார விளக்குகளுக்கு செலவளிப்பது யார்? என்னையே நான் கேட்டுக் கொண்டேன். ஏனெனில் அது சத்தமாகக் கேட்க இயலாத ஒன்று. அதைக் கேட்டு டுயாமி என்னைக் கிண்டல் செய்யக் கூடுமென அஞ்சினேன்.

நாங்கள் நிறைய தெருக்களினூடு நடந்து சென்று இறுதியில் இசைக் குழுவொன்று இசைத்துக் கொண்டிருக்கும் பெரியதொரு கட்டடத்துக்கருகே வந்துவிட்டோம். டுயாமி நம் மூவருக்குமாக அனுமதிச் சீட்டுக்களை வாங்கி வரச் சென்றான்.

நான் இதற்கு முன்பு இவ்வாறான இடங்களுக்குச் சென்றதில்லை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். நான் வியந்துபோனதைக் கூற மாத்திரம் எனக்கு இடம் கொடுங்கள்.

 

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் எங்கே செல்கின்றார்கள்? அவர்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது? போன்ற கேள்விகளோடு அந்தக் கட்டடம் விசாலமான ஒன்றென உள்ளே செல்ல முன்பு நான் நினைத்தேன். ஆனால் உள்ளே சென்றதன் பிற்பாடு, உள்ளேயிருந்த மக்கள் கூட்டம் அதை விடவும் விசாலமானதென எனக்குப் புரிந்தது. சிலர் பானங்களை விலை கொடுத்து வாங்கினர். சிலர் நடனமாடினர்.

ஆமாம். அது உண்மைதான். நடனமாடும் இடமொன்றுக்குத்தான் நாங்கள் சென்றிருந்தோம். ஆனால் அது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சிலர் இரும்பு மேசைகளைச் சுற்றியிருந்த இரும்புக் கதிரைகளில் அமர்ந்திருந்தனர். மேசைகளையும் கதிரைகளையும் கொண்டு வரும்படி டுயாமி ஒருவனிடம் கூறினான்.

அவன் மேசை, கதிரைகளை எடுத்து வந்து தந்தான். நாங்கள் அவற்றில் அமர்ந்ததும் ‘என்ன  குடிக்க விருப்பம்?’ என டுயாமி கேட்டான். நான் ‘எலுமிச்சை பானம்’ எனக் கூறினேன். ஆனால் அவனது தோழி ‘பீர்’ எனக் கூறினாள்.

ஆச்சரியப்படாதீர்கள் மாமா. ஆமாம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவள் கேட்டது பீர்தான். அதிக நேரம் செல்லும் முன்பே டுயாமி அப் பானங்களை எடுத்து வந்தான்.

ஆண்களைப் போல பீர் குடிக்கும் பெண்ணொருத்தியைக் கண்டது எனக்கு மிகவும் வியப்பினை அளித்தது. நான் வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இசைக் குழு, சிறிது நேரம் இசையை நிறுத்தியிருந்துவிட்டு திரும்பவும் ஆரம்பித்தது. டுயாமி அவனது தோழியோடு ஆடச் சென்றான். நான் அங்கு அமர்ந்திருந்து எலுமிச்சை பானத்தைப் பருகினேன். அவர்கள் ஆடிய விதம் குறித்து விவரிக்க என்னால் இயலாது.

சிறிது நேரத்திற்குப் பிறகு இசை நின்றது. டுயாமி தனது தோழியோடு வந்து அமர்ந்தான். எனக்குக் குளிராக இருக்கிறதென நான் டுயாமியிடம் கூறினேன்.

‘அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்த நேரத்தில் நீ குடித்தது பெண்களின் பானமொன்று’ என டுயாமி கூறினான்.

‘நீ குடித்ததைக் குடித்தால் மனிதர்களின் குளிர் இல்லாமல் போய்விடுமா?’ என நான் கேட்டேன்.

‘ஆமாம். உனக்குத் தெரியாதா? நீயும் பீர் கொஞ்சம் குடிக்க வேண்டும்’ என்றவன் எனக்கும் பீர் ஒன்றை எடுத்து வந்து கொடுத்தான். நான் பீரைக் குடித்துக் கொண்டிருக்கும்போது இவ்வாறு கூறினான்.

‘நீயும் நடனமாடினால் உனது உடல் உஷ்ணமாகி விடும்’

‘நீங்கள் எல்லோரும் ஆடுவதைப் போல் என்னால் ஆட முடியாது என்பது உனக்குத் தெரியும் அல்லவா? பிறகு நான் எப்படி ஆடுவது?’ என நான் அவனிடம் கேட்டேன்.

