மரபிலிருந்து நவீனத்துக்கு – கவிதையின் அரசியல்-கட்டுரை-தேவஅபிரா

தேவ அபிராதமிழில் நவீன கவிதையின் வரலாறு 19ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. ஈழத்தில் 1930களில் ஆரம்பிப்பதாக வரலாறு சொல்கிறது. ஆயினும் 1960களில் மறுமலர்ச்சி காலத்தில் தான் அது முனைப்படையத் தொடங்குகிறது. எங்களிடையே இன்றைக்கு வழக்கில் இருக்கும் கவிதை  எழுதும் முறைமை  கிட்டத்தட்ட 1970களில் உருக்கொள்கிறது.

19 நூற்றாண்டு வரையும் ஆக்கப்பட்ட கவிதைகள் மரபுக்கவிதைகள் என்ற வரையறைக்குள் வருகின்றன. 19 நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகில் தோன்றிய சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள் தோற்றுவித்த நவீன யுகத்தின் தாக்கம் காரணமாகப்  பாரதி எங்களுக்கு வசன கவிதையை அறிமுகப்படுத்துகிறார். அதுவே நவீன கவிதையின் தொடக்கமாக அமைகிறது.

புலவர்களிடம் சிக்கியிருந்த கவிதையை- மரபுக்கவிதையை நவீன யுகம் மக்கள் மயப்படுத்துகிறது.  செய்யுள் வடிவில் இலக்கண விதிகளுக்கமையக் கவிதையை யாக்க -கட்ட வேண்டியிருந்த நிலமையை உதறித்தள்ளிக்  கவிதை, வசன வடிவை அடைகிறது. மனதிற் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்பாடுகள் அற்ற வகையில் வெளிப்படுத்துவது சாத்தியமாகிறது. இங்கு நிகழ்ந்த அடிப்படையான மாற்றம்  கவிதை என்னும் வடிவம் சனநாயகப்பட்டமையாகும்.

யாப்பிலக்கணம் செய்யுளின் வடிவத்தை அடையாளம் காட்டியது; வேறுபடுத்தியது.  தண்டியலங்காரம் செய்யுள்களில் சொல்லுக்கும் சொற்களால் உருவாக்கப்படும் பொருளுக்கும் அழகை உருவாக்கும் அணி அலங்காரங்கள்பற்றிய விளக்கங்களை வழங்கியது. இவற்றுக்கும் அப்பால் ஒன்றினை அதனைக்கவிதையென உணரச்செய்வது  இவை அல்லாத இன்னும் ஒன்று. யாப்பிலக்கணத்தையும் தண்டியலங்காரத்தையும்   கற்றுத்தேர்ந்த பண்டிதர்கள் எல்லோரும்  கவிஞர்கள் ஆவதில்லை. ஏனெனில்  நல்ல கவிதை ஒன்றை எழுதுவதற்கு இன்னும் ஏதோ ஒன்று தேவைப்படும்.

புறத்தூண்டலினால் வரும்  அக எழுச்சியினால் ஏற்படும் படைப்புணர்வே அது. அவ்வாறு  உருவாகும் உணர்வுகள் எண்ணங்கள் ஆகி எழுதுபவரின் கருத்து நிலையினால் வழிபடுத்தப்பட்டு மூளையின் மொழியின் பகுதிக்குள் சென்று வெளிவரும்போது முளைதான் படைப்பின் ஆரம்பம்.  இன்னமும் சொல்வதென்றால் எல்லா வகையான இலக்கிய வடிவங்களும் இப்படித்தான் முளைகொள்கின்றன. இந்த முளை மொட்டாகிப் பூவாகி மலர்ந்தால் அல்லது கனியானாற் கவிதை, மரமானால் சிறுகதை, வனமானால் நாவல் என்று சற்று இலக்கியத்தனமாகச் சொல்லலாம்.

எனவே மரபுக்கவிதையோ  புதுக்கவிதையோ அதனைக் கவிதையென  எது உணரச் செய்கிறதோ அது இலக்கண இலக்கிய விதிகளைச் சார்ந்து இயங்குவதல்ல. இதனை உணர்ந்த போதுதான் பாரதிக்கு வசன கவிதை பிறக்கிறது.

ஆனால் எல்லா வசனங்களும் கவிதையாவதில்லை. எப்பொழுது ஒரு வசனம் கவிதைத் தன்மையை அடைகிறது.

லூசுன்  சகோதரர்களுக்கான  பிரியாவிடையில் மூன்று கவிதைகள்

என்ற கவிதையில்

The most depressing thing of all to bear

Is a lonely lamp on a long and rainy night

நான் தாங்கிய எல்லாவற்றுள்ளும் மிகுந்த மனவழுத்தம் தந்தது

நெடும் மழையிரவிற்  தனித்திருந்த  ஒரு விளக்கு

என்பார்.

தனது சகோதரர்களைப் பிரிந்து தனித்திருப்பதால் அவருக்கு வருகிற மன அழுத்தத்தை அவர் அவ்வசனத்தின் மூலம் கவிதையாக்கித் தருகிறார். சகோதரர்களைப் பிரிந்திருப்பது மனம் அழுத்தம் தருவது என்று இதனை வெறும் வசனமாகவும் தரலாம்.

மரபு எதனைச் செய்ய இடம் கொடுக்கவில்லை என்பதும் நவீனம் எதனைச் செய்ய இடம் கொடுத்து என்பதும் அவ்வற்றின் வடிவம் சார்ந்த பிரச்சனை அல்ல. கவிதை வெளிப்படுத்திய/ வெளிப்படுத்தும்   விடையங்களைத் தீர்மானித்தது/தீர்மானிப்பது அவ்வக் காலங்களில் தொழிற்பட்ட/தொழிற்படும் கருத்தியலாகும்.

நவீன யுகத்தில் புதுக்கவிதையில் பாடப்பட்ட விடையங்களை மரபுக்கவிதை வடிவத்தில் எழுதவே முடியாதா என்ற கேள்வி வரும்போது அதற்கான பதில் எழுத முடியும் என்பதுதான்  அவ்வாறு எழுதினால் அது ரசிக்கத்தக்கதாக இருக்குமா இல்லையா  என்பது வாசிப்பவரைப் பொறுத்தது.

