சுய மதிப்பீடு-கட்டுரை-பவானி தம்பிராஜா

பவானி தம்பிராஜா

சுய நம்பிக்கையானது ஒரு சொத்து மற்றும் ஆளுமைத் தன்மையுடையது, இது முக்கியமாக,  திறன்கள் மற்றும் திறன்களின் நேர்மறையான மதிப்பீடு ஆகும். வெற்றிகரமாக கடினமான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவதன் மூலம் தன்னம்பிக்கை உணர்வு ஊக்குவிக்கப்படுகிறது. நம்மைப் பற்றியும் நம் திறமை பற்றியும் நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதுதான் தன் மதிப்பீடு (Self evaluation). இதற்கு முக்கியமானது நம்மைப் பற்றி நமக்கிருக்கும் அபிப்பிராயம். நம்மைப் பற்றிய நம் மதிப்பீடு நம் சுற்றத்தின் அபிப்பிராயத்தைச் சார்ந்தோ சொத்து மதிப்பைச் சார்ந்தோ கல்வித் திறனைச் சார்ந்தோ இருக்கக் கூடாது.

அது நம் உள்மனதைச் சார்ந்த நம் குணத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். இந்தத் தன்மதிப்பு உயர்வானதாகவோ குறைவானதாகவோ இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலேயோ இருக்கலாம். ஆனால், அது எந்த நிலையில் இருந்தாலும் நம் வாழ்வில் அது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியது.

நம்முடைய தன்மதிப்பு குறைவானதாக இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம். தனிமை, பிறரால் கட்டுப்படுத்தப்படுதல், படிப்பில் குறைந்த மதிப்பெண் பெறுதல், ஒதுக்கப்படுதல், நிந்திக்கப்படுதல், வேலைவாய்ப்பின்மை ஆகியவை தன்மதிப்புக் குறைபாட்டுக்குப் பொதுவான காரணிகளாக இருக்கலாம்.

சில நேரத்தில், அதற்கான காரணத்தை அறிவது கடினமாகவும் இருக்கலாம். ஆனால், நமக்கு அதற்கான காரணங்கள் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்தத் தன்மதிப்பை மேம்படுத்துவதற்குப் பல எளிய வழிமுறைகள் உள்ளன.

விழிப்புடன் இருத்தல்

எதை மாற்ற வேண்டும் என்பதைக் கண்டு உணராதவரை நம்மால் அதை மாற்ற முடியாது. நம்மைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான எண்ணங்களை வெறுமனே உணர்வதே நமக்குப் போதுமானது. அந்த உணர்வால் நாம் அந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகிச் செல்ல ஆரம்பிப்போம். நம்மை அந்த எண்ணங்களுடன் அடையாளப்படுத்துவதையும் குறைத்துக்கொள்வோம். இந்தப் புரிதல் இல்லையென்றால், அந்த எதிர்மறை எண்ணங்கள் விரிக்கும் வலையில் சிக்கி நம் தன் மதிப்பைத் தாழ்த்திக்கொள்வோம்.

நமக்குத் தோன்றும் எண்ணங்கள் அனைத்தையும் நாம் நம்பத் தேவை இல்லை. ஏனென்றால், எண்ணங்கள் என்பவை வெறும் எண்ணங்கள், அவ்வளவுதான். நம்மை நாமே கடுமையாக விமர்சிப்பது தெரிய வந்தவுடன் என்ன நடக்கிறது என்பதை கவனமாக, மிகுந்த ஆர்வத்துடன் குறித்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அதற்குப் பின்னர், இவை எல்லாம் வெறும் எண்ணங்கள்தான். இவை எதுவும் உண்மை அல்ல என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.

