அவாவும் மனிதன்-சிறுகதை-திருக்கோவில் கவியுகன்

திருக்கோவில் கவியுகன்கடைசியில் அவன் மனம் அவாவியிருந்த இடத்திற்கே அவன் வந்து சேர்ந்திருந்தான். கடைசி ஆடையையும் கழட்டி எறிந்து விட்டு வெறிகொண்டவன் போல் இந்த வேம்பை நோக்கி ஓடிக்கொண்டிருந்ததை அந்தப்பொட்டல் வெளியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் அதிசயமாகப் பார்த்தார்கள். அவன் ஓட்டத்தின் வேகமும் முகத்தில் தெரித்துக்கொண்டிருந்த ரௌத்திரமும் யாரையும் அவனிடம் அண்டுவதற்கான தைரியத்தைக் கொடுக்கவில்லை.

கழுத்தின் பின் சூரியன் சுட்டெரிக்க நிமிர்ந்து சூரியனை நேருக்கு நேர் முறைத்துப் பார்த்தான். சத்தியமாய் நம்புங்கள், சூரியன் இடம் மாறியது. சூரியன் இடம் மாற மாற அவனது பார்வையும் அதனைத்துரத்தியது.

உச்சி வெய்யிலை இமைகளைச் சற்றேனும் மூடாது சூரியனை நேருக்கு நேர் முறைத்துப்பார்க்கும் மனிதனொருவனை அதுவரை கண்டிராத சிறுவர்கள் இன்னமுமாய்ப் பயந்து போனார்கள்.

காற்று மௌனித்துக் கிடந்தது. ஒற்றை வேப்பமரத்தை அவன் சென்றடையும் மட்டும் அசையாத இலைகள், அவன் வந்ததுமே தென்றல் தாலாட்டுவதாய் மெதுவாக அசையத்தொடங்கின. வேம்பின் அடிமரத்தில் முதுகை சாய்ந்தபடிக்கு காலை நீட்டியவாறு அமர்ந்து கொண்டான்.

அயலெங்கும் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களெல்லாம் அவனை ஒரு வட்ட வடிவிலே சுழத்தொடங்கின. எங்கிருந்தோ பறந்துவந்த எட்டுக்காகங்கள் எண்கோண வடிவிலே எல்லை எடுத்து எச்சமிட்டு அவனைக்காவல் புரியத்தொடங்கின. பசுக்களின் கண்களினூடே அவனது வெற்றுடம்பை எட்டிப்பார்ப்பதாய் எண்ணத்தலைப்பட் டான்.

தான் கடவுளின் பிறதிருப்பங்களில் ஒன்று என்பது போலவும், தான் மேற்கொள்ளப்போகும் தவத்தின் பயனால்  கிடைக்கும் பேறுகளைக்கொண்டு நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை முடிக்க முடியும் என்று அவன் உள் மனம் தீவிரமாய் நம்பத்தொடங்கிற்று. குறைந்த பட்சம் காண்டீபத்துக்கு இணையான ஒரு அஸ்திரத்தையாவது பெற்றுக்கொல்லாமல் திரும்புவதில்லை என மனம் இறையத்தொடங்கியது. அது கூட அவனின் கடைசித்தெரிவுதான். அவனது முதல் வேண்டுதல் மிகவும் விசித்திரமாய் இருந்தது.

சட்டென்று ஒரு நொடிக்குள் உலகில் படைக்கப்பட்ட அழிவு தரும் ஆயுதங்கள் அனைத்துமே செயலிழந்து போதல் வேண்டும். இயற்கையின் எல்லைக்குள் அத்துமீறி அதன் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய விஞ்ஞானம் யாவருக்கும் மறந்து போகவேண்டும். இரவைப்பகலாக்கும் எந்த முயற்சியிலும் இறங்காது கனியைப் புசித்து வாழ்ந்த கற்காலத்திற்கே உலகம் திரும்ப வேண்டும். பேரமைதியொன்று மனங்கள் யாவற்றிலும் மண்டியிட பூவொன்று கசக்கப்படுதலைக் காணப் பொறுக்கா நெஞ்சுள் கொண்ட மானுடம் வேண்டும். இந்த வேண்டுதல்களை ஈடேற்றுவதில் கடவுளர்க்கு சிக்கல்கள் உருவாகுமாயின் கடைசி வேண்டுதலாய் காண்டீபத்திற்கு இணையான அஸ்திரம் வேண்டும்.

இந்த நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டே மோனத்தவத்தில் ஆழ்ந்து போக மேற்குத் திசை பார்த்து இந்த ஒற்றை மரத்தைத் தேடி வந்திருந்தான்.