‘அப்படி நடனமாடுபவர்கள் வெள்ளைக்காரர்கள் என நான் நினைக்கிறேன். அவ்வாறு ஆடுவது எப்படியென எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்’ என்றும் கூறினேன்.

டுயாமி சிரிக்கத் தொடங்கினான். அந்தச் சிரிப்பை அவனாலேயே கூட நிறுத்த முடியவில்லை. அவன் எந்தளவு சிரித்தானென்றால், அவனது தோழி கூட அவன் எதற்காகச் சிரிக்கிறான் எனக் கேட்டபடியிருந்தாள். அவன் வெள்ளைக்காரர்களின் பாஷையில் அவளிடம் ஏதோ கூறினான். அதன் பிறகு இருவரும் இணைந்து சிரிக்கத் தொடங்கினர்.

‘மக்கள் நடனமாடும்போது, அவர்கள் ஏனையவர்களைக் கவனித்துக்  கொண்டிருப்பதில்லை. அடுத்தது, நகரத்தில் நீ நன்றாக ஆடுகிறாயா, மோசமாக ஆடுகிறாயா என எவரும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை’ என இடையில் டுயாமி என்னிடம் கூறினான்.

ஆமாம். நானும் ஆடினேன் மாமா. உண்மையிலேயே யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை மாமா. நகரத்துக்குப் போன நோக்கத்தை மறந்து நான் நடனமாட ஆரம்பித்தாயிற்றா எனக் கேட்க வேண்டாம். நீங்கள் எல்லோரும் அங்கு நடைபெற்றதைக் கண்டிருந்தால் அப்படிச் சொல்வதில்லை. நான் இங்கே நிறுத்தி விட்டு, எனது கதையைச் சொல்லும் பாதையிலுள்ள எல்லா செடிகொடிகளையும் துப்புரவாக்கி விட்டு எனது கதையின் இறுதிப் பகுதியைச் சொல்லப் போவதில்லை. முழுமையாகச் சொல்லப் போகிறேன்.

 

நாங்கள் நடனத்தைப் பற்றி கதைத்துக் கொண்டிருக்கும்போது டுயாமி, பின்னாலிருந்த ஏதோவொன்றைக் கண்ணுற்றான். நான்கு பெண்கள் மேசையொன்றைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவனது விழிகள் உடனே அப் பக்கம் நோக்கித் திரும்பியிருந்தன. முகம் விசித்திரமான விதத்தில் மாற்றமடைந்திருந்தது. ஆனால் எனக்கு எதுவும் விளங்கவில்லை. எனக்கும் நடனமாட வேண்டுமாக இருந்தால் அங்கிருந்த பெண்களிலொருத்தியை என்னுடன் நடனமாட அழைக்கும்படி அவன் கூறினான்.

அதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன் எனது மாமன்மாரே ! ‘என்னைத் தெரியாதவர்கள் என்னுடன் நடனமாட வருவார்களா?’ என நான் டுயாமியிடம் கேட்டேன். அவன் ‘ஆமாம்’ எனக் கூறினான். எனது விழிகள் வியப்பில் மேலே சென்றது. நான் அம் மேசையைச் சுற்றி அமர்ந்திருந்த நான்கு பெண்களையும் பார்த்தேன். அதே நான்கு பெண்களும்தான் இருந்தனர். நான் எழுந்தேன்.

நான் தெளிவாகத்தான் கதைக்கிறேன் என நினைக்கிறேன். ஆனால் பானையில் கொதிக்கும் நீர் போல நான் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். பெண்கள் நால்வரிடையேயிருந்த ஒருத்தி உடனே எழுந்து வெள்ளைக்காரர்களின் பாஷையில் ஏதோ சொல்வதை நான் கண்டேன். நகரத்தில் எல்லோருமே, பள்ளிக்கூடம் சென்றிராதவர்கள் கூட வெள்ளையர்களின் மொழியிலேயே உரையாடுகின்றனர். நான் மீண்டுமொரு முறை தலையை அசைத்தேன். தன்னுடன் நடனமாட விருப்பமா என அவள் கேட்டாள். நான் ‘ஆமாம்’ என்று கூறினேன்.

‘ஏன் எனது சின்னத் தங்கையே..நீ என்னிடம் கேள்வி கேட்கப் பார்க்கிறாயா? நான் மன்ஸாவை சந்தித்தேனா என்பதுதானே நீ தெரிந்துகொள்ள வேண்டியது? எங்கள் மாமன்மார் அங்கு நடந்த எல்லாவற்றையும் சொல்லும்படிதான் கூறியிருக்கின்றனர். நான் அந்த உணவுகள் எல்லாவற்றையுமே சமைத்துத் தருகிறேன். இப்போதே கரண்டியை நக்கிச் சுவைக்க முயற்சிக்காதே.’

