தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 03-‘தமிழ்நாட்டில் வாழ்ந்த பௌத்த பெரியோர்கள்’-கோமகன்

  1. சீத்தலைச் சாத்தனார்

கோமகன்இவர் பௌத்தர் என்பதை இவரது பெயரே விளக்குகின்றது. புத்தருக்குரிய பெயர்களுள் சாஸ்தா என்பதும் ஒன்று. இச்சொல் திரிந்து தமிழில் சாத்தன் என்று வழங்குகின்றது. சீத்தலை என்னும் அடை மொழிகொண்டு சீ வழிந்தோடும் புண்ணுடைய தலையர் இவர் என்றும், பிறர் பாடும் பாட்டுக்களிற் குற்றங்கண்டால் அக்குற்றத்தைப் பொறாமல், எழுத்தாணியால் தமது தலையைக் குத்திக் கொள்ள, அதனால் எப்போதும் இவர் தலையில் புண் இருந்து சீப்பிடித்திருந்தது என்றும் பொருந்தாக் கதைகளைக் கூறுவர்.

சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராகையால் இவருக்குச் சீத்தலை என்னும் அடை மொழி கொடுக்கப் பட்டதென்று கூறுவார் கூற்று பொருத்தமாகத் தோன்றுகின்றது. மதுரைமாநகரில் இவர் கூலவாணிகம் செய்திருந்தமைபற்றி இவரை மதுரைக் கூலவாணிகர் சாத்தனார் என்றும் கூறுவர். சீத்தலைச் சாத்தனார் என்று இவர் வழங்கப்படுதல் பற்றி, சீத்தலை என்னும் ஊரில் கிராமதேவதையாகக் கோயில் கொண்டிருந்த ஐயனாரின் பெயராகிய சாத்தன் என்னும் பெயரே இவருக்குப் பெயராக அமைந்தது என்று வேறு சிலர் கூறுவர். இது பொருத்தமாகத் தோன்றவில்லை.

சாத்தன் என்னும் பெயர் தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் பெரும்பான்மையோருக்கு வழங்கிவந்தது. சங்ககாலப் புலவர்களில்மட்டும் இருபது பேருக்கு மேற்பட்டவர் சாத்தன் என்னும் பெயரைக் கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு அடைமொழியுடன் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. நமது சாத்தனாருக்கும் அவ்வாறே சீத்தலை, மதுரைக் கூலவாணிகர் என்னும் அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

செந்தமிழ்ப் புலமை வாய்ந்த இவர் வாணிக முயற்சியை மேற்கொண்டிருந்தார். எனவே, புலவர் என்கிற முறையிலும், வணிகர் என்கிற முறையிலும் இவர் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவராதல்வேண்டும். எங்ஙனமெனில், அக்காலத்து வழக்கப்படி, தமிழ் நாட்டுப் புலவர்கள் வறியராயினும் செல்வராயினும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, அவ்வந்நாட்டிலுள்ள அறிஞரோடு கலந்து உறவாடுவது வழக்கம். வியாபாரிகளும் வாணிக சம்பந்தமாக அயல் நாடுகளுக்குச் சரக்குக் கொள்ளவும் விற்கவும் போவது இயற்கை. அன்றியும், பொதுவாக வாணிகர்களுக்குத்தான் பொதுப்படையான பல செய்திகள் அறிய முடியும்.

இவர் பல நாடுகளுக்குச் சென்றவர் என்பது இவர் இயற்றிய மணிமேகலையில், புகார், மதுரை, வஞ்சி, காஞ்சீபுரம் முதலிய ஊர்களைப் பற்றிக் கூறியிருக்கும் முறையினின்று நன்கு தெரிய வருகின்றது. சேர நாட்டினை அரசாண்டிருந்த செங்குட்டுவனுக்கும், அவனது தம்பியாராகிய இளங்கோவடிகளுக்கும் இவர் உற்ற நண்பர். இவர் காலத்தில்தான் கோவலன் பாண்டி நாட்டில் கொலையுண்டான். கோவலன். கண்ணகி இவர்களின் செய்தியை இவர் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சொல்ல, அதைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி, அவளுக்குக் கோயில் அமைத்தான்; இளங்கோ அடிகள் அவ்வரலாற்றினைச் சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றி, இவர் முன்னிலையில் அரங்கேற்றினார்.

