மழை மேகக் கடவுளுக்காக-தென்னாபிரிக்க நாட்டுச் சிறுகதை- பெஸீ ஹெட்-தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்மக்கள் விவசாயம் செய்வதற்காகச் செல்லும் பயிர்நிலம் பாழடைந்து போயிருந்தது. காட்டின் பெரும்பகுதியை சுத்தப்படுத்தி அப்பயிர்நிலம் தயார் செய்யப்பட்டிருந்தது. அடர் வனாந்தரமும் பாழடைந்து போயிருந்தது. எல்லாப் பயிர்நிலங்களும் கிராமத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே அமைந்திருந்தன. காட்டின் சிலபகுதிகளில் நிலத்தையொட்டியே தண்ணீரைக் காணக் கிடைத்தது. அவ்வாறான இடங்களில் ஆழமற்ற கிணறுகளைத் தோண்டிய மக்கள் விவசாய நிலங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக ஓய்வு ஸ்தலங்களையும் கட்டினர்.

கிராமத்துக்கு வெளியே சென்றவர்கள் பலவிதமான அனுபவங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. முன்பு நீரையண்டிய நிழல் பூமியில் நன்கு செழித்து வளர்ந்திருந்த புற்களின் மீதமர்ந்து அவர்களுக்கு ஓய்வெடுக்க முடிந்தது. பல நிறங்களிலாலான காட்டுப் பூக்களால் நிறைந்த கிளைகளைப் பரவ விட்டிருக்கும் மரங்களையும், மெல்லிய பச்சை நிறப் பாசிகளையும் காண்பதோடு, காட்டு விளாம்பழங்களையும், பருவ காலக் கொடிக் கற்றாழைகளைப் பறித்துக் கொள்வதன் மூலமும் சிறுவர்கள் குதூகலித்தனர்.

எனினும் 1958-ம் ஆண்டு ஏழாண்டுக் கால கோடை வந்தது. தண்ணீரிருந்த இடங்களெல்லாம் வரண்டு போய் சோபையிழந்து போயிற்று. விருட்சங்களில் இலைகள் சுருண்டு காய்ந்து போய் கிளைகள், தண்டுகள் மாத்திரமே எஞ்சியிருந்தன. கிளைகளும் இலைகளுமாய்ப் பரவியிருந்த மரங்களின் நிழலில் கறுப்பு வெள்ளைப் புழுதி உருவானது. மழையற்றுப் போனதே அதற்குக் காரணம். ஒருவர் மழையைச் சேகரித்துக் கொள்ள கோப்பையொன்றை ஏந்தினால் அவருக்கு தேக்கரண்டியளவையே சேகரித்துக் கொள்ள முடியுமென மக்கள் கேலியாகக் கதைத்துக் கொண்டனர்.

கோடையின் ஏழாவது ஆண்டின் இறுதியில் வந்த வேனிற்காலம் ஜீவிதங்களுக்கும் தேகங்களுக்கும் மிகுந்த வேதனையைக் கொண்டு வந்தது. வரண்ட ஈரப்பதனற்ற காற்றினால் தோல் வெந்துபோயிற்று. வெப்பக் காற்றின் கொடுமையிலிருந்து தப்பிச் செல்வது எங்கனமென எவரும் அறியவில்லை. அவ்வேனிற்கால முடிவில் ஊர்வாசிகளில் பலரும் தமது வீடுகளிலிருந்து வெளியேறிச் சென்று மரங்களில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

மக்களில் பெரும்பான்மையானோர் தானிய வகைகளைப் பயிரிட்டே வாழ்ந்து வந்தனர். இரண்டு வருடங்களாக விவசாயம் செய்ய முடியாமல் போனமையால், அவர்களது வீடுகளின் சமையல் பாத்திரங்களைத் தூரப் போட வேண்டியிருந்தது. மக்கள் தோல் போர்த்திய எலும்புக் கூடுகளாயினர். நாட்டு வைத்தியர்களும், மந்திரவாதிகளும், பேயோட்டுபவர்களும் இக் காலத்தில் நன்கு சம்பாதித்துக் கொண்டனர். ஏனெனில் மழையையும், விவசாயத்தை வளப்படுத்தவும் வேண்டி தாயத்துக்களையும், மருந்து மூலிகைகளையும் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் அவர்களிடம் போய்க் கொண்டே இருந்தனர்.