ஆமாம். நான் அடிக்கடி அவளது காலை மிதித்து விட்டேனென நினைக்கிறேன். அவள் என்னையும் உங்களையும் விடக் கறுப்பானவள். ஆனால் அவளது கூந்தல் மிகவும் நீளமானது. சரியாகச் சொன்னால் வெள்ளைக்காரியொருத்தியுடையதைப் போன்றது. தோள் வரை அவளது கூந்தல் வளர்ந்திருந்தது. நான் அக் கூந்தலைத் தொடவில்லை. ஆனாலும் அது மென்மையானதென நான் உணர்ந்தேன். சிவப்புச் சாயம் பூசிய அவளது உதடுகள், முகத்திலிருந்து புதிதாக வெட்டப்பட்டதைப் போலத் தோன்றியது. அவளது உடைக்கும், தோலுக்குமிடையே எந்தவொரு வித்தியாசமும் இருக்கவில்லை.

இசை நின்றதும் நான் எனது ஆசனத்துக்குத் திரும்பிச் சென்றேன். அவள் தனது தோழிகளிடம் என்னைப் பற்றி ஏதோ கூறினாள். அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் சிரிக்கும் ஓசை எனக்குக் கேட்டது. அப் பெண்கள் நகரத்திலிருக்கும் விலைமாதுக்கள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

‘நான் நடனமாடினால் உஷ்ணமாகி விடுவேன் என்றுதான் டுயாமி என்னிடம் கூறியிருந்தான். ஆனால் இப்போது நான் முன்பை விடவும் குளிர்ந்து போயிருக்கிறேன். சரியாகச் சொன்னால் யாரோ என் மீது குளிர் நீரைக் கொட்டியது போல. அப் பெண்களைப் பற்றிச் சிந்திக்கையில் நான் அறுவெறுப்பாக உணர்கிறேன். அவர்களுக்கு வீடு வாசல் இல்லையா?’ என என்னை நானே கேட்டுக் கொண்டேன். அவர்களது தாய்மாருக்கு அவர்களைப் பிடிக்கவில்லையா? ஆண்டவனே… நாங்கள் சொற்ப உணவுகளை வாங்குவதற்குக் கூட மிகவும் பாடுபட்டு வேலை செய்கிறோம். ஆனால் இவர்கள் எந்த வேலையும் செய்வதில்லை.

காணாமல் போயிருக்கும் எனது சகோதரியைக் குறித்து சிந்திக்கும்போது நான் சிறிது மகிழ்வாக உணர்ந்தேன். அவளை நான் சந்திக்கவில்லை. ஆனால் அவள் கௌரவமான ஒருவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக இருக்கக் கூடுமென்பதில் சந்தேகமில்லை என எனக்குத் தோன்றியது.

இசைக் குழு மீண்டும் இசைக்கத் தொடங்கியது. நான் அப் பெண்களின் மேசையருகே சென்று மீண்டுமொரு முறை என்னுடன் நடனமாட வரும்படி அதே பழைய யுவதியிடம் அழைப்பு விடுத்தேன். ஆனால் அவள் அப்போது வேறொரு இளைஞனுடன் இருந்தாள். எனவே அங்கு அமர்ந்திருந்த ஏனைய இரு பெண்களிலொருத்தியிடம் நான் கேட்டேன். அவள் என்னுடன் நடனமாட வந்தாள். நாம் ஆடிக் கொண்டிருக்கும்போது அவள் என்னிடம் நான் கிராமத்தவனா எனக் கேட்டாள். நான் ஆமென்று பதிலளித்தேன். அதன்பிறகு நாம் கதைக்கவில்லை.

 

இசை நிறுத்தப்பட்டது. பொருட்களை விற்பனை செய்யும் இடத்துக்கு தன்னுடன் வந்து தனக்கு சிகரெட்டும், பீரும் வாங்கித் தரும்படி என்னோடு இருந்த அந்தப் பெண் என்னிடம் வேண்டி நின்றாள். அதன் பிறகு பளிச்சிடும் மின்சார வெளிச்சமிருந்த இடத்துக்கு வந்தோம். எனக்கு அவளது முகத்தைப் பார்க்கத் தோன்றியது.  ஏதோவொரு காரணத்தினால் எனது இதயம் அதிர்ந்துபோனது.

‘மதிப்பிற்குரிய பெண்ணே.. உங்களது தொழில் என்ன?’ என்று நான் அவளிடம் கேட்டேன்.

‘ஐயா தெரிந்து கொள்ள விரும்புவது எந்தத் தொழிலைப் பற்றி?’ என அவள் என்னிடம் கேட்டாள்.

‘என்ன வேலை செய்கிறீர்கள் என்பதைப் பற்றி?’ நான் மீண்டும் அவளிடம் வினவினேன்.