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகிய மணிமேகலை என்னும் காப்பியத்தை இவர் இயற்றி, இளங்கோ அடிகள் முன்னர் அரங்கேற்றினார். மணிமேகலையை இயற்றியதுமன்றி, வேறுசில செய்யுள்களையும் இவர் இயற்றியிருக்கின்றார். அவை சங்கநூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. நற்றிணையில் மூன்று, குறுந்தொகையில் ஒன்று, புறநானூற்றில் ஒன்று, அகநானூற்றில் ஐந்து.

சங்கநூல்களில் தொகுக்கப்பட்டுள்ள மேற்படிச் செய்யுள்களின் நடையிலும், மணிமேகலையின் நடையிலும் வேறுபாடு காணப்படுவதுகொண்டு இவ்விருவகைச் செய்யுளையும் இயற்றியவர் ஒருவர்தாமோ என்று சிலர் ஐயுறுவர். ஒரே புலவர், தாம் மேற்கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற வெவ்வேறு நடையில் செய்யுள் செய்யக் கூடுமன்றோ? ஆனால், ஒருவரே வெவ்வேறு நடையில் செய்யுள் இயற்றுவது தேர்ந்த புலவருக்குமட்டுந்தான் இயலும் என்பது உண்மையே. சீத்தலைச்சாத்தனார், புலவர் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடையில் அகப்பொருள், புறப்பொருள் பொதிந்த சில செய்யுள்களை இயற்றினார். ஆனால், புலவர் உலகத்துக்காகமட்டும் அன்று, பாமர உலகத்துக்காகவும் அவர் மணிமேகலையை இயற்றினார். ஆகலின், இது சிறிது எளிய நடையில் அமைக்கப்பட்டது.

தமது மதக்கொள்கையை ஒருசிறு கூட்டத்துக்கு மட்டும் தெரிவிப்பது தவறு என்பதும், எல்லா மக்களுக்கும் அதை அறிவிப்பதுதான் சிறந்தது என்பதும் பௌத்தர்கள் கருத்து. ஆகவே, பௌத்தமதக் கொள்கை நிறைந்த மணிமேகலையை இவர் வேண்டுமென்றே சிறிது எளிய நடையில் இயற்றினார் என்று கருதுவதே பொருத்தமானது. இவர் தாம் இயற்றிய மணிமேகலையில்,

‘தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் ‘

என்று திருக்குறளை மேற்கோள் காட்டித் திருவள்ளுவரைப் புகழ்கின்றபடியால், இவர் திருவள்ளுவருக்குப் பிற்காலத்தவராவர். இவரது காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி. மணிமேகலை நூலின் காலம் என்னும் தொடர்புரை காண்க.

  1. சங்க மித்திரர்

இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர். இவரது சமயக்கொள்கை மகாயான பௌத்தம். இவர் சோழ நாட்டில் வாழ்ந்திருந்த காலத்தில், இலங்கையில் கோதாபயன் என்றும், மேகவர்ணாபயன் என்றும் பெயருள்ள அரசன் அரசாண்டுவந்தான். இந்த அரசன் கி. பி. 302 முதல் 315 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில், இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில், அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்ஷக்கள் வைதுல்ய மதத்தை மேற்கொண்டிருந்தபடியால், அவர்களை அரசன் அக்கரைக்கு, அதாவது தமிழ் நாட்டில், நாடு கடத்தி விட்டான். இலங்கை மன்னன் ஈனயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவன், ஆகையால், மாறான மகாயான பௌத்தமான வைதுல்ய மதத்தைத் தனது நாட்டில் பரவவிடக்கூடாது என்னும் நோக்கத்தோடு, அப்பிக்ஷக்களைத் தமிழ் நாட்டிற்குத் துரத்திவிட்டான். நாடு கடத்தப்பட்ட பிக்ஷக்கள் சோழ நாட்டிற்கு வந்தார்கள்.

