கோவிட் 19 தடுப்பூசிகள்: தயக்கங்களும் மயக்கங்களும் ஒரு நோக்கு-யோ. அன்ரனி யூட்

யோ. அன்ரனி யூட்
நாவல் நிற நவீன கொரனா வைரசுகள் இறக்கும் நிலையில் இருக்கும் பச்சை நிற மனிதக் கலங்களைச் சூழ்ந்திருக்கின்றன. இலத்திரனியல் நுணுக்குக் காட்டியின் மூலம் எடுக்கப் பட்டு செயற்கையாக நிறமூட்டப் பட்டிருக்கிறது. மூலம்: அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய்கள் மற்றும் அழற்சி ஆய்வு மையம் (NIAID).

ஆண்டு 1998. இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்செற் மருத்துவ ஆய்வுச் சஞ்சிகையில் அன்ட்ரூ வேக்பீல்ட் என்ற மருத்துவரும் அவரது 12 சகாக்களும் இணைந்து ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தனர். உலகம் முழுவதும் இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம்  புழக்கத்தில் இருந்து வந்த எம்.எம்.ஆர் என்ற முக்கூட்டுத் தடுப்பூசியினால் குழந்தைகளில் ஆட்டிசம் மற்றும் குடல் நோய்கள் உருவாகின்றன என்பது தான் அந்த ஆய்வுக் கட்டுரையின் முடிவாக இருந்தது. பன்னிரண்டு குழந்தைகளை ஆராய்ந்து வெளியிடப் பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் முக்கூட்டுத் தடுப்பு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு வழங்காமல் பெற்றோர் தவிர்க்க ஆரம்பித்தனர். 2008 வரை அன்ட்ரூ வேக்பீல்டின் அந்த ஆய்வு முடிவுகளை தொண்ணூறுக்கும் மேற்பட்ட மேலதிக ஆய்வுகள் மூலம் பரிசோதித்த மருத்துவ விஞ்ஞானிகளால் வேக்பீல்டின் முடிவுகளை உறுதி செய்ய இயலவில்லை, மாறாக ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பரிசோதித்த போதும் முக்கூட்டுத் தடுப்பு மருந்திற்கும் ஆட்டிசத்திற்கும் தொடர்பில்லையென்ற முடிவே மீள மீள உறுதியானது. இறுதியில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் நஷ்ட ஈடு பெறும் சதி நோக்கில் அன்ட்ரூ வேக்பீல்டும்  சிலரும் சேர்ந்து செய்த சதியே அந்த முறைகெட்ட ஆய்வு என்பது நிரூபணமானது. 2010 இல், வேக்பீல்டின் ஆய்வுக் கட்டுரையை லான்செற் இதழ் மீளப் பெற்றுக் கொண்டது. பிரிட்டனில் மருத்துவத் தொழில் செய்யும் அனுமதியை வேக்பீல்ட் இழந்தார். ஆனால், வேக்பீல்டின் முறைகேடான ஆய்வின் விளைவாக, முக்கூட்டுத் தடுப்பூசிகள் மீது மட்டுமன்றி, சகல விதமான வைரஸ் நோய்களுக்கெதிரான தடுப்பூசிகள் பற்றியும்  பொதுமக்களிடையே எழுந்த சந்தேகம் தடுப்பூசிகள் பற்றிய தயக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. அமெரிக்காவை விட, தொற்று நோய்களை இலகுவாகப் பரவ அனுமதிக்கும் புவியியல் அமைவிடம் கொண்ட ஐரோப்பாவில் இந்த தடுப்பூசிகள் குறித்த தயக்கத்தினால் தட்டம்மை (measles) போன்ற கொடிய நோய்கள் பரவி டசின் கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாகியிருக்கின்றன.

இத்தகையதொரு அடிப்படையான தடுப்பூசிகள் குறித்த தயக்கம் இருக்கும் சூழலில் தான் கோவிட் 19  பெருந்தொற்றை  தடுப்பூசிகள் கொண்டு எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். இது வரை நான்கு கோவிட் 19 தடுப்பூசிகள் ஆய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பாவனைக்கு வந்திருக்கின்றன (சீன, ரஷ்ய தடுப்பூசிகள் இவற்றுள் அடங்கவில்லை). இந்தத் தடுப்பூசிகள் 65 முதல் 95 வீதம் வரை கோவிட் 19 நோயைத் தடுக்கும் சக்தி பெற்றவை என்பது நற்செய்தி. ஆனால், ஒரு நாட்டின் சனத்தொகையில் எண்பது வீதமானோர் இந்தத் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டால் மட்டுமே, அந்த நாட்டில் கோவிட் 19 பரவல் கணிசமாகக் கட்டுப் படுத்தப் படும். தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் வீதம் குறைந்தால், அதனால் கோவிட் 19 பெருந்தொற்று கட்டுப் படுத்தப் படாமல் வளர்ந்தால்  இரண்டு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பேராபத்துகள் காத்திருக்கின்றன.

