இலக்குகளை நோக்கிய வாழ்வின் பெருநதி-கட்டுரை-டினோஜா நவரட்ணராஜா

இவ் உடலெனும் கூட்டின் பெரும் பயணம் பெருநீளம். எண்ணற்ற சவால்கள் ஏராளம் எதிர்பார்ப்புக்கள். விடை காணாத வினாக்கள் விடைதேடும் விழிகள், மனக்குகைக்குள் ரகசியங்கள், மண்டியிடும் மௌனங்கள், கொட்டித்தீர்த்த கோபங்கள் இதய மறைவில் கண்ணீர்கள். இவ்வாறாக வாழ்க்கையெனும் பெரு நதி நீண்டதும் குறுகியதுமாய் எத்தனை எத்தனை அம்சங்களை இழுத்துக் கொண்டே இரைகிறது.

டினோஜா நவரட்ணராஜாஇப்பயணம் உங்களுக்கும் எனக்கும் பொதுவானதே. அதோ அச் சுவரிலூரும் பல்லிக்கும் வானத்துப் பருந்திற்கும் பொதுவானதே. பயணம் ஒன்றாயினும் பாதைகள் தான் வெவ்வேறு. இவ்வாறு நீண்ட இப்பயணத்தில் ஏராளம் இலக்குகள் குறிக்கோள்கள் அத்தோடு ஏனென்றே தெரியாமல் நகரும் நொடிகள் கூட ஏராளம். இதில் இலக்குகள் என்பவை இன்றியமையாவையன்றோ. நம்மில் பலரதை சரிவர உணர்வதில்லை. உணரும்போதினும் சரிவர தேர்வுசெய்து அடைவதில் பின்னிப்பது வழக்கமேயாகுகின்றது.

ஏன் என்று நோக்கின் இயலாமைகளை மட்டும் கொண்டு இலக்குகளை தீர்மானிக்கையில் சுயங்களிற்கான வெளிகள் எங்கே. என்னால் எது இயலுமோ, எது எனக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் மட்டும் தருகிறதோ, எதைச் செய்தால் எனக்கு எவ்வித சவால்களும் இல்லாமல் இருக்கின்றனவோ, அவைகள் தான் நமக்கான ஆரோக்கியமான இலக்குகள் ஆகுமா..?  எம் பலவீனங்களையும் வெற்று மாயத் தோற்றங்களையும் கொண்டு உருவாக்கப்படும் இலக்குகள் நிச்சயம் நம் திறமைகளை வெளிக்கொணரும் பாதையாக அமையாதே. ஆக எமக்கான இலக்குகளை நாம் எப்படி பொருத்துக்கொள்வது?.

நிச்சயம் கேட்கப்பட வேண்டிய கேள்வி தான். அறியப்பட வேண்டிய அதிகாரம் தான். இவற்றை முதலில் நாம் நமக்குள்ளே கேட்டுக் கொள்வோம். நம் வாழ்வில் இலக்கு என்ற ஒன்று ஏன் அவசியம், எதற்காக நாம் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்??. ஆம் எமது வாழ்வில் அனைவருமே மிகவும் மகிழ்ச்சிகரமாக நிம்மதியாக வாழவே இச்சை கொள்வோம்  இல்லையா? இவ்வாறு நாம் நினைந்து கொள்ளும் போது தான் நாம் இருவகையான மகிழ்ச்சிகளை சந்திக்க இயலும். ஒன்று வெறுமனே குறுகிய நேரங்களையும் சிற்றின்பங்களையும் மட்டுமே மையமாக கொண்டது. இரண்டாவது வாழ்நாட் காலம் முழுவதும் வரை நிம்மதியை தரக்கூடிய பெரிய அடைவுகள்.

இவற்றில் எதனை நாம் தெரிவு செய்யப் போகின்றோம் என்பதில் தான் நம்முடைய எதிர்காலமே அடங்கி இருக்கின்றது. ஆகவே நாம் தீர்மானிக்கும் இலக்குகள் நம்முடைய வாழ்நாள் வரைக்கும் நம்மை தொடர்வதாக அமைதல் நன்று. ஒரு இலக்கு ஒன்றை நமக்காக ஏற்றுக் கொள்ள முன் அது நமக்கு ஏன் தேவையாகின்றது, அதனை நாம் எப்படி அடையப் போகின்றோம், அதனை அடைவதற்காக நாம் நம்மிலும் நம் செயற்பாடுகளிலும் எத்தகைய வெளிப்பாடுகளை பொருத்திக்கொள்ள வேண்டும்,  நம்முடைய இலக்கானது நம்மை சார்ந்த கல்வி, குடும்பம், உடல் ஆரோக்கியம் உட்பட பல அம்சங்களில் எத்தகைய தாக்கங்களை செலுத்த போகின்றது,  ஒரு கட்டத்தில் அவ்விலக்குகளை நாம் அடைந்து கொள்கையில் நாம் இருக்கும் நிலை எவ்வாறு என்பதை முன்னரே சிந்தைக்குள் கொண்டு வருதல் நன்று.