அந்த வருடத்திலும் மழை தாமதித்தது. பாரிய மழை வீழ்ச்சி நிகழுமென சகுன சாஸ்திரத்தில் கூறப்பட்டது போல நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் மழை பெய்தது. ஆனால் அம் மழை அடைமழையல்ல. சாதாரண தூறல் மழையாகவே இருந்தது. அம் மழையின் காரணமாக நிலம் மிருதுவானதோடு விதைப்புக்குப் பொருத்தமானதாக ஆனது. மிருகங்கள் உணவாகக் கொள்ளும் பச்சை நிற சிறு செடிகள் எல்லா இடங்களிலும் தளைத்து நின்றன. விதைப்பதற்கான காலம் வந்திருப்பதை அறிவிப்பதற்காக கிராம மக்கள் ஒன்று திரட்டப்பட்டனர். உற்சாகத்துக்கும், மகிழ்ச்சிக்கும் ஆளான மக்கள் குடும்பத்தோடு விவசாய நிலம் செல்லத் தயாரானார்கள்.

முதியவரான மொக்கொப்ஜாவின் குடும்பம் முதலாவதாக விவசாய நிலம் நோக்கிச் சென்ற குடும்பங்களில் ஒன்று. அவர்களிடம் மாட்டு வண்டியொன்று இருந்ததால் எல்லாப் பொருட்களும் அதில் ஏற்றப்பட்டன. எழுபது வயதைக் கடக்கும் மொக்கொப்ஜாவும், நியோ, பெஸியன்கோ எனப் பெயரிடப்பட்டிருந்த சிறுமிகள் இருவரும், அவர்களது தாயான டீரோவும், அவளது திருமணமாகாத சகோதரி நெஸ்டாவும், தந்தையும், குடும்பத் தலைவருமான ரமாடியும் இப் பயணத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

மழை தந்த எதிர்பார்ப்புக்களோடு ரமாடியும், அவருடன் வந்த பெண்களிருவரும் முட்புதர்களையகற்றி, பெரியதொரு இடத்தைத் துப்புரவாக்கித் தமது பயிர்நிலத்தைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள். பாலைப் பெற்றுக் கொள்வதற்காக தாம் கூட்டி வந்திருந்த ஆடுகளைப் பாதுகாப்பதற்காக பயிர்நிலத்தைச் சூழவும் முட்புதர் வேலியொன்றையும் அமைத்துக் கொண்டார்கள். பழைய கிணற்றின் சேற்று நீரை இறைத்துத் தூய்மைப்படுத்தி கிணற்றை ஆழப்படுத்தினார்கள். எருதுகளிரண்டைப் பெற்றுக் கொண்ட ரமாடி, நிலத்தின் மண்ணைப் புரட்டி பயிர் செய்வதற்காகத் தயார்ப்படுத்தினார்.

அறுவடையை எதிர்பார்த்து நிலம் தயார்படுத்தப்பட்டது. இரவு நேரத்தில் பூமி விழிப்போடு இருந்ததோடு, உணவு தேடிப் பாடியபடி அலையும் பூச்சிகளுக்கும் குறைவிருக்கவில்லை.

எனினும் திடீரென ஆகாயத்தை நிர்வாணப்படுத்தி விட்டு, நவம்பர் மாத மழை மேகங்கள் காணாமல் போயின. சூரியன் வினோதமான கொடூரத்தைக் காட்டியபடி வானத்தில் நிலைத்திருந்தது. நிலத்திலிருந்த  கடைசிச் சொட்டு ஈரத்தையும் சூரியக் கீற்றுகள் உறிஞ்சிக் கொண்டதால் பூமியானது புழுதி மேகங்களால் மூடப்பட்டிருந்தது.

மொக்கொப்ஜாவின் குடும்பம் கவலையோடும், எதிர்பார்ப்போடும் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களது எதிர்பார்ப்பு உயர் மட்டத்திலிருந்தது. பாலைப் பெற்றுக் கொள்ளும்போது தமது உணவிற்கு ஆட்டுப் பாலை ஊற்றிச் சாப்பிட அவர்கள் ஆசையோடு பார்த்திருந்தனர். இப்பொழுது அவர்களுக்கு பாலேயில்லாத களியைச் சாப்பிட வேண்டியிருந்தது. சோளம், பூசணி, தர்பூசணி, தானியங்கள் போன்றன எல்லாமும் வரண்ட நிலத்தில் எவ்வாறு முளைக்கும்? மழை போய்விட்டதனால் அவர்கள் யோசித்துக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு, குடிசைக்கு முன்பிருந்த நிழலில் நாள் முழுவதும் அமர்ந்திருந்தனர்.

எனினும் சிறுமிகளான நியோவும் பெஸியங்கோவும் மாத்திரம் தமது சிறுவர் பராயத்தை ஏனைய சிறுவர்களோடு மகிழ்ச்சியாகக் கழித்தனர். தமது தாய்மாரைப் பின்பற்றி, சிறிய குடும்பத் தலைவிகளாக விளையாடியவர்கள் ஒருவரோடொருவர் இரகசியமாகக் கதைத்துக் கொண்டனர். குச்சிகளில், கந்தைத் துணிகளைச் சுற்றிச் செய்த பொம்மைகளுக்கு, தாய்மார் தமக்கு ஏசுவதைப் போல ஏசியபடி, குச்சியால் அடித்தார்கள். அவர்கள் அவ்வாறு ஏசும் சப்தத்தை நாள் முழுவதும் கேட்க முடிந்தது.