இவர்கள் நாடு கடத்தப்பட்டுச் சோழ நாட்டுக்கு வந்த காரணத்தையறிந்த சங்கமித்திரர் தாமும் வைதுல்ய (மகாயான) பௌத்த மதத்தைச் சேர்ந்தவராதலின், தமது மதத்தை இலங்கையில் நாட்டவேண்டும் என்னும் உறுதி கொண்டு இலங்கைக்குச் சென்றார். சென்று வைதுல்ய மதத்தைப் போதித்தார். இதையறிந்த ஈனயான பௌத்த பிக்ஷக்கள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்க மித்திரரையும் ஈனயான பிக்ஷக்களின் தலைவரான சங்கபாலர் என்பவரையும் அழைத்துத் தனது முன்னிலையில் வாது செய்க என்றும், யார் வாதில் வெற்றிபெறுகிறாரோ அவரது மதந்தான் சிறந்தது என்றும் கூறினான். இருவருக்கும் அரசன் அவைக்களத்தில் வாதப்போர் நிகழ்ந்தது.

வாதத்தில் தமிழரான சங்க மித்திரரே வெற்றி பெற்றார். இலங்கை வேந்தன் சங்கமித்திரரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி இவரை ஆதரித்தான். ஆதரித்ததுமட்டும் அன்றி, தமது பிள்ளைகளான ஜேத்த திஸ்ஸன், மகாசேனன் என்னும் இருவருக்கும் கல்வி கற்பிக்க இவரை ஆசிரியராக நியமித்தான். சங்கமித்திரர்,. இவ்விருவரில் இளையவனான மகாசேனனிடத்தில் அதிக அன்பு பாராட்டினபடியால், மூத்தவனான ஜேத்த திஸ்ஸன் இவரிடம் பகைமை பாராட்டிவந்தான். இவர் அரசனிடம் பெற்றிருந்த செல்வாக்கைக்கொண்டு வைதுல்ய மதத்தை இலங்கையில் பரப்ப முயற்சி செய்தார்.

இவ்வாறிருக்க, மேகவர்ணாபயன் காலஞ்சென்றான். அரசுரிமை மூத்த மகனான ஜேத்த திஸ்ஸன் ஏற்று, அரசு கட்டில் ஏறினான். ஏறினவுடன் மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்க மித்திரர் தமது மாணவனான இவன் ஏற்கனவே தம்மிடம் பகைமை பாராட்டிவந்தவனாதலின், தம்மையும் கொன்றுவிடுவானோ என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு வந்துவிட்டார். பிறகு, பத்து ஆண்டு வரையில் இலங்கை செல்லவே இல்லை. பத்து ஆண்டு கழிந்த பின்னர், ஜேத்த திஸ்ஸன் இறந்து விட்டான். அப்போது அரசுரிமையை இவரது அன்புக்குரிய மாணவனான மகாசேனன் மேற்கொண்டான். இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் சிங்களநாடு சென்று, தமது மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயே முடி சூட்டினார். அதுமுதல் இலங்கையில் தங்கி மீண்டும் தமது வைதுல்ய மதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்.

மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் வாழும் ஈனயான பிக்ஷக்கள் உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்கவில்லை என்று இவர் அரசனிடம் குற்றம் சாற்றினார். அரசன் இவர் சொல்லைத் தவறாதவன் ஆகையால், மகாவிகாரையில் வாழும் பிக்ஷக்களுக்கு நகர மக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக்கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டளையிட்டான்.

இதன் காரணமாக மகாவிகாரையிலிருந்த ஈனயான பிக்ஷக்கள் உண்ண உணவு கிடைக்கப்பெறாமல் நகரத்தை விட்டு இலங்கையின் தென்பகுதிக்குப் போய் விட்டார்கள். போய்விடவே, மகாவிகாரைப்பள்ளி உரியவரின்றிக் கிடக்கிறபடியால், அது அரசனுக்குரிய பொருளாய் விட்டது என்று சங்க மித்திரர் அரசனுக்குத் தெரிவிக்க, அரசன் அதனை இவரிடத்திலே ஒப்படைத்தான். சங்க மித்திரர் அந்த விகாரையை இடித்து, அப்பொருள்களைக் கொண்டு தமது கொள்கையைச் சேர்ந்த பிக்ஷக்கள் வாழும் அபயகிரி விகாரையைப் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இச்செய்கைக்குச் சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான்.

