கொல்லப்பட்ட சனநாயகம் அல்லது ”அல்லது ஜேசுவில் அறையப்பட்ட சிலுவை” – ஒரு பார்வை-தேவ அபிரா

தேவ அபிரா உயிர்மெய் பதிப்பகத்தினால் 2015 இல் வெளியிடப்பட்ட   “அல்லது ஜேசுவில் அறையப்பட்ட சிலுவை” என்ற கவிதைத் தொகுப்புபற்றிய பார்வை இது. படைப்பாளி கற்சுறா அவர்களினால் 1990களில்  இருந்து 2015 வரை எழுதப்பட்ட படைப்புகளைக் கொண்ட கவிதைத் தொகுப்பு இது. திரு கற்சுறா அவர்கள்  புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார். இவர் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மையநீரோட்டமான தமிழ் தேசியத்தின் அதிகாரக்குரலைக் கேள்வி கேட்பவராகவும் சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தித் தொடர்ந்தும் இயங்கிவரும் படைப்பாளியாவார்.

இந்தத் தொகுப்பு  கவிதைகளையும் கவிதைத்தன்மை உடைய சில பந்திகளையும் உள்ளடக்கி இருக்கிறது. படைப்பு ஒன்று எதனைச் சொல்ல வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளும்போதுதான் வாசிப்பு முழுமை பெறுகிறது. வாசிப்பின் நோக்கமும் அதுதான். இலக்கியம் மனிதரை உணர்வுநிலைக்கு ஆட்படுத்திப் பின் அவர்களுக்கு அறிதல் நோக்கிய பாதையைச் சுட்டிவிடுகிறது. படைப்புக்களின் சொல்முறை, அளிக்கைமுறை அல்லது வடிவம் எதுவாக இருந்தாலும் வாசிப்பின் பயன்நிலை அதுதான். ஜேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள் என்னும்போது தோன்றும் உணர்வுநிலையைக் கடக்கும்போது,  இல்லை! சிலுவை தான் ஜேசுவில் அறையப்பட்டிருக்கிறது. அவர்தான் அதையும் தாங்குகிறார் என்ற அறிதல் நிலையை அடைகிறோம் இல்லையா?

இத்தொகுப்பில் மூன்று வகையான கவிதைகள் இருக்கின்றன.

  1.   .தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இருண்ட பக்கங்களைத் தன்னுணர்வாகவும் (தன்ணுணர்வைச் சொல்வதற்கும்  ஒன்றைத் தன்ணுணர்வு வடிவநிலையில் வைத்துச் சொல்வதற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. தன்ணுணர்வைச் சொல்வது சுய புலம்பலாக மட்டும் அமைந்து விட வாய்ப்புண்டு. இங்குள்ள தன்ணுணர்வுக் கவிதைகள் அவ்வாறானவைகள் அல்ல.) புற நிலையுணர்வாகவும் முன் வைக்கும் கவிதைகள்.- இத்தகைய கவிதைகள் அணைப்பதற்கும் யாருமற்ற, இருளிலும் ஒளிர்கின்ற நிழல்கள்.
  2.   வாழ்வு பற்றிய தத்துவ விசாரங்களை இருண்மைத் தன்ஂமையுடன் முன்வைக்கும் கவிதைகள். – இவை அலையில் மோதும் துளியாக, கண்ணாடிக்கு வெளியே நானாக,  கண்ணாடிச்சில்லுக்குள் குலைந்த உருவாக, கால்களின் கீழே கடலாக, தீவுகளாக விரிகின்றன.
  3.   புலம்பெயர்வு, தமிழ்க்கவிதைக்குள் கொண்டுவரும் காட்சி மற்றும் அக மாற்றங்களைக்  வெளிப்படுத்தும் கவிதைகள்.

இக்கவிதைகளுக்குள் பெண்விடுதலை மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்பான குறியீடுகள் ஆழமாகவும் அழகாகவும் வெளிப்பட்டு நிற்கின்றன என்பது மேற் குறித்த வகையீட்டுக்குள் அவதானிக்கப்படக்கூடிய பொதுப்பண்பாகும்.

1989ம் ஆண்டு மல்லாவிப் பகுதியில் புலிகளால் கொல்லப்பட்ட 15 வயதான யமுனா என்னும் சிறுமிக்கு இப்படைப்பை அவர் சமர்ப்பித்து இருக்கிறார். தன்மீீது துரோகியெனக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதோ தான் கொல்லப்படப்போவதோ கடைசி வரைக்கும் யமுனாவுக்குத் தெரியாமலேயே இருந்திருக்கிறது. சட்டத்தையும் நீதியையும் விடுதலையின் பேராற் தம் கையில் எடுத்துக் கொண்ட இளைஞர் கூட்டம் எந்த வித உணர்வுத் தெளிவுகளும்  இன்றிப்புரிந்த கொலைகளில் இதுவும் ஒன்று. 70களின் இறுதியில் தொடங்கிய ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் அறம், நியாயம், நீதி போன்றவற்றைக் காலப்போக்கில் இழந்து இராணுவவாதம் மிகுந்ததாக மண்மீட்பு என்ற ஒன்றிலேயே அதிகம் கவனம் செலுத்தியதாக மாறியது.  போராடப்புறப்பட்ட அனேகமான ஆயுதம் தாங்கிய குழுக்கள் நீதிக்குப்புறம்பான நடத்தைகளிலும் ஈடுபட்டன.  இதற்கு மறுபுறமாகச் சிங்களப் பேரினவாத அரசும் அதன் பொலீஸ் மற்றும் இராணுவக் கட்டமைப்புக்களும் அரசு ஒன்றுக்கு இருக்கக்கூடிய பொறுப்புணர்வை இழந்து  அரச பயங்கரவாதத்தையே தொடர்ந்தும் வெளிப்படுத்தின. இவை இரண்டுக்கும் இடையில் இருந்த மக்கள் அடைந்த துன்பங்களும் இழப்புக்களும் சொல்லில் அடங்காதவை. விடுதலைக்கான போராட்டம் உண்மையிலும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி எங்கள் போராட்டம் இருக்கவில்லை. அரசுக்கெதிரான, ஆயுதம் தாங்கிய  மண்மீட்புப்போராட்டம் என்ற ஒற்றைப்பரிமாணம் கொண்டதாக இருந்த எங்கள் போராட்டம் சாதியம், பெண்விடுதலை, பிரதேசவாதம், மதவாதம், சிறுபான்மையினரின் உரிமைகள், அடிப்படை மனித உரிமைகள் போன்ற தளங்களில் ஆழமான அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களுக்காக வேலை செய்திருக்கவில்லை என்பதையும் இன்றைக்கு உணரத் தலைப்பட்டிருக்கிறோம்.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அவற்றுக்கான குறிகாட்டிகளாக இருந்திருக்கின்றன. கடும் துயரும் இழப்புகளும் நிறைத்திருந்த கடந்த காலத்தை இவ்வாறு புரிந்து  கொள்வது என்பது கடந்த மூன்று தசாப்தங்களாக நிகழ்ந்த போராட்டத்தில் மரணித்த, காணாமல் ஆக்கப்பட்ட எந்தப்போராளியையும், எந்த மனிதரையும் கொச்சைப்படுத்துவதாக ஆகாது என்பது எனது ஆழமான நம்பிக்கை.