கதையை மாற்றுதல்

நம் அனைவருக்குமே நம்மைப் பற்றி ஒரு கதை இருக்கும். அந்தக் கதைதான் நமது சுய கண்ணோட்டத்தை வடிவமைக்கும். அந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் நம் சுய பிம்பம் உருவாகும். எனவே, இந்தக் கதையை நாம் மாற்ற விரும்பினால் முதலில் அது எங்கிருந்து வந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் இந்தக் கருத்துகளை நாம் எங்கே பெற்றோம் என்பதையும் யாருடைய கருத்து நமக்குரியது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

சில வேளைகளில், நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம்மைக் ‘குண்டாக இருக்கிறாய்’ என்றோ சோம்பேறி என்றோ சொல்லிக்கொண்டே இருக்கலாம். இதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், சில நாட்களில் அவர்களின் அந்தக் கருத்து நம்முடையதாகவும் மாறிவிடும். ஆனால், இந்தக் கருத்துகள் நாம் பிறரிடம் இருந்து கற்றவை என்ற புரிதல் இருந்தால், அதை நம்மிடம் இருந்து அகற்றுவது எளிது. எதை நம்ப வேண்டும், எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தினமும் நமக்கு நாமே சொல்லிக்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்த்தல்

இக்கரைக்கு அக்கரை எப்போதும் பச்சையாகத்தான் தோன்றும் என்பது மறுக்க முடியாத உண்மை. நம் கண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகத் தெரியும் மனிதர் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பது நமக்குத் தெரியாது. எனவே, உண்மை நிலை எது என்று தெரியாத ஒன்றுடன் நம்மை ஒப்பிடுவது மடமையான செயல். ஒப்பிடுதல் எப்போதும் நமக்கு எதிர்மறையான எண்ணத்தைத்தான் தோற்றுவிக்கும். அது நம்மை பயம், பதற்றம், மன அழுத்தத்துக்கு இட்டுச் செல்லும். இதனால் நம் வேலை, உறவுகள், உடல்நலம் போன்றவை வெகுவாகப் பாதிக்கப்படும்.

திறமையை ஒருமுகப்படுத்துதல்

“எல்லோருமே மேதைதான். ஆனால், மரம் ஏறும் திறனைக் கொண்டு ஒரு மீனை மதிப்பிட்டால், அந்த மீன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு முட்டாள்” என்று நம்பியே வாழ்ந்து மடியும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது இங்கு பொருந்தும். ஆம், நம் அனைவருக்குள்ளும் ஒரு தனித்துவமான திறமை இருக்கிறது. அந்தத் திறமை எது என்பதைக் கண்டறிவதில்தான் நம் வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. நம் வாழ்வில் ஒரு சூழ்நிலையில் நம்மைப் பற்றி மிகவும் உயர்வாக எண்ணியிருப்போம். அது எது என்பதைக் கண்டறிந்து, அப்போது நாம் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்று தெரிந்துகொள்ளவேண்டும். அது நம் தனித்துவமான திறமையை நமக்கு அடையாளம் காட்டும். நம்மிடம் இருக்கும் இந்தத் திறமையைக் கண்டுபிடிப்பதற்கு நம் நண்பர்களின் உதவியையும் நாடலாம்.

உடற்பயிற்சி

உயர்வான தன் மதிப்புக்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள தொடர்பைப் பல ஆராய்ச்சி முடிவுகள் உறுதி செய்கின்றன. உடற்பயிற்சி உடலையும் மனதையும் வலிமையாக்குகிறது. தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவது அந்த நாளை ஒழுங்குபடுத்துவதுடன் நம்மையும் பேணுகிறது. உடற்பயிற்சியால் நாம் சத்தான உணவையும் போதுமான தூக்கத்தையும் பெறுகிறோம். இதனால் ஏற்படும் நேர்மறையான எண்ணங்கள் நமக்கு நம்மைப் பற்றி ஒரு உயர்வான எண்ணத்தை உருவாக்குகின்றன.

மகிழ்ச்சியான, வெற்றிகரமான வாழ்வுக்குத் தேவையான திறமைகளுடன்தான் நாம் அனைவரும் பிறக்கிறோம். நம் அனைவருக்குள்ளும் வெவ்வேறு விதமான திறமைகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன. தன்மதிப்பு அற்ற மனிதனோ குறைகள் இல்லாத மனிதனோ இவ்வுலகில் இல்லை. எனவே, நம்மை நம் குறைகளுடன் நேசித்துப் பழக வேண்டும். இந்தப் நேசிப்பு தோல்வி பயத்தை நம்மிடம் இருந்து அகற்றி வெற்றியைச் சுவைக்க வழிவகுக்கும்.

பவானி தம்பிராஜா-நெதர்லாந்து

பவானி தம்பிராஜா

(Visited 311 times, 1 visits today)