உலகப் பெருந்தொற்றுகளின் கதை – மருத்துவத்தொடர்-அங்கம் 1- யோ.அன்ரனி யூட்

அன்ரனி ஜூட்

கொள்ளை நோயை விரட்ட வினோதமாக உடையணிந்த ஐரோப்பாவின் மத்தியகால “மந்திரவாதி மருத்துவர்”. படமூலம் – நன்றியுடன்: Mark Ernest, “On Becoming a Plague Doctor” NEJM, May 20, 2020.

பூகோள அரசியல் ஆய்வாளரான பரீட் சகாரியா சில ஆண்டுகள் முன்பு “நவீன மனிதகுலத்தின் இருப்பிற்கெதிரான அச்சுறுத்தல் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடமிருந்தே உருவாகும்” என்று எதிர்வு கூறலை வெளியிட்டிருந்தார். மனித குலத்தின் கண்ணுக்குப் புலப்படா அச்சுறுத்தல்கள் பல: காலநிலை மாற்றம், சூழலில் அடையாளம் காண முடியாத இரசாயன மாசுக்கள் என்பவற்றோடு நுண்ணுயிர்களும் மனித இருப்பிற்கு சவாலாக இருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருக்கும் பெருந்தொற்று, வைரஸ் வகை நுண்ணுயிர்கள் எவ்வாறு சில மில்லியன் மக்களை சில மாதங்களில் கொன்று உலக இயக்கத்தை நிறுத்தி வைக்கக் கூடியவை என்பதற்கு சான்று.

மனித இனத்தின் பதிவு செய்யப் பட்ட வரலாற்றின் படி ஆறுக்கு மேற்பட்ட பெருந்தொற்றுக்களை உலகம் கண்டிருக்கிறது. வரி வடிவத்தில் ஆவணப்படுத்தப் படாத  முன்வரலாற்றுக் காலத்திலும் கூட நுண்ணுயிர்கள் தரும் தொற்று நோய்களால் மனிதர்கள் பேரழிவுகளை எதிர்கொண்டிருந்தனர் எனத் தொல்லியல் ஆய்வுகள் சில சான்று பகர்கின்றன. எனவே, பெருந்தொற்றுகள் மனிதர்களுக்குப் புதிதல்ல, ஆனால், பெருந்தொற்றுகளை எதிர் கொள்ள மனிதர்கள் பின்பற்றும் வழிமுறைகள் மட்டுமே மனிதர்களின் பரிணாம வளர்ச்சியோடு மாறி வருகின்றன.

ஐரோப்பாவின் இருண்ட யுகம் என்று சில வரலாற்றாய்வாளர்களால் வரையறுக்கப் படும் 14 ஆம் நூற்றாண்டில் “கொள்ளை நோய்” (Plague) என்ற பெயரில் பரவிய பக்ரீரியாத் தொற்று அந்தக் காலப்பகுதியில் மூன்றிலொரு பங்கு ஐரோப்பியர்களைப் பலி கொண்ட ஒரு பெருந்தொற்று. யேர்சினியா பெஸ்ரிஸ் (Yersinia pestis) என்று அழைக்கப் படும் கொள்ளை நோயை உருவாக்கும் அந்த பக்ரீரியா இன்றும் உலகின் பல பிரதேசங்களில் காணப்பட்டாலும், நுண்ணுயிர் கொல்லிகள் இல்லாத மத்திய கால ஐரோப்பாவை மூன்று நூற்றாண்டுகள் வரை ஆட்டிப் படைத்தது. மருத்துவமும், விஞ்ஞான அடிப்படையிலான சுகாதார நடைமுறைகளும் கண்டறியப் படாத காலமென்பதால் மக்கள் மத போதகர்களினதும் , மந்திரவாதிகளினதும் அறிவுரைகளின் படி நடந்து கொண்டு கொள்ளை நோயிலிருந்து தப்ப முயற்சித்தனர். மதகுருக்களுக்கு தங்கள் வருமான உண்டியலை கொள்ளை நோயைக் காட்டி நிரப்பிக் கொள்ள நல்ல சந்தர்ப்பமாகவும் இந்தக் காலப் பகுதி அமைந்தது. ஆனாலும், இந்த ஐரோப்பிய கொள்ளை நோய்க் காலத்தின் போது தான் தொற்று நோய்த்தடுப்பு பற்றிய சில பயனுள்ள காத்திரமான நடைமுறைகளும் புழக்கத்திற்கு வந்தன. மக்கள் தங்கள் பொது அறிவைப் பயன்படுத்தி, சமூக இடைவெளியைத் தீவிரமாகப் பேணத்தொடங்கினர். மக்கள் தொகைப் பெருக்கத்தால் நிரம்பி வழிந்த அக்கால ஐரோப்பிய நகரங்களிலிருந்து மக்கள் நிரந்தரமாகவே வெளியேறி கிராமப் புற நிலங்களை நோக்கிக் குடிபெயர்ந்தமை இந்தக் காலத்தில் ஆரம்பமானது.  நோயுற்றவர்களை ஏனையோரிடமிருந்து பிரித்து தனியே பராமரிக்கும் நடைமுறையும் சில சமூக அமைப்புகளால் அறிமுகம் செய்யப் பட்டன – இன்றைய மருத்துவமனைகளுக்கும் தனிமைப் படுத்தல் நிலையங்களுக்கும் இந்த நடைமுறை தான் முன்னோடியாக இருந்திருக்கிறது.

