‘தெய்வானை’-வாசிப்பனுபவம்-தேவ அபிரா

ஓவியம் : பிருந்தாஜினி பிரபாகரன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுவேலையில் இருந்தேன். ஒன்பது மணி அளவில் இரண்டு முதியவர்களுக்குக் கணணி மய எக்ஸ்-கதிற்சுழற் பரிசோதனை (Computerized axial tomography scan) செய்ய அழைப்பு வந்தது. ஒருவர் மாடிப்படிகளில் தவறி விழுந்து விட்ட முதியவர். அவரின் வயது எழுபத்தைந்து.. மற்றவர் காரணம் தெரியாத அரைகுறை மயக்கத்தில் இருந்தார். அறுபத்தைந்து வயதான அவருக்கு இடையிடை வலிப்பும் வந்து கொண்டிருந்தது. . நரம்பியல் நிபுணர் முதலில்  அறுபத்தைந்து வயது முதியவரைப் பரிசோதனை செய்வோம் என்றார். பரிசோதனையின் போதே அவருக்கு மூளைப்புற்று நோய் ஏற்பட்டு அது வளர்ச்சியடைந்த நிலையிலும் இருப்பது தெரியவந்தது. அவரை வைத்தியர்கள் தீவிர பராமரிப்புப் பிரிவுக்கு எடுத்துச்சென்றார்கள். புற்றுநோய்த் தாக்கத்தின் வெளிப்படையான அறிகுறிகள் உணரப்பட்டு வலிப்பும் மயக்கமும் ஏற்பட்ட அக்கணத்தில் அவர் அருகே உறவினர்கள் எவரும் இருக்கவில்லை. அவர் முதியவர் இல்லத்தில் வசித்து வந்த ஒருவர். இனி அவரது உறவுகளுக்குத் தகவல் அனுப்புவார்கள்.

மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்த மூதாட்டி தொடர்பற்ற முறையில் அரற்றிக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு நினைவு தப்பவில்லை. மேலதிக முள்ளந்தண்டுப் பாதிப்பைத் தடுப்பதற்காக அசைய முடியாதவாறு அவர் உதவிப்பலகைகளால் கட்டப்பட்டிருந்தார். அவருடைய கணவரும் உடனிருந்தார்.  அவர் கைகளில் நடைக்குதவும்  தள்ளு வண்டியிருந்தது. இருவருமாகத் தமது சொந்த வீட்டிற் தனியே வசித்து வந்தனர். (அது இன்னுமொரு வகையான வாவிக்கரை வீடாகவும் இருக்கக் கூடும் வாவிக்கரை வீட்டில் வாழ்ந்தவர்கள்- கவிஞர் ஓவியர் ரஸ்மியின் கதை.) இவள் தானே எனக்கு எல்லாமும் என்று கணவர்  கலங்கிக் கொண்டிருந்தார். பரிசோதனையின் முடிவில் அம்மூதாட்டிக்குக்  கழுத்து எலும்புகள் சில முறிந்திருந்ததும் முன் மூளையிற் பெரும் இரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது. மூதாட்டி தொடர்பற்று அரற்றிக்கொண்டிருந்ததை விளங்கிக்கொள்ள அது போதுமானதாக இருந்தது.

முதலாவது பெண்மணியின் வாழ்வுக்காலம் இனி அதிகமில்லை. முழு நேர வைத்தியக் கண்காணிப்புடனான பராமரிப்புக்குள் அவர் இருக்க வேண்டும். எழுபத்தைந்து வயது மூதாட்டி தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுப்பதுடன் தனது கணவரைப் பராமரித்து வந்த அவரைப் பராமரிக்க இனி ஆட் தேவைப்படும்.

மேற்குறித்த பரிசோதனைகள் முடிந்த பின்னர்  சற்று ஓய்வாக இருந்தேன். அதனால் ஏதாவது வாசிப்போமே என மடிக்கணணியைத் திறந்தேன் . அப்பொழுது கோமகன் முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்த ‘தெய்வானை’ என்னும் கதை கண்ணிற் பட்டது. அக்கதை அக்கணத்தில் என் கண்ணிற்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.