ஒன்று: மனிதர்கள் ஒன்று கூடுதல், பள்ளிகள், வியாபார நிறுவனங்கள் , பொழுதுபோக்குத் தலங்கள் மீளத்திறத்தல் என்பன பிற்போடப் படும் நிலை ஏற்படும். இதன் பின்விளைவு பொருளாதாரத்தில் மட்டுமன்றி தனிமனிதர்களின் உடல், மன ஆரோக்கியத்திலும் பெரும் பாதகமாக வெளிப்படும்.

இரண்டாவது பேராபத்து மருத்துவ ரீதியானது: கோவிட் 19 இனை ஏற்படுத்தும் நவீன கொரனா வைரஸ் நீண்ட காலம் மனிதர்களிடையே உலவும் போது, அது விகாரமடைந்து புதிய விகாரிகளை உருவாக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கும். ஏற்கனவே இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் சில விகாரங்களைக் கொண்ட நவீன கொரனா வைரசுகள் உருவாகி அவற்றின் தொற்றும் வீதமும், ஓரளவுக்கு நோயின் தீவிரமும் அதிகரித்த நிலை பதிவாகியிருக்கிறது. இந்த நிலையில் வைரசுக்கெதிரான தடுப்பூசிகள் ஆமை வேகத்தில் சமூகத்தில் பரவ விடப் படும் போது, நவீன கொரனா வைரஸ் தடுப்பூசிகளுக்கெதிராக தம்மை தகவமைத்துக் கொள்ள புதிய விகாரிகளை உருவாக்கக் கூடும்.

இந்த தடுப்பூசிகளுக்கும் வைரசுக்குமிடையேயான போராட்டத்தை இரண்டு எதிரிப் படைகளிடையே நடக்கும் போராகக் கற்பனை செய்து கொண்டால், இந்த இரண்டாவது ஆபத்தை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். வைரசுகளின் பரவலை மேவும் வகையில் தடுப்பூசிகளால் வழங்கப் படும் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே தடுப்பூசிகளின் கை இந்தப் போரில் ஒங்கும்.  அப்படியல்லாமல் சமபல நிலையில் தடுப்பூசிகளின் பலமும், வைரசின் பரவலும் இருந்தால் கூட வைரசுக்குத் தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம். ஏன்? தடுப்பூசிகள் எங்கள் உடலில் உருவாக்கும் எதிர்ப்புச் சக்திக்கு தன்னை வைரசின் மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் இயலுமை கிடையாது. ஆனால், பெருகி வாழும் உயிரியான வைரசுக்கு, தடுப்பூசிகள் தன்னை நோக்கி வீசும் எதிர்ப்பு சக்திக்கு ஈடு கொடுக்கும் வகையில் தகவமைத்துக் கொள்ளும் இயலுமை தாராளமாக இருக்கிறது.

எனவே, எவ்வளவு விரைவாக சமூகத்தில் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு, நோயெதிர்ப்புச் சக்தி பரவலாக்கப் படுகிறதோ, அதே அளவு விரைவாக மக்கள் சாதாரண சமூக வாழ்வுக்குத் திரும்ப முடியும், பலம் வாய்ந்த நவீன கொரனா வைரஸ் விகாரிகள் உருவாவதையும் தவிர்க்க முடியும்.