“நடந்தால் இரண்டடி

இருந்தால் நான்கடி

படுத்தால் ஆறடி போதும்

அந்த வானமும் இந்தப் பூமியும்

அது எல்லார்க்கும் சொந்தம்

சொல்லடி ஞானப்பெண்ணே-வந்து

சொல்லடி ஞானப்பெண்ணே……..”

சில நாட்களாகவே அவன் காதிற்குள் மெல்லிய ஒலியில் பாடும் இந்தக் குரல் மீண்டும் பாடத்தொடங்கியது. கைகள் வையிற்றைத் தாமாகவே தடவின. கடைசியாக எப்போது சாப்பிட்டான் என்று தெரியவில்லை. எங்கே என்பதுவும்? கடைசி இரவை திராய்க்கேணி கிராமத்தில் ஒரு குடிசை வீட்டின் வெளித்தாவாரத்தில் அங்கும் ஒரு வேப்பையின் கீழ் கணம் கூட கண் மூடாது கடத்தியிருந்தான்.

முதல் நாள் காலை வரைக்கும் அவனுடன் அழைத்துத்திரிந்த அவனுடைய செல்ல மகன் நிலாவை யாரோ அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போனதன் பின் செருப்பிலாத காலுடன் கடற்கரை வழியே வடக்குத்திசை நோக்கிப்  பயணத்தைத்  தொடங்கியிருந்தான். அக்கரைப்பற்று அதிரடிப்படை முகாமை அடுத்ததாக இருந்த இடுகாட்டின்னூடு கிழக்கு நோக்கிச் சென்று கடற்கரையை அடைந்து, அங்கிருந்து வடக்கு நோக்கி நடக்கத் தொடங்கினான். தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் போரில் மடிந்து போன ஒவ்வொருத்தராய் எழுந்து வருவதாய் ஒரு தோற்றம் அவனுக்குள்ளே. இறுதியாய் உயிரை விட்டவன் கூட எழுந்து வரும் வரைக்கும் பயணத்தை நிறுத்தப்போவதில்லையென மனம் உறுதிக் கொண்டிருந்தது. தென்னைகள் நிறைந்த தோப்பொன்றினூடு செல்கையில் மேற்சட்டையை கழற்றி வீசிஎறிந்தான். அங்கே மீன் வாடிகளில் வலை பின்னிக் கொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து ஒருதரம் அவனைப்பார்த்து விட்டுப் பின் தத்தம் வேலைகளில் மூழ்கிப் போனார்கள். அவர்கள் தம் வாழ்வின் அனுபவத்தில் இது போன்ற பலரைக் கண்டிருத்தல் கூடும்.

நன்நீர் கடலோடு கலக்கும் சின்னச் சின்ன முகத்துவாரங்கள் அவ்வப்போது அவன் பாதையில் குறிக்கிட்டன. ஆழத்தைப் பொருட்படுத்தவில்லை. அகலத்தைப் பொருட்படுத்தவில்லை. தண்ணீரின் மீது நடந்தான். ஆம் நம்புங்கள், தண்ணீரின் மீது நடந்தான். கால்களில் சிறு துளியும் ஈரம் படாமல் நடந்தான்.

பொழுது உச்சிக்கு வரும்பொழுது ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகில் வைத்து அவனது வளாகத்து நண்பன் ஹைதர் அலி அவனை அதிசயமாய்ப்  பார்த்தான். சேர்ட் இல்லாத மேனியுடன் தன் வளாகத்து நண்பன் ஒருவன் தன்னுடைய கிராமத்துக் கடற்கரைக்கு வந்து சேர்ந்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. லாவகமாக இவனுடன் பேச்சுக்கு கொடுத்தபடியே மத்திய பொழுதைக் கழித்து விட்டு மாலை படத்தொடங்கியதும் பயணத்தின் திசையை மேற்குப்பக்கம் திருப்பி நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்து விட்டு, மீண்டும் தெற்குத் திசையாய் செல்லுமாறு வழிகாட்டி விட்டுப் போனான். பொறியியல் படித்த தனது நண்பனுக்கு நேர்ந்த கதி குறித்து அவனது கண்கள் கசியத் தொடங்கின. அத்தகைய உணர்வு நிலைக்குள்ளும் அவன் எப்படி தன்னை அடையாளம் கண்டான் என்பது அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஹைதர் அவனுக்கு ஒரு முந்திரியம் பழத்தை உண்ணக் கொடுத்ததாய் அவனுக்கு மங்கலாய் ஒரு ஞாபகம். சில வேளை அது வேறு ஒரு பழமாய் இருத்தலும்  கூடும்.