அதேபோல்  மரபுக்கவிதை வடிவத்தில் எழுதப்பட்ட விடையங்களை நவீன கவிதை வடிவத்திலும் எழுத முடியும். மரபுக்கவிதையில் சொல்லப்பட்ட விடையங்களை  விளங்கிக்கொண்டபின் அவற்றை இலக்கணத்தின் கட்டுக்கள் அற்று எல்லோரும்  விளங்கிக் கொள்ளக்கூடிய கவிதை மொழியில் எழுதவும் முடியும். இந்த இலகுமயப்பாடு நவீனத்தின் முக்கியமான பண்பு.

இவ்விடத்தில் செய்யுளுக்கு இருக்கும் இலக்கணங்களை மீறுகிறோம் என நினைத்து மொழி அமைப்புக்கு இருக்கும் இலக்கணங்களையும் சிலர் மீறுவதைக் காண்கிறோம்.  செய்யுளுக்கு வகுக்கப்பட்ட இலக்கணங்களையும் மொழி இலக்கணங்களையும்  நாங்கள் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது. மொழியிலே  இலக்கண வழுவமைதியும் உண்டு என்பதையும் இங்கு நினவுகூரலாம். எனவே இலக்கண மீறுகை என்பது அறிந்தபின் காரண காரியத்தோடு நிகழ்வதாக  இருக்க வேண்டும்.

மரபுக்கவிதைகளை யாப்பதற்கு இருந்த கட்டுப்பாடுகளுக்கப்பால் மரபுக்கவிதைகள்  போற்றிய  விழுமியங்களின் மீது நவீனம் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை.  மரபுக்கவிதைகள் மன்னர்களையும் நிலபிரபுத்துவ விழுமியங்களையும் பாடின. மரபுக்கவிதைகள் இறையையும் அறத்தையும்  ஆன்மிகப் பார்வையிலான தனிமனித ஒழுக்கங்களையும் பாடின.  அவை செவியல் தன்மையை; ரசனையை முதன்மைப்படுத்துபவையாக இருந்தன.

நவீன காலத்தின் தோற்றம் வந்தபோது மரபுக்கவிதைக்குள்ளேயே அது போற்றிய விழுமியங்களை மறுத்துச்  சமூகப் பிரக்ஞையுடன் படைப்புகள் வெளிவரத்தொடங்கி இருந்தன. பாரதி கூட ஆரம்பத்தில்  தனது நவீன சிந்தனையை மரபுக்கவிதை வடிவத்தில் தான் தந்திருக்கிறார்.  ஈழத்தில் முற்போக்குச் சிந்தனையுடன் தொழிற்பட்ட மகாகவி முருகையன் போன்றவர்களும் ஆரம்பத்தில் மரபான வடிவங்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். மகாகவி அவர்கள் மத்திய தரவர்க்கத்து  மக்களின் பேச்சு மொழியையும் அதன் ஓசையையும் மரபான வடிவங்களுக்குள் பயன் படுத்திக் கவிதை களை எழுதினார்.

இவற்றை மரபுக்கவிதைக்குள்  நவீனம் ஏற்படுத்திய நெகிழ்வுத்தன்மைகள் எனலாம்.

பேராசிரியர் நுஃமான்  அவர்கள் பதிவுகள் இணையத்தில்  எழுதிய ஈழத்துக்கவிதை இதழ்கள் என்கிற கட்டுரையில் வரும் ஒரு சிறு பகுதியை இங்குத் தர விரும்புகிறேன்.

நவீனமயப்படுத்தப்பட்ட யாப்புவழிக் கவிதைகளே கவிஞனில் பெரிதும் இடம்பெற்றன. எனினும் கவிதையின் பொருட்புலப் பாட்டுக்கு ஏற்பச் செய்யுள் வரிகளைப் பிரித்து அச்சிடும் முறை கவிஞனின் பெரிதும் கையாளப்பட்டது. புதுக் கவிதைகளின் அச்சமைப்பும் கவிஞனில் பிரசுரமான பல கவிதைகளின் அச்சமைப்பும் வெளித்தோற்றத்தில் ஒன்றாகக் காணப்பட்டமையினால் யாப்பு முறை அறியாத பலர் கவிஞன் ஒரு புதுக்கவிதை ஏடு என்றே கருதினார்கள். ஆனால் புதுக் கவிதை மரபுக் கவிதை என்ற பாகுபாட்டுக்குக் கவிஞன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இரு வகைக் கவிதைகளும் கவிஞனில் பிரசுரமாகின. தற்காலக் கவிதை  என்ற உணர்வே கவிஞனில் மேலோங்கி இருந்தது எனலாம்.

நவீன  கவிதை எங்களுக்குள் வந்தபோது எங்களின் சமூக பொருளாதார அரசியற் சூழல் எப்படி இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.  காலனித்துவ ஆதிக்கத்தின் நேரடிப்பிடியிலிருந்து விடுபட்டிருந்தோம்.  நவீன சாதனங்கள் எங்களின் வாழ்வுக்குள் நுழைந்திருந்தன.  குறிப்பாக அச்சு இயந்திரங்களின் அறிமுகம்  பதிப்புத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டிருந்தது. உள் நாட்டுப் போக்குவரத்துக் கட்டமைப்பு வளர்ச்சி அடைந்திருந்தது. ஆனாலும் காலனித்துவம் ஏற்படுத்திய தீய விளைவுகள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை.

காலனித்துவ அரசுகள் இலங்கையுள் தமது நலன்களுக்கு அமையச் சமனற்ற வளர்ச்சியை ஏற்படுத்தின.  இலங்கையில் ஏற்கனவே இருந்த உற்பத்தி உறவுகளைச்  சிதைத்தன. பல்லின நாடான இலங்கைக்குள் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டமையினால்(பிரித்தானிய அரசு) இன முரண்பாடுகளையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருந்தன.

காலப்போக்கில் இலங்கை முழுமையான முதலாளித்துவ உலகத்துக்குள் நுழையவும் இல்லை. தனது  பிரபுத்துவ விழுமியங்களை முழுமையாகத் துறக்கவும் இல்லை. பதிலாக  இலங்கை இனவாதமும் வன்முறையான அதிகாரக்கலாசாரமும் கொண்ட ஒரு நாடாக உருக்கொண்டது.

இக்காலத்தில் உலகளாவிய ரீதியில் அந்தந்த நாடுகளில் தேசிய முதலாளித்துவம் வளர்ச்சி அடையத் தொடங்கியிருந்தது.  நிலமானிய விழுமியங்கள் சரியத் தொடங்கியிருந்தன. மதத்தின் நேரடியான இறுக்கம் தளரத் தொடங்கியிருந்தது. அரசுக்கும் மதத்துக்குமான உறவு மறைமுகமானதாக  மாறத் தொடங்கியது.

