உலகப் பெருந்தொற்றுகளின் கதை-இறுதிப் பாகம் : எதிர்காலப் பெருந்தொற்றுகள்-யோ.அன்ரனி யூட்

யோ.அன்ரனி யூட்
(மூலத்திலிருந்து மாற்றப் பட்ட படம்- நன்றி: Michell Cohen, Nature, Vol 406:2000)

ஒரு பயணத்தில் போய்ச் சேரும் இடத்தைப் போலவே, பயணத்தின் அனுபவமும் முக்கியமானது – இத்தகைய பொருள்தரும் வாக்கியங்களை பல்வேறு மொழிகளிலும் பல தத்துவஞானிகள் சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். உலகப் பெருந்தொற்றுக்களிலிருந்து மனித இனம் நடத்திய போராட்டங்கள் மனித இனத்தை இது வரையில் தக்க வைத்திருக்கின்றன – அது மட்டுமன்றி இனி வரப் போகும் பெருந்தொற்றுகளைக் கையாளும் வழிமுறைகளையும் இதே போராட்டங்கள் கற்றுத் தந்து விட்டுப் போயிருக்கின்றன. உலகப் பெருந்தொற்றுகளைப் பொறுத்த வரையில் , இனி வரப் போவது என்ன என்பதை தற்போதுள்ள அனுபவங்கள் சார்ந்து 3 பிரிவுகளில் பார்க்கலாம்.

எதிர்காலத் தொற்று நோய்கள்

என்ன வகையான தொற்று நோய்கள் எதிர்காலத்தில் காத்திருக்கின்றன எனக் குறிப்பிட்டு எதிர்வு கூற முடியா விட்டாலும் சில அறிவு சார் ஊகங்களை தொற்று நோய் நிபுணர்கள் பிரேரித்திருக்கிறார்கள். காட்டு விலங்குகளில் பறவைகளில் பரவிக் காணப்படும் வைரசுக்களே எதிர்கால மனிதத் தொற்றுக்களை உருவாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மனிதர்கள் காட்டு விலங்குகளோடு நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பில் வரும் வாய்ப்புகள் காடழித்தல், நகரமயமாக்கல், அரிய பிராணிகளைச் சட்ட விரோதமாகக் கடத்தல் போன்ற காரணிகளால் அதிகரிக்கின்றன. மலாயன் அழுங்கு (Malayan pangolin) என்ற அரிய விலங்கினமொன்றை சீனாவுக்குள் கடத்தி வந்தமை நவீன கொரனா வைரஸ் மனிதர்களிடையே பரவ ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்ற எடுகோள் இன்னும் நிராகரிக்கப் படவில்லை.

இன்னொரு பக்கம், மனிதர்களின் வாழ்விடத்தினுள் சாதாரணமாக நடமாடும்  வௌவால் போன்ற காட்டு விலங்குகளில் இருந்து அடுத்த வைரஸ் பெருந்தொற்று உருவாகும் வாய்ப்புகளும் எதிர்வுகூறப்பட்டிருக்கின்றன. உலகின் ஒரேயொரு பறக்கும் சக்தி கொண்ட பாலூட்டியான வௌவாலில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன. பல்வேறு வௌவால் இனங்களில் 200 இற்கு மேற்பட்ட வைரஸ் வகைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன – இவற்றுள் நிப்பா வைரஸ், மார்பா வைரஸ், எபோலா வைரஸ், முந்தைய சார்ஸ் வைரஸ் என்பன முக்கியமானவை. இதன் சிறப்பு என்னவெனில், இந்த வைரசுகள் பெரும்பாலானவை வௌவாலில் நோயை ஏற்படுத்தாமல் தப்பி வாழ்ந்து பெருகுவதால், வௌவால்கள் இந்த வைரசுகளின் இரகசிய தூதனாகச் செயற்பட முடிகிறது.