இங்கு நம்மில் பெரும்பாலானோர் இதுதான் நமக்கான இலக்கு என்று எழுந்தமானமாக ஏதேனும் தெரிவு செய்து அதை நோக்கி பயணிக்கின்றோம். இடையில் சவால்கள்,  பிரச்சனைகள் என பல நம்மை சோதிக்கும். அவற்றை எதிர்கொள்ளத் துணிவற்று அவ்விடத்திலேயே குறித்த இலக்கினை கைவிடுவதேனோ. மீண்டுமொரு இலக்கை நோக்கி பயணிப்பதேனோ. காரணம் முறையான திட்டமிடலின்மையே.

நாம் முன்னரே அறியாத தொலைதூர இடம் ஒன்றிற்கு பயணம் செய்கையில் செல்லவேண்டிய இடம் குறித்த வரைபடம் அவசியமல்லவா. புதியதொரு உணவை புதிதாக தயாரிக்கையில் படிமுறைகளை தேடி அறிதல் அவசியம் அல்லவா. ஆக ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிற்கும் திட்டமிடலென்பது அவசியம் என்றாகும்போது எமது வாழ்வின் இலக்குகள் மற்றும் அவற்றிற்கான திட்டமிடல்கள் நிச்சயமாக இன்றியமையாததன்றோ.

இவ்வாறாக நாம் ஒரு இலக்கினை திட்டமிடுகையில் நம் புலன்களை ஒருங்கிணைத்து அதனை நம்முள் உள்வாங்க வேண்டியது அவசியம். இவ்வாறு நம் புலன்கள் மூலமாக நம்முடைய இலக்கானது உள்வாங்கப்படும் போதுதான் இலக்கை நோக்கிய நம் பயணம் முழுமை அடையும். பயணத்தின் போது பல்வேறு தடைகள் வரலாம் துவண்டு விடாதே. தடைகளை எப்படி பயனுள்ளதாக்க இயலும் என சிந்தியுங்கள் ஒவ்வொரு காத்திருப்பும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அமைதல் நம்மைச்சார்ந்ததே.

அத்தோடு இலக்கு என்பது தீர்மானிக்கப்பட்ட உடனேயே நம்மால் அதனை அடைந்து விடலாகாது. பின்னர் அடையப்படவேண்டிய மிகப்பெரிய குறிக்கோள்களிற்கான சிறுசிறு நகர்வுகளே ஆரோக்கியமானது. அதாவது தங்களுடைய இலக்குகள் குறித்த பயணப்பாதைகளை தீர்மானியுங்கள். தீர்மானித்தவற்றை  சிறு சிறு கட்டங்களாக வகுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கட்டங்களையும் அடைய வேண்டிய காலம்,  அடையும் வழி, அதற்கான நுட்பம் போன்றவற்றை நேர்த்தியாக தீர்மானித்தல் அவசியம் என்பதோடு மேற்கொள்ளும் திட்டமதில் நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.

பயணங்களில் சவால்கள் வருதல் நன்றே. ஒவ்வொரு இடர்களின் போதுதான் உங்களுடைய இயலுமைகள் தங்களுக்கே புலப்படும். துவண்டு விழும் போது தான் எழுந்து நிற்பதற்கான பாதங்களில் உறுதி வரும். சவால்களை முகங்கொடுக்க முன்பே சவால்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்கும் போது வெற்றி என்பது தொலைவில் என்ற எண்ணச்சுமைகள் அகன்றுவிடும்.