அந்தக் கொள்ளை நோய்க்காலத்திலும் சில முகக்கவசங்கள் பாவனையில் இருந்திருக்கின்றன – ஆனால், இன்று போல பொது மக்களைக் காக்கும் உபகரணங்களாக அல்லாமல், நோயை விரட்டுகிறோம் என்று போலிச் சடங்குகள் செய்யும் மந்திரவாதிகள் பெருவாரியாக இவற்றைப் பயன்படுத்தினர்.

சுவாரசியமான விடயம் என்னவெனில், கொள்ளை நோயை உருவாக்கிய யேர்சினியா பக்ரீரியாவைக் கொல்லும் நுண்ணுயிர்க் கொல்லி 1943 வரை கண்டு பிடிக்கப் படவில்லை. ஆனால், நுண்ணுயிர்க் கொல்லிகள் இல்லாமலே மக்களுடைய வாழ்க்கை முறை மாற்றங்களால் முன்னூறு ஆண்டுகளில் ஐரோப்பிய கொள்ளை நோயின் பாதிப்பு குறைய ஆரம்பித்தது. இந்தக் காலப்பகுதியில் மக்கள் தங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணும் நடவடிக்கைகள் நோயைத் தடுப்பதைக் கண்டு கொண்டனர். சில மாதங்களுக்கொரு முறை மட்டுமே குளித்தல் (அதுவும் தண்ணீர் வசதி கொண்ட செல்வந்தர்கள் மட்டும்) என்ற நிலை மாறி அடிக்கடி உடலைச் சுத்தம் செய்வதால், கொள்ளை நோயைக் காவும் தெள்ளுயிர்களைத் (fleas) தவிர்க்கப் பழகிக் கொண்டனர். நெருக்கமற்ற வாழிடங்களில் வசிக்கும் போது எலிகள் போன்ற நோய் காவும் பீடைகளைக் குறைத்து கொள்ளை  நோய்கள் உருவாகும்  வாய்ப்புகளைக் குறைக்க முடியுமென்றும் உணர்ந்து கொண்டனர்.

ஐரோப்பிய கொள்ளை நோய் சில முன்னேற்றகரமான சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தியது என்பதைக் குறிப்பிட வேண்டும். கொள்ளை நோயை தெய்வீக சக்தியால் குணமாக்க முயன்ற மதகுருக்களே கொள்ளை நோயால் பலியான போது, தெய்வ நம்பிக்கைகள் மதச் சடங்குகள் மீது நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இன்னொரு பக்கத்தில், மனித உடலமைப்பைப் பற்றிய புரிதல் எதுவும் இல்லாமலே ஊகத்தினடிப்படையில் வைத்தியம் பார்க்கும் போலி மருத்துவர்களை மறுதலித்து மனித உடலமைப்பை ஆய்ந்தறியும் முயற்சிகளும் ஆரம்பித்தன. எனவே, கொள்ளை நோய் விஞ்ஞான ரீதியான மருத்துவத் துறையையும் வளர்க்க ஒரு காரணமாக இருந்திருக்கிறது எனலாம். அது வரை அரச குடும்பத்தினரின் வசமிருந்த நிலங்களில் வாழ்நாள் கூலிகளாக மட்டுமே இருந்து வந்த சாதாரண மக்கள் பெருவாரியாக கிராமப் புற நிலங்களை நோக்கி நகர்ந்து நில உடைமையாளர்களாக  உருவான சமூக பொருளாதார மாற்றங்களும் இந்த 14 ஆம் நூற்றாண்டின் கொள்ளை நோய்க்காலத்தில் நிகழ்ந்தவையே. அதே நேரம் சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் கூர்மையடைந்த ஒரு காலமாகவும் இந்தக் கொள்ளை நோய்க் காலப்பகுதி விளங்கியது. இந்தக் கூர்மையடைந்த சமூகப் பாகுபாடுகள், அரச பரம்பரையினர், நிலப் பிரபுக்கள் ஆகியோரை எதிர்த்து சாதாரண குடிமக்கள் கிளர்ந்தெழவும் ஒரு பாதையை ஏற்படுத்தின.

