டொமினிக் ஜீவா-டொமினிக் ஜீவா நினைவுக் குறிப்புகள்-நந்தினி சேவியர்

நந்தினி சேவியர் அரசியல் முரண்பாடு. ஆயினும் தேர்தல்பிரச்சார  மேடைகளில் இவரது ஆக்கிரோசமான பேச்சுகளை செவிமடுத்திருக்கிறேன். நாம் தேர்தல் முறைக்கு எதிரானவர்கள். பரந்த வாசிப்பின் மூலம் இவரது பெயர்ப் பரிச்சயம் முன்னரே எங்களுக்கு இருந்தது. இவரை நாம் அணுகவில்லை. இவரைப் பொறுத்தவரை அன்று நாம்  ‘புதுச் சிவப்புக்கூட்டம்.’

இவர் சாகித்திய மண்டல உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதற்காக ஆசிரியர் டி .ஏ.நைல்ஸ் ஒழுங்கு படுத்திய  பாரட்டுக் கூட் டத்தில் – வதிரி கலா நிலைய முன்றலில்  –  நானும் பேசினேன். யாழ்ப்பணத்தில் இருந்தாலும் எட்டியே இருந்தோம்.

கொச்சிக்கடையும் கொட்டாஞ் சேனையும்:

08/05/1955-ல் சுதந்திரனில் பிரசுரமான கதை இது. பின்னாட்களில் இவரது கதைகளில் அநேகமானவை யாழ் நகரையும் அங்கு வாழும் விளிம்பு நிலை மக்களையும்  பிரதிபலிப்பதாகவே  அமைந்தன.

அந்தக்கால யாழ்ப்பாண நகர சுற்றுச் சூழலை  இலக்கிய மாக்கியவர் இவர்.  ஞானம் , முற்றவெளி, பாதுகை, சாலையின் திருப்பம் என்பன பதச் சோறுகளில் சில.

சுதந்திரனில் அறிமுகமாகி இலங்கையின் தேசியப்பத்திரிகைகளில் எல்லாம் எழுதி தமிழக சரஸ்வதி, தாமரை போன்ற வற்றிலும்  எழுதியவர் இவ்விரு சஞ்சிகைகளும்  இவரது அட்டைப்படத்தை தாங்கி வெளிவந்திருக்கின்றன.

1960 வெளிவந்த “தண்ணீரும் கண்ணீரும்”என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பே முதல் முதல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நூலாகும். கல்வியறிவு குறைந்த சாதாரண தொழிலாளியான இவர் தன் விடாமுயற்சியால் ஒரு இலக்கிய வாதியாக உயர்ந்தார். இவரது புனைப் பெயர் ‘புரட்சிமோகன்’. தோழர் ஜீவானந்தம் தலைமறைவாக இலங்கையில் இருந்தகாலத்தில் கம்யூனிஸ்ட் கொள்கை வாதியாகி தன் பெயருடன் ஜீவாவை  இணைத்துக்கொண்டவர்.’

இவரது சிறுகதை நூல்கள் :

தண்ணீரும் கண்ணீரும். (60)

பாதுகை  (62)

சாலையின் திருப்பம் (67)

வாழ்வின் தரிசனங்கள் (2010)

டொமினிக் ஜீவாசிறுகதைகள்:

இவர் தன்னைப்பற்றிய ஒரு சுயவரலாற்று நூலையும் எழுதி இருக்கிறார். அதன் பெயர் ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’.’ இந் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏ.ஜே. இவரது ‘ஞானம் ‘ சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சிலகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப் பட்டு நூலாகி உள்ளது ருஸ்சிய மொழியிலும் இவரது கதை மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