தமிழ் ஈழ விடுதலைப்போராட்டக்களத்தில் போராளிகளாகவும் படைப்பாளிகளாகவும் இயங்கியவர்களிற் பலர் அப்போராட்டத்தின் கேள்விக்கிடமற்ற அதிகார சக்தியாகப் பிற்காலத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்களால் (புலிகளால்) அவர்கள் கொண்டிருந்த மாற்றுக்கருத்துக்கள் காரணமாக அச்சுறுத்தப்படுகின்றனர்;  மௌனமாக்கப்படுகின்றனர்.  இவ்வாறு வாய் அடைக்கப்பட்டு இருளாக்கப்பட்ட ஒரு தளத்திலிருந்து வரும் குரலாக இத்தொகுப்பு வருகிறது. தமிழ் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் ஒரு நிலையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளையும் அவர்களை ஆதரித்தவர்களையும் தவிர ஏனையவர்களைத் துரோகிகளாகக் கருதும்போக்கு உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. இப்போக்கு மாற்றுக்கருத்துகளைப் பேசவோ பரப்பவோ இருக்க வேண்டிய சனநாயக உரிமையை மறுதலிப்பதாக வளர்ந்தது.

” நாங்கள் தொடர்ந்தும் துரோகிகளாகவே இருக்கிறோம் ஆனால் எமது எதிர்நிலையில் மாவீரர்கள்தான் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்”

எனக்கற்சுறா இதனைக் குறிப்பிடுகிறார்.

தொகுப்பின் ஆரம்பப்பத்தியிற் யுத்தத்தை ஆதரித்த எழுத்தாளர்கள்மீது தனது மிகக்கடுமையான விமர்சனத்தை வைத்து அவர்களின் தனிப்பட குணநலன்களின் பிறழ்வையும் சுட்டிக்காட்டித் தன்னைக் கற்சுறா அவர்களிடமிருந்து வேறுபடுத்திக்கொள்கிறார். ஒரு இனத்தை அதன் வாழ்வை அதன் மொழியை அடையாளமே இல்லாமல் அழித்தவர்களாக- அவர்கள்தான் அழித்ததாகக்  குறிப்பிட்ட தொகுதி எழுத்தாளர்களை ( யுத்தத்தை ஆதரித்த எழுத்தாளர்களை ) அவர் அடையாளப் படுத்துகிறார். இனங்களின் அடையாளங்களையும் மொழியையும் வாழ்வையும் அழிப்பதிற் பேரினவாத அரசுகள் மிகக் கடுமையான ஈடுபாட்டைக் காட்டுவதை அவர் ஏனோ இங்கு முதன்மைப்படுத்த வில்லை.  எதனை எங்கு எப்பொழுது முக்கியப்படுத்த வேண்டும் என்ற தெரிவைச் செய்யப் படைப்பாளியான அவருக்குள்ள உரிமையை அவர் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக இதனைப் புரிந்து கொள்கிறேன்.

ஒடுக்கப்படுபவர்கள் எப்பொழுதும் ஒடுக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ஒடுக்குபவர்களின் முகம்கள் தாம் மாறிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் அடிப்படையான உண்மை. ஒடுக்கப்படும் தமிழ்த்தேசியம் இன்னொரு தளத்தில் இன்னொன்றை ஒடுக்கும் சக்தியாகவும் இருந்துகொண்டிருக்கிறது. ஒடுக்குமுறைக்கு எதிராகப்போராடுகிற சக்தி பெற்றுக் கொள்கிற அதிகாரம் அதனுள் உள்ள சமூகப்பிரிவுகளை அடக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதை வரலாற்றிற் காண்கிறோம். இப்பண்பு உலகளாவியதாகவும் இருக்கிறது. அதனாற்றான்  உலகம் அதிகாரம் உள்ளவர்களுக்கும் அதிகாரம் அற்றவர்களுக்கும் இடையிலான போராட்டத்தால் இயக்கப்படுவதாக இருக்கிறது.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தம்மை மட்டுமே தமிழ் மக்களுக்காகப் போராடும் சக்தியாக   நிலைநிறுத்திக் கொண்டு இலங்கை அரசுடன் புரிந்த போரைப் படைப்பாளி மிக்கடுமையாக நிராகரிக்கிறார். அந்த நிராகரிப்பும் புலிகள் புரிந்த கொலைகள் சித்திரவதைகள் மீதான நிராகரிப்பும் இவற்றின் மீதான கடும் கோபமும் இத்தொகுப்பிற் பரவிக் கிடக்கின்றன.

கிழத்தியின் குரலில் ஒலிப்பிரட்டை கள்ள மௌனத்தின்  பின்னிருந்து எழும்பும் வன்முறை  என்ற கவிதையில் வரும் வரிகள் இவை:

சூடுக்கும் சாவுக்கும் எந்த இடைவெளியும் இருந்ததில்லை

ஒரு துடிப்பும் தெரியவில்லை

வழமை போல எங்களிடம் அமைதியிருந்தது

அவர்கள் சொன்ன நியாயம் இருந்தது.

