குறுக்கும் மறுக்கும் 02- ‘தன் மோகத்தின் அபத்தம்’- கட்டுரை-கருணாகரன்

கருணாகரன்அ.முத்துலிங்கத்தையும் ஷோபாசக்தியையும் இலங்கையில் வாசித்ததை விட தமிழ்நாட்டில் வாசித்தோரே அதிகம். இருவருக்கும் இலங்கையை விடத் தமிழ்நாட்டில்தான் அறிமுகமும் செல்வாக்கும் அதிகமுண்டு. ஏறக்குறைய நட்சத்திர எழுத்தாளர்கள் என்ற அளவுக்கு. ஷோபாசக்திக்கும் முத்துலிங்கத்துக்கும் மட்டுமல்ல, த. அகிலன், கற்பகம் யசோதர, தமிழ்நதி, சயந்தன், ப.தெய்வீகன், இளங்கோ (டிசே தமிழன்), அகரமுதல்வன், வாசு முருகவேல், செல்வம் அருளானந்தம், குணா கவியழகன், தீபச்செல்வன், கி.பி.அரவிந்தன், சுகன், அனார், பா. அகிலன், ஸர்மிலா ஸெய்யித், அனோஜன் பாலகிருஸ்ணன், தேவகாந்தன் போன்றோரையும் தமிழ்நாடே அதிகமாக அறிந்திருக்கிறது. ஏன் சேரன், றஸ்மி, பா. அகிலன், றியாஸ் குரானா, தில்லை  போன்றோரின் பிந்திய கவிதைகளின் மீதான ஆர்வமும் அறிதலும் கூட ஈழத்தமிழ்ப்பரப்பையும் விட அதற்கு வெளியிலேயே அதிகமுண்டு.

இலங்கையில் இவர்களைப் படித்தவர்கள், படிப்பவர்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் இவர்கள் அறியப்பட்ட அளவுக்கும் பேசப்படுகின்ற அளவுக்கும் இல்லை. இவர்களுக்கு விருதுகளைக் கொடுத்தது, விமர்சனங்களை முன்வைத்தது கூட அதிகமும் தமிழ்நாடுதான். ஆனந்த விகடன், இந்து தமிழ் திசை, ஆத்மா நாம் அறக்கட்டளை, டெல்லித் தமிழ்ச்சங்கம், த.மு.எ.ச, இலக்கியச் சிந்தனை, விஜய் தொலைக்காட்சி, கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர்த் தமிழ்ச் சங்கம் எனப் பல தரப்புகளின் விருதுகள். ஜெயமோகன், அ.மாக்ஸ், எஸ்.வி. ராஜதுரை, அ. ராமசாமி போன்ற பலருடைய விமர்சனங்கள், கவனத்தைக் கோரும் கட்டுரைகள் என இது நீள்கிறது.

யாருக்குப் பெறுமதி தெரிகிறதோ அவர்களால்தானே அதைப் பாராட்டவும் தகுதிகூறவும் முடியும். இந்த அளவுக்கு இலங்கையில் இவர்களுக்கு இதுவரையில் விருதுகள் வழங்கப்பட்டதோ, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதோ குறைவு. பலருக்கு இதெல்லாம் நடக்கவே இல்லை. இங்கே  இதற்குரிய சூழல் உருவாகாதற்குக் காரணம் குழப்பங்களும் தாழ்வுணர்ச்சியுமே. அரசியல் வகைப்பாடுகள் வரையறுத்த ஒடுங்கிய பார்வை, குழு மனப்பாங்கு, பரந்த வாசிப்பின்மை, திறந்த மனதோடு எதையும் எவரையும் அணுக முடியாத நிலை, ஜனநாயகத்தில் ஆர்வமும் பரிச்சியமும் இல்லாமை, வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உணராத போக்கு போன்றவை இந்தத் தாழ்வுணர்ச்சி உருவாகக் காரணமாகின்றன.