சில வைரசுகளையும் ஏனைய நோய்க்கிருமிகளையும் நுளம்புகள் போன்ற பூச்சியினங்கள் மனிதனுக்குக் கடத்துகின்றன. டெங்கு, சிக்குன்குன்யா, மஞ்சள் காய்ச்சல், சிகா ஆகிய வைரசுகளும், மலேரியாவை உருவாக்கும் ஒற்றைக் கல உயிரியும் நுளம்பினால் பரவும் நோய்க்கிருமிகளின் சிறந்த உதாரணங்கள். அதிகரித்து வரும் பூமியின் வெப்ப நிலை காரணமாக இந்த நோய்களைப் பரப்பும் நுளம்பினங்களின் புவியியல் பரம்பல் இப்போதுள்ளதை விட அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், வட அமெரிக்காவின் பகுதிகளில் டெங்குவைப் பரப்பும் நுளம்புகள் சௌகரியமாகப் பெருகி நோயின் தாக்கங்களையும் அதிகரிக்கக் கூடும்.

இறுதியாக, மனிதர்களிடையே ஏற்கனவே பரவியிருக்கும் வைரசுகளே இயல்பான விகாரங்களால் புதிய நோய்த்தீவிரம், அதிக பரவும் திறன் கொண்ட வைரசுகளாக உருவெடுக்க முடியும். இதுவே 1918 இன்புழுவன்சாப் பெருந்தொற்றில் நடந்தது.

எதிர்கால தொற்று நோய்க்கட்டுப்பாடுகள்

புதிய தடுப்பூசிகள் இனி வரும் தொற்று நோய்களைக் கட்டுப் படுத்துவதில் பெரும் பங்கு வகிக்க இருக்கின்றன. ஏற்கனவே அலசியது போல, சில தொற்று நோய்களுக்கு தடுப்பூசிகள் சாத்தியமாக இருக்கப் போவதில்லை. ஆனால் தடுப்பூசிகள் தயாரிப்பில் கோவிட் 19 அனுபவம் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்திருக்கிறது – இந்த புதிய தொழில் நுட்பம் விரைவான தடுப்பூசித் தயாரிப்பிற்கு மிகவும் பங்களிக்கப் போகிறது. உதாரணமாக modular vaccines எனப்படும் அணுகுமுறை மூலம் ஒரு புதிய நோய்க்காரணியின் பரம்பரையலகுகள் (genetic code) தெரியவந்த உடனேயே புதிய தடுப்பூசியை உருவாக்கிப் பரீட்சிக்கக் கூடிய நிலை எதிர்காலத்தில் இருக்கும். ஆர்.என்.ஏ தடுப்பூசிகளும் (mRNA vaccines) இதை சாத்தியமாக்கியிருக்கின்றன.

தொற்று நோய்களை உலகளாவிய ரீதியில் கண்காணித்து, அவற்றின் பரம்பலை ஊற்றிடத்திலேயே கிள்ளி விடும் அணுகுமுறையை மேற்கு நாடுகள் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்றன – எதிர்காலத்தில் இந்தக் கண்காணிப்பு இன்னும் தீவிரமாகும் என எதிர்பார்க்கலாம்.  2018 வரை அமெரிக்காவினால் செயல் படுத்தப் பட்டு வந்த உலகளாவிய நோய்க்கண்காணிப்புத் திட்டமொன்று கொரனா வைரசுகளில் ஒரு கண் வைத்திருந்தது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அந்தத் திட்டத்தை தொடராமல் விட்ட பின்னர், 2019 இல் நவீன கொரனா வைரஸ் உலகில் வலம் வர ஆரம்பித்தது. இத்தகைய ஒரு தவறை இனி வளர்ந்த மேற்கு நாடுகள் செய்யாமல் இருப்பதில் தான் எங்கள் அதிர்ஷ்டம் தங்கியிருக்கிறது.