இதய சுத்தியுடன் மக்களின் விடுதலையை நேசித்தவர்களைத் துரோகிகள் என ஒதுக்கும்போது, அவர்களைக்  கைது செய்து சித்திரவதை செய்யும்போது, கொலை செய்யும்போது, ஏற்படும் துயரம், வலி, அச்சம், சிந்தப்படும் இரத்தம் போன்றவை  அவற்றுக்குச் சாட்சியாக இருந்த, எஞ்சி வாழும் மனித மனங்களில் துயரப்பாறைகளாகித்தங்கி விடுகின்றன.

கீழ் வரும் கவிதை வரிகள் அப்பாறைகளுக்குள்ளிருந்து  வரும் வரிகள்.

  • நெருப்பிடம் அமிழ்ந்து கொண்டு  யாரை நெருங்குவது (கவிதை13)
  • நான் உருகி ஒழுகிக்கொண்டிருப்பது உங்களில் யாருக்குத் தெரிகிறது (கவிதை14)
  • கணங்களின் இடுக்கில் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறேன் (கவிதை16)

கவிதை 21 கீழ் வருமாறு அமைகிறது

கொலையும்

கொலைச் சிரிப்பிற் கும்மாளமும்.

ஆணுறுப்பு அறுந்த வலி  எனக்கு.

ஒவ்வொரு வெடித் தீர்விலும் இறந்து கொண்டிருக்கிறேன்.

மௌனம் பொத்த எனக்குள் சித்திரவதை.

காயம்பட்டு உடல் சீழ்வடிய நாறுகிறது.

இது சாவு மணம்.

நுண்ணிய உணர்வுக்கனதி.

நிச்சயம் நாலு நாளாய்ப் புழுத்தெறிக்க  மணத்த சாவு எனக்கு.

ஒரு இரவில் அறுதலிகளாய்ப் போன எனது பயல்களுடன் சேர

ஏதாவது ஒரு தெருவிற் சாவு வரின் சுகம்

இந்த மண்ணை விட. 

தமிழ் மக்களின் விடுதலைக்காய் போராடியவர்கள்  தமது சொந்த இனத்தினாலேயே   வேட்டையாடப்பட்டுக் கொண்டு வருகிற நிலையிற் அத்தகைய தொரு மரணம்தான் தனக்கும் நிகழப்போகிறது என்பதை முன்னுணர்ந்து கொள்கிற, போராட்டம்பற்றிய மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கிற  ஒரு போராளியின் மனம் அடைகிற சித்திரவதையைச் சொல்கிற கவிதை இது. இந்த மண்ணில் வாழ்வதை விடத் தான்  செத்துப்போவதே சுகமானது என்கிற நிலைக்கு  ஒருவரைத் தள்ளும் வகையில்  எமது போராட்டம் இருந்திருக்கிறது! இங்கே இன்னொன்றயும் கவனிக்க வேண்டும்.

கணவணை இழந்த பெண்ணை (அவன் கட்டிய) அவளின் தாலியை அறுத்து அவளை விதவையென அடையாளமிடும் மரபிலிருந்து வந்த சொல்லான  அறுதலி ( அறு தாலியின் மருவிய வடிவம்) என்ற சொல் இக்கவிதையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  இது  ஆண்மைய உலகில் ஒரு வசவுச் சொல்லாகவும் பயன் படுத்தப்படுவது. கொல்லப்பட்ட போராளிகளின் மனைவியர் அறுதலிகளாகிற குரூரத்தை இங்குக் காண்கிறேன்.

இத்தொகுப்பின் முன்றாவது கவிதை:

யுத்தம் எப்பொழுதும் நிர்வாணத்தை நோக்கியே அசையும்

யுத்தத்தில் வெல்வதிலும் தோற்பதிலும் அதிகம் தரிசிக்க முடிவது நிர்வாணமே

இராணுவச் சிப்பாய்க்கு நிர்வாணம் குறித்து இருக்கும் அக்கறைக்கும் அவனால் சிறைபிடிக்கப்பட்ட போர்க் கைதிக்கு  இருக்கும் அக்கறைக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லை.

இரண்டுக்கும் உயிரில் இருக்கும் அச்சத்தைப் போலவே ஆசையைப் போலவே நிர்வாணத்திலும் அச்சம் இருக்கிறது ஆசை இருக்கிறது

ஒன்றையொன்று வெற்றி கொள்வதில்தான் அதன் இருப்பிடம் மாறுபடுகிறது.

யுத்தம் எப்பொழுதும் நிர்வாணத்தையே நோக்கி நகரும்  என்கிற வரியில் நிர்வாணம் என்பதைப் படைப்பாளி அம்மணம் அதாவது எல்லாவற்றையும் இழந்த நிலையைக் குறிக்கப் பயன்படுத்துகிறாரென நினைக்கிறேன். நிர்வாணம் என்பதை முக்தி அடைதல் அல்லது ஞானம் அடைதல் என்கிற கருத்துகளிலும்  பயன்படுத்தலாம். மேற்கொண்டு இக்கவிதையில் இராணுவச் சிப்பாய்க்கு நிர்வாணம் குறித்து இருக்கும் அக்கறைக்கும் அவனால் சிறைபிடிக்கப்பட்ட போர்க்கைதிக்கு  இருக்கும் அக்கறைக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லை என்று ஒரு வசனம் வருகிறது. எல்லாவறையும் இழத்தலில் என்ன அக்கறை இருக்க முடியும்? இக்கவிதை  அதன் சொற் பயன்பாடுகள் காரணமாகக் கருத்துருவாக்கத்தில் சிக்கலைக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். நிர்வாணம் அக்கறை ஆகிய சொற்கள்  என்னென்ன அர்த்தங்களிற் பாவிக்கப்பட்டுள்ளன  என்பதில்தான் கவிதையின் பொருள் தங்கியுள்ளது. இன்னுமொரு முக்கியமான விடையம் இக்கவிதையில் உள்ளது.

இக்கவிதையில் போர்க்கைதி என்ற சொல் பாவிக்கப்படுகிறதே ஒழியப் போராளி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. நிகழ்ந்த யுத்தம்பற்றி மிக மிகப் புற நிலையான  பார்வையையே படைப்பாளி கொண்டுள்ளார் என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. எவ்வாறெனினும் போரில் எவருமே வெல்வதில்லை என்பதும் போரின் முடிவில் எல்லோரும் அம்மணமாகி விடுவோம் என்பதும் கவிதையின் உள்ளீடாக உள்ளது.