ஆனால், இது ஒரு பெரிய குறைபாடு என்று இங்கே பலரும் உணர்வதில்லை. இதைப்பற்றிய உரையாடல்களின்போது பலரும் கூறும் எளிய விளக்கம், இவர்கள் தமிழ்நாட்டை மையப்படுத்தி எழுதுகின்றனர். அதாவது தமிழ்நாட்டு ஊடகங்களின் தேவை மற்றும் தமிழக வாசகர்களின் உளவிருப்பைத் திருப்திப்படுத்தும் விதமாக எழுதுவதாகும் என. இதிலே ஒரு குற்றச்சாட்டும் தங்களை விடுவித்துக் கொள்ளும் விதமான சுயசுத்தப்படுத்தல் தன்மையும் உண்டு. இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக அங்கங்கே பலரும் பகிரங்க வெளியில் வெளிப்படுத்தியும் வந்துள்ளனர். ஆனால் இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் அத்தகையதொரு நோக்கிலோ உத்தியிலோ எழுதுவதாகக் கொண்டாலும் எல்லோரையும் இவ்வாறான அடிப்படையில் நோக்க முடியாது என்பதே உண்மை. அப்படி நோக்க முற்படுவது தவறாகும். தவறு மட்டுமல்ல, தொடர்ந்து நம்மைப் பிழையான கணிப்பிலேயே பயணிக்கவும் வைத்து விடும். உண்மையை விட்டு  வெகு தொலைவில் அது நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். நாமாகவே ஒரு அநீதியை உருவாக்கி, அதை வளர்த்தும் விடுவோம்.

இதேவேளை இது ஒரு சிரிப்புக்கிடமான நியாயமே. ஏனென்றால் ஈழத்து எழுத்துகள், எழுத்தாளர்கள் என்பதற்கு அப்பால் மலேசிய, சிங்கப்பூர் எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் வாசித்துக் கொண்டாடுகின்றது தமிழ்நாடு. (தமிழிலக்கிய வரைபடத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் இப்படி விரிந்த தளத்தில்தானே யோசிக்க முடியும்) எனவே இந்தக் குற்றச்சாட்டுக்கு அர்த்தமே இல்லை.  நம்மவர்களுடைய மனம் இங்கே தொழிற்படுவது எப்படியென்றால், தம்மைக் குறித்து உலகம் அக்கறை கொள்ள வேண்டும். ஆனால் உலகத்தைப் பற்றியோ, பிறரைப் பற்றியோ நமக்கு எந்த அக்கறையும் வேண்டியதில்லை என்பதாகவே. இதுதான் ஈழப்போராட்டச் சிந்தனையிலும் உள்ளது. நமக்காகவே சர்வ உலகமும் உலகத்தில் உள்ள எல்லாமும், எல்லோரும் என்ற எண்ணம். இது எவ்வளவு மோசமான சிந்தனை? இங்கே ஒரு கேள்வியை முன்வைத்து விட்டு அப்பால் செல்லலாம், ஈழத்து எழுத்தாளர்களுக்கு (புலம்பெயர்ந்திருப்பவர்கள் உட்பட) தமிழ்நாடு தன்னளவில் பேசியும் விருதுகளை அளித்தும்  அங்கீகாரத்தை வழங்குகிறது. ஒரு சந்தர்ப்பத்திலாவது தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு இத்தகைய மதிப்பையும் கௌரவத்தையும்  நாம் கொடுக்க முனைந்திருக்கிறோமா? அ.முத்துலிங்கத்தின் இலக்கியத் தோட்ட விருது, இயல் விருது இதில் விலக்கு. அதற்கே ஆயிரம் விமர்சனங்கள் இங்கே உண்டு.