இக்கதையிற் கோமகன் தொட்டுள்ள விடையம் முக்கியமானது. அது நிறைய உணர்வலைகளை என்னுள் தோற்றுவித்தது. நோயும் முதுமையும் மனித வாழ்விற் கொண்டு வரும் அல்லலும் அவலமும் துயரமும் எல்லோருடைய கவனங்களுக்கும் வருவதில்லை. முதுமையடையவடைய மனித உறவுகளின் வட்டம் சுருங்கிக்கொண்டு வரும். இச்சுருக்கம் பலவேளைகளில் மனிதரைத் தனிமையாக்கி ஒடுக்கி உருக்கியும் விடும்.

கோமகனின் தெய்வானை என்னும் சிறுகதை  சமூக பொருளாதார  ஆதிக்க நிலையில் உள்ள, பிள்ளைகள் அற்ற  கணவனும் மனைவியும் ஒன்று சேரத்  தீரா நோய்க்காளாகும் அவலத்தைச் சுட்டுவதாக இருக்கிறது.  வாழ்வின் உயர்ந்த நிலையில் (அவர்களின் நிலையை நான் ஆதிக்க நிலையின் வசதிக்குள் வாழ்பவர்கள் என்றே இனம் காண்கிறேன்) இருக்கிற இருவர் அவலத்துக்குள் (நோய் காரணமாக) விழுவது வாசிப்பவருக்கு தாக்கத்தை தரும் என்பதுதான்  கதையின் அழகியல் உத்தியாக இருக்கிறது.

இக்கதையின் முக்கியமான பகுதி தெய்வானை நோய்வாய்ப்படுவதில் இருந்து ஆரம்பிக்கிறது. அல்ஸைய்மர் (Alzheimer) மற்றும் பாரிசவாதம்( (Paralyze) காரணமாகத் தெய்வானைக்கும் காசிநாதருக்குமிடையில் உருவாகக் கூடிய உறவு நிலை  அவலங்களை அவர்கள் இருவரினதும் உள்மனப் போராட்டங்களினூடும் நோயினாலேற்படும் நடத்தை மாறுபாடுகளினூடும் இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்தும் நோக்கத்தை இக் கதை கொண்டிருக்கவில்லை. மரபுவழியான உறவுச்சூழலில் அன்பான கணவனே உலகம் என வாழும் தெய்வானை நோயில் விழுந்து விடுகிறார். காசிநாதர் என்னும் அன்பான கணவர் தெய்வானையை நன்றாகப்பராமரிக்கிறார். எனினும் தெய்வானையின் நோயின் தன்மையால் ஏற்படும் கோபங்களுக்கு எதிர் விளைவாக ஓரிடத்தில் அவரது ஆண் ஆதிக்க மனம் வெளிப்பட்டுவிட்டதோ எனக்கதைசொல்லி ஐயுறுகிறார். ஆயினும் அது குறித்த விபரிப்புக்குள் அவர் செல்லவில்லை. இதுவும் இன்னும் ஆழமாகப்பார்க்கப்படக் கூடிய ஒன்று. உறவுகளிடமிருந்து காசிநாதரும் தெய்வானையும் எவ்வாறு அந்நியப்படுகிறார்கள் அல்லது அந்நியப்படுத்தப்படுகிறார்கள் இவ்வந்நியப்பாட்டின் உணர்வு நிலைப்போராட்டங்கள் என்ன? என்பது போன்ற ஆழமான அலசல்களுக்குள்ளும் இக்கதை செல்லவில்லை. கோமகன் விரும்பின் மேற்குறித்த விடையங்களுக்குட் சென்று கதை சொல்லல் விவரமாகவும் ஆழமாகவும் நிகழ்த்தப்படலாம். அப்பொழுது இக்கதை ஒரு குறு நாவலாகிவிடும்  என்று தோன்றுகிறது.

வாழ்வின் பாடுகளை விளங்கிக் கொள்வதற்கு மறுபிறப்பு முன்வினை கடவுள் நம்பிக்கை போன்ற விடையங்களையே   பாத்திரங்களினூடாகவும் தன் கூற்றாகவும் கதை சொல்லி முன்வைக்கிறார் இவை கூடக் கேள்விகளை எழுப்பும் சுவாரசியமான விடையங்கள்.