பெயர்க்கப்பட முடியாத மொழியும் அதற்குள்ளான இரண்டு கவிதைகளும் என்ற கவிதையில்   நாங்கள் எப்படி அதிகாரங்கள் புரியும் கொலைகளுக்கு உடந்தையானவர்களாக ஆகிறோம் எனச் சொல்கிறார். கொல்லுணர்வும் வன்முறை உணர்வும் எங்கள் அகத்திலேயே இருக்கிறதைச் சுட்டுகிறார்  மரணத்தை நியாயப்படுத்துவதை விடுத்து வாழ்வை வேண்டும் கவிதைகளை அவர் நாடுகிறார்.

“மரணத்தை இரசிப்பதும் மரணத்துக்காய் வாழ்வதும் கவிதையாய் இருப்பது போல் மரணத்தை வெறுப்பதும் மரணத்தைக் கொல்வதும் கவிதையாய் இருக்கிறது ” என்கிறார்.

கிழத்தியின் குரலில் ஒலிப்பிரட்டை கள்ள மௌனத்தின்  பின்னிருந்து எழும்பும் வன்முறை என்ற கவிதைகீழ் வருமாறு முடிகிறது.

” யுத்தத்தின் மீது சத்தியம் செய்த புதல்வர்கள்

தமது துப்பாக்கிகளைத் தூக்கி

பெண்களின் முலைகளைத் திருகினார்கள்.

மெளனம் குருதியில் உறைய வாழ்வை அழிக்கிறார்கள்.

பெண் உடல்மீதெங்கும் விடுதலை”

போராளிகள்பற்றியும் விடுதலை இயக்கம் பெண் விடுதலை பற்றி முன் வைத்த விம்பங்கள் பற்றியும் இங்கே கேள்விகள் பிறக்கின்றன அல்லவா?

ஒரு கிலிசு கெட்டழிகிறது தேசம் என்ற கவிதையில்,

போரையும் கூடவே சாதியையும் கொண்டு உருளும் கூட்டத்தில் அம்மணமாய் உலா வந்தேன் என்றும் பிடி மண்ணில் நிறைகின்றன மீசை முளைக்காத புதைகுழிகள் என்றும் எழுதுகிறார். தமிழீழ விடுதலைப் போராட்டம் யுத்தத்தை நாடாத்திக்கொண்டு சாதியத்தை பேணியதையும் அது சிறுவர்களை யுத்தகளத்துக்கு அனுப்பியதையும் இங்கு அவர் குறியீடு செய்கிறார்.

கவிதை 19 சாதிய ஒடுக்குமுறையைக் குறியீடு செய்யும் கவிதை.

நாங்கள் புழுவாய்ப் புல்லாய் நாய் நரியென  எல்லா மாதிரியும் மாறி மாறி வேஷம் தரித்து முடித்தாகியாச்சு.

நிலைமையில்  மாற்றமில்லை

ஒவ்வொரு சங்காரத்தின் முடிவிலும் அவர்கள் வென்றார்கள்

 எம்மீது ஏற்றிய ஒவ்வொரு வேலிலும் அவர்களின் வெற்றி,

 நாங்கள் மட்டும் தோத்தபடிக்கு.

அடுத்து வரும் போர்நிறுத்த இடைவெளியில்

அல்லது ஒரு பேச்சுவார்த்தையில் வழமைபோலவே அவர்கள் வெல்வார்கள்.

 கூடவே எதிரியும் வெல்வான்

 நாங்கள் வேடங்கள் தரித்து இன்னொரு சங்காரத்துக்குத்

 தயாராய் இருக்கிறோம்

இன்னும் இன்னுமாய் தோற்பதற்கு.

தேவ அபிரா

இக்கவிதையில்  நாங்கள், அவர்கள், எதிரி என்ற மூன்று பிரிவுகளுக்கிடையிலான பகைநிலை அல்லது முரண்நிலை முன் வைக்கப்பட்டுச் சாதிய ஒடுக்குமுறைபற்றிப் பேசப்படுகிறது.  இக்கவிதையில் நாங்கள் என்பது சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களையும் அவர்கள் என்பது  தமிழ் ஆயுததாரிகளையும்  எதிரி என்பது அரசஇராணுவத்தையும் குறிப்பதாக  வாசிக்கலாம். சூர சங்காரம் இங்கு உருவகமாக வருகிறது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் சூரனாகவும் கடவுள் மதம் என்பவை அவர்களை ஒடுக்குபவர்களாகவும் ஆயுததாரிகள்- தேசிய விடுதலைப்போராளிகள் கடவுளின் ஆதிக்க சாதியின் பிரதி நிதிகளாகவும் குறியீடு  செய்யபடுகிறார்கள். இங்கே முக்கியமான இரண்டு வரிகள் வருகின்றன.

  1. நாங்கள் மட்டும்தோத்த படிக்கு.

விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த மண்ணில் இன்றைக்கும் சாதிய முரண்கள் தலையெடுத்துக் கொண்டுதான் உள்ளன. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் தோற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

  1. கூடவே எதிரியும் வெல்வான்.

ஒடுக்கப்படுகிற எந்தச்சமூகப்பிரிவும் தனக்குள் உள்ள ஒடுக்குமுறைக் கூறுகளைக் களைந்து மனிதத்தை உயர்த்தாதவரை அது தன் எதிரியிடம் தோற்ற படிதான் இருக்கும்.

கவிதை 20 இனை இலங்கை அல்லது இந்திய இராணுவம் ஊருக்குள் நுழைந்ததைக் குறிக்கும் கவிதையாக வாசிக்க முடியும். இக்கவிதையின் இறுதிப்பகுதியும் பின் வரு மாறு முடியும்.?

எங்கே?

எனக் கேட்கும் பெயருடன்

இன்னும் என்

பன்னாடை ஊர்.

