‘பகிடிவதை’ ஒரு நோக்கு-கட்டுரை-பூங்கோதை

பகிடிவதை என்ற சொற்றொடரின் மீது எனக்கு உடன்பாடு இல்லை எனினும், என்னுடைய சிற்றறிவுக்குட்பட்ட வேறு தமிழ்ச் சொற்கள் அகப்படாத காரணத்தாலும் இன்றையகாலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் இதைப் பயன்படுத்தி பலராலும் இப்படியேஅறியப்பட்டதாலும் நானும் இச்சொல்லாடலைப் பிரயோகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

அண்மைக்காலத்தில் யாழ்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகரீகமற்ற, பாலியல் தொடர்பான,  வேதனை மிகுந்த செயல்களானது பல மட்டங்களிலும் சமூக, மனோவியல் ரீதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.  இவற்றிற்கான காரணங்கள் பற்றியும் அவற்றிற்கு கொடுக்கப்படவேண்டிய தண்டனைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களும் ஆதங்கங்களும் சமுதாயத்தின் வெவ்வேறு மட்டங்களிலிருந்தும் வெளிப்படுத்தப்பட்டன. படிப்படியாக இதைப் பற்றிக் கதைப்பதும் சமூக வலைத்தளங்களில் உரையாடுவதும் குறைந்துபோயிற்று. இருந்தாலும் பலவிதமான எண்ணங்களையுடைய, பல்வேறுபட்ட மக்களுடன் இது பற்றி தனிப்பட்ட முறையில் கலந்துரையாடவும், யாழில் இது குறித்து வெளிவந்த ஒருசில பதிவுகள், பத்திரிக்கை தகவல்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியதாலும், இதுகுறித்து என் உள்ளக்கிடக்கையை வெளிக்கொண்டுவருவதே இக்கட்டுரையின் பேசு பொருள்.

வடக்கு, கிழக்கு என பிராந்திய ரீதியாகவோ அல்லது இலங்கை முழுவதுமான பண்பாட்டுரீதியாகவோ இன்றி முதலில் தமிழ்த் தேசிய நோக்கிலிருந்து , எமது கல்விப்பரப்பிற்கான ஜனநாயக அடிப்படையில் எமது கல்விப்புலத்தைப் பார்ப்பது இங்கு இன்றியமையாததாகின்றது.

அறம் சார்ந்த பண்பாடுகளினால் வளர்த்தெடுக்கப்படாத, வளம் குன்றிப்போயுள்ள ஒருஜனநாயகம் சார்ந்த கல்விப்பரப்பானது மலினப்படுத்தப்பட்ட நாகரீகத்தையேமாணவர்களுக்கு எடுத்துக்காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக, ஒரு பண்பாட்டுக்கிளையாகப் பரவி வேரூன்றி நிற்பதை பலமட்டங்களிலிருந்து பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் பகிடி வதையானது எமது உயர் கல்விசார்ந்த கலாச்சாரமாகி, சாதாரணமாக்கப்பட்டதற்கு (normality )  தேசியரீதியான , அழுக்குப் படிந்த எமது ஜனநாயகமே முக்கிய காரணியாகின்றது. பகிடி வதையானது ஒரு உப பண்பாடாய் ஆண்டாண்டு காலமாய் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கறை படிந்த இப் பண்பாடுபடிப்படியாக எமது அனைத்துக் கல்விப்புலம் வரையிலும் கறையான் போல் புற்றெடுத்துவளர்ந்த பின், நாம் எல்லோரும் எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாய், புற்றிலிருந்து நாறி வெளியேறிய கறையான்களை மட்டும் பார்த்து காறித்துப்பி விட்டு இனி என்ன நடக்கும் என பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சட்டத்தால் மட்டும் பகிடி வதையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு, இது ஒரு உபபண்பாடாய் வளர்த்தெடுக்கப்பட்டதே காரணம். எமது கல்விப்பரப்பில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே ஜனநாயகம்பேணப்படுக்கின்றதா? அதிகாரக்கட்டமைப்புள்ள எந்தவொரு துறையிலும் உயர்அதிகாரிகளுக்கும்  கடை நிலை ஊழியர்களுக்குமிடையே ஜனநாயகம் பேணப்படுகிறதா? ஒரு குடும்ப அமைப்பில், ஆண் பெண் உறவுகளில் ஜனநாயகம் பேணப்படுகிறதா?