முதலாளிகளும் தொழிலாளிகளும் உருவாகத் தொடங்கினார். முதலாளித்துவத்தின் வளர்சியுடன் அதற்குச் சமாந்தரமாகத் தொழிலாளர் எழுச்சியும்  இடது சாரிச் சிந்தனையும் வளர்ச்சி அடைந்தன.

இலங்கையிலோ மதத்துக்கும் அரசுக்குமான உறவு வலுவடைந்து கொண்டிருந்தது. இனவாதத்தின் அடிப்படையிலான கூட்டுணர்வும் ஊக்குவிக்கப்படத் தொடங்கியிருந்தது.

சோவியத் மற்றும் சீனப்புரட்சிகளின் விளைவாக இலங்கையிலும் இடது சாரிச் சிந்தனைகள் இவற்றுக்குச் சமாந்தரமாக வளர்ச்சி அடைந்திருந்தன.

இப்பின்னணியில்தான் ஈழத்தின் நவீன கவிதை தொழிற்படத்தொடங்குகிறது. சமூக அக்கறை, சாதியப்பிரச்சனைகள், சாதியத்துக்கெதிரான போராட்டங்கள், இனவிடுதலைக்கான முன்னெடுப்புகள், பெண்விடுதலை தொடர்பான விழிப்புணர்வு தனிமனித உறவுச்சிக்கல்கள் போன்றவற்றை நவீன கவிஞர்கள் வெளிப்படுத்தத் தொடங்குகிறார்கள். இவை தன்னிலையிலிருந்து எழுதப்பட்டவையாகவோ அல்லது கூட்டு மனநிலையிலிருந்து எழுதப்பட்டவையாகவோ இருந்தன. அனேகமான கவிதைகளின் உள்ளீடாக இருந்தவை மேற்கூறப்பட்டவைதான். கூட்டு மனநிலைக்குப்போகாத கருத்து நிலைப்பட்ட ஆன்மீக விசாரத்தை முதன்மைப்படுத்திய  கவிதைகளும் எழுதப்பட்டன.

மரபுக்கவிதைகளிலிருந்து புதுக்கவிதையை நோக்கிச் செல்லும்பொழுது மரபுக்கவிதைகளில் பாவிக்கப்பட்ட சொல்வளம், சொற்களின் சந்தம், சொற்றொடர் மற்றும் வசன அமைப்புகள் தரும் ஓசை  போன்றவற்றைக் கவிஞர்கள் பலர் எடுத்துச் சென்றார்கள். இவ்வாறு  செய்வதனால்  நவீன கவிதை மாசு படுகிறதா? இல்லை. வளம் பெறுகிறது. ‘பெரும் வனங்கள் தமக்கான உரத்தைத் தாம் உதிர்ப்பவைகளில் இருந்துதான் எடுத்துக்கொள்கின்றன.’ இரண்டாயிரமாண்டுகளாகச் சேமித்த மொழி வளத்தைக் கைவிடுவதென்பது நவீன கவிதை தனக்கான அடித்தளத்தையே இழப்பதாக இருக்கும்.     எங்களுக்குச் சொற்களின் மீதோ அவை கொள்ளும் ஓசையின் மீதோ  சொற்றொடர்களும் வசனங்களும் உருவாக்குகிற இசையுணர்வின் மீதோ  அவை உருவாக்குகிற  தாளத்தின் மீதோ  கோபமா என்ன?

இவ்வெடுத்துச் செல்லல் இயல்பாக, கவிதை சொல்ல விளையும் பொருளுக்கு அமைவாக அன்னியமற்றதாக அமைய வேண்டும்.

ஆனால் ஒன்றை இன்ன வகையிற்றான்  சொல்ல வேண்டும் எனச் செய்யுள் இலக்கணம் வலியுறுத்தும் போதுதான் ஒவ்வாமை ஏற்படுகிறது.

நான் மேற்சொன்ன விடயங்களைக் கட்டாயம் ஒருவர் நவீன கவிதையில் கைக்கொள்ள வேண்டுமா என்று கேட்டால் பதில் இல்லை என்பதாகும்.

ஒருவர் தான் சொல்ல வரும் விடையத்தை   ஆழப்படுத்துவதற்கும் அழகுபடுத்துவதற்கும்   இவை தேவையென நினைத்தால் அதனைச் செய்யலாம்.

பொய் வீசித் திரிந்தாய் 
போயொழிக
பார் 
கைவீசி நடப்பேன் 
பூமலர

  • கவிதை : வெளியார்சேரன்
  • பொய் வீசிகைவீசி
  • போயொழிகபூமலர

மேற்குறித்த வரிகளில் வருகிற சொற்களிடையே இருக்கிற சந்தத்தை  (உச்சரிப்பொலியில் ஒன்றுக்கொன்று இசைகிற தன்மையை)  எடுத்து விட்டுப்

பொய் பேசுகிறாய் ஒழிந்து போ
பார் 
நான் சுதந்திரமாக நடப்பேன்
பூக்கள் பூக்க.

என்றும் சொல்லலாம்.
நோவதற்கும் 
நொந்தழுது பாடுதற்கும் 
பின் வாழ்வதற்கும் நானே யானேன்

  • கவிதை :மாயச்சுனைதேவ அபிரா
  • இந்த வரிகளின் தொனி தேவாரங்களில்  வரும் தொனியை ஒத்ததாகவிருக்கிறது.

என்பதைக் கவலைப்பட்டு, அழுது, கவிதை பாடினாலும் பின் வாழத்தானே வேண்டும்  என்றும் எழுதலாம்.

எந்தந்தையின் வீடு என்ற கவிதையில் கிரிசாந்  வீடுபேறு என்னும் சொல்லை (முக்தி-இறைவனடி சேர்தல் என்னும் கருத்துத் தரும், மரபிலிருந்து வரும் சொல்)  வீடு என்றும் பேறு என்றும் பிரித்து, எடுத்து நிகழ்காலத்துக்குப் பொருந்தும் கவிதை உள்ளடக்கத்தில் அழகாகப் பயன்படுத்தி இருப்பார்.