தடுப்பூசிகள் பற்றிய தயக்கங்கள் இந்த எளிமையான தடுப்பு நடைமுறைக்குத் தடையாக இருக்கின்றன. இந்தத் தயக்கங்கள் பல்வேறு சந்தேகங்களால் ஏற்படுகின்றன. அவசர அவசரமாகத் தயாரிக்கப் பட்ட கோவிட் 19 தடுப்பூசிகள் சரியாகப் பரீட்சிக்கப் படாமல் உலகப் பொருளாதாரத்தை மீளத் திறக்கும் நோக்கில் பாவனைக்கு விடப்பட்டிருப்பதாக ஒரு கருத்து பரப்பப் படுகிறது. இது அடிப்படையற்ற ஒரு வதந்தி. மருத்துவ வரலாற்றில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் பாவனைக்கு அங்கீகரிக்கப் பட்ட முதல் தடுப்பூசிகள் இந்த கோவிட் 19 தடுப்பூசிகள் என்பது உண்மை. ஆனால், சகல விதமான உரிய பரிசோதனைகளும் அரசுகளினதும், பொதுஜன ஊடகங்களினதும் குவிந்த கவனத்தின் மத்தியில் வெளிப்படையாகச் செய்யப் பட்ட முதல் தடுப்பூசிகளாகவும்  கோவிட் 19 தடுப்பூசிகள் இருக்கின்றன. அவை விரைவாக வெளிவந்தமைக்கு ஒரு காரணம், அரசுகளும் நன்கொடை வழங்கும் அமைப்புகளும் தடுப்பூசி ஆய்வுகளுக்கான நிதிவளத்தை முன்கூட்டியே வழங்கி வைத்தமையாகும்.  இறுதி  நிலை ஆய்வுகள் பூரணமடைவதற்கு முன்னரே, இந்த நிதி வளத்தைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை பெரும் தொகையில் உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டனர். தடுப்பூசி வேலைசெய்தால் வினியோகிக்கலாம், பயனும் பாதுகாப்பும்  உறுதி செய்யப் படாவிட்டால் உற்பத்தி செய்த தடுப்பூசிகளை அழித்து விடலாம் என்பது தான் திட்டம். விஞ்ஞானிகள் எடுத்துக் கொண்ட கரிசனை, முயற்சிகள் மற்றும் ஒட்டு மொத்த மனித இனத்தின் அதிர்ஷ்டம் காரணமாக நான்கு தடுப்பூசிகள் சிறந்த விளைவையும் மிகச்சிறந்த பாதுகாப்பையும் இறுதி ஆய்வுகளில் காட்டியதால் இன்று பாவனைக்கு வந்திருக்கின்றன.

இந்த நான்கு தடுப்பூசிகளையும் ஆயிரக்கணக்கான மனிதர்களில் இன்னும் ஒரு வருட காலத்திற்கு, அதன் நீண்ட கால விளைவுகள் குறித்து அறியும் முகமாகத் தொடர்ந்து பரீட்சித்துக் கொண்டிருப்பார்கள். அதே நேரம், இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் தங்கள் இலட்சக் கணக்கான பிரஜைகளில் இந்த தடுப்பூசிகளை மிகக் குறுகிய காலத்தில் ஏற்றி அவற்றின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்திருக்கின்றன. கோவிட் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டதால் மக்கள்- குறிப்பாக  வயது முதிர்ந்தோர்- இறந்தனர் என்று பரப்பப் படும் ஆதாரமற்ற சமூக வலைத்தளப் பதிவர்களின் வதந்திகளையும் இந்த இரு நாடுகளினதும் நடவடிக்கைகள் பொய்யாக்கியிருக்கின்றன.

பாவனைக்கு வந்துள்ள சில கோவிட் தடுப்பூசிகள் இது வரை மருத்துவ உலகில் பயன்படுத்தப் படாத புதிய தொழில் நுட்பத்தால் தயாரிக்கப் பட்டிருப்பதால் நீண்டகாலப் பாதிப்புகள் ஏற்படுமா என்ற அச்சமும் தடுப்பூசித் தயக்கத்தின் பின்னணியில் இருக்கிறது. புதிய தொழில் நுட்பம் என்று குறிப்பிடப் படும் ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பம் இரு தடுப்பூசிகளில் பயன்படுத்தப் பட்டிருப்பது உண்மை – இந்தத் தொழில் நுட்பம் காரணமாகத் தான் இந்த தடுப்பூசிகளை பெருமளவில் விரைவாக உற்பத்தி செய்யவும் முடிந்தது. ஆனால், ஆர்.என்.ஏ என்பது எங்கள் உடலில் ட்ரில்லியன் கணக்கில் நாளாந்தம் உற்பத்தியாகும், செயல்படும் ஒரு மூலக்கூறு. எனவே, தடுப்பூசிகளில் இருக்கும் ஆர்.என்.ஏ கேடுகளை விளைவிக்கும் என்பதற்கு உயிரியல் ரீதியான சாத்தியங்கள் இல்லை. மேலும், இந்த தடுப்பூசிகளில் இருக்கும் ஆர்.என்.ஏ , எங்கள் உடலில் நிரந்தரமாகத் தங்கியிருக்கப் போவதுமில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்களில் எங்கள் உடலில் நோய் எதிர்ப்பைத் தூண்டிய பின்னர், தடுப்பூசியின் வேலை முடிந்து அது அழிந்து விடும். பின்னர், தொடர்ந்த பாதுகாப்பை எங்கள் உடல் உருவாக்கிய நோய் எதிர்ப்பு மூலக்கூறுகளே எமக்கு வழங்கும்.

