நூல் விமர்சனம்-நீர்வையின் சாகித்திய ரத்னா விருது பெற்ற “வந்தனா”

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்  2019 மார்ச்சில் வெளியிட்டிருக்கும் நூல் இது. இலக்கியச் செயற்பாடுகளுக்காக படைப்பாக்கப் பணிகளுக்காக, சமூக அக்கறையுடனான இலக்கிய அர்ப்பணிப்புகளுக்காக இலங்கை அரசு வழங்கும் அதி உயர் இலக்கிய விருதான ‘சாகித்திய ரத்னா’ விருது 2017ஆம் ஆண்டு நீர்வை பொன்னையன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த “வந்தனா” என்னும் சிறுகதை நூல் நீர்வையின் 11 ஆவது சிறுகதைத் தொகுதி. 1961 இல் வெளிவந்த இவருடைய ‘மேடும் பள்ளமும்’ எனும் முதல் தொகுதி இலங்கையில் மக்கள் பிரசுராலயத்தினரால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே காலகட்டத்தில் வெளிவந்த டொமினிக் ஜீவாவின் ‘தண்ணீரும் கண்ணீரும்’ (1960) செ.கணேசலிங்கனின் 3 தொகுதிகள் போன்றவைகள் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்தவைகளே.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசுராலயமான மக்கள் பிரசுராலயம் வெளியிட்ட முதல் தமிழ் நூலும் இதுவே. அந்த வகையிலும் நீர்வைக்கு ஒரு வரலாற்று முத்திரை உண்டு.

‘நீர்வை பொன்னையனின் இந்தக் கன்னி நூலை எமது முதல் தமிழ் வெளியீடாகக் கொண்டு வருவதில் நாம் பெருமைப்படுகின்றோம்.’ தென்னிந்தியாவிலிருந்து வரும் புத்தகக்குவியல்கள் இலங்கையின் தமிழ் வாசகர்களை திருப்திப்படுத்துமென்று இதுவரையில் ஒரு பொதுவான அபிப்பிராயம் நிலவி வந்தது. இது ஒரு தவறான அபிப்பிராயம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உடும்புப் பிடியில் இரு நாடுகளும் சிக்கித் தவித்துக்­கொண்­டிருந்த காலத்தில் இவ்விதமான எண்ணம் தவறானதாகப் படவில்லை. ஆனால், சுதந்திரத்திற்குப் பின் பூகோள, அரசியல் கலாசார முறைகளில் மாறுபட்டதாக இருப்பதால் தேசிய அடிப்படையில் ஈழத்து எழுத்து தமது கலாசார, இலக்கிய தேசிய சம்பத்துக்களை வெளிக்கொணர வேண்டுமென்பது ஒரு கட்டாய நியதியாகி விட்டது.

ஈழத்து எழுத்தாளர்கள் தென்னிந்திய எழுத்தாளர்களுக்குக் குறைந்தவர்கள் அல்ல என்பதற்கு நீர்வை பொன்னையனின் இந்தக் கதைத் தொகுதி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று தனது பதிப்பாளர் உரையில் கூறிச்சென்றிருக்கிறார் மக்கள் பிரசுராலய அதிபர் எச்.ஜி.எஸ்.ரத்ன வீர (மேடும் பள்ளமும் பதிப்புரை 1961).

4 சிறுகதை­களைக் கொண்ட தொகுதி வந்தனா. இந்தப் பதினான்கு கதைகளுமே ஏறத்தாழ 100 பக்கங்களுக்குள் அடக்கப்பட்டுள்ளன என்னும்போது ஒவ்வொரு கதையும் ஏழு பக்கங்களுக்கு மேல் போகவில்லை என்றாகிறது. இதை நூலா­சிரியரும் தனது முன்னுரையின் கவனத்துக்குள்ளாக்குகின்றார். ‘வந்தனா சிறுகதைத் தொகுதியிலுள்ள அநேகமானவை குறுகியவையாகவே அமைந்துள்ளன’ என்று  இந்த நூலுக்கான நீர்வையின் முன்­னுரை வித்தியாசமானது.