(இக்கவிதையில் என் மகனே வீடென்பது பேறு என்றுதான் வருகிறது என் மகளே என்றோ பிள்ளைகளே என்றோ மக்களே என்றோ வருவதில்லை. அவ்வகையில் அக்கவிதை ஆண்மையப் பண்பாட்டின் குறியீடாகவும் ஆகிவிடுகிறது.)

ஆக, எப்படிப்பட்ட வசனங்கள் கவிதை உணர்வைத் தருகின்றன என்பதை உங்களால் உணர முடியும்  என நினைக்கிறேன்

மேற்குறித்த வசன அமைப்புகளை நிராகரிக்கும் அல்லது பிடிக்காத  வாசகர்களும் உள்ளனர் என்பதையும் இங்குக் கூற வேண்டும்.

மரபிலிருந்து எடுத்துக்கொள்ளும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விடையம் இருக்கிறது.

கவிதை ஒன்றில்

இன்றைக்குத் திரெளபதைகளைக் காப்பாற்றக் கிருஸ்ணன் வருவதில்லை” 

என ஒருவர் எழுதுகிறாரென வைத்துக்கொள்வோம். கதையில் கிருஸ்ணன் கண்ணனாக இருந்தபோது சேலைகளைக் களவாடியவன். மகாபாரதம் என்னும் காப்பியத்தில் வரும் அப்படிமம் வெளிப்படுத்தும் விழுமியங்கள் பெண் விடுதலை தொடர்பான எண்ணக்கருத்தியல்களுக்கு எதிரானவை. எனவே மரபிலிருந்து எடுத்துக்கொள்ளும் படிமங்கள், சொற்கள் போன்றவை குறியீடு செய்யும், வெளிப்படுத்தும் கருத்தியல்கள் குறித்துக்கவனமாக இருக்க வேண்டும். எங்கிருந்து எதனை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியமானது.

நவீன கவிதையில் எதனை எப்படிச் சொல்வது என்பதைப் படைப்பாளி தீர்மானிக்கிறார். அதை எப்படி வாசிப்பது என்பதை வாசிப்பவர் தீர்மானிக்கிறார். எது கவிதையாகிறது எது வசனமாகிறது என்பது கூட வசனங்கள் கவிதை என்ற முழுமைக்குள் தொழிற்படும் விதத்திலும் தங்கியிருக்கும்.

கவிதை சொற்களினினூடாகத் தொழிற்படுகிறது. சொற்களுக்கு நான்கு பரிமாணங்கள் இருக்கின்றன.

  • சொற்கள் அறிவைத் தருகின்றன
  • சொற்கள் உணர்வைத் தருகின்றன
  • சொற்கள் அவற்றுக்கெனத் தொனிகள் உள்ளன
  • சொற்கள் நோக்கங்களைக் கொண்டுள்ளன

இந்தப் புரிதலில் இருந்துதான் சொற்களும் சொற்றொடர்களும் வாக்கியங்களும் கவிதையில் எப்படி அமையப்போகின்றன என்ற புரிதலும் உருவாகும்

எனது கவிதை  எதைச் சொல்ல விரும்புகிறதோ- அது சொல்ல வருவது எதுவாகவும் இருக்கலாம்- அதனைச் சிந்திக்கும்போது  எனது மொழி வளத்திலிருந்து அதற்கான சொற்ளைத்  தேடத் தொடங்குவேன். கிடைத்த சொற்களைக் கொண்டு எனது எண்ணத்தைச் சொற்றொடர்களாகவோ வாக்கியமாகவோ மாற்றுவேன்.(சில வேளை ஒரு சொல் மட்டுமே எனது எண்ணத்தைப்புலப்படுத்தப்போதுமானதாக இருக்கலாம்.)இவ்வாறு செய்யும்போது நான் எழுதியவை கட்புலக்காட்சியையோ அல்லது இருண்மையான காட்சியையோ உருவாகும் திறனைக் கொள்ளும். கவிதையில் இரு வகையான காட்சியுருவாக்கங்கள் நிகழ்கின்றன.  ஒன்று கட்புலக்காட்சியுருவாக்கம் மற்றையது   உருவமற்ற  அகக்காட்சிப்படுத்தல். இக்காட்சிப்படுத்தல்கள் மூலம் கவிதை முழுமை அடையும்பொழுது அது தனக்கென ஒரு  வடிவத்தை எடுத்துக் கொண்டிருக்கும்.இந்த வடிவத்தை வாசிப்பவரால், உணர மட்டுமே முடியும். மரபுக்கவிதைக்கு இருக்கும்  திட்டவட்டமான வடிவங்கள்புதுக்கவிதைக்கு  இல்லை. அப்படி உருவாகப்போவதும்  இல்லை.

மனித மூளை எதனையும் காட்சிப்படுத்தியே உணர்ந்து கொள்ள விளைகிறது. கணிதவியலைச்  சிறு பிள்ளைகளுக்கு எண் சட்டகம் அல்லது பௌதீகமான பொருட்களால் உருவாக்கப்படும் கட்புலக்  காட்சிப்படுத்தலுகூடாகவே ஆரம்பத்திற்  கற்பிக்கத் தொடங்குகிறோம். இந்த வளர்ச்சியினூடாகவே மனித மூளை அருவமான காட்சிப்படுதலுக்கும் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்கிறது. படிமங்கள் குறியீடுகள் உவமான உவமேயங்கள் அல்லது யதார்த்தமல்லாத காட்சிப்படுத்தல்கள் என எவற்றை நாங்கள் நவீன கவிதையில் பயன்படுத்தினாலும் கவிதையை விளங்கிக்கொள்வதற்கு மூளை காட்சிப்படுதலையே நாடும். சொலுக்குச் சொல்லாகச் சொற்றொடருக்குச் சொற்றொடராக வாக்கியத்துக்கு வாக்கியமாகக் கவிதையை மூளை காட்சிப்படுத்திப்புரிந்து கொள்ளமுயற்சிக்கும் இந்தபுரிதலில்  தோறாலது  கவிதை ஒதுக்கி விடும். வெற்றி அடைந்தால் கவிதையை வாசித்து முடித்தபின் மூளைக்குக் கவிதையினுடைய முழுமையான  உருவம் கிடைக்கும் அது தான் நவீன கவிதையின் வடிவம்.

