உலகப் பெருந்தொற்றுகளின் கதை-மருத்துவத்தொடர்-பாகம் 2- ‘இன்புளுவன்சா’ -யோ.அன்ரனி யூட்

கோவிட் உலகப் பெருந்தொற்று ஆரம்பித்த காலத்தில், அந்தப் பெருந்தொற்றோடு இணைந்து பல்வேறு போலி விஞ்ஞானக் கட்டுக் கதைகளும் பரவ ஆரம்பித்தன. பரவிய போலி விஞ்ஞானக் கருத்துக்களில் ஒன்று இன்புளுவன்சாக் காய்ச்சலை விடவும் கோவிட் 19 மோசமானதல்ல என்பதாகும். இது சரியான தகவலா என்று பார்க்கலாம். வருடாவருடம் குளிர்காலத்தில் உலகம் முழுவதும் பரவலாக வரும் குளிர்காய்ச்சலை இன்புளுவன்சா என்கிறோம். வருடாந்தம் இன்புளுவன்சாவினால் நோயுறுவோரின் தொகை கிட்டத்தட்ட ஒரு பில்லியன். இவர்களுள் 3 முதல் 5 மில்லியன் வரையானோரில் கடுமையான நோயை இன்புளுவன்சா ஏற்படுத்துகிறது. இவ்வாறு கடுமையான இன்புளுவன்சா நோயுற்றோரில் 3 முதல் 5 இலட்சம் பேர் இறக்கின்றனர்: இந்தக் கணக்கின் படி உலகளாவிய ரீதியில் இன்புளுவன்சா தொற்றினால் ஏற்படும் மரண வீதம் வெறும்  0.05 வீதம் தான். நவீன கொரனா வைரசினால் ஏற்படும் கோவிட் 19 கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 159 மில்லியன் மக்களைத் தொற்றி அவர்களுள் 3.3 மில்லியன் மக்களைக் கொன்றிருக்கிறது: இதன் படி உலகளாவிய கோவிட் 19 மரண வீதம் 2 வீதமாகும். சுருக்கமாகச் சொன்னால், கோவிட் 19, இன்புளுவன்சாக் குளிர் காய்ச்சலை விட 40 மடங்கு அதிகமாக மரணத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், நவீன கொரனா வைரசிடம் இல்லாத ஒரு ஆபத்தான ஆயுதம் இன்புளுவன்சா வைரசிடம் இருக்கிறது என்பது உண்மை: வேகமாக விகாரமடைந்து புதிய விகாரிகளை (variants) உருவாக்கும் இன்புளுவன்சா வைரசின் இயலுமையே அந்த ஆயுதம்.

யோ.அன்ரனி யூட்
நிறமூட்டப் பட்ட 1918 இன்புளுவன்சா வைரஸ் – இலத்திரன் நுணுக்குக் காட்டி. படமூலம்: நன்றியுடன் PHIL.

இன்புளுவன்சா வைரசும் நவீன கொரனா வைரஸ் போலவே ஓர் ஆர்.என்.ஏ (RNA) வைரஸ் (வைரசின் ஜீன்களை உருவாக்கும் கரு அமிலமாக ஆர்.என்.ஏ இருக்கிறது, வேறு சில வைரசுகளில் கரு அமிலம் டி.என்.ஏ யாக இருக்கும்).  தனது  கரு அமிலத்தை பிரித்து, மீண்டும் இணைக்கக் கூடிய பல துண்டுகளாக வைத்திருப்பதால், இன்புளுவன்சா வைரஸ் மிக இலகுவாக புதிய விகாரிகளை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. இது வரை கண்டறியப் பட்டுள்ள 4 வகை இன்புளுவன்சா வைரசுக்களில், இன்புளுவன்சா “ஏ” (Influenza A) என்ற வகையே தீவிரமான நோயை ஏற்படுத்துகிறது. அத்துடன், இந்த இன்புளுவன்சா “ஏ” வைரஸ் மனிதனில் மட்டுமன்றி ஏராளமான பறவையினங்களிலும், வளர்ப்புப் பன்றிகளிலும் கூடக் காணப்படுவதால் இன்புளுவன்சா வைரசினால் பெருந்தொற்றுகள் ஏற்படும் அபாயம் எப்போதுமே மனிதர்களுக்கு தலை மேல் கத்தி போலத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்புழுவன்சா வைரசின் பரம்பரை அலகுகளில் ஏற்படும் சிறிய எழுந்தமானமான விகாரங்கள் காரணமாக வருடா வருடம் புது வகையான இன்புளுவன்சா வைரஸ்கள் உருவாகி ஒவ்வொரு குளிர்காலத்திலும் எம்மை ஒரு நீண்டகால நண்பன் தரிசிக்க வருவது போல எம்மைத் தாக்கும். மருத்துவ விஞ்ஞானிகளும் சளைக்காமல், ஒவ்வொரு ஆண்டும் உலகின் வெவ்வேறு பிரதேசங்களில் அமைந்திருக்கும் எண்பதுக்கு மேற்பட்ட ஆய்வு மையங்கள் வழியாக, பரவும் இன்புளுவன்சா வைரஸ் வகையைக் கண்டறிந்து அதற்கான தடுப்பூசியைத் தயாரித்துப் பாவனையில் விடுகிறார்கள். இவ்வாறு நாம் வருடாவருடம் எடுத்துக் கொள்ளும்  இன்புளுவன்சாவிற்கெதிரான தடுப்பூசிகள் எமக்கு தொற்றிலிருந்து ஐம்பது வீதமான பாதுகாப்பை வழங்குகின்றன – ஆனால் இந்த ஐம்பது வீதமான பாதுகாப்பே உடல் பலவீனமான முதியோரையும், குழந்தைகளையும் இன்புளுவன்சாத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குப் போதுமானதாக இருப்பதால், இன்புளுவன்சாத் தடுப்பூசியை இயலுமானோர் எடுத்துக் கொள்ள வேண்டியது பொதுநலம் பேணும் செயல்.