ஒருவரை நீங்கள் ஊரில எவடம் எனக்  கேட்கும் பாரம்பரியம் எதனைக் குறிக்கும் என்பதை எல்லோரும் அறிவர். கவிதைகள் 19, 20 மற்றும் 48 இனை வாசிக்கும்போது படைப்பாளி  கடந்த அரை நூற்றாண்டாக இலங்கையில் நிகழ்ந்து வரும்  ஒடுக்கு முறைகளில் அரசுகள் மேற்கொண்ட கொள்ளுகின்ற ஒடுக்குமுறைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் புலப்படும். ஆயினும் இத்தொகுப்பில் தமீழீழ விடுதலைப்போராட்டத்தின் உள் ஒடுக்குமுறைகள் மீதே அவர் தன் கவனத்தைக் குவித்திருக்கிறார். தமிழ் மக்களின் விடுதலையை நேசித்த ஒரு தொகுதிப் போராளிகளின் கவனம் எதிரியின் மீது குவிய முடியாமற் போகுமளவுக்கு உள்ளொடுக்கு முறைகள்  இருந்திருக்கின்றன என்றும் இதனைப் புரிந்து கொள்ளலாம். தமது சொந்த லாபங்களுக்காக ஒடுக்குமுறை அரசை  ஆதரித்த/ இன்னும் ஆதரிப்பவர்களிடம் இருந்து இவர்களை விலக்கி வைக்கிறேன்.  ஒடுக்கு முறை அரசுகளின் நிலைப்பாட்டை ஆதரித்துக் கருத்துகளை வெளியிட ஒருவருக்கு உரிமை உள்ளது என்பதையும் அத்தகையவர்கள் கொல்லப்பட வேண்டும் என்கிற எண்ணம் தவறானது என்பதையும் கூடவே இங்கே நினைவு கூர வேண்டும்.

கவிதை 35  முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த இறுதி யுத்தத்தின் விளைவைக் காட்சிப்படுத்துகிறது.   இந்தக்கவிதை வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் கவிதை.

பெரு நிலம் (வன்னிப்பெருநிலம்)

மயானத்தின் வெளி வாசற் கதவு மூடிக் கிடக்கிறது ( வெளியுலகத் தொடர்பற்ற நிலை)

எண்ணிலடங்காத வார்த்தைகளையும் எண்களையும் தவிர்த்துவிட்டு

மூடிக்கிடக்கும் கதவில் மௌனத்தின் இரைச்சல் (எல்லாமும் அடங்கி விட்டன ஆனால் மௌனமே இரைச்சாலான  கொடுமை- அட ஒரு உயிரின் சந்தடி கூட இல்லையே என்னும் ஏக்கம்)

நிலமிழந்த கால்களைத் (  போர் நிலத்துக்காகவே நிகழ்ந்து )தேடி எங்கிருந்தோ உரைக்கப்பட்ட பொய்யொன்று காற்றிற் சுழன்றடித்து ஒருமுனையிற் தொங்குகிறது ( ஈழம் கிடைக்கும் என்றோ அல்லது இறுதிக்கணத்தில்  மக்களைக் காப்பாற்றச் சர்வதேசம் தலையிடுமென்றோ அல்லது போரிட்ட தலைமையைக் காப்பாற்றக் கப்பல் வரும் என்றோ உரைக்கப்பட்ட பொய் என்று இதனை வாசிக்கலாம்)

ஓலம் மரணத்தின் மூச்சைத் திணற வைக்கிறது ( இப்பொழுது  மௌனமான இடத்தில் இருந்து ஓலம் கேட்கிறது-முரண் அணிதான்) 

சாய்த்துச் செல்லப்பட்டு( சுய விருப்பின்றி) நிலமெங்கும் பரவி விடப்பட்ட மரண குவியல்

மனதிலிருந்து தோன்றிய ஒரு ஓவியத்தின் வரிகளாய் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் குழந்தையை இரசிப்பதற்கு காத்திருக்கிறார்கள் எமது மக்கள். கைகளிலிருந்து பறித்து மீள மோதும்  குழந்தை எப்படித் திரும்பவும் தன் இருப்பிடத்தைத் தெரிவு செய்தது? (காத்தான்குடியிற் படுகொலைகள் நிகழ்ந்த பொழுதுக் குழந்தைகள் சுவரில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இன்று  இங்கே இறுதிப்போரில் கொல்லப்பட்ட குழந்தை  அக்குழந்தையை நினைவு படுத்துகின்றது/தா?

இரவின் நிலக்கீழ் அறைகளிற் பதுக்கி வைக்கப்பட்ட கதைகளை யார் நமக்குகினிச் சொல்வது ( போரிடுவதற்குப் பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்றபொழுது  மக்கள் தமது பிள்ளைகளை நிலக்கீழ் அறைகளில் ஓழித்து வைத்ததைக் குறியீடு செய்கிறது.)

அழிப்பதற்கு ஏதுமற்ற மக்கள் மௌனித்திருக்கிறார்கள்.  ( இங்கே இழப்பதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு தம்மிடம் எதுவும் இல்லாத என்ற கருத்தில் வருகிறது.)

எஞ்சியிருக்கும் ஒரு சொட்டு வாழ்விற்கு.

கவிதை 18

கவிதை வாசிப்பு

 

பக்கங்கள் விரித்து

ஒரு இராச்சியம் வரைந்து

கலர்கலராய் குடிகொண்டிருந்த காலம் எல்லாம் போச்சுதடி மவனே

விடுதலைப் புலிகள் நிகழ்த்திய ஈழவிடுதலைப்ப்போராட்டம் மாயங்களைக்  கட்டமைப்பதாகவே  இருந்திருக்கிறது. அது குலைந்து விட்டது.
உன்னுடைய கர்ப்பக்கிரகச் சிலையா?

தொடாதே!

வெளியில் நில்!! என்பதற்கு

தீண்டாமையைச் சாதியத்தைக்  குறியீடு செய்யும் வரிகள். இது விடுதலைப்போராட்டத்தைத் தனியொரு அமைப்பாக்க குத்தகைக்கு எடுத்தமையை விமர்சிப்பதாகவும் அமைவது 
வேண்டாம்

எனினும் படர்ந்து

கூச்சம் மேலிட

அடங்கிப் போவது தானே வழமை.