‘என்னிடம் கேள்வி கேட்க நீ யார்? எந்தவொரு வேலையுமே தொழிலொன்றுதான் என நான் நினைக்கிறேன். நீயொரு நாட்டான். முற்றுமுழுதான நாட்டான். நீ யார் அதைக் கேட்க?’ என அவள் குரலெழுப்பி சத்தமிட்டாள்.

நான் பயந்துபோனேன். சுற்றியிருந்தவர்கள் எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவளை அமைதிப்படுத்த வேண்டி நான் அவளது தோளின் மீது கையை வைத்தேன். அவள் எனது கையைத் தட்டி விட்டாள்.

‘மன்ஸா… மன்ஸா உனக்கு என்னைத் தெரியவில்லையா?’ என நான் கேட்டேன். அவள் நெடுநேரம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சிரிக்கத் தொடங்கினாள். அவளது சிரிப்பு வயிற்றிலிருந்து பூரித்து  வருமொன்றாக இருக்கவில்லை. அவள் பசியிலிருக்கும் சந்தர்ப்பத்தில் சிரிப்பதைப் போன்று வாடிப் போய் சிரித்தாள்.

‘நீ எனது சகோதரனென நான் நினைக்கிறேன்’ என்று கூறினாள்.

‘ஹ்ம்ம்’

ஓ! எனது பாட்டி, எனது அத்தை, ஓ! எனது சின்னத் தங்கையே… நீங்கள் எல்லோருமே அழுகிறீர்களா? காணாமல் போன சிறுமியொருத்தியைத் தேடிக் கூட்டி வருவதற்காகவே நீங்கள் எல்லோரும் என்னை அனுப்பி வைத்தீர்கள். அச் சிறுமி இப்பொழுது பெண்ணொருத்தி. எனக்குக் குடிக்க ஏதாவது கொடுங்கள்.

எந்தவொரு வேலையுமே ஒரு தொழில்தான். மன்ஸா அப்படித்தான் கூறினாள். வரண்டு போன இரத்தச் சொட்டு போன்ற வாயால் அப்படித்தான் சொன்னாள். எந்தவொரு வேலையுமே ஒரு தொழில்தான். அழாதீர்கள். அடுத்த நத்தாருக்கு அவள் வீட்டுக்கு வருவாள்.

‘சகோதரனே… எனக்கு இன்னும் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். எந்தவொரு வேலையுமே ஒரு தொழில்தான்…தொழில்… தொழில்…’ “

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்-இலங்கை 

எம்.ரிஷான் ஷெரீப்

0000000000000000000000000000000000000

அமா அடா ஐடூ -Ama Ata Aidooபற்றிய குறிப்பு :

எம்.ரிஷான் ஷெரீப் எம்.ரிஷான் ஷெரீப்

ஆபிரிக்கப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான அமா அடா ஐடூ, 1940 களில் கானா குடியரசிலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தைதான் அக் கிராமத்தில் முதன்முதலாக ஒரு பள்ளிக் கூடத்தை ஆரம்பித்தவர். அத்தோடு அமா அடா ஐடூவையும் கல்வி கற்க ஊக்குவித்தார்.

தனது பதினைந்து வயதினிலேயே ஒரு பெண் எழுத்தாளராக வர வேண்டுமெனக் கனவு கண்ட அமாவின் கனவு, தொடர்ந்து வந்த நான்கு வருடங்களில் செய்திப் பத்திரிகையொன்று நடத்திய சிறுகதைப் போட்டியில் அவர் முதல் பரிசினை வென்றதோடு பலித்தது.

தொடர்ந்து கானா பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து அங்கேயே பேராசிரியரானார். 1964 தனது முதலாவது ஆவணத் திரைப்படத்தை வெளியிட்டார்.

சிறுகதைகள், கவிதைகள், நாடகப் பிரதிகள் எனப் பல தொகுப்புக்களை இவர் வெளியிட்டுள்ளதோடு, சிறந்த நூலிற்கான ‘பொதுநலவாய எழுத்தாளருக்கான விருது’ உள்ளிட்ட  பல விருதுகளை இலக்கியப் படைப்புக்களுக்காக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1982 ஆம் ஆண்டு ஜனவரியில் கானாவுக்கான கல்வியமைச்சராக நியமிக்கப்பட்டதோடு கானா முழுவதற்குமாக இலவசக் கல்வியை வழங்க முயற்சித்தார். 18 மாதங்களாகப் பாடுபட்டும் அதை செயற்படுத்த இயலாமல் போனமையால் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து முழு நேர எழுத்தாளராக மாறி ஸிம்பாப்வே, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பயணித்து வருகிறார்.

(Visited 57 times, 1 visits today)