இன்புளுவன்சா ஏ வைரசின் மரபணு மாற்றம் பாரியதாக இருந்தால், அது பெருந்தொற்றுகளை உருவாக்கும் வைரசாக மாறக் கூடும். ஏற்கனவே குறிப்பிட்டது போல, பறவைகளிலோ அல்லது பன்றியிலோ வெவ்வேறு வகையான இன்புளுவன்சா வைரசுகள் பரவிப் பெருகும் போது, இப்படியான பாரிய மாற்றங்களுடனான புதிய இன்புளுவன்சா வைரசுகள் பிறப்பெடுக்கின்றன. அவ்வாறானதொரு பாரிய மாற்றத்தோடு இன்புளுவன்சா  பெருந்தொற்றாக முதலில் உருவெடுத்தது 1918 இல்.

இன்புளுவன்சாப் பெருந்தொற்றுப் பரவிய 1918 காலப் பகுதி வரலாற்று ரீதியில் சுவாரசியமான ஒரு காலம். முதல் உலகப் போர் இறுதிக் கட்டத்தை  நெருங்கி கொண்டிருந்தது. இறுதிப் பகுதியில் – 1917 இல்- அமெரிக்கா உலகப் போரில் இணைந்து கொண்டது. கிழக்கில், ரஷ்யாவில் மன்னராட்சி வீழ்ந்து இடது சாரிகளின் அரசு நிறுவப் பட்டது. இந்தப் பரபரப்பான பின்புலத்தில் சத்தம் சந்தடியில்லாமல் ஒரு புதிய வகை இன்புளுவன்சா வைரஸ் ஐரோப்பாவினுள் நுழைந்தது.  அமெரிக்காவின் ஒரு கிராமப் புற இராணுவ முகாமில் இருந்து பிரான்ஸ் நோக்கி அனுப்பப் பட்ட படையினர் வழியாகவே புதிய இன்புளுவன்சா வைரஸ் ஐரோப்பாவினுள் அறிமுகம் செய்யப் பட்டதாக நம்பப் படுகிறது. பெரும்பாலான அமெரிக்கப் படைகள் பிரான்சில் தரையிறங்கிய போதும் இன்புளுவன்சாத் தொற்றும் மரணங்களும் ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்ட போதும், ஸ்பெயின் மட்டுமே பெருந்தொற்றுப் பற்றிய செய்தியை முதலில் வெளியிட்டது. இதனால் 1918 இன்புளுவன்சாப் பெருந்தொற்று “ஸ்பானிஷ் காய்ச்சல்” என்று பெயர்பெற்றாலும், பெருந்தொற்றின் தோற்றுவாய் ஸ்பெயின் அல்ல என்பது முக்கியமான தகவல்.

தொற்றுக்குள்ளானோர், மரணமானோர் தொகை என்பவற்றின் அடிப்படையில் பார்த்தால் இருபதாம் நூற்றாண்டின் பாரிய பெருந்தொற்றாக ஸ்பானிஷ் காய்ச்சல் திகழ்கிறது. 1918 மார்ச் மாதத்தில் முதலாவது அலை, அதே ஆண்டு நவம்பரில் இரண்டாவது அலை, 1919 ஜனவரியில் மூன்றாவது அலை என மூன்று அலைகளாகப் பரவிய ஸ்பானிய  காய்ச்சலினால் குறைந்தது 500 மில்லியன் மக்கள் தொற்றுக்காளானார்கள், 50 மில்லியன் மக்கள் மரணமானார்கள். பெரும்பாலான மரணங்கள் இரண்டாம் மூன்றாம் அலைகளின் போதே நிகழ்ந்தன – மக்கள் பெருந்தொற்றைக் கட்டுப் படுத்தும் தடுப்பு நடவடிக்கைகளை முதல் அலை அடங்கிய போது கைவிட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக நம்பப் படுகிறது.