‘அரசியல் களத்திலிருந்து இலக்கியக் களத்துக்கு வந்தவன் நான். 1947 இல் என் அரசியல் பயணம் ஆரம்பமானது. 1957 இல் எனது இலக்கியப் பயணம் ஆரம்பமாகியது. 1957 இலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை 122 சிறுகதைகளை மாத்திரமே என்னால் எழுத முடிந்திருக்கிறது. ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைத் தொகுதியிலிருந்து வந்தனா தொகுதிவரை பதினொரு சிறுகதைத் தொகுதிகளை என்னால் கொண்டுவர முடிந்­துள்­ளது.

எனது சிறு­கதைத் தொகுதி ஒன்றுக்குத் தானும் அரச சாகித்திய மண்டல விருது கிடைக்கவில்லை. காரணம் அரசியல். ஆனால், 2017 ஆம் ஆண்டில் அரச சாஹித்ய ரத்னா விருது கிடைத்தது. எனது கதைகள் விவசாயிகள் தொழி­லாளர்: உழைக்கும் பரந்து பட்ட வெகு­ஜனங்கள் ஆகியோரது இன்ப துன்பங்களைத் தாங்கி வெளிவருகின்றன. முதலாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற சுரண்டலை அம்பலப்படுத்தி அதற்கெதிராகப் போராடும் உந்து சக்தியாக எனது படைப்புகளைப் புனைகின்றேன்.

எனது இலக்கியச் செல்நெறிக்கு கட்சியின் ஆசியையும் அங்கீகாரத்தையும் வேண்டி நின்றேன். அது எனக்கு கிடைத்தது.  எனது முதலாவது சிறுகதைத் தொகு­தியை கட்சியின் துணை அமைப்பான மக்கள் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நான் இலக்கியத்தளத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன். நான் ஒரு கம்யூனிஸ்ட். ஆனால் நான் அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி நோய்வாய்ப்பட்டுள்ளது….

‘வந்தனா’ தொகுதி முன்னுரையில் நீர்வையின் சில வரிகள் இவை. சிறுகதை வடிவை  மாத்திரமே தனது பிரதான இலக்கியத் தளமாகக் கொண்டு எழுதி வருபவர் நீர்வை பொன்னையன். 50களில் மேற்படிப்பிற்காக கல்கத்தா சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரியானவர். கல்வி கற்கும் காலத்திலேயே மாணவர் சங்கத்தினூடாக அடக்கு முறைக்கும் அநீதிக்கும் எதிரான போராட்டங்கள் நடத்தியவர்.

இந்தத் தொகுதியின் ‘வந்தனா’ கதையும் (பக் 24) ‘சாயல்’ கதையும் (பக் –63) இந்த கல்லூரிக் காலத்தையும் மாணவர் போராட்டங்களையும் மையமாகக்கொண்ட கதைகளே. ‘இந்தப் படைப்புகள் இரண்டுடனும் நான் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கின்றேன்.

1951 இல் நடைபெற்ற சம்பவங்கள் இவை’ என்றும் முன்னுரையில் பதிகின்றார் நீர்வை அவர்கள். தகவல் தவறுகளும் அச்சுப்பிழைகளும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவைகள். உதாரணத்துக்கு இரண்டு மாத்திரமே.

பக்கம் 110 நீர்வையின் நூல்கள். உதயம் 1978 என்பது தகவல் தவறு. 1970 என்றிருக்க வேண்டும். உதயம் தொகுதிக்கான சாஹித்ய மண்டல விருது தமிழ்ப்பகுதித் தலைவர்களால் தடுக்கப்பட்டதும் அப்போதுதான். இதே பட்டியலில் ஏனைய நூல்கள் 2 முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் என்பது. ஏராளமான எழுத்துப் பிழைகள். வரவேற்புக்குகந்த நூல்.

கிடைக்குமிடம்  – பூபாலசிங்கம் புத்தகசாலை.

விலை 275/=.

(Visited 96 times, 1 visits today)
 
 ஃபஹீமா ஜஹான்

மலையக இலக்கியமும், இசை பிழியப்பட்ட வீணையும்-நூல்விமர்சனம்-ஃபஹீமா ஜஹான்

  இந்த நூலைப் பற்றி எழுத முன்னர் ‘மலையகம்’ , ‘மலையக இலக்கியம்’ என்பன தொடர்பில் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘மலையகம்’ என்பது தரைத் தோற்ற அடிப்படையில் இலங்கையின் […]