இவற்றையெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி – அவனால் அதிகமாகக் காதலிக்கப்பட்டவள் – இலங்கைத் தீவின் பழைய மதமாகிய ஈனயான பௌத்த மதத்தைப் பின்பற்றி நடப்பவளாதலின், அபயகிரி விகாரையிலிருந்த பிக்ஷக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்த சங்க மித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த மந்திரி சோணனையும் கொன்றுவிடும்படி சிலரை ஏவினாள். அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலை செய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் மகாவம்சம் 36, 37 -ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

சங்கமித்திரர் வைதுல்ய மதத்தை நன்கு கற்று, அதன் வழி ஒழுகியதோடு, அந்த மதத்தைச் சிங்களத்தீவிலும் பரவச் செய்ய முயன்றார். பௌத்த மதக் கொள்கைகளை நன்கு அறிந்தவர். இவரது வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. இவர் ஏதேனும் நூல் இயற்றியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. கி. பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர் வாழ்ந்திருந்தவரென்று அறிகிறோம்.

சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இலங்கை வேந்தன் ஒருவனைச் சைவ சமயத்தில் புகச்செய்தார் என்னும் வரலாறும், சங்கமித்திரர் இலங்கை மன்னனை வைதுல்ய மதத்தில் புகச்செய்த வரலாறும் ஒத்திருத்தலின், சங்கமித்திரர் என்று மகா வம்சம் கூறுவது மாணிக்கவாசகரைக் குறிக்கும் என்று திரு கே. ஜி. சேஷையர் என்பவர் ஒரு திங்கள் வெளியீட்டில் எழுதியிருக்கிறார். (Tamilian Antiquary Vol I. No. 4. P. 54.). இவர் கருத்தையே உண்மை எனக் கொண்டு ஸ்மித் என்னும் சரித்திர ஆசிரியரும் எழுதியிருக்கிறார். அவர், இலங்கை வேந்தனை மாணிக்கவாசகர் சைவமதத்தில் சேர்த்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அந்த அரசன் மகாவம்சத்தில் கூறப்பட்ட கோதாபயனாக இருக்கக்கூடும் என்றும், மகாவம்ச ஆசிரியர் சைவராகிய மாணிக்கவாசகரைப் புத்தபிக்ஷ சங்கமித்திரர் என்று தவறாக எழுதியிருக்கக்கூடும் என்றும் கூறுகிறார். (The Early History of India : Page 246-7, Third Edition : V.A. Smith.)

இவ்விருவர் கருத்துக்களும் தவறு என்பது எமது கொள்கை. ஏனென்றால், மாணிக்கவாசகர் இலங்கைக்குச் சென்று இலங்கை மன்னனை சைவ சமயத்தில் சேர்த்ததாக அவர் வரலாற்றில் காணப்படவில்லை. இலங்கை மன்னன் சிதம்பரத்திற்கு வந்தபோது அவனை மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சங்க மித்திரரோ நேரே இலங்கைக்குச் சென்று அந்த நாட்டரசனை மதம் மாறச் செய்தார். அன்றியும், சங்கமித்திரர் இலங்கையில் கொல்லப்பட்டிறந்தார். மாணிக்கவாசகரோ சிதம்பரத்தில் சிவகதியடைந்தார். இக்காரணங்களினால் சங்கமித்திரரும் மாணிக்கவாசகரும் ஒருவரே என்று கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

  1. நாதகுத்தனார்

இப்பெயர் நாதகுப்தனார் என்பதன் திரிபு போலும். இவர் குண்டலகேசி என்னும் காப்பியத்தைத் தமிழில் இயற்றியவர். இவர் இந்தக் காவியத்தின் ஆசிரியர் என்பது, நீலகேசி (மொக்கல வாதச் சருக்கம் 78 -ஆம் பாட்டின்) உரையில், புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்டவினைய வுடம்பு என்னும் அடியை மேற்கோள் காட்டி, இதனை நாதகுத்தனார் வாக்கு என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியப்படும். மேற்கோள் காட்டப்பட்ட இப்பகுதி குண்டலகேசிச் செய்யுளிலிருந்து எடுக்கப்பட்டது.

