து.ஆ.தனபாண்டியன் வாழ்வும் இசைப்பணியும்-கட்டுரை-பா.தேவி யசோதா

தஞ்சையில் வாழ்ந்த ஆபிரகாம் பண்டிதரை, அவர் இசைத்தமிழுக்குச் செய்த பணிகளை நம்மில் சிலருக்குத் தெரிந்தி

ருக்கும். அந்த அளவிற்குக் கூட அவரின் வாரிசுகள் செய்த இசைத்தமிழ்ப் பணிகள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆபிரகாம் பண்டிதர் தனது இசைத்தமிழ் ஆய்வில் சொன்ன புதிய கண்டுபிடிப்பு தென்னிந்திய இசை மரபிற்கு 22 சுருதி முறைகள் கிடையாது, 24 சுருதி முறைகள் தான் என்பதே. இதை ஆய்வின் முடிவாக சொன்னவருக்கு, அதை இசைத்துக் காட்டி நிரூபித்தவர்கள் அவர்களின் மகள்களான மரகதவள்ளி துரைப்பாண்டியனும், கனகவல்லி நவமணியும் ஆவார்கள். இவ்விருவரில் ஒருவரான மரகதவள்ளியின் மகனாகப் பிறந்தவர் து.ஆ.தனபாண்டியன் அவர்கள்.  இவர் 21.10.1921ல் தூத்துக்குடியை அடுத்த சேர்வைக்காரன் மடம் என்னும் சிற்றூரில் பிறந்தார். மின்சாரம் இல்லாத சிற்றூரில் பிறந்து வளர்ந்த போதும், இசையை தனது குடும்பத்தினர் மூலம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்தார். தமிழிசைக்கு கருணாமிருத சாகரம் என்ற பெரும் இசை ஆய்வு நூலை வழங்கிய பண்டிதரின் வாரிசாக இருந்த போதும், இவரின் வாழ்விற்கு  இசைப்பணி பெரிய உதவிகளை செய்துவிடவில்லை. ஆகையால் இவர் படித்து முடித்து வழக்கம் போல  அரசுப்பணியிலேயே சேர்ந்தார்.

முதலில் மத்திய அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் மக்களிடம் அரசுத்திட்டங்களை கொண்டு செல்லும், அதை திரையிட்டுக்காட்டும் கள திட்ட அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த காலத்தில் அப்போது தான் விடுதலை பெற்றிருத்த இந்தியாவில், அதுவும் பெரும்பாலான மக்கள் எழுதப்படிக்கத்தெரியாத இந்தியாவில், அந்த மக்களிடம் அரசின் துறைகளை கொண்டு சேர்ப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதன் பிறகு 1962 தொடங்கி, 1979 தான் ஓய்வு பெரும் வரை சென்னை அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவுத் தலைவராக பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலம் இந்தியா ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, மொராஜிதேசாய் என்று நான்கு பிரதமர்களை இக்காட்டான சூழலுக்கு இடையே சந்தித்தது. அதே போல் நாடு நெருக்கடி நிலையில் இரண்டு ஆண்டுகாலம் இருந்தது. அதே போல் இந்தியாவில் தமிழகத்தில் தான் மாநிலக்கட்சியான திமுக முதன் முறையாக ஆட்சியை அமைத்திருந்தது. அது மாநில உரிமைகளை தீவிரமாக கோரியது. இந்தக் காலத்தில் இந்திய அளவில் வேறு தனியார் ஒலி, ஒளி ஊடகங்களே கிடையாது. செய்தியை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு அகில இந்திய வானொலி நிலையம் தான் ஒரே வழி. மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி என்று இருந்த நெருக்கடி மிகுந்த காலத்தில் செய்திப் பிரிவின் தலைவராக இருந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதை சிறப்பாகவே செய்தார். அப்போதைய முதல்வர்கள், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன் ஆகிய எல்லோரிடமும் பேதமின்றி பழகி தனது பணியை சிறப்பாக செய்தார்.