பெருந்தொற்றும் மரணங்களும் கட்டுங்கடங்காமல் போக இன்னொரு காரணம், இன்புளுவன்சா வைரசைத் தடுக்கும் தடுப்பூசியோ, வந்த பின்னர் குணமாக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளோ அப்போது ஆய்வு நிலையில் கூட இருக்கவில்லை என்பதாகும். வைரஸினால் உருவாகும் அம்மை போன்ற நோய்களின் சுவடுகள் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மிகளில் கூட அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் சாதாரண நுணுக்குக் காட்டிகளால் உருப்பெருக்கிக் காண முடியாத வைரஸ் நுண்ணுயிர் 1892 இல் தான் முதலில் ஆய்வு கூட மட்டத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தது.  1930 களில் இலத்திரன் நுணுக்குக் காட்டி எனும் பௌதீகவியல் கண்டு பிடிப்பு (இதற்காக ஒரு பௌதீகவியல் நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கிறது) உருவான பின்னரே வைரஸை நாம் எம் கண்களால் கண்டோம்.

கண்ணுக்குத் தெரியாத, ஆய்வு கூடத்தில் வளர்க்கப் பட முடியாத ஒரு நுண்ணுயிரிக்கு மருந்து கண்டறிவது கடினமான பணி. எனவே, 1918 – 1919 இன்புளுவன்சாப் பெருந்தொற்றை இன்று நாம் பின்பற்றும் சமூக இடைவெளி பேணல், முகக்கவசம், சுத்தம் பேணல், நோயாளிகளைத் தனிமைப் படுத்தல் போன்ற பொதுச்சுகாதார நடைமுறைகள் மூலமே கட்டுப் படுத்தினார்கள். இந்தத் தடுப்பு முறைகள் எதிர்நோக்கும்  சவால்களை இன்று நாம் நேரடியாகக் காண்கிறோம். இணைய வழித் தொழில்நுட்பம் இல்லாத அந்த நாட்களில் இக்கட்டுப் பாடுகள்  இப்போதிருப்பதை விடச் சவால் மிக்கவையாக விளங்கின. தொழிலாளார்கள் வேலைக்குப் போகாமல் இருக்க முடியாது – அதனால் 20 முதல் 40 வரையான வயது மட்டத்தினர் அதிகம் பெருந்தொற்றினால் பாதிக்கப் பட்டு மரணவீதம் அந்த இளந்தலைமுறையில் அதிகமாக இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மருந்துகள் எவையும் கண்டறியப் படாமலே ஸ்பானிஷ் இன்புளுவன்சா தனது வீரியத்தை இழந்து பெருந்தொற்று 1919 இல் முடிவுக்கு வந்தது.  பெருந்தொற்றை ஏற்படுத்திய இன்புளுவன்சா வைரஸ் சில விகாரங்களை அடைந்தமையாலும், மக்களிடையே இயற்கையான நோய் எதிர்ப்பு தற்காலிகமாக ஏற்பட்டமையாலும் இது நிகழ்ந்தது. இன்றும் 1918 இல் பெருந்தொற்றை உருவாக்கிய H1N1 இன்புளுவன்சா வைரஸின் வலுவிழந்த வடிவம் குளிர்காலத்தில் வரும் இன்புளுவன்சாத் தொற்றுக்களை அதிக மரணங்களின்றி ஏற்படுத்தி வருகிறது. இதே போன்றதொரு முடிவு கோவிட் 19 பெருந்தொற்றுக்கு வருமா என்பது பலரிடம் இருக்கும் கேள்வி: விடையைக் காலம் தான் சொல்லும் – ஆனால் உயிரியல் ரீதியில் இது நிகழக் கூடிய ஒரு சாத்தியப்பாடு தான்.

யோ.அன்ரனி யூட்
மூன்று அலைகளாகப் பரவிய 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் 50 மில்லியன் மக்களைப் பலி கொண்டது. பட மூலம் நன்றியுடன்: CDC/USA.

