காலத்தால் வாழப் போகும் நந்தினி சேவியர்-நந்தினி சேவியர் நினைவுக்குறிப்புகள்-மேமன்கவி

வரது மறைவால் எனக்கு ஏற்பட்ட தனிமையிருந்தும் வெறுமையிருந்தும்  என்னால் இன்னும் விடுபடமுடியவில்லை, இதற்குக் காரணம் அவருக்கும் எனக்கும் 20 வருடக் காலத் தொடர்பு, அதற்கு முன்பாக அவரைப் பெயர் அளவிலும், அவரது படைப்புகள் வழியாகவும் அறிந்து வைத்து இருந்தேன். அவருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்ட பின் நெருக்கமான நண்பர்களானோம். இருவரும் இணைந்து  தினந்தோறும் தொலைபேசி வழியாக    அவருடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டவன்…. அந்த உரையாடல்களில் பேசாத விடயங்கள் இல்லை.மார்க்ஸியமா? இடது சாரி இயக்கமா? சினிமாவா’?  நாடகமா? புத்தக வெளியீடா? பின்-நவீனத்துவமா? ஈழத்து நவீனத் தமிழ் இலக்கிய வரலாறா? ஈழத்துச் சாதிய அரசியல் வரலாறா?  இப்படியாகப் பல பல விடயங்களை முன் வைத்து  உரையாடி இருக்கிறோம்.

நந்தினி சேவியர்
ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்

அவ்வாறாகப் பேச முடிந்ததற்கு, அவற்றைச் சார்ந்த அனுபவமும் பரந்த வாசிப்பும் தான் காரணமாக அமைந்தது  அதனால்தான் அவரால்  ஈழத்துச் சிறுகதையாளர் 600க்கு மேலானவர்களைப்  பற்றி அதுவும். முகநூல் போன்ற சமூக ஊடகத்தில், வெறுமனே ஒரு தொலைபேசி கருவியை வைதது கொண்டு பொருளாதார நிலைமை, அவரது உடல் நிலைமை அவற்றின் மத்தியில், அத்தொடரை  எழுதியமை அவரது கடுமையான உழைப்பை  எடுத்துக் காட்டியது.

மற்றபடி அவரது சொந்தப் படைப்புகள் எண்பது தொகை அளவில் குறைவு. ஆனாலும் ஒவ்வொரு படைப்பும் முக்கியமானவை. கனதியானவை. அவற்றில். அவரது சிறுகதைகளும் நாவல்களும், கட்டுரைகளும், அடங்கும்.

சேவியரின் மேற் கூறப்பட்ட படைப்புகளில் வெளிப்பட்ட கனதிக்கும் முக்கியத்துவத்திற்கும் காரணம் ஒடுக்கப்பட்ட சமூக நிலை நின்று அவர் பெற்ற அனுபவங்களே காரணமானது.

ஈழத்து நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்களின் பங்கு கணிசமானது. அவர்களில் இலக்கியத்திலிருந்து இயக்கத்திற்கு வந்தவர்களைவிட, இயக்கத்திலிருந்து இலக்கியத்திற்கு வந்தவர்கள் அதிகம்.  அவர்கள் இயக்கத்திற்கான சிறந்த  ஆயுதமாக இலக்கியத்தைப் பயன்படுத்தினார்.கள். அத்தகையவர்களில் ஒருவராக  நந்தினி சேவியர் இருந்தார். எந்தச் சூழலிலும் இயக்கத்தை, அது சார்ந்த கருத்தியலைக் கை விடாதவராக இருந்தார். தாம்  சார்ந்த  சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகச் செயல்பட வேண்டுமானால்  ஓர் இயக்கமாகச் செயற்பட வேண்டிய தேவை இருந்தது. 

அத்தகைய இயக்க ரீதியாக இயங்கியவர் நந்தினி சேவியர். சேவியரை மக்களுக்குத் தெரிய வைக்க வேண்டிய தேவை இருக்கவில்லை    அவர் மக்களுடன் இணைந்து செயற்பட்டவர். அதன்  காரணமாக இயல்பாகவே மக்களுக்கு  இயக்க ரீதியாகவும், இலக்கிய ரீதியாகவும் தெரிய வந்தவர். அவருக்கான கருத்தியலுக்கான களச் செயற்பாட்டாளராக  இயங்கியவர். சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான பல போராட்டங்களில் நேரடியாகக் கலந்து கொண்டவர். .அப்போராட்டங்களின் வரலாற்றை நன்கு அறிந்து வைத்திருந்தவர்.   தான் சார்ந்திருந்த கருத்தியலுக்கு விசுவாசமாக இருந்தார், தனது கருத்தியலுக்கு ஓர்மத்துடன் செயற்பட்டவர். எக்காரணம் கொண்டும் தனது  கருத்தியலை விட்டுக் கொடுக்காதவராக இருந்தவர். அதே வேளை  தன் கருத்தியலுக்கு எதிரானவர்களை மதிக்கத் தெரிந்தவர். அதற்குச்  சிறந்த உதாரணம்- அவர் முகநூலில் எழுதிய பிடித்த சிறுகதை  தொடரில் அவர்களைப் பற்றியெலாம் எழுதி இருப்பார்.இதுவே அவரது உச்சமான சிறப்பு.