இவர் வானொலி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில் அவரின் இசைப்பணியும் அதற்கு இணையாக நடைபெற்றது. சென்னை வானொலியில்  ”பி” கிரேட் இசைக் கலைஞராகவும் செயல்பட்டார்.  பாடல்கள் பாடுவதும், புல்லாங்குழல் வாசிப்பதும் அவரின் இசைப்பணியாக இருந்தது. தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியாரின் பெத்லகேம் குறவஞ்சி, ஞான நொண்டி நாடகம், வீரமா முனிவரின் தேம்பாவணி, எ.ஆ.கிருஷ்ணபிள்ளை இயற்றிய இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய தேவாரம் போன்ற கிருத்துவ படைப்புகளுக்கு மட்டும் இசையமைத்து, கதாகாலட்சேபங்கள் வடிவங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவ்வாறாக அரசுப்பணியும், இசைப்பணியும் ஒரு சேர செய்துவந்த தனபாண்டியன் அவர்கள், 1979ல் தனது அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

வீடுதேடி வந்த இசைத்தமிழ்பணி

ஓய்வு காலத்தை தனது சொந்த கிராமத்தில் நிலங்கள் வாங்கி விவசாயத்தில் ஈடுபட எல்லா ஏற்பாடுகளும் செய்தார். ஆனால் கால தேவன் இவரின் வாழ்விற்கான பொருள் தரப்போகும் பெரும்பணியினை தமிழறிஞர் வ.ஐ,சுப்பிரமணியம் அவர்கள் வழியாக, வீடு தேடி வந்து கொடுத்தது. 1981ல் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கப்படுகிறது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அதன்  முதல் துணை வேந்தரான திரு.வ.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் பல்வேறு துறைகளும் உருவாக்கப்படுகின்றன. முத்தமிழ் என்று தமிழை போற்றினாலும் கூட இயல் தமிழுக்கு கிடைக்கும் அறிஞர்கள் போல, இசைத்தமிழுக்கோ, கூத்துத்தமிழுக்கோ அறிஞர்கள் போதிய அளவில் இல்லாத காலமாகவே அன்றும் இருந்தது. அந்த சூழலில் இசைத்தமிழுக்கான பேராசியரை தேடிக்கொண்டிருந்த வ.ஐ.சு. அவர்கள் பார்வையில் பட்டார் து.ஆ.தனபாண்டியன்.

இவரின் இசைத் திறனை ஒரு கருத்தரங்கில் கண்டு வியந்த துணைவேந்தர் அவர்கள், இவரை இசைத்தமிழ் துறையில் தலைவர் பெறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். . தனபாண்டியன் அவர்களோ ”கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சித்து, விவசாயம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன், திடீர் என்று அவற்றை ஒதுக்கிவிட்டு வருவது கடினம். வேண்டுமானால் குடும்பத்தில் ஆலோசித்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். வீட்டில் வந்து குடும்பத்தாரோடு பேசுகையில், “விவசாயம் செய்ய பலர் இருக்கிறார்கள். ஆனால் இசைப்பணி செய்ய, அதுவும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இசைப்பணியை மேற்கொள்ள சிலராலேயே முடியும். ஆகவே நீங்கள் விவசாயக்கனவை விடுத்து இசைப்பணி மேற்கொள்ள செல்லுங்கள்” என்று அனைவரும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர். அதன் பின் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதல் இசைத்துறை தலைவராக பொறுப்பேற்றார்.