இளைய தலை  முறை இவரை “மல்லிகை ஜீவா” எனவே அறிந்து வைத்திருக்கிறது. காரணம்  66-ம் ஆண்டு ஆரம்பித்து 48  ஆண்டுகளாக மல்லிகை சஞ்சிகையை யாழ்ப்பாணத்திலிருந்தும் பின்னர் கொழும்பிலிருந்தும் நடத்திவந்தார். பல எழுத்தளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். அட்டைபடங்களாக பலரை கௌரவப் படுத்தினார். ‘மல்லிகைப் பந்தல் ‘ வெளியீடாகப் பல நூல்களைக் கொணர்ந்தார். இவரை பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. NCBH நிறுவனம் இவரது நூல்களை மீள் பிரசுரம் செய்துள்ளது. சோவியத் யூனியன் மற்றும் முப்பெரும் நகரங்களுக்கு இலக்கியப்பயணம் மேற்கொண்டவர். இன நல் இணக்கத்திற்காக உழைத்தவர்.

தமிழ் சிங்கள எழுத்தாளர்களின் இலக்கியப் பாலமாக விளங்கியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினர். மாற்றுக் கருத்தாளர்களுடனும் நட்பாக இருந்தவர்.

இப்போது மல்லிகை  தொடர்ந்து வெளிவராமை அவரது உடல் நிலையும் அவர்தவிர அந்தச் சஞ்சிகையை அர்ப்பணிப்போடு செய்ய வேறொருவரால் முடியாது என்பதும் பிரதான காரணமாகக் கொள்ளவேண்டும். கனடா இலக்கியத் தோட்டம் இரண்டாண்டுகளுக்கு முன் அவருக்கு ‘இயல்’விருது வழங்கி  கௌரவித்துள்ளது.

00000000000000000000000000000000000

“மாத்தயா ……!’  டாக்டர் ராஜநாயகம் திரும்பிப் பார்த்தார். எனத் தொடங்கி. கொழும்பு கொழும்பு எப்படியெப்படி எல்லாமே கற்பனை பண்ணி சாகிறீர்களே. இதுதான் கொழும்பிலிருக்கும் ‘கொச்சிக்கடையும் கொட்டாஞ்சேனையும்!’ என்று முடியும் இக்கதையை அவரது ‘டொமினிக் ஜீவா கதைகளில்’ வாசியுங்கள் நண்பர்களே!

00000000000000000000000000000000000

இவ்வளவு இவரைபற்றி எழுதுகிறேன் என்பதற்காக ஜீவா மீது மதிப்பும் அதே நேரம் கோபமும் எனக்கு இருக்கிறது.என்பதையும் இங்கு சொல்லித்தான்ஆகவேண்டும்.

மல்லிகையில் 72ஆம் ஆண்டு வெளிவந்த கதைகளில் தேறக் கூடியதென முருகையன் அவர்களினால் ஆண்டு மலரில் பாராட்டப்பட்ட (எனது சிறுகதைத் தொகுதிக்கு பெயராக இருக்கின்ற) “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” கதை, ஒரு நிர்ப்பந்தம் காரணமாகவே நவம்பர் 72 இதழில் பிரசுரிக்கப்பட்டது.

ஆயினும் செங்கைய ஆழியான் தொகுத்த மல்லிகை சிறுகதைகள் தொகுப்பில் (இரண்டு தொகுப்புகள்) அந்த என் கதை  சேர்க்கப்படவில்லை.

ஏன்.?

எதிரணியினன் என்ற கோபமா?

சத்தியமாகச் சொல்கிறேன் என்னை ஜீவாவுக்கு இன்றுவரை அடையாளம் தெரியாது..

நான் அவரை சந்தித்ததும் மிகக் குறைவு.

ஆயினும் 2007  ஒக்டோபர் மாத மல்லிகை அட்டையில்  எனது படத்தை அவர் வெளியிட்டார்.

அதற்கு நான் நன்றி சொல்லித்தானாக வேண்டும். அல்லவா?

(பி. சி -23. 16/2/18)

நந்தினி சேவியர்-இலங்கை

நந்தினி சேவியர்

(Visited 110 times, 1 visits today)