அந்நியன் மற்றும் மெர்சோ: மறுவிசாரணை நாவல்கள் குறித்த வாசிப்பும், முன்வைப்பும்- க.டணிஸ்கரன்

ஒரு தந்தைபற்றி தாய் சொல்லியிருந்த சம்பவங்களைத் தவிர தன் தந்தை தொடர்பாக ஏதும் தெரியாமல் அந்த தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட மெர்சோ என்ற இளைஞனால்; மாரங்கோவில் இருக்கக்கூடிய ஒரு முதியோர் இல்லத்தில் கைவிடப்பட்டிருந்த தாயின் மரணச் செய்தியோடு ஆரம்பிக்கப்பட்டு, நண்பர்களோடும், மேரி என்கின்ற காதலியோடும் உல்லாசமாக இருக்கச்சென்ற அல்ஜேயின் புறநகர் கடற்கரை ஒன்றில் பாரிய கரணமில்லாமல் மிக மிக சாதாரணமாக ஒரு அரேபியனை கொலைசெய்வதோடு கதையில் திருப்பம் ஏற்பட, நாவலின் பிற்பகுதியில் முப்பது வயதான மெர்சோ சிறைக்குப் போகின்றான். அங்கே பல விசாரணைகளின் முடிவாக மரணதண்டனை தீர்ப்பாகின்றது. இவற்றின் மொத்தமும்தான் இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான ஆல்பெர் காம்யுவுடைய “அந்நியன்”.

இதன் இரண்டாம் பகுதியில் வருகின்ற சிறைக்காலமும், கதைகளும் முதலாம் பகுதியில் வாசிப்புக்கு சவால் தருவதாக அமைந்த பகுதிகளையும், அதில் வருக்கூடிய கதாபாத்திரங்களையும் இணைத்து விடுகிறது.

நாவலில் வரும் கொலைக் குற்ற விசாரணை முழுவதுமாக வாசித்தால், அதன் பெரும்பகுதி கொலைக்கு தொடர்பில்லாத முதியோர் இல்லத்தில் நடந்த இறுதிக்கிரியைகளும் அதற்கு முன் பின் நடந்த சப்பவங்களுமே விவாதிக்கப்படுகின்றது. தொடர்ந்து மெர்சோ தாயின் மீது பாசமில்லாமல் நடந்துகொண்ட இடங்களே குற்றமாக காண்பிக்கப்பட்டு கொலை தொடர்பான முன்வைப்புகள் அல்லது விசாரணைகள் நாவலில் காணாமல் மறைந்துபோகிறது. அதுவே அரேபியர்களுக்கு அல்ஜீரியாவில் கொடுக்கப்பட்ட இடம் என்ன என்பதனை வாசகர்கள் வாசித்து அடைந்துகொள்ள முடியுமானதாகவும் அமைந்துவிடுகிறது.

இறுதியில் விசாரணைகளின் முடிவாக ‘பிரெஞ்சுக் குடியரசின் மக்கள் பெயரால்’ ஒரு பொது இடத்தில் தலை துண்டிக்கப்படும் என தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதற்கும், தீர்ப்பு வழங்கப்பட்ட நாளுக்கும் இடைப்பட்ட காலமும், கதையும்தான் இந்த நாவலின் உச்சம் என சொல்லமுடியும்.

“என் தலை துண்டிக்கப்படும் தினத்தன்று பெரும் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் இருக்க வேண்டும்; வெறுப்புக் கலந்த கூக்குரலுடன் என்னை அவர்கள் வரவேற்க வேண்டும்” என மெர்சோ எதிர்பார்க்கும் அந்த இறுதி நாளுக்கும், தீர்ப்புக்கும் இடைப்பட்ட நாட்களாக வருகின்ற பகுதிகள் மனிதனின் அக உணர்வுகளைப் பேசுவதோடு, கடந்த காலத்தை எப்படியெல்லாம் மெர்சே கடந்தான், மற்றவர்களில் இருந்து அவன் அந்நியனாக எவ்வாறு இருந்தான் என்பவற்றை வெளிப்படையாக பேசி; சமூகமும் சட்டமும் தன் தேவைப்பட்டால் ஒன்றோடு ஒன்று தொடர்புபடாத சம்பவங்களையெல்லாம் தனக்கு ஏற்றாப்போல் எப்படியான கோணங்களில் தொடர்புபடுத்தி அணுகும் என்பதை தெளிவாக கையாண்டதில் பெரும் வெற்றிபெற்றிருக்கின்றது “அந்நியன்”.