இசைத்தமிழ்ப்பணி

து.ஆ.தனபாண்டியன் அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலம் தமிழிசை உலகிற்கும், தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கும் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். 1983 ஜனவரி மாதம் பணியில் சேர்ந்த இவர் 1991 அக்டோபர் வரை அந்தப்பணியில் திறம்பட செயலாற்றினார். அதே காலகட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தி்ன் பாடநூல் உருவாக்கக்குழு தலைவராகவும், அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின்  பாடநூல் உருவாக்கக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்தக்காலங்களில் பல்வேறு இசைச் சார்ந்த கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். அவற்றை அடிப்படையாக கொண்டு பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

தனபாண்டியன் படைத்த இசை ஆய்வு நூல்கள்:

தமிழிசை சார்ந்து ஆய்வு நோக்கில் இவர் எழுதியுள்ள நூல்கள் ”புதிய இராகங்கள்”; “நுண்ணலகுகளும் இராகங்களும்”: “புல்லாங்குழல் ஓர் ஆய்வு” ஆகியவைகள் ஆகும். இதில் “புதிய இராகங்கள்” என்னும் நூல், தமிழிசை உலகிற்கு ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் கண்டுபிடித்து கொடுத்த இராகபுடமிடும் முறையைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். இந்த நூலில் இராகங்களுக்குரிய இணை, கிளை, நட்புச்சுரத்தொடர்களை விளக்கிக்கூறியதோடு, இராகங்களின் ஜீவசுவரம், உள்ளிட்டவைகளின் போக்கு முதலியவைகளையும், 72 மேளகர்த்தா இராகங்களில் பிறந்துள்ள 3512 கிளை இராகங்களின் ஆரோசை, அமரோசைகளையும் கூறியுள்ளார். இவற்றோடு புதிய இராகங்களை எப்படி எளிய சூத்திரங்கள் மூலம் உருவாக்க முடியும் என்பதை செய்தும் காட்டியிருப்பார் தனபாண்டியன். இந்த நூலில் இறுதியில் இராகபுடமிடும் முறைமூலம் தான் கண்டுபிடித்த 32 புதிய இராகங்களையும் அவற்றிற்கான கீதம், வர்ணம், சுரஜதி, ஜதிசுரம், கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இசை ஞானம் ஓரளவு பெற்றுள்ள ஒருவர் இந்த நூலை முறையாக வாசிக்கும் பொழுது எளிதில் புதிய இராகங்களை உருவாக்கிட முடியும்.

இவரின் அடுத்த ஆய்வு நூல் ”நுண்ணலகுகளும் இராகங்களும்” ஆகும். 1988ல் வெளிவந்த இந்த நூலில் இசைக்கலைஞர்கள் திறம்படவும், இனிமையாகவும் பாடிவரும் இராகங்களில் என்னென்ன சுரங்கள் நுண்ணலகுகளுடன் வருகின்றன என்பதனை குறிப்பிட்டுள்ளார். அதோடு இசை ஆய்வாளர்கள் நுண்ணலகுகள் பற்றித் தெரிந்துகொள்ள இராகங்களின் சிறப்பியல்புகளையும், இன்சுவையினையும் அறிந்து, அனைவரும் பயன்பெறும்வகையில் இராகங்களில் வரும் நுண்ணலகுகளின் விவரங்களை விவரித்துள்ளார். தமிழிசை என்பது 24 அலகுகளும், 48, 96 என்று பல்கிப்பெருகும் நுண்ணலகுகளும் கொண்டது என்பதை விளக்கியுள்ளார். பல்வேறு தமிழிசை ஆய்வாளர்களுக்கு காணக்கிடைக்காதவற்றை சொல்லும் இந்த நூல் தமிழக அரசின் முதல் பரிசினையும் பெற்ற நூலாகும்.