மனிதர்கள் நெருக்கடிகளையும் துன்பங்களையும்  சந்திக்கும் போது அறிவுபூர்வமான தேடலுக்குள் விழுவதில்லை. மனதை ஆற்றுப்படுத்தும் சுலபமான நம்பிக்கைகளையே தேடுகிறார்கள். மதம் அல்லது சமய நம்பிக்கைகள் இன்னும் உயிர்வாழ்வதற்கான  காரணங்களில் இதுவும் ஒன்று.

பாரிசவாதம் காரணமாக உடல் இயக்கமும் அல்ஸைய்மர் காரணமாக மூளைச்செயற்றிறன் குறைந்து செல்லும் நிலையையும் கொண்ட  மனைவியைப்பாராமரித்து வந்த காசிநாதர் தனக்கும் இரத்தப்புற்று நோய் உருவாகியிருக்கிறது என்பதை அறியும் போது வாழ்வின் மீது பெரும் அவநம்பிக்கை அடைகிறார். தேவைப்படின் அவர்கள் இருவரையும் பராமரிக்கக் கூடிய  உறவுநிலை வலையமைப்பும் அவருக்கில்லை. இந்நிலையிற் எஞ்சப்போகிற குறைந்த நாட்களுக்கு வாழ்வு என்றொரு பெறுமதி இருக்குமோ தெரியாதே! காசி நாதர் தன்னைச் சுற்றி நடக்கிற விடையங்கள் பற்றிய புரிதலற்ற மனைவியுடன்  தற்கொலை செய்யும் முடிவை எடுப்பதாகக் கதை முடிகிறது. கடுமையான மூளைப்புற்றுநோய் வளர்நிலை அல்ஸைய்மர் போன்ற  நோய்களுக்கு உட்பட்டவர்களைப் பராமரிப்பது என்பது தொழிற்தேர்ச்சி அடைந்தவர்களாற் செய்யப்பட வேண்டியது.

தற்கொலை சரியா பிழையா என்ற கேள்விக்கு காலம் இடம் பொருள் சார்ந்தே பதில்கள் இருக்கின்றன. விடுதலைப் போராட்ட காலத்தில் நிகழ்ந்த தற்கொலைகள்  ஒருசாராற் தற்கொடைகள் எனப் போற்றப்பட்டன. சமூக பொருளாதாரக் காரணங்களினாற் எற்படும் மன அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தற்கொலையை நோக்கி நகர்வது மிக அவலமானது. ஆனாலும் நிகழ்கிறது. தீராத நோய்க்காளாகி நூறு வீதமும் ஏனையவர்களிற் தங்கியும் தினமும் உடல் உள நோவைத் தாங்க வேண்டியவர்களாக இருப்பவர்கள் தற்கொலையைத் தெரிவு செய்வதும் உண்டு. இதற்குச் சில நாடுகளிற் சட்ட பூர்வமான அனுமதியும் உண்டு.

தெய்வானை யதார்த்த வாதப்புனைவாகவோ அல்லது உண்மைக்கதையாகவோ இருக்கக் கூடும்.

நோய்க்கும் தனிமைக்கும் ஆளாகும் முதியவர்களின் வாழ்வுகள் அவரவர் சூழல்களிற் கவலைக்குரியதென்றாலும் இவர்களைப் பாராமரிக்கும்  கட்டமைப்புக்கள் வைத்தியப் பராமரிப்புத்துறை நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்படுத்தப்பட்டு (சேவை மையத்திலிருந்து நீங்கி வியாபார மையமான கட்டமைப்புக்களாகி) இயங்கிக் கொண்டிருக்கின்றன.

காசிநாதருக்கு அப்படியொரு தெரிவு இருந்திருக்குமென்றால் சிலவேளையவர்  தனது வாகனத்தைப் பாரவூர்திக்கு எதிராகச் செலுத்தியிருக்காமலிருக்கக்கூடும். முதுமையின் படியில் ஏறும் போது வாழ்வுகுறித்த பார்வையில் மாற்றம் ஏற்படாதவர்கள் இருக்க முடியாது.

தேவ அபிரா

15-2-20

தேவ அபிரா

 

(Visited 85 times, 1 visits today)