கோவிட் தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ளும் போது உருவாகும் பக்க விளைவுகளையும், ஒவ்வாமை  என்பதையும் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதும் சிலரது தடுப்பூசித் தயக்கத்தின் காரணமாக இருக்கிறது.

எந்த வகையான தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளும் போதும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தினரில் சில பக்க விளைவுகள் ஏற்படும்: உடல் வலி, தீவிரம் குறைந்த காய்ச்சல், தலைவலி எனப் பட்டியலிடக் கூடிய இந்த சாதாரண விளைவுகள் எமது உடல் தடுப்பூசிகளுக்கு துலங்கலைக் காட்டும் போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் – ஓரிரு நாட்களில் கடந்து செல்லும் உபாதைகள். இவை பற்றி எப்போது கவலை கொள்ள வேண்டும், எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தல்களை தடுப்பூசி வழங்கும் போதே அறியத் தருவார்கள். சிலர் கோவிட் தடுப்பூசிகளின் பின்னர் ஏற்படும் இந்தப் பக்க விளைவுகளை தடுப்பூசிக்கெதிரான “ஒவ்வாமை” என்று  தவறான அபிப்பிராயம் கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது. ஒவ்வாமை என்பது முற்றிலும் வேறான அசாதாரண உடல் நிலை. தடுப்பூசிகள் சிலவற்றில் பயன்படுத்தப் படும் பொருட்களுக்கு சிலரது உடல் காட்டும் அபரிமிதமான அழற்சி நிலையே ஒவ்வாமை. அதிர்ஷ்டவசமாக இத்தகைய ஒவ்வாமை பெரும்பாலானோரில் ஏற்படுவதில்லை. தங்களுக்கு இப்படியான ஒவ்வாமை இருப்பதாக அறிந்திருப்போரும், சந்தேகம் கொண்டிருப்போரும் கோவிட் 19 தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாவனைக்கு வந்திருக்கும் நான்கு  கோவிட் 19 தடுப்பூசிகளும் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இந்தப் பெருந்தொற்றிலிருந்து நிரந்தரமாக மீள்வதற்கு எங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரேயொரு வழியாக இருக்கின்றன. இவற்றை விட வேறெந்த வழியிலும் நாம் கோவிட் 19 பெருந்தொற்றிலிருந்து மீண்டு கரை சேரப் போவதில்லை.

ஆனால், சரியான தகவல்களை தகுதியான தகவல் மூலங்களிலிருந்து தேடியறிந்து, அதன் வழி நம்பிக்கையுடன் இந்தத் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டியது எங்கள் பொதுச்சுகாதாரம் சார்ந்த கடமையாக இருக்கிறது.

எம் அனைவருக்கும் இருக்கும் இன்னொரு முக்கியமான பொதுச்சுகாதாரக் கடமை: கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்து  மின்னஞ்சல், சமூகவலை ஊடகக் கணக்குகளுக்கு வரும் வதந்திகளையும், பொய்ப்பிரச்சாரங்களையும் விரல் நுனியால் ஏனையோருக்குக் கடத்தி விடாமல் குப்பைக் கூடைக்குள் தூக்கிப் போட்டுப் புதைத்து விடுவது!

யோ.அன்ரனி யூட் -அமெரிக்கா

00000000000000000000000000000000

கட்டுரையாளர் பற்றிய ஒரு சிறுகுறிப்பு :

மருந்தியல், நச்சியல், மற்றும் மூலக்கூற்று உயிரியல் துறைகளில் ஆராய்ச்சியாளரான கலாநிதி  அன்ரனி யூட், நியூஜேர்சி மாநில றற்கர்ஸ் பல்கலைக் கழக மருத்துவபீடத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழில் விஞ்ஞான, மருத்துவக் கட்டுரைகளை எழுதுவதிலும், வெகுஜன தமிழ் ஊடகங்களில் பொதுச்சுகாதாரம் , மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதன் மூலமும் “தமிழ் வழி அறிவியல்” பரப்பும் தன் கனவை ஆர்வத்துடன் பின் தொடர்கிறார். “நங்கூரம்” மாதாந்த அச்சிதழில் இவரது ஆக்கங்கள் வெளியாகி இருக்கின்றது

யோ. அன்ரனி யூட்

நடு குழுமம்

(Visited 317 times, 1 visits today)