1933 இல், முதன் முதலில் இன்புளுவன்சா வைரசை ஆய்வு கூடத்தில் பிரித்தெடுக்கவும் அதனைக் கோழி முட்டையில் வளர்த்தெடுக்கவும் ஆரம்பித்தவுடன், மனிதனின் இன்புளுவன்சாவிற்கெதிரான போராட்டம் மனிதர்களுக்குச் சாதகமாகத் திரும்பியது. 1945 இல் ஆய்வு கூடத்தில் வளர்க்கப் பட்ட இன்புளுவன்சா வைரஸை வலுவற்றதாக்கி அதைத் தடுப்பூசியாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதே காலத்தில் நடந்த ஆய்வுகளின் விளைவாக இன்புளுவன்சாத் தொற்று ஏற்பட்ட பின்னர் வைரஸ் எங்கள் உடலில் பெருகாமல் தடுக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளும் கண்டறியப் பட்டன.

இன்புளுவன்சா வைரஸ்- விரைவாக விகாரமடையக் கூடிய அதன் சிறப்பியல்பு காரணமாக- 1919 இன் பின்னர் நான்கு பெருந்தொற்றுகளை ஏற்படுத்தினாலும் அப்பெருந்தொற்றுகளின் போதான மரணவீதங்கள் 1918 இனை விட மிகக் குறைவாகவே இருந்தன. 1957, 1968, 1977, 2009 ஆகிய ஆண்டுகளில் இன்புளுவன்சாப் பெருந்தொற்றுகள் உருவான போது தடுப்பூசியும், இன்புளுவன்சா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளும் , அதிகரித்த நவீன மருத்துவ வசதிகளும் மரண வீதத்தை நன்கு குறைப்பதற்குப் பெரும் பங்களிப்புச் செய்தன.

ஒவ்வொரு பெருந்தொற்றிலிருந்தும் மனித சமூகம் கற்றுக் கொண்ட பாடங்களைச் சுட்டிக் காட்டுவது இந்தத் தொடரின் ஒரு பிரதான நோக்கம். 1918 ஸ்பானிஸ் காய்ச்சல் எமக்குக் கற்றுத் தந்த பிரதான பாடம்: பொதுச்சுகாதார நடவடிக்கைகளின் முக்கியத்துவம். எந்தவொரு தடுப்பூசியும், மருந்தும் வைரசுக்கெதிராக இல்லாத சூழலில் மிக எளிமையான தடுப்பு முறைகளான கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளி பேணுதல், நோயுற்றோரைத் தனிமைப் படுத்திப் பராமரித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியவை மூலம் பல மில்லியன் மக்களின் உயிர்கள் காக்கப் பட்டன என்பதில் சந்தேகமில்லை. இந்த வரலாற்றுப் பின்னணியில், கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் சில சமூகங்களில் இந்தத் தடுப்பு முறைகளுக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளை நோக்கும் போது மனிதர்கள் வரலாற்றை அறிந்து கொள்வது எத்துணை அவசியமானது என்பது தெளிவாகிறது.

இன்புளுவன்சா வைரஸ் தொடர்ந்து  பெருந்தொற்றுகளை உருவாக்கும் என்பதில் சந்தேமில்லை – எப்போது அடுத்த பெருந்தொற்று உருவாகும் என்பது மட்டுமே கேள்வி. ஆனால், எதிர்கால இன்புளுவன்சாப் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ளும் வகையில் வைரசின் மாற்றங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளும், புதிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கும் ஆய்வுகளும் மனிதர்களுக்கு நம்பிக்கை தருகின்றன. உதாரணமாக ஜப்பான் ஒரு புதிய இன்புளுவன்சா வைரஸ் எதிர்ப்பு மருந்தைத் தயாரித்துப் பரீட்சித்து, பாவனைக்கு விடாமல் சேமிப்பில் வைத்திருக்கிறது: அடுத்த இன்புழுவன்சாப் பெருந்தொற்று ஏற்படும் போது இந்த மருந்து உயிராபத்தைக் குறைக்கும் வகையில் மட்டும் பாவிக்கப் படும். இத்தகைய மருத்துவ விஞ்ஞான முனைப்புகள் 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் எமக்குத் தந்த நினைவுப்பரிசுகள்.

நுண்ணுயிர்களோடான எமது சகவாழ்விலும் போராட்டத்திலும் மனிதர்களுக்கு வெற்றி எப்போதுமே உறுதி செய்யப் பட்டதல்ல. சில நுண்ணுயிர்களைப் பொறுத்த வரை, இல்லாதொழிப்பது சாத்தியமாகாமல் அவற்றினால் ஏற்படும் நோய்களை முகாமைத்துவம் செய்யும் தற்காப்பு யுத்தமே எமக்கு சாத்தியமாகிறது. இந்நிலைக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் எச்.ஐ.வி வைரஸ் தொற்று, எயிட்ஸ் நோய் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

யோ.அன்ரனி யூட்-அமெரிக்கா

தொற்றுக்கள் தொடரும்.   

யோ.அன்ரனி யூட்

 

(Visited 98 times, 1 visits today)