வெறுமனே திட்டங்களை தீட்டுவதனால் மட்டுமே நம்மால் இலக்குகளை நெருங்கி விட இயலாது. நம்மால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் நம்மால் தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக தினசரி வகுப்பிற்கு வந்தால் மட்டுமே பரீட்சையில் மதிப்பெண்களை பெற்றுவிட இயலுமா , கடினமாக உழைத்து வருகைக்கான செயல் வடிவத்தினை கொடுத்தல் வேண்டுமல்லவா.  ஒரு முறையான இலக்கினை முடிவு செய்ய இயலாமல் இது நமக்கான பாதை எது என்பதை தேடித்தேடி களைத்து விடுகின்றோம். இறுதியில் மனம் தளர்ந்து போய் அடுத்த நொடி அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்குடன் நடுத்தரமான இலக்கொன்றை நமக்கானதாக தெரிவு செய்து கொள்கின்றோம்.  எது இலகுவாக தோன்றுகிறதோ அதுவே எமது இலக்காகி விடுகின்றது.  நம் ஒவ்வொருவருடைய மூளையும் அபரிதமானது தனித்துவமானது செயல்திறன்மிக்கது. பின்னென்ன தடுமாற்றம், தயக்கம் நிச்சயமாக எமது பாதையில் வெற்றி அடைய இயலும் என மனதார கூறிக்கொள்ளுங்கள். மனித இயல்பு என்னவென்றால் எது இலகுவானதாகும் சந்தோஷத்தை தருவதாகவும் நமக்கு தோன்றுகிறதோ அதையே முதலில் தெரிவுசெய்யும். கடினமானதை  பிற்போடும். சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவழிக்க முன் நிற்கும் நாம் ஏன் நமது வாழ்வில் ஆக்கபூர்வமானதை முயல்வதற்கு பின்னிற்கின்றோம்.

நாம் அனைவருக்கும் பல விருப்பங்கள் இருக்கின்றன. விருப்பங்கள் எழுந்தமானமானவை. எப்போதும் எங்கும் எச் சூழலிலும் நமக்குத் தோன்றக் கூடியவை. அவை எண்ணங்களாகவே இருக்கும் வரையிலும் அவை வெறும் விருப்பங்களே. அதற்கு நாமே திட்டமாக உயிர் அளித்தல் வேண்டும். சுருங்கக்கூறின் ஒரு திட்ட முறை இல்லாத இலக்கும் முயற்சி மற்றும் கடின உழைப்புமல்லாத குறிக்கோள்களும் வெறும் ஆசைகளே. உலகின் 99 வீதமான மக்கள் வெறுமனே இலகுவான விருப்பங்களை தமது வாழ்நாள் இலக்கு என பயணிக்கிறார்கள்.

ஆக இலக்கங்களுக்கான முறையான திட்டமிடல் வெற்றியின் முதல் படிக்கட்டு என நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தல் நன்று. எமக்கான பாதையை எமக்கான  பயணத்தை வடிவமைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு நம்முடைய இருக்கும்போது அதனை பயன்படுத்த முயன்று விடுவோம் வாழ்வை வளமானதாக மாற்றிக்கொள்ள நமது பாதையினை முயறன்றிடுவோம். திட்டங்களை நாம் பயணிக்கின்ற பொழுது நம்மை நாமே பாராட்டிக் கொள்வது நன்று. நம்மால் முடியும், நம்மால் நிச்சயமாக இதனை செய்து முடிக்க இயலும்,  என்னால் சவால்களை எதிர்கொள்ள இயலும்,  நான் சரியான வழியில் சென்றுகொண்டு இருக்கின்றேன் என நேர்மறையான வசனங்களை நமக்குள் நாமே சொல்லிக் கொள்வது நம்மை மேலும் வலுப்பெற வைக்கும்.  ஆக இலட்சியங்கள் குறிக்கோள்களுடன் முறையான திட்டமிடல்கள் நம்மை வழிநடத்தவே என்றுணர்வோம். வாழ்தல் இனிது.

டினோஜா நவரட்ணராஜா- இலங்கை

டினோஜா நவரட்ணராஜா

(Visited 252 times, 1 visits today)
 
டினோஜா நவரட்ணராஜா

இலக்கியத்தை ஆவணப்படுத்தல்-கட்டுரை-டினோஜா நவரட்ணராஜா-அறிமுகம்

ஆவணப்படுத்தல் என்று நோக்கும்போது எம்மாலோ அல்லது பிறிதொருவராலோ சந்திக்கப்பட்ட நிகழ்தலின் அனுபவங்களே சமகாலத்தில் அல்லது காலம் கடந்து ஆவணமயமாக்கப்படுகிறது உண்மையில் ஆவணப்படுத்தல் என்பது ஏன் அவசியம் என்று நோக்குகையில் சரியானவற்றையும் […]