“புல்லாங்குழல் ஓர் ஆய்வு” என்னும் இவரின் அடுத்த ஆய்வு நூல் 1991ல் வெளிவந்ததாகும். தனபாண்டியன் அவர்கள் ஒரு குழல் இசைக்கலைஞராக இருந்ததானால் இந்த நூல் இவரின் ஆய்வு நூல்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். தமிழர்களின் ஆதி வாத்தியங்களுள் ஒன்றான குழல் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், பஞ்சமரபு உள்ளிட்ட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவு பெருமை வாய்ந்த குழலின் தோற்றம், தொன்மை, சிறப்பு ஆகியவற்றோடு குழலில் உள்ள பல்வேறு வகைகளையும் இந்த நூலில் விளக்கியுள்ளார். அதோடு குழல் தமிழ் மரபில் அது வகித்த வரலாற்று பாத்திரத்தை பல்வேறு இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டியதோடு, அந்தக்குழல் வாசிக்கும் முறையையும் இதில் விளக்கியுள்ளார். அதோடு குழல் இசையை உருவாக்கிய மேதைகள், அதன் இசை மரபையும் இன்னூலில் பதிவு செய்துள்ளார். குழல் வாசிக்க தீரா ஆசை கொண்டிருக்கும் ஒருவர் இந்த நூலை முழுவதும் வாசிப்பதன் மூலம் தனது திறனை உறுதியாக மேம்படுத்திக்கொள்ள முடியும்.

தனபாண்டியன் படைத்துள்ள வரலாற்று நூல்கள்

தனபாண்டியன் அவர்கள் மூன்று வகையான வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அதில் முதன்மையானதாக இசைத்தமிழ் வரலாறு திகழ்கின்றது. காரணம் இசைத்தமிழின் வரலாற்றை முதன் முதலில் தமிழில் எழுதிய பெருமை தனபாண்டியன் அவர்களையே சாரும். இசைத்தமிழ் வரலாற்றை அவர் மூன்று தொகுதிகளாக பதிப்பித்துள்ளார். முதல் தொகுதி இசைத்தமிழின் ஆதிகாலம் தொடங்கி ஆறாம் நூற்றாண்டு வரை பதிவு செய்துள்ளது. இரண்டாவது தொகுதி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பதிவு செய்கிறது. மூன்றாவது தொகுதி பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை வந்துள்ள இசைத்தமிழ் வரலாற்றை எடுத்துரைக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியவர்கள் பலர் தமிழ்ச்சூழலில் இருந்த போதிலும், இசைத்தமிழ் வரலாற்றை எழுதிய ஒரே நூல் தொகுதிகளாக தனபாண்டியன் எழுதிய நூல் மட்டுமே இருக்கிறது என்பது தான் இதன் கூடுதல் சிறப்பு. இசைத்தமிழ் குறித்து யார் ஆய்வு செய்தாலும் இவரின் இந்தப்படைப்பை தவிர்த்துவிட்டு யாரும் கடந்து சென்றுவிட முடியாது.

அடுத்து இவர் இசைத்தமிழ் அறிஞர்கள் குறித்து எழுதியுள்ள வரலாற்று நூல்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கை வரலாற்றை இவரின் சொந்த வெளியீடாகவே 1984ல் எழுதி பதிப்பித்துள்ளார் தனபாண்டியன். அடுத்து இவர் இசைத்துறை தலைவராக பணியாற்றிய காலத்தில் இசைத்தமிழ் பேரறிஞர்கள் குறித்து இவர் ஆற்றிய சொற்பொழிவுகளையும், மற்றவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளையும் தொகுத்து ”இசைத்தமிழ் பேரறிஞர்கள்” என்னும் நூலை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

மூன்றாவது வகை வரலாற்று நூல் “இசை வளர்த்த கிறிஸ்தவப் பெரியவர்கள்”. இந்த நூல் கிருத்துவ மதம் சார்ந்து இயங்கிய இசைத்தமிழ் கலைஞர்கள் தமிழிசைக்கு செய்துள்ள கொடைகளையும், அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் சொல்லும் அறிய நூலாகும். ஆய்வாளர்கள் மயிலை சீனி வேங்கடாமியும், ஆ.சிவசுப்பிரமணியம், அ.மார்க்ஸ் போன்றவர்கள் தமிழுக்கு கிருத்தவம் செய்துள்ள கொடைகளை பதிவுசெய்துள்ளார்கள். ஆனால் இவர்கள் கண்களில் படாத சிலரையும் தனபாண்டியன் அவர்கள் தனது நூலில் கூறியுள்ளது தான் இதன் சிறப்பு. ஆனால் இந்த நூல் ஆய்வு சார்ந்து இயங்குவோர் மத்தியில் அறியப்படாமலேயே உள்ளது வேதனைக்குரியதாகும்.