மனித உரிமை மீறலும் , சமத்துவமின்மையும் குடும்பம், பாடசாலை அமைப்பு முறைகள் , வைத்திய, சுகாதார அமைப்புக்கள், கோவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், ஆயுதம்ஏந்திப் போராடிய சில பல இயக்கங்கள் என அனைத்து தமிழ் தேசிய, சமூகக்கட்டமைபுக்களிலும் மனித உரிமை மீறல்கள், அறம் பிறழ்ந்த நிகழ்வுகள்இருந்திருக்கின்றன, இருந்தும் வருகின்றன. இதை புலத்தில் எவரும் ஒரு தவறாகப் பார்ப்பதில்லை. ஏனென்றால் அது ஒரு கலாச்சாரமாக, ஒரு பண்பாடாகப் பார்க்கப்படுவதுதான். ஒரு குழந்தையை ஒரு ஆசிரியர் உள, உடல் ரீதியாகபயமுறுத்துவதும், மேலிடத்திலுள்ள ஒரு வைத்தியரோ அல்லது ஒரு இராணுவ அதிகாரியோ தமக்கு கீழே பணி புரியும் ஒரு வைத்தியரை அல்லது ஒரு சிப்பாயை மரியாதைக் குறைவாகவும் கீழ்த்தரமாகவும் நடாத்துவதும் மௌனமாகஅங்கீகரிக்கப்படுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜனநாயகத்தைப் பேணுபவர்கள் மேற்குறிக்கப்பட்ட தளங்களில் இல்லாமல் இல்லை. இவர்களின்எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதால், சிற்றளவில் உள்ள இவர்களை அன்றாட வாழ்க்கை நெறியில் எவரும் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. மாறாக, அதிகார வெறியில் செயல்படுபவர்களையும் அவர்கள் அறம் தாழ்ந்தசெயல்களையும் பார்த்து வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர் தமக்கும் அப்படியொருஅதிகார வெறியைப் பாவிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை பார்த்துக் காத்திருக்கின்றனர். தாம்பார்த்து வளர்ந்ததைப் போன்று அதிகார மீறல், மனித உரிமை மீறல்களை சகஜமாக நினைப்பதுடன், அவர்களது தனி மனித பண்பாடும் சீர் கெட்டிருந்தால் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பவர்களின் நிலை அதோ கதிதான்.

ஜனநாயக பாரம்பரியம் பலவீனப்பட்டு, நலினப்படுத்தப்பட்ட ஒரு கலாச்சாரத்திலிருந்து பிரசவிக்கப்பட்ட குழந்தைகள், மற்றவர்களிடம் இப்படி அநியாயமாக நடந்து கொள்வதும், அப்படி நடந்து கொள்ளும் போது கூட  மற்றவர்கள் தம்மை மதிக்க வேண்டும் எனஎதிர்பார்ப்பதும், பலவந்தமாக தம் விருப்பங்களை எடுத்துக் கொள்ள நினைப்பதும்அவர்களுக்கு உள, உடல் ரீதியாக இயல்பாகக் கடத்தப்படுகிறது. கலாச்சாரத்தின் அடிப்படையில் எமக்கு மேலே இருப்பவர்களின் அடிவருடிகளாக எம்மை வளர்த்தெடுப்பது கூட ஒரு  முக்கியமான நோக்கமாக இருக்கும் போது எமது கல்விப்புலத்தில் ஜனநாயகம் பேணப்படாதது பெரிய அதிசயம் ஒன்றுமில்லையே.