தவிர, மேற்சொன்ன எழுத்தாளர்கள் தமிழ்நாட்டு இதழ்களில் அதிகமாக எழுதிவருவது, இவர்களுடைய புத்தகங்கள் தமிழ்நாட்டிலேயே அதிகமாக பதிக்கப்பட்டு வெளிவருவது, அங்கேயே இலக்கியச் சந்திப்புகள், உரையாடல்களில் இவர்கள் கூடுதலாகக் கலந்து கொள்வதெல்லாம் இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆனால், இதை மட்டும் காரணமாகக் கொள்ள முடியாது. இதற்கப்பால் தமிழ்நாட்டின் வாசகப் பரப்பிலும் விமர்சனப் பரப்பிலும் கவனத்தைக் கோரும் அளவுக்கு இவர்களுடைய எழுத்துகள் இருப்பதே முதன்மைக் காரணம். இரண்டாவது உலகளாவிய இலக்கிய வாசிப்பையும் அவதானிப்பையும் தமிழ்நாட்டினர் கொண்டிருப்பதாகும். உலக இலக்கியம் குறித்த உரையாடல்களோடு, தமிழிலக்கிய வரைபடம் குறித்த உரையாடல்களை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவது இதற்கு உதாரணம். மூன்றாவது, ஒப்பீட்டளவில் ஈழத்தை விட திறந்த மனதோடு பலதையும் அணுகக் கூடிய தடையற்ற உளநிலையாகும். இந்த மூன்று காரணங்களினாலும் தமிழ்நாட்டினரால் அவதானிப்பையும் அறிதலையும் இவற்றின் மீதான கவனக்குவிப்பையும் விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடியதாக உள்ளது.

இதில் மூன்று வகையான குணவியல்புகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒன்று, பொதுவான வாசிப்புக்குரிய எழுத்துகள். முத்துலிங்கம், செல்வம் அருளானந்தம் போன்றோருடையவை இந்த வகையானவை. உலகப் பரப்பில் ஊடாடிய அனுபவங்களை மையப்படுத்தியவை இவர்களுடைய எழுத்துகள். நேரடியான அரசியல் முட்டுப்பாடுகளை விடுத்து பொதுவான வாழ்க்கை நோக்கையும் மனித நடத்தைகளையும் முன்வைப்பவை. முத்துலிங்கம் தன்னுடைய தொழில் நிமித்தமாக வாய்த்த வெளிநாட்டுப் பயண வழிகளையும் வெளிகளையும் இலக்கியமாக்கிக் கொண்டிருப்பவர். முத்துலிங்கத்தின் கதைகளும் கட்டுரைகளும் பெரும்பாலும் இந்தப் பண்பிலேயே உள்ளன. பாகிஸ்தானிலிருந்து ஆபிரிக்க நாடுகள் வழியாக கனடா, அமெரிக்கா வரையிலான பல கண்டங்களின் அனுபவச் செறிவை இவற்றில் காண முடியும். இது சுவாரசியமான புதிய பல திசைகளைத் திறப்பது. செல்வம் அருளானந்தம், புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளையும் அவலத்தையும் சிரிப்பின் மொழிவழியாகக் கடந்து செல்ல முயற்சிப்பவர். இதுவும் ஒரு புதிய அனுபவப் பிராந்தியமே. ஆகவே இந்த வகை எழுத்துகள் புதியன தேடுவோரை அதிகம் ஈர்க்கின்றன.

இரண்டாவது புலிகளின் மீதும் இலங்கை அரசு மீதும் கண்டனங்களையும் விமர்சனத்தையும் கொண்ட எழுத்துகள். ஷோபசக்தி தொடக்கம் இதற்கும் ஒரு நீண்ட வரிசையுடைய பட்டியலுண்டு. ஈழப்போராட்டம், அதை முன்னெடுத்த முக்கியமான சக்தியாக பெருந்திரள் சமூகத்தினால் உணரப்படும் விடுதலைப்புலிகள் ஆகியவற்றின் மீதான விமர்சனத்தை  உள்ளடக்கமாகக் கொண்ட எழுத்துகள் இவை. இதேவேளை சமநிலையிலோ அல்லது சற்றுக் கூடியும் குறைந்தும் இலங்கை அரசையும் அதன் படைகளையும் விமர்சிக்கும் எழுத்துகளும் இவையாகும். இவ்வாறு இரண்டு தரப்பினரையும் நியாயத் தராசில் வைத்து இயற்றப்படும் பிரதிகளுக்கென்றொரு தனிக் கவர்ச்சியும் பெறுமானமும் உண்டு. இதனால் இதை வாசிப்போரும் அதிகமுண்டு.