இவ்வடிவம்  ஒற்றைப்படையானதல்ல. படைப்பாளிக்குப் படைப்பாளி இவ்வடிவம்  மாறுபடும் படைப்பாளி மானுட வாழ்வு பற்றிக் கொண்டிருக்கிற பார்வையினாலும் அதனைத் தீர்மானிக்கிற கருத்தியலாலும் அது மாறுபடும். படைப்பாளி சொல்ல வந்த விடையத்தினால் மாறுபடும்; படைப்பாளியின் மொழிச்செறிவின் வழி வருகிற மொழிப்பாவனையினால் மாறுபடும்;  வாசிப்பவரைப் பொறுத்தும் மாறுபடும்.

எனவே புதுக்கவிதை தேக்கமடைந்து விட்டதா என்றால்  அதற்கெனத் துலக்கமான வடிவம் அல்லது வடிவங்கள்  இல்லாதபோது இந்தப்பிரச்சனையை  நாங்கள் புதுக்கவிதை தரும் வடிவங்களில் தேடுவதில் அர்த்தமில்லை.

உண்மையிலும் தேக்கமடைந்தது  நாங்கள் தான்.   நாங்கள் எங்கே தேக்க மடைகிறோம் என்ற கேள்விக்கான பதிலை எங்கள் கருத்தியலின் தளத்திலும் (சமூக ஊடாட்டத்தினூடாக வருகிற  எண்ணங்களை வழிப்படுத்தும் கருத்தியல் அல்லது தத்துவம் என்று இதனை விரித்துக்கொள்ளலாம்) எங்கள் மொழி அறிவின் தளத்திலும் தேட வேண்டும் என நினைக்கிறேன்.

வடிவச்சோதனைகளில் மட்டும் ஈடுபடுவதால்  நவீன கவிதை அடுத்த கட்டத்துக்குப் போகப்போவதில்லை. படைப்பை அழகாக்கும் கூறுகள் அவை எவையாக இருந்தாலும் இந்த வாழ்வில் இருந்தே எடுக்கப்படுகின்றன.

நவீன கவிதை தோன்றியபொழுது  அதனை எவரும் எழுதலாம்  என்கிறபோது எற்கனவே  வந்த  கவிதைகளைப் போலப்  பலர் எழுத முனைவதால் உருவாகக்கூடிய எண்ணிக்கைப்பெருக்கம்  இயல்பானதுதான். மேலும் அவ்வாறு எழுதத்தொடங்கியே எல்லோரும் பின் தமக்கான வழிகளைக் கண்டடைகிறார்கள் என்பதையும் நாங்கள் இங்கு நினைவு கூர வேண்டும்.  இது சனநாயகம் அளிக்கிற வெளியின் காத்திரமான விளைவாகும். இதனை நவீனகவிதையின் தேக்கமாக மயங்குவது தேவையற்றது.

படைப்பாளி என்ன சொல்ல வருகிறார்?  ஏன் சொல்ல வருகிறார்? யாருக்குச் சொல்ல வருகிறார்? எத்தகைய புற சூழலில் அதை முன் வைக்கிறார்? என்பது போன்ற விடையங்கள் படைப்பின் அரசியல் ஆகின்றன. படைப்புக்கு இருக்கும் நோக்கம்தான் அரசியற் பரிமாணத்தைப் பெறுகிறது. தான் சொல்ல வந்ததை எப்படிச் சொல்கிறார் என்பது படைப்பின் அழகியல் ஆகிறது.

இங்கே அரசியல் என்பது என்ன என்பதையும் விளக்க வேண்டும்.

உயிர்கள் அதிகாரத்துடன் கொள்ளும் உறவுதான் அரசியல் ஆகிறது. எனவே எந்த நிலையிலும் கவிதை (படைப்பு)அரசியலிலிருந்து தன்னைப்பிரித்துக்கொள்ள முடியாது.

கவிதையில் வெளிப்படும் எனது சமூகப்புரிதல்  என்ன? அதன் கருத்தியல் என்ன? அது எப்படிப்பட்ட அழகியலுடன் வெளிப்படுகிறது? அதற்குப்பாவிக்கப்படும்  மொழியின்  ஆழமென்ன? அதன் பாவனை எப்படிப்பட்டது? எல்லாவற்றுக்கும் மேலாக  நான் எழுதியதைப்  பொது வெளியில் வைக்கக் கோரும் அதன் சிறப்பான கூறுகள் என்ன?  என்பது போன்ற கேள்விகளை ஒவ்வொரு படைப்பாளியும் தனக்குத் தானே கேட்டு எண்ணித்துணிந்தால் படைப்பாளி எழுதி முன்வைக்கும் படைப்பு இன்னோன்றைப்  போலிருக்காது. வாசிக்கும்போது சலிப்பும் ஏற்படாது.

நவீன கவிதைக்குள் சமகாலப்பிரச்சனைகளைச் சொல்வதன் மூலம் அல்லது திணிப்பதன்மூலம் அதனை வரலாற்று ஆவணமாகக் கூடாது. நாங்கள் எதிர் கொள்ளும் அரசியற் பிரச்சனைகளைக் கவிதைக்குள் கொண்டுவர முயற்சிப்பது  கவிதையை அரசியலுக்குள் சிறைப்படுத்தும் முயற்சி என்பது போன்ற பார்வைகள் இன்று முன்வைக்கப்படுகின்றன.

அரசியலின் மேற்கட்டுமானங்களான கட்சி, இயக்கம், அரசாங்கம் போன்றவற்றிலிருந்து அவை  உருவாக்கும்  இரணகளங்களிலிருந்து ஒருவர் தன்னை விலக்கி வைத்துக் கொள்வதைப்புரிந்து கொள்ளலாம்.  ஆனால் படைப்பாளியாக, அதிகாரம் புரியும் ஒடுக்குமுறைகளைத்  தனது படைப்புகளில் வெளிக்கொண்டு வரமாட்டேன். இலக்கியத்தின் பணி அதுவல்ல,   கவிதையிடம் அரசியற் கேள்விகளைக் கேட்கக் கூடாது. கவிதை மாயங்களைச் செய்ய வேண்டும்.  கவிதை என்பது கற்பனயின் உலகம். என்கிற நிலைபாட்டை ஒருவர் எடுக்கிறார் என்றால்  இந்த நிலைபாடு ஒரு அரசியல் நிலைப்பாடு ஆகும் இதற்குப் பின்னால் இருப்பது படைப்பின் அழகியல் சார்ந்த பிரச்சனை அல்ல.