புலம் பெயர் நாடொன்றில் வசிக்கும் எனக்கு, ஒரு தாயாகவும், ஒரு பல்கலைக்கழ கமாணவியாகவும், இங்கு பயிற்றப்பட்ட ஒரு பாடசாலை ஆசிரியையாகவும் கல்விப்பரப்பில் கிடைத்த அனுபவங்கள் அலாதியானவை. இவை எனக்குக் கிடைத்த ஆரம்ப காலக்கல்வி அனுபவங்களிலிருந்து, தாயகத்தின் ஆசிரிய- மாணவ உறவு முறைகளைப் பேணுகின்ற, அதை மதித்துப் போற்றுகின்ற முறையிலிருந்து முற்றிலும் வேறானவை.  இதில் நான் கல்வித் தரத்தில் எதுஉயர்வு, எதுதாழ்வு என்ற தரம் பிரித்துப்பார்க்கும் அளவுகோலைப் பாவிக்கவில்லை, அது எனது நோக்கமுமில்லை. நாம் இங்கு பார்க்க வேண்டியது ஒரு ஆரம்ப காலப்பள்ளிக் குழந்தையிலிருந்து உயர்கல்விமாணவர் வரை ஆசிரியர்களால் தலைமை ஆசிரியரால், அவர்கள் எப்படிநடத்தப்படுகிறார்கள்?  அவர்கள் மனத்திடத்தைப் பேணி, மன வளத்தை வளர்ப்பதில் அவர்கள் பங்கு என்ன என்பதைப் பார்த்தால் இங்குள்ள வித்தியாசம் புரிந்துவிடும்( Personal, social, educational development என்றொரு கட்டாய பாடம் ஆரம்ப பள்ளிகளில்இருக்கின்றது என்பது தெரிந்திருக்கலாம்). இக்கட்டாய பாடமானது சகமனிதர்களை, சகமாணர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்து, தனி மனித சுதந்திரத்தையும் தனி மனிதஉரிமைகளையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கிறது. பாடங்களால் மட்டுமன்றி, ஆசிரியர்களும் அதற்கு தாமும் உதாரணமாக இருப்பதன் மூலம் இக்குழந்தைகள் வளர்ந்த பின் அவர்கள் எவ்வாறு மற்றவர்களையும் தம்மைப் போலவே மதிக்க வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். அது மட்டுமல்ல ஒரு ஆசிரியரை அவரது சக ஆசிரியர்கள், அவரது தலைமை ஆசிரியர் எவ்வாறு மதித்து நடக்கிறார் எனப் பார்த்து வளரும் ஒரு குழந்தை மனவளத்தில்  நிறைவோடு, ஒரு நல்ல பிரஜையாக வளர்வதற்கு அதிக சாத்தியக்கூறுகள், சந்தர்ப்பங்கள் வளங்கப்படுகின்றன. இதனால் இங்குள்ள பல்கலைக்கழகங்களில் இப்படியான பகிடிவதைகளும் அநாகரீகச்செயல்களும் மிகமிகக் குறைவு அல்லது இல்லையென்றே சொல்லலாம்.

எனவே எமது கல்விப்புலத்தில் இப்படியான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு சட்டத்திருத்தங்கள் பயனளிக்க வாய்ப்பில்லை. இப்பண்பாட்டு மாற்றமும், சமூகஅடிப்படை ஜனநாயக மாற்றமும் ஏற்படுத்தப்படாவிட்டால் பகிடி வதையையும் நிறுத்தமுடியாது. ஏற்கனவே நடந்த பகிடிவதைக் குற்றங்களுக்கு ஒரு சமூகமே கூட்டுப்பொறுப்புஎடுக்க வேண்டிய தேவையுள்ளபோது, சில மாணவர்கள் தண்டிக்கப்பட்டும் பலர்தப்பியுமுள்ளனர்.

சமூகத்தின் அடிப்படை ஜனநாயகம் செழிப்பாக வளர்த்தெடுக்கப் பட்டாலேயன்றி, திடீரென யாரும் சட்டதிட்டங்களால் மட்டும் இவ்வாறான அநாகரீகமான, மிருக இச்சைகளைக் களைந்தெடுக்கவோ கட்டுப்படுத்துவதோ கடினமானதாகவே இருக்கும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கபட வேண்டும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடுமில்லை. ஆனால் எமது தமிழ்த்தேசியத்தின் ஜனநாயகக் கட்டுமானத்தில் பலவீனமிருக்கின்றது. மதம், பால், பிராந்தியம், அதிகாரம், பதவி என இன்னபிற வித்தியாசமற்ற எல்லாமனிதர்களையும் நேசித்து, அன்பு செய்து வளரக் கூடிய மக்கள் சக்தி , திரண்டு, தேசியசக்தியாக்கப்பட வேண்டும். இப்படியான நீண்ட தூரப்பார்வையுள்ள சமூகப் பண்பாட்டுமாற்றமின்றி எதுவுமே நீண்ட கால தீர்வாகாது.

பூங்கோதை- ஐக்கியராச்சியம் 

(Visited 378 times, 1 visits today)