மூன்றாவது, புலிகளையும் ஈழப்போராட்டத்தையும் எத்தகைய விமர்சன நோக்கிலும் அணுக முற்படாமல் தாம் நம்பிய வழிகளில் பயணிக்க விரும்புவோருக்கான எழுத்துகள். இதை தீபச்செல்வன் போன்றோர் உருவாக்கியளிக்கின்றனர். இதற்கும் ஒரு பெரிய வாசகப் பரப்பும் வரவேற்பு நிலையும் உண்டு. சற்று அழுத்தமாக இதை விபரிக்க வேண்டுமானால் இவற்றுக்கே வெகுசனக் கவர்ச்சியும் ஆதரவும் உண்டு.

நான்காவதாக ஒரு சிறிய தரப்புண்டு. அது தனியே புலிகளையும் புலிகளை ஆதரித்து நிற்போரையும் மூர்க்கமாக எதிர்த்து எழுதுவோருடைய பிரதிகள். இவை அதிகளவுக்குச் செல்வாக்குப் பிராந்தியத்தை உருவாக்கியவை அல்ல. ஆனாலும் இந்த வகை எழுத்துகளும் பிரதிகளும் உண்டு.

ஆகவே மேற்சொல்லப்பட்ட மூன்று பிரதான வகைப்பாடுகளையும் தமிழ்நாட்டு இலக்கிய வாசகர்களும் விமர்சகர்களும் தொடர்ச்சியாகப் பயின்று விமர்சித்து வருகின்றனர். இதற்கென ஒரு பாரம்பரியமே கடந்த இருபது ஆண்டுகளில் உருவாகி விட்டது. புத்தகச் சந்தையிலிருந்து இதழியல் மற்றும் ஊடகத்துறை வரையில் இந்த எழுத்துகளுக்கும்  பிரதிகளுக்கும் ஒரு முக்கியமான இடம் அளிக்கப்படும் அளவுக்கு இது வளர்ச்சியடைந்துள்ளது. தமிழிலக்கியத்தில் ஈழ இலக்கியத்தையும் அதன்  ஒரு செழிப்பான கூறாக உள்ள புலம்பெயர் இலக்கியத்தையும் வைத்து நோக்கும் போக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்நிமித்தமாக இந்த எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாட்டின் வாசகர்கள், ஊடகங்கள், பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் போன்ற தரப்புகளும் இடையில் ஒரு பலமான உறவும் தொடர்பாடலும் உருவாகியுள்ளன. இது பரஸ்பர நிலை ஒன்றை வளர்த்துள்ளது. ஆழமாக நோக்கினால் இதன் உள்ளும் பின்னும் உள்ள  அடிப்படையான பெரியதொரு பெறுமதியான உழைப்பையும் நீண்டகால முயற்சிகளையும் உணர முடியும். ஒவ்வொரு எழுத்தாளரும் தமது பிரதிகளை உருவாக்குவதற்காக எடுத்துக் கொண்ட பிரயத்தனத்தையும் அதைப் பெரியதொரு வெளி வாசகப் பரப்பில் நிலைநிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சியையும் எளிதாக மதிப்பிட முடியாது. இதற்கும் ஒரு வரலாற்றுப் பின்புலமுண்டு. யுத்தம்  தீவிரமாக நடந்து கொண்டிருந்த சூழலில் எல்லாவகையான பிரதிகளையும் இலங்கையில் அச்சிடவோ வெளியிடவோ முடியாத நிலையிருந்தது. இதனால் பலரும் தவிர்க்கவே முடியாமல் தமிழ்நாட்டுப் பதிப்பகங்களையும் தமிழ் நாட்டு ஊடகங்களையும் அணுக வேண்டியிருந்தது. இதுவும் தமிழகப் பரப்பில் இந்த எழுத்துகளும் எழுத்தாளர்களும் முன்னறிமுகத்தைப் பெறுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. தாம் இனங்கண்டவற்றை வெளிப்படையாகவும் கவனத்துக்குரிய விதமாகவும் முன்வைப்பதில் தமிழ்நாட்டினர் உற்சாகம் காட்டினர். இதில் சில இடங்களில் அரசியல் ரீதியான ஈர்ப்பும் விலக்கமும் நிகழ்ந்ததும் உண்டு. எனினும் இதைமுழுதாக நோக்கினால் இது ஏறக்குறைய ஈழப்போராட்டத்துக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் தமிழ்நாட்டினர் வெளிப்படுத்திய அக்கறைக்கும் ஈடுபாட்டுக்கும் பங்களிப்புக்கும் நிகரானது.