கவிதையை எழுதும்போது அதனை இது ஒரு  வரலாற்று ஆவணம்  ஆகப்போகிறது என எவரும் நினைப்பதில்லை. அக்கணத்தில் தன் முன்னுள்ள சமூக சாரத்தினை அறிவோடும் உணர்வோடும் படைப்பாளி தன் படைப்புள் கொண்டு வருகிறார். காலங்கள் கடந்து செல்லும்போது கவிதை காலத்தை ஆவணப்படுத்தியிருப்பதும்  புலப்படும். இவ்விடத்தில் 1986 என்ற கவிஞர் சேரனின் கவிதையை நினைவு கூர்கிறேன். அக்கவிதை 1986ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பரிமாணம் எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக நாடகம் ஒன்றில் வரும் காட்சிகளைப் போல ஆவணப்படுத்தி இருக்கிறது.

தமிழின் தொன்மை குறித்த முக்கிய வரலாற்றுச் சான்றுகள்  முதலில் இலக்கியங்களினூடாகவே  எங்களுக்குக்கிடைத்தன. என்பதையும் இங்கு நினைவு கூரலாம்.

கவிதைக்கும் அரசியலுக்குமான உறவை ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

இனிக் கவிதை என்பது கற்பனையின் உலகமே  என்பதையும் பார்த்து விடுவோம்.

“நாங்கள் இருவரும்   கவிதை வரி ஒன்றில் சந்தித்தோம்
அவன் உரையாடத் தொடங்கினான் 
அவன் பேச்சு அலட்டலாக மாறியது
அதனைத் தாங்க முடியாது அவனை அடைப்புக்குறிக்குள் அடைத்து விட்டேன்”

என ஒருவர் எழுதுகிறாரென வைத்துக் கொள்வோம்.

அடைப்புக் குறியின் மேலும் கீழும் திறந்து தானே இருக்கிறது. என உடனே எனக்குத் தோன்றுகிறது.

இத்தகைய  கற்பனைகள் அழகானவையாக இருக்கிற போதும் இங்கிருக்கும் தர்க்க முரண்களை அடைப்பதற்குக்   கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

 “அவன் அடைப்புக்குறி மேலே திறந்து இருந்ததால் அங்கிருந்து வெளியேறி அடுத்த வரியை அடைந்து அங்கிருந்து அலட்டத்தொடங்கினான்” 

எனத்தர்க்கத்தை நிறைவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்த விளையாட்டை நிகழ்த்துவதற்கு ஒருவருக்கு உரிமையுள்ளது என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். இதுவும் கவிதையின் ஒரு பரிமாணம்தான். ஆனால் இது தான் இன்றைய நவீன கவிதைகள் அடையவேண்டிய இடம் என்பது  ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

வாழ்வின் பட்டறிவிலிருந்து உருவாகும் கற்பனைகள் அவற்றுக்கே    உரிய இயல்பான தர்க்கத்தையும்  உணர்வு நிலையையும் கொண்டிருக்கும்.

“நான் எழுதுதாளில் குதிரை என்று எழுதினேன்
அது கனைக்கத்தொடங்கியது.”

என்று ஒருவர் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

“நான் கிளி என்று எழுதினேன் அது கீச்சிடத்தொடங்கியது.”

என்று இன்னொருவர் எழுதத் தொடங்குவார்.

இது கற்பனை அச்சுகளை உருவாக்குவதாக இருக்கும்.

நோக்கமற்ற கற்பனை  சமூகசாரமற்ற கற்பனை அரசியற்பண்பற்ற கற்பனை போன்றவற்றை ஒருவர்  ஏன் வலியுத்துகிறார்?  மனிதர்களை இத்தகைய சின்னஞ்சிறு மகிழ்வுணர்வுக்குள் அழகியல் உணர்வுக்குள் ஆழ்த்துவதன் மூலம் அவர்களைச் சமூக சாரத்திலிருந்து பிரித்து விட விரும்புகிறாரா? என்ற கேள்வி இங்கே எழுகிறது?

கவிதையில் சமூக சாரமற்ற கற்பனை, மெம்போக்கான அழகுணர்வு, நோக்கமற்ற விளையாட்டுணர்வு, போன்றவற்றை வலியுறுத்தி அதற்கான வாசகர் எண்ணிக்கையையும் பெருக்க வேண்டும் என்று கோருவது பின் நவீனப் போக்குத்தான். அதன் பின்னால் இருக்கும் சிந்தனை   ஆக்கப் பூர்வமானதல்ல.

மனிதர்களுக்கு மகிழ்ச்சியே தேவை இல்லை என்ற அர்த்தத்தில் நான் இதனைச் சொல்லவில்லை. வாழ்வின் எல்லா அம்சங்களுக்கும் மனிதரின் எல்லா உணர்வு நிலைகளுக்கும் படைத்தலில் இடம் உண்டு. ஆனால் கவிதை என்ற முழுமைக்குள் அவை காரண காரியங்களோடு தொழிற்படுபவை ஆக இருக்கும்.

மேற்கூறிய வகையான கற்பனைகளைக் -கவிதையில் மட்டுமே  நிகழக்கூடியவைகளை-   எப்படிப்  புரிந்து கொள்வது?

கற்பனை என்பது மூளையின் செயல். கற்பனைக்கான கச்சாப்பொருட்கள் புற உலகிலிருந்து தான் எடுக்கப் படுகின்றன. மனிதரால் அவர் வாழும் காலத்தில் புலக்காட்சியூடாகவும் புலன் உணர்ச்சியூடாகவும் புற உலகிலிருந்து கிரகித்து எடுத்துக் கொள்ளப்பட்ட வற்றையும்   பரம்பரை பரம்பரையாகக்  கடத்தப்பட்டு  மரபணுகளில் திறன்களாகச் சேகரிக்கப்பட்டவற்றையும் கொண்டுதான் மனித மூளை தன்  கற்பனைச் செயல்களை நிகழ்த்துகிறது.

எனவே மூளை நிகழ்த்துகிற மேற்குறித்த வகையான கற்பனைக்கு மூலமாக இருப்பவை புலக்காட்சிகள்தான்.

இதனால் கவிதை என்கிற முழுமைக்கும்  இருக்கக்கூடிய நோக்கத்துக்கு இத்தகைய கற்பனைகள்  ஆரோக்கியமான முறையிற் பங்களிப்பது சாத்தியமே. ஆனால் இதனைச் சாத்தியப்படுத்துவது படைப்பாளியின்  சமூக அவதானங்களும் அதனை அவர் எப்படித் தன் கருத்தியால் ஒழுங்கு படுத்தியிருக்கிறார்  என்பதுமாகும். கட்டுரை முடிவில் இத்தகைய கற்பனைகள் கொண்ட கவிதை ஒன்றை உதாரணமாகத் தருகிறேன்.