‘நீங்க சொல்பேச்சுக் கேட்காத பிள்ளைகள். நான் உங்களுக்கு தண்ணீர் கொண்டு வரத் தந்தால், வழியில் தண்ணீர் வாளியில் பாதியைக் கொட்டிட்டீங்க’

‘நீங்க சொல்பேச்சுக் கேட்காத பிள்ளைகள். ரொட்டி சுட்டு முடியும் வரைக்கும் உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க ஏலாதா?’ எனக் கேட்டபடி கந்தைகளால் செய்யப்பட்டிருந்த அப் பொம்மைகளுக்கு குச்சியால் அடித்தனர்.

பெரியவர்கள் இவ் விளையாட்டில் தமது கவனத்தைச் செலுத்தவில்லை. அவர்கள் மழையை வேண்டிப் பார்த்திருந்தனர். அதை விட வேறெதுவும் முக்கியமல்ல. கடந்து சென்ற துரதிர்ஷ்டமான வருடங்களில் அவர்கள் தம்மிடமிருந்த அனைத்து விலங்குகளையும் விற்ரிருந்தார்கள். இப்போது அவர்களிடம் மீதமிருப்பது ஆடுகளிரண்டு மாத்திரமே.

இறுதியில் வயதான மொக்கொப்ஜாவின் மனதில் பழைய ஞாபகமொன்று உதித்தது. தனது யௌவனக் காலத்தில் தனது மூதாதையர் பின்பற்றிய சடங்கொன்று நினைவில் வந்தது. மழையைப் பெற்றுக் கொள்ளும் விழாவொன்றில் பங்குகொண்ட சாட்சியாளனாக இருக்கும் அதிர்ஷ்டம் அவனுக்கும் வாய்த்திருந்தது. கிறிஸ்துவப் பள்ளிகளுக்கு பிரார்த்திக்கப் போவதால் மறந்திருந்த, காலத்தால் மூடப்பட்டிருந்த, அப் பழைய ஞாபகக் குறிப்புகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு ஓரளவு நினைவு வந்ததுமே அவர் தனது இளைய மகனான ரமாடியிடம் அதனைத் தெரிவித்து அவனது எண்ணத்தைக் கேட்டார்.

குழந்தைகளின் உடல்களை மாத்திரம் ஏற்றுக் கொள்ளும் ஒரு வகையான மழை மேகக் கடவுளைப் பற்றி அம் முதியவர் குறிப்பிட்டார். அப்போதுதான் மழை நன்றாகப் பெய்து பூமி வளம் பெறும். அதைத் தெரிவிக்கும்போது அவரது ஞாபகங்கள் மீண்டும் மீண்டும் புதிப்பிக்கப்பட்டு, அவர் மிகுந்த பொறுப்புணர்வோடும் நம்பிக்கையோடும் அச்சடங்கு சம்பிரதாயங்கள் குறித்து விபரமாக விளக்கினார்.

தொடர்ந்து ஆண்களிருவரும், பெண்களிருவரையும் அழைத்தனர். பெண்களின் ஓலத்தினால் ரமாடியின் உடல் அதிர்ந்தது. சுற்றியிருந்த சிறுவர்கள் தொடர்ந்தும் விளையாடிக் கொண்டேயிருந்தனர்.

‘நீங்க சொல்பேச்சுக் கேட்காத பிள்ளைகள். கடைக்குப் போகும்போது நீங்கள் காசைத் தொலைத்தது எப்படி? நீங்கள் திரும்ப ஆடத் தொடங்கியிருக்க வேணும்’

அனைத்தும் நிறைவுற்றதன் பிற்பாடு, சிறுமியர் இருவரதும் உடல் பாகங்கள் விவசாய நிலம் முழுவதும் விசிறப்பட்டன. எனினும் மழை பெய்யவில்லை. அதற்குப் பதிலாக இரவானது, அச்சம் தரக் கூடிய அமைதியைக் கொண்டிருந்தது. சூரியனின் வெப்பம் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. பீதி முழுக் குடும்பத்தையும் ஆட்கொண்டது. அவர்கள் தமது மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு மீண்டும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர்.