ஆனால் இலங்கை நிலவரம் வேறு. இலங்கையில் பழக்கப்பட்ட எல்லைகளுக்குட்பட்ட பிரதிகளே வாசிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டது. அவற்றுக்கான மதிப்பையே பலரும் வழங்கினர். ஏனையவை பாராமுகமாக்கப்பட்டன. இதைக் கடந்து அவற்றைப் படித்தாலும் அதைப் பற்றி வெளியே பகிர்வதையோ பேசுவதையோ யாரும் செய்யவில்லை. அல்லது எதிர்மறையாக அவற்றை நோக்கினர். இது அவரவர் கொண்டிருந்த அரசியல் மற்றும் தற்காப்புத் தன்மைகளின் வெளிப்பாடாகும். ஆகவே இது ஒரு உட்சுருங்கலின் விளைவான புறக்கணிப்பு அல்லது நிராகரிப்பாக இருந்தது. அல்லது பிடித்தவற்றைத் தனிக் கொண்டாட்டமாக்குவதாக நிகழ்ந்தது. அதுவும் உள்ளடங்கலாக. பகிரங்க வெளியில் பாராட்டுகள் அல்லது விமர்சனம் என்றால் அது தத்தமது அணிக்குள் அல்லது குழுவுக்குள் என்ற அளவிலேயே நடந்தன. அதுவும் அவை தமக்கு –  தமது அரசியலுக்கு உவப்பானவையாக இருந்தால் மட்டுமே.

யுத்த காலத்தில் (போராட்ட காலத்தில்) இது மிக ஒடுங்கியே இருந்தது. அப்போது ஒடுங்கியிருந்ததற்குக் காரணம் உண்டு. யுத்தத்தை நடத்திய சக்திகளின் விருப்பு வெறுப்புகள் இதில் தாக்கம் செலுத்தியதால் அந்த நிலை ஏற்பட்டது எனலாம். ஆனால் யுத்தமற்ற இன்றைய சூழலில், யுத்தத்தை நடத்திய சக்திகள் ஒடுக்கம் கொண்டுள்ள நிலையிலும் அப்படித்தான் சூம்பலாக இந்தப் போக்கு நீடிக்கிறது என்றால், இதற்குப் பொருள் என்ன?

சரிநிகர், மூன்றாவது மனிதன் உள்ளிட்ட ஒன்றிரண்டு பத்திரிகைகளும் இதழ்களும் இதைக் கடந்து சில அடிகளை முன்வைக்க முயற்சித்தாலும் அவற்றினாலும் தொடர்ச்சியாகச் செயற்பட்டு ஒரு போக்கினை உருவாக்கவோ அடையாளப்படுத்தவோ முடியவில்லை. இறுதியில் அந்தத் தளங்களில் செயற்பட்டோரும் சிதைந்து நாட்டை விட்டே வெளியேறி விட்டனர். இதன்பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப் போல எல்லாமே சுருங்கித் தேயத் தொடங்கின. இன்று இலங்கைச் சூழலில் எழுத்து, பதிப்பு, வாசிப்பு, விமர்சனம், பாராட்டு, மதிப்பளித்தல் போன்றனவெல்லாம் நலிந்த நிலையிலேயே உள்ளன. கடந்த பதினைந்து ஆண்டுகளில் வெளியான பிரதிகளைத் தொகுத்து நோக்கினால் இந்த உண்மை தெளிவாகும். ஈழத்தில் (புலம்பெயர்ந்தோர் தவிர்த்து) வெளியாகிய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கவிதைகள், விமர்சனம் உள்ளிட்ட பிரதியாக்கங்களின் தரம், தொகை, செயற்பாட்டுப் பரப்பு, உள்ளடக்க எல்லை என்பவற்றை வைத்து இதை மதிப்பிட்டுக் கொள்ளலாம். கூடவே இந்தக் காலப்பகுதியின் இதழ்கள், பதிப்புச் செயற்பாடுகள், விமர்சனங்கள், மதிப்பளித்தல்கள் போன்றவற்றையும் தொகுத்து நோக்கலாம். முக்கியமாக ஆற்றல் மிக்க படைப்பாளிகள், எழுத்து மற்றும் கலை, இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எவரும் உரிய முறையில் கவனப்படுத்தப்பட்டதோ அவர்களுக்கான மதிப்பளிக்கப்பட்டதோ இல்லை. அரசு சார்பு விருதுகளைத் தவிர குறிப்பிடத்தக்க ஒரு விருது கூட ஈழத்தில் வழங்கப்படுவதில்லை. புறநடையாக விபவி, கொடகே போன்றவற்றின் விருதுகள் இருக்கின்றன. இவை கூட சிங்களச் சமூகத்தின் பங்களிப்பிலிருந்தும் செல்வாக்கிலிருந்தும் உருவாகியவையே. மற்றும்படி புலம்பெயர் சூழலில் இருந்து அ. முத்துலிங்கம், செல்வம் அருளானந்தம் போன்றோரினால் வழங்கப்படும் கனடா இலக்கியத் தோட்டம் விருதைக் கடந்து வேறு சிறப்பான விருதுகள் எதுவும் கிடையாது. விருது என்பது கவனப்படுத்தலில் முக்கியமான ஒரு அம்சமாகவும் தகுதியை ஓளரவுக்கு அடையாளப்படுத்துவதாகவும் உள்ளதாலேயே இங்கே அதைப்பற்றிப் பேசப்படுகிறது.