தனபாண்டியன் படைத்துள்ள சுவரக்குறிப்பு நூல்கள்

            தனபாண்டியன் அவர்களின் முன்முயற்சியில் மூன்று சுவரக்குறிப்பு நூல்கள் வந்துள்ளன. மூவர் திருமுறைகள், சங்கரதாசு சுவாமிகளின் நாடகப்பாடல்கள், கிருத்துவர்களுக்கான கர்நாடக இசைப்பயிற்சி நூல். இதில் மூன்றாவது நூல் மட்டும் இவரின் சொந்தப்பதிப்பாகும். முதல் இரண்டு நூல்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தனியாக இரண்டு முகாம்கள் நடத்தி அதில் பதிவு செய்து பதிப்பிக்கப்பட்டதாகும். தமிழில் இருக்கும் பல்வேறு பாடல்கள் அந்தப்பாடலின் ஆசிரியர் வாழ்ந்த காலத்தில், எழுதி இசையமைக்கப்பட்டது ஆகும். அவர் மறைந்த பிறகு அவர் வழி வந்தவர்கள் தங்கள் செவி வழி கேட்டதையே பாடிப்பாடி பல தலைமுறை கடந்து கொண்டுவந்துள்ளனர். ஆறாம் நூற்றாண்டில் பாடப்பட்ட திருமுறை தொடங்கி சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி வரை அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் இசையமைத்து பாடியவைகள் ஆகும். ஆனால் அதன் இராகம் என்னவென்று குறிப்புகள் வழி அறியும் நாம், அந்தப்பாடல்களின் சுவரக்குறிப்புகளை அறிந்திருக்கின்றோமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். உதாரணத்திற்கு பாரதி வாழ்ந்த காலத்தில் அவன் பாடிய பாடல்களுக்கு அவன் என்ன மெட்டில் பாடியிருப்பான் என்பது நமக்குத்தெரியாது.

அதை சரி செய்ய வேண்டும் என்றால் சுவரக்குறிப்புகளை அந்தப்பாடல்களுக்கு எழுத வேண்டும். நவீன உலகில் வரும் பாடல்களை ஒலிப்பதிவாக பதிவு செய்கிறோம். ஆனால் திருமுறை பாடல்கள் தொடங்கி, சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப்பாடல்கள் வரை, பல பாடல்களுக்கு சுவரக்குறிப்புகள் கிடையாது. அதை தொடங்கி வைக்கும் முகமாக இரண்டு முகாம்களை அவர் பணியாற்றிய காலத்தில் செய்துள்ளார் தனபாண்டியன். ஓதுவார்களை அழைத்து வந்து, மூவர் திருமுறைப்பாடல்களை பாடச்சொல்லி அதிலிருந்து 75 பாடல்களுக்கு அது எந்தப்பண், அதன் இராகம் என்ன, அதன் தாளம் என்ன என்பதோடு அதன் சுவரக்குறிப்புகளையும் அதில் உள்ள அறிஞர்களின் துணை கொண்டு எழுதி மூவர் திருமுறைகள் (சுவரக்குறிப்புகளுடன்) என்னும் நூலை எழுதியுள்ளார். அதே போல் சங்கதாசு சுவாமிகளின் நாடகப்பாடல்களையும் அதே வடிவில் கலைஞர்களை கொண்டு பாடவைத்து, அதற்குறிய சுவரக்குறிப்புகளையும் எழுதி தொகுத்து வெளியிட்டுள்ளார்.