கவிதை தான்  சொல்ல வருவதிற் தெளிவுடன் இருக்க வேண்டும். இதன் அர்த்தம் கவிதைக்கு நோக்கமிருக்க வேண்டும் என்பதாகும்.  அதன் கரு  நேர்கோட்டில் சொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கவிதை தரும் காட்சியின் ஒழுங்குகள் மாற்றப்பட்டிருக்கலாம்  ஆனால்  வாசிப்பின் முடிவில் அர்த்தங்கள் ஒன்றோ பலவோ வாசிப்பவருக்குக் கவிதையின் நோக்கம் புலப்பட்டுத்  தெளிவடைந்திருக்க வேண்டும் என்பது பொதுவான எடுகோள்.

ஆனாற் கவிதை அவ்வாறான  தெளிவுகளை உருவாக்கத் தேவை இல்லை, கவிதைக்கு ஒழுங்கு முறை தேவை  இல்லை, ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புத் தேவை இல்லை, எனப்  பின் நவீனத்துவச் சிந்தனைகள் கூறுகின்றன.

எல்லாவற்றையும் கலைத்துப் போடுவதினூடாக  அமைப்பை உடைக்க முனைவது. மையம் என்ற ஒன்று இல்லாமல் இருப்பது.  பன்மைத்தன்மையை வலியுறுத்துவதன் மூலம் ஒருமையை மறுப்பது.  ஒற்றைத்தன்மையான கலாசாரத்தை எதிர்ப்பது. போன்றவை பின் நவீனத்துவ சிந்தனைகளின் பரிமாணங்களாகும்.

வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டவர்கள் ஒற்றுமை என்ற பெயரில் மையத்தில் குவிந்திருக்கும் அதிகாரத்தின்  முலமும் தாங்கள் ஒடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த ஒடுக்குமுறையும் பாரதூரமானது.

எதனையும்  கலைத்துப் போடுவது அல்லது பிரித்து ஆராய்வது  அறிதல்   செயற்பாட்டின் முதல் படியாகும்.  ஆனால் அதன் அடுத்த படியான ஆரோக்கியமான ஒன்றை உருவாக்குதலில் பின் நவீனத்துவச்சிந்தனைகள் அக்கறை காட்டுவதில்லை.

ஆக்கப்பூர்வமான ஒன்றை உருவாக்குவதற்காகப் பன்மைத்துவத்தை மறுக்க வேண்டிய தேவையும் இல்லை. வேவ்வேறு அடையாளங்களைக் கொண்டவைகளுக்கு அவற்றுக்கான சனநாயக வெளியையும் அதிகாரத்தையும் வழங்குவதன் மூலம் அவற்றை ஒன்றிணைத்துச் சேர்ந்து வேலை செய்வதைப் பின்நவீனத்துவச் சிந்தனைகள் ஊக்குவிக்கவில்லை. என்பது என் புரிதல்.

எல்லாவகையான அதிகாரங்களையும் கேள்வி கேட்பதென்கிற வகையில் பின் நவீனச்சிந்தனைகள் முக்கியமான இடத்தைப்பெறுகின்றன. ஆனால் ஒடுக்கு முறைகளுக்கெதிரான ஒன்று சேரலை அவை முதன்மைப்படுத்துவதில்லை. ஒடுக்கப்படும் பல்வேறு அடையாளக் குழுக்களின் ஒன்று சேரலைத் திட்டமிட்டே தடுக்கும் எண்ணம் கொண்ட பின் நவீனத்துவ வாதிகளும் உண்டு.

அவ்வகையானவர்கள்  நேரடியாகவோ மறைமுகமாகவோ முதலாளித்துவ மற்றும் நவ தாராளவாத அதிகாரக் கட்டமைப்புக்களுக்குத் துணை செய்பவர்களாக ஆகிறார்கள்.

பின்நவீனத்துவச் சிந்தனைகள்குறித்து முதலாளித்துவ மற்றும் நவதாராளவாதச் சிந்தனையாளர்கள் கலவரம் கொள்வதில்லை என்பதையும்.  பதிலாகச்  சமயவாதிகளும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் கட்சி அதிகாரம்குறித்து மரபான பார்வையைக் கொண்டிருக்கிற இடது சாரிகளும் தான்  கலவரம் கொள்கிறார்கள் என்பதையும் குறிப்பாக அவதானிக்க முடியும்.

எனவே பின்நவீனத்துவச் சிந்தனைகளைக் கொண்டிருக்கிற எல்லோரும் முற்போக்கானவர்கள் அல்ல என்பதும் தெளிவு.

நான் இன்றைய காலத்தைப் பின் நவீன காலம் என்று சொல்வதை விட  மீ நவீன காலம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த மீ நவீன காலத்தினை சரியான கருத்தியலின் ஒளியில் உள்வாங்கும் படைப்பாளிகளிடமிருந்து வெளிப்படும் படைப்புகள் சலிப்பூட்டுபவையாக இருக்க மாட்டா.

இதற்கு இம்மீநவீன காலத்தைப்புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

சமூக பொருளாதார அரசியல் நிலைகளில் நவ தாராளவாதம் உலகை ஒற்றைப்பிடிக்குள் கிடத்தட்டக் கொண்டு வந்து விட்டது.

தானியங்கு இயந்திரக்கட்டமைப்புகளின் வளர்ச்சி, எண்ணிம உலகத்தின் வியாபிப்பு, இணையத்தின் விசாலிப்பும் அதன் வழி உருவாகிற மெய் நிகர் உலகின் ஆக்கிரமிப்பு,  இவை எல்லாவற்றுக்கும் மேலாக அதிகரித்து வரும் சூழலியல் பிரச்சனைகள்  போன்றவை உலகை எப்படிப்பாதிக்கின்றன என்பதைக் கூருணர்வுடன் அவதானிக்க வேண்டும்.

நவீன யுகம் கொண்டு வந்த முதலாளித்துவம் எல்லை கடந்த ஏகாதிபத்தியமாகி இன்றைக்கு நவ தாராளவாதமாகி விட்டது.

முதலாளித்துவம் ஏற்படுத்திய அன்னியமாதல் என்பது இன்றைக்கு மெய்நிகர் உலகுக்கு  மடை மாற்றம் செய்யப்பட்டு விட்டது.