அவன் திரும்பிக்கொண்டிருக்கையில் எதிர்ப்பட்ட மினிமுகாமொன்றிலிருந்து “அடோ …. அடோ ” என்று அவனை அதட்டும் தோணி கேட்கும் அவனுக்கு அது உறைத்ததாய் தெரியவில்லை. யாரோ அவனை அழைத்துச் செல்கிறார்கள் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. கண்ணுக்குப் புலப்படாத ஒருவரின் சக்திமிக்க உத்தரவிற்கமைய அவன் நகர்ந்து கொண்டிருந்தான்.

நெடுஞ்சாலையில் நேராய் நடந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, கிழக்குப்பக்கமாகத் திரும்பி திராய்கேணியை நோக்கிச் செல்லத்தொடங்கினான்.

திராய்கேணி என்பது, ஒலுவில் பாலமுனை என்ற முஸ்லீம் கிராமங்களுக்கிடையில் இருக்கும் தமிழ்க்கிராமம். சில நாட்களுக்கு முன் ஆயுதம் தரித்த சிலர் இரவு வேளைகளில் வந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்திச் சென்றிருந்தார்கள். அது தொடர்பாய் அவனும் அவனது இலக்கிய நண்பன் ரியாசும் அங்கு குடியிருப்பவர்களைப் பேட்டி கண்டு( அப்போது அவன் இயல்பாய் இருந்தான்) அதன்பின் அச்சம்பவம் தொடர்பாக, ” இந்தக்கிராமத்துக்கு என்ன பாதுகாப்பு”? என்னும் தலைப்பிலே சரிநிகர் பத்திரிகையில் ஒரு கட்டுரை கூட எழுதியிருந்தான்.

அன்று தகவல் தேடவும் இங்கனமாய் ஒரு கருக்கலுக்குச் சற்று முன்னர்தான் அவர்கள் சென்றிருந்தனர். அந்த அந்திக்கும் இந்த அந்திக்கும் இடையில் எத்தனை பெரிய மாற்றம்?

இந்தக்கோலத்திலும் அவனை இனங்கண்டு கொண்ட சிலர் அவனைச் சூழ்ந்து கொண்டு விசாரிக்கத் தொடங்கினார்கள்.

“உங்கட சேர்ட்டு எங்க?”

“உங்களுக்கு என்ன நடந்த?”

“நீங்கெல்லா அண்டைக்கு எங்கட வீட்ட வந்து கேள்வி கேட்ட?”

திசைக்கொன்றாய் கேள்விப்பந்துகள் அவனை நோக்கி எறியப்பட்டன. அவன் எதற்குமே பதிலறுக்கவில்லை. கடைசியில் அவனை வீடியோ கொட்டகைக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் உரிமையாளன், ஊரிலே எது குறித்தும் சிறப்பான ஒரு முடிவு எடுக்கும் ஒருவன் என பெயர் பெற்றிருந்தான். இரவினிலே அவனைத் தனியாக அனுப்புவது உசிதமானதல்ல என்பதாய் அவனது தீர்மானம் இருந்தது. கொட்டகைக்குப் பின்னிருந்த தன் வீட்டில் இருந்து ஒரு தட்டிலே மரவள்ளிக்கிழங்கு சொதியுடன் சோறு கொண்டு வந்து கொடுத்தான்.

“நான் மச்சம் சாப்பிடுவதில்லை.” என்கிறான்.

“இது மச்சமில்லை. வெறும் மய்யோரிகிழங்கு.”

“அதுதான் மச்சமென்றேன்.”

“மய்யோரி மச்சமா”? அவர்கள் குழம்பியபடி கேட்டார்கள். சிலர் கொடுப்புக்குள் சிரிக்கவும் செய்தார்கள். அடுத்து அவன் கேட்ட கேள்வியுடன் சிரிப்பலை அடங்கிப்போனது.

“மச்சம் என்றால் என்ன ?

“மச்சமென்றால் உயிரைக்கொன்று வரும் உணவு”. கூட்டத்தினுள்ளே கொஞ்சம் படித்தவள் போல் இருந்த பெண் பிள்ளை பதிலறுத்தாள்.

“தாவரங்களுக்கு உயிர் உண்டா? இல்லையா”? அந்தப்பிள்ளையையே திருப்பிக்கேட்டான்.

“நான் விஞ்ஞானத்தில் படித்ததன்படி தாவரங்களுக்கு உயிர் உண்டு”.