பெண் ஒடுக்கு முறையைக் குறியீடு செய்வது ஆனால்  இங்கு கூச்சம் மேலிடஅடங்கிப் போவது தானே வழமை என்ற வரிகள் அடக்கு முறையை ஏதோ ஒரு வகையில் அப்பெண் ஏற்பதாக அமைகிறது. இங்கே பெண் என்பது தமிழ் தேசியத்தைக் குறியீடு செய்வதாயின் பெண்நிலை சார்ந்தும் கருத்தியற் சிக்கல்களை உருவாக்கக்கூடிய குறியீடு.
சுழல் காற்று

திசை அறியா

எல்லாத்திசைகளில் இருந்தும் வந்த இராணுவ அடக்குமுறை
வன்மத்தில் பாடாய்ப்புரட்டி

நிலத்திற் குறி தேய மிதிக்க

இராச்சியமும் போய்க்

குறியும் போனது

இராணுவத்தால் நசிக்கப்பட்டமையைக்குறிக்கிறது. குறி என்பது ஆண் மைய வாத இராணுவ அமைப்பைக் குறிக்கிறது
அம்மண சுகம்  குரூரமான யதார்த்தம்
மூச்சடக்கி உயிர் அறுத்த பக்கமெல்லாம் வெடுக்கு

எழவு வீட்டில் மாரடித்து அழும்போது வெடுக்கைக் கிளறி வெளியிலிடுங்கள்.

இந்த இழப்புகளுக்கும் மரணத்திற்கும் பின்னால் இருக்கும்  எங்கள் சொந்தத்தவறுகளை வெடுக்கு என்னும் சொல் குறியீடு செய்கிறது.
குறியும்  ராஜ்யமும் கோடிடாது  இனி என் முதுகில் .  

விடுதலைப்புலிகளின் போராடம் முடிந்து விட்டது. அவர்களின் அதிகாரம் இனி என்னை ஒன்றும் செய்ய முடியாது.

 

இத்தொகுப்பின் 37 வது கவிதை இருண்மைத்தன்மைகள் அற்றது. வாசிக்குமெவரையும் தன்னுட் கண்ணீருடன் ஈர்த்துக்கொள்ளும்  கவிதை இது

நீரிலிருந்து தொடங்கிய உனது வார்த்தை

என்னிற் கசிந்தபொழுது

எனது நா வழுவழுத்தது.

சொல்லற்றுப் போனபொழுது

கண்களால் வார்த்தைகளை உனக்குள் சாற்றினேன்

நீ என்னை மன்னித்தாயா என் சின்ன மலரே?

ஒரு பூவின் வதங்கிய சருக்கோடு சுருட்டியபடி குருசும் கொஞ்சம் மஞ்சளும் இன்னும் என் கையில் மீதம் இருக்கிறது

உனக்குத் தெரியுமா அதன் பாரம்?

இருபத்தியெட்டு வருஷமாக அதனைக் காவித்திரியும் எனக்குச் சலித்து விட்டது.

ஏதாவது ஒரு தடவை அது என்னைக் காக்கும் என்ற உனது நம்பிக்கையைத் தொலைத்து விட என்னால் முடியவில்லை.

கனத்தையும் பாராது காவித் திரிகிறேன்.

ஆனால் என் சின்ன மலரே எனக்குச் சலித்து விட்டது

எங்கேனும் ஒரு கடலில்

எங்கேனும் ஒரு சமாதியில்

உன்னைக்  கை விட்டது போல் அதனையும் நான் கைவிட வேண்டும்

வழி மாறாதிருக்கக் காட்டை முறித்து அடையாளம் இட்டது போல்

வந்த வழி எங்கும் அடையாளம் இட முடியவில்லை.

நீரை முறித்துக் கருக  வைக்க முடியாது இலைகளைப் போல.

நீர் நனைத்த தெருக்களில் வார்த்தைகள் எப்போதும் இளவாளித்துக் கொண்டே இருக்கின்றன.

கணச்சூடு மொய்த்த என் பிஞ்சுடலைப் பிரித்தெடுத்து ஒரு கொடு தாயாய் ஏன் தத்துக் கொடுத்தாய்?

உடலின் மொச்சைகளில் தானே வாழ்வின் ருசி அதிகம்!

என்னை விட்டெறிந்த வழிகளில் 

முறித்து மடித்த காடாய்த்  தாய்களின் கால்கள்.

நான் நடக்கும் புதிய தெருக்கள் எங்கும்

சின்ன மலரே உன் அம்மாக்களின் கால்கள் முளைத்து நிற்கின்றன.

கால்களின் கீழே கண்ணாடி நீர்ப் படிகம்

கண்ணாடியில் உடைந்து நீரில் நனைகிறது  அவர்களது கால்கள்.

என் சின்ன மலரே உன் கால்கள் எங்கே நனைகின்றன?

பற்றிப்பிடித்துக்  கேட்க ஆயிரத்தெட்டு கேள்விகள் என் கைகளில் இருக்கின்றன.

இக்கவிதையின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை நீர் வருகிறது. அது கண்ணீர். சின்ன மலர் என்பதைப்  பெயர்ச்சொல்லாக எடுக்கும்போது ஓரு கருத்தையும்  சிறு மகள் என்று கொள்ளும்போது இன்னோரு கருத்தையும் தரும் கண்ணீர்க்கவிதை இது. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்தம் அனுபவங்ளினூடே பெற்றோர் பிள்ளை உறவு நிலை பற்றிய ஆழமான தாக்கத்தை உருவாக்கக் கூடிய கவிதை.

சிலுவை மோகம்  என்ற கவிதை வெளிப்படுத்தும் வாழ்வுக்களமும் மனிதர்களும் தமிழ்க்களத்தில் இல்லாதவை. வீடற்றவனாக வாழும் கிழவன் ஒருவனின் பாதுகாப்பில் வீதியில் வளர்ந்த   லினோடாவின் காதலலும் காமமும் கட்டுக்கள் அற்றவை. அவள் தன் சுதந்திரமன  ஆன்மாவின்  குரலை உயர்த்தத் தயங்காதவள். கலவிக் கூச்சலென அவள் சொல்வது உண்மையிலும் அவளின்- பெண்ணின் ஆன்மாவின் குரலாகும்.