எதையாவது வில்! எதையாவது வாங்கு !! என்பதுதான் இன்றைய உலகின் உந்துதல். இந்த விற்றலும் வாங்குதலும் உருவாக்கும் கலாசாரம் உலகையும் அழித்துச் செவ்வாய் வரை செல்லுமோ என்ற அச்சம் தோன்றத் தொடங்கியுள்ளது.

இந்தச் சூழலுக்குள் அதிகரித்து வரும்  பெண்ணிய ஒடுக்கு முறைகள் சாதிய ஒடுக்கு முறைகள் இனஒடுக்கு முறைகள் நிற ஒடுக்குமுறைகள் போன்றவற்றை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்    என்பதைப் படைப்பாளிகள் சிந்திக்க வேண்டும்.

ஈழத்தமிழர் நிலையில் நின்று பார்க்கும்போது இலங்கையின் முக்கிய பிரச்சனையாகச் சிறுபான்மை இனங்கள்மீது பேரினவாதம் மேற்கொள்ளும் ஒடுக்குமுறை தெரிகிறது.

இந்த ஒடுக்குமுறை அங்கு வாழும் ஒவ்வோரு சிறுபான்மைத் தனிமனிதரையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது.

இதனை உலக நிலையில் நின்றும் பார்க்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

ஈழவிடுதலைபோராட்டம் தந்த கசப்புணர்வுகளையும் ஈழவிடுதலைப்போராட்டத்துக்கு இருக்கக்கூடிய நியாயப்பாடுகளையும் புற நிலையாக நின்று பார்த்தல் அவசியம். அப்பொழுதான் அந்நிலையில் நின்று வரும் கவிதைகளைப்புரிந்து கொள்ள முடியும்.

புலம்பெயர்வினால் தமிழர்கள்  தமிழ்ப்பண்பாடு அல்லாத வேறொரு பண்பாட்டுக்க்குள் நுழைந்திருக்கிறார்கள் ஆனால் இங்கு நுழைந்த முதற் தலைமுறை தன் மனதிற்குள் காவி வந்த விழுமியங்களை இன்னும் கேள்விக்குட்படுத்தவில்லை.  குறிப்பாக மத சாதிய மற்றும் அதிகார உணர்வுகளிலிருந்து அவர்கள் விடுபடவில்லை. குடும்பத்தில் பெண்ணின் பாத்திரம், சம பாலர்களுக்கிடையிலான உறவுகள், பால் மாற்றமடையும் தனியன்கள்பற்றிய பார்வை, நிறவேற்றுமை, பிள்ளைகளுடனான பெற்றோரின் உறவுகள், போன்றவற்றில் இன்னமும் சனாதனப்பார்வையுடன் தொழிற்படும் சமூகத்திலிருந்து வரக்கூடிய இராண்டாம் தலைமுறைக்கவிஞர்களின் படைப்புகள் கவிதையை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாரம் செய்பவர் – ஒடுக்கப்படுபவர் என்ற தளத்தில்  படைப்பாளியாக நான் எங்கு நிற்கிறேன் என்ற சிந்தனை முக்கியமானதாகும். இந்தச் சிந்தனை உருவாகும் கருத்துக்களை ஒழுக்குபடுத்தித் தான் சொல்ல வருவதற்கான அழகியற் கூறுகளை இணைத்துப் படைப்பை உருவாக்கும்போது அது  மீ நவீன காலக் கவிதைகளாக இருக்கும்.

நான் என்ற நுண் நிலையிலிருந்து பிரபஞ்ச நிலைக்கும் பிரபஞ்ச நிலையிலிருந்து நான் என்ற நுண்நிலைக்கும் இடையில் அலையும் ஆன்மா எழுதும் கவிதைகள் அவை எந்த மொழியில் எழுதப்பட்டாலும் தோற்பதில்லை

இறுதியாக  நான் முன்பே கட்டுரையிற் குறிப்பிட்ட படிக்குக் கவிதை:

இறக்குமதி செய்யப்பட்ட மணப்பெண்.

அவள் விமானத்தில் ஏற்றப்பட்டாள்
அம்மாவும் அழுதாள்
அப்பாவின் நிம்மதிப்பெரு மூச்சில்
விமானம் எகிறிப்பறந்தது

அவன்
வானளாவிய நகரங்களை நியோன் விளக்குகள் மேயும்போது
மண்ணில், 
சிவந்த சீனிக்கிழங்குகளை முகர்ந்து  தின்றுதிரிந்த முள்ளம்பன்றி.

நாம்பன் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போட்டாற் சரியாகும் என்றார்கள்.
அவன்தான் அவளுக்குத் தாலியைக் கட்டினான்.
தடித்த அவன் வாய் சொல்லுகிற   பகல்கள். 
கொழுத்த அவன் உடல் படர்கிற இரவுகள். 
காலம் அவள் கழுத்தை  இறுக்கியது.

அன்று அவன் அவள்மேல் விழுந்தபொழுது
இனிமேலும் தாங்க முடியாத  வெப்பம்
ஆவியாகினாள்
ஆவியடங்கித் துளிகளாகினாள் 

அன்றையிலிருந்த மேசையில்  இருந்த வெண்தாளில்  விழுந்தன துளிகள். 
துளிகளில்
ஒன்று குதிரையானது.
இனொன்று கொள்ளானது.
சில தண்ணீராயின.
இறுதித்துளி தன்பசிக்கு ரொட்டியுமானது.

குதிரையில் ஏறி அமர்ந்தாள்.
போ குதிரையே போ!
எங்குப் போக வேண்டும்?
கட்டிலைப் பார்த்தாள்

நாம்பன் மாட்டின் மூச்சு நுரையும் 
வீச்சின் கறையும் படிந்த கட்டிலில்
அவளின் மீது மரக்கட்டைக் கைகளும் கால்களும் அழுத்தியிருப்பதைக் கண்டாள்
இங்கல்லாத எங்கென்றாலும் போவென்றாள்.

நன்றி : திரள் அமைப்பு

இக்கட்டுரை திரள் அமைப்பு ஏற்பாடு செய்த  இணைய வழிச் சந்திப்பில் (zoom meeting) வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவான வடிவமாகும்.

18-4-2021

தேவ அபிரா-ஹொலண்ட்

தேவ அபிரா

 

(Visited 599 times, 1 visits today)