எதிர்கால சமுதாயம்

மனித சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் – மக்கள், அரச தலைவர்கள், முதலீட்டாளர்கள், பெருங்கூட்டுத் தாபனங்கள் – எதிர்காலப் பெருந்தொற்றுகளில் பாரிய பங்களிப்புச் செய்வர். ஆனால், அந்தப் பங்களிப்பு முன்னேற்றகரமா இருக்குமா, அல்லது கருவறுக்கும் வகையினதாக இருக்குமா என்பது எதிர்வு கூறக் கடினமானது. விஞ்ஞான எதிர்ப்பை அரச தலைவர்கள் தூண்ட, அதற்கு இசைந்த மக்கள் கூட்டத்தினரால் மருத்துவ தொழில் நுட்பம் உச்சத்திலிருந்த நாடுகளிலேயே கோவிட் 19 இனைக் கட்டுப் படுத்த இயலா நிலை இருக்கின்றது. எனவே, விஞ்ஞான அடிப்படையை ஆரம்பக் கல்வி முதலே ஊக்குவிக்கும் திட்டங்கள் வழியாக எதிர்காலப் பெருந்தொற்றுக்களை பொது மக்கள் சிறப்பாகக் கையாளும் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அதே நேரம், பெருங்கூட்டுத் தாபனங்களும், முதலீட்டாளர்களும் தங்கள் பொருளாதார பலம் மூலம் கொள்கை வகுப்பாளர்களை விஞ்ஞான எதிர்ப்பைக் கைவிடச் செய்யலாம்.  இந்த இரு தரப்பினரும் பூமியின் கால நிலை மாற்றத்தைக் குறைக்கும் கொள்கைகளை ஊக்குவிப்பதாலும், எதிர் காலப் பெருந்தொற்றுக்களைக் குறைக்கலாம் அல்லது சிறப்பாகக் கையாள உதவலாம்.

சூழல் பாதுகாப்பைப் பொறுத்தவரை நம்பிக்கையான மாற்றங்கள் தெரிகின்றன. உலகின் பாரிய தொழில் துறை முதலீட்டு அமைப்புகளில் ஒன்றான பிளாக்ஸ்ரோன் குழுமம் நிலக்கரி தொடர்பான தொழில்களில் புதிய முதலீடுகளைச் செய்வதில்லை என அறிவித்திருக்கிறது. பாரிய உயிர்சுவட்டு எரிபொருள் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம், அண்மைக் காலங்களில் புதிய மின்கலத் தொழில் நுட்பத்தில் ஆர்வத்துடன் ஈடு பட ஆரம்பித்திருக்கிறது. விஞ்ஞான ரீதியான நோயத்தடுப்பை ஊக்குவித்தல், பொதுச்சுகாதாரம் போன்ற துறைகளிலும் தனியார் துறையினர் அரச அமைப்புகளை விட முன்னேற்றகரமான செயல் பாட்டைக் காட்டியிருக்கின்றனர். எதிர்கால சமூகம் தொற்று நோய்களை எதிர் கொள்ள சாதகமான சூழல் நிலவும் என்ற நம்பிக்கையை இந்த மாற்றங்கள் தருகின்றன.

மொத்தத்தில், நவீன தொழில் நுட்பங்களால் கண்காணித்தல், எதிர்வுகூறல், சமுதாயத்தின் பல்வேறு பங்கினரையும் தயார்படுத்தல், மருத்துவத் தீர்வுகளை தொடர்ந்து நவீன மயப்படுத்தல் ஆகிய மூன்று மூலோபாயாங்களும், எதிர்காலப் பெருந் தொற்றுக்களை நாம் வெற்றிகரமாகக் கையாள அவசியமான தூண்கள் எனலாம். இந்த மூன்று தூண்களில், எந்தத் தூணில் நாம் சிறுகல்லாக இணைய முடியும் என்று கண்டு கொள்வது எங்கள் ஒவ்வொருவரதும் கடமை.

முற்றும். 

யோ.அன்ரனி யூட்-அமெரிக்கா 

யோ.அன்ரனி யூட்

 

(Visited 51 times, 1 visits today)