வாழ்வின் உச்சம் எனப் போற்றும் உனது ஒழுக்கம் கரைந்து

எனது யோனியில் வழிகிறது

உன்னுடைய தூண்டுதலில் திளைத்து

இருட்டறையின் மோகவாசல் வரை

உன்னோடு ஓடிவரும் எனக்கு

நேர்த்தியாகப் புணர்வது எப்படி என்பதைச் சொல்

சாரையாய் சுற்றி ஊர்ந்து வரும் உன் கைகள்

என் மார்புக்குள் நீந்தும் சிலுவையில் தரிக்கின்றன.

அது ஒன்றுமில்லை

இயேசுவில் அறையப்பட்ட சிலுவை என்று நான் உனக்குச் சொன்னதும் 

உனது ஒழுக்கம் ஒரு முறை உன்னைச் சுருக்கியது

நிச்சயிக்கப்பட்ட வாழ்வில்

நிச்சயிக்கப்பட்ட புனிதங்களுடன் 

காலம் தள்ளும் உனக்கு 

என்னுடைய கலவிக் கூச்சல் இடைஞ்சலாய் எப்பொழுதும் இருக்கட்டும்

என்று சண்டை இட்டாள்

தொடர்ந்து இக்கவிதையை வாசித்து முடிக்கும்போது  இங்கே நிகழ்வது வெறும் உடலுறவல்ல என்பதையும் ஒழுக்கம்- ஒழுக்கமின்மை   என்ற அற நிலைப்பட்ட வரைவிலக்கணத்தை உடைக்கும்,  ஆணுக்கும் பெணுக்கும் இடையிலான உறவின் புதியதொரு தளத்தை இக்கவிதை முன் வைப்பதை உணர முடியும். கவிதையின் பின்பகுதி லினொடா மரணம் அடையும் வரையும் அவளுடனான காமத்திலும் காதலிலும் திளைத்திருக்கும் ஆணின் மிதப்பை மட்டும் சொல்லி முடிகிறது.

அவென்யூ பப்லு பிக்காசோ  இல் ஊடறுக்கும் மரண கூத்து என்ற கவிதையில் உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ள ஒருத்தியுடனான உரையாடலையும் உறவையும் விளக்கும்போது(அவளிடம் தான் பச்சை குற்றிக் கொள்ளச் செல்லும்போது)அது மீ நடப்பியல்வாதத்தன்மை(surrealistic)கொண்ட சித்திரத்தை உருவாக்கும் கவிதையாகப் பரிமாணம் கொள்கிறது. இது பிக்காசொவின் ஓவியம் ஒன்றைப்பார்த்ததன் பின் உருவான கற்பனையா அல்லது படைப்பாளியின் வாழ்வனுபவத்தின் வழி உருவான கவிதையா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. இது ஒரு ஓவியத்தின் அருட்டுணர்வால் வந்திருக்கும் எனின் அவ்வோவியத்தையும் கவிதையையும் இணைத்துப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இந்தக் கவிதையின் பகுதிகள் உருவாக்கும் ஒவ்வொரு சித்திரத்தையும் புரிந்து கொண்டு , கவிதையின் முழுமையை உருவாக்கி உணரத்தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும்  முடியவில்லை. மேலும் கவிதையின் பகுதிகள் உருவாக்கும் சித்திரங்களை இணைக்கும்  பாதைகளையும் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை என்பதையும் இங்கு நான் ஒத்துக்கொள்ள வேண்டும். ஆயினும் பகுதியாகவேனும் விளங்கிக் கொள்ளக்கூடிய ஆனாற் தன்னளவிற் முழுமையான அழகான ஓவியம் இக்கவிதை. இதுவும் தமிழ்க்கவிதைக்குள் புலம் பெயர்வு கொண்டு வரும் காட்சி மாற்றத்தைக் குறிக்கும் ஒரு முக்கியமான அடையாளம். மேற் குறித்த இரண்டு கவிதைகளிலும் வரும் பெண்கள் மேற்குலகின் விளிம்பு நிலைப்பெண்கள். இவர்கள் இங்குள்ள பிரதான நீரோட்டத்தில்  உள்ள விழுமியங்களுடன் ஒத்துப்போக்காதவர்கள்.

இத்தொகுப்பில்  உள்ள பல கவிதைகள் இருண்மையானவை. இருண்மையற்ற கவிதைகளிலும் கூட இருண்மையான படிமங்கள் அல்லது சொற்றொடர்கள் வருகின்றன.

உதாரணத்துக்கு ஒரு கவிதை:

(கவிதை 39)

கவிதை எனது புரிதல்/வாசிப்பு
இருளிற் கைவைத்துச் சுவரைப் பிடித்தேன்

கையில் நிழல்

கையில் நிழல் என்பதன் மூலம் பிடிபட்டது சுவரல்ல  என்பது தெளிவாகிறது.

இருளுக்குள் நிழல் உருவாவதில்லை என்பது இன்னொரு முரண்

பின்னால்

மனதிற்குள் நிலைகுத்தி நின்றது சுவர்

சுவர் என்பது இங்கே பற்றிப் பிடிக்கக்  கூடிய, நம்பிக்கை தரக்  கூடிய  ஒன்றைக்குறிக்கக் கூடும். தனது மனதுக்குள் இருந்த ஒன்றைப் புறத்தே தேடித் தோல்வியடைந்திருக்கக் கூடும்
இருளுக்கும் நிழலுக்கும்  கருமை வேறு நிழலைச் சுற்றி எப்பொழுதும் ஒளி இருக்கும் ஆனால் இருளுக்குள் எப்பொழுதும் ஒளி இல்லை எனவே இரண்டும் உருவாக்கும் கருமைகள் வேறானவை.
கண்ணாடி வெளியே நான்

உள்ளே இருள்

கண்ணாடிக்கு முன் நிற்கிறவர் கண்ணாடிக்கு உள்ளே இருள் என்கிறார் எனவே அதன் உள்ளே தெரிகிற விம்பம் அவரது நிழலாக இருக்க வேண்டும்.
கண்ணாடி வெளியே, நான்

உள்ளே இருள்

காற் புள்ளியை வெளியே எனபதற்குப்பின்னால் இட்டால் உள்ளே  உள்ள இருளே நான் என்றும் பொருள் படும்

 

 

சூனியத்துக்குள் நம்பிக்கையைத் தேடுகிற நானேதான் இருளும் நிழலும் என்றும் இக்கவிதையை வாசிக்கலாம்.