நாதகுத்தனாரைப் பற்றிய வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. குண்டலகேசி என்னும் பௌத்த பிக்குணி ஒருத்தி, வடநாட்டில் இருந்த ஆவணம் என்னும் ஊரில் நாதகுத்தனார் என்னும் ஆருகத சமயத்தவரை வாதில் வென்றதாக நீலகேசி உரையினால் தெரிகிறது. ஆருகதராகிய அந்த நாதகுத்தனார் வேறு. குண்டலகேசியின் ஆசிரியரும் பௌத்தருமாகிய இந்த நாதகுத்தனார் வேறு.

நீலகேசி என்னும் ஜைனநூல் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்று கூறப்படுவதால், குண்டலகேசியும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாதல்வேண்டும். ஏனென்றால், குண்டலகேசியை மறுப்பதற்காகவே நீலகேசி இயற்றப்பட்டதென்பது வரலாறு. ஆகவே, குண்டலகேசியின் ஆசிரியராகிய நாதகுத்தனாரும் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராதல்வேண்டும்.

  1. புத்ததத்த தேரர்

இவர் சோழநாட்டவர். இலங்கையில் அநுராதபுரத்திலிருந்த மகாவிகாரையில் இவர் சிலகாலம் தங்கியிருந்தார். பின்னர், கவீரபட்டினம் (காவிரிப்பட்டினம்), உரகபுரம் (உறையூர்), பூதமங்கலம், காஞ்சீபுரம் முதலான ஊர்களில் வாழ்ந்துவந்தார். தாம் பிறந்த சோழ நாட்டினைத் தமது நூல்களில் பாராட்டிக் கூறியிருக்கின்றார். காவிரிப்பூம்பட்டினம் துறைமுகப்பட்டினமென்றும், செல்வத் தொகுதியும் மக்கட்கூட்டமும் நெருங்கிய இடமென்றும், அப்பட்டினத்தில் இவர் தங்கியிருந்த பௌத்தப்பள்ளி நெடுஞ்சுவர்களால் சூழப்பட்டுப் பெரியவாயில்களை உடையதென்றும், பள்ளிக்கட்டிடங்கள் பெரியனவாய் வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம்போல் வெண்ணிறமாக விளங்குமென்றும் அபிதம்மாவதாரம் என்னும் நூலில் இவர் எழுதியிருக்கின்றார்.

காவிரிப்பூம்பட்டினத்துப் பௌத்தப்பள்ளியில் இருந்த போது, தமது மாணவராகிய புத்த சீகா என்பவர் வேண்டுகோளின்படி புத்தவம்சாத்தகாதை என்னும் நூலையும், சுமதி என்பவர் வேண்டுகோளின்படி, அபிதம்மாவதாரம் என்னும் நூலையும் இயற்றினார். சோழநாட்டுப் பூதமங்கலம் என்னும் ஊரில் கண்ண தாசர், அல்லது வேணுதாசர் (இவர் வைணவராக இருந்து பின்னர்ப் பௌத்தர் ஆனார் போலும்) என்பவாரல் கட்டப்பட்ட பௌத்தப் பள்ளியில் தங்கியிருந்தபோது, இவர் வினய வினிச்சயம் என்னும் நூலைப் புத்த சீகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். அன்றியும், இலங்கையில் வாழ்ந்திருந்த மகாதேரர் சங்கபாலர் என்பவர் வேண்டுகோளின்படி, உத்தர வினிச்சயம் என்னும் நூலினைச் செய்தார். அன்றியும், புத்தவம்சம் என்னும் நூலுக்கு மதுராத்த விலாசினீ என்னும் உரையையும், ரூபாரூப விபாகம், ஜினாலங்காரம் என்னும் நூல்களையும் இயற்றியிருக்கின்றார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பௌத்தர்களால் இவர் மிகவும் போற்றப்படு%E

 123 total views,  1 views today

(Visited 40 times, 1 visits today)