            மூன்றாவது நூல் ”கிருத்தவர்களுக்கான கர்நாடக இசைப்பயிற்சி நூல்”. இந்த நூல் 1997ல் அவர் மறைவதற்கு சில காலங்களுக்கு முன் இவரே எழுதி வெளியிட்ட நூல் ஆகும். அது என்ன ”கிருத்தவர்களுக்கான” என்று கேட்டால், கர்நாடக சங்கீதம் என்னும் தென்னிந்திய செவ்வியல் இசையை கற்றுக்கொள்கின்றவர்களை கேட்டால் தெரியும். கர்நாடக சங்கீத பாட முறைகளில் சரளிவரிசை தொடங்கி அலங்காரம் வரை உள்ள பாடக்குறிப்புகள் எல்லாம் ’சரிகமபதநி’ என்னும் சுவரக்குறிப்புகள் கொண்டே இருக்கும். ஆனால் கீதம் தொடங்கி கீர்த்தனை வரை உள்ள பயிற்சியில் அனைத்தும் பாடல்களாக இருக்கும். அவைகள் அனைத்துமே வைதீக மத தெய்வங்களை போற்றும் பாடல்களாகவே இருக்கும். வைதீக மதம் சாராத வேற்று மத மாணவர்கள், மற்றும் அவற்றில் நம்பிக்கை இல்லாத மாணவர்கள் கீதம் தொடங்கி கீர்த்தனை வரை பாடுவதில் உள்ள தயக்கமே அவர்களை கர்நாடக சங்கீதம் என்று சொல்லப்படும் செவ்வியல் இசையை கற்றுக்கொள்ள தடையாக இருக்கிறது. தனபாண்டியன் அவர்களை பொருத்தவரையில் அவர் மதம் சார்ந்த மாணவர்களாவது இந்த தென்னிந்திய செவ்வியல் இசையை எந்தத்தயக்கமும் இன்றி கற்றுக்கொள்ள கீதம் தொடங்கி, கீர்த்தனை வரை உள்ள பாடல்களை கிருத்தவ மதம் சார்ந்த பாடல்களை கொண்டு இந்த நூலை வடிவமைத்துள்ளார். இந்தப்பணியை ஏற்கனவே ஆபிரகாம் பண்டிதவர் அவர்களே செய்யத்தொடங்கியிருந்தார். இதன் விளைவாக குறிப்பாக தஞ்சை நகருக்குள் செவ்வியல் இசை அறிந்த கிருத்தவர்கள் பலரை காணலாம். தஞ்சை நகரில் உள்ள தூய பேதுரு ஆலயத்தில் சமீப காலம் வரை செவ்வியல் இசைக்கருவியான மிருதங்கம் கூட இருந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை தவிர ஜெயஜீவியம், இசை வழி இறை பணி என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இந்த இரண்டு நூல்களும் முழுக்க முழுக்க அவரின் மதநம்பிக்கை சார்ந்த நூல்களாகும்.

            து.ஆ.தனபாண்டியன் 1983ல் தொடங்கி 1997ல் தனது 76வது வயதில் மறையும் வரையில் தனது  இசைத்தமிழ் சார்ந்த ஆய்வுப்பணிகளை தொடர்ந்து எழுத்தாகவோ, சொற்பொழிவாகவோ, பாடல்கள் வழியாகவோ சொய்துகொண்டே தான் இருந்தார். இவரின் தொடர் இசைத்தமிழ் பணியை பாராட்டி 1990ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை கொடுத்து கௌரவித்தது. இவரின் அனைத்து அரிய ஆய்வு நூல்களும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மூலமாகவே வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு இசைத் தமிழ்ப்பணிகளை செய்திருந்த தனபாண்டியன் அவர்களுக்கு, வரும் ஆண்டு அவரின் நூற்றாண்டு என்பது இன்னும் சிறப்பிற்குரிய ஒன்றாகும்.

பா.தேவி யசோதா-இந்தியா

(Visited 525 times, 1 visits today)