“மரத்தைப் பிடுங்காமலா கிழங்கை எடுக்கின்றார்கள்”? அவனது பதில் கேள்வியால் அவள் யோசிக்கத் தொடங்கினாள். ஒருவேளை அவனது வாதம் சரிதானோ என்று அவன் மனம் தடுமாறும் போது,

“ஐயர்மாரே அதை மரக்கறி எண்டுதானே சாப்பிடுறாங்க”! என்று  இன்னொரு இளைஞன் அவளைக் கடைக்கண்ணால் நோட்டம் விட்டபடி உதவிக்கு வந்தான்.

“அவர்கள் கிழங்கை மட்டுமல்ல கிரையைக் கூட மரக்கறி என்றுதான் சாப்பிடுகின்றார்கள்”.

“சரியாய்போச்சு. அப்ப கீரையும் மரக்கறி இல்லையோ? இன்னா பாருடி தெய்வானை, கீரையும் மச்சமாம்”! ஒருவிதபரிகாசத்துடன் ஒரு வயதான பெண் இழுத்து இழுத்துச் சொன்னாள். அதன்பின் அதுபற்றி அவன் எதுவும் பேசவில்லை. சாப்பாட்டைத் தவிர்த்திருந்தான். சனங்கள் எல்லாம் அவரவர்க்குத் தோன்றிய விதத்தில் ஒவ்வொன்றைக் கூறியபடிக்குத் தத்தம் இல்லம் நோக்கி ஏகத்தொடங்கினர். அவனைப் புதினம் பார்த்தலில் உள்ள சுவாரசியத்தைவிட உள்ளே ஓடிய சினிமா கொடுத்த சுவாரசியம் அதிகமாயிருக்க மீதியிருந்தவர்களும் கொட்டகைக்குள் நுழைய வெளித்தாவரத்தினிலே அவன் தனித்துப் போனான்.

இரவாகியது. ஐந்தாம் பிறையோ ஆறாம் பிறையோ தெரியவில்லை. நறுக்கிப் போட்ட நகத்துண்டு போல் நிலா எட்டிப்பார்தது. தன் செல்ல மகனே நிலாவில் தோன்றியிருப்பதாகத் தோன்றக் குந்தியிருந்து, “நிலா …….நிலா ” என விசும்பத் தொடங்கினான். நிஜமும் மாயையுமான இரு வேறு உலகங்களிற்கிடையே குருட்டு  வெளவாலாட்டம் அவன் மனது மோதி மோதி அலைக்கழித்து கொண்டிருந்தது. கண்ணீரைத் துடைத்து விட்டு அண்ணாந்து வானத்தைப்  பார்த்தான். நிலாவை மறைத்துக்கொண்டு கருமேகம் அசைந்தது. மெல்ல மெல்லக் கருமேகம் கையில் அம்பு சேனையுடன் போருக்குத் தயாரான கிருஷ்ணனாய் உருமாறத்தொடங்கியது. சின்ன வயதில் அவனது தந்தை காலில் சலங்கை கட்டி அருச்சுனனாய் ஆடிய கூத்து திடீரென்று நினைவுக்கு வர, ஒரு அலைபோல் அவன் தந்தை அவன் முன் நின்றார். இருள்வெளிக்குள் தீராப்பகையுடன் இறங்கி வரும் கண்ணனோடு யுத்தம் செய்………  யுத்தம் செய் என்பது போல் அவர் கண்ணசைவு உத்தரவிட்டது.

“கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வெல்லுமே

கத்தி இன்றி ரத்தமின்றி  யுத்தம் ஒன்று வெல்லுமே

கத்தி இன்றி ரத்தமின்றி கத்திக் கத்தி யுத்தம் ஒன்று வெல்லுமே………”

அதி உச்ச தொனியில் பாடிக்கொண்டும் அண்ணாந்து கைகளைக் காற்றில் அம்பு எய்வதைப்போல் பிடித்துக்கொண்டும் நிலம் அதிர அதிரக் கூத்தாடத் தொடங்கினான். கொட்டகைக்குள் சினிமா நிறுத்தப்பட்டது. வீட்டில் சாப்பிட்டிருந்தவர்கள் கூட சாப்பாட்டுத் தட்டுடன் கொடகை நோக்கி குழுமத் தொடங்கினர். ஆக்ரோசமான அவனின் ஆட்டம் கண்டு குழந்தைகள் பயந்தார்கள். பெரியவர்கள் கூட ஏதோ ஒன்றினால் கட்டுப்பட்டவர்கள் போல சிலையாகச் சமைந்தார்கள். யாரும் அவனுக்கு அருகில் வரவில்லை. தம்மை அவனுக்கு காட்தத் துணியவும் இல்லை. இருட்டில் இருந்து கண்களை அவனை நோக்கி எரிந்து விட்டு உறைந்து போய் நின்றார்கள். மின்விளக்கின் வெளிச்சத்தின் கீழ் அவன் மட்டுமே நின்றிருந்தான். ஆட்டம் தாளம் தப்பாது பாடலுக்கு ஏற்றது போல் நேர்த்தியாக இருந்தது. 29ஆவது வயதாகும் அவனுடைய வாழ்வில் அன்றைக்குப் போல் என்றுமே அவன் ஆடியதில்லை.

