அகலிகை-கவிதை-தேவ அபிரா

அகலிகை

அகலிகை

உயர்கல்வி முடிந்து விட்ட ஓர் பொழுதில்

அப்பா அகலிகையைப் பொதியில் ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தார்.

கவனமாக வந்து அவளைப் பெற்றுக்கொண்டவன் கணவன்,

கடிப்பதுவும் நெரிப்பதுவும் இடிப்பதுவும் அடிப்பதுவும் அறமே!

பேசாதே!! என்றான்.

ஒவ்வொரு நாளும் வேலை செய்வான்.

அவன் உள்ளேவரும் போதும் வெளியேபோகும் போதும் கதவு கிறீச்சிட்டது.

அவளது காதுகள் மனதைப் பொத்திக்கொள்ளும்.

குளிரிற் கிடைத்த வெப்பம் குழந்தைகள்.

குழந்தைகளுக்கு உணவூட்டிக்கொண்டு அவள் உள்ளேயே இருந்தாள்.

அவனது தேனீர் நிரம்பும் பாத்திரமாக இருந்தாள்.

பிள்ளைகளும் பாடசாலைக்குப் போனபின் அவள்

ஒர் வசந்த காலத்தில் எழுந்து வெளியே போனாள்.

ஓடத்தொடங்கினாள்.

மென் தழுவலென்றால் என்னவென்று காற்றிடம் அறிந்தாள்.

மென் வெப்பமெதுவென்று துளிரிலையிடை கசிந்த சூரியனில் உணர்ந்தாள்.

வியர்வைத்துளிகள் இமைகளில் வழியப் புல் நுனியில் அமர்ந்தாள்.

அழகியே உன்னை ஒரு நாளும் நான் இங்கு கண்டதில்லையே என்றொரு குரல் கேட்டது.

திரும்பியவள் திடுக்கிட்டுப் போனாள்.

தாழாத நீலக்கண்கள்.

குழைந்த குரல்.

குனியாத உடல்.

ஓடவே பிறந்தவளோ?

கைலாகு தந்து கூறினாள் “நான் கதிங்கா”.

அகலிகையும் கதிங்காவும் ஓடத் தொடங்கினார்கள்.

பருவகாலங்களையும் உடலுயிரின் பரிவையும் உணரும் கொம்பு அவர்களுக்குள் முளைத்துக் கொண்டிருந்தது.

அகலி! நாளை உன் வீட்டுக்கு வரவாவென்றாள் கதிங்கா .

கணவனும் பிள்ளைகளும் போன பின் கிறீச்சிடாமலிருக்கக் கதவைத் திறந்து வைத்தாள்.

கிற்றாரும் கையுமாக உள்ளே வந்தாள் கதிங்கா.

அகலிகை நீராக உருகினாள்.

கதிங்கா அவளைக் கொதிக்க வைத்துத் தேனீராக்கினாள்.

மாலையில் வீடுவந்த கணவன்

தனது தேனீர்க்கோப்பை ஏன் கழுவப்படாமலேயே இருக்கிறது

“கழுவி வை” என்று கத்தினான்

கோப்பையைக் கையில் எடுத்த அகலிகை முறுவலுடன் வேண்டுமென்றே அதனைத் தவற விட்டாள்.

000000000000000000000

ஐம்பது வயது

ஒலியுணரவாய்த்த காலத்திலிருந்து கேட்ட, வாசித்த சொற்கள்

உயிருட் கிடந்து செறிந்து மூளைக்கும் இதயத்திற்குமிடையில் ஒடித்திரிகின்றன.

எழுது என்கிறது காலம்.

சொற்களால் எழுதிய வாழ்வைப் பேச முயன்ற போது

வாழ்வோ என்மேலேயே அமர்ந்து விட்டது

வானமும் சுருங்கி வந்தென்னை அழுத்தியது.

சொற்கள் எழுத்துக்களாக உடைந்தன.

எழுத்துக்கள் கோடுகளாகச் சிதறின.

உள்மனத் தாழியுள் நான் விழுந்தவன் வாயில் மௌனம்.

கோடுகளைச் சேர்த்து உருவாக்கிய ஏணியில் கோட்டோவியம் ஏறுகிறது.

கோடுகளுக்கும் அவற்றின் வெளிகளுக்கும் நிறம் ஏறும் பெரும் பணியைத் தொடங்கினேன்.

இப்பொழுதாவது என் மௌனத்துக்கு என்ன நிகழ்கிறது என்பதை அறிவேனோ?

வெளியில் இருந்து வரும் சத்தங்களும் அருகிய பொழுது

என் சாளரச் சேலைகளை விலக்கி வெளியே பார்த்தேன்.

இலையுதிர்காலம் தொடங்கிவிட்டிருந்தது.

உதிரிலை உள்விழுந்த பொழுது

நிறமும் மணமும் கூடவற்றுப்போன ஓவியமானேன்.

தேவ அபிரா- ஒல்லாந்து

12-11-2019

தேவ அபிரா

(Visited 245 times, 1 visits today)