தவிர, சில நம்பிக்கையளிக்கும் பதிப்பு முயற்சிகளும் (வடிவம், நேர்த்தி, செம்மை உள்ளடங்கலாக) இலங்கைச் சூழலில் இருந்தன. முக்கியமாக காகம் வெளியீட்டகத்தின் முயற்சிகளை இங்கே குறிப்பிட வேண்டும். அதற்கு முன்பு 1970 களில் தமிழியல், அலை பின்னர் தேசிய கலை இலக்கியப் பேரவை, மூன்றாவது மனிதன், நிகரி, மகிழ் போன்றன இதில் கவனிக்கத்தக்கவை. அவையும் மெல்ல வடிந்து விட்டன. மல்லிகைப்பந்தல், பூபாலசிங்கம், மகுடம், குமரன், ஜீவநதி, ஞானம் போன்றவை அதிகமாகப் பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டாலும் பதிப்பாக்க வெளிப்பாட்டில் போதாமைகளையே உணர முடிகிறது. இதற்கப்பால் என்றால்   எல்லாவற்றுக்கும் தமிழ்நாட்டையே  அண்ணாந்து பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. (உதிரிகளாகச் சில சில வெளியீடுகள் அங்கங்கே வந்துள்ளன. அவற்றில் சில கவனிக்கத்தக்கவை என்பது இங்கே கவனம் கொள்ளப்படுகிறது).

இது எப்படியென்றால், யுத்தத்துக்கு முன்னர் நம்முடையை சூழலில் ஏராளம் கைத்தொழில் முயற்சிகளும் உற்பத்திகளும் இருந்தன. ஏராளம் தொழில் மையங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அன்று பல இலங்கைப் பொருட்களுக்கு இந்தியப் பரப்பில் பெரிய வரவேற்பே இருந்தது. இன்று எல்லாமே தலை கீழாகி விட்டன. நெற்றியில் ஒட்டப்படும் சின்னஞ்சிறிய ஒட்டுப் பொட்டிலிருந்து அடுப்படியில் உள்ள பண்ட பாத்திரங்கள் உள்ளடங்கலாக வீதியில் ஓடுகின்ற வண்டி, வாகனங்கள், கேட்கின்ற பாடல்கள், பார்க்கின்ற படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இருக்கின்ற தளபாடங்கள், உடுத்துகின்ற உடை வரை அனைத்தும் இந்தியப் பொருட்களாகவே மாறியுள்ளன. இதைப்போல இந்தியப் படைப்புகள், இந்திய விமர்சனங்கள், விமர்சகர்கள், இந்தியப் பதிப்புகள் என்ற நிலை வளர்ந்துள்ளது – வந்துள்ளது.