இத்தகைய நேர்த்தன்மையான சமூக மாற்றங்கள் காரணமாகத் தான், ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலமும் சில வரலாற்றாய்வாளர்களால் 14 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாகவே கருதப் படுகிறது. 17 ஆம் நூற்றாண்டு வரை நீடித்ததாகக் கருதப் படும் இந்த ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலப்பகுதியில் விஞ்ஞானிகள், கலைஞர்கள் போன்றோரை மன்னர்களும், செல்வந்தர்களும் ஆதரித்து வளர்த்தனர். அது வரை அரசர்களின் ஒரே செல்லப் பிள்ளையாக விளங்கிய கிறிஸ்தவ மதம், இந்தக் காலப் பகுதியில் அறிவியலாளரோடும் கலைஞர்களோடும் அரச ஆதரவுக்காகப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் கிறிஸ்தவ மத அதிகார பீடங்கள் விஞ்ஞான எதிர்ப்பை விதைத்து மத ஆதிக்கத்தைத் தக்க வைக்க முயன்றாலும், இது பயனில்லாது போகவே இறுதியில் அறிவியலை அனுமதிக்கவும் அணைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தன.

இவ்வளவு மாற்றங்களையும் ஏற்படுத்திய ஐரோப்பியக் கொள்ளை நோய்க் காரணியான யேர்சினியா பெஸ்ரிஸ் பக்ரீரியாவின் நிலை என்ன ஆனது? 1940 களில் இருந்து 60 கள் வரை பல நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் கண்டு பிடிக்கப் பட்ட பின்னர், கொள்ளை நோய் என்பது சாதாரணமாக வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மூலம் குணமாக்கக் கூடிய ஒரு நோயாக மாறி விட்டது. இடையிடையே இந்தியா, மடகஸ்கார், உட்பட சில நாடுகளில்  கொள்ளை நோய் பெருவாரியாகப் பரவுவதாக செய்திகள் வரும். ஆனால் மரணங்கள் பெரும்பாலும் நிகழ்வதில்லை.

நவீன காலத்தில், ஒரு புதிய பிரச்சினை இந்த கொள்ளை நோய் பக்ரீரியா சார்ந்து உருவாகி வருகிறது. இந்த யேர்சினியா பெஸ்ரிஸ் மீது   உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஆர்வமுள்ள குழுக்களுக்கு எப்போதுமே ஒரு கண் இருக்கிறது.  இயற்கையான தொற்றில் இரு வகையான நோய் நிலைமைகளை யேர்சினியா பெஸ்ரிஸ் பக்ரீரியா உருவாக்கும்: நிண நீர்க்கணுக்களில் வீக்கம் ஏற்படுத்தும் பியூபோனிக் வகை இலகுவாகப் பரவாமல்  குணப்படுத்தப் படக்கூடியது. ஆனால், நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தும் நுரையீரல் தொற்று இந்த பக்ரீரியாவினால் எற்பட்டால், நோய் ஆபத்தானதாக இருக்கும், அத்தோடு சமூகத்தில் இலகுவாகப் பரவக் கூடிய நிலையும் ஏற்படும். எனவே, காற்று மூலம் இந்தக் கொள்ளை நோய் பக்ரீரியாவைப் பரப்புவது உயிரியல் ஆயுதம் தயாரிக்க முயலும் சக்திகளால் முயற்சிக்கப் படக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. இதனால், மேற்கு நாடுகளில் யேர்சினியா பெஸ்ரிஸ் பக்ரீரியா தொடர்பான ஆய்வுகள் மிகுந்த கட்டுப் பாடுகளுடன் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன.

மருத்துவ விஞ்ஞானம் முன்னேறாத காலத்தில் உருவான கொள்ளை நோய் காலங்கடந்தாவது வெற்றி கொள்ளப் பட்டதற்கு  அது பக்ரீரியாவினால் ஏற்பட்ட நோயாக இருந்ததும் ஒரு காரணம். ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை அதன் இருப்பையே மனிதனுக்கு அறிவிக்காமல் ஒரு நுண்ணுயிர் மனிதனோடு பயணித்து வந்திருக்கிறது – அதன் பெயர் வைரஸ்.

இந்த வைரஸ் நுண்ணுயிர்களால் ஏற்பட்ட பெருந்தொற்றுகளில் முதன்மையானது இன்புழுவன்சா எனப்படும் புளூ காய்ச்சல் – இன்புழுவன்சா பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

தொற்றுக்கள் தொடரும்

யோ.அன்ரனி யூட் -அமெரிக்கா

அன்ரனி யூட்

 

(Visited 138 times, 1 visits today)