மழையை எதிர்பார்த்து மிகுந்த துயரத்தோடு காத்திருந்த பெண்கள் இறுதியில் தோல்வியைத் தழுவினர். உண்மையில் சிறுமிகள் இருவரினதும் மரணத்துக்கு இப் பெண்கள்தான் காரணமென எண்ணி, ஒவ்வொரு இரவிலும் அவர்களது மெதுவான குரலிலான முனகல் ஒலி படிப்படியாக அழுகையாகி அமைதியடைந்து பிறகு மயக்கம் வரை வளர்ந்தது. ஆண்கள் மௌனமாக, தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு இருப்பது முக்கியமானது. ஏற்கெனவே அவர்களது எதிர்பார்ப்புகள் சிதைந்து போயிருந்தன. வரும் வருடத்தில் எதிர் கொள்ளப் போகும் பட்டினி, ஏனைய பெண்களையும் விழுங்கி விடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

கிராமவாசிகள் சிறுமியர் இருவரும் காணாமல் போயிருப்பது குறித்து விரைவில் அறிந்து கொண்டனர். அவர்கள் விவசாய பூமியில் வைத்துக் காலமானதாகவும், சடலங்களை அங்கேயே புதைத்து விட்டு வந்ததாகவும் குடும்பத்தினர் கூறி வந்தனர். எனினும் அவர்களது சோபையிழந்த முகங்களுக்குள் மறைந்திருந்த பீதியை மக்கள் உணர்ந்துகொண்டனர். சிறுமிகளின் மரணத்துக்குக் காரணமானது எது? அவர்களுக்குத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் வெறுமனே செத்துப் போயினர் என்பதே குடும்பத்தினரது பதிலாக இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு மரணங்கள் நிகழ்வது அபூர்வமான விடயமெனக் கருதிய மக்கள் ஒருவரோடொருவர் அதைப் பற்றிக் கதைத்துக் கொண்டனர்.

பிறகு போலிஸ் வந்தது. குடும்பத்தினர், மரணங்கள் பற்றிய பழைய பல்லவியையே கூறிக் கொண்டிருந்தனர். சிறுமிகள் இறந்தது எதனால் எனக் கூற அவர்களால் இயலவில்லை. புதைகுழிகளைக் காட்டும்படி போலிஸ் அவர்களுக்குக் கட்டளையிட்டது. தொடர்ந்து சிறுமிகளின் தாய் அழுது புலம்பியபடி அனைத்தையும் விவரித்தாள்.

பயங்கரமான வேனிற்காலம் முழுவதும் சிறுமிகள் பற்றிய கதையானது, துயரக் கருமேகம் போல ஊருக்கு மேலாகப் பரவியிருந்தது. மதச் சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதற்காக, கொலை செய்திருப்பது சம்பந்தமாக ரமாடிக்கும் முதியவருக்கும் எதிராக மரணதண்டனை விதிக்கப்பட்ட போதிலும் மக்களுக்குள்ளிருந்த கவலை அடங்கவில்லை. சட்டப் புத்தகங்களுக்கேற்ப இக் கொலைகள் சட்டவிரோதமானவை என்பதோடு அதற்கான தண்டனை மரணமாக இருந்தது. வறுமையும், பட்டினியும், ஏமாற்றங்களும் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாட்சிகள் அல்ல.

மொக்கொப்ஜாவின் குடும்பத்துக்கு விதிக்கப்பட்டிருந்த விதியிலிருந்து தாம் மிகவும் இறுதிக் கட்டத்தில் தப்பித்துக் கொண்டோம் என்பது, விவசாயம் செய்ய வழியற்று கையாலாகாத நிலையிலிருந்த மக்கள் அனேகரது உள்ளங்களிலிருந்த எண்ணமாக இருந்தது. மழையைப் பெற்றுக் கொள்வதற்காக எவரையும் கொலை செய்வதென்பது அவர்களது கையாலும் நிகழ்ந்து விட அதிகம் வாய்ப்பிருந்தது.

0000000000000000000000000

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு : 

எம்.ரிஷான் ஷெரீப்

பெஸீ ஹெட் Bessie Head

தென்னாபிரிக்க பெண் எழுத்தாளரான பெஸீ ஹெட் 1937 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஆறாம் திகதி பிறந்தவர். விருதுகள் பல பெற்ற பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ள இவர் இன்றும் கூட ஆளுமை மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

1950 களின் பின்னர் ஆசிரியையாகவும், ‘ட்ரம்’ எனும் சஞ்சிகையில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய இவர், அரசியல் நிலவரங்களின் காரணமாக 1964 ஆம் ஆண்டு பொஸ்த்வானாவிற்கு(Botswana) ஒரு அகதியாக புலம்பெயர்ந்தார். அங்கு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி காலமான பெஸீ ஹெட்டின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பான ‘The Collector of Treasures’ எனும் தொகுப்பிலுள்ள சிறுகதை இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எம்.ரிஷான் ஷெரீப்-இலங்கை 

ரிஷான் ஷெரீப்

 

(Visited 109 times, 1 visits today)