என்வாசிப்பு மனோநிலைக்கு உட்பட்டவகையில் சொல்வதானால், நாவலில் இருபத்தைந்து இடங்களில் வந்தபோதும்; பெயரே குறிப்பிடப்படாத அரேபியன் மற்றும் அன்னையின் மரணம் அல்லது இறுதிச்சடங்கு நடந்த மறுநாளே காதலியாகிய மேரியுடன் திருமணத்திற்கு முதல் உடலுறவிலும், நகைச்சுவை நடிகர் பெர்னான்டெல் படம் பார்க்கும் மனோநிலையிலும் மற்றவர்களில் இருந்து வித்தியாசமாக வாழ்ந்த இந்த நாவலின் கதைசொல்லி மெர்சோ ஆகிய இருவருமே அந்நியன்தான்.

1942ல் வெளிவந்த இந்நாவல் இன்றுவரை பிரெஞ்சு மொழிப் பதிப்பில் மட்டும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது என்பது பின்குறிப்பு. அத்தோடு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு காலம்கடந்தும் பேசப்படுகின்ற ஒரு பிரதியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது என்பதே எழுத்தின் வெற்றி.

அத்தோடு “அந்நியன்” நாவலை வாசித்த எல்லோராலும் வாசிக்கப்படவேண்டிய முக்கிய நாவல்தான் அல்ஜீரிய எழுத்தாளரான காமெல் தாவுத் அவர்களின் “மெர்சோ: மறுவிசாரணை”

“அந்நியன்” நாவலில் கொலைசெய்ப்பட்ட அரேபியனின் தம்பி ஹரூன் என்பவரை கதைசொல்லியாக மாற்றி ஹரூனின் பார்வைக்கோணத்தில் அற்புதமாக பயணம் செய்யும் “மெர்சோ: மறுவிசாரணை” மிக மிக நுட்பமான அற்புதமான மொழிக்கையாள்கையுடன் “அந்நியன்” நாவலை மறுவிசாரணைக்கு உட்படுத்தி, பெயரே குறிப்பிடப்படாமல் கொலைசெய்யப்பட்ட அரேபியனுக்கு மூசா என பெயர் கொடுத்து; அல்ஜிரியாவின் பல பக்கங்களையும் அங்கிருந்த அரேபியர்களின் வாழ்க்கையையும் விரிவாக பேசுகின்றது.

“இன்று அம்மா இறந்துவிட்டாள்” என்று ஒருநாவல் தொடங்கினால்; “இன்று அம்மா இன்னும் உயிரோடு இருக்கிறாள். என்று தொடங்குகிறது மற்றைய ஒன்று. இவ்விரு நாவல்களையும் பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழுக்கு மிக நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார் வெ. ஸ்ரீராம்

இவ் இரு படைப்புகளுமே இன்னும் இன்னும் பலரால் வாசிக்கப்படவேண்டியதும், கொண்டாடப்படவேண்டியதுமாகும். இவ்விரண்டிலுமே எந்த புத்தகத்தை ஒருவர் வாசித்தாலும் மற்றயதையும் தேடி வாசியுங்கள். அது உங்கள் வாசிப்பு மனோநிலையை இன்னும் உயர்த்தும் அல்லது வேறுவகையான வாசிப்பை நிகழ்த்திப்பார்க்க துணை நிற்கும் என்பது என் நம்பிக்கை.

க.டணிஸ்கரன்-இலங்கை

க.டணிஸ்கரன்

(Visited 237 times, 1 visits today)