நந்தினி சேவியர் போன்ற  ஆளுமைகள் மறைந்து போனாலும்  அதன் காரணமாக அவர் தம் படைப்பு இயக்கமும் செயற்பாடுகளும்  மௌனித்துப் போனாலும், அவரைப் போன்ற ஆளுமைகளைக் காலத்தால் வாழவைக்க வேண்டிய பொறுப்பு நமதாகுகிறது. அதற்காக அவர் தம்மோடு  வாழ்ந்து பழகியவர்கள் கொண்டு  அஞ்சலிக் குறிப்புகள் நனவோடை குறிப்புகள் எழுதி  எடுக்க  வேண்டிய அவசியமாகுகிறது.

அடுத்துச் சேவியர் போன்ற ஆளுமைகளைப் பற்றி அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரைக் கொண்டு பேச வைக்க வேண்டும். அதன் மூலம் அந்த ஆளுமைகளைப் பற்றி  அவரோடு வாழ்ந்து பழகியவர்கள் முன் வைக்கும் கருத்துகளிருந்து வேறுபட்ட கருத்துகளை நாம் பெறக் கூடியதாக இருக்கும். ஆனால் புதிய  தலைமுறையினர் தமக்கு முன்னதான தலைமுறையினரைப் பற்றி  வாசிப்பு-அல்லது மறுவாசிப்பு என்ற பேரில் அந்த ஆளுமையை முற்றும் முழுதுமாக நிராகரிப்பது என்பது எனக்கு  உடன்பாடு இல்லை.

மறுவாசிப்பு கட்டுடைப்பு என்ற லேபலில் ஓடுக்கப்பட்ட சமூகச் சார்ந்தவர்களின் படைப்புலகjத்தையும் இயக்கச் செயற்பாடுகளையும் நிராகரிக்கும் இந்த வேலையை அவர்களை ஒடுக்கிய சக்திகளின் நவீன யுக வடிவங்களிலான செயற்பாடுகளாகவே நான் பார்க்கிறேன்,

அதனால் நந்தி. சேவியர் போன்ற ஆளுமைகளின் படைப்புகள்  செயற்பாடுகளைப் பற்றி அவருக்கு அடுத்த  தலைமுறையைக் கொண்டு  சரியான முறையில் பேச வைக்க வேண்டித்  தேவை இருக்கிறது.

அடுத்த பணியாக  நந்தினி சேவியரைப் பற்றியும், அவரது படைப்புகளையும்  சென்று அடையாத மொழி பிரதேசத்திற்குக்   கொண்டு செல்வதும்  நமது கடமை. பொதுவாகத் தொகை அளவில் அதிகமாக எழுதி இருக்கும் ஓரு படைப்பாளியின் படைப்புகளை இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் பணி யில் ஈடுபடும்பொழுது அப்படைப்பாளியின்  தேர்ந்தெடுக்கப்பட்ட  படைப்புகளைப் பயன்படுத்திக்  கொள்வது  வழமை. ஆனால் சேவியரைப் பொறுத்தவரைத்  தொகை அளவில் குறைவாகத் தந்திருந்தாலும் ஒவ்வொரு படைப்பும் கனதியானவை. முக்கியமானவை.அதன் காரணமாக அவருடைய எல்லாப் புனைவுப் பிரதிகளும் (இதுவரை காலம் நூலுருவம் பெற்றவை) சிங்களத்தில் மொழிபெயர்க்கும்  முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்,

அடுத்து, சேவியர் முகநூலில் இதுவரை காலம்வரை சுமார் 600க்கு மேற்பட்ட ஈழத்துத் தமிழ் சிறுகதையாளர் பற்றிக் குறிப்பு தொடரின் முதல் 200 சிறுகதையாளர்களைப் பற்றிய குறிப்புகளைப் பிடித்த சிறுகதை–முதலாம் தொகுதி எனும் தலைப்பில் 2019 ஆம் ஆண்டு கொடகே நிறுவன வெளியீடாக வெளியிட்டோம். மிகுதியான 400க்கு  மேற்பட்ட சிறுகதையாளர்களைப் பற்றிய குறிப்புகள் நூலுருவம் பெறச் செய்யும் முயற்சியினை மேற்கொண்டிருக்கிறோம்.

இதுவரை நூலுருவம் பெறாத சேவியரின் காணாமல் போன படைப்புகளை நாவல், சிறுகதைகள்) தேடிக் கண்டுபிடித்து நூலுருவம் பெறச் செய்வது.

இறுதியாக நந்தினி சேவியரைப் பற்றிய ஒரு நூல் வெளியிடப்பட வேண்டும்.

இவ்வாறான பணிகள்மூலம் நந்தினி சேவியர் என்ற இடது சாரி சிந்தனை கொண்டவருமான, முற்போக்கு இயக்கச் செயற்பாட்டாளரும். மிகக் காத்திரமான புனைவுப் பிரதிகள்  தந்த எழுத்தாளுமை கொண்ட  நந்தினி சேவியர் என்ற மக்களை எழுத்தாளரைக் காலத்தால் வாழ வைத்தவர்களாக இருப்போம்.

மேமன் கவி-இலங்கை

மேமன் கவி
ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்

(Visited 47 times, 1 visits today)