எந்தக்கவிதையும் எங்களுக்குள் காட்சியை/காட்சிகளை  உருவாக்குகின்றது/றன. படைப்பாளி உருவாக்குகிற காட்சி நேரடியாக விடையத்தைச் சொல்வதாகவோ மறைமுகமாக விடையத்தைச் சொல்வதாகவோ இக்காட்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டவையாகவோ ஒழுங்கற்றுச் சிதறியவையாகவோ கவிதையில் வெளிப்படலாம். தான் உருவாக்க விரும்புகிற காட்சிபற்றிய தெளிவும் அதனைச் சொற்களில் வெளிப்படுத்துகிற திறனும் அது வாசிப்பவரிடத்து என்ன வகையான காட்சியை/ சித்திரத்தை  ஏற்படுத்தக்கூடும் என்கிற புற நிலையான பார்வையும் தெளிவும்   படைப்பாளிக்கு இருப்பின் அதனைப் பிரக்ஞையுடன் கூடிய(consciously skilled) திறன் கொண்ட படைப்பு நிலை எனலாம்.

இருண்மையான கவிதைகளில் வரும் படிமங்களையும் சொற்றொடர்களையும் இயல்புக்குமாறான சம்பவ அல்லது சித்திரத்  தொகுப்புகளையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அதன் பின்னர் கவிதை பல முடிச்சுகளைக் கொண்டிருப்பின் அதனையும் அவிழ்க்க வேண்டும். ஒரு கவிதையிலே வரும் பல்வேறு பட்ட காட்சிகள் எவ்வெவற்றைக் குறிக்கின்றன? அவற்றுக்கிடையிலான தொடர்புகள்  என்ன என்பதைப்புரிந்து கொள்ளும் போதுதான் கவிதை போட்டுள்ள முடிச்சுக்கள் அழவிழச் சாத்தியம் தோன்றும். இன்னும் கவிதைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் படைப்பாளியின் அனுபவத்தினை-அல்லது அதன் களத்தையாவது அறிந்து கொள்ளுதல் அவசியமாக இருக்கும். படைப்பாளியின் அனுபவங்களுக்கு மூலமான களங்களை அறிந்திராதவர்களுக்கு அவர் எழுதும் இருண்மையான கவிதைகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஆயினும் தங்களது அனுபவங்களில் உள்ள ஏதோ ஒன்றை இக்கவிதைகளுடன் பொருத்தி அவற்றைத் தம் வாசிப்பாக்கிக் கொள்ள முடியும். இருண்மையான கவிதைகளின் வாசல்கள் பூட்டப்படிருக்கலாம். திறப்பை தேடுவது அல்லது உருவாக்குவது வாசிப்பவரின் பொறுப்பு. இதனைச் சொல்லும்  போதே இல்லை எனது கவிதைகளுக்கு வாசல்களை நான் வைப்பதில்லை. வாசல்களை உருவாக்குவதே வாசிப்புத்தான். கவிதையின் முடிச்சுக்களை எப்பாடுபட்டாவது அவிழ்ப்பது தானே வாசிப்பு எனச் சொல்வதற்கு படைப்பாளிக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையைப் படைப்பாளி இத்தொகுப்பில் அதிக இடங்களிற் பயன்படுத்தி இருக்கிறார்.  படைப்பாளி தன் ஆன்மாவை உலுக்கிய ஒன்றைக்கவிதையாக்கும்போது அதனுட் செல்வதற்கான வாசல்கள் தானாகவே உருவாகின்றன. நீரிலிருந்து தொடங்கிய உனது வார்த்தை என்ற கவிதையை வாசிக்கத்தொடங்கும்போது வாசல்கள் கண்ணீருடன் திறந்து கொள்கின்றன. 

இத் தொகுப்பில் உள்ள எழுத்துப்பிழைகள், மெய் ஒற்றுக்கள் தவறவிடப்பட்டமை, எழுவாய் பயனிலை அமைப்பில் உள்ள ஒருமை பன்மை முரண்பாடுகள் போன்ற பிரச்சனைகள் கவனத்துக்குரியவை.

ஒட்டு மொத்தமாக இத்தொகுப்பை வாசித்து முடிக்கும்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்னும் பெரும் சிலுவை, துரோகிகள் என நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதும் அறையப்பட்டிருப்பதை உணர்வீர்கள். உண்மையிலும் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் மீது நிகழ்த்தப்படும் பெரும் ஒடுக்குமுறைகளுக்கும் கொலைகளுக்கும் சனநாயக மறுப்புகளுக்கும்  பொறுப்புக்கூற வேண்டியது சிங்களப் பேரினவாத அரச மற்றும் அரசாங்கக் கட்டமைப்புக்கள் தான்.  ஆனால் இவற்றுக்கு எள்ளவும் குறைவில்லாது இவ்வொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாக் கூறிக்கொண்ட சிறுபான்மை இனத்தின் அதிகாரங்கள் தம்முள் நிகழ்த்திய படுகொலைகளும் சனநாயக மறுப்பும்,  நிகழ்த்திய அரசியலற்ற யுத்தமும்  எங்களை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்துள்ளன.

இத்தொகுப்பின் 13 வது கவிதையில் படைப்பாளி கேட்கிறார்: நெருப்பிடம் அமிழ்ந்து  கொண்டு யாரை நெருங்குவது? 

சாதிய இனவாத மதவாத பிரதேசவாத ஆணாதிக்க வாத நெருப்புகளில் அமிழ்ந்திருக்கும் எங்களால் விடுதலையை ஒரு போதும் நெருங்க முடியாது.

தேவ அபிரா

கார்த்திகை 2021

தேவ அபிரா

 

(Visited 183 times, 1 visits today)
 

2 thoughts on “கொல்லப்பட்ட சனநாயகம் அல்லது ”அல்லது ஜேசுவில் அறையப்பட்ட சிலுவை” – ஒரு பார்வை-தேவ அபிரா”

Comments are closed.