இதற்கு பிரதான காரணங்களில் ஒன்று இந்தத் தளத்தில் அதிக உழைப்பைச் செலுத்த முயற்சிக்காமலிருப்பதாகும். இரண்டாவது பழகிய எல்லைகளைக் கடந்து செல்ல முடியாமல் இருப்பது. மூன்றாவது, சுய விமர்சனம், மதிப்பீடு, விமர்சனம் போன்றவற்றைச் செய்யாமல் இருப்பதும் இவற்றுக்கு முகம் கொடுக்க முடியாமலிருப்பதுமாகும். நான்காவது வெளிச் சூழலில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள், வளர்ச்சிகளை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமை. ஐந்தாவது திறந்த உரையாடலுக்குத் தயாரில்லாத நிலை. அதற்கான தகுதிப்படுத்தலைச் செய்ய முடியாதிருப்பது. ஆறாவது, தத்தமது அரசியல் எல்லைகளுக்குள் சிறைப்பட்டிருப்பதை உணராதிருப்பது. ஏழாவது, பொதுப் பரப்பில் ஜனநாயகப் பண்புடன் செயற்பட முடியாதிருப்பது, அதில் ஆர்வமற்றிருப்பது, அந்தப் பண்பு குறைந்த நிலை என்பது. எட்டாவது, தாமறிந்த உண்மைகளுக்கே விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருக்க முடியாத அந்தர நிலை. இது மிகமோசமான பின்னடைவை ஈழத்தமிழ்ச்சமூகத்துக்குப் பல நிலைகளிலும் தந்து கொண்டிருக்கிறது என்பது மிகக் கவலைக்குரியதாகும். ஒன்பதாவது, பாவனைகளை ஒதுக்கமுடியாமல் அதைப் பராமரித்துச் சுவை காண்பது. பத்தாவது, யாரையும் மனந்திறந்து பாராட்ட முடியாமல், யாரையும் அங்கீகரிக்க முடியாதிருப்பது. இல்லையென்றால் கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை எழுத்தாளர்களும் கவனத்திற்குரிய பிரதிகளும் கொண்டாடப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழுமா? இந்தக் காலப்பகுதியில் வெளியான குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் எவை?  விமர்சகர்கள் யார்? அவர்கள் முன்வைத்த விமர்சனங்கள் எத்தகையன? என்ற கேள்விகளையும் இங்கே அருகில் வைக்கலாம்.

ஆனால் ஈழத்திலும் புலம்பெயர் சூழலிலும் வெளியான முக்கியமான பிரதிகளும் எழுத்தாளர்களும் இந்தியச் சூழலில் கவனப்படுத்தப்பட்டுள்ளமையை இங்கே மீளக் குறிப்பிட வேண்டியுள்ளது.  இந்த கொரோனா அடைவு காலத்திற்கூட Zoom செயலியிலும் க்ளப்ஹவுஸ் உரையாடல்களிலும் கூட அவர்கள் ஈழத்தின் இலக்கியப் பிரதிகளைப் பற்றியும் போக்குகளைப் பற்றியும் உரையாடுகிறார்கள். பதிலாக இங்கே கனத்த மௌனமும் பலத்த வரட்சி நிலையுமே காணப்படுகிறது.

இப்படியே இது நீடிக்குமானால் தமிழிலக்கிய வரைபடத்தில் ஈழத்தின் நிலை கவலைக்குரிய ஒன்றாகவே இருக்கும். ஒரு நண்பர் பகடியாகச் சொன்ன உண்மையை இங்கே பொருத்தம் கருதிக் குறிப்பிடலாம். “ஈழப்போராட்டம் பெரும் பிம்பமாக வெளிப்பட்டு ஆச்சரியப்படுத்தி  விட்டு எப்படி உடைந்து தோற்றதோ அதைப்போல ஈழ இலக்கியமும் (போர் இலக்கியம் உள்பட) தோற்றுப் போகும்போலத்தான் உள்ளது.

மீட்பர்கள் உண்டா? மாற்றம் நிகழுமா?

கருணாகரன்இலங்கை

கருணாகரன்

(Visited 357 times, 1 visits today)
 

6 thoughts on “குறுக்கும் மறுக்கும் 02- ‘தன் மோகத்தின் அபத்தம்’- கட்டுரை-கருணாகரன்”

Comments are closed.