ஆடியவர் வெளிச்சத்தின் எல்லயைத் தாண்டி இருளின் எல்லைக்குள் பாய முற்பட்டதபோதெல்லாம் சக்தி மிக்க ஒரு கை அவனைப் பிடித்து இழுத்தது. தாயின் கெஞ்சல் குரல். யுத்தம் செய் யுத்தம் செய் என்று தந்தையின் அதட்டும் குரல். இன்னும் காதிற்குள் பல குரல்கள் இரையத் தொடங்கின.

கால்கள் தளர்வுற்று ஆட்டம் ஒய்வு நிலைக்கு வந்த போது திரும்பவும் மணலில் அமர்ந்து கொண்டு “நிலா …… நிலா…” என்று விம்மி விம்மி அழத்தொடங்கினான். சனங்களின் மனங்களும் உருகத் தொடங்கின. மாலையில் பரிகாசமாய் அவனை நோக்கியவர்கள் கூட இப்பொது அவனுக்காகக் கழிவிரக்கம் கொண்டார்கள். அவரவரை அறியாமலே கண்களைக் கண்ணீர் நிறைத்தது. துயர் மிகு திரைப்படத்தின் உச்சக் கட்டத்தில் அரங்கு முழுவதும் அழுதுவடிவது போல் இருளுக்குள் இருந்து கொண்டு அவனுக்காக அழுதார்கள்.

அவன் திரும்பவும் வானத்தை நிமிர்ந்து பார்த்தபோது மீண்டும் கரிய உருவம். அப்போதும் அது அவனுக்கு கிருஷ்ணராகவே தெரிந்தது. தனது மகன் நிலாவை மறைத்து வைத்துக் கொண்டு கிருஷ்ணரே தன்னுடன் மாய ஆட்டம் ஆடுவதாக எண்ணிக்கொண்டான். கிருஷ்ணருக்கும் அவனுக்கும் இடையில் எப்போது பகை மூண்டது என்பதும் அருச்சுனன் வேடமேற்று சலங்கை கட்டிய தன் தந்தையே கிருஷ்ணனுடன் ஏன் யுத்தம் செய்யச் சொல்கின்றார் என்பதும் புரியாத புதிராக இருந்தது. என்னதான் நேரினும் விடியும் வரை வேம்பின் எல்லையை விட்டுத் தாண்டுவதில்லை என்றும் எல்லை தாண்டாமலே இயலுமானவரை யுத்தம் புரிவதென்றும் தீர்மானித்துக் கொண்டான். எழுபத்தியிரு திசைகளிலும் மாறி மாறித் தோன்றியபடி கரிய உருவம் வில் ஏந்தியாவாறு இறங்குவதும் பின் உயர்வதுமாகப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தது. அவனும் பலங் கொண்ட மட்டும் கத்தியபடி வான் நோக்கி வில் ஏந்தும் தோரணையில் ஆடிக்கொண்டிருந்தான். கொட்டாவி குறிப்புணர்ந்த சனங்கள் ஒவ்வொருவராய் நழுவிக் கொண்டிருந்தார்கள். இரவு முழுவதும் இயற்கை உபாதையினாலோ அன்றேல் வேறு ஏதும் தேவையின் பொருட்டோ அவர்கள் யாரேனும் கண் விழிக்கும்போதெல்லாம் உரத்த சத்தத்தில் அவனது பாடலோ அல்லது அவனிடமிருந்து “நிலா ….. நிலா” என்று ஒரு கேவலோ கேட்டுக்கொண்டேயிருந்தது.

அதன் பின்பு அவனுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கின்றீர்களா? சில நாட்களின் பின் ஆறுமுகத்தான் குடியிருப்பு என்ற கிராமத்தில் இருக்கும் முரட்டுப்பூசாரி ஒருவரின் உதவியோடு அவன் குரல்வளை நெரித்து அவனை நானே கொலை செய்திருந்தேன்.

திருக்கோவில் கவியுகன்- இலங்கை 

திருக்கோவில் கவியுகன்

(Visited 49 times, 1 visits today)